நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஜூலை 15, 2018

படிக்காத மேதை


அந்தத் தாய்க்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது..

நம்ம காமாட்சி நாட்டுக்கு முதல் மந்திரியா!.. இதெயெல்லாம் பாக்குறதுக்கு அவுக ஐயா இல்லாம போய்ட்டாகளே!..


சந்தோஷமும் துக்கமும் ஏழை நெஞ்சுக்குள் அலை அலையாய் புரண்டன..

கல்யாணங்காட்சி..ன்னு ஒன்னும் இல்லாம - நாடு நாடு..ன்னு காடு மேடு எல்லாம் சுத்தித் திரிஞ்ச புள்ளை.. ஆசையா முகத்தைப் பாத்து சோறு போட்டு கொள்ளை நாளாச்சு..

என்னைய விட்டா யாரு பொறுப்பா பாத்துக்குவாங்க.. 
இனிமேயாவது ஒரு எடத்துல ஒக்காந்து புள்ளைய பாத்துக்கணும்.. 
நாமளும் காமாட்சி கூட பட்டணத்துக்கே போயிறலாம்!..

அன்னையின் மனம் ஆசைப்பட்டது... ஆனாலும் - கூடவே தயக்கம்!..

காமாட்சிக்கு இது தெரிஞ்சா - என்ன பதிலு வருதோ தெரியலையே.. நாகு!..

அன்பு மகளுடன் - தன் தயக்கத்தைப் பகிர்ந்து கொண்டது தாய் மனம்..

அண்ணாச்சி.. ஒண்ணுஞ்சொல்ல மாட்டாக!..

தாய்க்கு ஆதரவாகப் பேசியது - அந்த ஏழைக் குடும்பத்தின் இளங்கிளி..

விளைந்த வெள்ளரி வீதிக்கு வரத்தானே வேண்டும்!..

ஒருவழியாக வெளியில் வந்தது விஷயம்..

ஒம் மனசுல இப்படியும் ஆசை இருக்கா.. அதெல்லாம் சரிப்படாது..ன்னேன்..
நீ எங்கூட வருவே.. உங்கூட இன்னும் நாலுபேரு வருவாங்க!.. 
கூடவே ஊரு பொல்லாப்பும் சேந்து வரும்!..

இதெல்லாம் பாக்குறதுக்கா நா மந்திரியானது.. ன்னேன்?.. 
பட்டணம் எல்லாம் உந்தோதுக்கு ஒத்து வராது.. 
நீ இங்கேயே இரு.. ன்னேன்!..

நறுக்கு தெறித்தாற்போல பேச்சு..

தாயின் ஆசை அத்துடன் அடங்கிப் போனது..

சீராட்டி பாராட்டி வளர்த்த அன்பு மகனை - நாட்டுக்காக அர்ப்பணித்தார்..

நாட்டுக்காக - உழைப்பைத் தருவர்..
நாட்டு மக்களுக்காக பொருளைத் தருவர்.. பொன்னையும் தருவர்..

ஆனால் -

தன் உயிருக்கும் உயிரான செல்வ மகனை - கொடையாகக் கொடுத்த தாய் -

சிவகாமி அம்மையார்!..

(கலங்கும் கண்களோடு தான் இந்தப் பதிவு!..)


தமிழகம் இதுவரையிலும் கண்டிராத -
இனியும் காண இயலாத - தங்கமகனின் பிறந்த நாள் இன்று!..

இலவசக் கல்வி, ஏழைப் பிள்ளைகளுக்கு மதிய உணவு, இலவசப் புத்தகங்கள், பிள்ளைகளுக்கு  சீருடை என்றெல்லாம் வழங்கியவர் பெருந்தலைவர்..

கல்லாய் கிடந்த மக்கள் கல்வி கற்று எழுந்திடக் கை கொடுத்தவர் - காமராஜர்.
* * *

கிட்டங்கியில கேப்பை தான் போடுறாங்க.. 
நல்ல அரிசி வாங்கிக் கொடு ராசா!..
தாய் ஆசையுடன் கேட்டார்..

அதற்கு நாட்டின் முதல்வராக இருந்த மகன் சொன்ன பதில் -

ஊருக்கு ஒன்னு..  உனக்கு ஒன்னா?..
இதையே நீயும் ஆக்கித் தின்னு!..

