நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், செப்டம்பர் 30, 2013

மஹாளய பட்சம்

சூரியன் கன்யா ராசியில் - புரட்டாசி மாதம் - சஞ்சரிக்கும் போது நிகழும் தேய்பிறை காலம்  '' மஹாளய பட்சம்'' என்று குறிக்கப்பட்டு,


பித்ருக்களை ஆராதிப்பதற்கும் அவர்களுக்குச் செய்யவேண்டிய சிரார்த்தம் தர்ப்பணம் ஆகியவற்றை சிரத்தையுடன் முறையாக நிகழ்த்துவதற்கும் உகந்த நாட்கள் என  சொல்லப்படுகின்றது.

இதன் நிறைவாக புரட்டாசி மாதத்தின் அமாவாசை மஹாளய பட்ச அமாவாசை என சிறப்பிக்கப்படுகின்றது. 

ஒவ்வொரு மனிதனும் தான் வாழும் காலத்தில் முறையாக இறைவழிபாடும் குலதெய்வ வழிபாடும் செய்யக் கடமைப்பட்டவன். 

அதனைத் தொடர்ந்து ஞான நூல்களைப் பயின்று அவற்றின் வழி நடக்கவும் அதன் சாரமாக  - சக மனிதர் முதல் தாவர மற்றும் விலங்குகள் எனும் உயிர்த் திரளை நேசிக்கவும் அவற்றைப் பாதுகாக்கவும் விதியுடையவன் ஆகின்றான். 

தன்னை ஈன்றெடுத்து பாலூட்டி சீராட்டி பலவகையிலும் முன்னேற்றிய தாய் தந்தையர் முதல் - குலத்தின் முன்னோர்களுக்கும் தக்க மரியாதையினைச் செலுத்த வேண்டியவனாகின்றான்.

தன்னுடன் வாழ்ந்து மறைந்த பெற்றோர்களுக்கும் தன் குலத்தின் முன்னோர்களுக்கும் - அவர்கள் மண்ணுலக வாழ்வை நீத்த நாளை நினைவில் கொண்டு வருடந்தோறும் அந்த நாட்களில் சிரார்த்தம் தர்ப்பணம் ஆகியவற்றை முறையாக செய்ய வேண்டும் என வைதீகக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

 

இவ்வாறு செய்வதால் பித்ருக்கள்  திருப்தி அடைந்து  நல்லாசிகளை வழங்கி நல்வாழ்வுக்குத் துணையிருப்பர் எனவும் குறிப்பிடுகின்றன.

இவ்வாறு செய்யாவிடில்  -  பித்ருக்களின் சாபம் - நம்மைப் பீடிக்கும் என்றும், நம் வாழ்வில் நமக்கு நேரும் பலவித இன்னல்களுக்கும் இடையூறுகளுக்கும் பித்ருக்களின் சாபமும் ஒரு காரணம் என்றும் நம்பப்படுகின்றது.

ஸ்தூல உடலை நீத்து சூட்சுமமாக விளங்கும் ஆத்மாவானது  - பசியினாலும் தாகத்தினாலும் தவிக்கின்றன. அந்த ஆத்மாவுக்குத் தொடர்புடைய ஒருவன் தர்ப்பணமாக அளிக்கும் எள்ளும் நீரும்  - அந்த ஆத்மாவுக்கு ப்ரீதியை உண்டு பண்ணுகின்றன - என்று சொல்லப்படுகின்றது.

எனவே - வைதீக குறிப்புகளில் நம்பிக்கை கொண்டு ,

அவரவர் குல வழக்கப்படி - அவரவர் வசதிக்கேற்றவாறு  - அந்தணர்களைக் கொண்டு முறைப்படி தர்ப்பணம் செய்யலாம். இவ்வாறு செய்வதற்கேற்ற புண்ணியத் தலங்கள் பாரதம் எங்கும் விளங்கித் திகழ்கின்றன.


தமிழகத்தில் - இராமேஸ்வரம், வேதாரண்யம், நெல்லை - பாபநாசம், உவரி, திருவையாறு - எனும் தலங்கள் குறிப்பிடத்தக்கன.

