ஸ்ரீமத் பகவத் கீதை
பத்தாவது அத்யாயம் - விபூதி யோகம்.
மகாகவி சுப்ரமணிய பாரதியார் வழங்கிய விளக்க உரையை அடியொற்றி வரையப்பட்டது!.. பிழை இருப்பின் பொறுத்து அருள வேண்டுகின்றேன்!..
பக்தியுடன் தியானம் செய்வதற்காக இறைவனின் பெருமை - விபூதி யோகத்தில் விரித்துக்
கூறப்படுகின்றது.
இறைவனே எல்லாவற்றிற்கும் பிறப்பிடம். அவனிடமிருந்தே
எல்லாம் வெளிப்பட்டன. அவனே அனைத்திற்கும் முன்னோன். அவன்
பிறப்பிலன்.
ஒவ்வொன்றிலுமிருந்தும் சிறந்தவை எடுத்துக் கூறப்பட்டிருக்கின்றன. இறைவனின் பெருமையைத் தனித்தனியே முற்றிலும் கூறுவது இயலாத
காரியம். அசையும் பொருள் அசையாப் பொருள் எதுவானாலும் இறைவனை விட்டுத் தனித்து நிற்க
முடியாது.
போர் முனையில் உற்றார் உறவினரைக் கண்டு சோர்வடைந்து விழுந்த அர்ச்சுனனைத் தட்டி எழுப்பி - அவன் மனம் தெளிவு பெறும்படிக்கு அருளிய பகவான், மேலும் சொல்லுகிறான்:
பெருந்தோளுடையாய், பின்னுமோர் முறை நான் சொல்லப்
புகும் மிகவுயர் சொல்லினைக் கேட்பாயாக!.. நீ எனக்கு உகந்தவன். ஆதலால், உனது
நலம் வேண்டி, இங்கு அதனை உனக்கு விளம்புவேன்.(1)
வானவர்கள் என் மகிமையை உணரார். பெருந்தகை முனிவரும் உணரார். ஏனெனில் அவர்களுக்கு எல்லாவிதங்களிலும் ஆதி நானே.(2)
பிறப்பற்றவன், அநாதியானவன், உலகங்களுக்குத் தலைவன் என்று மயக்கம் தீர்ந்த – தெளிந்த அறிவுடன் - எவர் அறிகின்றாரோ அவர் பாவம் அனைத்தினும் விடுதலைப்பட்டவராவார்.(3)
மதியும், ஞானமும், மயக்கமின்மையும், பொறுமையும், வாய்மையும், அடக்கமும்,
அமைதியும், இன்பமும், துன்பமும், உண்மையும், இன்மையும், அச்சமும்,
அஞ்சாமையும்,(4)
துன்புறுத்தாமையும், நடுநிலைமையும், மகிழ்ச்சியும், தவமும், ஈகையும், புகழும், இகழும் - உயிரினங்களுடைய வெவ்வேறான இயல்புகளும் என்னிடமிருந்தே உண்டாகின்றன.(5)
முன்னை மகரிஷிகள் எழுவரும் நான்கு மனுக்களும் - தம் மனத்தால் என்னியல்பு எய்தினர். அவர்களுடைய மரபினரே இம்மக்களெல்லாரும்!.(6)
எவன் என்னுடைய இத்தகைய பெருமையையும் யோகந்தனையும் உள்ளபடி உணர்கின்றானோ - அவன் அசைவில்லாது யோகத்தில் அமர்கிறான். இதில் ஐயமில்லை.(7)
நான் அனைத்திற்கும் தொடக்கம். என்னிடமிருந்தே எல்லாம் இயங்குகிறது இதனைப் புரிந்து கொண்ட அறிஞர்கள், நம்பிக்கையும் பக்தியும் கொண்டு என்னைத் தொழுவார்.(8)
அகத்தினை என்பால் வைத்து, உயிரை என்னுள்ளே புகுத்தி- தமக்குள் விளக்கிக் கொண்டும் என் புகழைப் பேசிக்கொண்டும் எப்போதும் என்னிடமே இன்புறுகின்றார்கள்.(9)
எப்போதும் யோகத்தில் இருந்து அன்புடன் என்னை வழிபடும் அவர்களுக்கு, எந்த உபாயத்தின் மூலம் என்னை அடைவார்களோ அந்த ஞான வடிவாகிய யோகத்தை அளிக்கின்றேன்.(10)
