நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், அக்டோபர் 02, 2018

நீதி எனும் ஜோதி

அண்ணல் எழுதிய 
சத்திய சோதனையில் இருந்து
சிறு துளி
***

என் திறமையில் எனக்கு பிரமாதமான மதிப்பு இருந்ததில்லை... 

எனக்குப் பரிசுகளும் உபகாரச் சம்பளங்களும் 
கிடைக்கும் போதெல்லாம் நான் ஆச்சர்யப்படுவதுண்டு... 

ஆயினும், நான் எனது நன்னடத்தையை 
சர்வ ஜாக்கிரதையாகக் காப்பாற்றி வந்தேன்... 
இதில் சிறு குறை ஏற்பட்டாலும் கண்ணீர் விட்டு அழுது விடுவேன்... 

கண்டிக்கப்பட்டாலோ கண்டிக்கப்பட வேண்டியவன் என்று 
ஆசிரியர் கருதினாலோ, என்னால் சகித்துக் கொள்ள முடியாது..

முதல் வகுப்பில் அல்லது இரண்டாம் வகுப்பில் நடந்த சம்பவம் - இது...

ஒரே ஒரு தடவை அடிபட்டதாக நினைவு. 
அடிபட்டதற்காக வருந்தவில்லை. நான் அடிபட வேண்டியவன் 
என்று கருதப்பட்டதே - எனக்கு மிக வருத்தத்தை அளித்தது... 
அதற்காகவே அழுதிருக்கின்றேன்...

மற்றொன்று - ஏழாம் வகுப்பு படிக்கும் போது நடந்தது. 

அச்சமயம் திரு. தோராப்ஜி யதுல்ஜி ஜிமி - தலைமையாசிரியர்... 
மாணவர்கள் அவரிடம் அதிக பிரியம் கொண்டிருந்தனர்.. 
அதே சமயம், அவர் மிகவும் கண்டிப்பானவர். நல்ல ஆசிரியர். 

எந்த காரியத்தையும் முறைப்படி ஒழுங்காகச் செய்வதில்
அவருக்கு ஈடுபாடு அதிகம். 

அவர், மேல் வகுப்புப் பையன்களுக்குக் 
கிரிக்கெட் , உடற்பயிற்சி இரண்டையும் கட்டாயமாக்கி விட்டார். 
இந்த இரண்டும் எனக்குப் பிடிப்பதில்லை. 

நான் கிரிக்கெட் விளையாடியதும் இல்லை. 
உடற்பயிற்சி செய்ததும் இல்லை.

இவற்றில் -
நான் சேராமல் ஒதுங்கியிருந்ததற்கான காரணம் என்னுடைய கூச்சம்!.. 
தவிரவும் - படிப்பிற்கும் இவற்றுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை 
- என்ற தவறான கருத்தும் மற்றொரு காரணம். 


ஆனால், இன்று பாடத்திட்டத்தில் மனப்பயிற்சிக்கு 
எந்த அளவு சிறப்பு அளிக்கப்படுகின்றதோ அந்த அளவு சிறப்பு உடற்பயிற்சிக்கும் அளிக்கப்பட வேண்டும் என்பதை அறிவேன்...  

திறந்த வெளியில் நீண்ட தூரம் நடப்பதால் 
ஏற்படக்கூடிய நன்மைகளைக் குறித்துப் படித்திருந்ததால் - 
நீண்ட நேரம் நடக்கும் பழக்கம் எனக்கு ஏற்பட்டது... 
இதன் பயனாக என் உடல் நன்கு வலுப்பெற்றது... 

மேலும் - உடற்பயிற்சி வகுப்பை நான் விரும்பாததற்குக் காரணம், 
என்   தந்தைக்குப் பணிவிடை  செய்ய வேண்டும் என்ற ஆர்வமேயாகும்... 

பள்ளிக்கூடம் விட்டதும்,
நேரே வீட்டுக்குப் போய் அவருக்குப் பணி செய்வேன்...
அதற்குக் கட்டாயத் தேகப்பயிற்சி இடையூறாக இருந்தது...  