தாய், விதவை தங்கை நாகம்மாள் மற்றும் அவருடைய பிள்ளைகள் என்று எல்லாரும் இருந்த குடும்பத்துக்கு மாதந்தோறும் அனுப்பி வைத்த தொகை -  

ரூபாய் நூற்றிருபது மட்டுமே!.. 


அவருக்குப் பின் வந்த ஆட்சியாளர்கள், காலக் கோளாறினால்  ஏற்பட்ட கடும் வறட்சியை - சரியாகக் கையாளத் தெரியாமல் சறுக்கி விழுந்தனர். 

பனை ஏறி விழுந்தவனைக் கிடா ஏறி மிதித்ததைப் போல - 
அப்போது மொழிப் பிரச்னையும் சேர்ந்து கொண்டது.

அடுத்து வந்த தேர்தலில் - 

எதிரணியினர் பேசியது புதியதாக புரட்சியாக இருந்தது. இனிமையாக இதமாக இருந்தது. அதனால் அன்றைய மக்கள் அவர்களின்  பின் ஓடினர்.  

மக்களோடு மக்களாக இருந்ததால் -  காமராஜருக்கு  வீர வசனம் பேசுவதற்குத் தெரியவில்லை.  

எதிர் அணியினர் விஷம் கக்கினர். அவர்கள் பேசியவற்றில் ஒரு சில!..

ரூபாய்க்கு மூன்று படி லட்சியம்!.. ஒரு படி நிச்சயம்!..
தட்டினால் தங்கம் வரும்!.. வெட்டினால் வெள்ளி வரும்!..

குடல் கருகுது!.. கும்பி கொதிக்குது!..
குளுகுளு கார் ஒரு கேடா!..

இந்த மாதிரி பல வசனங்களால் சொந்த மண்ணிலேயே காமராஜர் தோற்றுப் போனார். 

அண்டங்காக்கை, பனையேறி  - என்றெல்லாம்  பழிக்கப்பட்டார்.

இன்னும் ஒருபடி மேலே போய் - 
காமராஜர் சுவிஸ் பேங்கில் பணம் போட்டு வைத்திருக்கிறார்.. 
- என்று புழுதி வாரி வீசப்பட்டது. 

காட்சி மாறியது.... அதன் பின்  நாட்டில் - 
நடந்தது அனைத்தும் அனைவருக்குமே தெரிந்த விஷயம்!.. 

நாவில் ஈரமின்றிப் பேசியவர்கள் எல்லாம் - 
லஞ்ச லாவண்யங்களில் மூழ்கித் திளைத்தனர்..
தாமும் தம் மக்களும் என - தின்று கொழுத்தனர்.


பொதுக்கூட்டங்களில் - தன்னைப் பாராட்டி யாராவது பேசினால், 
கொஞ்சம் நிறுத்து.. ன்னேன்!.. - என்று சட்டையைப் பிடித்து இழுப்பார். 

வேறு எவரையும் தாக்கிப் பேசினால், 

அதுக்கா இந்தக் கூட்டம்..ன்னேன்!.. - என்று தடுத்துரைப்பார்..

தனக்கு ஆங்காங்கே தரப்பட்ட சில்லறைகளை கூட தன்னுடன் வைத்துக் கொள்ளாமல் கட்சிக்குத் தாரை வார்த்தவர்.

யாரும் அன்பளிப்புகளைக் கொடுக்க முனைந்தால் - 
இதெல்லாம் கஷ்டப்படுற தியாகிகளுக்குக் கொடுங்க..ன்னேன்!.. -  என்பார்

இரண்டு முறை பிரதமர் ஆக வாய்ப்பு வந்தபோதும் அதை நிராகரித்தவர்..

மூத்தவர்கள் அரசாங்கப் பதவிகளில் இருந்து விலகி, கட்சிப் பணியாற்ற வேண்டும் என வரையறுத்து - அதன்படி முதல் ஆளாகப் பதவி விலகியவர். 

சட்டசபைத் தேர்தலில் விருதுநகர் மக்கள் அவரைத் தோற்கடித்தனர். 

உடனிருந்த கட்சிக்காரர்கள் அழுதார்கள். 
பொதுவான நல்ல மனிதர்களும் அதிர்ந்தார்கள்..

இதான் ஜனநாயகம்..ன்னேன்.. ஜெயிச்சவனைக் குறை சொல்லாம தோத்துப் போனதைப் புரிஞ்சுக்கிட்டா மறுபடி ஜெயிக்க முடியும்..ன்னேன்!.. 

