நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

வாழி அவன்தன் வளநாடு மகவாய் வளர்க்கும் தாயாகி

ஊழி உய்க்கும் பேருதவி ஒழியாய் வாழி காவேரி!..


வெள்ளி, ஜனவரி 06, 2017

மார்கழிப் பூக்கள் 22

தமிழமுதம்

காலங் கருதி இருப்பர் கலங்காது
ஞாலம் கருதுபவர்..(485)
***
சமணத் துறவியர் அருளிய
நாலடியார்

- கல்வி - 
இம்மை பயக்குமால் ஈயக் குறைவின்றால்
தம்மை விளக்குமால் தாமுளராக் கேடின்றால்
எம்மை உலகத்தும் யாம்காணோம் கல்விபோல்
மம்மர் அறுக்கும் மருந்து..(131) 
***
அருளமுதம்

சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள்
ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை
திருப்பாடல் - 22


அங்கண் மாஞாலத்து அரசர் அபிமான
பங்கமாய் வந்துநின் பள்ளிக் கட்டிற்கீழே
சங்கம் இருப்பார்போல் வந்துதலைப் பெய்தோம்
கிங்கிணி வாய்ச்செய்த தாமரைப் பூப்போலே
செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ
திங்களும் ஆதித்தனும் எழுந்தாற்போல்
அங்கண்ணி ரண்டுங்கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல்
எங்கள் மேல்சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்!..
***

ஸ்ரீ பூதத்தாழ்வார் அருளிய
திருப்பாசுரம்

ஸ்ரீ சௌரிராஜன் - திருக்கண்ணபுரம்
பிரானென்று நாளும் பெரும்புலரி என்றூம்
குராநல் செழும்போது கொண்டு வராகத்து
அணியுருவன் பாதம் பணியும் அவர்
மணியுருவம் காண்பார் மகிழ்ந்து..(2212)

ஓம் ஹரி ஓம் 
***

சிவ தரிசனம்
சப்த விடங்கத் திருத்தலங்கள்

நான்காவது திருத்தலம்
அநாகதம்

திருநள்ளாறு


இறைவன் - ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர்
அம்பிகை - ஸ்ரீ போகமார்த்த பூண்முலையாள்
தீர்த்தம் - நள தீர்த்தம்
தலவிருட்சம் - தர்ப்பைப் புல்

நக விடங்கர் - உன்மத்த நடனம்
பித்தனைப் போல் ஆடுவது


நிடத நாட்டின் மன்னனாகிய
நளனும் தமயந்தியும் அவர்தம் மக்களும்
பெரும் கஷ்டங்களை அனுபவித்த பின்னர்
ஒன்று சேர்ந்தனர்..

தீர்த்த யாத்திரைக்குப் புறப்பட்ட அவர்களைப்
பின்னும் தொடர்ந்து வந்தனர்
கலியும் சனைச்சரனும்..

தாங்கொணாத கஷ்டங்கள் அனைத்திலும்
பொறுமை காத்திருந்த நள தமயந்திக்காக
தர்ப்பை வனத்தில் இறையருளால்
திருக்குளம் ஒன்று உருவாகியிருந்தது..

நளனும் தமயந்தியும் தமது குழந்தைகளுடன்
நீராடிக் கரையேறி

ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரரையும்
ஸ்ரீ போகமார்த்த பூண்முலை நாயகியையும்
வணங்கி வழிபட்டு எழுந்தனர்..

அப்போது
ஆங்கெழுந்த அக்னி ஜூவாலையைத் தாங்கொணாத
கலிபுருஷன் அவர்களை விட்டு விலகி ஓடினான்..

நள தமயந்தி சிவ தரிசனத்தை முடித்து விட்டு வரட்டும்..
அவர்களைப் பற்றிக் கொள்வோம்!..  -
என - சனைச்சரன் மட்டும் வெளியில் காத்திருந்தான்...

சனைச்சரனின் உள்ளக்கிடக்கையை அறிந்து கொண்ட
ஐயனும் அம்பிகையும்,

இனியும் நள தமயந்தியரைத் தொடர வேண்டாம்!..
அதுமட்டுமல்லாது,
தர்ப்பாரண்யத்தைத் தரிசனம் செய்தவர்களையும்
நள சரிதத்தைக் கேட்டவர்களையும்
ஒருபோதும் துன்புறுத்தக்கூடாது!..

- என, அறிவுறுத்தி
சனைச்சரனைக் கட்டுப்படுத்தினர்..

அந்த அளவில் ஆங்கிருந்த
திருமாடத்தில் குடிகொண்டான்
சனைச்சரன்..


விளங்கிளை மடந்தைமலை மங்கையொரு பாகத்து
உளங்கொள இருத்திய ஒருத்தனிடம் என்பர்
வளங்கெழுவு தீபமொடு தூபமலர் தூவி
நளன்கெழுவி நாளும் வழிபாடுசெய் நள்ளாறே!.. (2/33)

நளன் தீப தூபங்களோடு நறுமலர் தூவி
சிவ வழிபாடு செய்ததாகத் தான்
ஞானசம்பந்தப் பெருமான்
நமக்கெல்லாம் அறிவுறுத்துகின்றார்..


நள தீர்த்தம்
ஆனால், இன்றைய நாளில் மக்கள் எல்லாம்
சனைச்சரனின் திருமுன்பாக
முண்டியடித்துக் கொள்கின்றனர்..

வேறு வேலைகள் இருக்கின்றதென்று
விரைவு தரிசனம் விரும்புவோர்களும்
ஒரே நாளில் ஒன்பது கோயில்களைப்
பார்ப்பதற்கு விழைவோர்களும்
சிவ தரிசனம் செய்வதே இல்லை..
சிவ சந்நிதியின் பக்கம் செல்வதேயில்லை..