அவர்களுக்கு இரங்கி, அவர்கள் உள்ளத்தில் - நிலைத்து நின்று , அறியாமை எனும் இருளை - ஒளிமயமான ஞான விளக்கினால் நானே அழிக்கின்றேன்.(11)
அர்ஜுனன் சொல்லுகிறான்: நீயே பரப்பிரம்மம். நீயே பரவீடு. நீயே தூய்மை. அனைத்தினுஞ் சிறப்புடைய தூய்மை . நின்னையே நித்திய புருஷன் என்றும்,
ஆதிதேவனென்றும், பிறப்பிலானென்றும், இறைவன் என்றும்,(12)
முனிவரெல்லாம் மொழிகின்றனர். நாரதரும் அவ்விதமாகவே நவில்கிறார். அசிதரும்
தேவலரும் வியாசரும் அங்ஙனமே செப்புகிறார். இங்கு, நீ - அதையே எனக்கு நேரில் உரைக்கின்றாய்!.(13)
கேசவா! எதை என்னிடம் கூறுகிறாயோ - அவை அனைத்தும் உண்மையே என்று எண்ணுகிறேன். பகவானே! உன்னுடைய ஸ்வரூபத்தை அசுரர்கள் அறிந்து கொள்ளவில்லை. தேவர்கள் கூட அறிந்து கொள்ளவில்லை!.(14)
புருஷோத்தமா, உன்னை - நீயே அறிவாய்! பூதங்களானாய்! பூதத் தலைவனே! தேவ தேவ! வையத்தின் இறைவா!.(15)
எந்த மகிமைகளால் நீ இவ்வுலகங்களைச் சூழ்ந்து நிற்கிறாயோ, அந்த
மகிமைகள் தெய்வத் தன்மையுடையன. அவற்றை எனக்கு மிச்சமின்றி உணர்த்த
வேண்டுகிறேன்!.(16)
யோகியே! எவ்வாறு , உன்னை எப்போதும் தியானித்து நான் உணர்வேன்? பகவனே! என்னால் தியானிக்குமாறு - எந்தெந்த ஸ்வரூபங்களில் இருக்கின்றாய்?.(17)
ஜனார்த்தனா!.. உன்னுடைய யோகத்தையும் பெருமையையும் விரிவாக மற்றொரு முறை சொல்க!. ஏனெனில் எனக்கு திருப்தி ஏற்படவில்லை. அமுதம் போன்ற சொற்களை மேலும் கேட்க வேண்டும் போல இருக்கிறது!. (18)
ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: குரு குலத்தில் சிறந்தவனே! என் பெருமைகள் தெய்வாம்சம் உடையன. அவற்றுள் பிரதானமானவற்றை உனக்குச் சொல்லுகிறேன். எனது விஸ்தாரத்துக்கு
முடிவே இல்லை!.(19)
அர்ஜுனா, உயிர்களனைத்தின் உள்ளே நிற்கும் ஆத்மா நான். அவ்வுயிர்களின் ஆதியும் நான்!. இடையும் அவற்றின் இறுதியும் யானே!.(20)
ஆதித்யர்களில் விஷ்ணு.ஒளிகளில் - கதிர்களுடன் கூடிய சூரியன். வாயு தேவர்களில் மரீசி. நக்ஷத்ரங்களுள் சந்திரன்.(21)
வேதங்களில் யான் சாமவேதம். தேவரில் இந்திரன். புலன்களில் மனம். உயிர்களிடத்தே உணர்வு நானே!.(22)
ருத்திரர்களில் சங்கரன். இயக்கர் அரக்கருள் யான் குபேரன். வசுக்களில் தீ. மலைகளில் மேரு.(23)
பார்த்தனே!. புரோகிதர்களின் தலைவன் பிரகஸ்பதி நான். சேனாதிபதிகளில் நான் கந்தன். நீர் நிலைகளில் கடல்.(24)
மகரிஷிகளில் பிருகு. வாக்குகளில் ஓம் எனும் ஓரெழுத்து நானே!. யக்ஞங்களில் ஜப யக்ஞம். மலைகளில் இமாலயம். (25)
மரங்களில் அரசமரம். தேவரிஷிகளில் நாரதன். கந்தர்வருள்ளே சித்ர ரதன். சித்தர்களில் கபில முனி.(26)