ஆகையால் -
தேகப் பயிற்சி வகுப்புக்குப் போகாதிருக்க அனுமதிக்குமாறு
தலைமை ஆசிரியரிடம்   கோரினேன்...

ஆனால், அவர் ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டார். 

அன்று சனிக்கிழமை...
மாலை நான்கு மணிக்கு திரும்பவும் நான் வீட்டிலிருந்து 
உடற்பயிற்சி வகுப்புக்குச் செல்ல வேண்டும்...

ஆனால், நான் போய்ச் சேர்வதற்குள் 
பிள்ளைகள் எல்லாம் பயிற்சி முடிந்து போய் விட்டார்கள். 

வந்திருந்தோரின் கணக்கை 
திரு ஜிமி மறுநாள் தணிக்கை செய்துபோது 
நான் வரவில்லை என்று குறித்திருந்ததைக் கண்டார்.

மோகன் தாஸ்!.. நீ ஏன் நேற்று வரவில்லை?.. 
- என்று என்னைக் கேட்டார்.

அதற்கு நடந்ததைச் சொன்னேன்.   

நான் கூறியதை நம்ப அவர் மறுத்து விட்டார்...
ஓரணாவோ அல்லது இரண்டணாவோ  
அபராதம் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்...

பொய் சொன்னதாக நான்   தண்டிக்கப்பட்டேன்!.. 

இது எனக்கு மிகுந்த மன வேதனையாகி விட்டது...
நான் குற்றமற்றவன் என்று நிரூபிப்பது எப்படி? அதற்கு வழியே  இல்லை.. 

வேதனை தாங்காமல் கதறி அழுதேன். 

பள்ளிக்கூடத்தில் நான் அசட்டையாக நடந்து கொண்ட 
முதல் சந்தர்ப்பமும், கடைசிச் சந்தர்ப்பமும் இதுதான். 

பள்ளிக்கூடம் விட்டதும் 
நேரே வீட்டுக்கு - நான் வந்துவிட வேண்டும்.. - என்று தாம் விரும்புவதாக,
என் தந்தை - தலைமையாசிரியருக்கு கடிதம் எழுதியதன் பேரில், 

உடற்பயிற்சி வகுப்புக்கு வரவேண்டும்..
என்பதில் இருந்து நான் விலக்களிக்கப் பெற்றேன்.

முடிவில் அந்த அபராதம் ரத்து செய்யப்பட்டதில் நான் வெற்றி அடைந்தேன்..


உண்மையுள்ளவன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியதும் முக்கியம்.. என்பதை அன்று தான் உணர்ந்தேன்!..

வாழ்க நீ எம்மான்!.. 
இன்று அக்டோபர் 2. 
அந்த உண்மையுள்ளவனின்
நூற்றைம்பதாவது பிறந்த நாள். 
 * * *

அந்த மாந்தோப்பிற்குள் திடீரென ஆரவாரம். 

என்ன இது சத்தம்?.. 

குடிசைக்குள் இருந்து வெளியே வந்து பார்த்த கிழவருக்கு அதிர்ச்சி.. 

விடலைப் பசங்களாக நான்கைந்து பேர்..
கையில் கிடைத்த கற்களைக் கொண்டு 
மாங்காய்களை அடித்துக் கொண்டிருந்தனர். 

தோட்டக் காவலாளியான கிழவர் கூச்சலிட்டதும் - 
கல்லெறிந்த சிறுவர்கள் அனைவரும் சிட்டாகப் பறந்து விட்டனர்..

ஒரே ஒரு சிறுவன் மட்டும் வசமாக சிக்கினான். 
அதுவும் அவன் தப்பி ஓடாததால் மாட்டிக் கொண்டான். 

மதியத் தூக்கம் கெட்டுப் போன கடுப்பில் 
கையில் சிக்கியவனுக்கு நாலு அறை பளார்.. பளார்.. - எனக் கொடுத்தார்... 

