நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், டிசம்பர் 23, 2013

மார்கழிப் பனியில் - 08

சூடிக்கொடுத்த சுடர்க்கொடி  
ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை - 08

கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு
மேய்வான் பரந்தன காண் மிக்குள்ள பிள்ளைகளும் 
போவான் போகின்றாரைப் போகாமல் காத்து உன்னைக் 
கூவுவான் வந்து நின்றோம் கோதுகலம் உடைய 
பாவாய் எழுந்திராய் பாடிப்பறை கொண்டு 
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய 
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால் 
ஆவாவென்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்!..

ஓம் ஹரி ஓம்

ஆலய தரிசனம்

உறையூர்


வெகு காலத்திற்கு முன் -

உறையூரை ஆட்சி செய்த மன்னன்  - மக்கள் நலத்தில் சிறிதும் கவனம் இன்றி இருந்தான். நாட்டில் அநியாயமும் அக்கிரமமும் கேட்பார் இல்லாததால் தலை விரித்தாடின.

அச்சமயத்தில் காவிரியின் கரையில் முனிவர் ஒருவர் - மலைக் கோட்டை  ஸ்ரீதாயுமானவ ஸ்வாமியின் நித்யவழிபாட்டிற்காக, பூவனம் அமைத்து பெருங் கவனத்துடன் அதனைப் பராமரித்து வந்தார். வனப்பு மிக்க மலர்கள் வழிச் செல்வோர் கவனத்தைக் கவர்ந்தன. இப்படியிருக்க

ஒருநாள் - விடியற்காலையில் மலர் பறிப்பதற்குச் சென்ற முனிவர் நந்தவனம் பாழாகிக் கிடப்பதைக் கண்டு மனம் துடித்தார். யார் இத்தகைய அடாத செயலைச் செய்திருப்பர் - என்று தவித்தார். இச்செயல் மேலும் சிலநாட்கள் தொடரவே -  

பெரும் முயற்சியுடன்அரண்மனைப் பணியாளர்கள் நந்தவனத்தில் அத்து மீறி நுழைந்து பூத்திருக்கும் மலர்களை எல்லாம் பறித்துச் செல்வதைக் கண்டறிந்தார்முனிவர் - அவர்களை அணுகி விவரத்தைக் கூறினார்

ஆனால், அவர்களோ எல்லை மீறிய அகம்பாவத்துடன் - ''..இது அரசியார் கூந்தலுக்கு!.. - என்றனர். அவர்களுக்கு நல்ல புத்தி கூறமுயன்ற முனிவர் அவமானப் படுத்தப்பட்டார்

பொழுது விடிந்ததும் முனிவர் அரண்மனைக்குச் சென்று  சிவபூஜைக்கான பூக்களைப் பறித்ததுடன் பூவனத்தையும் சிதைத்த கொடுமையைக்கூறி நீதி வேண்டி நின்றார்

ஆனால், முறைப்படுத்த வேண்டிய மன்னன் அரண்மனைப் பணியாளர்களைக் காட்டிலும் கீழானவனாக - ஏளனமாகச் சிரித்து எள்ளி நகையாடினான்

மனம் வருந்திய முனிவர்- எல்லாம் அறிந்தவனாகிய  எம்பெருமானிடம் முறையிட்டு நின்றார்.

''..ஐயனே!.. தள்ளாத வயதுடைய என்னைத் தள்ளி புறம் வைத்து ஏளனம் செய்த செயலை  ஒரு புறம் தள்ளி விட்டாலும் - பெருமானின் பூஜைக்கு மலர்கள் இன்றி ஆனதே!..''- என வருந்தினார்.  

இறைவனோ - ''..வழிபாட்டிற்கு எனநீர் விட்டு - நீர் வளர்த்த  மலர் வனத்தினைச் சிதைத்ததையும் விட  அடியார் தம் செயலைக் கண்டு சிரித்து இகழ்ந்ததை மன்னிக்க இயலாது. பூத்துக் குலுங்கிய வனத்தினை விடவும் பொன்னாக மிளிர்ந்த உம்முடைய மனமே எமக்குப் பெரிது!.. அதனைப் பாழ்படுத்திய பாதகனை ஒறுப்பேன். நீதி பரிபாலனம் செய்யாது கள்வர்களுக்குத் துணை போன கொடுங்கோலனைத் தொலைத்துத் தீவினையை அறுப்பேன்!..'' - என சினங்கொள்ள ,

அந்த அளவில் - மண்மாரி பொழிந்தது.  
மூடர்களாலும் மூர்க்கர்களாலும்  ஆளப்பட்ட நாடு மண்மேடாகிப் போனது

நாட்டில் எஞ்சியிருந்த அறங்கள்  ஒடிச் சென்று ஸ்ரீதாயுமானவ ஸ்வாமியின் திருவடிகளில் தஞ்சமடைந்தன. ஆங்காரமாக வெளிப்பட்ட அம்பிகை தீவினையை அழிக்கத் திருவுளங்கொண்டாள்.  

