நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, செப்டம்பர் 15, 2013

ஓணப் பூக்கோலம்

திருவோண வழிபாடுகள்.

27 நட்சத்திரங்களுள் சிவபெருமானுக்கு உரிய ஆதிரை, மஹாவிஷ்ணுவுக்கு உரிய ஓணம் இவை இரண்டு மட்டுமே ''திரு'' எனும் அடை மொழியுடன் கூடியவை.


காசியபர் - அதிதி தம்பதியினருக்கு திருமகனாக திருஅவதாரம் செய்து  - மகாபலிச் சக்ரவர்த்திக்கு நற்கதியளித்த - ஸ்ரீமந்நாராயணனைப் போற்றி வணங்கி,

காஞ்சி, திருக்கோவிலூர், காழி விண்ணகர் - போன்ற திருத்தலங்களில் சிறப்பான வழிபாடுகளை மேற்கொள்வதே தமிழகத்தில் வழக்கமாக இருக்கின்றது.

அருகில், 

கேரளத்தில் - திருவோணக் கொண்டாட்டங்கள் மிகப் பிரசித்தமானவை.

மகாபலி முற்பிறவியில் எலியாக இருந்து, சிவபெருமானின் சந்நிதியில் திருவிளக்கினை அறியாமல் தூண்டி விட்ட புண்ணியத்தை உடையவர்.

அசுர வேந்தனாக பிறந்தவர் - தேவலோகத்தினைக் கவர்ந்து கொண்டதோடு எல்லா உலகங்களையும் தானே ஆள வேண்டும் என செருக்குடன் நூறு அஸ்வமேத யாகங்களை நடத்த முற்பட்டார்.

அதன் விளைவு - ஸ்ரீ மஹாவிஷ்ணுவின்  வாமன அவதாரம்.

யாகசாலையில் தானம் வேண்டி வந்தவரை அடையாளங் கண்டு கொண்ட குலகுரு சுக்ராச்சார்யார் தடுத்தும் கேளாமல், தானம் கேட்டு வந்திருப்பவன் இறைவன் என்று அறிந்திருந்தும் அதனால் பெருங்கேடு விளையும் எனத் தெரிந்திருந்தும் -


''..இறைவனே, இறங்கி வந்து தானம் கேட்கின்றான் எனில் அவனுக்குக் கொடுப்பதை விட வேறு என்ன சந்தோஷம் இருக்க முடியும்!..'' எனக் கூறி, மகாபலி - வாமனனுக்கு மூன்றடி தானம் கொடுத்தார்.

மண்ணையும் விண்ணையும் ஈரடியால் அளந்த பெருமானுக்கு மூன்றாவது அடியாக தன்னையே தந்தவர். அப்போது - ஆண்டு தோறும் ஒருநாள் என் மக்களைச் சந்திக்க வரம் அருள வேண்டும் என வேண்டிக்கொண்டார்.

அவ்வாறே பெருமானும் வரம் அருளினார்.

கேரளம் - மகாபலியின் ஆளுகைக்கு உட்பட்டிருந்ததாக ஐதீகம்.


அதனால் தான் , கேரள மக்கள் திரு ஓணத்தின் போது தங்களைக் காண - மகாபலிச் சக்ரவர்த்தி பூவுலகுக்கு வருவதாகக் கொண்டு,


அவரை வரவேற்கும் விதமாக ஆவணியின் - அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம் - என, பத்து நாள் பண்டிகையாகக் கொண்டாடி மகிழ்கின்றனர்.


தங்களைக் காண வருகை தரும் சக்ரவர்த்தியை வரவேற்று, வீதிகள் தோறும் இல்லங்கள் தோறும் பல வண்ண மலர்களால் கோலமிட்டு தோரணங்கள் கட்டி அழகு படுத்துகின்றனர். 



இல்லங்களில் பெரியவர்கள் எல்லோருக்கும் ஆசி வழங்குவதுடன்,  


ஓண சத்தி எனும் விருந்து உபசரிப்பில் மகிழ்கின்றனர். 

மகாபலி போல வேடமிட்டு- கலை, கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்தியும் , படகு போட்டிகள்  நடத்தியும் உற்சாகம் அடைகிறார்கள்.