- என்று சற்றும் தளர்ச்சியில்லாமல் சொன்னவர் பெருந்தலைவர்.


கோடை காலத்தில் இரண்டே இரண்டு நாட்கள் குற்றாலத்தில் போய் தங்கிவிட்டு வருவார். அவரது அதிகபட்ச சந்தோஷம் அது ஒன்றுதான்!..

ஒன்பது ஆண்டுகள் முதல் அமைச்சர். 

பல ஆண்டுகள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்தவர்..

அவருடைய அதிகபட்ச ஆடம்பர உணவு - சோற்றுடன் முட்டை.

இறந்தபோது அவருடைய கையிருப்பு என மிச்சம் இருந்தவை -  

ஒரு சில வேஷ்டி சட்டைகள்..
ஓய்வு நேரத்தில் படித்த புத்தகங்கள்..
எளிய சமையலுக்கான பண்ட பாத்திரங்கள்..
நூறு ரூபாயும் கொஞ்சம் சில்லறையும்!.. 

பெற்ற தாய் உடல் நலம் குன்றியிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
சென்னையிலிருந்து விருதுநகருக்கு வந்தார்.

அவருடன் பயணித்தவர் திரு. பழ. நெடுமாறன்..

வீட்டில் படுத்த படுக்கையாயிருந்த அன்னையைக் கண்டார்.

இதுவே இறுதி சந்திப்பு என்று தாய் மனதில் தோன்றுகின்றது. மகனுக்கும் அவ்வாறே..

மனதைக் கல்லாக்கிக் கொண்டார். அருகிருந்த தங்கையிடம் பேசினார்..

உறவினர்களிடம் சில விஷயங்களைச் சொல்லிவிட்டு புறப்பட யத்தனித்தார்.

மகனை ஆவலுடன் நோக்குகின்றன தாயின் கண்கள்..

சாப்பிட்டானோ - இல்லையோ.. ஏந்தலா இருக்கானே!..

பரிதவித்தது - தாயின் மனம்..

உலர்ந்திருந்த உதடுகள் பிரிந்தன..

சாப்பிட்டுப் போ.. ராசா!..

அந்த நேரத்தில், என்ன நினைத்தாரோ - எங்கள் ஐயா!..

கல்லான மனமும் கரைந்தது..

சரி.. - என்ற முகக் குறிப்பைக் கண்ட தாயின் முகத்தில் ஆனந்தப் பிரகாசம்..

எங்க அண்ணாச்சிக்கு சோறு போட்டு எவ்வளோ நாளாச்சு!..

தங்கை நாகம்மையின் மனம் பாசத்தில் பொங்கி வழிந்தது..

மகன் உண்ணுவதைக் கண்ட தாயின் மனம் இறும்பூதெய்தியது..

தாயிடமிருந்து விடை பெற்றுக்கொண்டார் - மகன்..

விருதுநகரிலிருந்து மதுரையை நோக்கிப் புறப்பட்டது - கார்.

காரினுள் மௌனம்.. அதைக் கலைத்தார் நெடுமாறன்.

ஐயா.. நீங்கள் வீட்டில் சாப்பிட்டு எத்தனை வருடங்கள் இருக்கும்!?..

என்ன.. ஒரு.. முப்பது வருஷம் இருக்கும்!..

அமைதியாக பதில் வந்தது - பெருந்தலைவரிடமிருந்து..

சிவகாமி அம்மையாரின் மரணத்தின் போது
பள்ளியில் பயிலாதவர் தான் பெருந்தலைவர்.. ஆனாலும் படிக்காத மேதை!..

அவர் படித்த நூல்களை அவரது நினைவாலயத்தில் காணலாம்..

அரசாங்க பணத்தை அரசின் சாதனைகள் பற்றிய விளம்பரங்களுக்கு செலவு செய்ய மாட்டேன் என்று மறுத்த அதிசய மனிதர்..


அறம் சார்ந்த ஆட்சியை அரசியலை நடத்திய மாமனிதர் - பெருந்தலைவர்.. 

அனைவரையும் படிக்க வைத்தார்..
படித்தவர்களுக்கு வாழ்வு கொடுத்தார்..

அவரால் முன்னுக்கு வந்த லட்சோபலட்சம் பேர்களுள் எளியேனும் ஒருவன்..

