நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, செப்டம்பர் 30, 2017

சொல்மாலை 2

இன்று விஜயதசமி


பொலிவுற்ற பொன்னனையாள்  
போர் முடித்த பொன்னாள்..
புல்லரைத் தன் பொன்னடிக் கீழ்
பொருது நின்ற நன்னாள்!..

பெண்மை என்றும் வாழ்க!.. என்று
புகழ் போற்றுவோம்!..
பெண்மை என்றும் வெல்க!.. என்று
சுடர் ஏற்றுவோம்!..
***


உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம்போது மலர்க்கமலை
துதிக்கின்ற மின்கொடி மென்கடிக் குங்குமத் தோயமென்ன
விதிக்கின்ற மேனி அபிராமி என்றன் விழுத்துணையே..(001)

மனிதரும் தேவரும் மாயாமுனிவரும் வந்து சென்னி
குனிதரும் சேவடிக் கோமளமே கொன்றை வார்சடைமேல்
பனிதரும் திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என்புந்தி எந்நாளும் பொருந்துகவே..(004)

ஸ்ரீ வடபத்ரகாளி - தஞ்சை
சுந்தரி எந்தை துணைவி என்பாசத் தொடரை எல்லாம் 
வந்தரி சிந்துர வண்ணத்தினாள் மகிடன் தலைமேல்
அந்தரி நீலி அழியாத கன்னிகை ஆரணத்தோன்
கந்தரி கைத்தலத்தாள் மலர்த்தாள் என் கருத்தனவே..(008)

கண்ணியது உன்புகழ் கற்பது உன்நாமம் கசிந்துபத்தி
பண்ணியது உன்னிரு பாதாம்புயத்தில் பகலிரவா
நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து நான்முன்செய்த
புண்ணியம் எதுஎன் அம்மே புவிஏழையும் பூத்தவளே..(012)

ஸ்ரீ கோடியம்மன் - தஞ்சை
மங்கலை செங்கலசம் முலையாள் மலையாள் வருணச்
சங்கலை செங்கைச் சகலகலா மயில்தாவு கங்கை
பொங்கலை தங்கும் புரிசடையோன் புடையாள் உடையாள்
பிங்கலை நீலி செய்யாள் வெளியாள் பசும்பெண்கொடியே..(021)

சொல்லும் பொருளும் எனநடம் ஆடும் துணைவருடன்
புல்லும் பரிமளப் பூங்கொடியே நின்புது மலர்த்தாள்
அல்லும் பகலும் தொழுமவர்க்கே அழியா அரசும்
செல்லும் தவநெறியும் சிவலோகமும் சித்திக்குமே..(028)

ஸ்ரீ வராஹி - தஞ்சை
நாயகி நான்முகி நாராயணி கைநளின பஞ்ச
சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதிநச்சு
வாயகி மாலினி வாராகி சூலினி மாதங்கி என்று
ஆயகி ஆதியுடையாள் சரணம் அரண் நமக்கே..(050)
-: அபிராமி பட்டர் :-
***

இன்று புரட்டாசி மாதத்தின் 
இரண்டாம் சனிக்கிழமை..

இன்றைய பதிவில்
பூதத்தாழ்வார் அருளிச் செய்த
திருப்பாசுரங்கள் திகழ்கின்றன..

ஸ்ரீ நீலமேகப்பெருமாள் - தஞ்சை
அன்பே தளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புருகி
ஞானச் சுடர்விளக் கேற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ்புரிந்த நான்.. (2182)

நகரிழைத்து நித்திலத்து நாண்மலர் கொண்டு ஆங்கே
திகழும் அணிவயிரம் சேர்த்து - நிகரில்லாப்
பைங்கமல மேந்திப் பணிந்தேன் பனிமலராள்
அங்கம்வலங் கொண்டான் அடி..(2185)

ஸ்ரீ சௌரிராஜன் - திருக்கண்ணபுரம் 
கொண்டது உலகம் குறளுருவாய்க் கேளரியாய்
ஒண்டிறலோன் மார்வத்து உகிர்வைத்தது - உண்டதுவும்
தான்கடந்த ஏழுலகே தாமரைக்கண் மாலொருநாள்
வான்கடந்து செய்த வழக்கு..(2199)

தாழ்ந்துவரங் கொண்டு தக்க வகைகளால்
வாழ்ந்து கழிவாரை வாழ்விக்கும் - தாழ்ந்த
விளங்கனிக்குக் கன்றெறிந்து வேற்றுருவாய் ஞாலம்
அளந்தடிக் கீழ்க்கொண்ட அவன்..(2204) 

ஸ்ரீ சாரநாதன் - திருச்சேறை
மனத்துள்ளான் வேங்கடத்தான் மாகடலான் மற்றும்
நினைப்பரிய நீளரங்கத் துள்ளான் - எனப்பலரும்
தேவாதிதேவ னெனப்படுவான் முன்னொருனாள்
மாவாய் பிளந்த மகன்..(2209)

இருந்தண் கமலத் திருமலரி னுள்ளே
திருந்து திசைமுகனைத் தந்தாய் - பொருந்தியநின்
பாதங்க ளேத்திப் பணியாவேல் பல்பிறப்பும்
ஏதங்க ளெல்லாம் எமக்கு..(2218)

ஸ்ரீ பார்த்தசாரதி - திருஅல்லிக்கேணி
சிறந்தார்க் கெழுதுணையாம் செங்கண்மால் நாமம்
மறந்தாரை மானிடமே வையேன் - அறந்தாங்கும்
மாதவனே என்னும் மனம்படைத்து மற்றவன்பேர்
ஓதுவதே நாவினா லுள்ளு..(2225)
*** 

நாடு நலம் பெறுதற்கு 
நாராயணன் திருவடிகள் காப்பு

ஓம் ஹரி ஓம் 
* * *

7 கருத்துகள்:

  1. அன்பின் ஜி
    அழகிய படங்களின் தரிசனம் காண வைத்தமைக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  2. தரிசனம் செய்து கொண்டேன். விஜயதசமி வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. விஜயதசமி வாழ்த்துகள்! சொல்மாலை அருமை! இதில் அன்பே தளியா பாடலை தினமும் சொல்வதுண்டு..தனம் தரும் எனும் அபிராமி அந்தாதிப் பாடலுடன்...

    கீதா

    பதிலளிநீக்கு
  4. பதிவிலுள்ள கோயியல்களுக்குச் சென்றுள்ளேன் ஐயா.

    பதிலளிநீக்கு
  5. அபிராமி அந்தாதியை மீண்டும் ஒரு முறை நினைக்க வைத்தது

    பதிலளிநீக்கு
  6. அழகிய படங்களும், தேர்ந்த பா மாலைகளும் அழகுக்கு அழகு சேர்க்கின்றன. 'நித்திலத்து நாண்மலர் கொண்டு' இங்கு 'க்' வரும் என்று தோன்றவில்லை.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..