வலி தாங்காமல் துடித்தான் சிறுவன். 

யாரடா நீ.. இதே வேலையா உனக்கு!.. 
மாங்காய் திருடுவது தப்பில்லையா?.. 
உன்னை இழுத்துக் கொண்டு போய் 
பஞ்சாயத்தில் விட்டால் என்ன நடக்கும் தெரியுமா!..

ஐயா.. ஐயா.. நான் திருடவில்லை!.. 
அந்த பசங்களோடு விளையாடியது உண்மைதான்.. 
ஆனால், நான் மரத்தில் கல் எறியவில்லை..

கிழவர் வியந்து நோக்கினார். 
சிறுவனின் கன்னங்களில் நீர் வழிந்தது..

அவன் சொல்வது உண்மை என்பது கிழவருக்குப் புரிந்தது.

அம்மாவும் நானும் தான். என் அப்பா இறந்து விட்டார்.  
பரம ஏழை... வேறு யாரும் ஆதரவு இல்லை..
மாமா தான் சோறு போட்டு படிக்க வைக்கிறார்..
பசித்தாலும் பாவம் செய்யக்கூடாது - ன்னு அம்மா சொல்லியிருக்கின்றார்கள்..
அதனால, தப்பெல்லாம் நான் செய்யவே மாட்டேன்!..

காதுகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போலிருந்தது கிழவருக்கு. 

அன்பு அவருள் பொங்கியது. ஆதரவுடன் அணைத்துக் கொண்டார்.

உன் பேர் என்ன!..

லால் பகதூர்!..

இதோ பார்.. இனிமேல் அழக்கூடாது..
என்னை உன்னோட தாத்தா மாதிரி நெனைச்சுக்க...
கோவப்பட்டு உன்னை அடிச்சதை மறந்துடு.. 
உங்கம்மா நல்ல புத்தி சொன்னாங்க இல்லையா!.. 
அதோட இதையும் மனசுக்குள்ள வச்சுக்க!..  

இனிமே, என்னைக்கும் இந்த மாதிரி பசங்களோட சேரவே கூடாது...
நீ என்னதான் நல்லவனா இருந்தாலும் களவாணிப் பசங்களோட சேர்ந்தால் உனக்கும் அந்தப் பேர் தான் கிடைக்கும்.. 

நல்லா படிக்கணும்.. நல்லவன்னு பேரெடுக்கணும்...
உன்னோட வாழ்க்கைய நீதான் கவனமா வாழணும்...
அப்பதான் ஊரு உன்னைய உத்தமன்னு  மதிச்சி கும்பிட்டு நிக்கும்...
நீ எப்ப வேணாலும் இந்த தோட்டத்துக்கு வா.. 
இஷ்டம் போல மாம்பழம் பறிச்சு சாப்பிடு..
ஆனா, தாத்தா சொன்னதை மட்டும் மறந்திடாதே!..

சிறுவனின் கைகளில் நிறைய மாம்பழங்களைக் கொடுத்தார் கிழவர்.

சரிங்க தாத்தா.. மறக்க மாட்டேன்!.. - சிறுவன் சந்தோஷத்துடன் குதித்து ஓடினான்.

2 அக்டோபர் 1904 - - 11 ஜனவரி 1966 
அன்று குதித்து ஓடிய சிறுவனைத் தான்
காலச் சுழற்சி 
பாரதத் திருநாட்டின்
பிரதமராக ஆக்கி வைத்தது..

அவரைத் தான் - 
இன்றும் பாரதத்தின் நல்லோர் மதிக்கின்றனர்.. 
போற்றிக் கொண்டிருக்கின்றனர்..



ஜய் ஜவான்.. ஜய் கிசான்!.. - என்று முழங்கி
நாட்டை முன்னேற்றப் பாதையில் நடத்தியவர்...

தான் அமைச்சராக இருந்த ரயில்வே துறையில்
ஏற்பட்ட விபத்திற்குத் தார்மீகப் பொறுப்பேற்று
பதவி விலகிய உத்தமர்..