எங்கள் ஐயாவின் பிறந்த நாளாகிய இன்று
அவருடைய திருவடிகளை நினைத்து
வணங்கி எழுகின்றேன்..

இது கூட எங்கள் ஐயாவுக்குப் பிடிக்காது தான்!..
ஆனாலும், என் பிறவி கடைத்தேற வேண்டுமே!..

பெருந்தலைவரின் புகழ் 
என்றென்றும் வாழ்க!.. 
* * *

32 கருத்துகள்:

  1. குட்மார்னிங். படிக்காத மேதையைத் தரிசிக்க வந்து விட்டேன்.

    பதிலளிநீக்கு
  2. ஆமாம்... இது மாதிரி ஒரு பிள்ளையைப் பெற்றெடுக்க அந்தத் தாய் என்ன தவம் செய்திருக்கவேண்டும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம் - நான் இந்தக் கருத்திலிருந்து மாறுபடறேன். ஒரு பிள்ளையைப் பெற்றுவிட்டு அவன் தேசத்தொண்டுக்காகச் சென்றுவிட்டான். ஆனால் அந்தத் தாய்க்கு, அவளுக்கு இருந்த ஆசைகள் நிறைவேறவில்லை.

      அந்தத் தாய்க்கு நற்கதி கிடைத்திருக்கும் (எவருடைய பணத்தையும் தான் உபயோகப்படுத்தி அதன்மூலம் வாழாததால்). ஆனாலும், அவங்களுக்கு 'நேர்மை' என்ற பெயரால் துன்பம் மட்டும்தானே கிடைத்தது. செத்ததன்பின்பு சிலை வைப்பதால் என்ன பிரயோசனம்?

      நீக்கு
    2. உண்மை நெ.த. நாகம்மையின் மகள், பார்க்கக் காமராஜர் போலத் தான் இருப்பார். அம்பத்தூரில் வீட்டு வேலை செய்து சாப்பிட்டு வந்தார். இதை ஏற்கெனவே சில வருடங்கள் முன்னர் அவர் இருக்கும்போதே சில பதிவுகளில் சொல்லி இருக்கேன். அவர் காமராஜரைக் கண்டபடி திட்டுவார்! தானும் கஷ்டப்பட்டுக் கொண்டு பிறரையும் கஷ்டப்படுத்தினார் என்பார். இப்படியும் ஒரு கோணம் இருக்கத் தான் செய்கிறது.

      நீக்கு
    3. நெல்லை...

      நாணயத்துக்கு இரண்டு பக்கங்கள்.

      நீக்கு
    4. இது எல்லா தியாகிகளுக்கும் குடும்பத்தில் கிடைக்கும் தவிர்க்க முடியாத நிலைப்பாடு.

      ஒரு வகையில் பார்த்தால் ?

      மக்கள் மனதில் வாழ்வதால் அவரது சகோதரியின் வாரிசுகளுக்கு இன்று பலன் உண்டா ?

      நீக்கு
    5. எனக்கும் என்னவோ ஊருக்காகப் பேருக்காக வாழ்வதிலும் .. வாழ்ந்து மடிந்தபின் சிலை வைத்து கோயில் வைத்துக் கொண்டாடுவதிலும் இஸ்டம் இல்லை.. கண்ணை மூடிட்டால் என்ன தெரியப்போகுது.. இருக்கும்போதே சந்தோசமாக அனைத்தையும் அனுபவித்து நல்ல பெயரோடு வாழ்ந்து முடிச்சிட்டால் அதுவே போதும்.. பிறகு ஒரு புல்லு நடாவிட்டால்கூடக் கவலை இல்லை.

      நீக்கு
    6. அதிரா... இன்றைக்கு உங்கள் பின்னூட்டத்தைப் பார்த்தேன்.

      காமராசர் பார்வையில் இதை அணுகினால், அவர் இறக்கும் தருவாயிலும், 'நான் என்னால் முடிந்த நல்லதைச் செய்தேன், யாருடைய அழிவுக்கும் நான் காரணமாக இல்லை, யாருடைய பணத்தையும் நான் எடுத்துக்கொண்டதில்லை' என்ற சுய திருப்தி இருந்திருக்கும்.

