நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, பிப்ரவரி 04, 2022

தை வெள்ளி 4


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட
வேண்டும்..
***
இன்று
தை (22) மாதத்தின்
நான்காவது
வெள்ளிக்கிழமை..


நேற்று காலையில்
தஞ்சை புன்னைநல்லூர்
ஸ்ரீ முத்துமாரியம்மன்
திருக்கோயிலுக்குச்
சென்றிருந்தோம்..

வியாழக்கிழமை என்ற போதிலும் 
நல்ல கூட்டம்..

பெற்ற தாயாய்த் திகழும்
தயாபரியைக் கண்டு
கை தொழ - கண்கள்
கசிந்தன..

கோயிலிலேயே சாப்பிட்டு விட்டு
மதியப் பொழுதில் வீடு திரும்பி சற்றே ஓய்வு..

மாலை நான்கு மணியளவில்
பதிவினுள் நுழைந்தேன்..

இந்தப் பதிவினுக்கான கரு முன்னமே திட்டமிடப்பட்டிருந்தது..

ஏதோ ஒரு நினைவில்
" மாயி மகமாயி " - என்று
முதல் நான்கு வரிகளை எடுத்தேன்...

மற்ற மற்ற வார்த்தைகள்
தாமாகவே சரணங்கள் ஆகின..

சின்னச் சின்ன வார்த்தைகளால்
தொடுக்கப்பட்ட
சித்திரப் பாமாலையை
அன்னையின் திருவடிகளில்
சமர்ப்பிக்கின்றேன்..

 
மாயி மகமாயி
மணி மந்திர சேகரியே
ஆயி உமை ஆனவளே
ஆஸ்தான மாரிமுத்தே.. 4
ஆற்றங்கரைச் சோலையிலே
அரசாளும் ஈஸ்வரியே
காவிரியின் தீர்த்தத்திலே
சதிராடும் சங்கரியே.. 8

வெள்ளிப் பிரம்பெடுத்து
வீதிவழி வாருமம்மா
தங்கப் பிரம்பெடுத்து
பிஞ்சுமுகம் பாருமம்மா.. 12
ஓங்காரி மாரியளே
ஆங்காரி நீலியம்மா
ஒத்த வழி போகையிலே
பக்கத் துணை வாருமம்மா.. 16


பக்கத்திலே நீயிருந்தா
பஞ்சமில்லை நோயுமில்லை
பார்வதியே பார்த்திருந்தா
ஆர்துணையும் தேவையில்லை.. 20
மாயவனின் சோதரியே
மங்கலங்கள் தாரும்மா..
தாய்மனசு தங்கமம்மா
திருநீறு தாருமம்மா.. 24

அங்கமெலாம் சந்தனமாம்
அருமருந்து வேப்பிலையாம்..
குங்குமமும் நெற்றியிலே
கூடிவரும் மங்கலமாம்.. 28
சாதிமஞ்சள் தானரைத்து
சந்நிதியில் நீராட்டு..
சஞ்சலமும் சச்சரவும்
சக்தியளே நீ ஓட்டு.. 32


செங்கரத்தில் வாளிருக்க
செந்தணலும் தானிருக்க
சீறி வரும் நாகம் அது
நல்லவரைக் காக்காதோ.. 36
பூங்கரகம் தாங்கிவர
பூமுகமும் பொங்கிவர
பொற் சலங்கை பாடி வர
புண்ணியளே வாருமம்மா.. 40

நெற்றி விழி அக்கினியாம்
நீள்முடியும் செந்தணலாம்..
சூரியனும் சந்திரனும்
சுற்றிவரும் பூ விழியாம்.. 44
மல்லிகப் பூ குஞ்சம் வைத்து
செண்பகத்து செண்டும் வைத்து
தாழம்பூ சடை முடித்து
முன் நடந்து வாருமம்மா.. 48


சங்கு வளை முத்து வளை
சேர்ந்திருக்கும் சித்ர வளை
எங்கவலை தீர்த்திடவே
சங்கரியே வாருமம்மா.. 52
கைவளையல்  கலகலக்க
கால் சிலம்பு சலசலக்க
அங்கமெல்லாம் சிலுசிலுக்க
காரிகையே வாருமம்மா.. 56

முன்னவனும் முன்கரத்தில்
சின்னவனும் சிற்றிடையில்
மன்னவனும் நெஞ்சகத்தில்
மங்கலையே வாருமம்மா.. 60
சாம்பிராணி வாசத்திலே
சங்கடங்கள் தீருமம்மா..
கற்பூர ஜோதியிலே
கண் திறந்து பாருமம்மா.. 64


