நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், ஆகஸ்ட் 14, 2013

தியாக பூமி

ஆகஸ்ட் 15. இந்தியத் திருநாட்டின் சுதந்திர தினம். 


விடுமுறையைக் குறித்து - முன்னதாகவே பரபரப்புடன் இருப்பவர் மத்தியில் -

இந்த சுதந்திரத்தை எப்படிப் பெற்றோம் என்று சிந்திப்பவர்களுக்காக - இந்தப் பதிவு!..

உயர்நிலைப் பள்ளியில் பயின்ற போது
கண்ணீருடன் இந்தச் சம்பவத்தை விவரித்த
வகுப்பு ஆசிரியர் திரு.A.சுப்ரமணியம் அவர்களுக்கும்
சரித்திர ஆசிரியர் திரு.S.R.கோவிந்தராஜூ அவர்களுக்கும்
இந்தப் பதிவு சமர்ப்பணம்.

(மேலதிக தகவல்களுக்கு  - நன்றி :- விக்கிபீடியா)

இடம்:- பஞ்சாப் - அமிர்தசரஸ் நகர்,  ஜாலியன் வாலாபாக் மைதானம்.

நாள்: - 1919 ஏப்ரல் மாதம் பதின்மூன்றாம் தேதி - மாலை 4.00 மணி!..

காலங்காலமாகவே - நாடு பிடிக்கும் வெறியுடன் இந்தப் புண்ணிய மண்ணில் புகுந்து  - நிராயுதபாணிகளான, பலதரப்பட்ட மக்களை  - ஆண்,  பெண்,  குழந்தைகள் என, எவ்வித பேதமும் பார்க்காமல் - மிருகத்தனமாக  - கொன்று குவித்த கொடூரத்துக்குச் சற்றும் குறைவின்றி - அதன் மறு பதிப்பாக ஒரு மாபாதகம் நிகழ்த்தப்பட்ட நாள்.

தியாக பூமி - ஜாலியன் வாலாபாக்.
மக்களிடையே பெருந்தீயெனப் பரவிய - சுதந்திரப்போராட்ட உணர்வினை அடக்க வேண்டி, ஆங்கிலேய ஏகாதிபத்திய  ஆட்சியாளர்களுக்கு ஆதரவாக - சிட்னி ரெளலட் என்பவன் பத்திரிக்கைகளை நசுக்கவும் சுதந்திரத்துக்காகப் போராடுபவர்களைக் கைது செய்யவும் எவ்வித விசாரணையும் இன்றி சிறையில் அடைத்து சித்ரவதை செய்யவும் வழிவகுத்து  ஒரு வரைவினை அளித்தான். அதற்கு ரெளலட் சட்டம் என்று பெயரிடப்பட்டது. 

இந்த சட்டத்தை எதிர்த்துத்தான் - ஜாலியன் வாலாபாக் திடலில் ஆண்களும் பெண்களுமாக  பல்லாயிரக்கணக்கானோர் கூடியிருந்தனர். அவர்களுள் முதியோர்களும் குழந்தைகளும் இருந்தனர்.

விதி வசமாக  குறுகிய வழிகளுடன் கூடிய இந்தத் திடல் சுற்றுச் சுவர்களால் சூழப்பட்டிருந்தது.அதிலும் ஒருவழியைத் தவிர மற்றவை எல்லாம் அடைக்கப் பட்டிருந்தன.

திட்டமிட்டபடி மாலை 4.30 மணி அளவில் ஆரம்பிக்கப்படும் என எதிர் பார்த்திருந்த வேளையில் தான் - பிரிகேடியர் ஜெனரல் ரெஜினால்ட் டயர் - 100 வெள்ளை, 65 கூர்கா , 25 பலூசி - படையாட்களுடன் வாகனங்களில் வந்தான்.  

வாகனத்தை இடையூறாக நிறுத்தி குறுகிய வழியையும் அடைத்தான்.  


அந்தத் திடலை அடைந்து நிராயுத பாணியாகக்  கூடியிருந்த மக்களின் மீது  - எவ்வித முன்னறிவிப்பும் இன்றி தாக்குதல் நடத்தினான்.  


தொடர்ச்சியாக பத்து நிமிடம், 1650 சுற்றுகள் சுடப்பட்டனர் - பொதுமக்கள்.  

மொத்தம் - 5850 ரவைகள் என்று கூட ஒரு தகவல் உண்டு!..

