அனைத்து நலன்களையும் அள்ளி அள்ளி - வழங்கும் ஐங்கரனின் சதுர்த்திப் பெருவிழா!..
விநாயகப் பெருமானின் திருக்கோயில்கள் அனைத்தும் புதுப் பொலிவுடன் திகழ்கின்றன!..
திருவாக்கும் செய்கருமம் கை கூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்
காதலால் கூப்புவர் தம் கை.
- என்று கபிலதேவர் நமக்கு அறிவுறுத்துகின்றார்.
வானோரும் அன்பு கொண்டு கைகூப்பி வணங்கும் கணபதியை நாம் வணங்கி மகிழ வேண்டாமா!..
எளிமையின் நாயகனாகிய விநாயகப் பெருமான், வாழ்வின் தத்துவங்களை நமக்கு விளக்குகின்றார். அவரை வணங்குவதற்கு என்று மிகப் பெரிய படாடோபங்கள் எதுவும் தேவையில்லை!..
அவர்தம் திருமேனியை மஞ்சளில் செய்யினும் களிமண்ணால் செய்யினும், ''..இதோ வந்து விட்டேன்!..'' - என்று வந்தருள் புரியும் குணக்குன்று!..
தானே, தனிப் பெருந்தலைவனாக இருந்தும் - தனக்குத் தானே அங்குசத்தை ஏந்தியவாறு திருக்காட்சி அருளும் கற்பக மூர்த்தி - விநாயகப் பெருமான்.
ஊரும் உலகும் உய்யும் பொருட்டு - மகாபாரதத்தை மேரு மலையில் எழுதுதற்கு, தன் தந்தத்தையே எழுத்தாணியாக ஆக்கிக் கொண்ட ஏந்தல்!..
இதனை அருணகிரியார் - வர்ணித்துப் பாடி மகிழ்கின்றார்.
அண்ணாமலைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்த அருணகிரியைக் காத்தருளிய முருகப் பெருமான், சும்மா இரு .. சொல்லற!.. என மொழிந்த பின் நிஷ்டை கூடி வருகின்றது.
முருகன் தன் திருக்கை வேலின் நுனியால், அருணகிரியின் நாவில் அட்க்ஷரம் எழுதிய நிலையில் முத்தைத்தரு பத்தித்திரு நகை என முதல் பாடலைப் பாடி யோகத்தில் ஆழ்ந்து விடுகின்றார்.
அதன் பின், பன்னிரண்டாண்டுகள் கழிந்த பின்னரே - மீண்டும் முருகனால் ஆட்கொள்ளப்பட்டு, ''..வயலூருக்கு வா!..'' - என அழைப்பு கிடைக்கின்றது.
அங்கே - வயலூரில் தான் திருப்புகழினைப் பாடும்படி பணிக்கப்படுகின்றார் அருணகிரி. அதுவும் எப்படி!..
மயிலையும் கடப்ப மலர் மாலையையும் வேலையும் சேவலையும் பன்னிரு தோள்களையும் தன் திருவடிகளையும் ''செய்ப்பதி'' எனும் வயலூரையும் வைத்துப் பாடும்படி முருகன் அருளினான். அதனைத் தன் தலைமேற்கொண்டு அருணகிரி நாதர் தொடங்கும் போது தான் ,
அற்புதமான விநாயகர் திருப்புகழ் நமக்குக் கிடைக்கின்றது!..
கைத்தல நிறைகனி அப்பமொ டவல்பொரி
கப்பிய கரிமுகன் - அடிபேணிக்
கற்றிடும் அடியவர் புத்தியி லுறைபவ
கற்பகம் எனவினை - கடிதேகும்
மத்தமு மதியமும் வைத்திடும் அரன்மகன்
மற்பொரு திரள்புய - மதயானை
மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
மட்டவிழ் மலர்கொடு - பணிவேனே!..
முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதிய - முதல்வோனே
முப்புரம் எரிசெய்த அச்சிவ னுறைரதம்
அச்சது பொடிசெய்த - அதிதீரா
அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்
அப்புனம் அதனிடை - இபமாகி
அக்குற மகளுடன் அச்சிறு முருகனை
அக்கண மணமருள் - பெருமாளே!..