      காமராசர் வாரிசுகள் கஷ்டப்படுகிறார்கள் என்றால், அரசியல்வாதிகள், தலைவர்கள், அதனை முதலமைச்சர்/அரசின் கவனத்துக்கு எடுத்துச் சென்று உடனடித் தீர்வு கண்டிருக்கவேண்டும். அதைச் செய்யாமல், போட்டோவுக்கு போஸ் கொடுப்பதுதான் குற்றம்.

      'நல்ல பெயருடன் வாழணும்' என்றால், பிறர் சொத்துக்கு ஆசைப்படக் கூடாது, பிறருக்கு நல்லதே செய்திருக்கணும். அப்படி நேர்மையா ஒருவன் வாழ்ந்தால், அவனைச் சூழ்ந்திருக்கும் எல்லாருக்கும் கஷ்டம்தான், அவர்கள் சலுகைகள் எதிர்பார்த்தால்.

      என் அப்பா, நான் எஸ் எஸ் எல் சி பரீட்சை பேப்பர்கள் திருத்தும் (கணக்கு பேப்பர்) இடத்தின் தலைமையில் இருந்தார். அந்த இடத்துக்கு என் பேப்பர் வந்தது (அதாவது எங்கள் பள்ளியின்) எதேச்சயானது. அவர், கடமைப்படி, 100 பேப்பர்களுக்கு இத்தனை பேப்பர்களை சரிபார்க்கணும் (சரியா திருத்தியிருக்காங்களான்னு). என் பேப்பரைப் பார்த்து அதில் ஒரு இடத்தில் தவறாக மதிப்பெண் போட்டுள்ளதைச் சுட்டிக்காட்டினாராம். அவர் நினைத்திருந்தால், இன்னும் அதிக மதிப்பெண்கள் போடச்சொல்லியிருக்கமுடியுமாம், ஆனால் அதனால் வாழ்க்கைக்கு உபயோகம் இல்லை என்று என்னிடம் சொன்னார். எது நியாயமோ அதைத்தான் செய்யணும் என்று அவர் சொல்வார்.

      நீக்கு
  3. மிக அருமையான பதிவு. 67 தேர்தலின் போது பள்ளி மாணவி. தேர்தல் கூட்டத்துக்கு வந்த காமராஜர், டிடிகே, சி.சுப்ரமணியம் ஆகியோரிடம் கையெழுத்து வேட்டை நடந்தது. நானும் போனேன். டிடிகேயும், சி.எஸ்ஸும் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தனர். காமராஜர், பக்தவத்சலம் ஆகியோரிடம் போனப்போ பக்தவத்சலம் மறுத்துவிட்டார். காமராஜர் என்னிடம் யார், என்னனு எல்லாம் கேட்டுட்டு ஸ்கூல் வாத்தியார் பொண்ணு நீ! படிச்சு முன்னேற வழியைப் பாரு! இந்த மாதிரி கையெழுத்துக்கெல்லாம் கொஞ்ச நேர சந்தோஷம் தான். உன் படிப்புத் தான் உனக்கு வாழ்க்கை! என்னும் பொருள்படும்படி சொன்னார். என்னனு சரியான வார்த்தைகள் நினைவில் இல்லை. ஆனால் அப்பா பள்ளி வாத்தியார் என்றதும் படி, குடும்பத்தை முன்னேற்று, நீயும் முன்னேறு என அவர் சொன்னதின் பொருள் இன்னும் மனசில் அப்படியே இருக்கு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதாக்கா... காமராஜர் கிட்ட பேசி இருக்கீங்கன்னு தெரியும்போதே சந்தோஷமா இருக்கு.

      நீக்கு
    2. இதைப் படிக்கும்போது வாலி எழுதியது நினைவுக்கு வருகிறது. அவரும் பதின்ம வயதில் (20+?) காமராஜர், ராஜாஜி என்றெல்லாம் படம் வரைந்து அவர்கள் திருச்சி ஸ்டேஷன் வந்தால், அதைக் காண்பித்துக் கையெழுத்து பெற்றுக்கொள்வாராம். காமராசர், அவர் படத்தில் கையெழுத்திட்டாராம். ராஜாஜி, இந்தப் படம் என்னைப்போல் இல்லையே என்று சொன்னாராம். வாலி எழுதியது, 'காமராசர் என் முயற்சியைப் பார்த்தார், ராஜாஜி, படத்தின் அழகைப் பார்த்தார், என் ஆர்வத்தைப் பார்க்க மறந்துவிட்டார்'

      நீக்கு
    3. ராஜாஜியும் கையெழுத்துப் போட்டார். ஆனால் வழக்கமாக தான் போடும் முறையிலிருந்து மாற்றிக் கையெழுத்துப் போட்டாராம். யாராவது பார்த்தால் இது ராஜாஜி கையெழுத்து என்று சொல்ல மாட்டார்களே என்றாராம் வாலி. படத்தைப் பார்த்தாலும் அப்படிதான் சொல்வார்கள் என்றாராம் ராஜாஜி!

