தட்சனின் யாக சலையில் அலட்சியம் செய்யப்பட்ட அம்பிகையின் திரு மேனியிலிருந்து வெளிப்பட்ட கோபக்கனலின் திரு உருவம் - ஸ்ரீ பத்ரகாளி.
இவள் ஆங்காரத்துடன் - யக்ஞ சாலையை அழித்ததுடன் விருந்து உண்ண வந்திருந்த தேவர்களையும் ஏனையோர்களையும் ஸ்ரீவீரபத்ரர் தண்டித்த வேளையில் பெரும் பங்காற்றியவள்.
ஆணவங் கொண்டு அடாத செயல் செய்த தட்சனின் தலை அறுபட்டு - பின் ஆட்டுத் தலையுடன் அடங்கி ஒடுங்கி நின்ற வேளையில் - வந்த வேலை முடிந்தது என - ஸ்ரீ வீரபத்ரருடன் கூடி, சாந்தம் கொண்டவள்.
பின்னும் - சண்டன் முண்டன் எனும் அரக்கர்களை அழிப்பதற்காக, அம்பிகையின் அம்சத்தில் உதித்த சக்தியினால் தான் அசுரர்களை வீழ்த்த முடியும் என்ற சூழ்நிலையில் -
அம்பிகையின் திருமேனியில் இருந்து - ப்ராம்மி, மகேஸ்வரி, கெளமாரி, வைஷ்ணவி, வராஹி, இந்த்ராணி, சாமுண்டி - என, ஏழு கன்னியர்கள் தோன்றினர். எனினும் - அசுரர்களை வேரோடு சாய்க்க முடியவில்லை.
அப்போது சிவபெருமான் - தாம் வீரபத்ரர் என - திருக்கோலங் கொண்ட வேளையில் தன்னுடன் ஒன்றிய, பத்ரகாளியினை நெற்றிக்கண் வழியாகத் தோற்றுவித்தார்.
ஆங்காரத்துடன் வெளிப்பட்ட பத்ரகாளி - சாமுண்டி தேவியுடன் கலந்தாள். சண்டமுண்டர்களின் சரித்திரம் அத்தோடு முடிவடைந்தது.
ஆனால், அன்னை பத்ரகாளியின் அரும் செயல்கள் தொடர்ந்தன. பின்னும் -
தனது கொடுஞ் செயல்களால், மண்ணுக்கும் விண்ணுக்கும் இன்னல்களைச் செய்த தாரகன் எனும் அசுரனை அழிப்பதற்கு என - சிவபெருமான் ஸ்ரீ பத்ர காளியினை மீண்டும் தோற்றுவித்தார் என்பது ஐதீகம்.
மதுரையில் - வஞ்சனையால் கோவலன் கொல்லப்பட்டான். இதை அறிந்து சீற்றத்துடன் பாண்டியனின் அரசவைக்கு வந்த, கற்புக்கரசி கண்ணகியை -
''தாருகன் பேருரங் கிழித்த பெண்ணும் அல்லள்!..'' - என இளங்கோவடிகள் வர்ணிக்கின்றார் எனில் - ஸ்ரீ பத்ரகாளியின் பெருஞ்சிறப்பினைப் பேசவும் வேண்டுமோ!...
ஸ்ரீ பத்ரகாளி அம்மையின் பெருஞ்சிறப்பினையும் பெருஞ்சீற்றத்தினையும் - தேவாரத்தில் திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் சுந்தரரும் -
பாடிப் பரவுகின்றனர்.
மாணிக்கவாசகரும் - ஸ்ரீ காளியினை வியந்து போற்றுகின்றார்.
திருமந்திரத்தில் திருமூலரும் ஸ்ரீ காளியின் அம்சத்தினை அகங்குழைந்து பாடுகின்றார் எனில் - ஸ்ரீ பத்ரகாளியின் பெருமைகளைச் சொல்வதற்கு ஒரு ஜன்மமும் போதுமோ?
தாரகனின் உடல் கிழித்து அவன்
குருதியினைக் குடித்த காளி ஒரு கட்டத்தில் உக்ரமாகி விட்டாள்.
அவளைக் கண்டு விண்ணும் மண்ணும் நடுங்கி - அவள் ஆடிய ஆட்டத்தால் நிலைகுலைந்தன. அவளை ஆற்றுவார் யாருமின்றி அண்ட பகிரண்டமும் அதிர்ந்தன.
