நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, ஆகஸ்ட் 03, 2013

நடந்தாய் வாழி காவேரி!

இன்று ஆடிப்பெருக்கு.

காவிரிக் கரையின் இருமருங்கிலும் வாழும் மக்களுக்கெல்லாம் தேனாகத் தித்திக்கும் நன்னாள்.


இறையறம் ,  மனையறம் - இவ்விரண்டிலும் ஆனந்தம் பொங்கிப் பெருக  நீர் வளமே அடிப்படை. 

தட்சிணாயனம் எனக் குறிக்கப்படும் - சூரியனின் தென் திசைப் பயண காலத்தின் முதல் மாதமாகிய ஆடியில் தான் அகமும் புறமும் செழிக்க எத்தனை எத்தனை விசேஷங்கள்!..  

விவசாயிகள் தங்கள் உழவுப் பணிகளைத் துவக்கும் மாதம் ஆடி மாதம்!.. 

நாம் சோற்றில் கையை வைக்க வேண்டி,  உழவர் - தங்கள் காலைச் சேற்றில் வைக்கும் மாதம்.

''..தண்ணி.. எப்ப திறக்குறாங்களாம்?..'' - என,   காவிரிக்கரை விவசாயிகள் எல்லோரும் எதிர்பார்க்கும் மாதம்!...


ஆடிப்பட்டம் தேடி விதை - என்பது பொருள் நிறைந்த சொல்வழக்கு.

நிலம் செழிக்க நீர் வேண்டும். நீர் செழிக்க குன்றாத இயற்கை வளம் வேண்டும்.

இயற்கையை நாம் வாழும் வாழ்க்கையோடு  - பின்னிப் பிணைத்தனர் நம் முன்னோர்.

அத்துடன் நிற்காமல் - இயற்கையைப் பலவிதங்களில் போற்றி மகிழ்ந்தனர்.

அந்த பாரம்பர்யப் பண்பாட்டின் அடையாளங்களில் ஒன்று தான் ஆடிப்பெருக்கு எனும் திருநாள்.

இப்போதும் காவிரிக் கரை மக்களால் சிறப்புடன்  நடத்தப்படும் விழா ஆடிப் பதினெட்டாம் நாளில் நடத்தப்படும் ஆடிப்பெருக்கு விழா.

இல்லறம் ஏற்ற தம்பதிகள் பொங்கி வரும் காவிரியில் நீராடி, மங்கலப் பொருட்களைச் சமர்ப்பித்து வணங்குவர்.

வீட்டுத் தோட்டத்திலும் கொல்லைக் காட்டிலும் - அவரை, பாகல், சுரை, பீர்க்கு என தோட்டப் பயிர்களுக்கு விதையிடுவர். மகிழ்ச்சியுடன் விவசாய வேலைகளைத் தொடங்குவர். 

ஆடிப்பெருக்கு - கரைபுரண்டு வரும் காவிரிக் கரையில் சிறப்பாகக் கொண்டாடப்படும் விழாவாகும்.

ஆடிப் பதினெட்டாம் நாள் அன்று சோழ வளநாட்டில் - காவிரி மட்டுமல்லாது வெண்ணாறு, வெட்டாறு, குடமுருட்டி, அரசலாறு, வடவாறு, புது ஆறு  - என அதன் கிளை நதிகள் பலவற்றின் கரைகளும் சிறப்பாக விழாக்கோலம் கொள்ளும். 


நதியின் படித்துறைகளை சுத்தம் செய்து, அதிகாலையிலேயே நீராடி - தலை வாழையிலையில்  மஞ்சள் பிள்ளையாருடன் விளக்கேற்றி வைத்து -

காப்பரிசி, தாம்பூலம், மஞ்சள் குங்குமம், சந்தனம், மங்களச் சரடு, காதோலை கருகமணி, விளாம்பழம், நாவற்பழம், பேரிக்காய், வாழைப்பழம், எலுமிச்சங் கனி, நறுமலர்கள் - என எல்லா மங்கலப் பொருட்களையும் சமர்ப்பித்து தூப தீப கற்பூர ஆரத்தியுடன் காவிரியை வணங்கி  மகிழ்வர். 

ஓடும் நீரில் மலர்களைத் தூவி தீபங்களை மிதக்க விட்டு -  

ஆடியிலே பெருக்கெடுத்து ஆடி வரும் காவேரி!.. 
வாடியம்மா எங்களுக்கு வழித்துணையாக -எம்மை 
வாழ வைக்க வேண்டுமம்மா சுமங்கலியாக!.. 

- என மனதார வேண்டிக் கொள்வர். 

மணமான இளம் பெண்கள் தாலிச்சரடை மாற்றிப் புதிதாக அணிந்து கொண்டு தம்பதியராக - மணமாலையினை ஓடும் நதியில் இட்டு, மங்கல வாழ்க்கைக்கு துணையிருக்க வேண்டிக் கொள்வர்.

பெண்கள் - மூத்த சுமங்கலியர் தம் கைகளால் ஆராதிக்கப்பட்ட மஞ்சள் சரடினை அணிந்து கொள்வதிலும் மஞ்சள் குங்குமம் பெற்றுக் கொள்வதிலும் ஆனந்தம் கொள்வர்.

யாராயிருந்தாலும்  - ஒருவருக்கொருவர் தாம்பூலம் வழங்கி மகிழ்வர்.  இல்லத்தில் அன்பின் உறவுகளுடன் கூடிக் குதுகலித்து உளம் பூரித்து மகிழ்வர்.