      நீக்கு
    4. தஞ்சாவூர் ராஜா ரெஸ்ட் ஹவுஸில் அவர் தங்கி இருக்கும்போது அப்பா அழைத்துச் செல்ல, நானும் காமராஜரைப் பார்த்திருக்கிறேன். ஆனால் எதுவும் சரியாக நினைவில்லை. ரொம்பச் சின்ன வயசு.

      நீக்கு
    5. கீதாக்கா வாவ்!! நானும் நேரில் பார்த்திருக்கேன் அருகில்...ஆனால் அப்போதெல்லாம் பேசத் தெரியாத சிறு வயது. அதாவது பள்ளியில் படித்துக் கொண்டிருந்தாலும் பேசத் தெரியாத வயது....என் மாமா பள்ளி தலைமையாசிரியராக இருந்த சமயம். அப்போது காமராசர் ஆட்சியிலும் இல்லை. மாமாவுக்கு அவரை மிகவும் பிடிக்கும் அப்படியான வாய்ப்பு.

      கீதா

      நீக்கு
    6. கீதாக்கா வாவ்!! நானும் நேரில் பார்த்திருக்கேன் அருகில்...ஆனால் அப்போதெல்லாம் பேசத் தெரியாத சிறு வயது. அதாவது பள்ளியில் படித்துக் கொண்டிருந்தாலும் பேசத் தெரியாத வயது....என் மாமா பள்ளி தலைமையாசிரியராக இருந்த சமயம். அப்போது காமராசர் ஆட்சியிலும் இல்லை. மாமாவுக்கு அவரை மிகவும் பிடிக்கும் அப்படியான வாய்ப்பு.

      கீதா

      நீக்கு
  4. ஆனால் அதுக்கப்புறமும் ரவிச்சந்திரன், முத்துராமன், காஞ்சனானு கையெழுத்து வேட்டையாடியது வேறே விஷயம்! அப்படி எல்லாம் திருந்திடுவோமா? இப்போ நினைச்சால் சிரிப்பாவும் வருத்தமாயும் இருக்கு!

    பதிலளிநீக்கு
  5. ஆம்... பழிக்கப்பட்டார். நன்றி மறந்தனர் மக்கள். உண்மை அறியாதிருந்தனர். சுடும் வார்த்தைகள் அர்ச்சனையாய்.. கொடும் பொய்க்குற்றச்சாட்டுகள் யார் என்ன கேட்கப்போகிறார்கள் நம்மை என்று..

    பதிலளிநீக்கு
  6. இனியொரு மாமனிதன் இவ்வுலகில் பிறக்கப் போவதில்லை என்பது உறுதி.

    எனது வணக்கங்களும்...

    பதிலளிநீக்கு
  7. // வீட்டில் சாப்பிட்டு முப்பது வருடமிருக்கும்...//

    அம்மாவின் இறுதி ஆசையை இப்படியும் நிறைவேற்ற முடியுமோ.. தன்னிகரில்லாத தலைவர்.

    பதிலளிநீக்கு
  8. அவரைப்போன்ற தன்னலமில்லாத தலைவர்களை இனி நாடு பார்க்குமா? அவரையே வேண்டி நிற்போம், அப்படி ஒருவரைக் கொடு எங்களுக்கு என...

    பதிலளிநீக்கு
  9. தலைவன் என்ற சொல்லுக்குப் பொருத்தமானவர். அவருடைய பெயரை உச்சரிக்கக்கூட இப்போதுள்ள அரசியல்வாதிகளுக்குத் தகுதி இருக்கிறதா என்று யோசிக்க வேண்டியுள்ளது. பள்ளிக்காலத்தில் கும்பகோணத்தில் மூர்த்திக்கலையரங்கில் நடைபெற்ற ஒரு கூட்டத்திற்கு காமராஜர் வந்தபோது பழுத்த காங்கிரஸ்காரரான எங்கள் தாத்தா எங்களை அழைத்துச்சென்றார். காமராஜரை மிக அருகில் பார்த்தோம். மறக்க முடியாத அந்த நாள் நினைவுகளை கண்முன் கொண்டுவந்தது இப்பதிவு.

