நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

வாழி அவன்தன் வளநாடு மகவாய் வளர்க்கும் தாயாகி

ஊழி உய்க்கும் பேருதவி ஒழியாய் வாழி காவேரி!..


புதன், பிப்ரவரி 05, 2014

ஸ்ரீ ஹரிஹர புத்ரன் - 16

காணக் கண்கோடி வேண்டும் என அனைவரும் தவித்தனர். காரணம் -

ஐயன் மணிகண்டன் - ஆயிரங்கோடி சூரியனைப் போல்  ஜொலிக்கின்றான்.

கண்டு தரிசித்தவர் - தம் கடுவினைகள் எல்லாம்  - அனல் பட்ட மெழுகாய் அழிந்து போயின.


ஐயனே சரணம்!.. அப்பனே சரணம்!.. என அனைவரும் விழுந்து வணங்கினர்.

தேவதேவனே!.. எம் குலம் காக்க வந்த கோமகனே!.. எம்மையும் ஒரு பொருட்டாக ஆண்டு கொள்ளுக!.. என நெக்குருகி நின்றனர்.

தேவர்கள் பூமழை பொழிந்தனர்.

பந்தளத்தின் ராஜ தம்பதியினர் ஆனந்தக் கண்ணீர் வடித்தனர்.  யாம் பெற்ற பேறு - வேறு யார் பெறக்கூடும்!?..

மன்னரின் கேள்விக்கு விடையாக  - மணிகண்டப் பெருமான் திருவாய் மலர்ந்தான்.

யான் ஹரிஹரசுதன். ஸ்ரீதர்ம சாஸ்தாவின் மறு அவதாரம். தங்களது பூர்வ ஜன்ம புண்னியத்தினால் பந்தளத்தின் அரண்மனையில் மகவாக வளர்ந்தோம். இங்கே இதுவரையில் நிகழ்ந்ததெல்லாம் ஈசனின் அருளாணையின் படியே நிகழ்ந்தன.  எனவே எவ்விதத்திலும் கலக்கம் கொள்ள வேண்டாம்!..

ஐயனே!.. பிள்ளைப் பாசம் எங்கள் நெஞ்சை அழுத்துகின்றது. தாங்கள் எம்முடன் வளர்ந்த நாட்களில் வாழ்ந்த நாட்களில் -  தங்களுக்கு நாங்கள் ஏதும் பிழை புரிந்திருந்தால் - பெருங்கருணையுடன் அவற்றைப் பொறுத்தருள வேண்டும். இந்நாட்டையும் மணிமகுடத்தையும் தங்களின் திருவடிகளில் சமர்ப்பிக்கின்றேன். அவற்றை ஏற்று  எம்மை வழி நடத்தி - அருள் புரிக!..

மன்னர் வேண்டிக் கொண்டார்.

அப்பா!.. மணிகண்டா!.. சர்வக்ஞனாக எல்லாம் அறிந்திருந்தும் எந்தன் பிழையைப் பொறுத்தருளி - வஞ்சனை தொலைக்க வேண்டி வன்புலி வாகனனாக வந்த வள்ளலே!.. உன் மேல் உற்ற அன்பினால் எப்படி எப்படியெல்லாமோ அழகு செய்து பார்த்து மகிழ்ந்திருந்தேன். இன்னும் ஒரு குறையாக - நீ மணிமுடி தரித்து செங்கோல் ஏந்தி அரசு கட்டில் அமர வேண்டும். அதனை நான் கண்ணாரக் கண்டு இன்புற வேண்டும்!..

தாயே!.. தந்தையே!... உங்களின் பாசத்தினால் நான் கட்டுண்டு இருக்கின்றேன். ஆயினும் எனக்கென விதிக்கப்பட்டது ஒன்று உண்டு!...

சொல்லுக.. ஐயனே!.. அதை நிறைவேற்றக் கடமைப்பட்டுள்ளோம்!..

அங்ஙனமாயின் - தாங்கள் எமக்கு சூட்டுவதாக இருந்த மணிமுடியினை தம்பி ராஜராஜனுக்கே சூட்டுங்கள்!..

