நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

வாழி அவன்தன் வளநாடு மகவாய் வளர்க்கும் தாயாகி

ஊழி உய்க்கும் பேருதவி ஒழியாய் வாழி காவேரி!..


புதன், ஜனவரி 11, 2017

மார்கழிப் பூக்கள் 27

தமிழமுதம்

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள் வைப்புழி..(226) 
***

சமணத் துறவியர் அருளிய
நாலடியார்

- நன்றியில் செல்வம் - 

நல்லார் நயவர் இருப்ப நயமிலாக் 
கல்லார்க்கு ஒன்றாகிய காரணம் தொல்லை
வினைப்பயன் அல்லாது வேனெடுங் கண்ணாய்
நினைப்ப வருவதொன்று இல்..(265)  
***
அருளமுதம்


இன்று 
திவ்ய தேசங்களில் 
கூடாரவல்லி வைபவமும்
சிவாலயங்களில்
திருஆதிரைத் திருநாளும்
சிறப்பாக நடைபெறுகின்றன..
சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள்
ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை
திருப்பாடல் - 27
கூடாரை வெல்லும்சீர் கோவிந்தா உந்தனைப் 
பாடிப் பறை கொண்டு யாம்பெறும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பலகலனும் யாம்அணிவோம்
ஆடைஉடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
மூட நெய்பெய்து முழங்கை வழிவாரக்
கூடியிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்!..
***

ஸ்ரீ பூதத்தாழ்வார் அருளிய
திருப்பாசுரம்


ஓருருவன் அல்லை ஒளியுருவம் நின்னுருவம்
ஈருருவன் என்பர் என்பர் இருநிலத்தோர் ஓருருவம்
ஆதியாம் வண்ணம் அறிந்தார் அவர்கண்டீர்
நீதியால் மண்காப்பார் நின்று..(2241)

ஓம் ஹரி ஓம்
***

சிவ தரிசனம்
சிற்றுயிர்கள் வணங்கிய
திருத்தலங்கள்

திருத்தலம்
திரு எறும்பூர்


இறைவன் - ஸ்ரீ எறும்பீஸ்வரர்
அம்பிகை - நறுங்குழல் நாயகி
தீர்த்தம் - பிரம்ம தீர்த்தம்
தலவிருட்சம் - வில்வம்

கந்தர்வன் ஒருவன்
துர்வாச முனிவரைப் பரிகசித்த பாவத்தினால்
நண்டு என உருமாறிப் போனான் ..

சாப விமோசனம் தேடியலைந்தது நண்டு..

சிவபூஜை செய்தால் பாவம் அகலும் என்றறிந்த நண்டு
தேவேந்திரன் சேகரித்து வைத்திருந்த தாமரை
மலரை எடுத்துத் தானும் 
தன்போக்கில் சிவவழிபாடு செய்தது..

அதைக் கண்டு சினங்கொண்ட தேவேந்திரன்
சிற்றுயிராகிய நண்டின் மீது இரக்கம் கொள்ளாமல்
கொலை வெறித் தாக்குதல் நடத்தினான்..

சிவலிங்கத் திருமேனியில் காயங்கள் ஏற்பட்டன..

அப்போதும் உணர்ந்து கொள்ள இயலாதவனாகி
மூர்க்கத்துடன் தாக்குதலைத் தொடர்ந்த போது
சிவலிங்கத்தின் உச்சியில் துளை ஒன்று ஏற்பட்டது..

இந்திரனின் தாக்குதலுக்கு அஞ்சிய நண்டு
அந்தத் துளையினுள் நுழைந்து கொள்ள
இறைவனுடன் ஐக்கியமானது..

இறைவன் வெளிப்பட்டு நண்டு செய்த 
தொண்டினைப் புகழ்ந்துரைத்தார்..

இந்திரன் இதைக் கேட்டு வெட்கித்
தலைகுனிந்து நின்றான்..

தான் செய்த வழிபாடு அரைகுறையாகிப் போனது..
இந்த நேரத்தில் தனக்கு வரம் வேண்டும்!.. - எனக் கேட்டால்
ஏடாகூடமாகிவிடும் என்று உணர்ந்து கொண்டான்..

எம்பெருமானே!.. பிழைபொறுத்தருள்வதுடன்
தம்மை மீண்டும் வழிபட அனுமதிக்க வேண்டும்!.. 
என, வேண்டிக் கொண்டான்..

அதைக் கேட்ட எம்பெருமான் -
காவிரியின் தென்கரையிலுள்ள
மதுவனத்தில் வழிபாட்டினைத் தொடர்க!..
என்றுரைத்தார்..

அந்த மதுவனத்தைத் தேடியலைந்து 
கண்டு கொண்ட தேவேந்திரன்
தான் மட்டுமல்லாமல்
தன் கூட்டத்தாரையும் சேர்த்துக் கொண்டு
வழிபாட்டினைத் தொடர்ந்தான்..

ஆனாலும்
அசுரர்களின் தொல்லை தாளமுடியவில்லை..

அவர்களின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு
எறும்பு என உருமாறினான்..