குதிரைகளிடையே அமிர்தத்தில் பிறந்த உச்சை சிரவம். யானைகளில் ஐராவதம். மனிதரில் அரசன். (27)
ஆயுதங்களில் வஜ்ரம். பசுக்களில் காமதேனு. பிறப்பிப்போரில் மன்மதன். பாம்புகளில் வாசுகி.(28)
நாகர்களினிடையே அநந்தன். நீர் வாழ்வோரில் வருணன். பிதிர்களில் அரியமான். அடக்கி ஆள்பவர்களில் யமன்.(29)
அசுரரில் பிரகலாதன். இயங்குனவற்றில் காலம். விலங்குகளில் சிங்கம். பறவைகளில் கருடன்.(30)
தூய்மை செய்வனவற்றுள் காற்று. ஆயுதம் தரித்தோரில் ராமன். மீன்களில் சுறா. ஆறுகளில் கங்கை.(31)
படைப்புகளின் ஆதியும் அந்தமும் நடுவும் நானே!. அர்ஜுனா! வித்தைகளில் அத்யாத்ம வித்தை. பேசுவோரிடையே நானே பேச்சு!.(32)
எழுத்துகளில் அகரம். புணர்ப்புகளில் இரட்டைப் புணர்ப்பு. அழிவற்ற காலம் நானே! எல்லா பக்கங்களிலும் முகம் கொண்ட விராட ஸ்வரூபனும், எல்லாவற்றையும் சுமப்பவனும் நானே!.(33)
எல்லாவற்றையும் அழிக்கும் மரணம் நானே!. எதிர்காலப் பொருள்களின் பிறப்பு
நானே!. பெண்களிடத்தில் நானே கீர்த்தி, வாக்கு, நினைவு, மேதை ஸ்திதி, பொறை.(34)
அங்ஙனமே, சாமங்களில் பிருகத்சாமம். சந்தஸ்களில் காயத்ரி. மாதங்களில் மார்கழி. பருவங்களில் இளவேனில்.(35)
வஞ்சகரின் சூது நான். ஒளியுடையோரின் ஒளி நான். நானே வெற்றி. நானே நிச்சயம். உண்மையுடையோரின் உண்மையும் நானே!.(36)
விருஷ்ணி குலத்தாரில் வாசுதேவன். பாண்டவர்களில் தனஞ்ஜயன். முனிகளில் வியாசன். கவிகளில் சுக்கிர கவி.(37)
ஆள்வோரிடத்தில் நானே செங்கோல். வெற்றியை விரும்புவோரிடத்தில் நீதியும் நியாய உணர்வும் நான். ரகசியங்களில் நான் மௌனம்! ஞானம் உடையோரிடத்தில் ஞானம் நானே!.(38)
மேலும் அர்ஜுனா!.. எல்லா உயிர்களிலும் விதை எதுவோ அது நானே!.. நான் இன்றி எது இருக்கக் கூடுமோ அத்தகைய - அசையும், அசையாததுமான பொருட்கள் எதுவும் இல்லை!.(39)
எதிரிகளைச் சரங்களால் சுடுபவனே! என் திவ்ய மகிமைகளுக்கு முடிவே இல்லை!. பெருமைகளில் இந்த விரிவும் கூட ஓரளவுதான் என்னால் கூறப் பட்டது!.(40)
எவை எவையெல்லாம் - பெருமையுடையதோ, உண்மையுடையதோ, அழகுடையதோ, வலிமையுடையதோ -அவையெல்லாம் எனது ஒளியின் அம்சத்தில் பிறந்ததென்றுணர்!.(41)
அன்றியும், அர்ஜுனா!.. இதைப் பலவாறாகத் தெரிந்து கொள்வதில் உனக்குப் பயன் யாது?.. நான் இந்த உலகனைத்தையும் எனது சக்தியின் ஓர் அம்சத்தால் தாங்கிக் கொண்டு இருக்கிறேன்.(42)
இங்ஙனம் கண்ணனுடைய பெருமைகளைக் கேட்ட அர்ஜுனன் அவற்றை நேரில் காண
வேண்டுமென்ற விருப்பமுற்று வேண்ட, கண்ணன் அவற்றைக் காண்பதற்குரிய
திவ்ய நேத்திரங்களை அளிக்கின்றான். அர்ஜுனன் அவற்றால் கண்ணனுடைய
விஸ்வ ரூபத்தைக் கண்டு மகிழ்கிறான்.