சர்வலோகமும் சர்வேஸ்வரனாகிய எம்பெருமானைச் சரணடைந்தன.
புன்னகையுடன் எழுந்த பெருமான் - உக்ரத்துடன் காளி ஆடி வரும் வழியில் நின்று - நடனப்போர் செய்து காளியின் சீற்றத்தினை அடக்கினார் என்று தேவாரத் திருப்பதிகங்கள் பரவுகின்றன.
நதியதன் அயலே நகுதலைமாலை நாண்மதி சடைமிசை யணிந்து கதியதுவாகக் காளிமுன் காணக் கானிடை நடஞ்செய்த கருத்தர் (1/45/5)
- என்பது திருஞானசம்பந்தரின் திருவாக்கு.
பைதற்பிணக் குழைக்காளி வெங்கோபம் பங்கப்படுப்பான்
செய்தற்கரிய திருநடஞ் செய்தன சீர்மறையோன் (4/100/2)
- என்பது திருநாவுக்கரசரின் திருவாக்கு.
கொதியினால் வருகாளிதன் கோபங்
குறைய ஆடிய கூத்துடையானே(7/70/4)
- என்பது சுந்தரரின் திருவாக்கு.
புலியூர்ப் பொதுவினில் நடநவில்
கனிதரு செவ்வாய் உமையொடு காளிக்கு
அருளிய திருமுகத்தழகுறு சிறு நகை இறைவன்
- என்பது மாணிக்கவாசகப்பெருமானின் மணி வாக்கு.
காளியோடாடிக் கனகாசலத்தாடிக்
கூளியோடாடி குவலயத்தே ஆடி
நீடிய நீர் தீக்கால் நீள்வானிடையாடி
நாளுற அம்பலத்தே ஆடும் நாதனே!..
- என்பது திருமூலரின் திருமந்திரம்.
இந்த நடனம் - திருஆலங்காட்டில் ரத்ன சபையில் காளியுடன் போட்டியிட்டு ஆடிய ஊர்த்துவ தாண்டவமாகும்.
ஐயன் காலைத் தூக்கி ஆட, அன்னை - அவ்வாறு நடமிட இயலாத வண்ணம் நாணி நின்றனள் என்பது திருக்குறிப்பு. எனினும் -
இந்த வைபவம், சாக்த வழிபாட்டில் - வேறு விதமாகப் புகழப்படுகின்றது.
தாரகனின் உடல் கிழித்து அவன்
குருதியினைக் குடித்து உக்ரமாகிய காளி - ஆடிய ஆட்டத்தால் விண்ணும் மண்ணும் நடுங்கி - நிலை
குலைந்தன. அவளை ஆற்றுவார் யாருமின்றி அண்ட பகிரண்டமும் அதிர்ந்தன.
சர்வலோகமும் சர்வேஸ்வரனாகிய எம்பெருமானைச் சரணடைந்தன.
புன்னகையுடன் எழுந்த பெருமான் - காளி உக்ரத்துடன் ஆடி வரும் வழியில் அசைவற்றுக் கிடந்தார். அதற்கு மேல் நிகழ்ந்த நாடகம் என்னவென்று சொல்வது!..
அன்னையின் திருப்பாதத்தின் அணுவளவு - ஐயனின் மீது பட்டது தான் தாமதம்!... அன்னை அதிர்ந்தாள்!...
''..ஐயனே!..'' - என ஆரவாரித்து, குனிந்து நோக்கினாள்.
பாருக்கெல்லாம் படியளக்கும் பரமன் பச்சிளங்குழந்தையாக உருமாற, பால் வடியும் முகம் கண்டு அன்னை பரிதவித்தாள். அவளுள் பாசம் பொங்கியது. ஆதுரத்துடன் வாரியணைத்துக் கொண்டாள்.
தாரகனின் உயிர் குடித்து உக்ர தாண்டவமாடிய தயாபரி - தாய்மை பெருகிட நின்றாள். மழலையாய்க் கிடந்த பெருமானை மார்புறத் தழுவிக் கொண்டாள்.
அந்த அளவில் திருத்தன பாரங்களின் வழி - தாரகனின் செங்குருதியினால் கெட்டிருந்த குருதி - பால் என வழிந்திட, அன்னையின் ஆவேசம் அடங்கியது.
நாணித் தலை கவிழ்ந்து நின்றனள் அன்னை. வழக்கம் போலவே - ''எல்லாம் எமது திருவிளையாடல்களுள் ஒன்று!..'' - என, ஈசனின் திருமுகத்தில் புன்னகை தவழ்ந்தது.
