நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், மார்ச் 30, 2015

கல்யாண கோலாகலம்

திருக்கயிலாய மாமலையின் காவல் மூர்த்தியாகிய நந்தியம்பெருமானுக்கும் வியாக்ரபாதரின் அருந்தவப் புதல்வியாகிய சுயம்பிரகாஷினி தேவிக்கும்
திருமழபாடி ஸ்ரீ வைத்யநாத ஸ்வாமி திருக்கோயிலில் சீரும் சிறப்புமாக நிகழ்ந்தது.

கடந்த (28/3) சனிக்கிழமை அன்று முன்னிரவு 7.30 மணியளவில் நிகழ்ந்த திருமணத்தை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்து இன்புற்றனர்.


27/3 வெள்ளியன்று காலை - திருஐயாற்றை அடுத்துள்ள அந்தணக்குறிச்சியில் ஸ்ரீநந்திகேஸ்வரரின் திரு அவதாரமும்,  அதை அடுத்து -




திருஐயாறு ஸ்ரீ ஐயாறப்பர் திருக்கோயிலில் பட்டாபிஷேகமும் நடைபெற்றது.

மறு நாள் காலை - பங்குனி புனர்பூச நட்சத்திரம்.

ஸ்ரீராம நவமி. ஸ்ரீராமனின் ஜன்ம நட்சத்திரம் - புனர்பூசம்!..

மங்கலகரமாகிய இந்நாளில் தான் ஆண்டு தோறும் ஸ்ரீ நந்திகேஸ்வரரின் திருக்கல்யாண வைபவமும் நிகழும்.


அதன்படி - திருமழபாடியில் திருமண வைபவங்களை நிகழ்த்துதற்கு - ஐயாற்றில் இருந்து மணமகன் நந்திகேசனுடன் - ஐயாறப்பரும் அறம் வளர்த்த அம்பிகையும் பல்லக்கில் எழுந்தருளினர்.




நந்திகேசன் வெள்ளித் தலைப்பாகை தரித்து செங்கோலுடன் குதிரையில் எழுந்தருளினார்.

ஹர ஹர கோஷங்களுடன் பக்தர்களும் தொடர்ந்து வர -

திருஐயாற்றினைக் கடந்து, திருநெய்த்தானம், கடுவெளி, வைத்தியநாதன் பேட்டை ஆகிய கிராமங்களின் வழியாக பயணித்தனர்.

வழியெங்கும் - கிராம மக்கள் - தங்கள் ஊருக்கு எழுந்தருளிய மூர்த்திகளை உற்சாகத்துடன் வரவேற்று மகிழ்ந்தனர்.

மக்களின் அன்பினை ஏற்றுக் கொண்ட வண்ணம் வடக்கே பயணித்து -  தென் கரை வழியாக கொள்ளிடத்தில் இறங்கினர்.








ஆற்று மணலின் சூடு தெரியாதபடிக்கு வைக்கோல் கொண்டு நடைபாவாடை விரித்திருந்தனர்.

கொள்ளிடத்தின் எதிர்கரையில் - திருமழபாடி!..

அருள்நிறை சுந்தராம்பிகையுடன் வைத்யநாதஸ்வாமி எதிர் கொண்டழைக்கக் காத்திருந்தார்.

பிறவிப் பெருங்கடலில் இருந்து மக்களைக் கரையேற்றும் - ஐயாறப்பரும் அறம் வளர்த்த அம்பிகையும் - கொள்ளிட ஆற்றைக் கடந்து கரையேறியதும் கோலாகலமாக வரவேற்கப்பட்டனர்.

அன்றைய தினம் மாலையில் சம்பிரதாயப்படி திருமண நிகழ்ச்சிகள் தொடங்கின.


