நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

துலா ஸ்நானம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
துலா ஸ்நானம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, நவம்பர் 16, 2018

மயிலாடுதுறை

துலா மாதமாகிய ஐப்பசியின் முதல் நாள் முதல்
காவிரி நங்கையொடும் கங்கையாள் கூடிக் கலந்து
தன் பாவங்களைப் போக்கிக் கொள்வதாக ஐதீகம்...

தன்னால் தான் புவி மாந்தரின் பாவங்கள் தொலைவதாக
கங்கையின் மனதில் இறுமாப்பு தோன்றியது...

அதுவே பெரும் பாரமாகி கங்கையை அழுத்த
செய்வதறியாது கலங்கினாள் - கங்கை...

கங்கைக்கு பாவ விமோசனம் அருளினான் பரமன்...

அது கொண்டு
வடக்கிருந்த கங்கையாள்
தெற்கே ஓடிவந்து காவிரியில் மூழ்கி
தன் வினை நீங்கப் பெற்றாள்...


ஒருசமயம் -
அம்பிகை மயிலாக உருமாறி சிவபூஜை செய்தனள்...

ஐயன் மனங்கனிந்து
தானும் மயிலுருக் கொண்டு
அம்பிகையுடன் ஆடிக் களித்தனன்..
அகமகிழ்ந்து அவளுடன் கூடிக் களித்தனன்...

மயிலுருவாக இருந்த அம்பிகையுடன்
தானும் மயிலுருக்கொண்டு
ஆடிக்களித்த - அதனால்,
தலம் - மயிலாடுதுறை என்றாகியது...

ஐப்பசியின் முப்பது நாட்களும்
காவிரியுடன் கங்கையும் உறைவதால்
மயிலாடுதுறையின் காவிரியில்
ரிஷபக் கட்டத்தில் நீராடி முடித்து
சிவ தரிசனம் செய்பவர்
தீவினையெல்லாம் தீரப் பெறுவர் - என்பது ஆன்றோர் வாக்கு...

மயிலாடுதுறையில்
ஐப்பசியின் கடைசி பத்து நாட்களும்
திருவிழாக் கோலம் தான்...

கங்கைக்கும் காவிரிக்கும் 
பஞ்ச மூர்த்திகள் தரிசனம் நல்குவது பெருஞ்சிறப்பு..

அத்துடன் -
நாளை (17/11) கார்த்திகை முதல் நாள்..
கார்த்திகை முதல் நாளன்று தான் முடவன் முழுக்கு...

இல்லாதார்க்கும் இயலாதார்க்கும் -
எம்பெருமான் நல்லருள் புரியும் நாள்...

மயிலாடுதுறையில் நிகழும் திருவிழாவின்
திருக்காட்சிகள் - இன்றைய பதிவில்!...

வழக்கம் போல
உழவாரம் சிவனடியார் திருக்கூட்டத்தினருக்கு
நெஞ்சார்ந்த நன்றியும் வணக்கமும்...


இறைவன் - ஸ்ரீ மயூரநாதர்
அம்பிகை - ஸ்ரீஅஞ்சொலாள், அபயாம்பிகை
தலவிருட்சம் - மா, வன்னி..
தீர்த்தம் - காவிரி, நந்தி தீர்த்தம்..



பூவிரி கதுப்பின்மட மங்கையர் அகந்தொறு நடந்துபலிதேர்
பாவிரி இசைக்குரிய பாடல்பயி லும்பரமர் பழமையெனலாம்
காவிரி நுரைத்திரு கரைக்குமணி சிந்தவரி வண்டுகவர
மாவிரி மதுக்கிழிய மந்திகுதி கொள்ளு மயி லாடுதுறையே..(3/70) 
-: திருஞானசம்பந்தர் :-  



வெஞ்சி னக்கடுங் காலன் விரைகிலான்
அஞ்சி றப்பும் பிறப்பும் அறுக்கலாம்
மஞ்சன் மாமயி லாடு துறையுறை
அஞ்சொ லாளுமை பங்கன் அருளிலே!.. (5/39)  
-: திருநாவுக்கரசர் :-  

பூத வாகனத்தில் ஐயன்  
பூதகி வாகனத்தில் அம்பிகை  


ஈசன் அம்பிகை திருமணக் காட்சி
நேற்று (15/11) காலையில் நிகழ்ந்த
திருத்தேரோட்டக் காட்சிகள்..





குறைவி லோம்கொடு மானுட வாழ்க்கையால்
கறைநி லாவிய கண்டனெண் தோளினன்
மறைவ லான்மயி லாடு துறையுறை
இறைவன் நீள்கழ லேத்தி இருக்கையிலே..(5/39) 
-: திருநாவுக்கரசர் :- 






காவிரியும் கங்கையும் கலந்திருப்பது - என்றால்
நீரின் மகத்துவத்தை நாம் புரிந்து கொள்வதற்கே!...

காவிரியும் கங்கையும் கலந்திருக்க வேண்டும் - என்பது
ஆன்றோர் நமக்களித்த உயரிய சிந்தனை!..