    பதிலளிநீக்கு
  10. பெருந் தலைவர் - இனி அவர் போல் ஒருவரும் பிறக்கப் போவதில்லை. இப்படியான ஒரு மாமனிதரையும் அரசியல் அசிங்கம் விட்டு வைக்கவில்லையே என்ற வருத்தம் எப்போதும் உண்டு.

    பதிலளிநீக்கு
  11. என்ன மாதிரியான பதிவு, மனத்தை நெகிழ்த்துகிறது. காமராஜரைப் புரிந்துகொள்ளாத இந்திராகாந்தி. விருதுநகர் மக்கள்...

    இளையராஜா பாடிய, காமராசர் பட்தின் பாட் நினைவுக்கு வருகிறது

    பதிலளிநீக்கு
  12. சிவகாசியில் படித்த போது பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் எங்கள் பள்ளிக்கு வந்து இருந்தார்கள். அவர்கள் கையால் எங்களுக்கு பென்சில் வழங்கபட்டது.
    சுதந்திரதின விழாவில் பேச வந்தார்.
    வசந்த் தொலைக்காட்சியில் அவர் படம் ஓடிக் கொண்டு இருக்கிறது.
    The king maker
    படம் நடக்குது. பார்த்துக் கொண்டு இருக்கிறேன்.
    அவர் போல் எளிமையான தலைவரைப் பார்க்க முடியாது.
    அருமையான பதிவு.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  13. நான் பணி புரிந்த கொதிகலந்தொழிற்சாலைக்கு வித்திட்டவர் காமாராஜர் என்று கேள்வி பட்டிருக்கிறேன் தொழிற்கூடங்கள் கோவில்களுக்குச்சமமல்லவா

    பதிலளிநீக்கு
  14. மிக நல்ல பதிவு. நன்றி! காமராஜரைப் போல ஒரு தலைவர் மீண்டும் நமக்கு கிடைக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  15. அருமையான தொகுப்பு. பல விஷயங்கள் தெரிந்து கொண்டேன்.. உங்களோடு சேர்ந்து மீயும் வாழ்த்தி வணங்குகிறேன்.

    பதிலளிநீக்கு
  16. துளசிதரன்: நான் மிகவும் வியந்து போற்றும் மாமனிதர். நான் வளரும் பருவத்தில் இவர் ஆட்சியில் இல்லை என்றாலும் மக்கள் ஒரு சில அரசியல்வாதிகளின் பேச்சு மயக்கத்தில் இருந்த காலத்தை அறிவேன். அந்த மயக்கம் இன்றும் நீடித்துக் கொண்டுதான் இருப்பது போலத் தெரிகிறது. இப்படியான ஒரு மாபெரும் மனிதர் இனி தோன்றுவாரா? எங்களின் வணக்கங்கள் கர்ம வீரரான மாமனிதருக்கு.

    கீதா: அக்கருத்துடன், கூடவே ஊரு பொல்லாப்பும் வரும் என்று நினைத்து தன் தாயைக் கூடத் தன்னுடன் வைத்துக் கொள்ளாத அந்த மாமனிதரை எப்படி பழி கூறியிருக்கிறார்கள் பாருங்கள். ஆட்சிக்கு வர வேண்டும் என்று இப்படியுமா மாமனிதரான ஒருவரை பழிப்பது? ஆட்சிக்கு வர வேண்டும் என்றால் பிறரை அவதூறு பேசித்தான் வர வேண்டுமா என்ன? தங்களின் நிலைப்பாட்டை, தாங்கள் என்ன செய்யப் போகிறோம் என்பதைச் சொல்லி நல்லாட்சி தருவோம் என்று நேர்மையுடன் சொல்லாமல் மக்களின் மனதை பேச்சால் மயக்கிய அந்த மயக்கத்திலேயே பிடித்து இதோ இன்று எப்படி ஆகியிருக்கிறது நம் தமிழ்நாடு...என்ன சொல்ல? பல சமயங்களில் நினைத்துக் கொள்வேன். இப்படியான ஒரு தலைவர் நமக்குக் கிடைப்பாரா? கிடைக்க வேண்டும் என்றும் வேண்டிக் கொள்வதுண்டு. அருமையான அக்மார்க் பதிவு அண்ணா!!!

