நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஆகஸ்ட் 09, 2013

ஆடிவெள்ளி - 04

அம்மா!..

அனைத்தினுக்கும்  - அண்ட பகிரண்டத்திற்கும்  - ஆதார சுருதியான அமிர்தம்.


''புவன ப்ரசூத்யை'' - என, அழகான ஒரு சொல் கொண்டு, ஸ்ரீஆதி சங்கரர் - கனகதாரா ஸ்தோத்ரத்தில் அன்னையை விளிக்கின்றார்.

பின்னாளில் - திருக்கடவூரில் சுப்ரமணிய குருக்களும் -  ''என் அம்மே!.. புவி ஏழையும் பூத்தவளே!..'' - என்று நெகிழ்ந்து உருகுகின்றார். 


மறிகடல்கள் ஏழையும் திகிரி இரு நான்கையும் 
மாதிரக்கரி எட்டையும் மாநாகம் ஆனதையும் 
மாமேரு என்பதையும் மா கூர்மம் ஆனதையும் ஓர் 
பொறி அரவு தாங்கிவரு புவனம் ஈரேழையும்
புத்தேளிர் கூட்டத்தையும் பூமகளையும் திகிரி மாயவனையும் 
அரையில் புலியாடை உடையானையும் 
முறை முறைகளாய் ஈன்ற முதியவளாய்ப் 
பழைமை முறைகள் தெரியாத நின்னை 
மூவுலகில் உள்ளவர்கள் வாலை என்று அறியாமல் 
மொழிகின்றதேது சொல்வாய்!.. 
அறிவு நிறை விழுமியர்தம் ஆனந்த வாரியே!
ஆதிகடவூரின் வாழ்வே!
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி!
அருள்வாமி அபிராமியே!..

ஆயினும் அவருக்கே - அபிராமியின் மீது சந்தேகம் வந்து விடுகின்றது!..

''..நான் சரியாகத் தானே சொல்லிக் கொண்டிருக்கின்றேன்?..'' - என்று!..

அதனால்தான் - இருந்தாலும் இருக்கட்டும் என்று, 

''வாலை என்றறியாமல் மொழிகின்றதேது சொல்வாய்!.''- என, அன்னையை அழைத்துக் கொண்டு வந்து விடுகின்றார் - அவருடைய சந்தேக வளையத்திற்குள்!...


ஆனால் - திருச்சிராப்பள்ளி மலையில் - ஒரு பாறைத் தளத்தில் இருந்தபடி நிஷ்டையில் இருக்கும் தாயுமான ஸ்வாமிகள் -

''..அதைத் தவிர நானறிவது ஒன்றுமேயில்லை!.. மாமறைகள் எல்லாம் அப்படித்தான் சொல்கின்றன. எப்படிச் சொல்கின்றன?..''

ஆரணி சடைக்கடவுள் ஆரணி எனப்புகழ 
அகிலாண்ட கோடி ஈன்ற அன்னையே!.. 
பின்னையுங் கன்னி என மறை பேசும் 
ஆனந்த ரூப மயிலே!.. 

- தீர்மானமாக சொல்லி விடுகின்றார்!... ''அப்படியா!..'' என்று ஆச்சர்யத்தில் மூழ்கும் போது அங்கே திரு அண்ணாமலையில் , மேலும் கூடுதல் தகவல் தருகின்றார் - ஸ்வாமி அருணகிரிநாதர். 


கங்காளி சாமுண்டி வாராகி இந்த்ராணி 
கெளமாரி கமலாசனக்கன்னி நாரணி 
குமரி த்ரிபுரை பயிரவி அமலை கெளரி 
காமாக்ஷி சைவசிங்காரி யாமளை 
பவானி கார்த்திகை கொற்றி த்ரயம்பகி - 

''..இதெல்லாம் யாரோட பெயர்..என்று நினைக்கின்றீர்கள்!..''

தன் திருக்கரத்தினில் செம்பொன்வேலினை ஏந்தி, அசுரர்களின் குலத்துக்கு அந்தகனாக விளங்குகின்றானே - செல்வச் சிறுவன் அறுமுகன், முருகன் - அவனைப் பெற்றவளுடைய திருப்பெயர்கள்! - என்று!..

அருணகிரியார்  -  அஷ்டோத்ரம் மாதிரி  அழகாகச் சொன்னாலும் - 

அவருக்கும் முன்னே - அப்பர் சுவாமிகளின் திருவாக்கு.

நம் கடம்பனைப் பெற்றவள் - என்று!.. 

''..இவளுடைய பங்கில் தானே ஈசன் - இன்பமுற இருக்கின்றான்!..''- என அப்பர் சுவாமிகள் அழகுக்கு அழகூட்டுகின்றார்.

ஆக, அன்னையாய் - கன்னியாய் - விளங்கி, நாமும் நம் சந்ததியும் விளங்க வேண்டும் என வீற்றிருக்கும் அன்னைக்கு மங்கலச் சடங்குகள் நிகழும் நாள் - ஆடி வெள்ளி - அதிலும் ஆடிப்பூர நன்னாள்.

எல்லா சிவாலயங்களிலும் - அம்பிகைக்கு - ஆடிப்பூரத்தை முன்னிட்டு  மங்கல வைபவங்கள் நிகழ்வுறுகின்றன. 


