நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

வாழி அவன்தன் வளநாடு மகவாய் வளர்க்கும் தாயாகி

ஊழி உய்க்கும் பேருதவி ஒழியாய் வாழி காவேரி!..


வெள்ளி, மார்ச் 13, 2015

கரிக்குருவி - 2

அதோ கடம்பவனம்!..

இன்னும் சிறிது தூரம் தான்!.. - என்று எண்ணியபடி விரைந்து பறந்து கொண்டிருந்தது - அந்தக் குருவி.

கரியன் எனவும் கரிச்சான் எனவும் கூறப்பட்ட அந்தக் குருவியை -
காக்கைக்குக் காதம் - கரிக்குருவி!..- என ஏளனம் செய்திருந்தனர்.

இந்த அவலம் எல்லாவற்றையும் நீக்கிட வேண்டும்!..

- அது ஒன்றே முனைப்பாக இருந்தது கரியன் எனப்பட்ட கரிக்குருவிக்கு.


கரிக்குருவி மிகவும் களைத்திருந்தது. இளைத்திருந்தது.
காரணம் - அது வெகு தொலைவிலிருந்து ஓய்வின்றிப் பறந்து வருகின்றது.

நின்று நிதானமாக - இயற்கை அழகையெல்லாம் கண்டு களிப்பதாக -
அதன் பயணம் அமையவில்லை..

கருங்காக்கையிலிருந்து கொடுங்கழுகு வரை - இந்தக் கருங்குருவியை - விட்டேனா பார்!.. என்று வல்வழக்கிட்டு வாட்டி வதைத்தன.

சின்னஞ்சிறு புதருக்குள் சிறுகூடு கட்டி சேர்ந்திருக்கக் கூட முடியவில்லை.

தனக்கு மட்டும் இக்கொடுமை என்றில்லாமல் தன் இனத்தார் எல்லாருக்குமே இது தான் நிலைமை என்றிருந்ததைக் கண்டு - அதன் மனம் வெதும்பியது.

ஏனெனில் - இந்தக் குருவியையே - தமக்குத் தலைவனாகக் கொண்டிருந்தன - ஏனைய கரிக்குருவிகள்.

தலைவனாகிய தன்மையினால் -
தன்னைச் சேர்ந்தவர்களுக்கு நன்மை தேடும் வகையினால் தான் -

தன் உயிரையும் பொருட்படுத்தாமல் - நீண்ட நெடுந்தூரம் பயணித்து -
கடம்ப வனமாகிய மதுரையம்பதியை நெருங்கிக் கொண்டிருக்கின்றது.

கரிக்குருவிக்கு இந்நாள் நன்னாளாக அமைந்தது பூர்வ ஜன்ம புண்ணியம்!..

மதிய வேளையில் -  பாதுகாப்பாக அமர்வதற்கு நிழல் தேடியபோது - அந்த மரத்தின் கீழ் துறவி ஒருவர் அமர்ந்திருக்க - அவரைச் சுற்றிலும் அடியார்கள்!..

''மாமதுரையில் திகழும் பொற்றாமரைக் குளம் மகத்தானது. அதில் மூழ்கி எழுந்து - ஆங்கே வீற்றிருக்கும் ஆலவாய் அண்ணலையும் அங்கயற்கண் அம்மையையும் பணிந்து வணங்குவோர்க்கு அல்லல் ஒரு போதும் இல்லை!..''

- என அடியார்களிடம் விவரித்துக் கொண்டிருந்தார்.

அதைக் கேட்ட அக்கணமே - கரிக்குருவியின் சிறகுகள் -

அங்கயற்கண்ணி செங்கோல் ஏந்தி அருளாட்சி செய்யும் திருத்தலமாகிய
மாமதுரையை நோக்கி விரிந்தன.


அடி வானத்தை நோக்கி விரைந்து கொண்டிருந்த சூரியன் -
தன் கதிர்களால் - அக்குளத்தில் பூத்துக் கிடந்த தங்கத் தாமரைகளை வருடி - தன் கதிர்களில் ஒளி வீசும் பொன் வண்ணத்தை ஏற்றிக் கொண்டிருந்தான்.

சோமன் ஆகிய சந்திரன் வணங்கிய சுந்தர லிங்கத்தை
சூரியன் ஆகிய தானும் வணங்கி உவகை கொண்டான்.

இதைக் கண்ட குருவியின் மனம் ஆனந்தக் கூத்தாடியது.

தங்கத் தாமரைகள் மினுமினுத்துக் கொண்டிருந்த - அந்தக் குளமே- பொற்றாமரைக் குளம் என யூகித்துக் கொண்டது - கரியன்!..