ஸ்ரீராமேஸ்வரம்
புண்ணிய தலங்களுக்குச் செல்ல இயலாதவர்கள் - அருகிலுள்ள நதி, குளக்கரைகளில் வைதீக காரியங்களை நிகழ்த்தலாம். 

அதிலெல்லாம் விருப்பமில்லை!.. நம்பிக்கை இல்லை!.. என்பவர்கள் -

அதிகாலையில் சூர்யோதய வேளையில்  - நீர்நிலைகளில் மூழ்கி எழுந்து, இரு கைகளில் நீரை அள்ளி எடுத்து சூரியனை நோக்கி அர்க்யமாக வழங்கலாம். 


முன்னோர்களை நினைவில் இருத்தி, சிறிது எள்ளை நீருடன் கலந்து - மூன்று முறை - நீரில் இறைக்கலாம். இது மனதுக்கு நிம்மதியை அளிக்கக்கூடும். 

பகல் பொழுதில் - காக்கைகளுக்கும் பசுக்களுக்கும் உணவளித்து, இயன்ற வகையில் ஏழையர் சிலருக்கு வயிறார உணவு வழங்கி மகிழலாம். 

இதனால் - பித்ருக்கள்  சத்தியமாக மகிழ்வர். இயன்றால் மஹாளய பட்சத்தின் நாட்களில் இது போல செய்யலாம். அல்லது மஹாளய பட்ச அமாவாசை அன்று கண்டிப்பாக  செய்யவேண்டும்.


மாதந்தோறும் அமாவாசையன்று அல்லது பெற்றோர்களின் திதி அன்று தர்ப்பணம் செய்ய முடியாதவர்கள் - இயலாதவர்கள்  - மஹாளய பட்ச அமாவாசை தினத்திலாவது சிலருக்கு உணவிட வேண்டும்!.. இதெல்லாம் -

பித்ரு சாபத்திலிருந்து விடுபடுவதற்காகவோ,
பித்ரு சாபம் நம்மைச் சேராமல் இருக்க வேண்டும் - என்பதற்காகவோ அல்ல!..

நம் சந்ததியினர் நலமாக வாழ வேண்டும் என்பதற்காக!.. 

மானுடம் தழைக்க வேண்டும் என்பதற்காக!..

நம்மைப் பெற்றவர்கள் - நாம் நாசமாக வேண்டும் என எண்ணுவார்களா?..

எங்காவது - யாராவது - அப்படி இருக்கலாம். அது விதிவிலக்கு!..

ஆன்மா - பூவுலக வாழ்வினின்று நீங்கும் போதே  சாதாரண மானுட இயல்புகள் அற்றுப் போகின்றன. முரண்பட்ட குணங்கள் இற்றுப் போகின்றன. 

அந்த நிலையில் - ஆன்மா இறைநிழலில் கலந்ததா!.. வேறு பிறவி அடைந்ததா!.. அல்லது அங்கும் இங்கும் அலைந்து திரிகின்றதா!.. - என்பதை எல்லாம் யாராலும் அறுதியிட்டுக் கூற முடியாது. 

எனில், அந்த ஆன்மாவுக்காக செய்யப்படும் சிரார்த்தம், தர்ப்பணம், தான தர்மங்கள் - என்பனவற்றின் பலன்கள் எல்லாம் என்ன ஆகின்றன?..

சிரார்த்தம், தர்ப்பணம், தான தர்மங்கள் - என்பனவற்றின் புண்ணிய பலன்கள் எல்லாம் -

அந்த ஆன்மா  - இறைநிழலில் கலந்திருந்தால்  -

யாருக்காக செய்யப்பட்டதோ அவர் கணக்கிலும் யாரால் செய்யப்பட்டதோ அவர் கணக்கிலும் வரவு வைக்கப்படுகின்றன. மீண்டும் ஒருநாளில் - பிறவி வாய்க்கும் போது அந்த புண்ணிய பலன்களுடன் அந்த ஆன்மா பூமிக்கு வந்து செழித்த வாழ்க்கையில் இன்புறுகின்றது.