''வான் பொய்ப்பினும் தான் பொய்யா மலைத் தலைய கடற்காவிரி!..''  - என்பது பட்டினப் பாலையில் கடியலூர் உருத்திரங் கண்ணனார் எனும் பெரும் புலவரின் திருவாக்கு!.. 

''மருங்கு வண்டு சிறந்தார்ப்ப மணிப்பூ ஆடையது போர்த்து கருங்கயற்கண் விழித்து ஒல்கி நடந்தாய் வாழி காவேரி!..''  - என்று நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகள் புகழ்கின்றார். 

தொண்டரடிப் பொடியாழ்வார் - அரங்கனைப் போற்றித்துதிக்கும் போது - கூடவே - '' கங்கையிற் புனிதமாய காவிரி!..'' - எனப் புகழ்ந்து பாடுகின்றார். 

நவீன வாழ்க்கை முறையினால் நதிக் கரைகளை விட்டு நீங்கி   - வாழ வேண்டிய சூழ்நிலையில் இருப்போர் கூட , தம் வீட்டிலேயே நலந்தரும் நதி மங்கையரைப் போற்றி வணங்கலாம்!..

ஒரு செம்பில் மஞ்சள் கரைத்த நீரை நிறைத்து  -  அதற்கு மலர்களைச் சூட்டி திலகமிட்டு பூஜை மாடத்தில் வைத்து,  காப்பரிசியுடன் கனிவகைகளைச் சமர்ப்பித்து ஆராதனை செய்து வணங்கி இன்புறலாம். 


புது ஆற்றில் புது வெள்ளம் பொங்கிவர வேண்டும்!.. 
புது நாற்றும் பூங்காற்றில் அசைந்தாட வேண்டும்!.. 
இளம் பயிரின் முகம் பார்த்து வான் பொழிய வேண்டும்!.. 
களம் நிறையும் கதிர்மணியால் ஊர் வாழ வேண்டும்!.. 


இறைவனிடம் நாம் - வேண்டிக்கொள்வது, அருளும் பொருளும்  நிறைந்த ஆனந்த வாழ்வினையே!..

அத்தகைய ஆனந்த வாழ்வினுக்கு ஆதாரம் - நீர்வளம்!..

அதனால் தான்  - ''..தண்ணீரும் காவிரியே!..'' - என்கின்றார் ஒளவையார்.


தேவாரத்தில் காவிரிக் கரையில் அமைந்துள்ள திருத்தலங்கள் சிறப்பிக்கப்படும் போது  - காவிரியும் சேர்த்தே சிறப்பிக்கப்படுகின்றாள்.  

முழுமணித் தரளங்கள் மன்னு காவிரி சூழ் திரு வலஞ்சுழி (2/106) எனவும் பாய்புனல் வந்தலைக்கும் பழங்காவிரி (2/119) - எனவும் திருஞானசம்பந்தப் பெருமான் சிறப்பிக்கின்றார். 

வாழைக்குலை தெங்கு கொணர்ந்து கரைமேல் எறியவே அழகார் திரைக் காவிரி (7/77)  - என சுந்தரமூர்த்தி சுவாமிகள் புகழ்கின்றார். 

கொழித்தோடுங்  காவிரிப் பூம்பாவை (4/12) என்றும் விட்டு வெள்ளம் விரிந்தெழு காவிரி இட்டநீர் வயலெங்கும் பரந்திட (5/75) என்றும் - புகழ்ந்துரைக்கும் திருநாவுக்கரசு சுவாமிகள் வேறொன்றையும் முக்கியமாகக் குறிப்பிடுகின்றார். 

கங்கை ஆடிலென் காவிரி ஆடிலென் 
கொங்கு தண்குமரித் துறை ஆடிலென் 
ஒங்கு மாகடல் ஓதநீர் ஆடிலென் 
எங்கும் ஈசன் எனாதவர்க்கு இல்லையே (5/99) 

எங்கும் ஈசன் நிறைந்துள்ளான். அவன்  - அருள் பெற வேண்டி அறம் செய்யாது -  கங்கை, காவிரி, குமரி முதலான தீர்த்தங்களில் நீராடுவதனால் எந்தப் பயனும் இல்லை!..  - என்பது இதன் உட்பொருள். 

ஈசன் அருள் பெற அறஞ்செய்ய வேண்டும்.

மனிதன் செய்ய வேண்டிய அறங்களுள் எல்லாம் மிகப் பெரியது - சிறந்தது - இயற்கையைப் பாதுகாத்தல்!.. 

இயற்கையை நாம் பாதுகாத்தால் - 
இயற்கை நம்மையும்  நம் குலத்தையும் பாதுகாக்கும்!..
* * * 

4 கருத்துகள்:

  1. திருநாவுக்கரசரின் பாடல் வரிகள்அற்புதம்.
    அறம் செய்வோம். நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஐயா!.. தங்களது வருகைக்கும் மேலான கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

      நீக்கு
  2. ஆடிப் பெருக்கு சிறப்புகள் அனைத்தும் அருமை... /// மனிதன் செய்ய வேண்டிய அறங்களுள் எல்லாம் மிகப் பெரியது - சிறந்தது - இயற்கையைப் பாதுகாத்தல்!/// முடித்ததும் சிறப்பு... நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திரு.தனபாலன்!.. தங்களது கருத்துரைக்கும் அன்பின் வருகைக்கும் மிக்க நன்றி!..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..