நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், நவம்பர் 21, 2018

மீண்டு எழுக!..

மீண்டும் எழுக!...


மூன்று நாட்களாக
பலபகுதிகளில் மீண்டும் கடும் கனமழை...

நிவாரணப் பணிகள் தொடங்கிய நிலையில்
மறுபடியும் தடுமாறி விட்டது - தஞ்சை மாவட்டம்...

ஒருங்கிணைந்த தஞ்சையின் வடக்குப் பகுதிகளான
கும்பகோணம் மயிலாடுதுறை சீர்காழி - எல்லாம் தப்பித்துக் கொண்டன...

ஆங்காங்கே மழை.. மழை தான்!...

நேற்று வரை நிழல் கொடுத்த வீடு..
இன்றைக்கோ - ஓடிழந்து உருக்குலைந்த கூடு..
ஆனால், கிழக்கு - தென்கிழக்காக
காரைக்காலில் இருந்து கோடியக்கரை வரைக்கும்

கோடியக்கரையிலிருந்து வேதாரண்யம், ஜாம்பவான் ஓடை,
முத்துப்பேட்டை, தம்பிக்கோட்டை, தாமரங்கோட்டை,
அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம் -
அப்படியே கடற்கரை கிராமங்கள் - அத்தனையும்
அடையாளம் இழந்து நிற்கின்றன....


90 சதவிகித தென்னை மரங்களை இழந்து விட்டார்கள்...

மா, பலா, புளி, அரசு, ஆல் -
முதலான பெருமரங்களே வேரற்று விழும்போது
ஆங்காங்கே தழைத்திருந்த வாழைகளின் கதியைப் பற்றி
ஏதும் சொல்லத் தேவையில்லை...

ஆனால்
சாலைகளின் ஓரமாக இருந்த பனைமரங்களுக்கு
எந்த பாதிப்பும் இல்லை என்று சொல்கிறார்கள்..


கோடியக்கரை காட்டில் வாழ்ந்திருந்த
நூற்றுக்கணக்கான மான்கள் உயிரிழந்திருக்கின்றன...

வீடுகளில் தொழுவங்களில் கட்டி வைக்கப்பட்டிருந்த
ஆடுகளும் மாடுகளும் பரிதாப முடிவை அடைந்துள்ளன....

குளம், வாய்க்கால், ஆறு - என,
நீர் மேலாண்மை செய்திருந்த சோழ தேசத்தில்
குடிநீருக்கு அல்லாடியிருக்கின்றார்கள்...

வீடுக்ள் தோறும் தோபுகள் தோறும் இருந்த
கிணறுகளுக்கு எல்லாம் என்ன ஆயின என்பது தெரியவில்லை...

இருக்கும் ஒன்றிரண்டும் புயல் பெருமழையால்
நீர் கலங்கி குடிப்பதற்கு ஆகாததாக இருக்கலாம்...

ஆனால் - அடி நீர்க்குழாய்கள்!...

முன்பெல்லாம் கிராமங்களில் வசதியுள்ள வீடுகளில்
அடி நீர்க் குழாய்கள் அமைத்திருப்பார்கள்..


ஊர்ப் பொதுவாக பஞ்சாயத்து சார்பிலும்
தெருவுக்கு இரண்டு மூன்று
அடி நீர்க் குழாய்கள் அமைக்கப்பட்டிருக்கும்..

அவை எல்லாம் என்ன ஆயிற்று!?..

அவையெல்லாம் மக்களுக்குப் பயன்படாமல் போயின என்றால்
என்னதான் செய்து கொண்டிருந்தார்கள் - மக்கள்!...

மின்கம்பங்கள் மட்டும் லட்சத்திற்கு மேல் கணக்கு சொல்கிறார்கள்...

மின்சாரக் கம்பிகளுக்கென நம்மூரில் நடப்படும்
கம்பங்களைப் பற்றி நாம் அறிந்ததே!...

நான்கு மாதங்களுக்கு மின்பணியாளர் ஏறி இறங்கினால்
அதற்குப் பின் அதுவாகக் காரை உதிர்ந்திட
எலும்புக் கூடாகக் காணலாம் அவற்றை....



எனவே புதிதாக மின்கம்பங்களை நட்டபின் தான்
மின்சாரம் வழங்க இயலும் என்பதில் நியாயம் உள்ளது...

சாலையில் விழுந்த நூற்றுக் கணக்கான மரங்களை
அப்புறப்படுத்திய பிறகும் நிவாரணப் பணிகளில் தாமதம்...