எலுமிச்சம் மாலைகளாம்
என் தாயி  பூங்கழுத்தில்
செண்டுமலர் தோரணமாம்
சிங்காரச் சந்நதியில்.. 68
நெய் விளக்கு ஏத்தி வைக்க
கை விளக்காய் வாருமம்மா
கண் இருட்டும் வேளையிலே
மெய் விளக்காய் வாருமம்மா.. 72

ஐயிரண்டு திங்களிலே
ஆதரித்த பொன்மகளே
ஆயுள் அது ஐஸ்வரியம்
அள்ளித் தர மாட்டாயோ.. 76
அண்டி வரும் ஏழை சனம்
அம்மா உந்தன் சந்நிதியில்
என் மனமும் காலடியில்
குறை களைய மாட்டாயோ.. 80


கூடி வரும் மேகம் என
தேடி வரும் மாரியளே
மாரி தரும் மங்கலமாய்
வாரித் தர மாட்டாயோ.. 84
ஓங்கார உடுக்கையது
ஆங்காரப் பகை விரட்டும்
பாங்கோடு திரிசூலம்
வந்தவினை பிணி துரத்தும்.. 88

பொற்பாத சலங்கையிலே
என் மனசு சேர்ந்திருக்க
நற்பாடல் செந்தமிழில்
உன் மனசு பூத்திருக்க.. 92
பூவிதழில் பூவாசம்
பூந்தமிழில் தேன்வாசம்
அன்னமதில் நெய்வாசம்
நெஞ்சமதில் உன்வாசம்.. 96


என்ன குறை என்று எண்ணி
எண்ணிக்கையும் தெரியவில்லை
அத்தனையும் நீ அறிவாய்
அன்புடனே நீ பொறுப்பாய்.. 100
அம்மா உன் பொன்னடியில்
ஆயிரமாய்  அகல்விளக்கு
எந்த ஒன்றில் உன் ஒளியோ
வந்து நீயும் முகங்காட்டு..104


கற்பகமே அற்புதமே
கண்ணொளியில் வந்திருப்பாய்
தஞ்சை வளர் தண்மதியே
நெஞ்சமதில் வீற்றிருப்பாய்.. 108
***
ஓம் சக்தி ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம்
***

20 கருத்துகள்:

  1. அற்புதம்..   அற்புதம்..  மகமாயிக்கு பாமாலை அற்புதம். குறைகள் யாவையும் அன்னை மகமாயி தீர்த்து வைக்க அவள் அருளை இறைஞ்சுவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்களுக்கு நல்வரவு..

      மூன்று நாட்கள் முயன்று ஒரு பதிவினை ஒழுங்கு செய்திருந்தேன்.. அது அப்புறமாக வரும்..

      அரை மணி நேரத்தில் தோன்றிய பாடல் வரிகள் இன்று பாமாலையாகி விட்டன..

      அவளன்றி ஆவது ஒன்றும் இல்லை.. ஓம் சக்தி ஓம்..

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. மாயி மகமாயி...நாம் ஆரம்பித்தால் அவள் நிறைவேற்றி வைப்பாள். இதுபோன்ற நிகழ்வுகளை நான் ஆன்மிகக்கட்டுரைகள் எழுதும்போது எதிர்கொண்டுள்ளேன். அனைத்தும் இறையருளே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..

      தாங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.. இது மாதிரி பல்வேறு சந்தர்ப்பங்கள்..

      எல்லாம் அவளது இன்னருள்.

      தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
    2. வாழ்க வையகம்..
      வாழ்க.. வாழ்க..

      நீக்கு
  3. அட! அம்பிகைக்க்கு என்ன அழகான பாமாலை உங்கள் அழகிய தமிழில் வார்த்தைகளில் தொடுத்த அழகான பாமாலை! துரை அண்ணா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சகோ..
      தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      ஓம் சக்தி ஓம்..

      நீக்கு
  4. பக்கத்தில் அம்மா இருந்தால், பஞ்சம் இல்லை, நோய் இல்லை, கவலை இல்லை, குறைகள் இல்லை எல்லாம் நிறைதான். மிக அழகான பாமாலை.
    அன்னை அருள வேண்டும். முன்பு அடிக்கடி பார்த்த கோயில்.
    ஓம் சக்தி ஓம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

      அன்னை அருகில் இருந்தால்
      தொல்லை இல்லை.. துன்பம் இல்லை..

      மகிழ்ச்சி.. நன்றி..
      ஓம் சக்தி ஓம்..

      நீக்கு
  5. அன்னைக்கு அற்புதமாய் ஒரு பாமாலை... அன்னையின் பூரண அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகையும் வேண்டுதலும் மகிழ்ச்சி.. நன்றி..

