நூற்றெட்டுத் திவ்ய தேசங்களுள் முதலாவதான திருத்தலம்.
மூன்று பிரம்மோத்ஸவம் (சித்திரை, தை, மாசி) நிகழும் திருத்தலம்.
பச்சை மாமலை போல் மேனி பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே ஆயர் தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான் போய் இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்க மாநகருளானே!..
திருப்பாற்கடல், பரமபதம் - தவிர்த்த ஏனைய திவ்ய தேசங்களுள் தெற்கு நோக்கிய திருத்தலம் - திரு அரங்கம்.
புண்ணிய பாரதத்தின் பிரம்மாண்டமான திருக்கோயில்களில் ஒன்றென விளங்கும் திருத்தலம்.
மதுரகவி ஆழ்வார் தவிர ஏனைய ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பட்டவன் திரு அரங்கன்.
சித்திரைத் திருவிழாவில் அரங்கனின் திருக்கோலம் |
ஊரிலேன் காணியில்லை உறவு மற்றொருவர் இல்லை
பாரில் நின் பாதமூலம் பற்றிலேன் பரமமூர்த்தி
காரொளி வண்ணனே என் கண்ணனே கதறுகின்றேன்
ஆருளர் களைகணம்மா அரங்கமாநகருளானே!..
ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து முத்துப் பல்லக்கில் வந்த கோதை நாச்சியார்,
மனம் கொண்ட மணாளனின் ஊர் என, ஸ்ரீரங்கத்தின் எல்லையில் - பல்லக்கில் இருந்து இறங்கி,
பல்லோரும் எதிர்கொண்டு வணங்கி வரவேற்க - பூம்பாதங்கள் சிவக்க நடந்து வந்து -
திருக்கோயிலினுள் ஏகி - அரங்கனுடன் கலந்தாள் - எனக் குறிப்பர்.
தெற்கு நோக்கிய சயனத் திருக்கோலத்தில் உள்ள மூலவரின் ஸ்ரீவிமானம் பிரணாவாக்ருதி எனப்படுகிறது. தங்கத்தால் வேயப்பெற்றது.
குடதிசை முடியை வைத்துக் குணதிசை பாதம் நீட்டி
வடதிசை பின்பு காட்டித் தென்திசை இலங்கை நோக்கி
கடல்நிறக் கடவுள் எந்தை அரவணை துயிலுமாகண்டு
உடலெனக்கு உருகுமாலோ என்செய்கேன் உலகத்தீரே!..
வைகுண்ட ஏகாதசியின் போது பகல்பத்து, ராப்பத்து என்னும் இத்திருவிழா
நாட்கள் முழுவதிலும் சுவாமியின் திருமுன்னிலையில் நாலாயிர திவ்யப்
பிரபந்தப் பாடல்கள் முழுவதும் ஓதப்படும்.
பிரம்மாண்டமான இந்தத்
திருவிழாவில் ஐந்து லட்சம் பக்தர்களுக்கும் மேல் திரண்டு வந்து பெருமாளை வணங்கி இன்புறுவர்.
ஆடிப்பெருக்கு அன்று சுவாமி காவிரிக் கரையில் அம்மா
மண்டபத்திற்கு எழுந்தருளுகின்றார்.
அங்கு கங்கையினும் புனிதமாய காவிரிக்கு அவர் சார்பில்
பட்டுப்புடவை, வளையல், குங்குமம், வெற்றிலை ஆகிய மங்கலப் பொருட்களை யானையின் மீது வைத்து, நகர் வலமாக வந்து - ஆற்றில்
சீதனமாக மிதக்க விடுவார்கள்.
ஸ்ரீரங்கநாதனுக்கு சேவை செய்து அரங்கனின் திருவடிகளிலேயே மோட்சம் அடைந்த ஸ்ரீராமானுஜர், இங்கு
தனிச்சன்னதியில் காட்சி தருகிறார். இவருக்கு திருமஞ்சனம் கிடையாது.
உடையவரின் திருநட்சத்திரமான சித்திரை திருவாதிரையன்று குங்குமப்பூ, பச்சைக் கற்பூரம் சேர்ந்த கலவை
சாத்தப் படுகின்றது.
ஆனி கேட்டையில் சுவாமிக்கு ஜேஷ்டாபிஷேகம் நடைபெறும்.
கைசிக ஏகாதசி எனப்படும் கார்த்திகையின் வளர்பிறை ஏகாதசியன்று இரவு நம்பெருமாளுக்கு
365 போர்வைகளை ஒவ்வொன்றாக போர்த்தும் வைபவம் விடிய விடிய நடக்கிறது.
கம்பர், ஸ்ரீ ராமாயணத்தை அரங்கேற்றம் செய்த தலம்.