சிகரம் வைத்தாற் போல நெல்லையில் அன்னை காந்திமதிக்கு - கடந்த 3/8 அன்று சீரும் சிறப்புமாக ஊஞ்சல் மண்டபத்தில் வளைகாப்பு வைபவம் நடந்துள்ளது. அதன்பின், அன்னை - வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி -  கோலாகலமாக ரதவீதிகளில் பவனி வந்து மகிழ்ந்திருக்கின்றாள். இன்று  நெல்லையில் - ஆடிப்பூர முளைக் கொட்டு வைபவம்.


திரு அண்ணாமலையில், ஜுலை 31 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கிய ஆடிப்பூர பெருவிழாவின் நிறைவாக - இன்று மாலை, உண்ணாமுலை நாயகிக்கு வளைகாப்பு மண்டபத்தில் சிறப்பு அபிஷேக அலங்காரத்துடன் வளைகாப்பு வைபவமும், பின் வீதி உலாவும், வேறெங்கும் இல்லாதபடி -  நள்ளிரவு தீமிதி திருவிழாவும் நிகழ்கின்றன.

திருமயிலையில் - கபாலியுடன் கொஞ்சிக் குலவிக் களித்திடும் குலமயில்  கற்பகவல்லிக்கும் ஆடிப்பூர வைபவம் நிகழ்கின்றது.
 
திருச்சி உறையூரில் வீற்றிருக்கும் குங்குமவல்லிக்கு தை - மூன்றாம் வெள்ளியில் இந்த மங்கல வைபவம் அங்குள்ள மரபின்படி நிகழ்ந்திருக்கின்றது. 

மக்களைப் பெற்ற மகராசி அவள். அவள் பெற்ற மக்கள் ஒன்றாகக் கூடி, அவளுக்கே - மங்கலகரமாக வளகாப்பு நிகழ்த்தி மனம் மகிழ்கின்றனர். 


இவற்றையெல்லாம் காணக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். ஆடிப்பூர வைபவத்தினைக் கொண்டாடும் போது - நம் வீட்டில் -

மகளுக்கும் , மருமகளுக்கும்,  மனைவிக்கும், சகோதரிகளுக்கும்  - 

ஏன்! - 

நம்மைப் பெற்ற அன்னைக்கும் வளையல்கள் வாங்கித் தரலாம்.
 
இருப்பினும்-

அம்பிகையின் அருளைப் பெற - எளிதான வழி ஒன்றும் -  இருக்கின்றது.

நம்மைச் சுற்றி வாழும் எளிய குடும்பத்தில் உள்ள பெண் குழந்தைகளுக்கு, இந்த - மங்கல நாளில் வளையல்கள் வாங்கிக் கொடுத்துத் தான் பாருங்களேன்!..

அந்தப் பிள்ளைகளின் முகத்தில் - ஆனந்தம் தவழக் காணலாம்!..

அந்த ஆனந்தத்தின் ஊடாக - 
அம்பிகையின் அருள் முகத்தையும் காணலாம்!...

5 கருத்துகள்:

  1. ஆடிப்ப்பூரத்தன்று அருமையாய் அம்மன் தரிசனம் கண்டேன் மகிழ்ச்சியுற்றேன்.
    எல்லோர் இல்லத்திலும் இந்த வளைகாப்பு வைபவம் நிகழ்ந்து மழலைச்செல்வம் கொஞ்சி விளையாட அந்த அபிராமி அருள் வேண்டுகிறேன்.

    நீங்கள் தமிழ் பாட்டு நிறைய எழுதுகிறீர்கள். எனக்கு ஒரு சின்ன சந்தேகம்.முடிந்தால் விளக்குங்கள்.

    சென்ற வருடம் திருக்கடையூர் அபிராமியை தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது.
    அங்கே ஒரு பெண்மணி மனமுருக தன இனிய குரலால் அபிராமியைப் பற்றி பாடிக் கொண்டிருந்தார்.
    அதில் இந்த வரி மட்டும் தான் என் மனதில் நின்றது "நீ குழந்தையாய் வருவாயோ, குமரியாய் வருவாயோ" என்று நடுவில் இந்த வரி வந்தது. நானும் நெட்டில் பல் நாட்கள் அபிராமி பாடல்கள் எத்தனையோ பார்த்து விட்டேன். இந்த வரி வரும் பாடல் எதுவும் என் கண்ணில் படவில்லை.
    மனதை உருக்கிய பாட்டு அது.
    யார் இயற்றிய பாடலில் இது வருகிறது?பிரபலங்கள் யாராவது ஆல்பத்தில் பாடியிருகிரார்களா? தெரிந்தால் சொல்லுங்கள். தொந்தரவிற்கு மன்னிக்கவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்!.. தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!.. நீங்கள் குறிப்பிட்ட அந்த வரிகளுடன் கூடிய பாடலை நானும் இது வரை கேட்டதில்லை. இருப்பினும் மேலதிக தகவல் பெறுவதற்கு - என் நண்பர்களிடம் கூறியுள்ளேன். விரைவில் தங்கள் கவனத்திற்கு!..

      நீக்கு
  2. ஆடி வெள்ளி + ஆடிப்பூரத்திற்கு ஏற்ற அழகான ப்திவுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்!.. தங்களின் மேலான வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..