அநேக முகங்களுடனும், பற்பல ஆயுதங்களுடனும், சிறந்த ஆடை ஆபரணங்களுடனும் திகழ்ந்த - விஸ்வரூபம் நறுமணம் கமழ விளங்கியது.
விஸ்வரூபத்தில் வையம் முழுதும் ஒருங்கே அடங்கியிருப்பதைக்
கண்ட அர்ஜுனன் வியப்புற்று - மயிர் சிலிர்த்து, தலை வணங்கிக் கைகளைக் கூப்பிக் கொண்டு சொல்லுகின்றான்.
வானத்துக்கும் பூமிக்கும் நடுவேயுள்ள இடைவெளியும் எல்லாத் திசைகளும்
நின்னால் நிரம்பியிருக்கின்றன. உன்னுடைய அற்புதமும் உக்கிரமுமான
இவ்வடிவத்தைக் கண்டு மூன்று உலகங்களும் சோர்வெய்துகின்றன.
இந்த வானவர் கூட்டமெல்லாம் நின்னுள்ளே புகுகின்றது. சிலர் அச்சமெய்தி
நின்னைக் கைகூப்பிப் புகழ்கின்றனர். மகரிஷிகளும் சித்தர்களுமாகிய
கூட்டத்தார் நின்னைப் புகழ்ந்துரைக்கின்றார்.
பெருந்தோளாய், பற்பல முகங்களும், விழிகளும், கைகளும்,கால்களும்,
வயிறுகளும், பயங்கரமான பற்களும் உடைய நின் பெருவடிவினைக் கண்டு, உலகங்கள்
நடுங்குகின்றன!.. யானும் அங்ஙனமே!..
உக்கிர ரூபந் தரித்த நீ யார்? எனக்குரைத்திடுக!. தேவர்களில் சிறந்த
நின்னை வணங்குகிறேன். அருள்புரிக!. ஆதியாகிய உன்னை அறிய விரும்புகிறேன்.
இங்கு உனது தொழிலை அறிகிலேன்!..
ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: உலகத்தை அழிக்கத் தலைப்பட்ட காலமே நான்
மனிதர்களை இங்குக் கொல்லத் தொடங்கியுள்ளேன். இங்கு இரு திறத்துப் படைகளிலே
நிற்கும் போர் வீரர்கள் அனைவரினும் உன்னைத் தவிர வேறு யாரும் மிஞ்சமாட்டார்கள் .
ஆதலால் நீ எழுந்து நில்!. புகழெய்து!. பகைவரை வென்று, ராஜ்யம் செழிக்க ஆள்வாயாக!..
நான் இவர்களை ஏற்கெனவே கொன்று விட்டேன்!.. இடக் கையினால் காண்டீபத்தினை ஏந்தும் வீரனே!.. வெளிக் காரணமாக
மட்டுமே, நீ நின்று - உன் தொழிலைச் செய்.
