நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், ஜனவரி 07, 2014

மார்கழிப் பனியில் - 23

சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள்
ஸ்ரீஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவை
திருப்பாசுரம் - 23. 

 
மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும் 
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து 
வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி 
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப் 
போதருமா போலே நீ பூவைப் பூவண்ணா உன் 
கோயில் நின்று இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய 
சீரிய சிங்காசனத்து இருந்து யாம் வந்த 
காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்!..
  
ஓம் ஹரி ஓம்

ஸ்ரீ மாணிக்கவாசகப் பெருமான் அருளிய
திருவெம்பாவை
திருப்பாடல்கள்: 13 - 14


பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்
அங்கங் குருகினத்தால் பின்னும் அரவத்தால்
தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த
பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்துநம்
சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக்
கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப்
பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோர்  எம்பாவாய். - 13

காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாமாடச்
சீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருள்ஆ மாபாடிச்
சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதி திறம்பாடி அந்தம்ஆ மாபாடிப்
பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்
பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய். - 14
 

திருச்சிற்றம்பலம்

ஆலயதரிசனம்

திருஐயாறு
  

இறைவன் - ஸ்ரீ பஞ்சநதீஸ்வரர், செம்பொற்சோதி, ஐயாறப்பர்
அம்பிகை - ஸ்ரீ தர்மசம்வர்த்தனி, அறம் வளர்த்த நாயகி
தல விருட்சம் - வில்வம்
தீர்த்தம் - சூரிய புஷ்கரணி, காவிரி.

அதிகார மூர்த்தியான - நந்தியம்பெருமான்  இப்பதியினை அடுத்த அந்தணக் குறிச்சியில் சிலாத முனிவருக்குப் புத்திரனாகத் தோன்றி -  ஏழு கோடி ருத்ர ஜபம் செய்ததனால் மகிழ்ந்த - இறைவனால் புனித நீராட்டுவிக்கப்பட்ட திருத்தலம். 

அதுவே ஐந்து தீர்த்தங்களாகப் புகழ் பெற்றன என்பர் பெரியோர்.
அதனாலேயே - ஐயாறு - திரு ஐயாறு.

காசிக்கு இணையாக - தமிழகத்தில் உள்ள முக்தி ஸ்தலங்களுள் - முதன்மையானது. 


அறம் வளர்த்த நாயகியாகிய  அம்பிகையின் கருணை அளவிடற்கரியது. 

சுசரிதன் எனும் பாலன் யம பாசத்திலிருந்து மீட்கப்பட்ட திருத்தலம். 
திருக்கடவூர் போலவே - இங்கும் ஈசன் வெளிப்பட்டு சுசரிதனை ஆட்கொண்டார்.

தெற்கு கோபுர வாசலில் உள்ள ஆட்கொண்டார் சந்நிதி விசேஷமானது.

திருக்கடவூரில் வாழ்ந்தவரான குங்கிலியக் கலய நாயனார் - ஆட்கொண்டார் சந்நிதிக்கு எதிரில் ஏற்படுத்திய குங்கிலிய குண்டம்  - இன்றளவும் கமழ்ந்து கொண்டிருக்கின்றது. 

அன்பர்கள் - ஆலயத்தினுள் நுழையும் முன் இந்த குண்டத்தில் குங்கிலியத் தூளைப் போட்டு வழிபட்டுகின்றனர்.

வள்ளி தெய்வயானையுடன் விளங்கும் திருமுருகன் தனது திருக்கரத்தில் வில்லும் அம்பும் ஏந்தியவாறு திருவருள் பொழிகின்றான்.


அப்பர் பெருமானுக்கு  - இறைவனும் அம்பிகையும் திருக்கயிலாய தரிசனம் அருளிய திருத்தலம்.

சுந்தரமூர்த்தி சுவாமிகள் இறைவனைத் தரிசிக்க வந்த போது, காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஓடம் செலுத்தி அக்கரைக்குச் செல்வதற்கு  யாரும் இல்லாததால் ஓ என ஓலமிட்டார். 

