நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், ஆகஸ்ட் 13, 2013

சுந்தரர்

திருஆரூர்.

பூங்கோயில் எனப் போற்றப்படும் திருக்கோயில்.  அதன் மேற்குப்புறத்தில் உள்ள கமலாலாயத் திருக்குளம். காற்றினால் பரவிய அலைகள் -  கரையில்  மோதி சலசலத்துக் கொண்டிருக்கின்றன. 


பரந்து விரிந்திருந்த அத்திருக் குளத்தின் கரையில் தெய்வீகப் பேரழகு மிளிரும் தம்பதியர். தண்ணீருக்குள் நின்று - இருகைகளாலும் நீரில் அளைந்து எதையோ தேடி, எடுத்துக் கொண்டிருக்கின்றனர். 

காலை இளம் கதிர் ஒளியில் அவை மின்னுகின்றன. ஆம் . அவை அத்தனையும் பொற்காசுகள். 

''..என்ன வேடிக்கை இது!.. தண்ணீருக்குள் அவை எப்படி வந்தன!..''

''.. அது.. அந்த இளைஞன் பேரழகுப் பெட்டகமாய் திகழ்கின்றாரே - அவரே போட்டது!..''

''..என்ன.. அவரே போட்டதா?.. அவருக்கு என்ன பித்தா!..''

''..அவர் பித்தரா?.. சரிதான்!.. அவர் இறைவனையே பித்தன் என்றவர்!.. வல்வழக்கிட்டவர்!.. வன்தொண்டர் எனப்பட்டவர்... 


திருமணக் கோலத்தில் தடுத்தாட் கொள்ளப்பட்டவர்... பின் ஆரூரில் ஐயனை வணங்கி பரவை நாச்சியார் எனும் மங்கை நல்லாளுடன் மனையறம் கண்டவர்!..''

''..இவர் தம் மனை வாழ்வில் - மீண்டும் ஒரு கன்னியை திருவொற்றியூரில் கண்டு - உனைப்பிரியேன் என சூளுரைத்து - மணந்து - இல்வாழ்வு கண்டு - விதியின் வசத்தால் பிரிந்தபோது சத்தியத்தினை மீறியதால் கண்களைப் பறி கொடுத்தவர். இத்தனைக்கும் இவர் தம்பிரானின் தோழர்!..''

இவர்பால் கருணை கொண்ட அம்பிகை  - திருவெண்பாக்கத்தில் ஊன்று கோல் ஒன்று அருளி - மின்னலென வழிகாட்டி காஞ்சிபுரம் வரை அழைத்து வந்து அங்கே இடக்கண் கொடுத்தனள். பின் ஆரூரில் ஈசன் தன் பங்கிற்கு வலக்கண்ணையும் கொடுத்தருளினன்!.. அதன்பின் -

திருவொற்றியூரில் சங்கிலியார் மணம் புரிந்து கொண்டாரே - அந்த விஷயம் தெரிந்ததும் இங்கே திருஆரூரில் - பரவை நாச்சியார் - தன் வீட்டு கதவினை இழுத்து சாத்திக் கொண்டாள். 

''..உமக்கு என்ன - ஊருக்கு ஒரு திருமணமா?..'' - என்று!.. 

திகைத்தவர் - பெருமானிடம் சரணடைந்தார். தன் குறையை முறையிட்டார்.   அன்பர் தம் குறை தீரும் வண்ணம் - மாலவன் அறியா மலரடிகள் மண்ணில் பதிய,  ஆரூர் வீதியில் - இறைவன் தூது நடந்து - இளம் தம்பதியரின் ஊடலைத் தீர்த்து வைத்த பெருமையை உடையவர்!..  


பேரழகின் காரணமாக சுந்தரர் என அழைக்கப்படுபவர். ஆயினும் இயற்பெயர் நம்பிஆரூரன்!.. திருமுனைப்பாடி நாட்டினர். பிறந்த ஊர் திருநாவலூர். தாயார் இசைஞானியார். தந்தை சடையனார். வளரும்  காலத்தே - அந்நாட்டின் அரசர் நரசிங்க முனையரையர் - நம்பி ஆரூரரைத் தன் மகனாக சுவீகரித்துக் கொண்டார். 

