நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

வாழி அவன்தன் வளநாடு மகவாய் வளர்க்கும் தாயாகி

ஊழி உய்க்கும் பேருதவி ஒழியாய் வாழி காவேரி!..


வெள்ளி, ஜனவரி 17, 2014

ஸ்ரீ ஹரிஹர புத்ரன் - 11

(அடுத்தடுத்து - மார்கழிப் பதிவுகளை - பதிவிட்ட சூழ்நிலையில் ஸ்ரீ ஐயப்பனின் வரலாற்றினைத் தொடர இயலவில்லை. ஐயனின் கருணையைத் துணை கொண்டு - மேலும் தொடர்கின்றது)

முந்தைய பதிவு - - ஸ்ரீ ஹரிஹர புத்ரன் - 10

உதித்தெழுந்த செங்கதிர் நாணங்கொண்டு ஒதுங்கி நின்றான். ஏன்!?.. 

மணிகண்டனுக்கு கல்வி கற்பித்த குருநாதரின் பல்லக்கு முன்னே சென்றது. 

அதைத் தொடர்ந்த -  பல்லக்கினுள் ஆயிரங்கோடி சூரியன் போல  ஐயன் வீற்றிருந்தான்.   

பட்டினப் பிரவேசமாகும் முன் நகர எல்லையிலிருந்தே - கோலாகலக் கொண்டாட்டங்கள்!.. ஆரவாரங்கள்!..


வீதியின் இருமருங்கிலும் வண்ணமயமான தோரணங்கள் இளங்காற்றில் அசைந்தாடி - ஐயனை - வருக வருக!.. என்று வரவேற்றுக் கொண்டிருந்தன. 

அன்பு கொண்ட மக்கள் - திரு விளக்கேற்றி வைத்து - நிறைமங்கலச் சின்னங்களுடன் புன்னகை சுமந்து நின்றனர். 

''..நீ மட்டும் பார்த்துக் கொண்டிருந்தால் எப்படி!..'' - என்று சூரியனைக் கோபித்துக் கொண்டன -  நீர் கொண்ட மேகங்கள். 

அவை ஒன்றாகத் திரண்டு வந்து ஐயனின் முகங்காண முந்தி நின்றன. 

இதை எல்லாம்  நோக்கிய வாயு  - அவனும் விரைந்து வந்து மேகங்களுடன் உரசிக் கொள்ள - பந்தளத்தின் வீதிகளில் பன்னீர்ச் சாரல்!..

மணிகண்டனைக் கண்டதும் மக்களுக்கு மட்டுமா - ஆனந்தம்!..

கொட்டாரத்தின் குதிரைகள் இருப்பு கொள்ளாமல் தவித்தன. தாவிக் குதித்தன.

எங்கும் - ''..விஜயீபவ!..'' - எனும் கோஷங்கள்..


அரண்மனையின் வாசலில் - மங்கல ஒலியுடன் வேத கோஷங்களும் முழங்கின. தங்கத்தாலான நெற்றிப் பட்டம் - ஒளி வீச  - அப்படியும் இப்படியும் அசைந்து கொண்டிருந்த ராஜ குஞ்சரம் மணிகண்டனுக்காகக் காத்திருந்தது. 

குரு நாதர் அமர்ந்திருந்த பல்லக்கு அரண்மனையின் தோரண வாயிலை அடைந்தது. மன்னரும் மற்றவர்களும் பூரண கும்ப மரியாதையுடன் அவரை வரவேற்றனர். 

அடுத்த சில நொடிகளில் -  மணிகண்டன் அமர்ந்திருத பல்லக்கு - நெருங்கியது தான் தாமதம்!.. வாசமிகு மலர்களைத் தூவி - வாராது வந்த மாமணியை வரவேற்று ஆரவாரித்தனர்.

குருநாதர்  -  பந்தள ராஜனின் கைகளில் - மணிகண்டனை ஒப்படைத்தார்.

தாயையும் தந்தையையும் வலம் செய்து வணங்கினான் மணிகண்டன்.

ஆராஅமுதினை - ஆரத் தழுவிக்கொண்டார்  - அரசர்.

வந்தவர்க்கெல்லாம் - பொன்னும் பொருளும் வாரிக் கொடுக்கப்பட்டது. பின்னும் வயிறார உண்டு மகிழ்ந்த மக்கள் வாயார வாழ்த்திச் சென்றனர்.

இப்படி - ஆயிரம் ஆயிரமாய் மக்கள் ஆனந்த வெள்ளத்தில் அழுந்திக் களித்துக் கொண்டிருக்க - ஒருவன் மட்டும்,

புழுங்கித் தவித்து - வியர்வையில் குளித்துக் கொண்டிருந்தான்.

அவன் -  பிரதான மந்திரி.  அவனுடைய இதயத்தில் - இருட்டு மூலை என்றில்லாமல் - இதயமே - இருட்டாகிக் கிடந்தது. 