      வாழ்க நலம்..

      நீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. அகலத்தை காக்கும் அன்னை மகமாயி அம்மன் மேல் தாங்கள் இயற்றிய பாமாலை பாடல் வரிகள் மிகவும் அருமையாக உள்ளது. அன்னையின் படங்களை கண்குளிர கண்டு தரிசித்துக் கொண்டேன்.

    /என்ன குறை என்று எண்ணி
    எண்ணிக்கையும் தெரியவில்லை
    அத்தனையும் நீ அறிவாய்
    அன்புடனே நீ பொறுப்பாய்.. 100
    அம்மா உன் பொன்னடியில்
    ஆயிரமாய் அகல்விளக்கு
    எந்த ஒன்றில் உன் ஒளியோ
    வந்து நீயும் முகங்காட்டு..104/

    அழகான வரிகள்.மனக்குறையை மாதாவிடம் பகிர்ந்த இந்த வரிகளுக்காகவே கண்டிப்பாக அன்னை மனமிரங்கி வந்து அனைவருக்கும் நல்லாசிகள் தருவாள்.

    நேற்று சிறிது உடல்நலக் குறைவால் என்னால் இந்தப்பதிவுக்கு மட்டுமில்லை.. வலைத்தளத்திற்கே வர இயலவில்லை. அதனால் இன்று தாமதமாக வந்துள்ளேன். இப்போது அன்னையை தரிசித்த பூரண திருப்தியுடன் இருக்கிறேன். பக்திமயமான பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நேற்று தாங்கள் இப்பதிவுக்கு வரவில்லையே.. எதுவும் வெளியூர் பயணமாக இருக்கும் - என்று எண்ணியிருந்தேன்..

      உடல் நலக் குறைவு இப்போது அறிந்து வருத்தமாக இருக்கின்றது..

      கவலை வேண்டாம்.. அன்னை அருகிருப்பாள்..

      இச்சூழ்நிலையிலும் தாங்கள் பதிவுக்கு வந்து கருத்துரை செய்தமைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      ஓம் சக்தி ஓம்..

      நீக்கு
  7. இந்தப் பதிவு வந்ததே தெரியலை. அருமையான பாமாலை புனைந்து அன்னைக்குச் சூட்டியிருக்கீங்க. கொடுத்து வைச்சிருக்கணும். இல்லைனால் இப்படி எல்லாம் கவி மழை பொழியாது, அதிலும் கமலா குறிப்பிட்டிருக்காப் போல் என்னையும் கவர்ந்தவை, " என்ன குறை என்று எண்ணி, எண்ணிக்கையும் தெரியவில்லை. அத்தனையும் நீ அறிவாய், அன்புடனே நீ பொறுப்பாய்! என்னும் வரிகளைப் படிக்கையில் கண்ணீரே வந்து விட்டது. இப்போதைய என் மனோநிலையை எடுத்துச் சொல்கிறாப்போல் அமைந்து விட்டது. மாரியம்மன் தாலாட்டுப் பாடல்களையும் நினைவூட்டியது. பக்கத்திலே புத்தகத்தை வைத்துக் கொண்டு அவ்வப்போது எடுத்துப் படிச்சுப்பேன். _/\_

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

      இந்தப் பாடல் பதிவு வெளியான பொழுதில் தங்களை இங்கு காணாமல் மனம் சரியில்லை.. ஆனால் தாங்கள் அங்கே கோயிலில் இருந்திருக்கின்றீர்கள்..

      மனதில் ஒரு குரல்... தங்களுக்கு ஒரு செய்தி இதனுள் இருப்பதாக.. அதனால் தான் சொன்னேன்.. அது என்னவென்று தாங்களே உணர்ந்து அறிவீர்கள்..

      அம்பாள் அருள் நல்லோர் அனைவரையும் காத்து அருள்வதாக..

      மகிழ்ச்சி.. நன்றியக்கா..
      ஓம் சக்தி ஓம்..

      நீக்கு
    2. உண்மை தான். இந்தப் பாடல் எனக்குள் நம்பிக்கையை மீட்டுத் தந்திருக்கிறது. அம்பிகை அருளால் அனைத்தும் தெளிவுறவும் பிரார்த்திக்கிறேன். என்னோட இந்தப் பயணமும் ஒரு வகையில் திடீர்ப் பயணம் தான். எல்லாம் அவள் அருள்.

      நீக்கு
    3. அன்னை அவள் அருகிருக்க
      அல்லல் என்று ஏதுமில்லை
      பின்னை வரும் வினை அகலும்
      அன்னை பதம் போற்றி.. போற்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..