பருவ வயதில் சடங்கவி சிவாச்சாரியார் என்பவருடைய திருமகளான சுகுணவதியுடன் திருமணம்  - கூடிவந்த வேளையில் - இறைவனால் நீ என் அடிமை என்று தடுத்தாட் கொள்ளப்பட்டவர்.  ''.. நீர் என்ன பித்தரோ?..'' - எனக் கோபித்தும் கூட , முதியவராக வந்து வழக்கிட்ட இறைவன் - திருவெண்ணெய் நல்லூரில் - தன் திருக்கோலங்காட்டியருளினார். 

அத்துடன் - முன்பு திருக்கயிலை மாமலையில் தமது அணுக்கத் தொண்டராயிருந்த காலத்தில் மலர் வனத்தில் அம்பிகையின் பணிப் பெண்களாயிருந்த கமலினி, அநிந்திதை எனும் இருவரிடம் - மனம் சென்றமையால் விளைந்த பிறவியின் ரகசியத்தினை உணர்த்தி - செந்தமிழால் பாடிப் பரவுக - என அருளினார். 

அதன் காரணமாகவே - ''..பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா!..'' எனத் திருப்பதிகம் தொடங்கி  - பின் ஊர்கள் தோறும் சென்று எம்பெருமானை வணங்கி வருபவர்.


இப்போது கூட குளத்தில் பொன்னைத் தேடி எடுத்தது ஏன் தெரியுமா?...சேர நாட்டின் அரசரான சேரமான் பெருமாள்  - சுந்தரரின் தமிழ் கேட்டு நண்பர் ஆனவர். இவருக்கு பொன்னும் மணியும் மிகக் கொடுத்து சிறப்பிக்க - வழியில் திருமுருகன் பூண்டியில் வேடுவர்கள் வழிமறித்து  - அவற்றை எல்லாம் பறித்துக் கொண்டனர்.

வந்ததே - சினம் சுந்தரருக்கு!.. நேராகக் கோயிலுக்குச் சென்று -  

முல்லைத் தாது மணங்கமழ் 
முருகன் பூண்டி மாநகர் வாய் 
எல்லைக் காப்பதொன்றில்லை யாகில் நீர்
எத்துக்கு இருந்தீர் எம்பிரானீரே!.. 

''..வேடுவர்களால் வழிப்பறி நடக்கும் இடத்தில்  - மக்களைப் பாதுகாத்து அருளாமல் எதற்காக நீர் இங்கே இருக்கின்றீர்?..'' - என்று நியாயம் கேட்டவர். 

அதற்குப்  பதிலாக ஈசன்  - ''..வன்தொண்டனே!.. வேடுவர் எல்லாம்  - சிவ கணங்கள். உன் தமிழ் கேட்கவே இவ்வாறு நிகழ்த்தினோம். வன் தமிழும் எமக்கு இன் தமிழே!.'' -  என்று அருளி மேலும் எல்லா செல்வங்களையும் வாரி வழங்கினார். 

அந்த சம்பவத்தின் தொடர்ச்சியாகவே - திருமுதுகுன்றத்தில் (இன்றைய விருத்தாசலம்) மீண்டும் இறைவன் - பொற்காசுகள் அருளிய போது, வேடுவர் பயத்தினால் - அவற்றை அங்கு மணிமுத்தா நதியில் போட்டு விட்டு- இங்கே திரு ஆரூரில் கமலாயத் திருக்குளத்தில் தேடி எடுத்தவர். 

அதையும் பிள்ளையாரைக் கொண்டு உரசிப் பார்த்து தங்கத்தின் மாற்றினை சரி பார்த்துக் கொண்டவர். அதனாலேயே - கமலாலயத் திருக்குளக்கரையில் உள்ள பிள்ளையாருக்கு மாற்றுரைத்த பிள்ளையார் என்று திருப்பெயர்.

இதுதான் ''..ஆற்றில் போட்டு  - குளத்தில் எடு!..'' - என்பார்களே - அது!..

ஒரு சமயம் ஆரூருக்கு அருகில் உள்ள - குண்டையூர் எனும் ஊரில் இருந்த நிலக்கிழார், இவருக்கு நெல் வழங்க அவை இறைவன் கருணையால் மலை அளவாயிற்று. அந்த நெல் மலையினை பூதகணங்களைக் கொண்டு ஆரூர் மக்கள் அனைவருக்கும் அள்ளிக் கொடுத்தவர்.