ஈரேழுலகும் ஆனந்த மயமாகி அம்மையப்பனைப் போற்றித் துதித்தன.
தீயவர்க்கு கொடும் கோர வடிவங்கொண்டு நிற்கும் அவள் - அன்பர்களுக்கு ஆனந்தமாக அருள்கின்றனள். பத்ரகாளியின் வழிபாடு ஆனந்த மயமானது.
ஆனால் நாளடைவில் அறியா மாந்தர்களால் - அச்சமூட்டக் கூடியதாக மாறி விட்டது. காளிதேவிக்கு உயிர்களைப் பலியிடும் வழக்கம் உள்ளது. அது - நம்முள் மண்டிக் கிடக்கும் காம, குரோத, லோப, மோக, மதமாச்சர்யம் - எனும் குணங்களைப் பலியிடும் குறிப்பு என்பர் பெரியோர்.
இவள் சினம் கொண்டால் மக்களுக்குள் கலகம் ஏற்படும். தேவிக்கு தயிர் அபிஷேகம் செய்வித்து தயிர் பள்ளயம், அவல் சர்க்கரை - நிவேதனம் செய்தால் அன்னை சாந்தம் அடைவாள். தேவியின் திருவருள் கிட்டும்.
பல்வேறு குறிப்புகளின்படி - நான்கு, எட்டு, பத்து, பதினாறு - என திருக் கரங்களுடன் சித்தரிக்கப்படுகின்றாள்.
நல்லவர்க்கு ''அஞ்சாதே!'' என அபயம் அளிப்பதுடன் தீயவர்களைத் தண்டிக்கத் தயங்குவதில்லை என்பதே அவளது திருத்தோற்றத்தின் திருக்குறிப்பு.
அன்னை திக்குகளையே ஆடையாக அணிந்து முண்டமாலையைச் சூடியவள். திருமுகங்களில் நெற்றிக்கண் உடையவள். கோர செளந்தர்யம் உடையவள்.
மகாகவி காளிதாசன், சத்ரபதி சிவாஜி, தெனாலி ராமன், கவி காளமேகம், அபிராமி
பட்டர், ஸ்ரீஇராமகிருஷ்ண பரமஹம்சர், அன்னை சாரதா தேவி, விவேகானந்தர்,
மகாகவி பாரதியார் - இவர்கள் எல்லாம் அம்பிகையை காளி வடிவாகக் கண்டு கை
தொழுதவர்கள்.
இன்னும் - கோடானு கோடி இதயங்கள் அன்னையின் இருப்பிடம்.
''சக்தியும் சிவமும் - பாலும் சுவையும் போல அக்னியும் உஷ்ணமும் போல
ஒன்றேயாகும். ஒன்றில்லாமல் ஒன்றை நினைக்கவும் முடியாது!..'' என்பது,
ஸ்ரீஇராமகிருஷ்ண பரமஹம்சரின் அருள் வாக்கு.
ஸ்ரீபத்ரகாளி வழிபாடு மிகத் தொன்மையானது. மிகப் பிரசித்தமானது.
தமிழகத்தில் - திருஆலங்காடு, தில்லை, திருவெண்காடு, திருவக்கரை, அம்பகரத்தூர், கொல்லங்குடி, தஞ்சாவூர், உறையூர், மயிலை, பெரம்பூர் - என பற்பல திருத்தலங்கள்.
அன்பர்களுக்கு அருள் புரிவதில் அவளுக்கு நிகர் அவளேதான். அவளைப் பற்றி சிறு குறிப்புகளை மட்டுமே தேடினேன். வெள்ளம் போல விஷயங்களைத் தந்திருக்கின்றாள் - என் அன்னை.
அன்னையின் திருவருள் கொண்டு, அவற்றை மீண்டும் சிந்திப்போம்.
அன்னையின் காயத்ரி
ஓம் பிசாச த்வஜாயை வித்மஹே;
சூலஹஸ்தாய தீமஹி - தந்நோ காளீ ப்ரசோதயாத்:
* * *
* * *
ஏராளமான படங்கள் + தாராளமான விஷயங்களுடன் ”பத்ரகாளி”யைப்போன்றே மிகப்பெரிய பகிர்வு.
பதிலளிநீக்குபாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.
