நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஆகஸ்ட் 18, 2013

ஆவணித் திருவிழா

பாண்டியன் திருமகளாகத் தோன்றி - கலை பயின்று, மணிமுடி புனைந்து செங்கோலோச்சியவள்  மரகதவல்லி!.. அங்கயற்கண்ணி!.. அன்பு மீனாட்சி!..

அந்த மீன்விழியாளின் -  மணவாளனாகி, அவள் பொருட்டு உலக முழுதாண்டு உய்யக் கொண்ட வள்ளல் சோமசுந்தரப் பெருமான்!.. சொக்கநாத சிவம்!.. ஆலவாய் அமர்ந்த அண்ணல்!.. 


நம் பொருட்டு நடாத்திய அருள் லீலைகள் தான் எத்தனை!.. எத்தனை!.. அவை அத்தனையும்  - இத்தனைதான் என்று, எண்ணித் தொகுப்பாரும் உண்டோ?.. அது யாருக்கும் தான் ஆகக்கூடிய காரியமோ?.. 

இருப்பினும், வையகம் பயனுறும் வண்ணம்  - அவன் அருளாலே,  அவன் தாள் வணங்கிய - அடியவர் தம் நெஞ்சில் அறுபத்து நான்கு திருவிளையாடல்கள் ஒளி பெற்று நின்றன. அவை  -

'' நீயே கதி!..'' என -  அண்டி நின்ற அடியார்களின் கண்ணீர் துடைத்த தூயவனின் அருஞ்செயலைப் பறைசாற்றுகின்றன!. அடியார்களுக்கு மட்டுமல்ல, ஏனக் குருளை - பன்றிக் குட்டிகளுக்குப் பாலூட்டிய பரிவினைப் பாடுகின்றன!. கருங் குருவிக்கும் நாரைக்கும் முக்தியளித்த மேன்மையைப் போற்றுகின்றன!.

இடருற்றபோது, ''இறைவா!..'' என்று  கலங்கியவர்களுக்குக் கை கொடுத்து - காத்தருளிய கருணை வள்ளலைக் கைகூப்பி வணங்கி, நன்றி கூறும் வண்ணமாகத் தான் மாநகர் மதுரையில், 
 
ஆவணிப் பெருந் திருவிழாவில் சோமசுந்தரப் பெருமான் நிகழ்த்தியருளிய திருவிளையாடல்கள் வைபவமாகக் கொண்டாடப்படுகின்றன!..


ஆவணிப் பெருந் திருவிழா - ஆவணி மூல நட்சத்திரத்தினை மையமாகக் கொண்டு - ஆடி 25 ஆம் நாள் (10/8) அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்புற நிகழ்ந்து கொண்டிருக்கின்றது!..

ஆவணி மூலம் (17/8) - அன்றுதான் காட்டு நரிகளைப் பரிகளாக ஆக்கி, அவற்றை ஓட்டிக் கொண்டு குதிரைச் சேவகனாக - ஐயன் மாநகர் மதுரையம்பதிக்கு வந்த நாள்.

இவ்விழாவில் - கரிக் குருவிக்கும் நாரைக்கும் முக்தி அளித்த லீலையும், மாணிக்கம் விற்றதும், தருமிக்கு பொற்கிழி அருளியதும், ஏழையர்க்கு அமுதசுரபி எனும் உலவாக்கோட்டை வழங்கியதும், கற்பித்த குருவுக்கு கெடு நினைத்த சீடனின் அங்கத்தை வெட்டியதும், கன்னியர்க்கு மங்கலம் விளையும் பொருட்டு வளையல் விற்றதும், வந்தியம்மையின் பொருட்டு பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்டதும், பாண பத்ரனுக்காக விறகு  வெட்டியாக விறகு சுமந்ததும் - என பத்து திருவிளையாடல்கள் நிகழ்கின்றன.

அரண்மனைக்கு வந்த புதிய குதிரைகள்  - நரிகளாகி , பெருத்த ஊளையுடன் காட்டைத் தேடி, ஓடி விட்டன. அதை விடக் கொடுமை - பழைய குதிரைகளைக் கடித்து காயப்படுத்தி விட்டு!.. அதைத்தான் மன்னனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. 

