நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், ஜனவரி 04, 2024

தமிழமுதம் 19

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மார்கழி 19
வியாழக்கிழமை

 குறளமுதம்

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார் 104
**

ஸ்ரீ கோதை நாச்சியார்
அருளிச் செய்த
திருப்பாவை


குத்து விளக்கு எரியக் கோட்டுக்காற் கட்டில்மேல்  மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல் வைத்துக் கிடந்த மலர் மார்பா வாய்திறவாய்
மைத் தடங்கண்ணினாய் நீ உன் மணாளனை  எத்தனை போதும் துயில் எழ ஒட்டாய் காண் 
எத்தனை யேலும் பிரிவு ஆற்றகில்லாயால்  தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய்..
**

குத்து விளக்குகள் ஒளி சிந்துகின்ற சயன அறையில் தந்தத்தில் கடையப் பெற்ற கட்டிலின் மென்மையான மஞ்சத்தில் பூங்கொத்துகள் கூந்தலில் அணிந்துள்ள நப்பின்னை தேவியின் மார்பினில் தலைசாய்த்து 
உறங்கும் கண்ணபிரானே! 
வாய் திறந்து ஒரு வார்த்தை பேசுவாயாக!..
 
மைத் தடங்கண்ணி நப்பின்னையே..
நீ உன் கணவனை ஒரு நொடிப் பொழுதும்  
பிரிந்திருக்க விடுவதில்லை.. 

ஒரு நொடிப் பொழுது பிரிவையும் தாள மாட்டாத தன்மையானது உனது தயாள குணத்திற்கு ஒத்து வராது என்பதை 
உணர்ந்து கொள்வாயாக!..
**

திருப்பாசுரம்


அரங்கனே தரங்கநீர்  கலங்க அன்று குன்றுசூழ்
மரங்கள் தேய மாநிலம் குலுங்க மாசுணம் சுலாய்
நெருங்கநீ கடைந்தபோது  நின்றசூரர் என்செய்தார்
குரங்கையாளுகந்த எந்தை கூறுதேற வேறிதே.. 772
-: திருமழிசையாழ்வார் :-
**

சிவதரிசனம்
தேவாரம்
திருக்கடைக்காப்பு


நன்றுடையானைத் தீயதிலானை நரைவெள்ளேறு
ஒன்றுடையானை உமையொருபாகம் உடையானைச்
சென்றடையாத திருவுடையானைச் சிராப்பள்ளிக்
குன்றுடையானைக் கூற என்னுள்ளங் குளிரும்மே.. 1/98/1
-: திருஞானசம்பந்தர் :-
**

போற்றித்
திருத்தாண்டகம்
(திருஆரூர்)


உள்ளமாய் உள்ளத்தே நின்றாய் போற்றி
உகப்பார் மனத்தென்றும் நீங்காய் போற்றி
வள்ளலே போற்றி மணாளா போற்றி
வானவர்கோன் தோள்துணித்த மைந்தா போற்றி
வெள்ளை ஏறேறும் விகிர்தா போற்றி
மேலோர்க்கும் மேலோர்க்கும் மேலாய் போற்றி
தெள்ளுநீர்க் கங்கைச் சடையாய் போற்றி
திருமூலட் டானனே போற்றி போற்றி.. 8
-: திருநாவுக்கரசர் :-
**

திருவாசகம்


 அத்தனே அண்டர் அண்டமாய் நின்ற
ஆதியே யாதும் 
ஈறில்லாச்
சித்தனே பத்தர் சிக்கெனப் பிடித்த
செல்வமே சிவபெரு மானே
பித்தனே எல்லா உயிருமாய்த் தழைத்துப்
பிழைத்தவை அல்லையாய் நிற்கும்
எத்தனே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே.. 8
-: மாணிக்கவாசகர் :-
**

தொகுப்பிற்குத் துணை

நாலாயிர திவ்யப்ரபந்தம்
பன்னிரு திருமுறை,
தருமபுரம் ஆதீனம்..
**

ஓம் ஹரி ஓம்

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

6 கருத்துகள்:

  1. படங்களையும், பாக்களையும் ரசித்தேன், ருசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆகா!..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம் ..

      நீக்கு
  2. ஓம் நம சிவாய
    சிவாய நம ஓம்
    வாழ்க வையகம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிவாய நம ஓம்
      வாழ்க வையகம்..

      மகிழ்ச்சி.. நன்றி ஜி..

      நீக்கு
  3. பாடல்களை பாடி தரிசனம் செய்து கொண்டேன்.
    படங்கள் நல்ல தேர்வு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..