என்ன!?.. மூத்தவனாக முன்னவனாக தாம் இருக்கையில் - இளையவனுக்கா!..

ஹரிஹரபுத்ரனாகிய நான்  - கலியின் கொடுமைகளில் இருந்து மக்களைக் காத்தருளவே - அவதாரம் செய்தேன். மணிமுடி தரித்து - மண்ணை ஆள்வது  எனது நோக்கம் இல்லை. என் பணி நிறைவடைந்ததாக உணர்கின்றேன்!.. தாங்கள் அனைவரும் எனக்கு விடை கொடுக்க வேண்டும்!..

மன்னருக்கும் அரசிக்கும் ஆற்றாமை தாள் இயலவில்லை.

என் ஐயனே!.. என் அப்பனே!.. உனக்காக   திருஆபரணங்களைத் தேர்ந்தெடுத்து வைத்திருந்தேன். அவற்றை உனக்கு சூட்டி அழகு பார்க்க இனி என்றைக்கு இயலும்!?..

உங்கள் விருப்பத்தினை பூர்த்தி செய்ய வேண்டியது என் கடமை. இதோ இந்த சரம் சபரிமலைக்காட்டில் எந்த இடத்தில் பதிந்திருக்கின்றதோ  - அங்கே எனக்காக பதினெட்டுத் திருப்படிகளுடன் கூடிய  திருக்கோயிலை எழுப்புக..

அந்தத் திருக்கோயிலில்  எழுந்தருளும் திருமேனியில் மகர சங்கராந்தி அன்று திருஆபரணங்களைச் சூட்டி மகிழ்க. காந்த மலையில் பொன்னம்பல மேட்டில்  ஜோதி வடிவாகத் தோன்றியருள்வேன்!.. ஏக சிந்தையுடன் என்னை வழிபடும் அடியவர்களுக்கு எல்லா நன்மைகளையும் தந்து காத்தருள்வேன்!..

- என்று மணிகண்டப்பெருமான் திருவாய் மலர்ந்தருளினான்.

ஐயனே!.. அந்தத் திருத்தலத்தை நாங்கள் எவ்விதம் காண்பது?..

கருடன் வழிகாட்டுவான்.. திருமேனியினை ஸ்ரீபரசுராமர் பிரதிஷ்டை செய்வார். ஸ்ரீ அகத்திய மகரிஷி பூஜா தர்மங்களை விளக்குவார்!..

என்று மொழிந்த மணிகண்டன் - கோதண்டத்தில் சரம் தொடுத்து எய்தான். அது காற்றைக் கிழித்துக் கொண்டு விண்ணில் பாய்ந்து மறைந்தது.

அதுவரையிலும் பொன்னாபரணங்களுடனும் பட்டு பீதாம்பரத்துடனும் விளங்கிய மணிகண்டன் - அனைத்தையும் துறந்தவனாக - மரவுரியுடனும் ருத்ராட்ச துளசி மாலைகளுடன் திருக்கோலம் காட்டி  அருளினான்!..

மனதைத் திடப்படுத்திக் கொண்ட மன்னரும் மற்றவர்களும் மணிகண்டப் பெருமானை மனதாரத் துதித்து வணங்கினர்.

அங்கே மங்களம் நிறைந்திருந்தது.


அப்போது,  மன்னன் ராஜசேகர பாண்டியனும் மற்றவர்களும் தமக்கு நல்லுபதேசம் செய்தருளும்படி - மணிகண்டனிடம் தாழ்மையுடன் விண்ணப்பித்துக் கொண்டனர்.

நம்மை வாழ வைக்கும் பூமிக்கும் பூமியில் உள்ள உயிர்களுக்கும் எந்த விதத்திலும் தீங்கு செய்யக்கூடாது. எதைச் செய்தாலும்  இயல்பிலிருந்து மாறாமல் தனக்கு நன்மையானவைகளை விருப்புடன் செய்து கொள்வது போல - இந்த சமுதாயத்திற்கும் விருப்புடன் செய்வதே மேன்மைக்கு வழி வகுக்கும்.

