நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஆகஸ்ட் 02, 2013

ஆடி வெள்ளி - 03

முக்கியமாய் பூஜித்தற்குரியவள் பதினெட்டு புஜங்களுடன் கூடியவளும் மஹிஷாஸுர மர்த்தினியுமான மஹாலக்ஷ்மியே ஆவாள். 


அவளே மஹாகாளி.  அவளே ஸரஸ்வதி. ஈஸ்வரியும் ஸர்வலோக மஹேஸ்வரியும் அவளே!.. (24-25/4. வைக்ருதிக ரஹஸ்யம், தேவி மஹாத்மியம்)

ஸ்ரீ தேவி மஹாத்மியத்தில் கூறப்படும் - மஹாலக்ஷ்மியும் மஹிஷாஸுர மர்த்தினியுமான - தேவியின்  பதினெட்டு புஜங்களிலும் திகழும் ஆயுதங்கள் - 

அக்ஷமாலை, தாமரை, அம்பு, கத்தி, வஜ்ரம், கதை, சக்கரம்,திரிசூலம், கோடரி, சங்கு, மணி, பாசம், வேல், தண்டம், கேடயம்,வில், பானபாத்திரம், கமண்டலம்.

இத்தகைய ஆயுதங்களை ஏந்தியவளாகவும், சகல தேவர்களின் வடிவாக விளங்குபவளும் எல்லாரையும் ஆள்பவளுமான  -

ஸ்ரீமஹாலக்ஷ்மியை பூஜிக்கும் ஒருவன் -  எல்லா நலன்களையும் பெற்று, சர்வ லோகங்களுக்கும்  தேவர்களுக்கும் தலைவன் ஆகின்றான்!..

அப்படிப் பூஜித்தால் - 

ஸ்ரீ மஹாலக்ஷ்மி - எல்லா நலன்களையும் வாரி வழங்க வந்து  விடுவாளா?...

இதற்கு,   தெய்வப் புலவர் ஐயன் வள்ளுவர் - நமக்கு வழிகாட்டுகின்றார்.

ஆக்கம் அதர்வினாய்ச்செல்லும் அசைவிலா
ஊக்கம் உடையான் உழை.  (594) 


சோர்வில்லாமல் ஊக்கத்துடன் உழைப்பவனிடத்தில், ஆக்கம் எனும் செல்வமானது - தானே, அவன் இருக்கும் இடத்தைக் கேட்டறிந்து கொண்டு வந்து சேரும். 

ஊக்கத்துடன் கூடிய உழைப்பு.  இதுதான் ஸ்ரீமஹாலக்ஷ்மியின் விருப்பம்.
* * *

வழக்கம் போலவே சாபம். இந்திரன் துவண்டு போனான். சுகபோக செளபாக்கியங்கள் வீரபராக்கிரமம் அனைத்தையும் இழந்தான். இந்த முறை சாபம் கொடுத்தவர்   - துர்வாச மகரிஷி. 

அதையே எதிர்பார்த்திருந்த அசுரர், ''..இதோ! வந்து விட்டோம்!..'' - என சண்டைக்குக் கிளம்பினர்.  பரிதவித்த இந்திரன் மகரிஷியின் பாதங்களில் விழுந்தான். மனம் இரங்கிய முனிவர் சாப விமோசனம் சொன்னார்.

''..தப்பித்தோம் பிழைத்தோம்!..'' - என, இந்திரன் தண்டனிட்டுத் தொழுது வணங்கி, தூமலர் தூவி நின்றான் - ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் திருவடித் தாமரைகளில். அப்போது அவன் - போற்றித் துதித்த ஸ்தோத்திரம் தான் - 

ஸ்ரீ மஹாலக்ஷ்மி அஷ்டகம். 

இதனை நாளும் சொல்லித் துதித்து, ஊக்கத்துடன் உழைப்பவர் - இல்லத்தில் ''..சகல செளபாக்கியமும் ஐஸ்வர்யமும் பொங்கிப் பெருகும்!..'' என - ஸ்ரீ மஹா லக்ஷ்மியே வாக்கு கொடுத்திருக்கின்றாள். 


நமஸ்தேஸ்து மஹா மாயே ஸ்ரீபீடே ஸுரபூஜிதே
சங்க சக்ர கதா ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே. 