ஆயிரமாயிரம் ஆண்டுகளாகத்
தொட்டுத் தொடர்ந்து வரும்
பாரம்பர்யம் - கலாச்சாரம் இதுவே!...

மயிலாடுதுறை - ரிஷப தீர்த்தக் கட்டம்.. 
ஐம்பூதங்களுள் ஒன்றாகிய 
நீரின் பெருமையை நாம் உணர்தலும்
நீரினை மாசு படுத்தாமல் - அதனை
அடுத்த தலைமுறைக்கு பாதுகாத்துக் கொடுப்பதுவும்
நமது தலையாய கடமைகளுள் ஒன்றாகும்!...

அதுவே இறையடியார்களின் அடையாளமாகும்..
*** 

நிலைமை சொல்லுநெஞ் சேதவமென் செய்தாய்
கலைகள் ஆயவல் லான்கயி லாயநன்
மலையன் மாமயி லாடு துறையன்நம்
தலையின் மேலும் மனத்துளுந் தங்கவே.. (5/39) 
-: திருநாவுக்கரசர் :- 

ஓம் நம சிவாய சிவாய நம ஓம் 
ஃஃஃ

வியாழன், நவம்பர் 16, 2017

உன்னுடன் நான்..

பொழுது விடிவதற்கான நேரம் தான்..

மிச்சம் மீதியாக இருந்த சின்னஞ்சிறு குருவிகளும்
காக்கைகளும் சேர்ந்து கொண்டு கதிரவனை வரவேற்றுக் கொண்டிருந்தன..

இந்த வருடம் தேவியரின் தரிசனத்திற்கு தாமதமாயிற்று..

ஆவல் மீதூற விரைந்து நடந்து படித்துறையை அடைந்தபோது -
அங்கே எனக்கு முன்பாக வந்து காத்திருந்தனர் -

காவிரியும் கங்கையும்!..

ஆகா.. என்ன ஒரு அரிய காட்சி!.. பார்க்கப் பார்க்கப் பரவசம்!..

கிழக்கு நோக்கியவளாக கங்கா அமர்ந்திருக்க
அவளுடைய மென்தோளில் சாய்ந்தவளாக - காவேரி!..

கங்கையின் திருவடிகள் நீரில் அளைந்து கொண்டிருக்க-
அவளுடைய திருப்பாதக் கொலுசுகளில் மோதுவதற்கு
நீரலைகள் - ஒன்றோடொன்று போட்டியிட்டுக் கொண்டிருந்தன...

படிக்கட்டுகளில் தாவிக் குதித்து இறங்கிய நான்
தெய்வமங்கையரின் திருவடிகளைத் தொட்டு சிரசில் வைத்துக் கொண்டேன்..

காவிரியாள்
தாயே சரணம்!.. தாயே சரணம்!..

காவேரி.. இதோ வந்து விட்டான் உன் மகன்!.. - கங்கா திருவாய் மலர்ந்தாள்..

ஏனக்கா.. இவன் உங்களுக்கும் மகன் இல்லையா!.. - காவேரி வினவினாள்..

எனக்கும் மகன் தான்.. ஆனாலும், இந்த ஊர்க்காரர்கள் எல்லாம் உனக்கு மகனும் மகளும் ஆகின்றார்கள்.. அவர்களுக்கெல்லாம் நீ அன்பு மகள் ஆகின்றாய்!.. காதோலை கருகமணியுடன் வளையலும் பூம்பட்டும் புதுத் தாவணியும் பூச்சரமும் மாலைகளும்.. இதெல்லாம் யாருக்குக் கிடைக்கும்!..

இதைக் கேட்டு காவிரி மெல்லச் சிரித்தாள்...

அப்படியும் இருக்கின்றார்கள்... 
அங்கமெல்லாம் நோகும்படிக்கு என்னை அலைக்கழித்து 
விஷக் கழிவுகளைப் பாய்ச்சி சீரழிப்பவர்களும் இருக்கின்றார்கள்...
இதையெல்லாம் என்னவென்று சொல்வது!?..

அதெல்லாம் காலப்போக்கில் சரியாகிவிடும்... கலங்காதே காவிரி!..

காவிரியைத் தேற்றினாள் - கங்கா...

தாயே.. துலா மாதமாகிய ஐப்பசியின் முப்பது நாளும் 
தாங்கள் இங்கே காவிரியுடன் கலந்திருந்தீர்கள்.. 
ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகுமா!.. - என்பதுடன் இதுவும் சிறப்பு...

ஆமாம்.. இல்லாதவர்களுக்கும் இயலாதவர்களுக்கும்
அருள் பொழியும் பொருட்டு நாளை ஒருநாள் கூடுதலாக!..

- கங்கையாள் அன்புடன் மொழிந்தாள்..