அதனைத் தம் திருச்செவியில் வாங்கிய விநாயகப் பெருமானும் - பெருங் குரலெடுத்து ஓலமிட்டு அருளினார். அந்த அளவில், சுந்தரர் அக்கரைக்குச் செல்வதற்கு,  காவிரி வழிவிட்டு ஒதுங்கி நின்ற அற்புதம் நிகழ்ந்த திருத்தலம்.

ஓலமிட்டருளிய விநாயகர் - ஆட்கொண்டார் சந்நிதியில் விளங்குகின்றனர்.


ஐயாறப்பர் திருக்கோயிலுள் தென்புறம் அப்பர் சுவாமிகள் தரிசனம் பெற்ற தென்கயிலை திருக்கோயிலும் , 

வடபுறம் மாமன்னன் ராஜராஜ சோழனின் மனையாள் ஒலோக மாதேவியார் எடுப்பித்த ஒலோக மாதேவீச்சரம் திருக்கோயிலும் என - 

ஒரே தலத்தில் மூன்று திருக்கோயில்கள் விளங்குகின்றன. 

மாணிக்கவாசகப் பெருமான் - ஐயாறதனில் சைவன் ஆகியும் -  என்று  பாடிப் பரவிய திருத்தலம். 
 
இரண்டாம் திருச்சுற்றில், வில்வ மரத்திற்கு அருகில் ஸ்ரீமஹாலக்ஷ்மியின் சந்நிதி உள்ளது.  வெள்ளிக் கிழமை தோறும் மஹாலக்ஷ்மி எழுந்தருளி வலம்  வருகின்றனள்.

அம்மையப்பனுடன் - நந்தியம்பெருமான்
பங்குனியில் நந்தியம்பெருமான் - சுயசாம்பிகை  திருக்கல்யாண உற்சவமும், சித்திரையில்  சப்த ஸ்தானப் பெருவிழா உற்சவமும் பலநூறு ஆண்டுகளைக் கடந்து - இன்றும் சிறப்பாக நடைபெறுகின்ற பெருமையை உடைய திருத்தலம்.

சித்திரையில் நிகழும் சப்த ஸ்தானப் பெருவிழாவின் முதன்மையான திருத் தலம்.


அருள்மிகு ஐயாறப்பர் அறம்வளர்த்த நாயகியுடன்  கண்ணாடிப் பல்லக்கிலும், மாப்பிள்ளையாகிய நந்தியம்பெருமான்  சுயசாம்பிகையுடன்  வெட்டிவேர்ப் பல்லக்கிலும் -  

திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிக்குடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம் - எனும் தலங்களுக்கு எழுந்தருள்வர். 

அப்போது அந்தந்த ஊர்களின் இறைவரும்  மக்களும் எதிர்கொண்டு அழைத்து தனித்தனி பல்லக்குகளில் உடன்தொடர மறுநாட்காலை ஐயாற்றுக்கு எழுந்தருளுவர். இதை ஏழூர் திருவிழா - சப்த ஸ்தானத் திருவிழா என்பர்.

அருணகிரி நாதர்  - சப்த ஸ்தானப் பெருவிழாவினைத் தரிசித்து ஏழூர்களையும் இணைத்துத் திருப்புகழ் அருளியுள்ளார்.


ஆடி அமாவாசை அன்று  -  சுவாமியும் அம்பிகையும் ரிஷப வாகனத்தில் வெகு சிறப்பாக எழுந்தருளி - அப்பர் பெருமானுக்கு திருக்கயிலைத் திருக்காட்சி நல்குவர். 


அது சமயம் - ஆயிரக் கணக்கான அன்பர்கள் கூடி - அப்பர் பெருமான் அருளிய தேவாரத் திருப்பாடல்களைப் பாராயணம் செய்து வழிபடுவர்.

திருஞான சம்பந்தப் பெருமானின் திருவாக்கின்படி இன்றும், இசை வெள்ளம் பெருக்கெடுத்தோடும் திருத்தலம்.


சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவரான ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் வாழ்ந்து இறைவனுடன் கலந்த தலம். ஆண்டு தோறும் தை மாதத்தின் பஞ்சமி திதியில் அவருடைய ஆராதனை விழா சிறப்புடன் நிகழ்வது அனைவரும் அறிந்ததே!..