லால்பகதூர் சாஸ்திரி - காமராஜர் - நேருஜி..
இனியொரு தமிழனுக்கு இப்படியும் வாய்க்குமோ!.. 
இன்று அக்டோபர் 2. 
அந்த உத்தமனின் பிறந்த நாள்.
* * *

தென் தமிழகத்தின் சிற்றூர்களுள் ஒன்றான விருதுப்பட்டி.. 

அவ்வூரில் 1885 ல் உருவாக்கப்பட்ட
நாடார் உறவின்முறை க்ஷத்ரிய வித்யாசாலை கோலாகலமாக இருந்தது...  

காரணம் அன்று சரஸ்வதி பூஜை...
வித்யாசாலையில் பிள்ளைகள் ஒன்றுகூடி சாமி கும்பிடுதல். 

பூஜை முடிந்ததும் மாணாக்கர்களுக்கு 
அவல் பொரி சுண்டல் பழம் வழங்குதல் - என்பதாக நிகழ்ச்சி நிரல்...

இதற்கென படிக்கும் பிள்ளைகள் அனைவரும் 
பெரிய வாத்தியாரிடம் பூஜைக்காசு கொடுத்திருந்தார்கள்.

பூஜை முடிந்ததும் பிள்ளைகள் ஆரவாரமாக முண்டியடித்துக் கொள்ள - மேலோட்டமாக இருந்த நிர்வாகம் திகைத்துப் போனது...

மாணாக்கர்களில் கொஞ்சம் பேருக்கு எதுவுமே கிடைக்கவில்லை.

அவர்களுள்,
தேங்காய் வியாபாரி குமாரசாமி நாடார் மகன் காமாட்சியும் ஒருவன்!..

வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருந்த பாட்டி பார்வதியம்மாள் - 
வெறுங்கையுடன் வந்த பேரன் காமாட்சியை உற்று நோக்கினார்.

காமாட்சி!.. வாட்டமா வர்றீங்களே.. ஏன்யா!..
எல்லாப் புள்ளைங்களும் கையில 
சுண்டல் பழமெல்லாம் கொண்டு போறாங்களே.. 
உமக்குக் கெடைக்கலயா... ஐயா!...

இல்லையே!..

ஏன்யா!.. நீயும் மத்த புள்ளைங்களைப் போல 
முன்னாடி போயி வாங்க வேண்டியது தானேய்யா!?..

அது எதுக்கு?.. நாமளுந்தானே சாமி கும்பிட தலைக்கட்டு கொடுத்தோம்.. 
அப்ப நம்ம பங்கை அந்த வாத்தியார் ஐயா சரியா கொடுக்க வேணாமா?.. எல்லாரும் சமம் தானே!.. தள்ளு முள்ளு நியாயமா?.. சொல்லுங்களே!..

பார்வதியம்மாள் - தன் அன்புக்குரிய பேரனைத் தீர்க்கமாகப் பார்த்தார்.

உமக்கு சுண்டல் கிடைக்காம போச்சே.. அதனால கோவம் வரலையா?..

ஏங்.. எதுக்குக் கோவம்?. இல்லாத வீட்டுப் புள்ளைங்க தானே!. 
அவங்க சாப்பிட்டா என்ன.. நாம சாப்பிட்டா என்ன!. 
அடுத்தவங்க சந்தோசமா சாப்பிடுறதப் பார்த்தா 
நமக்கும் சந்தோஷந்தான்...னேன்!..

ஆனந்தக் களிப்புடன்
பேரனை வாரி அணைத்துஉச்சி முகந்தார் பார்வதியம்மாள்.

எந் ராசா!.. உன்னைப் போல யாருய்யா!.. 
ஊரெல்லாம் உன்னைப் பேசுமய்யா ஒரு நாளைக்கு!..