ஆம் தாயே!.. எல்லாருக்கும் அருளும் பொருட்டல்லவோ
அம்பிகை மயிலாக உருமாறி இங்கே நடமாடினாள்...
அம்பிகையுடன் எம்பெருமானும் கலந்து மயூர தாண்டவம் நிகழ்த்தினன்
என்றால் காவிரிக் கரையின் பெருமையை சொல்ல வல்லார் யார்!?..

அதனால் தானே - காவிரியின் வண்ண முகம் காண்பதற்கு
வடக்கேயிருந்து ஓடோடி வருகின்றேன்!.. என்ன காவிரி.. வடிவழகி தானே நீ!..

போங்கள் அக்கா!.. நீங்கள் தான் அழகு.. பேரழகு!.. 
உங்களுக்கு இங்கே யார் ஈடு இணை!?..

ஆனாலும், கங்கையினும் புனிதமாய காவிரி!..
- என்று உன்னைத் தானே போற்றுகின்றார்கள்...

தாயே!.. தாங்கள் இருவருமே இவ்வையகத்தின் கண்கள்!...
நீரும் சோறும் அறிவும் ஞானமும் உங்களால் ஆகின்றன..
தாங்களின்றி எங்களுக்கு எதுவும் இல்லை!..

காலங்கள் தோறும் பிறவி எடுத்துக் கிடந்தாலும்
இங்கே - இங்கேயே நதிக்கரையின் ஓரமாக
ஒரு புல்லாக முளைத்துக் கிடப்பதே புண்ணியம்!..

அதைத் தானே ஆன்றோரும் சான்றோரும் வேண்டி நிற்கின்றனர்..
அவ்வண்ணமாகத் தானே எளியவராகிய நாங்களும் வேண்டுகின்றோம்!..

என்னப்பா!.. எல்லாரும் பிறப்பற்ற நிலையை அல்லவா விழைகின்றனர்!..

கங்கையின் திருமுகத்தில் வியப்பு..

தாயே.. அதுவும் பேரின்பம் தான்.. இதுவும் பேரின்பம் தான்!..

பச்சைமா மலைபோல் மேனிபவள வாய்கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே ஆயர் தம் கொழுந்தே என்னும் 
இச்சுவை தவிர யான் போய் இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெரினும் வேண்டேன் அரங்கமா நகருளானே!.. 
- என்கிறார் தொண்டரடிப்பொடி ஆழ்வார்...

குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிரிப்பும்
பனித்த சடையும் பவளம் போல் மேனியிற் பால்வெண்ணீறும்
இனித்த முடைய எடுத்த பொற்பாதமும் காணப் பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே!..
- என்கிறார் அப்பர் ஸ்வாமிகள்...

அடியார்களும் ஆழ்வார்களும் - 
மாதவனை மகாதேவனைத் துதித்துக் கிடப்பதற்கு 
மீண்டும் பிறவியை வேண்டுகின்றார்கள் எனில் -
அவர்தமக்கு அடியார்களாகிய நாங்களும் 
அவ்வண்ணம் தானே வேண்டி நிற்போம்!..

அப்படிப் பிறக்குங்கால் 
நீர் இன்றிப் பிறப்பேது!..
நீவிர் இன்றிச் சிறப்பேது!..

ஓ!.. தமிழ்.. காவிரித் தமிழ்!.. - கங்கையின் திருமுகத்தில் பூஞ்சிரிப்பு..

ஆம்.. தாயே!..
காவிரியால் வந்ததே சொல்..
காவிரியாள் தந்ததே சொல்!..

கல.. கல.. - எனச் சிரித்தனர் காவிரியும் கங்கையும்..

இந்த மங்கலமும் மாட்சியும் என்றென்றும் நிறைந்திருக்க வேண்டும்..
எல்லாரும் இன்புற்று வாழ்ந்து இவ்வையகத்தைக் காத்திட வேண்டும்..
கங்கையும் காவிரியும் எங்களுக்கு நல்லருள் புரிய வேண்டுகின்றேன்!..

கங்கையும் காவிரியும் அபய வரதம் காட்டி நின்றருளினர்..

கைகளைக் கூப்பியவாறு வலம் செய்து
திருவடிகளில் வீழ்ந்து வணங்கினேன்..

வளமும் நலமும் பெற்று 
நீடூழி வாழ்க.. நீடூழி வாழ்க!..

மலர்களைத் தூவி இவ்வையகத்தை 
வாழ்த்திய வண்ணம்
நீரொடு நீராகக் கலந்தனர்...

கிழக்கே ஆதவன் புன்னகையுடன்
கடைமுழுக்குக் காண்பதற்காக 
எழுந்து கொண்டிருந்தான்.. 
*** 

திருத்தலம்
மயிலாடுதுறை




இறைவன் - மயூரநாதர்
அம்பிகை - அஞ்சொலாள்

தீர்த்தம்
கங்கையிற் புனித காவிரி, ரிஷப தீர்த்தம்
தல விருட்சம் - மாமரம்

காசிக்கு நிகரான திருத்தலங்கள் ஆறனுள் மயிலாடுதுறையும் ஒன்று..