ஈசனை வாயார வாழ்த்திப் போற்றுவதோடு  அனைவருக்கும் இனியதாக சந்தோஷமாக பேசவேண்டும்.

நம்முடைய மனம் கொண்டு ஈசனை தியானித்து - தனக்கும் தன் குடும்பத்திற்கும் நன்மைகளைக் கேட்கும் போது - பரந்து விரிந்த இந்தப் பூவுலகிலுள்ள அனைத்தும், அனைவரும் நன்றாக வாழவேண்டும் என்று உலக நன்மைகளுக்காகவும் பிரார்த்திக்க வேண்டும்.

இறைவனை வணங்குவதோடு மட்டுமல்லாமல் - அவனை மனதில் நிறுத்தி - செய்யும் கார்யங்களை சிறப்பாக செய்ய வேண்டும். அவனால் விளங்கும் இந்த பூமியில் யாவருக்கும் பயன்படுமாறு பொது சேவைகளை இயன்றவரை மனதாரச் செய்யவேண்டும்.

இப்படி வாழும் வாழ்க்கையில், தன் வியர்வையினால் சேர்த்த செல்வத்தை தனக்கும் தன் குடும்பத்திற்கும் என பத்திரப்படுத்து நியாயம் தான். எனினும் அத்துடன்  நில்லாமல் - பரோபகாரமாக  அற்றார்க்கும் அலந்தார்க்கும் எவ்வித பிரதி உபகாரமும் எதிர்பாராமல் - தானமும் தர்மமும் செய்ய வேண்டும்.

ஸ்வதர்மப்படி அவரவருக்கு இயன்றவரை, சகல ஜீவராசிகளுக்கும் நலம் விளையும்படி எளிய தர்மங்களைச் செய்வதே பரோபகாரம். பரோபகாரம் என்றால் - பரன் ஆகிய பரம் பொருளுக்கே செய்யும் நற்காரியம்.

இத்தகைய அருஞ்செயல்களை  - தன் விருப்பத்தால் செய்யும் தனி ஒருவர்  என்றாலும் ஒத்த மனம் உடைய பலர்  என்றாலும் அத்தகைய அருளாளர்கள் இருக்கும் இடம் புனிதமாகின்றது.

விருப்பத்துடன் தெய்வத்திற்கு  தொண்டு செய்வதைப் போலவே - திக்கற்ற எளியோருக்கும் செய்ய வேண்டும். அப்படிச் செய்யும்போது அதுவும் இறை வழிபாடாகவே ஆகின்றது.

தெய்வத்திற்கும் தேசத்திற்குமாக வாழ்வதே வாழ்க்கை. இப்படி வாழ்வதே மிகச்சிறந்த தவம்.
 
இக வாழ்க்கையை - அது இன்பமாக இருந்தாலும் துன்பமாக இருந்தாலும் அதனோடு விருப்பு வெறுப்பு இன்றி, இரண்டறக் கலந்து - எல்லாம் ஈஸ்வரார்ப்பணம் என்று வாழ்பவருடைய நெஞ்சத்தில் அருட்பெருஞ் சோதியாக  - இறைவன் ஒளிர்வான்.


தன்னை முன் நிறுத்திக் கொள்ளாமல் - தான் எனும் அகங்காரத்தைத் துறந்து - யார் ஒருவர் பரோபகாரமாக தர்மங்களைச் செய்கின்றாரோ  அவர்தம் நெஞ்சம் கோயில் ஆகின்றது. அங்கே அழைக்காமலேயே தெய்வம் வந்து கொலு இருக்கும்.

எல்லா உயிர்களையும் ஈஸ்வர ஸ்வரூபமாகப் பாவித்து திரிகரணமாகிய  மனம் மொழி மெய் இவற்றால் பரோபகாரத்துடன் வாழ்ந்து சாயுஜ்ய நிலையை  அடைய வேண்டும்.