எங்களை யாரும் வந்து பார்க்கவில்லை..
சினிமாக்காரர்கள் ஆறுதல் சொல்லவில்லை..
மெட்ராஸ்காரர்கள் மீம்சு போடவில்லை..
- இப்படியெல்லாம் ஆதங்கம்...

மெட்ராஸ்காரன் மீம்சு போட்டால்
நல்ல தண்ணீர் கிடைத்திடுமா?..

சினிமாக்காரன் பணம் கொடுத்தால்
சோத்துப் பஞ்சம் தீர்ந்திடுமா?...

இடையே புகுந்து கலைத்து விட்டவர்கள் யாரோ?.. தெரியவில்லை..


ஆங்காங்கே வன்முறைகள் நிகழ்ந்துள்ளன...
இவையெல்லாம் விரும்பத்தக்கவை அல்ல...

தஞ்சை மக்களின் குணமும் அப்படியானது அல்ல!...

பெருந்தலைவர் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு
துயர் துடைத்ததெல்லாம் அந்தக் காலம்!...
1977 நவம்பர் மாதம் தீபாவளி சமயத்தில்
தஞ்சை மாவட்டம் இதேபோல ஒரு பேரழிவைச் சந்தித்தது...

Indian P&T  மற்றும் வானொலி
இவற்றைத் தவிர வேறொரு தகவல் சாதனமும் இல்லாத காலம் அது...

வேரோடு மரங்கள் சாய்வதைக் கண்ணால் கண்டிருக்கிறேன்...

திண்டுக்கல் அருகே குடகனாறு அணை உடைந்து
சிதறியதெல்லாம் அப்போது தான்!...

ஏழைகளின் இதயத்தில் இன்னும் இருப்பதன் ரகசியம் இதுதான்!..
அப்புறம் 1985 ல் மிகப் பெரிய சோதனை...
ராமாவரம் தோட்டத்திலிருந்து
மக்கள் திலகம் கன்னிமாரா ஹோட்டலுக்கு இடம் மாறினார்...

அந்த அளவுக்கு சென்னை சிக்கலைச் சந்தித்தது...
அதுவும் தீபாவளிக்குப் பிறகுதான்...

நானும் எனது நண்பர்கள் மூவரும்
தஞ்சையிலிருந்து ஒவ்வொரு பேருந்தாக மாறி
சென்னைக்குச் சென்று கொண்டிருக்கின்றோம்...

விழுப்புரத்தில் புறப்படும்போதே கனமழை...
பேருந்தில் சங்கப் பலகை மாதிரியான கடைசி இருக்கை...

பேருந்து மதுராந்தகத்தைக் கடக்கும் போது
பின்புற வாசலில் தண்ணீர் அலைமோதுகின்றது....

காலை ஏழு மணியளவில் பாரிமுனை சென்றடைந்தாயிற்று..
அப்போதெல்லாம் கோயம்பேடு குக்கிராமம்...

பாரி முனை சென்ற பிறகுதான் தெரிகின்றது -
நாங்கள் வந்த பேருந்து தான் அந்த வழியில் கடைசி பேருந்து என்று!..

எங்களுக்குப் பின்னால் கால் மணி நேரம் கழித்து வந்த பேருந்தை
மதுராந்தகம் ஏரியின் கரை மீறிய வெள்ளம் அடித்துக் கொண்டு போயிற்று....

ரயில்வே தண்டவாளமும் தடம் தெரியாமல் போனது...

அதற்கப்புறம் பொதுவாக எல்லாருக்கும் தெரியும்...

சுனாமி...

2009/10 களில் இதே கார்த்திகையில்
தஞ்சை நகரத்துடன் தொடர்பின்றி
மன்னார்குடி, கும்பகோணம் நகரங்கள் எல்லாம் துண்டிக்கப்பட்டன...

ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் சாலைகள் காணாமல் போயின...

இதிலிருந்தெல்லாம் தஞ்சை மண்டலம்
மீண்டு வரவில்லையா!.. மீண்டும் வரவில்லையா!.

அரசாங்கத்துடன் பொதுமக்களும் கைகோர்த்துள்ளனர்..
பல இடங்களில் இருந்தும் நிவாரணப் பொருட்களை அனுப்பி வைக்கின்றனர்..


பட்டுக்கோட்டைக்கு அருகில் உள்ளது நாடியம் எனும் கிராமம்...