அவிநாசியில் - முதலை உண்ட பாலனை மீட்டுக் கொடுத்து - பெற்றவர் வயிற்றினில் பால் வார்த்தவர்.


பொன்னும் மெய்ப்பொருளும் தருவானைப் 
போகமும் திருவும் புணர்ப்பானைப் 
பின்னை என் பிழையைப் பொறுப்பானைப்
பிழையெலாம் தவிரப் பணிப்பானை
இன்ன தன்மையன் என்றறிவொண்ணா
எம்மானை எளிவந்த பிரானை
அன்னம் வைகும் வயற்பழனத்து அணி 
ஆரூரனை மறக்கலுமாமே!.. (7/59)

- என்று இறைவனும் தானும் கொண்ட நட்பினைப் பேசுபவர். 

மண்ணின் மேல் மயங்கிக் கிடப்பேனை வலிய 
வந்தென்னை ஆண்டு கொண்டானே (7/70) 

- என்று தன்னை இறைவன் ஆண்டு கொண்ட விதத்தினை விவரிக்கின்றார். 

ஏயர்கோன் கலிக்காமர் , கோட்புலியார் எனும் நாயன்மார்கள்  இவருடன் நட்பு பேணியவர்கள். கோட்புலியாரின் மகள்களான சிங்கடி, வனப்பகை எனும் இருவரையும் தன் மக்களாகப் பாவித்து பதிகங்களில் உரைக்கின்றார்.

திருஐயாற்றுக்கு எழுந்தருளியபோது - காவிரியில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. செய்வதறியாது திகைத்த சுந்தரர் - ஐயாற்று அடிகளோ!.. என பெருங்குரலில் ஓலமிட்டார். 

காவிரியின் வடகரையில் வீற்றிருந்த விநாயகர் இது கேட்டு அவரும் பெருங்குரலெடுத்து ஓலமிட- ஊர் திரண்டு வந்தது. அச்சமயம்  - விரிந்தோடிய காவிரி, ஒடுங்கி இரு பிளவாகி வழி விட்டு நின்ற அற்புதம் நிகழ்ந்தது. 

நல்லிசை ஞான சம்பந்தனும் நாவினுக்
    கரையனும் பாடிய நற்றமிழ் மாலை
சொல்லியவே சொல்லியேத்து உகப்பானைத்
    தொண்டனேன் அறியாமை அறிந்து
கல்லியல் மனத்தைக் கசிவித்துக்
    கழலடி காட்டி என் களைகளை அறுக்கும்
வல்லியல் வானவர் வணங்க நின்றானை
    வலிவலந்தனில் வந்துகண்டேனே (7/67)

- என்று, தமக்கு முன் வாழ்ந்த - ஞானசம்பந்தரையும் திருநாவுக்கரசரையும் பல பதிகங்கள் வாயிலாகப் போற்றி மகிழ்கின்றார். 

வாழுங்காலம் முழுதும் தானும் வாழ்ந்து மற்றவர்களையும் வாழவைத்த சுந்தரர், இறைவனுக்கென - வாழ்ந்த பெருமக்களைக் குறித்து பாடியருளினார். அதுவே - திருத் தொண்டத் தொகை.  பின்னாளில் சேக்கிழார் பெரிய புராணம் பாட  - இதுவே முதல் நூல்.


சுந்தரர் - தாம் மீண்டும் கயிலை மாமலையினை சென்றடைய திரு உள்ளங் கொண்டார். அந்த அளவில் சிவபெருமான் தேவர்களை ஐராவதத்துடன் அனுப்பினார்.  திருஅஞ்சைக்களம் எனும் தலத்திலிருந்த சுந்தரர் வெள்ளை யானையின் மீதேறி திருக்கயிலை மாமலைக்கு ஏகினார். உடன் சேரமான் பெருமாள் நாயனாரும் சென்றார்.

இது நிகழ்ந்த நாள்  - ஆடி மாதம் சுவாதி நட்சத்திரம். 

அப்போது சுந்தரரின் வயது பதினெட்டு.

இந்திரன்மால் பிரமன் எழிலார்மிகு தேவர் எல்லாம்
வந்தெதிர் கொள்ள என்னை மத்தயானை அருள் புரிந்து 
மந்திர மாமுனிவர் இவன் ஆர்என எம்பெருமான்
நந்தமர் ஊரன் என்றான் நொடித்தான் மலை உத்தமனே!.. (7/100) 

- என்று திருப்பதிகம் பாடியவாறு திருக்கயிலாயம் புகுந்தார். 


