வைகுந்தத்தில் பெருமாளையும் எம்பிராட்டியையும் தரிசித்துத் தொழுது வணங்கிய பராசர மகரிஷி - ஒரு வரம் கேட்டார்.
அவ்வாறே - பெருமானும் புன்னகையுடன் அருளினார்.
அந்த நிம்மதியுடன் பூவுலகுக்கு வந்த மகரிஷியின் கண்களில் வியப்பு!..
''..நாம் தேடி வந்த இடம் இதுதான்.. சந்தேகமேயில்லை!..''
பார்க்கும் இடம் எங்கும் பட்டு விரித்தாற் போல - பச்சைப் பசேலென்று - மனதுக்கு ரம்யமாக இருந்தது.
இருப்பினும் ஒரு சந்தேகம் அவருக்குள் எழுந்தது. கால மாறுபாடுகளால் இந்தப் பசுமை வளங்குன்றி விட்டால் - நீராதாரத்துக்கு வேறு எங்கே செல்வது?..
திருப்பாற்கடலில் பாம்பணையில் பள்ளி கொண்டிருக்கும் பரந்தாமனைத் தியானித்தார். தாம் அன்று - வள்ளல் பெருமானிடம் வேண்டியபடி, வரத்தினை பிரசாதிக்கக் கோரினார்.
அதன்படியே விண்ணிலிருந்து இறங்கிய - நீர்ப் பிரவாகம் - மகரிஷியின் பாதங்களை வணங்கியபடி நதியாகத் தவழ்ந்தது.
மிகவும் சந்தோஷத்துடன் பர்ணசாலை அமைத்தார். உலகு உய்வதற்கான வேள்விகளில் ஈடுபட்டார் - தன் அடியார்களுடன்.
துஷ்டர்களுக்கு அது பொறுக்குமா!.. நாளும் பிறர்க்கு இன்னல் தந்து அதில் மகிழ்வதையே தம் வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டிருந்த அசுரர்களுள் சிலரான -
தஞ்சகன், தண்டகன், கஜமுகன் என்பவர் தம் கண்களை - பராசர மகரிஷியின் பர்ணசாலை - உறுத்திற்று. விளைவு!..
அரக்கர்களால் உபத்ரவம்!.. மகரிஷியின் ஜப, தவங்களுக்கு இடையூறு!..
மீண்டும் பராசர் - வைகுந்தவாசனை சரண் புகுந்தார்.
கருட வாகனத்தில் எழுந்தருளிய எம்பெருமான் - கஜமுகனைச் சங்கரித்தார்.
அஞ்சி நடுங்கிய தண்டகன் - பாதாளத்தில் நுழைந்து உயிர் பிழைக்க எண்ணி, பூமியைக் குடைந்து கொண்டு ஓடினான்.
சினங்கொண்ட பெருமான் - வராக மூர்த்தியாகப் பொலிந்து - பாதாளத்தில் நுழைய முற்பட்ட தண்டகனைத் - தன் கோரைப் பற்களால் கீறிக் கிழித்து அழித்து - பூமியைப் பிளந்து கொண்டு பூவராகப் பெருமாளாக எழுந்தருளினார்.
இதைக் கண்டு மனம் பதைத்த தஞ்சகன் - கோபாவேசத்துடன் மதங்கொண்ட யானையென பெருமானின் மீது போர் தொடுக்க, பெருமான் வீறு கொண்ட சிங்கமாகி - தஞ்சகனைத் தாக்க,
பெருமாளின் திருக்கரத்தால் தீட்சை பெற்றவனாகி அடங்கி நின்றான். அன்பு கொண்டு அழுது நின்றான். அண்ணலைத் தொழுது நின்றான். அந்நிலையில் தஞ்சகாசுரனுக்கு மோக்ஷம் அருளினார்.
அப்போது அவன் பெருமானைப் பணிந்து - கேட்டுக் கொண்டதன் பேரில் அந்தத் தலம் - தஞ்சமாபுரி என விளங்க அருளப்பட்டது. தஞ்சகாசுரனுக்கு மோக்ஷம் அருளியதால் இத்தலத்துக்கு ''மோக்ஷ ஸ்தலம்'' எனும் சிறப்புப் பெயரும் உண்டு.
நரங்கலந்த சிங்கமாக - தஞ்சகாசுரனுக்கு மோக்ஷம் அருளிய நிலையில் விளங்கிய பெருமானை பராசர மகரிஷி போற்றி வணங்கினார். அந்த நிலையிலேயே இன்றும் இத்திருத்தலத்தில் பெருமான் சேவை சாதிக்கின்றார்.