துப்பாக்கிகளில் குண்டுகள் தீர்ந்ததும் தான் - வேறுவழியின்றி தாக்குதல் நிறுத்தப்பட்டது. 
 
என்ன நடக்கின்றது என்பது தெரியாமலே - மண்ணில் மாண்டு விழுந்தனர் மக்கள்.

செத்து விழுந்தவர்கள் 379 பேர் என்று - ஏகாதிபத்திய ஆட்சி அறிவித்தது. ஆனால் - தன்னார்வத் தொண்டு ஊழியர்கள் கண்டெடுத்த சடலங்களோ ஆயிரத்துக்கும் மேல்!. காயம் பட்டவர்கள்  இரண்டாயிரம் பேருக்கும் அதிகம்!. அதையும் விட கொடுமை - 

திடலில் இருந்த கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சடலங்கள் மட்டும் 120. 

மக்கள் விழுந்து மடிந்த கிணறு
தண்ணீரால் நிரம்ப வேண்டிய கிணறு - நெருக்கடியில் சிக்கிப் பரிதவித்து - தடுமாறி விழுந்த மக்களால் - நிரம்பிற்று.

அன்று குண்டுகளால் துளைக்கப்பட்ட சுவர்
ஊரடங்குச் சட்டம் அமல்படுத்தப்பட்டு இருந்ததால் - காயம் பட்டவர்கள் கண்ணீரும் செந்நீருமாக விடியும்வரை -  அங்கேயே துடித்துக் கிடந்தனர். 

பஞ்சாபின் துணை ஆளுநர் மைக்கேல் ஓ'ட்வையர் என்பவன் - உன் நடவடிக்கைகள் அனைத்தும் எனக்கு உடன்பாடானவையே!.. - என்று ஜெனரல் டயருக்கு தந்தி அடித்தான். 

மைக்கேல்  ஒ’ட்வையர்
ரெஜினால்ட் E.H.டயர்
பின்னாளில் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் முன் 25.8.1919 அன்று - ஜெனரல் டயர் - இரத்த வெறி அடங்காமல் கூறிய வாக்கு மூலம் இதோ- 

''..நான் சுட்டேன். கூட்டம் சிதறிப்போகும் வரை சுட்டுக் கொண்டே இருந்தேன்.  என்னிடம் மட்டும் இன்னும் கூடுதலாக படையாட்கள் இருந்திருந்தால் - ஒழிந்தோரின் எண்ணிக்கையும் கூடுதலாக இருந்திருக்கும். நான் அங்கு போனதும், சுட்டதும் -  கூட்டத்தைக் கலைக்க மட்டுமல்ல!.. அங்கு கூடி இருந்தவர் நெஞ்சில் மட்டுமல்ல - பஞ்சாப் (இந்தியா) முழுவதுமான எல்லோருக்குமே குலை நடுக்கம் தோன்ற வேண்டும் என்பதற்காகத் தான்!.. எனவே - அளவுக்கு மேல் கடுமை என்ற கேள்விக்கே இடமில்லை!..''

இதைப் படித்ததும் - கண்கள் கசிகின்றதா!.. மனம் வலிக்கின்றதா!..

இப்படிச்சொன்ன மாபாதகன் - அடுத்த சில வருடங்களில் அவன் நாட்டிற்கே திரும்பிச் சென்றான். அங்கே அவனது மரணம் காத்திருந்தது. மனஅழுத்தம் எனும் வடிவில்!.. 

இவனை பாராட்டி வாழ்த்து தந்தி அடித்தானே - அவன், இருபது ஆண்டுகள் காத்திருந்த - இந்திய சிங்கம் ஒன்றினால் -  1940 மார்ச் 13 ஆம் நாள் மாலை 3 மணியளவில் சுட்டுக் கொல்லப்பட்டான்.

உத்தம் சிங்
அந்த சிங்கத்தின் திருப்பெயர் - உத்தம் சிங்.

1940 ஜுலை 31 அன்று தூக்குக் கயிற்றினை முத்தமிட்ட உத்தம் சிங் - சிறை வளாகத்திலேயே புதைக்கப்பட -  1962ல் அன்றைய பிரதமர் நேருஜி உத்தம் சிங்கை தேசபக்தர் என மரியாதை செய்தார். 

