நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
ஸ்ரீ சங்கிலிப் பிள்ளயார் கோயில் |
தஞ்சை மாநகரின் வடக்கு எல்லையில் வெண்ணாறு.. இந்த ஆற்றின் தென் கரையில் தான் ஸ்ரீ தஞ்ச புரீஸ்வரர் திருக்கோயில்..
தஞ்சபுரீஸ்வரர் கோயிலையும் கோடியம்மன் கோயிலையும் சுற்றியுள்ள பகுதி நீர்ப்பிடிப்பான வயல்வெளிகள்.. ஆனதால் மிகு நீர் வழிந்தோடுவதற்காக ஒரு சிற்றோடை..
அந்தச் சிற்றோடையின் நடுவில் ஒரு மேடை.. அதில் விநாயகர் திருமேனி.. ஜலசந்தி விநாயகர் என்று திருப்பெயர்..
" ஏன் இப்படி!?.. "
ஈசான திசையில் ஸ்ரீ தஞ்ச புரீஸ்வரர் கோயில்.. கோயிலில் தெற்கு முகமாக விளங்கும்
ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மனின் சந்நிதிக்கு எதிரே நந்தி மண்டபம்.. அடுத்து தெற்கு கோபுர வாசல்..
இந்த வாசலுக்கு சற்று தொலைவில்
ஆனந்தவல்லியின் சந்நிதியை நோக்கியவாறு அமர்ந்திருக்கும் கோடியம்மனின் கோபாக்னியைக் குறைப்பதற்காக!..
" என்ன ஐயா இது வேடிக்கை!.. தெய்வ வடிவங்களிடையே கோப தாபமா?.. மூடத்தனம் அல்லவா இது!.. "
இன்றைய வாழ்விற்கு மின் சக்தி அவசியம் தேவை தான்.. ஆனால், உயர் அழுத்த மின்சக்தி உடைய கம்பிகளுக்குக் கீழ் அமைந்திருக்கும் வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு மன நலமும் உடல் நலமும் கிடைப்பதில்லை என்று பல தரப்பட்ட செய்திகள்..
இப்படியான நிலை ஏற்படக் கூடாது என்று தான் - கோடியம்மன் சந்நிதிக்கும் ஆனந்தவல்லியின் சந்நிதிக்கும் இடையில் கணபதி பிரதிஷ்டை...
சரி.. வாருங்கள்..
இதற்கான புராணத்தை அறிந்து கொள்ளலாம்..
***
அளகையர் கோன் எனப்பட்ட குபேரன் தான் இழந்த செல்வங்களைத் திரும்பவும் அடைந்த தலம் அவனது பெயரால் அளகாபுரி எனப்பட்டது.. இத்தலத்தின் அழகும் அமைதியும் காண்போரைக் கவர்ந்தது..
துறவியரும் யோகியரும் இப்பகுதியில் ஆஸ்ரமம் அமைத்த நிலையில் அவர்களை நிம்மதியாக இருக்க விடாமல் அரக்கர்கள் ஆக்ரமித்து நின்றனர்..
ஒன்றுக்கு இரண்டு. உபத்திரவத்துக்கு மூன்று என்பார்களே அதைப் போல
தஞ்சகன், தாண்டகன், தாரகன் - என, மூவர்..
இவர்களால் தேவர்களுக்கும் இன்னல்கள் விளைந்தன..
அல்லலுற்ற அனைவரும் எம்பெருமானின் திருவடிகளில் முறையிட்டு நிற்க - அம்பிகையை நோக்கினார் ஈசன்.. அம்பிகை ஆவேசம் கொண்டாள்.. அவளது திருமேனியில் இருந்து கோபாக்னி வெளிப்பட - காளி என, கோரங் கொண்டு நின்றாள்...
இறைவனிடம் வரங்களைப் பெற்றிருந்த மூவரும் அம்பிகையிடம் தாங்கள் கற்ற மாய வித்தைகளைக் காட்டி குறை கூத்தாடினர்..
முதலில் தாரகனையும் தொடர்ந்து தாண்டகனையும் வீழ்த்தினாள் அம்பிகை..
இதைக் கண்டு நிலை குலைந்தான் தஞ்சகன்..
ஆனாலும் மனம் திருந்தாதவனாக நூறு நூறாயிரம் - என மாயத் தோற்றங்களைக் காட்டி எதிர்த்தான்..