திருஞானசம்பந்தப் பெருமானும் திருநாவுக்கரசு ஸ்வாமிகளும்
திருப்பதிகம் பாடித் துதித்த திருத்தலம்...

ஐப்பசியில் திருவிழா காணும் திருத்தலம் மயிலாடுதுறை..
துலா ஸ்நானம் - என, மாதம் முழுதும் இங்கே கோலாகலங்கள்..
பூர நட்சத்திரத்தை அனுசரித்து திருக்கல்யாண வைபவம் நிகழ்ந்தது..

இன்று கடை முழுக்கு...
நாளை - முடவன் முழுக்கு

நேற்று திருத்தேரில் ஈசனும் அம்பிகையும் எழுந்தருளினர்..

இன்று கடைமுக தீர்த்த வாரிக்காக -
ஸ்வாமியும் அம்பிகையும் விடை வாகனத்தில் எழுந்தருள்கின்றனர்..

காவிரியின் அக்கரையில் விளங்கும் ஸ்ரீ பரிமளரங்கன் திருத்தேரில் உற்சவம் காணுகின்றார்..

இன்றைய பதிவில் -
மயிலாடுதுறையில் நடந்து கொண்டிருக்கும்
துலா உற்சவத்தின் திருவிழாக் காட்சிகள்...

படங்களை FB வழியாக வழங்கியவர்கள்
உழவாரம் சிவனடியார் திருக்கூட்டத்தினர்..
அவர்தமக்கு மனமார்ந்த நன்றிகள்..





 






நிலைமை சொல்லுநெஞ்சே தவம் என்செய்தாய்
கலைகள் ஆயவல்லான் கயிலாய நன்
மலையன் மாமயிலாடு துறையன் நம்
தலையின் மேலும் மனத்துளும் தங்கவே!..(5/39)
-: திருநாவுக்கரசர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம் 
***

சனி, அக்டோபர் 18, 2014

கங்கா காவிரி

அத்தனை பெருமையும் மயிலாடுதுறைக்கே!..

அன்னை தவம் செய்து ஐயனை அணைந்த திருத்தலங்கள் பற்பல!..

அவற்றுள்ளும் சிறப்பானவை - அம்பிகை மயிலாக உருக்கொண்டு வழிபட்ட திருமயிலையும், திருமயிலாடுதுறையும்!..

அதிலும் திருமயிலாடுதுறையில் தான் - ஐயன் தானும் மயில் வடிவாகி அம்பிகையுடன் நடமாடிக் களித்தனன்.

ஐயன் - அம்பிகையுடன் மயூர தாண்டவம் நிகழ்த்தியதனாலேயே -  திருத்தலம் மயிலாடுதுறை என்றாகியது.

மேலும் சிறப்புறும் வண்ணம் - கங்கை தன் மனதில் கொண்ட மாசுகள் நீங்கப் பெற்ற திருத்தலம்.

இன்று துலா மாதம் எனும் ஐப்பசி மாதத்தின் முதல் நாள்..

இன்று தொட்டு கார்த்திகை முதல் நாள் வரைக்கும், கங்கை - தான் புனிதம் ஆவதற்காகத் தென்னகத்தின் பொற்பாவை காவிரியுடன் கலந்திருக்கின்றாள்..

அந்த - வைபவம் தான் என்ன!..


திருக்கயிலை!.. 

முப்பத்துமுக்கோடி தேவர்களும் மகரிஷிகளும் வித்யாதரர்களும் யட்சர்களும் மற்றும் சகல ஜீவராசிகளும் கூடி நின்று - ஐயனையும் அம்பிகையையும் போற்றி வணங்கி அவர்தம் பெருமைகளைப்  புகழ்ந்து பாடிக் கொண்டிருந்த புண்ணிய வேளை!..

சிவபெருமானின் ஜடாபாரத்தினுள் சிக்கிக் கிடக்கும் கங்கைக்கு மகிழ்ச்சி!..

தன்னை முன்னிட்டல்லவோ - ஈசனுக்கு கங்காதரன் எனும் திருப்பெயர்!..

பூவுலக மக்களின் பாவச்சுமைகளை நான் நீக்காவிடில் - யாரால் அதனைச் சுமக்க இயலும்!?.. என் பெருமையை அறிந்த அதனால் தானே பெருமானும் என்னைத் தன் தலையின் மீது தாங்குகின்றார்!..

கங்கையின் எண்ணத்தை உணர்ந்த அம்பிகை அதிர்ந்தாள்..

ஐயன் எம்பெருமான் புன்னகைத்தார்..

அந்த அளவில் கங்கையின் மங்கலங்கள் மாசடைந்தன. 
பொன் மஞ்சள் எனத் திகழ்ந்த திருமேனி - ஒளி குன்றியது. 
கங்கையின் தேஜஸ் அவளை விட்டு அகன்றது.

கூடியிருந்த பெருங்கூட்டம் திகைத்து நிற்கையில் - 

அங்கே - அவலமான வடிவத்துடன் கங்கை தோன்றினாள்..