திருக்கரத்தில் நிறைந்துள்ள பழம், அப்பம், அவல், பொரி இவற்றினை வாரி உண்ணும் கரிமுகனே!.. நின் திருவடிகளை விரும்பித் துதித்து, கற்கும் அடியவர்களுடைய மனதில் நீங்காது வாழும் பெருமானே!..
உன்னை - கற்பக விருட்சம் - என நினைத்துத் துதி செய்தால்
வந்த வினையும் வருகின்ற வல்வினையும் வழி கெட்டு ஓடிப் போய்விடும்.
ஊமத்தம் பூவையும் பிறைநிலவையும் சடையில் தரித்த சிவ பெருமானுடைய திருமகனும்,
மற்போருக்குத் திரண்டாற் போல் விளங்கும் தோள்களை உடையவனும், மத யானையை ஒத்தவனும்,
மத்தளம் போல் விளங்கும் பெருவயிறு உடையவனும், உத்தமியாகிய பார்வதியின் அன்பு மகனும் ஆகிய
கணபதியே - உன்னைத் தேன் துளிகள் நிறைந்த புது மலர்களால் போற்றி வணங்குகின்றேன்!..
மலைகளுள் முற்பட்டதாக விளங்கும் மேரு மலையில் - முத்தமிழினை முதன்முதலில் எழுதிய முதல்வனே!.. திரிபுர சம்ஹாரத்தின் போது சிவபெருமான் எழுந்தருளிய ரதத்தின் அச்சாணியை உடைத்துத் தூளாக்கிய அதிதீரனே!..
குறமகளாகிய வள்ளியின் மீது கொண்ட காதலால் துயருற்றிருந்த சுப்ரமணியனின் மனக்குறை நீங்கும் வண்ணம் - தினைப் புனத்தில் யானை எனத் தோன்றி,
வள்ளி நாயகிக்கும் இளையோனாகிய முருக வேளுக்கும் அக்கணத்திலேயே திருமணம் முடித்து வைத்து நல்லருள் புரிந்த விநாயகப் பெருமானே!..
- என்று அருணகிரியார், நம் பொருட்டு மங்கலகரமாகப் பாடியருள்கின்றார்.
விநாயகப் பெருமானை, கற்பகம் - என, உள்ளத்தில் நினைத்து வணங்க வலியுறுத்துகின்றார்.
அவ்வண்ணம் வணங்கி வழிபட
நமக்கு ஏது தடை!.. ஏது குறை!..
ஓம் கம் கணபதயே நம:
ஊரும் உலகும் உய்யும் பொருட்டு - மகாபாரதத்தை மேரு மலையில் எழுதுதற்கு, தன் தந்தத்தையே எழுத்தாணியாக ஆக்கிக் கொண்ட ஏந்தல்!..
பதிலளிநீக்குசிறப்பான ஆக்கம் ..பாராட்டுக்கள்..!
தங்களின் மேலான வருகையும் அன்பான பாராட்டும் கண்டு மகிழ்கின்றேன்!.. நன்றி!..
நீக்குநீங்காது நெஞ்சில் நிலை கொண்டது எம் பெருமானின் திருவருள்
பதிலளிநீக்குதங்களுக்கும் சுற்றத்தார் அனைவருக்கும் கிட்டட்டும் அருமையான
இப் படைப்பினைப் போல ! வாழ்த்துக்கள் ஐயா சிறப்பான படைப்பு
மேலும் மேலும் தொடரட்டும் வாசகர்களின் உள்ளக் கமலத்திலும் .
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!.. கவி மலரால் கருத்துரைக்கு அழகு சேர்த்தமையை என்றும் மறவேன்!..
நீக்குவிநாயகர் பெருமை அழகாய் எழுதியிருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்....தொடருங்கள்.....
தங்களின் வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் தாங்கள் அளிக்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி!..
நீக்குகபிலதேவர் அவர்கள் அறிவுறுத்தலுடன் அனைத்தும் சிறப்பு... வாழ்த்துக்கள் ஐயா... நன்றி...
பதிலளிநீக்குதிரு. தனபாலன் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!,,
நீக்கு
பதிலளிநீக்குகைத்தல நிறைகனி’-- பொழிப்புரைக்கு நன்றி.
வணக்கம் ஐயா!.. வருகை தந்து கருத்துரை வழங்கியமைக்கு மிக்க நன்றி!..
நீக்கு