அம்பிகையோ தஞ்சகனை மிஞ்சியவளாய் கோடி கோடியாய் வடிவங்காட்டி திருவுடைக் கோடியம்மன் - என, ஆங்காரமாக நின்றாள்..
அம்பிகையின் கோடி ரூபங்களைக் கண்டு வெலவெலத்து நின்ற தஞ்சகனை வீழ்த்தி திருவடியால் மிதித்து வதம் செய்தாள் கோடியம்மன்..
கோடியம்மனின் ஸ்பரிசத்தினால் நல்லறிவு பெற்ற தஞ்சகன் - " அம்மா!.. நீ இங்கேயே இந்தத் தோற்றத்துடன் எழுந்தருளி இருத்தல் வேண்டும்.. மேலும் இப்பகுதி உன்னால் கதியுற்ற அடியேனின் பெயரால் விளங்குதலும் வேண்டும்!.. " - என்று பிரார்த்தித்துக் கொண்டான்..
(மேலே உள்ள இரண்டு படங்களும் கோடியம்மன் Fb ல் பெறப்பட்டவை.. நன்றி..)
அப்படியே வரம் அருளினாள் அன்னை.. அதனாலேயே தஞ்சன் ஊர் - தஞ்சாவூர் என்றானது..
தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் தஞ்சம் அளித்ததால் இறைவன் தஞ்சபுரீஸ்வரர் என்றானார்..
அமைதியையும் ஆனந்தத்தையும் மீட்டு அளித்ததால் அம்பிகை - ஆனந்தவல்லி என்றானாள்.
இந்த புராணத்துள் இன்னும் ஒரு கிளைக்கதையும் இருக்கின்றது..
திவ்ய தேசத்துக்கென்று தனியே வேறொன்றும் இருக்கின்றது..
அவற்றைப் பிறகு தருகின்றேன்...
" சரி.. இதற்குள் தஞ்சபுரீஸ்வரர் கோயிலின் தெற்கு வாசல் அடைக்கப் பட்டிருக்கும் காரணம் வரவில்லையே!.. "
இதோ - வருகின்றது அந்த காரணம்!..
அரக்கர் வதம் முடிந்த பின் அவரவரும் அவரவர் வேலையைப் பார்க்கச் சென்று விட்டனர்..
ஆனால், ஆனந்தவல்லியின் திருமேனியில் இருந்து இவர்களுக்காக அக்னியாகக் கொதித்தெழுந்து வெளிப்பட்ட கோடியம்மன் மட்டும் சாந்தம் அடையாமல் கோரமாக சுழன்று கொண்டிருந்தாள்..
கோடியம்மனின் கோபம் குளிர வேண்டும் - என, அனைவரும் ஈசனிடம் பிரார்த்தித்துக் கொண்டனர்..
எம்பெருமானும் அம்பிகையின் சிரசில் - சஹஸ்ரார கமலத்தில் திருமுகம் காட்டியருளினார்..
அந்த அளவில் சாந்தம் கொண்ட கோடியம்மன் நேராக வடதிசை நோக்கி அமராமல் சற்றே திரும்பி ஈசானிய திக்கை நோக்கி அமர்ந்தாள்..
அந்தத் திக்கில் தான் ஸ்ரீ தஞ்சபுரீஸ்வரர் திருக்கோயிலும் ஆனந்தவல்லி அம்பிகையின் தெற்குத் திருக்கோபுர வாசலும் அமைந்தன..
காலங்கள் கடந்த நிலையில் தஞ்சையை பல்லவர்களிடம் இருந்து தன் வசப்படுத்திய
ஸ்ரீ விஜயாலய சோழர் தேசத்தின் எட்டுத் திக்குகளிலும் காளி பீடங்களை நிறுவினார்..
அப்போது
ஸ்ரீ கோடியம்மனின் திருமேனியில் இருந்து ஈசானிய திசை நோக்கி அக்கினி ஜுவாலை வெளிப்படுவது
உணரப்பட்டது..
அதன் விளைவாக -
கோடியம்மனின் பீடம் சற்றே நகர்த்தப்பட்டது..
அத்துடன் -
ஸ்ரீ தஞ்சபுரீஸ்வரர் கோயிலின் தெற்கு வாசலும் அவசரம் அவசியம் அல்லாத மற்ற நேரங்களில் திறக்கப்படாதவாறு அடைக்கப்பட்டது..