15 ஜூலை 1903 - - 2 அக்டோபர் 1975 
அந்த ராசனை - 
காமராசனைத் தான் - 
நாள்தோறும் பேசிக் கொண்டிருக்கின்றது 
தமிழ் கூறும் நல்லுலகம்!..


இன்று அக்டோபர் 2.
ஊர்ப் பிள்ளைகள் உண்டு களித்ததை
கண்ணாரக் கண்டு களித்த கர்ம வீரன்
கண்மூடி மீளாத் துயிலில் ஆழ்ந்த நாள்!..


தமிழகத்தை முன்னேற்றிய சிறப்புறு முதல்வர்..
கல்விக்கண் கொடுத்த கர்மவீரர்..
ஏழையாய்ப் பிறந்து ஏழையாய் வாழ்ந்து
ஏழையாகவே போய்ச் சேர்ந்தவர்..


ஏழையாய்ப் பிறந்து ஏழையாய் வளர்ந்து - வாழ்ந்து
நாட்டின் மிகப் பெரிய பொறுப்புகளில் அமர்ந்து
அரும்பணியாற்றி - இறுதி வரைக்கும் ஏழையராகவே
வாழ்ந்து புகழுடம்பு எய்திய புண்ணியர்கள்!..

தாய்நாட்டிற்காகவே வாழ்ந்து முடிந்த
தூயவர்களால் பெருமையுற்றது - இந்நாடு.  
இத்தகைய உத்தமர்களால் மீண்டும் 
பெருமையுற வேண்டும் - தாய்நாடு!..

ஜய் ஹிந்த்!..
***

23 கருத்துகள்:

  1. காலை வணக்கம் இந்த நாளின் மிகச் சிறந்த பதிவு. குறையில்லாமல் இந்நாளின் நாயகர்களை நினைவு கூர்ந்திருக்கும் விதம் சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. எனினும் காமராஜர் சம்பந்தப்பட்ட சம்பவம் மனதுக்கு இதமாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..

      விளையும் பயிர் முளையில் தெரியும் என்பார்கள்..
      மேலோர் என்றும் மேலோரே..

      தங்கள் கருத்துரைக்கு மகிழ்ச்சி..

      நீக்கு
  3. அருமையான பதிவு.
    காமராஜர் அவர்களைப் பற்றி படிக்கும் போது கண்ணில் நீர் துளிர்க்குது.
    சிவகாசியில் இந்து நாடார் பெண்கள் பள்ளியில் படிக்கும் போது பள்ளிக்கு வந்து
    பென்சில், ரப்பர் கொடுத்ததை மறக்கவே முடியாது.

    படங்களும் நல்ல தேர்வு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      காமராஜர் கையால் பரிசு வாங்கியதற்குக்
      கொடுத்து வைத்திருக்க வேண்டும்..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. மிக சிறப்பான பகிர்வு..

    ஒவ்வொரு தகவல்களுமே வியப்பை ஏற்படுத்துகின்றன..

    எத்தகைய மா மனிதர்கள் இவர்கள் ..இவர்களை அறிந்தாலே நமக்கு அறியாமை விலகிவிடும்..


    மிக்க நன்றி ஐயா இத்தகைய பதிவிற்கு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கும்
      கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. காலை வணக்கம் ஐயா.

    சரியான நாளில் சரியான பகிர்வு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. பிறரின் தவறுகளுக்குத் தன்னை வருத்திக் கொள்ளும் காந்திஜியின் குணம் மிகவும் பிடிக்கும் ஒரு சிறு கதையும் அது பற்றி எழுதிய நினைவு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. அன்பின் ஜி
    மாமனிதர்களைப்பற்றிய அரிய தகவல்கள் இவர்கள் வகித்த பதவிகளின் அழகு இன்று அலங்கோலமியது காலத்தின் கொடுமை.

    ஜி காமராஜரின் இறந்ததேதி புகைப்படத்தில் தவறாக இருக்கிறது சரி செய்க...