இவ்வூருக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றி வந்த வாகனத்தை
இளநீர்களாலும் தேங்காய்களாலும் நிறைத்து அனுப்பியிருக்கின்றனர் -
மழையாலும் புயலாலும் பாதிக்கப்பட்ட மக்கள்...


இது தான் உதார குணம்...
தஞ்சை மண்ணிற்கே உரிய உயர்ந்த குணம்...

தங்கள் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு
பிறரை மகிழ்விக்கும் பெருங்குணம்!...

இந்நிலையில் -
இதோ நாங்கள் இருக்கின்றோம்.. - என,
சென்னை ஸ்ரீராமகிருஷ்ண மடாலயத்தினர்
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கி ஆதரித்துள்ளனர்...


இதுமட்டுமல்லாது -
கேரளத்திலிருந்து மின்பணியாளர்கள் -
மக்கள் துயர் தீர்த்து களப்பணியாற்ற வந்திருக்கின்றனர்... 



ஈவும் இரக்கமும் இன்னமும்
இம்மண்ணில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன...
***

கரை கடந்த கஜா - எனும் 
சென்ற பதிவில் கருத்துரைத்து ஆறுதல் வழங்கிய
நண்பர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி..

எங்களது துயரத்தில் தோள் கொடுத்த
நல்லோர் அனைவரையும்
இருகரம் கூப்பி வணங்குகின்றேன்...

அதேசமயம்
இத்துயரத்திலிருந்து மீண்டு வரும் வல்லமையைத்
தந்தருள்வாய் இறைவா!.. என்று
வேண்டுகிறேன்!...

மீண்டு எழுவோம்..
மீண்டும் எழுவோம்!...
ஃஃஃ 

12 கருத்துகள்:

  1. தஞ்சை தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என்ற காலமெல்லாம் போச்சு. டெல்டா மாவட்டங்களைச்சூறையாடியிருக்கும் இந்த இயற்கைப் பேரழிவிலிருந்து ​மக்கள் சீக்கிரம் மீண்டெழ வேண்டும். மீண்டும் எழுவார்கள்.

    பதிலளிநீக்கு
  2. குடிக்கத் தண்ணீர் கூடக் கிடைக்காத நிலையில் பலர் இருக்கிறார்கள் என்பது மிகவும் வேதனை தரும் செய்தி. அதற்காவது நடிகர்களோ, மற்றவர்களோ உதவிக்கரம் நீட்டத்தான் வேண்டும்.

    பதிலளிநீக்கு
  3. நிச்சயம் இந்தப் பிரச்சனையிலிருந்து தென் மாவட்டங்கள் மீண்டு வரும்.

    யார் உதவி செய்ய முன்வந்தாலும் அதனை வரவேற்கலாம்.

    பதிலளிநீக்கு
  4. அனைவர் துயரமும் விரைவில் தீர்ந்திட எமது பிரார்த்தனைகள் ஜி

    பதிலளிநீக்கு
  5. எல்லோரும் உதவி செய்கின்றனர். ஆனால் தேவை இல்லாமல் ஊடகங்கள் மக்களைத் தூண்டித் தூண்டிக் கேள்விகள் கேட்டுத் தங்களுக்குச் சாதகமான பதில்களை வரவழைக்கின்றனர். முதல்வர் நேரில் ஆய்வுக்குச் சென்றவர் பாதியிலேயே திரும்பிவிட்டதாய்ச் சொல்கின்றனர். காரணம் தெரியவில்லை. ஆனால் மத்திய அரசு முழு உதவிகளைச் செய்வதாய் ஏற்கெனவே சொல்லி விட்டது. உள்துறை அமைச்சரும் வாக்குக் கொடுத்திருக்கிறார். ஆனாலும் ஊடகங்கள் மோதி ஏன் வாய் திறக்கவில்லை என்று கேட்டு விவாதமேடை அமைத்துக் கொண்டிருக்கின்றன. எந்த ஊடகமாவது பாதிக்கப்பட்ட மக்களுக்கான களப்பணிகளைச் செய்ததாய்ச் சொல்லவில்லை. மாறாக மக்களைத் தூண்டி விடுகின்றனர். இந்த விஷயத்தில் எதிர்க்கட்சிகள் ஓரளவுக்குப் பொறுப்போடு நடந்து கொள்கின்றன. மின்சாரம் முழுமையாகச் சீராக ஒரு மாதத்துக்கும் மேல் ஆகலாம். எல்லாம் புதிதாகப் போடப்பட வேண்டும்.அதற்கான தேவையான பொருட்கள் மின் வாரியத்திடம் இருக்க வேண்டும் அல்லவா? இல்லை எனில் புதிதாக வாங்க வேண்டும். ஆகவே தாமதம் ஏற்படத் தான் செய்யும். கோவை, திருச்சி மாவட்ட மின் ஊழியர்களும் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்ட மின்சாரப் பணிகளுக்கு என அனுப்பப்பட்டிருக்கின்றனர்.

