நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, நவம்பர் 16, 2018

மயிலாடுதுறை

துலா மாதமாகிய ஐப்பசியின் முதல் நாள் முதல்
காவிரி நங்கையொடும் கங்கையாள் கூடிக் கலந்து
தன் பாவங்களைப் போக்கிக் கொள்வதாக ஐதீகம்...

தன்னால் தான் புவி மாந்தரின் பாவங்கள் தொலைவதாக
கங்கையின் மனதில் இறுமாப்பு தோன்றியது...

அதுவே பெரும் பாரமாகி கங்கையை அழுத்த
செய்வதறியாது கலங்கினாள் - கங்கை...

கங்கைக்கு பாவ விமோசனம் அருளினான் பரமன்...

அது கொண்டு
வடக்கிருந்த கங்கையாள்
தெற்கே ஓடிவந்து காவிரியில் மூழ்கி
தன் வினை நீங்கப் பெற்றாள்...


ஒருசமயம் -
அம்பிகை மயிலாக உருமாறி சிவபூஜை செய்தனள்...

ஐயன் மனங்கனிந்து
தானும் மயிலுருக் கொண்டு
அம்பிகையுடன் ஆடிக் களித்தனன்..
அகமகிழ்ந்து அவளுடன் கூடிக் களித்தனன்...

மயிலுருவாக இருந்த அம்பிகையுடன்
தானும் மயிலுருக்கொண்டு
ஆடிக்களித்த - அதனால்,
தலம் - மயிலாடுதுறை என்றாகியது...

ஐப்பசியின் முப்பது நாட்களும்
காவிரியுடன் கங்கையும் உறைவதால்
மயிலாடுதுறையின் காவிரியில்
ரிஷபக் கட்டத்தில் நீராடி முடித்து
சிவ தரிசனம் செய்பவர்
தீவினையெல்லாம் தீரப் பெறுவர் - என்பது ஆன்றோர் வாக்கு...

மயிலாடுதுறையில்
ஐப்பசியின் கடைசி பத்து நாட்களும்
திருவிழாக் கோலம் தான்...

கங்கைக்கும் காவிரிக்கும் 
பஞ்ச மூர்த்திகள் தரிசனம் நல்குவது பெருஞ்சிறப்பு..

அத்துடன் -
நாளை (17/11) கார்த்திகை முதல் நாள்..
கார்த்திகை முதல் நாளன்று தான் முடவன் முழுக்கு...

இல்லாதார்க்கும் இயலாதார்க்கும் -
எம்பெருமான் நல்லருள் புரியும் நாள்...

மயிலாடுதுறையில் நிகழும் திருவிழாவின்
திருக்காட்சிகள் - இன்றைய பதிவில்!...

வழக்கம் போல
உழவாரம் சிவனடியார் திருக்கூட்டத்தினருக்கு
நெஞ்சார்ந்த நன்றியும் வணக்கமும்...


இறைவன் - ஸ்ரீ மயூரநாதர்
அம்பிகை - ஸ்ரீஅஞ்சொலாள், அபயாம்பிகை
தலவிருட்சம் - மா, வன்னி..
தீர்த்தம் - காவிரி, நந்தி தீர்த்தம்..



பூவிரி கதுப்பின்மட மங்கையர் அகந்தொறு நடந்துபலிதேர்
பாவிரி இசைக்குரிய பாடல்பயி லும்பரமர் பழமையெனலாம்
காவிரி நுரைத்திரு கரைக்குமணி சிந்தவரி வண்டுகவர
மாவிரி மதுக்கிழிய மந்திகுதி கொள்ளு மயி லாடுதுறையே..(3/70) 
-: திருஞானசம்பந்தர் :-  



வெஞ்சி னக்கடுங் காலன் விரைகிலான்
அஞ்சி றப்பும் பிறப்பும் அறுக்கலாம்
மஞ்சன் மாமயி லாடு துறையுறை
அஞ்சொ லாளுமை பங்கன் அருளிலே!.. (5/39)  
-: திருநாவுக்கரசர் :-  

பூத வாகனத்தில் ஐயன்  
பூதகி வாகனத்தில் அம்பிகை  


ஈசன் அம்பிகை திருமணக் காட்சி
நேற்று (15/11) காலையில் நிகழ்ந்த
திருத்தேரோட்டக் காட்சிகள்..





