நாடும் மக்களும் வளம் பெற வேண்டியிருந்தது.
அதைவிட, தித்திக்கும் செந்தமிழ் மேலும் தித்திக்க வேண்டியிருந்தது.
''என்ன செய்யலாம்!..'' என அரவணையில் துயிலாது துயின்று, திருத்துழாய் மார்பன் யோசித்துக் கொண்டிருந்த வேளையில், அருகிருந்த ஸ்ரீ பூமாதேவி - ஐயனின் சிந்தனைக்கு செயலாக்கம் தருவதற்கென்று எழுந்தாள்.
எழுந்தவள் - ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசயனனின் திருக்கோயிலின், திருத் துழாய் வனத்தில் -
கலியுகத்தின் ஒரு - நள வருடத்தில் ஆடி எட்டாம் நாள் செவ்வாய்க்கிழமை (சனிக்கிழமை) - வளர்பிறை சதுர்த்தசியும் பூர நட்சத்திரமும் துலா லக்னமும் கூடிய சுபயோக சுப தினத்தில் ஒரு குழந்தையாய்க் கிடந்தாள்.
திருக்கோயிலின் புஷ்ப கைங்கர்யம் செய்து, பெரியாழ்வார் என்று புகழப் பட்ட விஷ்ணு சித்தர், அவளைக் கண்டெடுக்க - அவர் தம் மனையில் தத்தித் தவழ்ந்தாள்.
கோதிலா அன்புடன் கோதை எனப் பெயர் சூட்டி, அன்பில் ஆழ்வார் - அவர் தம் தோளில் துயின்றாள். தூமலர்க் கொடியாய் அசைந்து நடந்தாள்.
தந்தையை - குரு எனக் கொண்டு கலைகளை எல்லாம் பயின்று வளர்ந்தாள்.
வளருங்கால் ஒருநாள் - தந்தைக்குத் துணையாய் - தான் தொடுக்கும் பூமாலையில் மனம் கசிந்தாள். மாலையைச் சூடும் மார்பனின் அழகில் அயர்ந்தாள். அத்தோடு நில்லாமல் -
அவனுக்கென்று தொடுத்த மாலையைத் தானே முதலில் அணிந்தாள். அது கண்டு கோபித்த தந்தையிடம் தன் நிலையை மொழிந்தாள். மாயக் கண்ணன் - ''அவள் சூடிய மாலையே எனக்கு உகந்தது!..'' - எனக் கூறியதைக்கேட்டு உளம் உவந்தாள்.
தன் எண்ணப்படியே பூமாலையுடன் பாமாலையும் தொடுத்தாள். அதனை - தான் சூடி - அதன் பின்னரே அவனுக்கு என்று கொடுத்தாள்.
தந்தை அவளுக்கு மணம் என்று பேசிய போது முகம் கடுத்தாள்.
''.. ஊனிடைச் சங்கு உத்தமர்க்கென்று உன்னித்தெழுந்த என் தடமுலைகள் மானிடர்க்கென்று பேச்சுப்படில் வாழ்கிலேன் கண்டாய்!..'' - என உரைத்தாள்.
''என் செய்வேன்?..'' எனப் பரிதவித்த ஆழ்வாரிடம், அரங்கன் கனவில் உரைத்ததை அறிந்து - அகமகிழ்ந்தாள்.
''எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் எண்ணிய திண்ணியராகப் பெறின்!.'' - என்றபடிக்கு எங்கும் நிறைந்த பரம்பொருளையே மணவாளனாகக் கொள்ள - திருமணக் கோலம் புனைந்தாள்.
வேதியரும் வித்தகரும் எதிர்கொள்ள, திருஅரங்கத்தை அடைந்தாள். அங்கே ஜோதியாய் சுடர் ஒளியாய் - அரங்கனுடன் இரண்டறக் கலந்தாள்.
ஆண்டாள் பக்தியினால் பரமனையும் ஆண்டாள். கோதை எனும் திருப்பாவை - நமக்களித்த செந்தமிழ்த் தேனமுதம் தான் - திருப்பாவை.
சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாள் - சூடிக் களைந்த மாலையைத் தான், திருப்பதியில் புரட்டாசி பிரம்மோத்ஸவத்தின் போது வேங்கடேசப் பெருமாள் சூடிக் கொள்கின்றார்.