    பதிலளிநீக்கு
  6. 'வையத்தார்' மனசு வைக்க வேண்டும்...

    பதிலளிநீக்கு
  7. இயல்பு நிலைக்குத் திரும்பும் நாளுக்காகக் காத்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  8. உண்மையில் பல பல நல்லுங்கள் அங்கு உதவிகொண்டு தான் இருக்கிறார்கள்..

    இயற்கை க்கு முன் நாம் என்ன செய்வது ..

    இதிலும் மீண்டு எழுவார்கள் நம் மக்கள் ...

    பதிலளிநீக்கு
  9. இயற்கையின் சீற்றத்த்தால் அல்லல் படும் மக்களுக்கு பல உதவிக் க்ரங்கள் நீண்டு இருக்கிறது. நிவாரணப் பொருட்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சரியாக போய் சேர வேண்டும்.
    மின்சாரதுறையை சேர்ந்தவர்கள் மழையைபார்க்காமல் உழைத்து கொண்டு இருக்கிறார்கள்.
    மீண்டும் எழுவார்கள் இறைவன் அருளால் மீண்டும் எழுவார்கள்.
    டெல்டா விவாசாயிகள் இளநீரை மாணவ்ர்களுக்கு அனுப்பிய செய்திகளை படித்தும், பார்த்து நெகிழ்ந்தேன். நம் ஊருக்கு வந்தவர்களை கஷ்டத்திலும் உபசரித்த விதம் அருமை. உயர்ந்த குணத்திற்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  10. 1977க்குப் பிறகு இவ்வளவு பாதிப்பை இப்பொழுதுதான் பார்க்கிறேன். நாகை சென்ற உறவினர்
    வீடு திரும்ப ஒரு வாரம் ஆனது.
    அன்பு துரை செல்வராஜு இப்பொழுது பெய்யும் மழை நிற்க வேண்டும். புது உடவிகள் அவர்களைச் சென்றடைய வேண்டும்.
    விவசாயிகளுக்கும் மக்களுக்கும் ஏற்பட்டிருக்கும் சோகம் சீக்கிரம் தீர் வேண்டும். எல்லாம் நடக்கும்.
    தஞ்சை மண் மீண்டும் பொலியட்டும்.என் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  11. துளசிதரன் : மக்கள் மீண்டு விடுவார்கள். எல்லா பகுதிகளும் மீண்டும் புத்துணர்வு பெற்றி சீராகிவிடும் என்று நம்புவோம், பிரார்த்திப்போம்

    கீதா: இம்முறை பாதிப்பு அதிகம் என்று தோன்றினாலும் ஒவ்வொரு தரம் புயல் அடிக்கும் போதும் நாகை வேதாரண்யம் கடலூர் பகுதிகள் தான் அதிக பாதிப்புக்கு உள்ளாகும் இடங்கள்.

    கீதாக்கா சொல்லியிருப்பது போல் ஜனநாயகத்தின் நாலாவது தூணாக நிற்க வேண்டியவை நாட்டை நல்ல வழியில் கொண்டு செல்லும் பொறுப்பை உடையவர்கள் தற்போதெல்லாம் நிஜமாகவே செய்தி சேகரிப்புக்காகவும், பரபரப்பிற்காகவும் கட்சி ரீதியாகவும் மக்களை தூண்டிவிட்டு செய்வதாகவே தோன்றுகிறது...கெட்டதை படம் பிடிப்பவர்கள் நிவாரணம் நடப்பதையும் எடுக்கலாம் ஆனால் அதுவும் யார் நிவாரணம் வெளியில் வர வேண்டுமோ அந்தப் படம் மட்டும் தான் வரும். பாராபட்சமின்றி நடு நிலையோடு வருவதில்லை என்பது மிக மிக வேதனைக்குரிய ஒன்று..

    அந்தப் பகுதி மக்களுக்காக பிரார்த்திப்போம் மீண்டு வருவார்கள் நிச்சயமாய்..

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..