திருஆரூரில் இருந்து பரவை நாச்சியாரும், திருஒற்றியூரில் இருந்து சங்கிலியாரும், பின் தொடர்ந்து - தம் பொன்னுடல் நீத்து புகழுடம்பு எய்தி -  ஒன்றி உடன் ஆயினர்.

சுந்தர மூர்த்தி சுவாமிகளுடன் நட்பு பேணியமைக்காகவே - சேரமான் பெருமாள் நாயனாரும் திருக்கயிலை புகும் பேறு பெற்றார். 

சுந்தரரின் காலம் - ஏழாம் நூற்றாண்டு என அறியப்படுகின்றது. அவர் அருளிய திருப்பதிகங்கள் பின்னாளில் - ஏழாம் திருமுறை எனத் தொகுக்கப்பட்டன.

பதினெட்டு வயதிற்குள் தமிழகமெங்கும் நடந்தே சென்று பக்திப் பயிர் வளர்த்து - வாழும் காலத்தில் பெரும் வள்ளலாக விளங்கியிருக்கின்றார்.

சுந்தரர் அருளிய திருப்பதிகங்களுள் நமக்குக் கிடைத்திருப்பவை - நூறு.
சுந்தரர் நமக்குக் காட்டிய வழியே - நாம் பெற்ற பெரும் பேறு!..

இன்று (13/8) ஆடி - சுவாதி!.. சுந்தரர் பேறு பெற்ற நாள்.
அவர் தம் திருவடிகளைத் தலைமேல் கொள்வோம்!. 

வாழி திருநாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!..
சிவாய திருச்சிற்றம்பலம்!..

10 கருத்துகள்:

  1. சில புராணக் கதைகள் எத்தனை முறை கேட்டாலும் அலுக்காது. இந்த சுந்தரர் கதையும் ஏதோ புதிதாக படிப்பது போல் ஆர்வத்தை கொடுக்கிறது உங்கள் எழுத்து நடை.
    நன்றி சுந்தரர் பற்றி பதிவிட்டதற்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி!.. தாங்கள் வருகை தந்து கருத்துரை வழங்கியமைக்கு!.. தமிழும் தமிழோடு இணைந்த பக்தி நெறியும் என்றைக்குமே அலுக்காதவை!...

      நீக்கு
  2. சுந்தரர் பதிவு அருமை ஐயா. எங்கிருந்து இவ்வளவு செய்திகளையும் திரட்டி, அயராது, தொடர்ந்து தருவது வியப்பாக உள்ளது ஐயா. நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்!.. சுந்தரரின் காலம் ஏழாம் நூற்றாண்டு. அந்தக் காலத்தில் அவர் தமிழகம் முழுதும் நடந்து சென்று பக்தி நெறியினை வளர்த்திருக்கின்றனர். அவரைப் பற்றிப் பேசவும் சிந்திக்கவும் நாம் என்ன தவம் செய்தோமோ!..இந்த அளவுக்கு முடிகின்றது என்றால் - அது பெரியோர் தம் வாழ்த்துரையே!.. தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா!..

      நீக்கு
  3. சுந்தரர் பற்றிய தங்கள் பதிவு
    அதி சுந்தரமானதே!!

    இத்தனை தகவல்களையும் ஒன்று திரட்டி,
    தந்தமைக்கு பாராட்டுகள்.

    சுப்பு தாத்தா

    பதிலளிநீக்கு
  4. ஐயா!.. தங்களுடைய வருகைக்கும் பாராட்டுரைக்கும் மிக்க நன்றி!..

    பதிலளிநீக்கு
  5. மிகவும் அருமையான, தகவல்களூடன் ஆன பதிவு, ஐயா. மிகவும் ரசித்தேன். நன்றி.
    சிவா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பு நண்பர் சிவா!.. தங்களுடைய வருகைக்கு மிக்க மகிழ்ச்சி!..

      நீக்கு
  6. சுந்தரர் நமக்குக் காட்டிய வழியே - நாம் பெற்ற பெரும் பேறு!..

    பதிவைப் படிக்கவே பெரும்பேறு பெற்றிருக்கவேண்டும் ஐயா..
    அருமை.. அருமை ..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்!.. தங்களின் வருகை கண்டு மகிழ்ந்தேன்!.. நன்றி!..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..