1974ல் அவருடைய எலும்புகள் இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டு, அரச மரியாதைகளுடன் தகனம் செய்யப்பட்டு கங்கையில் அஸ்தி கரைக்கப்பட்டது.

சும்மா கிடைத்ததா - சுதந்திரம்!...

எதையும் எதிர்பாராத தியாக சீலர்களின் நரம்புகளில் ஏற்றப்பட்டது தான் -
பாரதத் தாயின் மணிக்கொடி!..



சுதந்திரம் வேண்டி இன்னுயிர் நீத்த மாவீரர்களின் மூச்சுக் காற்றில் தான்  - இன்றும் - பட்டொளி வீசிப் பறந்து கொண்டிருக்கின்றது!..

அணையாத தியாக தீபம்
அன்று அவர்கள் சிந்திய செங்குருதிக் குழம்பில் - சமய வேறுபாடுகள் இல்லை!..  உயர்ந்தவன் தாழ்ந்தவன் - என்ற பேதம் இல்லை!.. ஆனால்,

இன்று - கீழிருந்து மேல் வரை,  சீர்கேடுகளால் புரையோடிக் கிடக்கின்றது.

லஞ்சம்,   ஊழல், அதிகார துஷ்பிரயோகம், சாதி சமயச் சண்டைகள்!.. 

எதிலும் இலவசத்தை நாடி நடுத்தெருவில் போராட்டம்!.. 

மாயச் சலுகைகளுக்காக தம்மைத் தாமே தாழ்த்திக் கொண்டு  - அதற்கும்  - நடுத்தெருவில் போராட்டம்!..  இவற்றுக்கிடையில் -

நாம் பெற்ற சுதந்திரம் நம்மிடமிருந்து  பறிக்கப்படுவதை அறிந்தோமில்லை!...

அதை அறியும் நாளே - சுதந்திர நாள்!..
அந்த நாளை எண்ணி - 

ஆடுவோமே - பள்ளு பாடுவோமே!..
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று!..

ஜெய் ஹிந்த்!..

8 கருத்துகள்:

  1. இதைப் படிக்கும் போது, தெரிந்த விஷயம் தான் என்றாலும் மனம் பதைக்கிறது .
    எப்படி ஒரு மாபாதகஸ் செயல் செய்தான் டயர்.

    தன இன்னுயிர் நீத்த அத்தனை தியாகிகளுக்கும் என் வணக்கங்கள்.

    இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. வாழ்க பாரதம்!.. வளர்க தமிழகம்!.. இனிய சுதந்திரம் என்றும் வாழ்க!..

    பதிலளிநீக்கு
  3. இன்னுயிர் நீத்த அத்தனை தியாகிகளுக்கும் என் வணக்கங்கள்.

    இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. சுதந்திர நாளில் தியாகிகள் அனைவருக்கும் அஞ்சலி செய்வோம்!..வாழ்க பாரதம்!..

    பதிலளிநீக்கு
  5. கொடுமை புரிந்த ஜெனரல் டயர் தண்டிக்கப் படவில்லையே.
    பரமசிவம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜெனரல் டயர் திருப்பி அழைத்துக் கொள்ளப்பட்டான் என்று தான் அறிய முடிகின்றது!..நானும் விடை தேடுகின்றேன்!..நன்றி ஐயா!.. தங்களுடைய வருகைக்கும் கருத்துரைக்கும்!..

      நீக்கு
  6. உயர்நிலைப் பள்ளியில் பயின்ற போது
    கண்ணீருடன் இந்தச் சம்பவத்தை விவரித்த
    வகுப்பு ஆசிரியர் திரு.A.சுப்ரமணியம் அவர்களுக்கும்
    சரித்திர ஆசிரியர் திரு.S.R.கோவிந்தராஜூ அவர்களுக்கும்
    இந்தப் பதிவு சமர்ப்பணம்.

    எங்கள் ஆசிரியரும் விவரித்த அந்த க்ஷணம் மனதில் மலர்கிறது ஐயா..!

    தண்ணீர் விட்டோ வளர்த்தோம் இப்பயிரை சர்வேசா.!
    கண்ணீராலும் செந்நீராலும் அல்லவா பெற்றோம் அரிய சுதந்திரத்தை..!

    வாழ்க பாரதம்!.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர், வாராது போல வந்த மாமணியைத் தோற்போமோ?... வாழ்க பாரதம்!..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..