பிரபஞ்சத்தின் இருப்புக்குக் காரணமாகி, ஞானிகளுடைய சித்தத்தையும் கவர்ந்து விருப்பங்களில் செலுத்தும் மஹா மாயை ஆனவளும் ஸ்ரீ பீடத்தில் நிலைத்து வசிப்பவளும்  தேவர்களால் வழிபடப்படுபவளும் சங்கு சக்கரம் கதை இவற்றைத் திருக்கரங்களில் தாங்கியிருப்பவளும் ஆகிய மஹாலக்ஷ்மியே!..  உன்னை வணங்குகின்றேன்!.

நமஸ்தே கருடாரூடே கோலாஸுர பயங்கரி
சர்வ பாப ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே.

கருடவாகனத்தில் ஆரோகணித்து வருபவளும் கோலாசுரன் என்னும் கொடியவனுக்கு பயங்கரியாகி, அவனை அழித்தவளும் எல்லா பாவங்களையும் அழிப்பவளும்  ஆகிய - மஹாலக்ஷ்மியே!..  உன்னை வணங்குகின்றேன்!.

சர்வக்ஞே சர்வ வரதே சர்வதுஷ்ட பயங்கரி
சர்வ துக்க ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே.

உயர்ந்த ஞானத்தின் இருப்பிடமாக விளங்குபவளும் அனைத்து வரங்களும் அளிப்பவளும் எல்லா தீமைகளுக்கும் பயங்கரியாக விளங்குபவளும் எல்லா துக்கங்களையும் தீர்ப்பவளும் ஆகிய - மஹாலக்ஷ்மியே!.. உன்னை வணங்குகின்றேன்!.

சித்தி புத்தி ப்ரதே தேவி புத்தி முக்தி ப்ரதாயினி
மந்த்ர மூர்த்தே ஸதாதேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே.

அறிவும் சிந்தனையும் தேர்ந்து எய்தும், தெய்வீக வெற்றியினை அருள்பவளும் மோக்ஷத்திற்கான நல்ல ஞானத்தை அளிப்பவளும் மந்த்ரங்களின் வடிவாகத் திகழ்பவளும் ஆகிய - மஹாலக்ஷ்மியே!..  உன்னை வணங்குகின்றேன்!.

ஆத்யந்த ரஹிதே தேவி ஆதிசக்தி மகேஸ்வரி
யோகஜே யோக ஸம்பூதே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே.

முதலும்  முடிவும் அற்ற தேவியானவளும் பிரபஞ்சத்தின் முதல் சக்தியான மகேஸ்வரியாக விளங்குபவளும் யோக நிலையில் தோன்றியவளும் யோக வடிவாகத் திகழ்பவளும் ஆகிய - மஹாலக்ஷ்மியே!..  உன்னை வணங்குகின்றேன்!.

ஸ்தூல சூக்ஷ்ம மஹா ரெளத்ரே மகாசக்தி மகோதரே 
மஹா பாப ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே.

பூவுலகில் காணும் வடிவங்களாக விளங்குபவளும் எளிதில் உணரப்பட முடியாதவளும் (பிழைகளைக் காணுங்கால்)  எல்லையற்ற கோபம் உடையவளும் அளவிடற்கரிய பெரும் சக்தி என விளங்குபவளும் பெரும் பாவங்களைத் தொலைப்பவளும் ஆகிய - மஹாலக்ஷ்மியே!..  உன்னை வணங்குகின்றேன்!.

பத்மாஸன ஸ்திதே தேவி பரப்ரம்ஹ ஸ்வரூபிணி
பரமேஸி ஜகந்மாதா: மஹாலக்ஷ்மி நமோஸ்துதே.

பத்மாசனத்தில் அமர்ந்தவளும் பரப்ரம்மத்தின் வடிவாகத் திகழ்பவளும் பரமேஸ்வரி என விளங்குபவளும் அகில உயிர்களுக்கும் அன்னை என ஆனவளும் ஆகிய - மஹாலக்ஷ்மியே!.. உன்னை வணங்குகின்றேன்!.


ஸ்வேதாம் பரதரே தேவி நானாலங்கார பூஷிதே
ஜகஸ்திதே ஜகந்மாதா: மஹாலக்ஷ்மி நமோஸ்துதே.

தூய வெண்ணிற ஆடையுடன் இலங்குபவளும் பலவிதமான ஆடை அணி அலங்காரங்களுடன் திகழ்பவளும் பூவுலகெங்கும் வியாபித்திருப்பவளும் அகில உலகங்களுக்கும் அன்னை என ஆனவளும் ஆகிய - மஹாலக்ஷ்மியே!.. உன்னை வணங்குகின்றேன்!.