ஸ்ரீபார்வதி பரமேஸ்வரர் - தம் ஸ்வீகார புத்திரரும் சிலாத முனிவரின் திருக் குமாரனும் ஈசனிடம் சகல வரங்களையும் பெற்றவரும் திருக்கயிலாய மாமலையில் அதிகார நந்தி எனும் பெரும் பதவியினை வகிப்பவரும் ஜபேசன் எனப் புகழப்படுபவருமான  நந்தீசன் எனும் திருநிறைச் செல்வனுக்கு, 

அருந்தவ சிரேஷ்டரான வசிஷ்ட மகரிஷியின் பேத்தியும் வியாக்ரபாதரின் திருக்குமாரத்தியும் உபமன்யுவின் பிரிய சகோதரியும் சுயசாதேவி  எனப் புகழப்படுபவளுமான  சுயம்பிரகாஷினி  எனும் திருநிறைச் செல்வியை -

மணம் முடிக்க என்று நல்ல முகூர்த்தத்தில் பேசி, சகல தேவதா மூர்த்திகளின் நல்லாசிகளுடன் பங்குனி மாத புனர்பூச நட்சத்திரங் கூடியதான - சுபதினத்தில் சுபயோக  சுபவேளையில் திருமாங்கல்யதாரணம் செய்வது!.. 

- என, ஏக மனதாக நிச்சயித்து இரு தரப்பிலும் தாம்பூலம் மாற்றிக்கொண்டனர்.  

நிச்சயதார்த்தத்திற்குப் பிறகு சீர்வரிசையுடன் - மணமகளாகிய சுயசாம்பிகை தேவி திருமண மேடைக்கு அழைத்து வரப்பட்டாள்.

வியாக்ரபாத முனிவரின் புதல்வியுமான சுயம்பிரகாஷினி தேவிக்கும், சிலாத முனிவரின் புதல்வரான நந்தியம்பெருமானுக்கும், 

ஸ்ரீவிக்னேஸ்வர பூஜை மற்றும் யாக வேள்வியுடன் துவங்கி, மஞ்சள், சந்தனம் முதலான பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடத்தி அலங்காரம் செய்யப்பட்டது.



அஷ்ட மங்கலங்கள் பொலிந்தன. எட்டுத் திக்கிலும் மங்கல வாத்யங்கள் முழங்கின.

விநாயகனும் வேலவனும் அருகிருக்க,

முப்பத்து முக்கோடிதேவர்களும் சிவகணங்களும் மகரிஷிகளும் சூழ்ந்திருக்க, 

பஞ்சபூத சாட்சியாக, அக்னி சாட்சியாக -

அறம் வளர்த்த நாயகியும் ஐயாறப்பனும் முன்னின்று -

ஸ்ரீநந்தீசனுக்கும் சுயம்பிரகாஷினி தேவிக்கும் திருமண வைபவத்தை நடத்தி வைத்து அருளினர். 

பூமாரி பொழிந்து அனைவரும் மகிழ்ந்தனர்.

இந்த ஆனந்த வைபவம் - 

மனிதரும் தேவரும் மாயா முனிவரும் மற்றும் அகிலத்திலுள்ள அனைத்து ஜீவராசிகளும் கண்குளிரக் காணும்படிக்கு இனிதே நடந்தேறியது. 

திருமாங்கல்ய தாரணம் நிகழ்ந்தேறிய அளவில் - 

ஸ்ரீநந்திகேஸ்வரர் சுயம்பிரகாஷினி தேவியுடன் வளர்த்த தாய் தந்தையர்க்கும் ஆதிகாரணராகிய அறம் வளர்த்த நாயகிக்கும் ஐயாறப்பனுக்கும் பாதபூஜைகள செய்து பணிந்தார். வலஞ்செய்து வணங்கினார். 

இளந்தம்பதியர் இருவரும் திருமணக் கோலத்தில் - ஸ்ரீசுந்தராம்பிகை சமேத வைத்யநாதப் பெருமானை வலஞ்செய்து வணங்கினர். 

மாட வீதிகளில் வலம் வந்த தம்பதியர்க்கு - திருமழபாடியின் மக்கள் அனைவரும் மாவிலைத் தோரணம் மங்கலச் சின்னங்களுடன் வரவேற்பு அளித்து மகிழ்ந்தனர்.