அம்மையே!.. அப்பா!.. - என்று கூவியபடி, பொற்றாமரைக்குளத்தில் மூழ்கியது. எழுந்தது. மீண்டும் மூழ்கியது.. எழுந்தது.

மூன்றாவது முறையாக மீண்டும் மூழ்கி எழுந்த கரியன் - தன் சிறகுகளைச் சிலிர்த்து உதறிக்கொண்டு அந்தக் கடம்பவனத்தை வலம் வந்தது.

கடம்ப மரத்தினடியில் சுயம்புவாக திருமேனி.

சொக்கலிங்கம். சுந்தரேச சிவலிங்கம்!..

இக்கலிங்கம் போனால் என்? - மாமதுரைச்
சொக்கலிங்கம் உண்டே துணை!..

- என இரட்டைப் புலவர்கள் பாடித் துதித்த மகாலிங்கம்!..

அருகே - அமுத ஸ்வரூபிணியாக அங்கயற்கண் அம்பிகை!..

காணற்கரிய கடவுளைக் கண்ட - கரியனின் கண்களில் நீர்..

பேசுதற்கு மொழியின்றி - வைத்தவிழி வைத்தபடி - வெகுநேரம் பார்த்திருந்தது.

இருள் சூழ்ந்திருந்த அவ்வேளையில் சிவாச்சார்யார்கள் வந்தனர்.
ஐயனுக்கும் அம்பிகைக்கும் நித்ய ஆராதனைகளை நிகழ்த்தினர்.

உடன் வந்தவர்கள் - அர்த்தஜாம பூஜை சிறப்பு என்று பேசிக் கொண்டனர்.

திருவிளக்குகளின் சுடரைக் குறைத்து வைத்து விட்டுப் போயினர்.

கரிக்குருவிக்கு வந்த களைப்பு - கண்களைச் சுழற்றியது.

கூட்டில் அவளிடம் சொல்லிக் கொள்ளாமல் வந்து விட்டோமே!..

தன் துணையை ஒரு கணம் நினைத்தது.. ஈசனே.. காப்பு!.. - எனத் துதித்தது.

நறுமணம் கமழ்ந்த நந்தவனத்துப் புதரினுள் சென்று கண்ணயர்ந்தது.

இயல்பாகத் தூக்கம் - பிரம்ம முகூர்த்த வேளையில் கலைந்ததும்,

கீசு.. கீசு.. - எனப் பாடிக் களித்தது. அங்குமிங்குமாகப் பறந்து திரிந்தது.

பொற்றாமரைக் குளத்தில் மீண்டும் மீண்டும் மூழ்கிக் களித்த வேளையில் -

கூவின பூங்குயில் கூவின கோழி
குருகுகள் இயம்பின இயம்பின சங்கம்!..

திருப்பள்ளி எழுச்சி பாடியவண்ணம் சிவனடியார்கள் திரண்டு வந்தனர்.

அங்கயற்கண் அம்மையுடன் ஐயன் - துயில்வதாகப் பாவித்து பெருமானையும் அம்பிகையையும் - துயில் எழ செய்தனர்.

நன்னீரால் நீராட்டி - புத்தாடைகளை அணிவித்தனர். வாசம் மிகும் சந்தனாதி திரவியங்களைப் பூசினர்.

அன்றலர்ந்த மலர்களால் தொடுக்கப்பட்ட மாலைகளைச் சூட்டி அலங்கரித்து தூப தீப ஆராதனைகளுடன் உண்ணுதற்கு இனிதான அன்ன வகைகளை -அன்புடன் சமர்ப்பித்து வணங்கினர்.

அம்மையப்பனுக்கு படைக்கப்பட்ட - சித்ரான்னங்களைத் தாங்கள் உண்ணும் முன்பாக -

ஆணவ, கன்ம, மாயா மலங்களைப் பலியிடுதற்கான பலிபீடத்தில் -
சிற்றுயிர்களுக்கு என அன்னத்தை அள்ளி வைத்தனர்.

அதுவரையிலும் ஆங்காங்கே காத்துக் கிடந்த குருவிகளும் புறாக்களும் கிளிகளும் அணில்களும் ஓடோடி வந்து - அந்த அன்னத்தைத் தம்முள் பகிர்ந்து கொண்டன.

கரியன் தானும் தாவிச் சென்று -  ஈஸ்வரப் பிரசாதத்தைப் பெருமகிழ்வுடன் உண்டது.

அங்கிருந்த பறவைகள் ஒன்றோடொன்று அடித்துக் கொள்ளாதது - இதுவரை காணாத விநோதமாக இருந்தது கரியனுக்கு!..