எல்லாம் காலம் செய்த கோலம்.

அடுத்த சில தினங்களில் - பந்தள மன்னர் - அரசியிடம் சொன்னார் -  நமது குமாரனுக்கு முடி சூட்டு விழா!.. என்று.

அரசியார் ஸ்ரீமதி ராஜ்யலக்ஷ்மி தேவி அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை.

''..இதைத்தானே நானும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். நமது செல்வன் எப்போது செங்கோல் ஏந்தி சிம்மாசனத்தில் அமர்வான் என்று!.. இன்றாவது - இதயம் குளிரும்படிக்கு இன்சொல் கூறினீர்களே!..'' - என்று அகமகிழ்ந்தாள்..

அதன் பின்  - பட்டாபிஷேகப் பெருவிழாவுக்கான  வேலைகளில் ஆர்வமாக அனைவரும் ஈடுபட்டவேளையில் - 

குருட்டு மதியும் இருட்டு மனமும் கொண்ட  மந்திரி - அரசியாரின் காதுகளில் விஷத்தை ஊற்றினான்.

''.. நீங்கள் ஆயிரம் தான் கூறினாலும் - மணிகண்டன் என் பிள்ளை தான். இனியொரு முறை விஷமமாக ஏதேனும் கூறினால் - ராஜ துரோகி எனும் பட்டத்துடன் நாடு கடத்தப்பட வேண்டியிருக்கும்!..''

''.. மகாராணி!. தயவு செய்து சிந்தியுங்கள். ஆண்டாண்டு காலமாக அரச பரம்பரையினர் வீற்றிருந்த சிம்மாசனத்தில் - எங்கிருந்தோ கிடைத்த வனவாசி அமர்வதா!..  தங்கள் உதிரத்தில் உதித்த குலக்கொழுந்து அமர்வதா!.. நீங்கள் சற்று ஒத்துழைத்தால் போதும். செங்கோல் தங்கள் மணி வயிற்றில் பிறந்தவனுக்கு!.. சரக்கோல் அங்கே ஆற்றங்கரையில் கிடைத்தவனுக்கு!.. ''

மகராணியின் சிந்தை கலங்கியது. செவ்விழிகளுக்குள் மேலும் குருதி பாய்ந்தது. புருவங்கள் நெரிந்தன. 

''..என் மனம் குழம்புகின்றது. என்னவோ செய்யுங்கள்!.'' - இதைச் சொல்வதற்குள் மகராணியின் மனம் தவித்தது. நா உலர்ந்தது. 

''..மனம் குழம்ப வேண்டும். அப்போது தான் தெளிவு பிறக்கும். இனி நீங்கள் கவலை ஏதும் கொள்ள வேண்டாம்!..'' - பிரதான மந்திரியின் முகத்தில் பிரகாசம். 

அவனை முன்னிட்டு - காலம் தன் கையிலிருந்த சதுரங்கத்தில் காய்களை வேகமாக நகர்த்தியது.

முதல் வேலையாக - மாந்த்ரீகத்தில் கரைகண்ட ஒருவனைத் தேடிச் சென்றான்.  இரவின் முன் ஜாமத்தில் தீட்டப்பட்ட நாடகம்    - நள்ளிரவில் அரங்கேறியது.

நாடகத்தின்  - மையக்கருத்து என்ன!?..

மணிகண்டனின் மீது - பில்லி சூனியம் ஏவப்பட்டது. 

விடிவதற்குள் - வேலையை முடித்தால் - உங்களுக்கு நிரந்தர விடுதலை என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் பூத ப்ரேதங்களும் பேய் பிசாசுகளும் அவிழ்த்து விடப்பட்டன.

நல்ல பொழுது விடிந்தது என்று மந்திரி - ஓடினான் மாந்த்ரீகனின் இல்லம் தேடி!.. அங்கே - அவன் கண்ட காட்சியில் அவனது கல் மனமும் அதிர்ந்தது. 

மாந்த்ரீகன்  - சின்னாபின்னமாகி - இரத்தச் சகதியில் கிடந்தான்.


''மணிகண்டன் சாமான்யன் அல்ல. அவன் தெய்வப் பிறப்பு. நீ கொடுத்த பொன்னும் மணியும் என் கண்களை மறைத்து விட்டன. காலங்காலமாக என்னிடம் அடிமைப்பட்டுக் கிடந்த பூத ப்ரேதங்களுக்கு அவன் விடுதலை கொடுத்து விட்டான். சுதந்திரமான அவைகள் ஆக்ரோஷத்துடன் திரும்பி வந்து என்னை அழித்து விட்டன. நீ மணிகண்டனைப் பகைத்துக் கொள்ளாதே!..''

என அறிவுரை கூறிய மாந்த்ரீகன், தான் பறித்த குழியில் - தானே விழுந்தான்.   