அரங்கேற்றம் செய்தபோது, அங்கே கூடியிருந்த சிலர் - ராமாயணத்தில் நரசிம்மரை பற்றி
குறிப்பிட்டதை எதிர்த்தனர். ராமாவதாரத்தில் நரசிம்மர் பற்றி
சொல்லக்கூடாது என்றனர்.
ஸ்ரீராமாயணம் அரங்கேறிய மண்டபம் |
இந்தச் சிக்கலைத் தீர்க்க வேண்டி நரசிம்மரைத் தியானித்தார் - கம்பர்.
அப்போது நரசிம்மர், கர்ஜனையுடன் ஆமோதித்து அருள - எதிர்த்தவர்கள் ஏதும் பேச இயலாது - அடங்கிப் போயினர்.
தமிழுக்குத் தலையசைத்து மகிழ்ந்த ஸ்ரீநரசிங்க மூர்த்தி - தாயார் சந்நிதிக்கு அருகில் உள்ள சந்நிதியில் மேட்டழகிய சிங்கர் என வீற்றிருக்கின்றார்.
ஸ்ரீரங்கநாயகி தாயார் சந்நிதியில் - உற்சவ திருமேனியும், ஸ்ரீதேவியும், பூமாதேவியும் - என திருக்காட்சி தந்தருள்கின்றனர்.
அமுத கலசம் ஏந்திய கருடாழ்வார் சந்நிதி, தன்வந்திரி சந்நிதி, பிரம்மோற்ஸவத்தின்போது நெல் அளக்க பெருமாள் எழுந்தருளும் தான்ய லக்ஷ்மி சந்நிதி, ஆண்டாள் சந்நிதி - ஆகியன விசேஷமானவை.
திருக்கோயிலே விசேஷம் எனும்போது - வெல்லத்தின் இந்தப் பக்கம் தான் இனிப்பு என்பதைப் போன்றது -
திரு அரங்கத்தின் சிறப்புகளைக் கூறுவதும்!..
எனினும், பொன் கிடைத்தாலும் கிடைக்காத புதன் அன்று பெருமாளைப் பற்றிச் சிந்திப்பதற்காகவே -
சிறியேனின் இந்தப் பதிவு!..
பதிவினுள் தொண்டரடிப் பொடியாழ்வாரின் திருப்பாசுரங்கள் இடம் பெற்றுள்ளன.
அழகிய மண்டபங்களுடனும், அருள் பெருகும் சந்நிதிகளுடனும் விரிந்து பரந்திருக்கும் இத்திருக்கோயில் -
இருபத்தோரு கோபுரங்களையும் ஏழு திருச்சுற்றுகளையும் உடையது.
கங்கையிற் புனிதமாய காவிரி நடுவு பாட்டு
பொங்குநீர் பரந்து பாயும் பூம்பொழில் அரங்கந்தன்னுள்
எங்கள் மால் இறைவன் ஈசன் கிடந்ததோர் கிடக்கை கண்டும்
எங்ஙனம் மறந்து வாழ்கேன் ஏழையேன் ஏழையேனே!..
வைணவத்தில் கோயில் என்றால்
திருஅரங்கம் தான்!..
வழிபடும் அடியவர்க்கு இன்னல் என்றால்
ஓடி வந்து தீர்ப்பவன்
திரு அரங்கன் தான்!..
திரு அரங்கத்தின் சிறப்புகள் மிகவும் அருமை... நன்றிகள் ஐயா... வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குஅன்பின் திரு. தனபாலன் .. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!..
பதிலளிநீக்குஅரங்க நாதரைப் பற்றியும் கோயில் வரலாறினையும் அழகாகத் தொகுத்துத் தந்தீர்கள். படங்களும் அருமை சகோதரரே!
பதிலளிநீக்குபகிர்வினுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்!
அன்பின் சகோதரி.. இளமதி வருகை தந்து அழகான கருத்துரை வழங்கியமைக்கு மிக்க நன்றி!.. வாழ்க வளமுடன்!..
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குஅரங்கனை தரிசிப்பதில் இருக்கும் கஷ்டங்கள் அப்பப்பா... ஆலய தரிசனம் செய்ய முற்பட வேண்டுமானால் திருவரங்கத்துக்கே ஒரு நாள் ஒதுக்க வேண்டும்.
ஆம் ஐயா!.. தங்களின் ஆதங்கம் உன்மைதான்!.. திருக்கோயிலின் நடைமுறை சம்பிரதாயங்களால் வெகு நேரம் - கூட்டம் இல்லாத பொழுதும் - காத்துக் கிடக்கும் படியாகி விடுகின்றது.. ஆனால் அதுவும் ஒரு சுகம்தான்!..
நீக்கு