இதைத் தான் ஞானிகளும் மகான்களும் சித்தர்களும் உத்தமர்களும் ஆன நம் முன்னோர்கள் நமக்கு உரைத்தனர். அதையே பின்பற்றி மேல்நிலையை அடைவீர்களாக!..

என்று கலியுக வரதனாகிய ஸ்ரீமணிகண்டன் ஆசீர்வதித்தான்.

ஐயா.. சரணம்!.. அப்பா சரணம்!..  ஐயப்பா சரணம்!..

என முழங்கியவாறு  - மணிகண்டனை வலம் செய்து வணங்கினர்.

இதுவே - எனது சரண மந்திரம் ஆகட்டும்!.. இருமுடி சுமந்து -  பெருவழி எனப்படும் அடர்ந்த காட்டிலும் மேட்டிலும் நடந்து, சபரிமலை உச்சியில் - ஐம்புலன்கள், அஷ்ட ராகங்கள், மூன்று குணங்கள் - எனும் பதினாறுடன்   அஞ்ஞானம் , ஞானம் எனும் இரண்டும் சேர்ந்ததாகத் திகழும் பதினெட்டுப் படிகளையும் கடந்து வரும் எவர்க்கும்  -


"..நீ எதை நாடி வந்தாயோ அது நீயாகவே உள்ளாய்!.." - என்பதை உணர்த்துவேன்!.. அனைவருக்கும் மங்கலம் உண்டாகட்டும்!..

மணிகண்டன் ஜோதி வடிவாக எங்கும் நிறைந்தவன் ஆனான்.   

ஐயா சரணம்!.. அப்பா சரணம்!..  
ஐயப்பா சரணம்!..
சுவாமியே சரணம் ஐயப்பா!..

சுவாமியே சரணம் ஐயப்பா!..
சுவாமியே சரணம் ஐயப்பா!..

10 கருத்துகள்:

 1. ஸ்ரீமணிகண்டன் ஆசீர்வாதம் தான் எவ்வளவு சிறப்பு...! நன்றி ஐயா... வாழ்த்துக்கள்...

  சுவாமியே சரணம் ஐயப்பா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் திரு. தனபாலன்..
   தங்களின் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி..

   நீக்கு
 2. ஸ்ரீ மணிகண்டனின் நல் உபதேசம் அனைவரும் கடைபிடிக்க வேண்டிய வாழ்க்கை நெறி.
  அவரின் ஆசீர்வாதம் கிடைக்க பெற்றோம். நன்றி.
  சுவாமியே சரணம் ஐயப்பா !
  சுவாமியே சரணம் ஐயப்பா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்களின் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி..

   நீக்கு
 3. மணிகண்டனின் உபதேசங்கள் அனைத்தும் நன்று . இருந்தாலும் ஜோதி வடிவமாகக் காட்சியளிப்பேன் என்பதே இடறுகிறது.ஏனோ தற்போதெல்லாம் ஐயப்ப வழிபாடு நிறையவே கேள்விகளை எழுப்புகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்
   தங்களின் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி.

   ஐயப்ப வழிபாட்டில் இடர்களும் இடறுதல்களும் ஒருபோதும் இல்லை.
   ஐயப்ப வழிபாடு - ஆன்மாவைப் பக்குவப்படுத்தும் வழிபாடு.
   ஐயப்ப வழிபாடு எனும் ஆனந்த வெள்ளத்தில் ஆழ்ந்து திளைத்தவர்க்கு அனைத்தும் விளங்கும்.

   என்ன பிரச்னை என்றால் - இதனை யாரும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை.

   நீக்கு
 4. சர்வக்ஞனாக எல்லாம் அறிந்திருக்க்கும் மணிக்கண்டரின்
  உபதேசப்பகிர்வுகள் அருமை..பாராட்டுக்கள்..!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்களின் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி.

   நீக்கு
 5. சிறப்பான தொடர். மிகவும் ரசித்துப் படித்தேன் நண்பரே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் திரு. வெங்கட்..
   தங்களின் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி

   நீக்கு