ஆனாலும், மந்திரியின் காதுகளில் அவை விழவில்லை. நாடகத்தின் அடுத்த காட்சியாக - அவன் தேடிச் சென்றது - புற்றுக்குள் கையை விட்டுப் புதையல் தேடும் பாம்புப் பிடாரனிடம்!..

இவன் சென்ற நேரம் - அவன் கொடும் நாகங்களுடன் கொஞ்சி விளையாடிக் கொண்டிருந்தான்.  குணம் மாறாத கொடியவர்களின் கைகளில் பணம்  இடம் மாறியது.

சதி வேலைகளுக்கு உகந்ததாக - இரவும் வந்து சூழ்ந்தது. மந்திரியின் மனதைப் போல!..

இரவு உணவு - கவனமுடன் பரிசோதிக்கப்பட்ட பின் - பரிமாறப்பட்டது. 

உணவு அரங்கத்தில் - புன்னகை பூத்தவனாக வளைய வந்த மந்திரி - புற்று அரவினுக்குச் சமமானவன் என்பதை உணராத  மன்னர் - தன் மக்களுடனும் மனைவியுடனும் மனம் மகிழ்ந்து உண்டார்.

மந்திரி மதி நுட்பத்துடன்  - மணிகண்டன் அருந்தும் பாலில் நஞ்சினைக் கலந்தான். நேரம் ஆயிற்று . பிள்ளைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த மன்னருக்கும் உறக்கம் வந்தது. 

பஞ்சணையில் சாய்ந்த மணிகண்டனை உச்சி முகர்ந்து முத்தம் கொடுத்தார்.

மகனின் காதுகளில் தேனூறும் படிக்கு ஸ்ரீபஞ்சாட்சர மந்திரத்தை ஓதி - திருநீறு அணிவித்தார். 

அலங்காரத் திருவிளக்குகளின் சுடர்களைக் குளிர்வித்தார். மணிகண்டனின் சயன அறையிலிருந்து வெளியேறினார்.

தூக்கம் இமைகளைத் தழுவிய வேளையில் மணிகண்டனுக்கு -  தொண்டையில் ஏதோ உருள்வது போலிருந்தது. 

மணிகண்டன் அருந்திய பாலில் கலக்கப்பட்டிருந்த விஷம் - கண்டவுடன் கொல்லும் திறன் படைத்திருந்த திட்டி விடம் எனும் நாகத்தினுடையது!.. 

அது தன் வேலையைத் தொடங்கியது.

நா வறண்டது. வெகுவாக வியர்த்தது. நீர் அருந்தலாம் என நினைத்தால் - கைகளை அசைக்க முடியவில்லை. யாரையும் அழைக்கலாம் என்றால் குரல் எழவில்லை. 

தனது மேனியில் பூத்த வியர்வைத் துளிகளால் -  தன் மேனி புண்ணாவதை உணர்ந்தான் மணிகண்டன். 

அழகான திருமேனியில் ஆங்காங்கே குமிழ்களாக - கொப்புளங்கள் உருவாகி - உடைந்து சிதறின. 

தன் வசம் இழந்து  மயங்கினான் - மணிகண்டன்.

ஜோதிக்கும் ஜோதியான சுந்தரவதனனின்  நிலையைக் கண்ட - தூண்டாமணி விளக்கின் சுடர் அங்கும் இங்கும் படபடத்தது.

ஓம் ஹரிஹர சுதனே சரணம்!.. சரணம்!..

12 கருத்துகள்:

 1. தூண்டா மணி விளக்கின் சுடர் போல் நானும் படபடத்துத்தான் காத்திருக்கிறேன்,
  நன்றி ஐயா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்களின் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் நன்றி!..

   நீக்கு
 2. தான் பறித்த குழியில் தானே விழுவதை பலர் அறிவதில்லை... மேலும் அறிய ஆவலுடன் தொடர்கிறேன் ஐயா... நன்றி... வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் தனபாலன்..
   தங்களின் வருகையும் -
   இனிய கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி!..

   நீக்கு
 3. கதையை அருமையான நடையில் எழுதியிருக்கிறீர்கள். நன்றி பகிர்விற்கு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்களின் வருகையும் அன்பின்
   இனிய கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

   நீக்கு
 4. ஜோதிக்கும் ஜோதியான சுந்தரவதனனின் நிலை படபடக்கவைக்கிறது..!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்களின் வருகையும் கருத்துரையும் மிக்க மகிழ்ச்சி..

   நீக்கு
 5. அருமையான நடை.... மற்ற பகுதிகளையும் விரைவில் படிக்கிறேன்.....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வெங்கட்..
   தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

   நீக்கு
 6. ஜோதிக்கும், ஜோதியான சுந்தரவதனின் நிலை படபடக்க வைக்கிறது.
  கதை தெரிந்தாலும் நீங்கள் சொல்வதை படிக்கும் போது மனம் துடிக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி..
   ஸ்வாமியே சரணம் ஐயப்பா..

   நீக்கு