பறவைகள் மட்டுமின்றி - மனிதர்களும் ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்ளாமல் அன்பு கொண்டு இருந்தனர் - அன்றைய மதுரையில்!..

இரண்டாம் நாளும் கழிய - இறைதரிசனம் வேண்டிக் காத்திருந்தது கரியன்!..

விடிந்தது - மூன்றாம் நாள். விருந்தும் மருந்தும் மூன்று நாள் தானே!..

இன்று எப்படியும் இறைவனிடம் நம் குறையைச் சொல்லிட வேண்டுமெனக் காத்துக் கிடந்தது கரியன்.

நித்ய வழிபாடுகள் எல்லாம் நிறைவேறின..

இதோ.. இப்போதே சொல்வோம்!.. - என சிந்தித்த அப்பொழுதில் - அம்மையும் அப்பனும் அந்தக் கருங்குருவியின் மீது கழிவிரக்கம் கொண்டு எதிர்நின்றனர்.

ஈசனுடன் கரிக்குருவி
எண்ணிலா உயிர்க்கு இறைவ போற்றி வான்
தண்ணிலா மதிச் சடில போற்றிஎன்
புண்ணியப் பயன் போற்றி அங்கயற்
கண்ணிநாத நின் கருணை போற்றி!..

- எனத் துதித்துத் தொழுது வணங்கி வலம் வந்தது கரிக்குருவி.


அனைத்தும் அறிந்தவளாகிய அம்பிகை - அந்தக் கரிக்குருவி அறியும் பொருட்டு -

இக்குருவிக்கு ஏன் இத்தனை இடுக்கண்!..  - என்று ஐயனிடம் வினவினாள்..

முற்பிறப்பினில் - நிறைந்த அறிவுடன் நற்காரியங்கள் பல செய்தவனாக இருந்தாலும் - அதனூடே இழைத்த தீவினையால் - இத்துயர் வந்துற்றது!..

- என்று திருவாய் மலர்ந்தருளினார்.

இந்தக் குருவி அடைந்த துயர் போதும்!.. அன்பு கொண்டு அடைக்கலம் நல்கி ஆவன செய்தருளுங்கள் ஸ்வாமி!..

அங்கயற்கண்ணி அன்பு கொண்டு பரிந்துரைத்தாள்.

தேவி!. இதன் தொல்வினைகள் எல்லாம் தீர்ந்தொழிந்தன. அதனாலன்றோ - நம்மை நாடி வந்ததும்!.. இக்கரியனுக்கு ம்ருத்யுஞ்சய மந்திரத்தை யாம் உபதேசிப்போம்!..

ஈசன் மொழிந்ததும் தேவதுந்துபிகள் முழங்கின. பூமாரி பெய்தது.

புண்ணியத்துடன் மகா மந்த்ர உபதேசம் பெற்ற கரியன் - மீனாட்சி சுந்தரனின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கியது.

ஆயினும்,  எனக்கு ஐய!.. ஓர் குறை.. தீய புள் எலாம் ஊறு செய்து எனைக் காய்ந்தன. மனமும் கழியக் கண்டு எளியன் ஆயினேன்!.. - என்றது.

அதைக் கேட்ட எம்பிரான் - புன்னகையுடன்,

அந்த புள்கட்கு எல்லாம் வலியை ஆகுக நீ!.. - என்றருளினான்.

இதைக் கேட்டு மகிழ்ந்த கரியன் மேலும் தாழ்ந்து பணிந்து -

பேதையேற்கு இன்னும் ஓர் வரம் தந்தருளல் வேண்டும்!.. -  என்றது.

யாது வேண்டும் கேள்!.. - என்றான் எம்பெருமான்.

வலியை என்பது என்மரபினுக்கு எலாம்
பொலிய வேண்டும் எப்போதும் நீ சொன்ன
ஒலிய மந்திரம் ஓதியோதி நாங்
கலியை வெல்லவும் கருணை செய்!..

- எனறு காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி நின்றது.

புன்னகைத்தனர் - அம்மையும் அப்பனும்!..

ஆகுக.. அவ்வண்ணம்!.. - என்று அருள் புரிந்தனர்.

அந்த அளவில் -

எளியன் என்றிருந்த கரியன் - வலியன் என்றானது!..

மீண்டும் - மீனாட்சி சுந்தரேசனின் திருவடிகளைத் துதித்தது - கரியன்..

இதுவே - கரிக்குருவிக்கு அருளிய லீலை!..