***
கால ஓட்டத்தில் 100/120 ஆண்டுகளுக்கு முன் அந்த சிற்றோடையின் குறுக்காக பாலம் கட்டிய போது ஓடைக்குள் இருந்த விநாயகரை - இடம் மாற்றி பாலத்தின் மீது சாலையின் ஓரமாக வைத்தார்கள்..
அவரது பெயரும் சங்கிலிப் பிள்ளையார் என்றானது..
சமீபத்தில் சாலை விரிவாக்கத்தின் போது குறுகலான பழைய பாலம் இடிக்கப்பட்டு புதிதாக விரிவடைந்தது..
பாலத்தில் இருந்த பிள்ளையாருக்காக புதிதாக கோயில் எழுப்பப்பட்டது.. சங்கிலிப் பிள்ளையாரும் கால சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு புதிய கோயிலுக்கு மாறிக் கொண்டார்..
இன்றுவரை இந்தப் பக்கத்தில் எவ்விதக் கோளாறும் ஏற்படாதவாறு காத்து வருகின்றார்.. இனி வருங்காலங்களிலும் காத்தருள்வார்...
***
ஸ்ரீ ஆனந்தவல்லி நந்தி மண்டபம் |
" கதை எல்லாம் நல்லாத் தான் இருக்கு... ஆனா.. என்ன இது?.. "
" எது!.. "
" தஞ்சை என்றால், தண் - செய்.. குளிர்ச்சியான நீர்வளம் பொருந்திய வயல்களால் சூழப்பட்ட ஊர் என்று அர்த்தம் என்றும் சொல்கின்றார்கள்.. ஆனால் நீங்கள்?.. "
" ஆமாம்.. அப்படியும் ஒரு அர்த்தம் உள்ளது.. அதுவும் பொருத்தம் தானே!.. ஆதரவு இன்றி அபயம் என்று வருவோர்க்கு தஞ்சம் அளிப்பது என்பதும் தொன்று தொட்டு வருவது அல்லவா.. அப்படியிருக்க தஞ்சம் என்பதும் தஞ்சை என்பதும் தொன்மையானவை தானே!.. "
" ஆமாம்.. ஆமாம்!.. "
" ஆனாலும், அன்றைக்கு தண் செய் என்று புகழப்பட்ட வயல்வெளி எல்லாம் இன்றைக்கு
எதற்கும் உதவாத
நீர்க்கருவைக் காடாகி விட்டதே!.. "
" அதுக்கு நாம மட்டும் வருத்தப்பட்டு என்னங்க ஆகப் போகுது?.. வேற வேலை இருக்கு.. வாங்க அதைப் போய் பார்ப்போம்!.. "
*
நாடெங்கும் வளம் சேர்க
வீடெங்கும் நலம் வாழ்க..
ஓம் சக்தி ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம்
***
இந்தக் கோவில்கள் தஞ்சையில் எந்த இடத்தில் இருக்கின்றன? கேள்விப்பட்ட மாதிரியும் இருக்கிறது, இல்லை மாதிரியும் இருக்கிறது!
பதிலளிநீக்குஅன்பின் ஸ்ரீராம்..
நீக்குதங்களுக்கு நல்வரவு..
கும்பகோணம் செல்லும் சாலையில் கரந்தையைக் கடந்ததும் கோடியம்மன் கோயில்.. அடுத்து தஞ்சபுரீஸ்வரர் கோயில்.. நடுவில் சங்கிலிப் பிள்ளையார்.
இன்னும் விளக்கமாக சில படங்களை இணைத்திருக்க வேண்டும்.. தவிரவும் சில காட்சிகள் தவறி விட்டன...
மீண்டும் முயற்சிக்கின்றேன்..
தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
நன்றி. பார்த்த நினைவில்லை. எப்போதுமே பதிவுகளில் கோவிலின் இருப்பிடங்களையும் குறிப்பிட வேண்டுகிறேன்.
நீக்குதஞ்சையைப் பற்றி எழுதும் போது அதிக விளக்கங்கள் எதற்கு - என்று நினைத்தேன்..
நீக்குஇதற்கு முந்தைய/ முந்தைய பதிவுகளில் எல்லாம் தலங்களைப் பற்றி விவரங்கள் தெரிவித்துள்ளேன்..