இப்படி - மூர்த்தி, தலம், தீர்த்தம் - என மூன்றும் சிறந்து விளங்க, தஞ்சமாபுரி - என அருளப் பெற்ற திவ்ய தேசம் தான் -
தஞ்சாவூர்.
திருக்கோயில் - தஞ்சை மாநகரின் வடக்கே - அன்று பராசர மகரிஷிக்காக இறங்கிய விண்ணாற்றின் தென்கரையில் அமைந்துள்ளது.
மகிழ மரம் |
திருமங்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், நம்மாழ்வார் ஆகியோர் - மங்களாசாசனம் செய்த திருத்தலம். தல விருட்சம் மகிழ மரம்.
இங்கே ஆதியில் -
பராசரருக்குப் ப்ரத்யட்சமாகிய ஸ்ரீ நீலமேகப்பெருமாள்,
பின்னும் ஸ்ரீமணிக்குன்றப்பெருமாள்,
தஞ்சகனை வதம் செய்த ஸ்ரீ வீர நரசிங்கப் பெருமாள்
- என மூன்று திருக்கோயில்கள்.
ஆழ்வார்கள் இம் மூன்றினையும் ஒருங்கே மங்களாசாசனம் செய்ததாகப் பெரியோர்கள் கூறுகின்றனர்.
திருமங்கை ஆழ்வார் - தஞ்சை யாளி என்று நரசிங்க மூர்த்தியைப் புகழ்ந்துரைக்கின்றார்.
ஸ்ரீ வீரநரசிங்கப் பெருமாள் சந்நிதி |
மூலவர் - ஸ்ரீவீரநரசிம்மர் (கிழக்கு நோக்கி அமர்ந்த திருக்கோலம்).
தாயார் - தஞ்சை நாயகி
தீர்த்தம் - விண்ணாறு, ஸ்ரீசூர்ய புஷ்கரணி.
பின்னாளில் மார்க்கண்டேய மகரிஷிக்கும் ப்ரத்யட்க்ஷம்.
ஸ்ரீவீரநரசிம்மர் திருக்கோயிலுக்கு சற்று மேற்கே - மணிக்குன்றப்பெருமாள் திருக்கோயில்.
ஸ்ரீ மணிக்குன்றப் பெருமாள் சந்நிதி |
மூலவர் - ஸ்ரீமணிக்குன்றப்பெருமாள் (கிழக்கு நோக்கி அமர்ந்த திருக் கோலம்).
தாயார் - அம்புஜவல்லி.
தீர்த்தம் - விண்ணாறு, ஸ்ரீராம தீர்த்தம்.
ஸ்ரீமணிக்குன்றப்பெருமாள் திருக்கோயிலுக்கு சற்று மேற்கே நீலமேகப் பெருமாள் திருக்கோயில்.
ஸ்ரீ நீலமேகப் பெருமாள் சந்நிதி |
மூலவர்- ஸ்ரீநீலமேகப்பெருமாள் (கிழக்கு நோக்கி அமர்ந்த திருக்கோலம்).
தாயார் - செங்கமலவல்லி.
தீர்த்தம் - விண்ணாறு, அம்ருத தீர்த்தம்.
பராசர மகரிஷிக்கு நீலமேகனாக, மணிக்குன்றனாக - பெருமாள் ப்ரத்யட்க்ஷம் ஆனதால் பராசர க்ஷேத்திரம் எனவும், தஞ்சகனுக்கு மோஷம் அருளியதால் மோக்ஷஸ்தலம் எனவும், மார்க்கண்டேய மகரிஷிக்கு வீர நரசிங்க கோலங் காட்டியதால் மார்க்கண்டேய க்ஷேத்திரம் எனவும் புகழப்படும் திருத்தலம்.