 

கேரளத்தில் ஓணத் திருவிழாவின் நிகழ்ச்சிகள் கண்கொள்ளாக் காட்சிகள். 


ஓணத் திருவிழாவினை முன்னிட்டு கேரள -  திருக்கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நிகழ்கின்றன. சபரிமலையிலும் ஸ்ரீ ஐயப்பன் சந்நிதி நடை திறக்கப்பட்டு விசேஷ பூஜைகள் நடக்கின்றன.  

ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு.
- என வள்ளுவர் வகுத்த நெறிதான் வாமன அவதாரத்தின் உட்கரு.

திருவோண நாளில் (16/9/2031) பெருமாள் கோயிலுக்குச் சென்று வழிபட - குறிப்பாக சந்திர திசை நடப்பவர்களுக்கு இடையூறுகள் நீங்கி சுபயோக சுபவாழ்வு கிடைக்கும் -  என ஜோதிட வல்லுநர்கள் கூறுகின்றனர்.

எல்லாம் சரிதான்!.. மாவலியிடம் தானம் பெற்றதை பெருமாள் என்ன செய்தார்!..


உரியது இந்திரர்க்கு இதென்று உலகம் ஈந்து போய்
விரி திரைப் பாற்கடல் பள்ளி மேவினான் -
கரியவன் இலகு எலாம் கடந்த தாளிணை 
திருமகள் கரம் தொடச் சிவந்து காட்டிற்றே!..
                                                                                        - கம்பராமாயணம்.

தான் பெற்ற தானத்தை இந்திரனுக்கே அளித்து விட்டு -
திருமகள் பாதசேவை செய்ய -  மீண்டும் பள்ளி கொண்டாராம் எம்பெருமாள்!..

திருமகள்  தொடச் சிவந்த திருவடிகள் போற்றி!..போற்றி!..
ஓம் நமோ நாராயணாய..
* * *

10 கருத்துகள்:


  1. ஓணம் நல்வாழ்த்துக்கள். குவைத்தில் ஓணக் கொண்டாட்டம் இருக்கும்தானே. நிறையவே மலையாளிகள் வசிக்கு, இடமல்லவா.?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் மிக்க நன்றி!.. நீங்கள் குறிப்பிட்டது போலவே - நாளை எங்கள் நிறுவனத்தில் ஓணசத்தி விருந்து!.. தவிரவும் வார இறுதியில் பல இடங்களிலும் கலை நிகழ்ச்சிகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன!..

      நீக்கு

  2. தான் பெற்றதை இந்திரனுக்கே அளித்து விட்டு - திருமகள் பாதசேவை செய்ய - மீண்டும் பள்ளி கொண்டாராம் எம்பெருமாள்!.

    ஓணக்கொண்டாட்த்தை சிறப்பாகப் படம்பிடித்துக் காட்டிய
    அருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாங்கள் வருகை தந்து பாராட்டுரைத்தமைக்கு மிக்க மகிழ்ச்சி!..

      நீக்கு
  3. அருமையான படைப்பு .காலம் நேரம் அறியாமல் காற்றாய் அலையும்
    எங்களுக்கு எந்நாளும் பயன் தரும் செய்திகளைப் பகிரும் பொற் தளம்
    வாழ்க வாழ்க !! வாழ்த்துக்கள் ஐயா .மனம் மகிழ்ந்தேன் இன்றைய
    தகவல் அறிந்து .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் அன்பான வருகை கண்டு மகிழ்ந்தேன்!... கவிதாயினி - தாங்கள் நமது தளத்தை வாழ்த்தியமை கண்டு மனம் நெகிழ்ந்தேன்!.. எல்லாருடைய வாழ்விலும் அன்பும் அருளும் பெருகிட வேண்டும்!..வாழ்க பல்லாண்டு!..

      நீக்கு
  4. படங்களும் விளக்கங்களும் அருமை. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்!.. வருகை தந்து பாராட்டி வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி!..

      நீக்கு
  5. படங்களுடன் பகிர்வு அருமை...
    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்!.. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க மகிழ்ச்சி!..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..