    பதிலளிநீக்கு
  17. நான் எப்பொழுதும் வணங்கும் பெருந்தலைவருக்கு மீண்டும் வணக்கம். பள்ளி விழாவில் தமிழ்ப் பரிசாக அவர் கைகளால் திருக்குறள் வாங்கிக் கொண்டேன்.
    சின்ன எழுத்தா இருக்கே படிப்பியா பாப்பா என்றதற்குப் பதில்
    சொல்லக் கூடத் தெரியவில்லை. எத்தனையோ தடவை திருமங்க்கலம் வழியே சென்றிருக்கார். ஒரு ஆர்ப்பாட்டம் இருக்காது.
    நேரு வந்த போது பின்னால் நின்று கொண்டிருப்பார் பொதுக்கூட்டத்தில். எத்தனை அரும் தலைவர்.
    மிக நன்றி.

    பதிலளிநீக்கு
  18. பல தகவல்கள் பதிவின் மூலமே அறிந்தேன் ,அருமையான பகிர்வு .எளிமையான நேர்மையான மாமனிதருக்கு வணக்கங்கள்

    பதிலளிநீக்கு
  19. இதில் ஒன்று பகிரலாம் என்று தோன்றியது.

    தென்மாவட்டங்களுக்குச் சென்றிருந்தபோது, காமராஜுக்காக போஸ்டர் அடித்திருந்தவர்கள், காங்கிரசைச் சேர்ந்த 'நாடார்கள்'. இதைப்போலவே, 'பசும்பொன் முத்துராமலிங்கம்' அவர்களுக்கு புகழுரை சொல்பவர்கள் அவருடைய சாதியினரே. சில வருடங்களுக்கு முன், திருச்சி மலைக்கோட்டை சென்றிருந்தபோது, யானை கட்டியிருக்கும் இடத்திற்கு வெளியே கடை வைத்திருந்தவர்களில் ஒருவர், வ உ சி அவர்களின் மகனது படத்தைக் காண்பித்து, 'வறுமையில் வாடுகிறார், அவருக்கு யாரும் உதவி செய்யவில்லை' என்று சொன்னார் (அனேகமாக அவரும் பிள்ளைமாராக இருக்கலாம்). அதனை எண்ணி, தமிழர்கள் வருத்தப்படவேண்டும். தேசத்துக்காகப் போராடியவர்களின், நாட்டுக்காக உழைத்த நல்லவர்களின் வாரிசுகள் 'எக்கேடு கெட்டுப் போனால் என்ன' என்று நாம் எண்ணினால், ஏன், கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகள் பெருகமாட்டார்கள்? நல்லது செய்தாலும் அதை ஆதரிக்கப் போவதில்லை, உனக்காக உடல் பொருள் ஆவி துறந்து உழைத்தால், அதை நீ எள்ளி நகையாடப்போகிறாய் என்று அரசியல் தலைவர்கள் மக்களைப் பற்றி நினைப்பதில் என்ன தவறு இருக்கமுடியும்?

    வ உ சி வாரிசுகளுக்கோ, காமராசர் வாரிசுகளுக்கோ நல்லது செய்ய முடியாத சமூகம் எத்தகைய சமூகம்?

    நாம் சாதியால் கட்டுண்டு இருக்கும்வரை, நம்மால் தேசத்தலைவர்களை அடையாளம் காண இயலாது, அவர்களைப் போற்றி அவர்கள் வழி நடக்க இயலாது.

    யாரையும், என்ன சாதி என்று கேட்டு அவர்களைக் கணிக்கவோ, போற்றவோ ஆரம்பிப்பது மிகத் தவறானது. இதைத் தமிழர்களுக்கு யார் சொல்லித்தரப் போகிறார்கள் என்று தெரியவில்லை. இதனால்தான் ஒவ்வொருவரும், ஒவ்வொரு வரலாற்றுப் பாத்திரங்களை எடுத்துக்கொண்டு, 'எங்கள் சாதி', 'அவருக்குச் சிலை, மணிமண்டபம்' வை என்று சொல்லித் திரிகிறார்கள்.

    காமராசர் பற்றிய உங்கள் இடுகை மிகவும் மனதை நெகிழ்த்தியது. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..