    பதிலளிநீக்கு
  8. அழகிய பதிவு, நிறைய விசயங்கள். இன்னொரு தடவை பொறுமையாகப் படிக்க வேண்டும்.

    அது காந்தித்தாத்தாவின் இளமைப் படமோ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஞானி..

      காந்திஜியின் இளமைக் காலப் படம் தான் அது..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. முத்தான மூன்று கருத்துக்கள். இப்படிபட்ட உத்தமர்கள் நம் நாட்டில் தலைவர்களாக இருந்திருக்கிறார்கள். பகிர்ந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  10. உண்மையுள்ளவன் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்பதை உணர்ந்தது//

    ஆம் ஆம்! நல்லதொரு கருத்து. காந்தியின் அனுபவங்கள் சொன்னது மிக மிகச் சிறப்பு அண்ணா...இதோ மாந்தோப்பிற்குப் போகிறேன்

    கீதா

    பதிலளிநீக்கு
  11. மூன்று அருமையான தலைவர்களைப் பற்றிசொல்லிய விதம் வெகு சிறப்பு என்றாலும் காமராசர் சம்பவம் மனதை நெகிழ்வித்தது. அந்தச் சிறு வயது சொல் தானே பின்னாளில் எத்தனையோ ஏழைப்ப் பிள்ளைகளுக்கு உணவளித்து பள்ளிக்கு வரச் செய்தது...அருமையான பதிவு!

    கீதா

    பதிலளிநீக்கு
  12. சிறந்த பதிவு. நல்லவர்களை இந்த நாளில் நினைத்திருக்கிறீர்கள். மூவரும் பாரத நாட்டின் முத்துக்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

    இவர்களை நினைத்துப் பெருமைப்படுவதா இல்லை இவர்களை மீறி வெளியில் வந்த மற்ற சிறியவர்களை நினைத்துக் கோபம்/வருத்தம் படுவதா?

    சாஸ்திரி அவர்கள் சந்தேகத்துக்குரிய மரணத்தை அடைந்தார்கள். காந்தி, மதத் தீவிரவாத எண்ணம் கொண்டவர்களால் மரணமடைந்தார். (ஆனால் அதற்காக அவர் காம்ப்ரமைஸ் செய்துகொள்ளவில்லை, எந்தப் பாதுகாப்பையும் ஏற்கவில்லை, பாதுகாப்பே கூடாது என்று கடுமையாகச் சொன்னவர் அவர்). காமராசர்....நல்லவர்களை மதிக்கத் தெரியாத மக்களால் நாம் இழந்த தலைவர். சிங்கத்தை வேண்டாம் என்று நாம் சொன்னதால், சிறு நரிகள் நாட்டாமையைப் பிடித்துக்கொண்டன.

    பதிலளிநீக்கு
  13. உயர்ந்தவர்களைப்பற்றி மறுபடியும் மறுபடியும் படிக்கையில் மனதும் பண்படுகிறது. மிகவும் சிறப்பான பதிவு!

    பதிலளிநீக்கு
  14. பெருந்தலைவர்களை நினைவுகூர்ந்த விதம் அருமை.

    பதிலளிநீக்கு
  15. சிறந்த பதிவு. தாமதமான வருகை! சாஸ்திரி தினம் தினம் கங்கையைக் கடந்து பள்ளிக்குச் செல்லக் காசில்லாமல் நீந்திச் சென்று அக்கரையை அடைந்து படித்துவிட்டுத் திரும்பவும் நீந்தியே வருவாராம். சாஸ்திரங்களில் கரை கண்டதால் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் சாஸ்திரி பட்டம் கொடுத்து அவரைக் கௌரவித்தது. தனக்கோ தன் குடும்பத்துக்கோ எதுவுமே செய்து கொள்ளாத உயர்ந்த மனிதர்களில் அவரும் முக்கியமானவர். காமராஜரை நினையாத நாள் இல்லை. தனிப்பட்ட விரோதத்தால் அரசியலில் இருந்து விலக்கி வைக்கப்பட்டார்! :(

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..