குறைவி லோம்கொடு மானுட வாழ்க்கையால்
கறைநி லாவிய கண்டனெண் தோளினன்
மறைவ லான்மயி லாடு துறையுறை
இறைவன் நீள்கழ லேத்தி இருக்கையிலே..(5/39) 
-: திருநாவுக்கரசர் :- 






காவிரியும் கங்கையும் கலந்திருப்பது - என்றால்
நீரின் மகத்துவத்தை நாம் புரிந்து கொள்வதற்கே!...

காவிரியும் கங்கையும் கலந்திருக்க வேண்டும் - என்பது
ஆன்றோர் நமக்களித்த உயரிய சிந்தனை!..

ஆயிரமாயிரம் ஆண்டுகளாகத்
தொட்டுத் தொடர்ந்து வரும்
பாரம்பர்யம் - கலாச்சாரம் இதுவே!...

மயிலாடுதுறை - ரிஷப தீர்த்தக் கட்டம்.. 
ஐம்பூதங்களுள் ஒன்றாகிய 
நீரின் பெருமையை நாம் உணர்தலும்
நீரினை மாசு படுத்தாமல் - அதனை
அடுத்த தலைமுறைக்கு பாதுகாத்துக் கொடுப்பதுவும்
நமது தலையாய கடமைகளுள் ஒன்றாகும்!...

அதுவே இறையடியார்களின் அடையாளமாகும்..
*** 

நிலைமை சொல்லுநெஞ் சேதவமென் செய்தாய்
கலைகள் ஆயவல் லான்கயி லாயநன்
மலையன் மாமயி லாடு துறையன்நம்
தலையின் மேலும் மனத்துளுந் தங்கவே.. (5/39) 
-: திருநாவுக்கரசர் :- 

ஓம் நம சிவாய சிவாய நம ஓம் 
ஃஃஃ

10 கருத்துகள்:

  1. குட்மார்னிங்.

    சிறப்பான தகவல்கள். அழகான படங்கள்.

    பதிலளிநீக்கு
  2. அன்பின் ஜி
    இன்றைய தரிசனம் அழகு. வாழ்க நலம்.

    பதிலளிநீக்கு
  3. மயிலாடுதுறை நினைவாகவே இருந்தோம் இன்று. உங்கள் தளத்தில் விழாவைப் பார்த்து தரிசனம் செய்து விட்டோம்.
    வாழ்த்துக்கள்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  4. ஒருமுறை மயிலாடு துறைக்குச் சென்றிருக்கிறோம் உங்கள் பதிவு அந்த நினைவுகளை மீட்டெடுத்தது நன்றி

    பதிலளிநீக்கு
  5. இங்கேயும் இன்னிக்கு நம்ம ரங்க்ஸ் துலாக்காவிரி ஸ்நானம் செய்தார். காவிரியில் நீர் இல்லை இப்போது. மணல் திட்டுகள் தெரிய ஆரம்பித்து விட்டன. மாயவரத்தில் எல்லாம் கூட்டமாக இருக்கும்! நான் கூட்டத்தில் அதிகம் போவதில்லை.

    பதிலளிநீக்கு
  6. மிக அருமையான தகவல்கள் படங்கள் மூலமும் விளக்கங்கள் மூலமும் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  7. நல்ல தகவல்கள். படங்கள் மிக அழகு. பூதன் பூதகி வாகனம் எல்லாம் இப்போதுதான் பார்க்கிறோம். நல்ல தரிசனம்.

    துளசிதரன், கீதா

    பதிலளிநீக்கு
  8. மாயவரம் கடைமுகத்திற்கு ஒரு முறையாவது செல்ல வேண்டும் என்று ஆசை. இதுவரை நடக்கவில்லை. உங்கள் மூலம் நேரில் பார்த்த திருப்தி. நன்றி.

    பதிலளிநீக்கு
  9. காலையிலேயே பின்னூட்டமிட்டேன்,ஏனோ செல்லவில்லை. படங்கள் தெளிவு.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..