கங்கையின் கண்களில் பிரவாகமாக கண்ணீர்..

ஐயனே!. என்னைக் காத்தருளுங்கள்!.. என் பிழைதனைப் பொறுத்தருளுங்கள்!..

சற்று முன் - ஐயனின் சிரசில் இருப்பதாக அகந்தை கொண்டு ஆர்ப்பரித்தவள் - சில விநாடிப் பொழுதில் அநாதரவாக ஐயனின் திருவடிகளில் கிடந்தாள்..

அம்பிகை ஆதரவு கொண்டு கங்கையைத் தேற்றினாள்..

ஸ்ரீ அபயாம்பிகை
தேவி.. என்னை மன்னித்தருளுங்கள்.. தமது கருணையின்றி இந்தப் பூவுலகில் நிலைத்த செல்வம் என்பதேது.. அகந்தையினால் அவலம் எய்தினேன்.. அதனால் ஐயனின் ஜடாமகுடத்திலிருந்து வீழ்ந்தேன்.. பிராயச்சித்தம் அருள்க.. தேவி!.. 

- என கண்ணீர் உகுத்தாள்.

அகத்திய மகரிஷி ஆறுதலாகப் பேசினார்..

கங்கா தேவி!.. பரந்தாமனால் புகழப் பெற்றவள் நீ..  மக்களுக்கு சேவை செய்பவர்களுள் முதன்மையானவள் நீ.. மக்கள் பணி செய்வோர்க்கு ஆணவமும் இறுமாப்பும் கூடாது என்பதற்கு இந்த சம்பவம் ஒரு பாடம்!.. உன் பிழையினை நீ உணர்ந்தாய். இதுவே உனக்குப் பொன்னான வேளை. கலங்க வேண்டாம்!.. 

எல்லாம் வல்ல சிவம் இனிதே புன்னகைத்தது.

காவிரியை அறிவாயா நீ!.. அகத்தியனின் உருவங்கண்டு எள்ளி நகையாடிய பிழையால் -  அவள் காலகாலத்துக்கும் கமண்டலத்துக்குள் சிறைபட்டுக் கிடந்தாள். கணேசன் காகத்தின் வடிவங்கொண்டு அவளை மீட்க வேண்டியதாயிற்று. அந்தக் காவிரி உனக்கு நலம் அளிப்பாள்..

அது எவ்விதம் என்பதை தேவரீர் விளக்கம் செய்தருள வேண்டும்!..

அனைவரும் பணிவுடன் விண்ணப்பம் செய்து கொண்டனர்.

ஈசன் எம்பெருமான் அதிகார நந்திதேவனை திருநோக்கம் செய்தருளினார்.

நந்தியம்பெருமான் விளக்கம் தரலானார்.

ஒரு சமயம் - ஐயன் வேதத்திற்குப் பொருள் கூறியபோது சற்றே கவனக் குறைவிற்கு ஆளான அம்பிகை சிவபெருமானைப் பிரிந்து மயிலாக மாறி காவிரியின் தென் கரையில் சிவபூஜை புரிந்தார்.


காலம் கனிந்த வேளையில் ஐயனும் மயில் வடிவங்கொண்டு அம்பிகையுடன் மயூர தாண்டவம் நிகழ்த்தி அருளினார். அதனாலேயே மயிலாடுதுறை என - திருப்பெயர் கொண்டது திருத்தலம்.

ஐயனும் அம்பிகையும் திருநடனம் நிகழ்த்திய அவ்வேளையில் - காவிரியாள் செய்து கொண்ட பிரார்த்தனை ஒன்றுண்டு!..

நந்தியம்பெருமான் சற்றே நிறுத்தினார்.

அதற்கு மேல் ஐயன் அருளுரைத்தார்.

காலக் கணக்கில் ஏழாவது - துலா மாதம். அனைத்தும் சமன் செய்யப்படும் மாதம். துலா மாதம் நெருங்கும் இவ்வேளையில் தென் திசைக் காவிரியுடன் கலந்திருப்பாயாக!.. அங்கே நீ நலம் பெறுவாய்!..

அவ்வண்ணமே - ஈசனின் திருவாக்கினைத் தலைமேற்கொண்டு, கங்கை தென் திசைக்கு விரைந்தாள்..


அந்த விடியற்காலைப் பொழுதில் தன்னை நோக்கி  வந்த கங்கையைக் கண்டு பரவசமானாள் - காவிரி!.. 

வருக.. வருக.. சகோதரி!.. - என வாஞ்சையுடன் வரவேற்று ஆரத் தழுவிக் கொண்டாள். 

ஒருவர் முகம் மற்றவர் கண்ணீரால் நனைந்தது.

கங்கையின் மனம் அன்னத்தின் தூவி (மெல்லிறகு) போலானது..

தங்காய்!.. திசை தொழும் திருமகள் நீ!.. உன்னால் நான் நலம் பெற்றேன்!.. வாழிய நீ!.. - என்றாள் கங்கை.