தஞ்சை  - அரியலூர் சாலையில், காவிரிக்கு வடகரையில் அமைந்த திருத் தலம். தஞ்சை பழைய பேருந்து நிலையத்திலிருந்து - திரு ஐயாற்றுக்கு நிறைய பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

வேந்தாகி விண்ணவர்க்கும் மண்ணவர்க்கும் நெறிகாட்டும் விகிர்தனாகிப்
பூந்தாம நறுங்கொன்றை சடைக்கணிந்த புண்ணியனார் நண்ணுங்கோயில்
காந்தாரம் இசையமைத்துக் காரிகையார் பண்பாடக் கவினார்வீதித்
தேந்தாம் என்றரங்கு ஏறிச்சேயிழையார்நடமாடுந் திருவையாறே!..(1/130)
திருஞானசம்பந்தர்.

ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே
உலகுக்கு ஒருவனாய் நின்றாய் நீயே
வாச மலரெலாம் ஆனாய் நீயே
மலையான் மருகனாய் நின்றாய் நீயே
பேசப் பெரிதும் இனியாய் நீயே
பிரானாய் அடியென்மேல் வைத்தாய் நீயே
தேச விளக்கெலாம் ஆனாய் நீயே
திருவையாறு அகலாத செம்பொற் சோதீ!..(6/38)
திருநாவுக்கரசர். 

சீரார் திரு ஐயாறா போற்றி!..
சிவாய திருச்சிற்றம்பலம்

18 கருத்துகள்:

  1. திருவையாறு என்னும் பெயரினைக் கேட்டாலே உள்ளம் எல்லாம்
    இனிக்குது ஐயா.
    மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      நம்முடைய ஊராயிற்றே.. உள்ளம் இனிக்கத்தானே செய்யும்.
      தங்கள் வருகைக்கும் அன்பின் கருத்துரைக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. காசிக்கு இணையாக - தமிழகத்தில் உள்ள முக்தி ஸ்தலங்களுள் - முதன்மையானது. //

    கண்களையும் கருத்தையும் நிறைத்த அற்புதமான மார்கழிப்பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..வாழ்த்துகள்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கும் அன்பின் கருத்துரைக்கும்
      வாழ்த்துரைக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. மிக மிக அருமை.... நன்றி ஐயா...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும்
      அன்பின் கருத்துரைக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. மன மகிழ்வைத் தரும் சிறப்பான பகிர்வுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்
    ஐயா .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும்
      இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. ஐயாறப்பர் கோவில் பர்ரியாய் செய்திகள் அரூமை. பகிர்விற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கும் அன்பின் -
      கருத்துரைக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. கண்களையும் கருத்தையும் நிறைத்த அற்புதமான மார்கழிப்பகிர்வு.

    //காசிக்கு இணையாக - தமிழகத்தில் உள்ள முக்தி ஸ்தலங்களுள் - முதன்மையானது. //

    பாரட்டுக்கள். நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கும் அன்பின் கருத்துரைக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. திருவையாறு.... கேட்கும்போதே தியாகைய்யர் நினைவுக்கு வருவாரே.....

    சிறப்பான தலம் பற்றிய தகவல்களும் படங்களும் பகிர்ந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் திரு.வெங்கட்..
      தங்களின் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி!...

      நீக்கு
  8. அப்பருக்கு காவிரி வழி விட்டு கொடுத்த அற்புதம் அறியவில்லையே, மிக்க நன்றி அனைத்தும் சிறப்பான பகிர்வுகளே.

    நன்றி ......! தொடர வாழ்த்துக்கள்.....!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சகோதரி..
      தங்களின் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி..

      நீக்கு
  9. வணக்கம் வாழ்க வளமுடன்,அருமையான பாடல் பகிர்வு. திருவையாறு கோவில் அந்த கோயில் பற்றிய செய்திகள் எல்லாம் அழகாய் பகிர்ந்து இருக்கிறீர்கள்.
    வாழ்த்துக்கள்.
    படங்கள் எல்லாம் மிக அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் வருகையும் அன்பின் கருத்துரையும் கண்டு மிக மகிழ்ந்தேன்..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..