மீண்டும் மாணிக்கவாசகரைப் பிடித்து துன்புறுத்தினான். அவர் பொருட்டு - வைகை சீற்றத்துடன் பொங்கிப் பெருகி - நாட்டை அழித்தது. 

ஆதரவற்றோர், இயலாதோர் - எப்படி  தமது பங்கினை அடைப்பர் என்று கொஞ்சங்கூட யோசிக்காமல் - வீட்டுக்கு ஒருவர் வந்து - அவரவர் பங்காக  சேதமுற்ற கரையை அடைக்க வேண்டுமென ஆணையிட்டான் அரசன்.  இந்த ஆணையினால் பாதிக்கப்பட்ட வந்தி எனும் மூதாட்டிக்காக - தானே இரங்கி வந்தது - தயாபரனாகிய சிவப்பரம் பொருள்!.. 

அதுவும் எப்படி!.. 


தேவியவள் சூட்டிய கொன்றையந்தார் துலங்கும் திருத்தோள்களில் மண்வெட்டி. புலியதள் இலங்கும் இடுப்பில் அழுக்கு வேட்டி. கங்கை விளங்கும் ஜடாமுடியில்  மூங்கிற்கூடை. 

''கூலி கொடுத்து எனை வேலை கொள்வார் உண்டோ!..'' - எனக் கூவிக் கொண்டே வீதியில் - வந்தாராம் எம்பெருமான். அவரைக் கண்டாள் வந்தியம்மை. கூலியாக உதிர்ந்த பிட்டு. வேலைக்கு முன்னதாகவே கூலியை  - உதிர்ந்த பிட்டை  - வாங்கி வயிறார உண்டாயிற்று. வேலை!?..


''..அது கிடக்கட்டும்!..'' என - ஆங்கே,  அப்படியும் இப்படியுமாக ஆனந்தக் கூத்து. வந்தியின் பங்கு அடைபடாததால், மற்றவர் அடைத்த கரையையும் சேர்த்து அழித்தது வைகை!.. 

கோபங்கொண்ட தலையாரி - கூலியாளின் முகத்தைக் நோக்குகின்றான்!.. 

எத்தனை எத்தனையோ பேர்களின் முகங்களைத் தன் வாழ்நாளில் கண்டிருந்த தலையாரி அரண்டு போகின்றான்!.. வேத வேதாந்தங்களுக்கு விளக்கம் காட்டும் இந்த முகமா - வேலைக்காரன் முகம்!.. தான் தண்டிக்க அஞ்சிய தலையாரி அரசனிடம் நடப்பவற்றைக் கூற  - அவன் கைப்பிரம்பால் வீசுகின்றான்!.. 

அவ்வளவுதான்!. அரசன் அடித்த அடி , வந்தியம்மையைத் தவிர்த்து அங்கிருந்த அனைவரின் மீதும் பட்டது!.. மண்ணைக் காலில் எற்றியவாறு மறைந்தான் வேலைக்காரன்!.. அந்த அளவில் வைகை அடங்கியது. 


அதிர்ச்சி அடங்குவதற்குள் - விண்ணில் இருந்து சிவகணங்கள் பொன் விமானத்தில் இறங்கி வந்தியம்மையை அழைத்துச் சென்றனர். பெருமான் எல்லாருக்கும் திருக்காட்சி தந்தார். அனைத்தும் விளங்கியது மன்னனுக்கு!.. ஏழைக்கு இரங்கிய எம்பெருமானைப் போற்றி - திருவடிகளில் விழுந்து வணங்கினர். மாணிக்கவாசகரிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டான் வேந்தன். 

''..தந்தையொடு தாய் இன்றித் தனிக் கூலி ஆளாக வந்த எனக்கு ஒரு தாயாய் அருள் சுரந்தனையே!..'' - என்று வேலையாளாக வந்த இறைவன் வந்தியம்மையிடம் கூறுவதாக திருவிளையாடற்புராணத்தில் பரஞ்சோதியார் விவரிக்கின்றார். 

மாறாத அன்புக்கு மகத்துவம் அளித்த -  திருவிளையாடல் (18/8) இன்று!


அன்பெனும் வலைதனில் அகப்பட்டு  - ஐயன் பிட்டுக்கு மண் சுமக்கின்றான்!..