சகோதரி!.. தேடி வந்த திருமகள் நீ!.. உன்னால் நான் புகழ் பெற்றேன்!.. வாழிய நீ!.. - என்றாள் காவிரி.

நீரொடு நீர் கலக்க - நிர்மலமான அன்பு எங்கும் பெருக்கெடுத்துப் பாய்ந்தது.

இனிமேல் என்னை விட்டு தாங்கள் பிரியக்கூடாது!.. - என்றாள் காவிரி.

அன்புத் தங்கையே!.. வற்றாத நதியாகிய நான், வாழும் கலையினை உன்னிடம் பயில வந்துள்ளேன்.. ஐயன் சிவபெருமான் எனக்கு விதித்தபடி துலா மாதம் முழுதும் உன்னுடன் இருப்பேன். உன்னுடைய பிரவாகத்தில் கலந்து நானும் பெரும் பேறடைவேன்!.. - என மகிழ்ந்தாள் கங்கை.

நான் என்ன அறிவேன் சகோதரி!.. வான் பொய்ப்பினும் தான் பொய்யாக் காவிரி என்று பெரியோர் என்னைப் பாராட்டினர். ஆயினும், சிறுமதியோர் சிறையில் நானும் சிக்கிக் கொள்கின்றேன். மணற்கொள்ளையினால் என் வழி படுகுழியாகின்றது. அதனால் வயல் வெளிகள் பாழாகின்றன. நீரலைக் கரங்களை நீட்டி விளையாடிய நாட்கள் எல்லாம் தொலைந்து போயின. 

நான் கட்டிக் காத்த களஞ்சியங்கள் கண் முன்னே கட்டிடங்களாகி விட்டன. செல்லும் வ்ழியெல்லாம் எனக்கு நிழல் கொடுத்த விருட்சங்களும் வீழ்த்தப் பட்டன.. வெறிச்சோடிக் கிடக்கின்றன நெடுங்கரைகள்.. எனினும் மட மதியினராகிய மக்கள் மீது கோபம் கொள்வதில்லை. அவர்கள் திருந்தும் காலம் விரைவில் வரும். 

ஆற்றுப் பெருக்கற்று அடி சுடும் அந்நாளிலும் ஊற்றுப் பெருக்கால் ஊர் காத்து வந்தேன். கெடுமதியோர் ஊற்று நீரையும் உருக்குலைத்து விட்டனர். ஊர் கொண்ட ஈசன் தான் இதற்கொரு வழி கூற வேண்டும்!..

- காவிரி தன் குறைகளைக் கங்கையிடம் கூறினாள்..

என்ன செய்வது தங்காய்!.. என்குறையும் இவ்விதமே!.. பவித்ரமான என்னைப் பாழ்படுத்தியே பரவசம் அடைகின்றனர். பாவிகளின் செய்கையால் நானும் உன்னைப் போலவே பரிதவித்து நிற்கின்றேன்.. பரமன் ஒருவனே நமக்குப் பாதுகாப்பு!..

கங்கையும் காவிரியும் கூடிக்களித்து ஒருவர் அன்பினில் ஒருவர் மகிழ்ந்தனர்.

கங்கையின் பழி தீரும் நாளும் வந்தது.

கோபுர தரிசனம்
அந்த இளங்காலைப் பொழுதினில் முப்பத்து முக்கோடித் தேவரும் கூடி இருந்த வேளையில் - ஐயனும் அம்பிகையும் ப்ரத்யட்சமாகினர்!..

அதுவும் - மயில் வடிவங்கொண்டு ஆனந்த நடனம் புரிந்தனர்.

அதற்காகக் காத்துக் கிடந்த காவிரி ஆனந்தக்கண்ணீருடன் கைகூப்பி நின்றாள்.

கங்கையின் கண்களிலும் ஆனந்த வெள்ளம் கரை புரண்டது.

கன்னியர் இருவருக்கும் மஞ்சளும் தந்தாள்.. மலர்கள் தந்தாள் - மங்கல மங்கை அபயாம்பிகை!..

அம்மையப்பனின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினர் அனைவரும்.

துலா தீர்த்தவாரி
காவிரியும் அவளுடன் கலந்து நிற்கும் கங்கையும் - துலா மாதம் எனும் புண்ணிய ஐப்பசியின் அனைத்து நாட்களிலும் இந்தத் தீர்த்தத் துறையில் நீராடும் மக்களின் பாவங்களைத் தீர்த்து - நல்லோர் தம் வாழ்வுக்குத் துணையிருப்பீர்களாக!.. 

- என்று வரமளித்த மயூரநாதர் -

கங்கையை நோக்கி திருக்கயிலைக்கு ஏகும்படி பணித்தார்.

காவிரியைப் பிரிய மனம் இல்லாத கங்கை கலங்கினாள்..