அந்த அளவிற்கு மக்களின் மனங்களைத்
திசை திருப்பி விட்டார்கள்..

தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயிலில்
சனைச்சரனுக்கு தனிச் சந்நிதி எதுவும் கிடையாது..

ஆனாலும்,
திருநள்ளாறு சிவாலயத்தை
சனீஸ்வர பகவான் கோவில்
என்றே சொல்லி மகிழ்கின்றனர்..

அவ்விதம் சொல்பவர்களுக்கு
பல்வேறு வகையான ஊடகங்களும் 
ஜோதிடர்களும் சிவாச்சார்யார்களும்
துணை போகின்றனர்..

இன்னும் ஒருபடி மேலே போய்
Saturn Temple
என்றும் எழுதுகின்றனர்..

புறச் சமயங்களில்  
சைத்தான் என்று சொல்லப்படுபவன்
இறை மறுப்பாளன்.. 
கொடியவன்.. கெடுமதியாளன்...

நமது புராணங்களின்படி
சனைச்சரன் சூரியனின் புத்திரன்..
மாபெரும் சிவபக்தன்..
ஸ்ரீ பைரவருக்குக் கட்டுப்பட்டவன்..
உயிர்க் குலங்களை சிவ பக்தியில் 
ஆழ்த்துபவன்..

நல்ல உள்ளங்கள் சிவபக்தியில் ஆழ்ந்து 
உண்மைகளை உணர்ந்து கொள்ளுமாறு விழைகின்றேன்..

திருநள்ளாறு ஸ்ரீ நக விடங்கரின்
உன்மத்த நடனத்தை கீழுள்ள
காணொளியில் தரிசனம் செய்க..


காரைக்கால் நகரை அடுத்து உள்ளது - திருநள்ளாறு..
தமிழகத்தின் பெருநகர்களில் இருந்து
சிறப்பான பேருந்து வசதிகள் உள்ளன.. 

- திருப்பதிகம் அருளியோர் - 
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்,
சுந்தரர்

ஸ்ரீ திருநாவுக்கரசர்
அருளிய தேவாரம்

சொல்லானைச் சுடர்ப்பவளச் சோதி யானைத்
தொல்லவுணர் புரமூன்றும் எரியச் செற்ற
வில்லானை எல்லார்க்கும் மேலா னானை
மெல்லியலாள் பாகனை வேதம் நான்கும்
கல்லாலின் நீழற்கீழ் அறங் கண்டானைக்
காளத்தி யானைக் கயிலை மேய
நல்லானை நம்பியை நள்ளாற் றானை
நானடியேன் நினைக்கப் பெற்று உய்ந்தவாறே!..(6/20)

ஸ்ரீ சுந்தரர் 
அருளிய திருப்பாட்டு

மறவனை அன்று பன்றிப் பின்சென்ற
மாயனை நால்வர்க்கு ஆலின்கீழ் உரைத்த
அறவனை அமரர்க்கு அரியானை
அமரர் சேனைக்கு நாயகனான
குறவர் மங்கைதன் கேள்வனைப் பெற்ற
கோனை நான்செய்த குற்றங்கள் பொறுக்கும்
நறை விரியும் நள்ளாறனை அமுதை
நாயினேன் மறந்து என் நினைக்கேனே!..(7/68) 
***

ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிய
திருவெம்பாவை
(09 - 10)

ஸ்ரீ பிட்சாடனர் - காரைக்கால்
முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெரியோனே
உன்னைப் பிரானாகப் பெற்றஉன் சீரடியோம்
உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்
அன்னவரே என்கணவராவார் அவருகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்
இன்ன வகையே எமக்கெங்கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோமேலோர் எம்பாவாய்!..

பாதாளம் ஏழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே
பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
ஓத உலவா ஒருதோழன் தொண்டருளன்
கோதில் குலத்தரன்றன் கோயில் பிணாப்பிள்ளைகாள்
ஏதவன்ஊர் ஏதவன்பேர் ஆருற்றார் ஆரயலார்
ஏதவனைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய்!..
***

தேவி தரிசனம் 
ஸ்ரீ கற்பகவல்லி - திருமயிலை..பாரும் புனலும் வெங்காலும் படர்விசும்பும்
ஊரும் உருகுசுவை ஒளிஊறுஒலி ஒன்றுபடச்
சேரும் தலைவி சிவகாம சுந்தரி சீரடிக்கே
சாரும்தவம் உடையார் படையாத தனமில்லையே!.. (068)
- அபிராமிபட்டர் - 

ஓம் நம சிவாய சிவாய நம ஓம் 
***

5 கருத்துகள்:

 1. திருநள்ளாறு பற்றி உண்மையான தகவலை அறிய முடிந்தது ஐயா... நன்றி...

  பதிலளிநீக்கு
 2. திருநள்ளாறு சிறு வயதில் சென்ற நினைவு. இப்போது பக்தியும் வியாபாரமாகிவிட்டது.....

  பதிலளிநீக்கு
 3. நாங்களும் திருநள்ளாறு பற்றி அறிந்து கொண்டோம்...நன்றி ஐயா

  பதிலளிநீக்கு
 4. நல்ல பகிர்வு ஐயா...
  திருநள்ளாறு பற்றி அறியத் தந்தீர்கள் ஐயா...

  பதிலளிநீக்கு
 5. திருநள்ளார் போய் வந்தவிஷயம் குறித்து நான் எழுதி இருந்த பின்னூட்டம் காணாமல் போச்

  பதிலளிநீக்கு