மாமனார் ஊரில் பட்டாபிஷேகம் கொண்ட இறைவன் - மாணிக்கம் விற்றதோடல்லாமல் - வளையல் விற்றும் குதிரைச் சேவகனாக வந்தும்  விறகு சுமந்தும் உதிர்ந்த பிட்டுக்காக கூடையில் மண் சுமந்தும்  - ஈசன் நிகழ்த்திய லீலைகள் எல்லாம் - எளியோர்க்கு எளியவனாக அருளும் தன்மையை விளக்குவன!..


மாமதுரையில் ஆவணிப் பெருந்திருவிழா நடைபெறும் அதே வேளையில், தஞ்சை கரந்தையில் உள்ள ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலிலும் அனைத்து வைபவங்களுடனும் - திருவிழா நடக்கின்றது. ஈசன் வளையல் விற்கும் பாவனையில் பவனி வரும்போது வீதி முழுக்க, வீடுகள் தோறும்   - கன்னியர்க்கு விரைவில் கல்யாணம் கூடிவர வேண்டும் என வாழ்த்தி - பூஜித்த வளையல்களை வழங்குவர்.

வைகையின் கரை அடைக்க வேண்டி சுவாமி வெண்ணாற்றுக்கு எழுந்தருள்வார். வழியில் ஸ்ரீ தஞ்சபுரீஸ்வரர் திருக்கோயிலில் ஸ்ரீமீனாட்சி சுந்தரேசருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும். அங்கே பக்தர்கள் அனைவருக்கும் இறையன்பர்களால் விருந்து உபசரிப்பு நிகழும். பின்னர் வெண்ணாற்றில்  - கரை அடைத்த வைபவம் நிகழ, தீப ஆராதனையுடன் அன்பர்கள் பெருமானை வழிபட்டு இன்புறுவர்.

நரிகளைப் பரிகளாக்கியதையும், தருமிக்குப் பொற்கிழி அருளியதையும் வைகைக் கரையில் நின்று நிகழ்த்தியதையும் தேவாரத்தில் திருநாவுக்கரசர் குறிப்பிட்டு மகிழ்கின்றார்.

அலைகடல் மீமிசை நடந்தாய் போற்றி!
கருங்குருவிக்கு அன்று அருளினை போற்றி!

- என்று மாணிக்கவாசகப் பெருமான் - ஈசனின் திருவிளையாடல்களைப் போற்றி வணங்கி, 

''அன்பினால் அவனை அடையலாம்!..''  - என அறிவிக்கின்றார். 

தென்னாடு உடைய சிவனே போற்றி! 
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! 
ஏனக்குருளைக்கு அருளினை போற்றி!
மானக் கயிலை மலையாய் போற்றி!..

13 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. அன்புடையீர்!.. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

      நீக்கு
  2. திரு. தனபாலன்.. நலம் தானே!...தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

    பதிலளிநீக்கு
  3. மதுரையின் ஆவணித் திருவிழா கண்டேன்.போட்டோக்களுடன் தகவல்களும் படிக்கத் தந்த உங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கும் மிக்க நன்றி!..தங்களது வருகைக்கும் அன்பான கருத்துக்கும்!..

      நீக்கு

  4. பல முறைகேட்ட திருவிளையாடல்களை அவை தொடர்புடைய நாளில் எடுத்துக்கூறி நினைவூட்டியதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஐயா!.. தங்களது வருகை கண்டு மகிழ்ச்சி!.. மிக்க நன்றி!..

      நீக்கு
  5. அன்புடன் Sa Shaa அவர்களை வரவேற்கின்றேன்!..

    பதிலளிநீக்கு
  6. பதில்கள்
    1. அன்புடையீர்!.. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

      நீக்கு
  7. அன்பெனும் வலைதனில்
    அகப்பட்டு ஜொலிக்கும் மாணிக்கமலை போன்ற
    ஈசனின் திருவிளையாடல்களை அருமையாய்
    பகிர்ந்தமைக்குப் பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாலும் அயனும் காணா மலர்ப் பதங்கள் தோய இறைவன் - நடந்த மதுரையம்பதியைப் பற்றி சிந்திக்கவும் வந்திக்கவும் என்ன தவம் செய்தோமோ!..எல்லாம் நம் பொருட்டு அல்லவா!.. சிவமே போற்றி!..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..