அன்புடையீர்!.. தங்களின் வருகையும் பாராட்டுகளும் மிக்க மகிழ்ச்சியளிக்கின்றன.. நன்றி!..
நீக்குபத்திரக்காலியைப் பர்ரி இவ்வளவு விஷயங்களா?படிக்க பிரபிப்பு உண்டாகிரது.
பதிலளிநீக்குநன்றி பகிர்விர்கு.
இன்னும் இருக்கின்றதம்மா!.. விரைவில் தொடர்வேன்!..தங்களின் வருகைக்கும் மேலான கருத்துரைக்கும் மிக்க நன்றி!..
நீக்குஅன்புடையீர்,
பதிலளிநீக்குவணக்கம்.
இன்று என் வலைத்தளத்தில், ஓர் புதிய, முற்றிலும் மாறுபட்ட, சிறப்புப் பதிவு வெளியிடப்பட்டுள்ளது.
அவசியம் வருகை தந்து கருத்தளிக்க வேண்டுகிறேன்.
இணைப்பு:
http://gopu1949.blogspot.in/2013/08/blog-post.html
தலைப்பு:
“ஆயிரம் நிலவே வா !... ஓர் ...
ஆயிரம் நிலவே வா !!”
அவசரம் ! அவசியம்!!
ஓடியாங்கோ .... ஓடியாங்கோ .....
உடனடியா ஓடியாங்கோ,
ப்ளீஸ்ஸ்ஸ்.
பிரியமுள்ள
வை. கோபாலகிருஷ்ணன்
[VGK ..... கோபு]
தங்களின் அழைப்பினை ஏற்றுக் கொண்டு - விழாவுக்கு சென்று வந்தேன்!.. நலமே விளைக!..
நீக்குபத்ரகாளியைப் பற்றி இவ்வளவு செய்திகளா. நன்றி ஐயா
பதிலளிநீக்குஅன்புடையீர்!.. தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சியளிக்கின்றன!.. நன்றி!..
நீக்கு''சக்தியும் சிவமும் - பாலும் சுவையும் போல அக்னியும் உஷ்ணமும் போல ஒன்றேயாகும். ஒன்றில்லாமல் ஒன்றை நினைக்கவும் முடியாது!..'' என்பது, ஸ்ரீஇராமகிருஷ்ண பரமஹம்சரின் அருள் வாக்கு.
பதிலளிநீக்குவெள்ளம் போல பல செய்திகளைத் தாங்கி
வெல்லம் போல் சுவைக்கும் பகிர்வுகளுக்குப் பாராட்டுகள்..!
உள்ளம் குளிர்கின்றது..தங்களின் அன்பான வருகைக்கும் மேலான கருத்துரைக்கும் மிக்க நன்றிகள்!..
நீக்குஆயிரமாவது பதிவுக்கு வாழ்த்தியற்கு மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்..!
பதிலளிநீக்குமகத்தான விஷயம். மனம் நிறைந்த செய்திகளுடன் மங்கலகரமாக நாளும் வெளியான பதிவுகள். மேலும் சிறப்புகளை எய்த - எல்லாம் வல்ல சிவம் நலம் அருள வேண்டும்!..
நீக்கு
பதிலளிநீக்குநமது முன்னோர்கள் உருவமில்லாக் கடவுளுக்கு உருவம் கொடுக்கும்போதுகூட அதற்கேற்ப நல்வழி நெறியினையும் தொகுத்துக் கொடுத்திருக்கின்றனர். நன்மை செய்பவன் நலம் பெறுவான், தீயது செய்பவன் தண்டிக்கப் படுவான் என்று உணர்த்தும் வகையில் கடவுளர்களின் உருவங்களும் செயல்களும்சிருஷ்டிக்கப் பட்டிருக்கின்றன. பொருள் உணர்ந்து வழிபடுவோம் , நற்கதி அடைவோம். பதிவுக்குப் பாராட்டுக்கள்.
உண்மைதான் ஐயா!..தீயவை அழியும் பொருட்டே தெய்வ அவதாரங்கள். திருந்திய மனமே திருக்கோயில். பொருள் உணர்ந்து வழிபடும் போது புண்ணியம்!.. தங்களின் மேலான வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!..
நீக்குநல்ல பதிவு...
பதிலளிநீக்குபாராட்டுகள்....
காளியின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்...
அன்புடையீர்!.. தங்களுடைய வருகைக்கும் அன்பான பாராட்டுதலுக்கும் மிக்க நன்றி!..
நீக்கு