தன்னுடனிருந்த தேவர்களையும் 
எறும்புகளாக உருமாற்றினான்...

நண்டிற்குத் தொல்லை கொடுத்த பாவத்தை 
அதனினும் கீழாகிய
எறும்பின் வடிவாகி தீர்த்துக் கொண்டான்..

தேவேந்திரனுக்கும் அவனது கூட்டத்தாருக்கும்
அடைக்கலம் அருளிய ஐயன்
தானே புற்று வடிவமானார்..

லிங்க வடிவமான புற்றின் மீது
ஊர்ந்ததனால்
தன் ஊழ்வினை நீங்கப் பெற்றான்..

அந்த நிலையில்
மதுவனம் என்ற தலம்
எறும்பீச்சரம், எறும்பூர்
என்றானது..

சிவலிங்கம் புற்றுருவாகியதால் 
எண்ணெய்க் காப்பு மட்டுமே செய்யப்படுகின்றது..

இன்றைய பதிவில் வைகாசிப் பெருந்திருவிழாவின் காட்சிகள்..

படங்களை வழங்கிய
முரளி S. வேல் அவர்களுக்கு 
நெஞ்சார்ந்த நன்றி..


இந்நாளில் இத்தலத்தை
திருவெறும்பூர் என்றும் திருவரம்பூர்
என்றும் பிழைபட அழைக்கின்றனர்

புகழுறும் திருத்தலமாகிய
திருச்சிராப்பள்ளிக்குக் கிழக்கே
தஞ்சை நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது..


இத்திருக்கோயில் சிறு குன்றின் மீது
விளங்குகின்றது..


நிறைந்த பேருந்து வசதியினை உடையது,,
பிரதான சாலையிலிருந்து 
உட்புறமாக சற்று வடக்கு நோக்கி நடந்தால்
திருக்கோயிலை அடையலாம்.. 

இத்தலத்தினை அப்பர் பெருமான் 
தரிசித்து திருப்பதிகம் அருளியுள்ளார்..


ஸ்ரீ திருநாவுக்கரசர்
அருளிய தேவாரம்

பிறங்கு செஞ்சடைப் பிஞ்ஞகன் பேணுசீர்க்
கறங்கு பூத கணமுடைக் கண்ணுதல்
நறுங்கு ழல்மட வாளொடு நாடொறும்
எறும்பியூர் மலையான் எங்கள் ஈசனே!..(5/74) 
***

ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிய
திருவெம்பாவை
19 - 20

ஸ்ரீ ஆடல்வல்லான் - தஞ்சை
உங்கையிற் பிள்ளை அடைக்கலமென்
றங்கப் பழஞ்சொல் புதுக்குமெம் அச்சத்தால் 
எங்கள் பெருமான் உனக்கொன் றுரைப்போம்கேள்
எங்கொங்கை நின்னன்பர் அல்லாதார் தோள்சேரற்க
எங்கை உனக்கல்லாது எப்பணியுஞ் செய்யற்க
கங்குல் பகலெங்கண் மற்றொன்றுங் காணற்க
இங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல்
எங்கெழிலென் ஞாயிறெமக்கேலோர் எம்பாவாய்.

போற்றி அருளுகநின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுகநின் அந்தமாம் செந்தளிர்கள்
போற்றி எல்லாவுயிர்க்குந் தோற்றமாம் பொற்பாதம்
போற்றி எல்லாவுயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றி எல்லாவுயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றிமால் நான்முகனுங் காணாத புண்டரிகம்
போற்றியாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றியாம் மார்கழிநீ ராடேலோர் எம்பாவாய்!..

திருவெம்பாவை திருப்பாடல்கள்
இந்த அளவில் நிறைவுறுகின்றன.. 
***

தேவி தரிசனம்
ஸ்ரீ ஸ்வர்ண காமாக்ஷி - தஞ்சை
(ஸ்ரீ பங்காரு காமாக்ஷி)


பார்க்கும் திசைதொறும் பாசாங்குசமும் பனிச்சிறை வண்டு
ஆர்க்கும் புதுமலர் ஐந்தும் கரும்பும் என்அல்லல் எல்லாம்
தீர்க்கும் திரிபுரையாள் திருமேனியும் சிற்றிடையும்
வார்குங்கும முலையும் முலைமேல் முத்தாரமுமே!..(85)
- அபிராமிபட்டர் -

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

4 கருத்துகள்:

 1. அருமை ஐயா...

  மிகவும் பிடித்த அதிகாரத்தின் குறளோடு...

  பதிலளிநீக்கு
 2. படங்கள் அனைத்தும் அருமை. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 3. படங்கள் அனைத்தும் அருமை!! விளக்கங்களும் அருமை! பாற்சோறு கூடாரைக்கு நேற்று வீட்டில் முழங்கை வழிவார என்று இல்லாவிட்டாலும் இறைவனுக்குப் படைத்தோம்...இன்று கறவைகள் இதோ உங்கள் பதிவிற்கு...

  கீதா

  பதிலளிநீக்கு