மன்னனின் மனதிலும் அவனைச் சார்ந்திருந்தவர்களின் மனதிலும் மண்டிக் கிடந்த தீய குணங்கள் எல்லாம் ஓருருவாகி நின்று அம்பிகையை எதிர்க்க முயன்றன

சுகிர்த குணசாலி - பரிபாலி - அனுகூலிதிரிசூலி என விளங்கிய அம்பிகை அத் தீவினைகளைத் தன் காலடியில் தள்ளி மிதித்தாள்

வேகம் குறையாதவளாக - வெட்ட வெளியில் அமர்ந்தாள். மண்ணுக்கும் விண்ணுக்கும் தாயான தயாபரியின் திருமேனியில் மண் பட்டது.  

ஈசனின் ஆணைக்குட்பட்டு மண் மழையைப் பொழியச் செய்த காலதேவன் இதைக் கண்டு அஞ்சி நடுங்கினான். அத்துடன் மண்மாரியும் ஓய்ந்தது.

அனைத்தையும் உணர்ந்தவளான அன்னை ஆங்காரம் தணிந்தவளாய் அமைதி கொண்டாள்.

அங்கேயே வீற்றிருந்து - மக்களைக் காக்க திருவுளம் கொண்டாள்.

சகல உயிர்களும் அன்னையைப் போற்றித் தொழுது வணங்கி நின்றன.


அன்று முதல் வெட்டவெளியிலே அமர்ந்து அருளாட்சி செய்து வருகின்றாள்.

இத்திருத்தலத்தில் - மனம் வாடித் தொழுவோர் தம் துயரங்கள் தொலைகின்றன. அடாத செயல்களினால் அச்சமுற்று  அன்னையைத் தஞ்சமடைந்தோர்க்கு  அன்னை பெருங்காவலாகத் திகழ்வது நிதர்சனம்.

இத்திருக்கோயில் திருச்சி மாநகரின்  - உறையூரில் அமைந்துள்ளது
மத்திய பேருந்து நிலையத்திலிருந்து உறையூர் வழியே செல்லும் வழித் தடத்தில் - நாச்சியார் கோயில் பேருந்து நிறுத்தத்தில் இருந்து சற்று தொலைவில் அமைந்துள்ளது திருக்கோயில்.

சூலங்கபாலம் கையேந்திய சூலிக்கு 
நாலாங்கரமுள நாகபாசாங்குசம்
மாலங்கயன் அறியாத வடிவுக்கு 
மேலங்கமாய் நின்ற மெல்லியளே!..
திருமந்திரம்.

வினை தீர்ப்பாள் வெக்காளி!..
துணையிருப்பாள் வெக்காளி!..

ஓம் சக்தி ஓம்!.. 

14 கருத்துகள்:

  1. வெக்காளி அம்மன் கோயிலுக்குச் சென்றிருக்கின்றேன்
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. ஆலய வரலாறு மிகவும் அருமை ஐயா... ஆலய சிறப்புகளுக்கு நன்றி...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      இனிய வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. அருமையாகக் கதை சொல்கிறீர்கள். அதற்கு பாராட்டுக்கள். வெக்காளி அம்மன் கோவில் மிகவும் மாறி வருகிறது. முன்பெல்லாம் கோவிலில் இந்தக் கதை ஓவியமாகத் தீட்டப் பட்டிருக்கும். இப்போது இல்லை. தற்போது வெக்காளி அம்மனுக்கு கூரை வேண்டுமோ இல்லையோ, அங்கே பூசனை செய்வோருக்கு அவசியம் தேவை என்பது போல்தலைக்கு மேல் விதானம் வந்து விட்டது. அம்மனைச் சுற்றிய நான்கு பக்கங்களும் மட்டும் திறந்து இருக்கிறது. கதைகளை விட்டு அம்மன் தரிசனம் போதும் என நினைக்கிறார்களோ என்னவோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்கள் பாராட்டுரைக்கு நன்றி..
      தாங்கள் கூறுவது மிகச் சரி..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  4. ஆண்டாள் திருப்பாவையுடன் எங்கள் ஊர் வெக்காளியம்மனைப்பற்றி சிறப்பித்துச் சொல்லியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.

    அடியேன் பலமுறை போய் வந்துள்ள கோயில் வெக்காளியம்மன் கோயில் ;)

    பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்களின் மகிழ்ச்சி எனக்கும் மகிழ்ச்சியே..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  5. திருப்பாவையோடு திருச்சி – உறையூர் வெக்காளி அம்மன் கோயில் பற்றி சொன்னீர்கள். அய்யா GMB அவர்கள் சொன்னதையே நானும் வழிமொழிகின்றேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      ஐயா GMB அவர்களின் கருத்துரையினை வழி மொழிவதற்கு நன்றி..
      தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு
  6. அருமையான ஆலயம் ...தரிசனம் செய்வித்தமைக்கு நன்றிகள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      இனிய வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி..

      நீக்கு
  7. சமீபத்தில் தான் இக்கோவிலுக்குச் சென்று வந்தேன். எல்லா இடங்களிலும் கூரை வந்துவிட்டது - அம்மனின் தலைக்கு மேல் கூட கூரை கட்ட முயற்சி செய்ய, அது தோல்வியில் முடிந்தது என்றும் சொல்வார்கள்......

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தாங்கள் சொல்வது சரி..
      மேலே கூரை கட்ட முயற்சி செய்தனர்.
      ஆனால் நடக்கவில்லை..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..