கருங்குருவிக்கு உபதேசித்த படலம் - என்றும் புகழப்படும் திருவிளையாடல்
ஈசன் நிகழ்த்திய அளவிலா விளையாட்டுகளுள் - குறிக்கப்படும் அறுபத்து நான்கினுள் நாற்பத்து ஏழாவது திருவிளையாடல் ஆகும்!..


மதுரையில் நிகழ்வுறும் ஆவணி மூலப் பெருந்திருவிழாவில் - நடத்தப்பெறும் பத்து திருவிளையாடல்களுள் - முதலாவதாக நிகழ்த்தப்படுவது இதுவே!..

ஈசன் நிகழ்த்திய இந்தத் திருவிளையாடலை -

கருங்குருவிக்கு அன்று அருளினை போற்றி!..

- என்று , மாணிக்கவாசகப் பெருமான் போற்றுகின்றார்.

எனில், கருங்குருவி பெற்ற பேறு தான் என்னே!..

தான் மட்டும் இன்புற வேண்டும் என எண்ணாமல் -
தன் இனத்தாரும் இன்னல் தீர்ந்து இன்புற்றிருக்க வேண்டும்!..

- என, எண்ணிய எண்ணம் தான்-
எளியனாக இருந்த கருங்குருவி வலியன் என்று ஆனதற்குக் காரணம்!..

திருவிளையாடற் புராணம் காட்டும் உண்மை இதுவே!..

கருங்குருவியின் இந்தத் தலைமைப் பண்பு போற்றத்தக்கது.
மனிதர்கள் ஏற்றுக் கொள்ளத்தக்கது!..

இத்தகைய வலியன் - வலம் வந்து வணங்கிய 
திருத்தலத்தினை அடுத்த பதிவில் தரிசிப்போம்!..

வலிவலம் வந்த இறைவா போற்றி!..

சிவாய திருச்சிற்றம்பலம்!..
* * *

26 கருத்துகள்:

 1. தான் மட்டும் இன்புற்றிருக்க நினையாமல்
  தன் இனமும் இன்புற்றிருக்க நினைத்த மனம்
  யாருக்கு வரும்
  நன்றி ஐயா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பிடையீர்..
   தன்னலம் கருதாத தன்மையினரால் தான் - இவ்வுலகு இயங்குகின்றது.

   தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

   நீக்கு
 2. 47வது திருவிளையாடல்... அருமை ஐயா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் தனபாலன்.
   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 3. கருங்குருவிக்காக நடத்தப்பாட்ட திருவிளையாடலை அறிந்து கொண்டோம். என்றும் மறவாதபடி இருக்கும் நீங்கள் சொன்ன விதம் ஐயா. தனக்கு மட்டுமன்றி தன் இனமும் என்றும் இன்புற்றிருக்க பிரார்த்தித்து இருக்கிறது. வலியன் மனதிலும் வலியனே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..

   //வலியன் மனதிலும் வலியனே//
   தங்கள் கைவண்ணம் அருமை..

   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 4. கருங்குருவி பற்றி தங்களை எழுத வேண்டிக் கொண்ட கலையரசி அக்காவிற்கு மிக்க நன்றி. எவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன.

  ஐயா தாங்கள் தொடர்ந்து எங்களுக்கு வழங்கிக் கொண்டு இருங்கள். நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..

   கலையரசி அவர்களுக்குத் தான் நன்றி..
   குருவருளும் திருவருளும் கூடி வரவேண்டும்.
   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 5. கரிக்குருவி புராணம் வியக்க வைக்கிறது நண்பரே தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி

   தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 6. ஈசனின் அன்புக்கு பாத்திரமான வலியன் பேறுபெற்றவனே, மனிதனுக்கு மட்டும் அல்ல புள்ளுக்கும் அருளியவன் புகழ் அறியதங்தமைக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி..
   இனிய கருத்துரைக்கு நன்றி..

   நீக்கு
 7. கரிக்குருவி திருவிளையாடல் மிக அருமையான பதிவு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தாங்கள் வருகை தந்து பாராட்டியமைக்கு மகிழ்ச்சி.. நன்றி ..

   நீக்கு
 8. தான் மட்டும் இன்புற னினையாமல் தன் இனத்தாரும் இன்புற்றிருக்க நினைத்த கரிக்குருவி மேன்மையானதே அதனால்தான் அந்த ஆலவாயன் திருவிளையாடல் புரிந்தானோ! பேறு பெற்ற கரிக்குருவி! திருவிளையாடல் பதிவு அருமை! பல தகவல்கள் கிடைத்தது நன்றிஐயா தங்களுக்கும் தங்களை எழுத வேண்டிய சகொதரி கலையரசிக்கும், எல்லாவற்றிற்கும் மேலாக உங்களை எழுத வைத்த அந்த திருவிளையாடல் புரிந்த ஈசனுக்கும் எங்கள் நன்றிகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..