கேசவன் சொல்லியதைக் கேட்ட விஜயன் தேகம் நடுங்க அஞ்சலி புரிந்தான். மீண்டும் கண்ணனை நமஸ்காரம் செய்து, அச்சத்துடன் வாய்
குழறி வணங்கிச் சொல்லுகிறான்.
நீ ஆதிதேவன்!.. தொல்புகழோன்!.. நீ இந்த அகிலத்தின் பரம நிலையம்!. நீயே அறிவோன்!.. நீயே அறிபடு பொருள்!.. நீயே பரமபதம்!.. அநந்த ரூபா!.. நீயே இவ்வுலகினுட் பரந்து
கிடக்கிறாய்.
உன்னை முன்புறத்தே வணங்குகிறேன்!.. உன்னைப் பின்புறத்தே வணங்குகிறேன்!.
எல்லாமும் ஆவானே!. உன்னை எப்புறத்தும் வணங்குகிறேன்!. நீ எல்லையற்ற
வீரியமுடையாய்!. அளவற்ற வலிமையுடையாய்!.. சர்வத்திலும் நிலைத்திருக்கிறாய்!.
ஆதலால் நீயே சர்வன்!.
இப்படிப்பட்ட நின் பெருமையை அறியாமல், நின்னைத் தோழனென்று கருதித்
துடிப்புற்று, ஏ.. கிருஷ்ணா! ஏ.. யாதவா! ஏ.. தோழா! என்று தவறுதலாகவும் அன்பாகவும் அழைத்திருப்பதையும், விளையாடும்போதும், உறங்கும் போதும், உண்ணும்போதும், தனியிடத்தேனும்
அன்றி மற்றவர் முன்னேயெனினும் நான் உனக்கு வேடிக்கையாகச் செய்திருக்கும்
அவமதிப்புகளையும் பொறுத்தருளும்படி வேண்டுகிறேன். அளவற்றோய்!..
சராசரமாகிய இவ்வுலகத்துக்கு நீ தந்தையாவாய். இவ்வுலகத்தால் தொழத்தக்கனை நீயே!..
மிகச் சிறந்த குரு நீயே!. உனக்கு நிகர் யாருமில்லை. எனில் உனக்கு மேல்
வேறுயாவர்?.. மூன்று உலகங்களிலும் ஒப்பற்ற பெருமை உடையவனே!
உன்னைப் பணிந்து வணங்கி, நின்பால் அருள் கேட்கிறேன். ஈசனே!..
வேண்டுதற்குரியாய்!.. மகனைத் தந்தை போலும், தோழனைத் தோழன் போலும்
அன்பனை அன்பன் போலும் நீ என்னைப் பொறுத்தல் வேண்டும்.
இதற்கு முன் காணாததை இன்று கண்டு மகிழ்ச்சியுறுகிறேன். எனினும் என் மனம்
அச்சத்தால் சோர்கின்றது. தேவதேவா! எனக்கு நின் முன்னை வடிவத்தைக் காட்டுக!.
- என்று வேண்டிக்கொள்ள,
அதன் பேரில், கண்ணன் தமது விஸ்வரூபத்தைச்
சுருக்கிக் கொண்டு, முன்போல் கைகளில் சாட்டையும் சங்கு, சக்கரங்களையுமேந்தி
நின்று, தமது உண்மையான வடிவத்தைக் காட்டி,
தம்மைக் காணவும், தம்மைப் பெறவும் பக்தி ஒன்றே
சிறந்த வழி. ஆதலால் தம்மையே நேசித்திருக்கும்படி அர்ச்சுனனுக்கு
உபதேசிக்கிறான்.
கண்ணனின் பாஞ்சன்னியம் முழங்குகின்றது!..
பார்த்தனின் தேவதத்தம் ஒலிக்கின்றது!..
பார்த்தசாரதி தேரினை இயக்க,
பார்த்தனின் காண்டீபம் எழுகின்றது!.. சரமழை பொழிகின்றது!..
நிமலனாகிய ஸ்ரீ கிருஷ்ணன் நினைத்தது நடக்கின்றது!..