மாமதுரையின் வைகை ஆற்றில் மக்கள் வெள்ளத்தினூடாக, இறங்கும் முன்பாக கள்ளழகர் சூடிக் கொள்கின்றார்.
ஆனால், ஸ்ரீ வில்லிபுத்தூரில் துயிலும் வடபத்ரசாயி மிகவும் கொடுத்து வைத்தவர். அவருக்குத் தினமும் ஆண்டாள் - சூடிக் களைந்த மாலையைத் தான்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் - ஆண்டாளின் திரு அவதார தினம் ஆடிப்பூர பெருவிழா என ஆண்டு தோறும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.
12 நாட்கள் நடைபெறும் விழாவில் ஸ்ரீரங்கமன்னாரும் ஸ்ரீ ஆண்டாளும் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா காண்கின்றனர்.
கோதையும் ஆழ்வாரும் அன்ன வாகனங்களில் எழுந்தருள - ஸ்ரீரங்கமன்னார், ஸ்ரீபெரியபெருமாள், ஸ்ரீசுந்தரராஜப் பெருமாள், ஸ்ரீதிருவேங்கடம் உடையான், ஸ்ரீதிருத்தங்கல் அப்பன் - என, ஐவரும் கருட வாகனத்தில் சேவை சாதிக்கும் கருட சேவையும், ஸ்ரீ ஆண்டாள் மடியில் பெருமாள் சயனத் திருக்கோலக் காட்சியும் சிறப்பானவை.
ஆடிப்பூரத்தன்று பெருந்தேரோட்டம் நிகழும்.
ஆண்டாள் அருளிய, திருப்பாவையில் ''புள்ளின் வாய்க்கீண்டானை'' - எனும் பாடலில் -
''வெள்ளி முளைத்து வியாழம் உறங்கிற்று..'' - எனும் வரிகளைக் கொண்டு, திருப்பாவை பாடப்பெற்ற ஆண்டு கி.பி.885 என - மு. இராகவ ஐயங்கார் எனும் அறிஞர் கணக்கிட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
ஆண்டாள் அரங்கனை மட்டுமல்ல!.. நம்மையும் ஆண்டாள்.
அவள் அருளிய ,
வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து
நாரணன் நம்பி நடக்கின்றான் எதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்
தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்!..
- எனும் திருமொழி, கல்யாணத்தை எதிர்நோக்கியுள்ள கன்னியர்க்கு ஒரு அருமருந்து.
வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து
நாரணன் நம்பி நடக்கின்றான் எதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்
தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்!..
- எனும் திருமொழி, கல்யாணத்தை எதிர்நோக்கியுள்ள கன்னியர்க்கு ஒரு அருமருந்து.
பாலருந்தும் பச்சிளங்குழந்தை நலிவுற்றால் தாய் மருந்து உண்பதைப் போல -
நம் குடும்பத்திலும் அக்கம் பக்கத்திலும் உள்ள கன்னியர்க்கு நல்ல வரனுடன் விரைவில் நல்ல விதமாக திருமணம் நிகழ, ஆண்டாளின் மலரடிகளில் வேண்டிக் கொள்வோம்!..
கேட்டதும் கொடுக்கும் கண்ணனுடன் உற்றவளான
சுடர்க்கொடி நாம் வேண்டியதை ஈடேற்றிக் கொடுப்பாள்!..
திரு ஆடிப்பூரத்து ஜகத்துதித்தாள் வாழியே!..
ஆண்டாள் திருவடிகளே சரணம்!..
சுடர்க்கொடி நாம் வேண்டியதை ஈடேற்றிக் கொடுப்பாள்!..
திரு ஆடிப்பூரத்து ஜகத்துதித்தாள் வாழியே!..
ஆண்டாள் திருவடிகளே சரணம்!..
ஆடிப் பூரத்தின் அருமை உணர்ந்தேன் நன்றிஐயா
பதிலளிநீக்குஅன்புடையீர்!.. தங்களுடைய வருகை என்னை மகிழ்விக்கின்றது!..எல்லாருக்கும் நலமே விளைவதாக!..
பதிலளிநீக்கு