ஸ்வாமி.. பொன்னியையும் அவளால் வளமுற்ற இந்த மண்ணையும் பிரிவதற்கு மனம் இல்லை. ஆயினும் தங்கள் ஆணையை சிரமேற்கொள்ளும் வேளையில் ஆண்டு தோறும் துலா மாதத்தில் - காவிரியுடன் கூடிக் களிக்கும் படியான வரம் நல்க வேண்டும்!.. 

வரங்கேட்டு நின்றாள் - கங்கை.

அஞ்சொலாள் அம்பிகையும் மயூரநாதரும் புன்னகைத்தனர்.

கங்கை கேட்ட வண்ணமே வரம் அருளினர்.

கலங்கிய கண்களுடன் காவிரியிடம் விடை பெற்றுக் கொண்டாள் கங்கை.

கண்களைத் துடைத்துக் கொண்டு - தானும் தன் பயணத்தைத் தொடர்ந்தாள் கங்கையினும் புனிதமாய காவிரி!..

அம்மையும் அப்பனும் அன்று அருளியபடியே - ஆண்டு தோறும் துலா மாதமாகிய ஐப்பசியில் -

கங்கை தென்னகத்திற்கு ஓடி வந்து காவிரியுடன் கலந்து இன்புறுகின்றனள்.

இந்த வைபவம் நம் முன்னோர்கள் நமக்கு அருளிய வரபிரசாதம்!..

ஆயினும்,

கண் கண்ட காட்சியாக காவிரியும் கங்கையும் கலந்திட வேண்டும்!..
மண் கொண்ட மாட்சியாய் மங்கலம் எங்கும் நிறைந்திட வேண்டும்!..

வாழிய காவிரி!.. வாழிய கங்கை!.. 
வளர் நலம் சிறக்க பாரதம் செழிக்க
வாழிய காவிரி!.. வாழிய கங்கை!.. 
* * *

சனி, நவம்பர் 16, 2013

துலா ஸ்நானம்

திருமயிலாடுதுறை!..

இத்தலம் - மாயூரம் என்றும் வழங்கப்பெறும்.  


''ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகுமா?..'' - எனும் சொல் வழக்கு தஞ்சை மாவட்டத்தில் மிக பிரசித்தமானது. 

என்ன காரணம்?...

சிவபெருமானின் ஜடாமகுடத்திற்குள் அடங்கியிருந்த - கங்கைக்கு அன்று போதாத நேரம்!.. 

''.. என்னால் தான் மக்களின் பாவங்கள் தொலைகின்றன!.. நான் மட்டும் பொங்கிப் பெருகவில்லை எனில், பாவத்தின் பாரம் தாங்க மாட்டாமல் பூமி பொலிவு இழந்து போயிருக்கும்!..'' 

- என்று எண்ணி கர்வம் கொண்டாள். 

அவ்வளவு தான்!.. 

அந்த எண்ணத்தால் - கங்கை தான் - தன் பொலிவினை இழந்தாள்.. 

மதி கலங்கியதால் - நதி எனும் புனித கங்கை - கதி கலங்கிப் போனாள்!.. 

ஈசனின் சிரத்தில் இருந்தும் -  தகாத எண்ணத்தால் - தனக்கு விளைந்த பாவம் நீங்க பிராயச்சித்தம் அருளுமாறு, இறைவனை நாடி கங்கை பணிந்து வணங்கி நின்றாள்.. 

கங்கையின் பிரார்த்தனைக்கு இரங்கிய ஈசன் - மயிலாடுதுறை எனும் பதியில் காவிரி ஆற்றின் துலா ஸ்நான கட்டத்தில் நீராடும்படி ஆணையிட்டார். 


அப்படி என்ன பெருமை  - அந்த மயிலாடுதுறைக்கும், காவிரிக்கும்!..  

கங்கை அதிசயித்தாள்.

அந்த பெருமையை - நந்தி தேவர் - கங்கைக்கு விவரிக்கலானார்.

முன்னொரு சமயம்  ஈசன் வேதத்தின் பொருளை அம்பிகைக்கு விவரித்த வேளையில் - திருக் கயிலையின் சாரலில் மயில் ஒன்று தனது அழகிய தோகையை விரித்து ஆடியது. அந்த அழகில் அம்பிகை - ஒரு நொடிப்பொழுது மனம் லயித்தாள். அதைக் கண்டு சினந்த பெருமான் - அம்பிகையை மயிலாகவே - பிறக்கும் படியாக சாபமிட்டு விட்டார். 


அம்பிகை - ஏற்கனவே, இமவான் மகளாகப் பிறந்தபோது இமயாசலத்தில் மயிலாக ஆடிக் களித்தவள் தானே!..  அவளுக்குக் கசக்குமா - மயிலாகப் பிறந்து ஈசனைத் துதிப்பதற்கு!..

அதே வேளையில், காவிரியும் கடும் தவம் செய்து கொண்டிருந்தாள்.. எம்பெருமானையும் அம்பிகையையும் தரிசிக்க வேண்டும் என்று!..

எல்லாம் ஒன்றாகக் கூடி வர -

அம்பிகை மயிலாக உருமாறி காவிரிக் கரையினில் சிவ வழிபாடு செய்தனள்.  