சிரார்த்தம், தர்ப்பணம், தான தர்மங்கள் - என்பனவற்றின் புண்ணிய பலன்கள் எல்லாம் -

அந்த ஆன்மா வேறு பிறவியில் கலந்திருந்தால்  -

சஞ்சித பிராரப்த - வினைகளுக்கு உட்பட்டு,  வாழும் வாழ்க்கையில் ஐந்துக்கு இரண்டு பழுதில்லை என்ற நிலையில்  - கைக்குக் கிட்டியது வாய்க்கும் கிட்டும் என்ற அளவிலாவது நிம்மதியில் வாழ்ந்திருக்கும்.

சிரார்த்தம், தர்ப்பணம், தான தர்மங்கள் - என்பனவற்றின் புண்ணிய பலன்கள் எல்லாம் -

அந்த ஆன்மா வேறு பிறவியின்றி களைத்திருந்தால்  - இளைத்திருந்தால்,

மீண்டும் - கருவடைய ஒரு நற்குலத்தைத் தேர்ந்தெடுக்கும் வல்லமையை உருவாக்கிக் கொடுக்கும்.

அதனால் தான் இயல்பாகவே - 

''அறம் செய விரும்பு'' , ''ஐயம் இட்டு உண்'' - என்றார் ஒளவையார்.

அன்றறிவாம் என்னாது அறம் செய்க மற்றது 
பொன்றுங்கால் பொன்றாத்துணை..

என்று வள்ளுவப்பெருந்தகை வலியுத்துவதும் இதற்காகத்தான்!.. 

ஒருமைக் கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு 
எழுமையும் ஏமாப்பு உடைத்து..

கல்வி என்பதில் நாம் வாழும் நல்வகை எல்லாம் அடங்கும். எனவே நாம் இயற்றும் - சிரார்த்தம் தர்ப்பணம்,  தான தர்மங்கள் - ஆகியனவற்றின் நற்பலன்கள் நம்மைத் தொடர்ந்து வரும் என்பதில் ஐயமில்லை!..

வேதாரண்யம்
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு 
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.

வாழ்ந்து மறைந்தோரை நினைவு கூர்தலும், தெய்வத்தைப் போற்றுதலும், விருந்தோம்புதலும், சுற்றம் பேணுதலும்  ஆகிய கடமைகளை நிறைவேற்றத் தன்னை நிலைப்படுத்திக் கொள்ள வேண்டும். இவை  இல்வாழ்வானுக்குரிய  ஐவகை அறநெறிகளாவன - என்று வள்ளுவப்பெருமான் வழிகாட்டுகின்றார். 

எனவே, எஞ்சியிருக்கும் மஹாளய பட்ச நாட்களில்  -

வைதீக முறையிலாவது - நம் மனம் விரும்பியபடியாவது தான தர்மங்களை,  அற்றார்க்கும் அலந்தார்க்கும் செய்து -

நாம் நம் தலைமுறைக்கு நலம் சேர்த்துக் கொள்வோம்!..

தானமும் தவமும் தான் செய்வராயின் 
வானவர் நாடு வழி திறந்திடுமே!..

சிவாய திருச்சிற்றம்பலம்!..

10 கருத்துகள்:

  1. நீங்கள் குறளை கையாண்ட விதத்தை ரசித்தேன்...... வாழ்த்துக்கள் ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் திரு.தனபாலன்.. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

      நீக்கு
  2. மிகவும் பயனுள்ள தகவல்கள். பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்... தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ந்தேன்!.. நன்றி!..

      நீக்கு
  3. பயனுள்ள தகவலை அறியத்தந்தமைக்கு நன்றி ஐயா...
    குறள் விளக்கம் நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் திரு. குமார்.. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!..

      நீக்கு
  4. பொறுத்தமான குறள்களை கையாண்டுள்ளீர்கள் அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்!.. தங்களின் வருகை கண்டு மகிழ்ந்தேன். தங்களின் கருத்துரை மேலும் என்னை வழி நடத்தும்!.. மிக்க நன்றீ!..

      நீக்கு
  5. விளக்கமான அருமையான பயனுள்ள தகவல்கள்..பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
  6. அன்புடையீர்!.. தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ந்தேன். மிக்க நன்றி!..

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..