இருந்தாலும் இனிமேல் கவனத்தில்!..
மகிழ்ச்சி.. நன்றி..
ஒட்டன்சத்திரத்தில் பவர் மின் கம்பிகளுக்கு கீழே ஓர் நகரத்தையே உருவாக்கி இருக்கிறார்கள்.
பதிலளிநீக்குஅரசும் இதற்கு அனுமதி வழங்கி இருக்கிறதே... இறைவன்தான் காக்கும்.
நான் குடியிருந்த பழைய இல்லத்தில் மாடியிலிருந்து கையெட்டும் தூரத்தில் பவர் மின்கம்பி செல்லும் தேவகோட்டையாரே... ஒரு மின்தடை ஏற்பட்ட நேரம் அதனோடு ஒரு சிறு இழையில் தப்பிய சம்பவமும் உண்டு!.
நீக்குஅன்பின் ஜி...
நீக்குதமிழகத்தில் தான் எல்லாவற்றுக்கும் அனுமதி கிடைக்குமே... அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து குடிசை/ கோயில் கட்டுகின்றான்.. இது எந்தத் துறைக்கும் முக்கியமாக கிராம நிர்வாக அலுவலர்க்கும் தெரியாமல் போய் விடுகின்றது.. எப்படி இது சாத்தியம்?..
அறம் பிழைத்தோர்க்கு
அறமே கூற்றாகட்டும்!..
அன்பின் ஸ்ரீராம்..
பதிலளிநீக்குமயிரிழையில் தப்பிய சம்பவம் இறைவன் அருள்..
ஆனாலும் இதெல்லாம் நம் நாட்டில் சகஜம்..
போபால் விஷவாயு விபத்தினை நினைத்துப் பாருங்கள்...
தமிழ் நாட்டில் விவசாயி என்ற பெயரில் கூட்டுக் களவாணிகள் மானியத் தொகையை லட்சக் கணக்கில் சுருட்டி இருக்கிறார்கள்...இதற்கு அரசு ஊழியர்களும் உடந்தை..
இதையெல்லாம் பார்க்கும் போது அங்கே மேலே தொங்குவது மின் கம்பியே இல்லை என்று கூட சான்றிதழ் கிடைக்கும்..
பெயர்க் காரண விளக்கங்கள் அறிந்தேன்...
பதிலளிநீக்குஅன்பின் தனபாலன்..
நீக்குதங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
வரலாற்று ஆய்வாளரின் கட்டுரையை வாசிப்பது போல இருந்தது. மகிழ்ச்சி.
பதிலளிநீக்குஅன்பின் ஐயா..
நீக்குதங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
தாங்கள் சொல்வது போல வரலாற்று ஆய்வு எல்லாம் இல்லை.. எனது மனதில் பட்டதை அன்னையின் அருளுடன் எழுதியிருக்கின்றேன்..
தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..
விக்கிப்பீடியாவில் விடுபட்டுள்ள சங்கிலிப்பிள்ளையார் கோயிலைப் பற்றி விரைவில் பதிவு எழுதவுள்ளேன்.
பதிலளிநீக்குஅன்பின் ஐயா..
நீக்குதங்கள் அன்பினுக்கு மகிழ்ச்சி.. நன்றி..
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. தெய்வப் படங்கள் அத்தனையும் அருமை. தஞ்சையின் பெயர் காரணங்களை தெரிந்து கொண்டேன். தெய்வங்களின் பேராற்றலும், அவர்களால் பெயர் மாறிய கதைகளைப் பற்றியும் படித்து தெரிந்து கொண்டேன்.
கோபம் தீர்ந்தும் இன்னமும் சற்று தீராத ஸ்ரீ கோடியம்னை பற்றிய கதையும், அதனால் ஸ்ரீ தஞ்சபுரீஸ்வரர் கோவில் தெற்கு வாசல் அடைப்பட்டிருக்கும் விபரங்களும் தங்களின் இன்றைய பதிவில் விபரமாக தெரிந்து கொண்டேன். ஒவ்வொன்றுக்கும் எத்தனை காரணங்கள்.. படிக்கப்படிக்க அனைத்தும் திகைப்பூட்டுகிறது. அதனிடையில் இரண்டுக்குமாக இணைத்து மின் சாதன கம்பிகளையும் தங்கள் உவமை அளித்து எழுதியிருப்பது அருமை.