பலஸ்ருதி:-

மஹாலக்ஷ்மி அஷ்டக ஸ்தோத்ரம் ய: படேத் பக்திமாந் நர: 
ஸர்வஸித்தி மவாப்நோதி ராஜ்யம் ப்ராப்நோதி ஸர்வதா: 

மஹாலக்ஷ்மி அஷ்டகத்தினைச் சொல்லி  மனப்பூர்வமாகத் துதிப்பவர் எல்லா இடர்களையும் வென்று மனோராஜ்யங்களை அடைந்தவராகி இருப்பர்.

ஏக காலம் படேந் நித்யம் மஹாபாப விநாஸனம் 
த்வி காலம் ய: படேந் நித்யம் தன தான்ய ஸமன்வித: 
திரி காலம் ய: படேந் நித்யம் மஹா சத்ரு விநாஸனம் 
மஹாலக்ஷ்மிர் பவேந் நித்யம் ப்ரஸன்ன வரதா ஸுபா. 

தினமும் ஒரு முறை சொல்லி வழிபடுபவரின் பெரும் பாப வினைகள் அழியும். தினமும் இரு முறை சொல்லி வழிபடுபவரின் இல்லத்தில் தனமும் தான்யமும் குறைவின்றி நிறைவாக விளங்கும். தினமும் மூன்று  முறை சொல்லி வழிபடுபவர் (ஐம்புலன் எனும்) எதிரிகளை எளிதாக வெல்வர். ஸ்ரீமஹாலக்ஷ்மியின் பேரருளைப் பெற்று உய்வர். ஸ்ரீமஹாலக்ஷ்மி அவர் நெஞ்சகத்தில் நிலைத்து நிற்பாள். 

(ஸ்ரீரங்க நாயகியின் நிழற்படங்களுக்கு நன்றி - திரு. ராதாகிருஷ்ணன், ஸ்ரீரங்கம்)


அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு. (247)

இவ்வுலகில் இன்புற்று வாழ நேர்மையான வழியில் பொருளைத் தந்து அதன் மூலம் - ஈதல் இசைபட வாழ்ந்து - அவ்வுலகிற்கான அருளைப் பெற்று உய்யும்படிக்கு அன்னை ஸ்ரீமஹாலக்ஷ்மி அருள்வாளாக!..


இவ்வுலகம் அசைவதும் இசைவதும் அவள் அருளால் தான்!..

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் கமலே கமலாலயே ப்ரஸீத ப்ரஸீத 
ஸ்ரீம் ஹ்ரீம் ஓம் மஹாலக்ஷ்ம்யை நம:

8 கருத்துகள்:

 1. ஊக்கத்துடன் கூடிய உழைப்பு அதுவே சிறப்பு... அந்த சிறப்பை அன்னை ஸ்ரீமஹாலக்ஷ்மி வழங்கட்டும்... வாழ்த்துக்கள் ஐயா... நன்றி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பிற்கும் வேண்டுதலுக்கும் மிக்க நன்றி!..

   நீக்கு
 2. ஆடி வெள்ளியின் மகத்துவம் உணர்ந்தேன் நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகை கண்டு மனம் மகிழ்கின்றது. மிக்க நன்றி!..

   நீக்கு
 3. மஹா லக்ஷ்மியின் அருள் எல்லோருக்கும் கிடைக்க பிரார்த்திப்போமாக !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எல்லோரும் வறுமை நீங்கி நோய் நொடியின்றி இன்புற்றிருக்க வேண்டும் அம்மா!..தங்களின் வருகைக்கு மிக்க நன்றி!..

   நீக்கு
 4. அரைமணி நேரம்முன்பு தான் ஆடி வெள்ளி பிறந்தது இங்கு. (நியூஜெர்சியில்). முதலில் பார்க்கும் வலைத்தளம் உங்களுடையது. மகாலட்சுமி காட்சி தருகிறாள். மனதிற்கு மிகுந்த அமைதி கிடைத்த்து. நன்றி. –கவிஞர் இராய.செல்லப்பா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்!.. தங்களின் வரவு நல்வரவாகுக!.. தங்களின் மேலான கருத்துரை கண்டு மகிழ்ந்தேன்.. தங்களின் வருகையும் கருத்துரைகளும் நமது தளத்தினை சிறப்புறச் செய்வதாக!.. என்றும் நன்றிகள் உரியன!..

   நீக்கு