விசேஷத்திற்கு வந்திருந்த அனைவரும் மணமக்களைப் பணிந்து வணங்கி இன்புற்றனர்.

ஐயாற்றிலிருந்து எம்பெருமானுடன் கூடி வந்த அனைவரும்  மணமக்களை தத்தமது ஊர்களுக்கு வந்தருளுமாறு வேண்டி விரும்பி அழைத்தனர்.


சித்ரா பௌர்ணமியை  அடுத்து வரும் விசாக நட்சத்திரத்தன்று - தாமே மணமக்களை அழைத்து வருவதாக அம்மையும் அப்பனும் அவர்களுக்கு வாக்களித்தனர்.

இந்த அளவில் - திருக்கல்யாணத் திருவிழா பக்தி பூர்வமாக நிகழ்ந்தது. 

விழா நிகழ்வுகளை அழகிய படங்களாக வழங்கிய -
தம்பிரான் ஸ்வாமிகளுக்கும், திருவையாறு சிவ சேவா சங்கத்தினருக்கும்
நெஞ்சார்ந்த நன்றியும் வணக்கமும் - என்றும் உரியன.

அங்கணன் கயிலை காக்கும் அகம்படித் தொழின்மை பூண்டு
நங்குரு மரபிற்கெல்லாம் முதற்குரு நாதன் ஆகிப்
பங்கயத் துளவம்நாறும் வேத்திரப்படை பொறுத்த 
செங்கையெம் பெருமான் நந்தி சீரடிக் கமலம் போற்றி!..

சிவாய திருச்சிற்றம்பலம்..
* * *

18 கருத்துகள்:

  1. தங்கள் நடையே அருமை. தாங்கள் சொல்வதைக் கேட்கும் போதே திருமண கோலம் கண்ட மகிழ்ச்சி. புகைப்டங்கள் அத்துனையும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி..
      இனிய கருத்துரைக்கு நன்றி..
      வாழ்க நலம்!..

      நீக்கு
  2. புகைப்படங்கள் அனைத்தும் அழகு நண்பரே... அனைவருக்கும் அருள் கிடைக்கட்டும் வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகை + கருத்துரைக்கு மிக்க மகிழ்ச்சி.. நன்றி..
      வாழ்க நலம்!..

      நீக்கு
  3. நம்மைப் படைத்ததாக, நாம் நினைத்துக் கொண்டிருக்கும் நாம் படைத்தகடவுள்களுக்கு, நமக்கு நாம் நிகழ்த்தும் அநேக விழாக்களையும் நிகழ்த்திமகிழ்ச்சிஅடைகிறோம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான் ஐயா!.. திருவிழாக்களின் போது மனம் அடையும் மகிழ்ச்சியும் நிம்மதியும் விவரிக்க இயலாததது..

      அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. அருமையான படங்களுடன் சிறப்பான தகவல்கள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மணவிழாவில் கலந்து கொண்டமைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. நேரில் கண்டது போல் உள்ளது படங்களும் ,பகிர்ந்த விதமும்...நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கல்யாண கோலாகலத்தில் தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. அருமையான படங்கள் மூலம் நாங்களும் கலந்து கொண்ட உணர்வு... நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகை கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. நந்தியம்பெருமான் திருமணம் கண்டோம். மகிழ்வுற்றோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருமண வைபவத்தில் - தங்களின் மகிழ்ச்சி கண்டு - மகிழ்ச்சி.. நன்றி.

      நீக்கு
  8. படிக்கப் படிக்க நந்தியம்பெருமானின் திருமணத்தை நேரில் கண்ட உணர்வு ஐயா
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருமண வைபவத்தில் தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி - நன்றி..

      நீக்கு
  9. அழகான புகைப்படங்களுடன் அருமையான தகவல்கள், விளக்கங்கள். புதியன பல அறிந்தோம். மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருமண விசேஷத்தில் கலந்து கொண்டமைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..