சங்கிலிப் பிள்ளையார் அங்கு இடம் பெற்ற தகவல்களும், அவர் அருள் அனைவருக்கும் கிடைத்திட அவர் எங்கும் தன் சூழல் மாறினாலும், இடம் பெயர்ந்து அமர்ந்து மக்களை காத்தருளும் அவரின் அன்பும் மெய்சிலிர்க்க வைக்கிறது.என்றும் நலமுடன் அனைவரையும் காக்கும் கடவுள் கணேசன்தானே..! அத்தனை தெய்வங்களையும் நம் அல்லல் தீர்த்து காத்திட வேண்டுமாய் பிரார்த்தித்துக் கொள்கிறேன். சுவாரஸ்யமான பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...
நீக்குஆகா... பதிவு எழுதுவதைப் போல தங்களது கருத்துரை.. என் மனதில் தோன்றுகின்ற சில விஷயங்களை பல முறை உருவேற்றி அதன் உண்மையை உணர்ந்து பதிவில் வழங்குகின்றேன்.. இதில் மாறுபட்ட கருத்துகள் கூட இருக்கலாம்.. என்னளவில் உணரப்பட்ட செய்திகள் தங்களுக்காக..
சென்ற வாரத்தில் அங்கு படங்கள் எடுத்தபோது இத்தனை விவரமாகத் திட்டமிடவில்லை..
இப்போது தான் தெரிகின்றது - இன்னும் சில படங்களைப் பதிவில் சேர்த்தால் இன்னும் தெளிவாக இருக்கும் என்று...
மேலும் சில படங்களுடன் அடுத்து வரும் நாட்களில் பதிவிடுகின்றேன்..
நேற்றைய பதிவில் புன்னை நல்லூர் ஸ்ரீ கோதண்டராமர் கோயிலைப் பற்றி எழுதியிருக்கின்றேன்..
அதனையும் வாசிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்..
தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..
அருமையான பதிவு. தஞ்சபுரீஸ்வரர் பற்றிக் கேள்விப் பட்டிருக்கேன். ஆனால் கோயில்கள் குறித்துத் தெரியாது. தஞ்சை பற்றியும் தஞ்சகன் பற்றியும் கதை/புராணம் படிச்சிருக்கேன். மற்றப்படி கோடியம்மன் இப்போத் தான் தரிசனம். ஆனந்தவல்லி அம்மன் அனைவருக்கும் ஆனந்தத்தையே கொடுக்கட்டும். சஹ்ஸ்ராரத்தில் தென்படும் ஈசனை அனைவரையும் காத்து அருளட்டும்.
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
நீக்குதஞ்சபுரீஸ்வரரும் ஆனந்தவல்லி அம்பிகையும் நல்லோர் அனைவரையும் காத்தருளட்டும்..
வேண்டுதலுக்கு மகிழ்ச்சி.. நன்றியக்கா..
சிறப்பான தகவல்களுடன் விரிவான பதிவு. தஞ்சை குறித்தும் கோவில்கள் குறித்தும் பல விஷயங்களை தெரிந்து கொள்ள உதவியது. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
பதிலளிநீக்குஅன்பின் வெங்கட்..
நீக்குதங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
ஸ்ரீ சங்கிலிப் பிள்ளையார்!! இதுவரை இப்படிக் கேள்விப்பட்டதில்லை.
பதிலளிநீக்குகோயில்கள் பற்றிய விவரங்கள், புராணக் கதைகள், கோடியம்மன் எல்லாம் புதியதாகத் தெரிந்துகொள்கிறேன் அண்ணா. படங்களும் சிறப்பாக இருக்கின்றன.
கீதா
அன்பின் சகோ.
நீக்குதங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
ஸ்ரீ தஞ்சபுரீஸ்வரர் கோயில் கேள்விப்பட்டதுண்டு ஆனால் சென்றதில்லை. ஆனால் கோடியம்மன், ஜலசந்தி விநாயகர், ஸ்ரீ சங்கிலிப் பிள்ளையார் இவை எல்லாம் புதியதாக அறிகிறேன். தகவல்களும் புராணங்களும் அறிந்து கொண்டேன். மிக்க நன்றி சார்.
பதிலளிநீக்குதுளசிதரன்
அன்பின் துளசிதரன்..
நீக்குதங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...