   தாங்கள் கூறியபடிக்கு கலையரசி அவர்களுக்கு நன்றி ..
   பதிவினில் எழுதுதற்கு அருளும் பரமனுக்கும் நன்றி..

   தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி.. தங்களுக்கும் நன்றி..

   நீக்கு
 9. காரணம் புரியாத இன்னல்களுக்கு முற்பிறவிப் பயன் என்று தேற்ற வைக்கும் கதை . கரியன் வலியனானான் பிறகு மற்ற புள்கள் தொல்லை தருவது நின்று விட்டதா. அருமையாகக் கதை சொல்கிறீர். வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஐயா..
   இன்றும் கரிக்குருவிகள் - தாம் கூடு கட்டி வசிக்கும் பகுதிகளில் - காக்கை கழுகு போன்ற பறவைகளை அனுமதிப்பதேயில்லை. தைரியத்துடன் அவற்றைத் தாக்கி விரட்டி அடித்து விடுகின்றன.

   தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 10. கரியன் வலியன் ஆன கதையை பக்தி நயத்தோடு அருமையாகச் சொன்னீர்கள். நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடைய அண்ணா!..

   தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி.. தங்களுக்கும் நன்றி..

   நீக்கு
 11. ஆகா வெகு அருமை! திருவிளையாடற் புராணத்திலும் இந்தக் கரிக்குருவி இடம் பெற்றிருக்கும் செய்தி அறிந்து வியப்பு.
  எளியன் என்றிருந்தது வலியன் ஆனதும் 64 திருவிளையாடல்களில் 47 வது கருங்குருவிக்கு உபதேசித்த படலம் என்பதும் எனக்குப் புதிய செய்திகள்.
  கருங்குருவியைப் பற்றிய அருமையான இந்தச் செய்திகளைத் தொகுத்தளிக்க நானும் ஒரு காரணமாயிருந்திருக்கிறேன் என்பதில் மிக்க மகிழ்ச்சி.
  இந்த உபதேசப்படலத்தைப் பற்றிச் சொல்லிச் சென்ற விதமும் சுவையாக இருக்கிறது.
  பாராட்டுக்கள் துரை சார்! அடுத்து கருங்குருவியின் வலிவலம் கோவில் பற்றிய செய்திகளை அறிந்து கொள்ள ஆவலாயிருக்கின்றேன். தொடருங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்களுக்கு நல்வரவு!..

   மனதிற்குள் - அங்கும் இங்குமாக இருந்த தகவல்களை ஒருங்கிணைத்து வழங்குதற்கு தங்களின் கருத்துரை தூண்டுதல்!..

   பதிவு நன்றாக இருக்கின்றது - எனக் குறிக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கின்றது. மிக்க நன்றி..

   நீக்கு
 12. இதுவரை நான் கேள்விப்படாதது. திருவிளையாடல் புராணத்திலிருந்து அருமையாகத் தெரிவு செய்து வழக்கமான உங்களுடைய கோவில் உலாவில் அழகாகச் சேர்த்ததோடு எங்களோடு பகிர்ந்தமைக்கு நன்றி. திருவிளையாடல்புராணங்கள் தொடர்பான பல சிற்பங்களை பல கோயில்களில் பார்த்துள்ளேன். உங்கள் பதிவினைப் பார்த்தபின், தற்போது நான் வாசித்து வரும் தேவாரம் நிறைவு செய்து பின்னர் படிக்கவேண்டிய பட்டியலில் திருவிளையாடல் புராணத்தையும் இணைத்துள்ளேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தேவாரத்தினை தினமும் வாசித்து வரும் தங்களுக்கு வணக்கம்..
   தாங்கள் - வருகை தந்து கருத்துரைப்பது மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 13. எளியன் வலியன் ஆன் கதை அருமை.
  திருவிளையாடல் புராணம் முழுமையும் என் கணவர் மாயவரம் மயூரநாதர் கோவிலில் ஒருவருடம் சொன்னார்கள். அப்போது கேட்டும், படித்தும் இருந்தாலும் நீங்கள் சொல்லும் போது படிக்க அருமையாக இருக்கிறது. படங்கள் எல்லாம் மிக அழகு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..

   படிக்க அருமையாக இருக்கின்றது - என்று தாங்கள் கூறும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. மிக்க நன்றி..

   நீக்கு