பரித்ராணாய ஸாதூ⁴நாம் விநாஸா²ய ச து³ஷ்க்ருதாம்|
த⁴ர்மஸம்ஸ்தா²பநார்தா²ய ஸம்ப⁴வாமி யுகே³ யுகே³ ||4-8||
த⁴ர்மஸம்ஸ்தா²பநார்தா²ய ஸம்ப⁴வாமி யுகே³ யுகே³ ||4-8||
நல்லோரைக் காக்கவும் தீயன செய்வோரை அழிக்கவும்
அறத்தை நிலை நிறுத்தவும் நான் யுகந்தோறும் பிறக்கின்றேன்!
எங்கெல்லாம் யோகேஸ்வரக் கிருஷ்ணனும்
வில்லினையேந்திய விஜயனும் இருக்கின்றார்களோ -
அங்கெல்லாம் திருவும் ஆக்கமும் வெற்றியும் ஐஸ்வர்யமும்
நிலை தவறாத நீதியும் நிலைத்து இருக்கும்!..
நிலை தவறாத நீதியும் நிலைத்து இருக்கும்!..
சர்வம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம்!..
மகரிஷிகளில் பிருகு. வாக்குகளில் ஓம் எனும் ஓரெழுத்து நானே!. யக்ஞங்களில் ஜப யக்ஞம். மலைகளில் இமாலயம்.
பதிலளிநீக்குபகத் கீதையில் கண்ணனின் தரிசனத்தை
காட்டியத்தற்கு இனிய நன்றிகள்..!
எல்லாம் அவனே என்று உணர்கின்றபோது, மனம் - ஆனந்த மயமாகின்றது!.. தங்களின் வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் நன்றி!..
நீக்குஎங்கெல்லாம் யோகேஸ்வரக் கிருஷ்ணனும்
பதிலளிநீக்குவில்லினையேந்திய விஜயனும் இருக்கின்றார்களோ -
அங்கெல்லாம் திருவும் ஆக்கமும் வெற்றியும் ஐஸ்வர்யமும்
நிலை தவறாத நீதியும் நிலைத்து இருக்கும்!..
நிலைபெற்ற வரிகள் அருமை..!
இதற்கு முன் இந்த வரிகளை சந்தித்திருந்தாலும் , பதிவில் எழுதிய பிறகே மனம் சிந்திக்கின்றது!.. ஏதோ தூண்டுகின்றது!..
நீக்குதங்களின் மேலான கருத்துரைக்கு மிக்க நன்றி!..
/நல்லோரைக் காக்கவும் தீயன செய்வோரை அழிக்கவும் அறத்தை நிலை நிறுத்தவும் நான் யுகந்தோறும் பிறக்கின்றேன்./ நம்பிக்கைகள் தொடர, அவன் பிறந்திருக்க வேண்டுமே.!
பதிலளிநீக்குநல்லாரை நன்மை அறிவாய் போற்றி - என திருநாவுக்கரசர் இறைவனைப் போற்றுகின்றார். அவ்வழியே - நம்பிக்கைகள் தொடரும். தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா!..
பதிலளிநீக்குகிருஷ்ய தரிசனம் அருமை
பதிலளிநீக்குஅன்புடையீர்!. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!.. தங்களை தளத்தில் பார்க்கும் போது - கரந்தையில் நாம் சந்தித்துக் கொள்வது போலவே இருக்கின்றது!..
நீக்குகிருஷ்ணன் என்று சொல்லும் போதே கீதை தான் நினைவிற்கு வரும். விபுதியோகம் பற்றி விரிவாக அறிந்து கொண்டேன்.
பதிலளிநீக்குநன்றி.
முன்பே ஓரளவு படித்திருந்தாலும் வலைத்தளத்தில் தட்டச்சு செய்யும் போது - நிறைய விஷயங்கள் விளங்கின. தங்களின் வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் மிக்க நன்றி!..
நீக்குஅன்பிற்குரிய திரு. கபீர் அன்பன் அவர்களை வருக.. வருக என வரவேற்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்!..
பதிலளிநீக்கு