வீரநரசிங்கப் பெருமாள் திருக்கோயிலில் -
கருவறை வீர நரசிங்கன், ஆழியுள் அமர்ந்த நரசிங்கன், வைகுந்த நரசிங்கன், கல்யாண நரசிங்கன், விதானத்து வீர நரசிங்கன்,
நீலமேகப் பெருமாள் திருக்கோயிலில் -
அபய வரத நரசிங்கன், கம்பத்தடி யோக நரசிங்கன், வலவெந்தை லக்ஷ்மி நரசிங்கன் -
என - அஷ்ட நரசிம்ம தரிசனம் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம்
எனக்கரசு என்னுடை வாணாள் அம்பினால்
அரக்கர் வெருக்கொள நெருக்கி அவருயிர்
செகுத்தஎம் அண்ணல் வம்புலாம் சோலை
மாமதிள் தஞ்சை மாமணிக் கோயிலே வணங்கி
நம்பிகாள் உய்ய நான் கண்டு கொண்டேன்
நாராயணா எனும் நாமம்!..(953)
என்று திருமங்கை ஆழ்வார் - நமக்கு வழிகாட்டுகின்றார்.
தமர் உள்ளம் தஞ்சை தலையரங்கம் தண்கால்
தமர் உள்ளும் தண் பொருப்புவேலை தமர் உள்ளும்
மாமல்லை கோவல் மதிட்குடந்தை என்பரே
ஏவல்ல எந்தைக்கு இடம்!.. (2251)
- என்பது பூதத்தாழ்வாரின் திருப்பாசுரம்.
வெண்ணாறு |
இன்றும், வெண்ணாறு - நீலமேகப்பெருமானின் அருட்கொடையால் வற்றாத நீர் பெருக்குடன், வளங்குன்றாது விளங்குவது அதிசயம்!..
தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் இருந்து - திருவையாறு மற்றும் அய்யம்பேட்டை செல்லும் அனைத்து நகரப் பேருந்துகளும், வீரநரசிங்கப் பெருமாள் திருக்கோயிலின் வாசலில் நின்று செல்கின்றன.
தவிர - வெண்ணாற்றின் வடகரையில், பள்ளியக்ரஹாரத்தில் -
ஸ்ரீவரதராஜப் பெருமாள்திருக்கோயில்,
ஸ்ரீகல்யாணவெங்கடேசர் திருக்கோயில்,
என, வெண்ணாற்றின் தென்கரையிலும் வடகரையிலுமாக ஐந்து பெருமாள் கோயில்கள் விளங்கும் புண்ணிய திருத்தலம் -
தஞ்சையம்பதி!.
இவை தவிர - பதினெட்டு வைணவத் திருக்கோயில்கள் தஞ்சை மாநகருக்குள் - விளங்குகின்றன.
புரட்டாசியின் புதன்கிழமை!.. பொன் கிடைத்தாலும் கிடைக்காத புண்ணிய நாள்!..
வம்புலாம் சோலை மாமதிள்
தஞ்சை மாமணிக் கோயிலே வணங்கி
நம்பிகாள் உய்ய நான் கண்டு கொண்டேன்
நாராயணா எனும் நாமம்!..
தஞ்சை வீரநரசிம்மரின் மகத்துவம் அறிந்தேன் நன்றி ஐயா
பதிலளிநீக்குஅன்புடையீர்!.. தங்களின் வருகை கண்டு மகிழ்ந்தேன்!.. அன்பின் கருத்துரைக்கும் மிக்க நன்றி!..
நீக்குதஞ்சாவூர் பெயர்க் காரணம் அறிந்து கொண்டேன். நன்றி பகிர்விற்கு.
பதிலளிநீக்குதஞ்சாவூர் பெயர்க்காரணம் சைவ வழிமுறைகளில் சற்று மாறுபாடுடன் சொல்லப்படுகின்றது. அதையும் விரைவில் பதிவில் காணலாம். தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!..
நீக்குஆகா... சிறப்பு... அருமையான விளக்கங்கள் + தகவல்கள்... நன்றி ஐயா... வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குஅன்பின் தனபாலன்!.. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!..
நீக்குஅருமையான படங்களுடன் அழகான செய்திகள். பகிர்வுக்கு நன்றிகள்.
பதிலளிநீக்குஅன்புடையீர்!.. தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ந்தேன்!..நன்றி!..
நீக்குஅன்பின் திரு. சிவா அவர்களை வருக.. வருக.. என வரவேற்கின்றேன்!..
பதிலளிநீக்குநான் கண்டு கொண்டேன்
பதிலளிநீக்குநாராயணா எனும் நாமம்!..
அஷ்ட நரசிம்மப்பெருமாள் தரிசனமும் ,படங்களும்
அருமையான திருக்கோவில் பகிர்வுகளும் மனம் நிறைத்தன..பாராட்டுக்கள்..!
அன்புடையீர்!.. தங்களின் அன்பான வருகைக்கும் பாராட்டுரைக்கும் மிக்க நன்றி!..
நீக்கு