காலம் கனிந்தது. 

அம்பிகையின் வழிபாட்டில் மகிழ்ந்த ஈசன் தானும் மயிலாகத் தோன்றி உமாதேவியுடன் ஆனந்தமாக ஆடி மகிழ்ந்தார்.. காவிரியும் அற்புதக் காட்சி கண்டு பெறற்கரிய பேறு கொண்டனள்..


அந்தத் தாண்டவமே மயூர தாண்டவம். மயூரம் என்றால் - மயில். 

ஈசனும் அம்பிகையும் மயிலாகத் தாண்டவமாடிய  தலமே மயிலாடுதுறை. 

இப்படிப் பெருமை கொண்ட திருத்தலமாகிய - மயிலாடுதுறையில் - 

ஈசன் ஆணையிட்டபடி, கங்காதேவி துலா மாதமாகிய  ஐப்பசியில் காவிரி நீராடி மயூரநாதரைப் பணிந்து வணங்கி பாவம் நீங்கினாள் என்பதும், ஐப்பசி மாதம் முழுவதும் கங்கை காவிரியை விட்டுப் பிரியாமல் அவளுடனேயே பிரவாகமாகி கலந்திருப்பதாகவும் ஐதீகம்... 

அதன்படி ஐப்பசி முழுதும் மக்கள் காவிரியில் நீராடி மயூரநாதரைப் பணிந்து வணங்கத் தலைப்பட்ட வேளையில், 

வெகு தொலைவில் இருந்து காவிரியில் நீராடுதற்காக திரண்ட அடியார்களுள் நடக்க இயலாத ஏழை ஒருவரும் தன் அளவில் முயற்சிக்க - 

ஐப்பசி கடைசி நாளும் ஆகிவிட்டது.. 

உடன் வந்தவர்கள் விரைவாய் சென்றுவிட நடக்க இயலாதவர்  நிலை பரிதாபமானது.. மனம் உடைந்த அவர் கண்ணீர் மல்கி கசிந்து உருகினார்.  



ஐப்பசி கடைசி நாள் மாலைப் பொழுதுக்குள்  காவிரியில் நீராட இயலாத தன் நிலையை எண்ணிக் கதறினார்.. 

ஏழை அழுத  கண்ணீர் ஈசனின் திருவடிகளை நனைத்தது!. அன்பே  வடிவான சிவமும் அந்த ஏழைக்கு அருள் பொழிய நினைத்தது!..

ஈசன் அடியவர் முன் தோன்றி, 

'' வருந்தற்க!. நாளை கார்த்திகை முதல் நாள் - உம் பொருட்டு கங்கை காவிரியிலேயே கலந்திருப்பாள்!.. நீராடி மகிழ்க!..'' 

- என்று அருள் புரிய, அது முதற் கொண்டு கார்த்திகையின் முதல் நாளும் புனித நாளாயிற்று. 

அதன்படி ஐப்பசி தொடங்கி கார்த்திகை முதல் நாள் (முடவன் முழுக்கு) வரை பாவங்கள் விலகி புண்ணியங்கள் பெருகும்படிக்கு காவிரியே கங்கையாகத் திகழ்கிறாள்..

இன்று - ஐப்பசி மாத துலா ஸ்நானத்தின் கடைசி நாள் - கடை முழுக்கு!..

நாளை  - கார்த்திகை முதல் நாள் - முடவன் முழுக்கு!..


மயிலாடுதுறை - எனும் மாயூரம் திருவிழாக்கோலம் பூண்டு விளங்குகின்றது. மயிலாடுதுறையில் உள்ள சிவாலயங்கள் அனைத்திலும் பஞ்சமூர்த்திகள் எழுந்தருள - காவிரியின் துலா ஸ்நானகட்டத்தில் - தீர்த்த வாரி நிகழ்கின்றது. 

இந்த ஐப்பசி மாதத்தில் பூவுலகில் உள்ள புனித நதிகளுக்கெல்லாம் பாப விமோசனம் அருள்கின்றாள் காவிரி.


ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளவேண்டியது அவசியம்!.. 

''தண்ணீரும் காவிரியே!..'' - என்ற திருவாக்கின் படி -   எல்லாம் கங்கையே!.. எங்கும் காவிரியே!..

பரந்து விரிந்த பூவுலகில்- எங்கிருந்த போதும் சரி!..

நீராடும் போது  - ஒரு சொம்பு நீரை எடுத்து,

ஸ்ரீகாவேரி நமஸ்துப்யம் நமோ நம:

- என்று சிந்தித்து வணங்கி - நீராடினாலும் அன்னை காவேரி அருகிருந்து வாழ்த்துவாள்!..


இன்று இயலாவிட்டாலும் நாளையாவது - முடவன் முழுக்கு - நன் நீராடி - முன் வினை முழுதும் முற்றாக நீங்கப் பெறுவோம்!..

சிவாய திருச்சிற்றம்பலம்!..