நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

வாழி அவன்தன் வளநாடு மகவாய் வளர்க்கும் தாயாகி

ஊழி உய்க்கும் பேருதவி ஒழியாய் வாழி காவேரி!..


வெள்ளி, மார்ச் 27, 2015

நந்தீசன் கல்யாணம்

தஞ்சை திருச்சி அரியலூர் மாவட்டங்களின் பல பகுதிகளிலும் - குறிப்பாக கொள்ளிடப் பெருநதியின் இருமருங்கிலும் வாழும் மக்களின் கனவு ஒன்று நிறைவேறும் நாள்!..

அதிலும் பெண்களைப் பெற்றவர்கள் எதிர்நோக்கிக் காத்திருக்கும் நன்னாள்!..

கவலையுற்ற கண்களில் தேங்கிக் கிடக்கும் வினாக்களுக்கு -
விடை கொடுக்கும் திருநாள்!..

கல்யாணம் தான் என்றில்லாமல் - ரகசியம் அறிந்தோர் - தமது எல்லா வினாக்களுக்கும் - விடை தேடி நிற்கும் பெருநாள்!..


அறம் - ஒரு பாலகனாக அவதாரம் செய்த நாள் இன்று!..

பங்குனி மாதத்தின் திருவாதிரை நாளாகிய இன்று - வெள்ளிக்கிழமை,
திருஐயாற்றினை அடுத்துள்ள அந்தணக்குறிச்சியில்

ஸ்ரீநந்திகேஸ்வரன் திருஅவதாரம் நிகழ்கின்றது!..

நாளை - சனிக்கிழமை முன்னிரவுப் பொழுதில்,

வேதனைகளுக்கு விடியல்!..

ஆம்!.. ஸ்ரீநந்திகேஸ்வரன் திருக்கல்யாணம்!..


சைவத்தின் முதற்குரு நந்தீசன்!..

இவரது அனுமதியுடன் தான் சிவாலய தரிசனம் என்பது மரபு.

இவரே நமக்கு சிவதரிசனம் செய்து வைப்பவர்.

பிரதோஷ நாட்களில் - சிறச்ப்புடைய வழிபாடு நந்தியம்பெருமானுக்கே!..


பேரூழிக் காலத்தில் மகா சங்காரம் நிகழ்ந்த பிறகு - ஏகாந்தமாகத் தனித்து இருக்கும் சிவபெருமானின் திருவடிகளின் அருகில் காத்திருக்கும் பேறு பெற்றவர் - நந்தீசன் ஒருவரே!..


திருக்கயிலாய மாமலையில் பொற்பிரம்பு தாங்கி அதிகார நந்தி எனும் திருப் பெயருடன் சேவை செய்பவர்.

இவர் தம் மனத்துள்ளும் மண்ணுலகில் பிறந்து சிவபூஜை செய்து மகிழ வேண்டும் என ஆவல் தோன்றியது.

அதன் பொருட்டே - அவரது ஜனனம் பூவுலகில் நிகழ்ந்தது.

அவ்வண்ணமாகும் போது -

ஈசன் தமது திருநட்சத்திரமான திருவாதிரையில் நந்தீசனைப் பிறக்கச் செய்தார் எனில் -

நந்தீசனின் பெருமையைச் சொல்லவும் வேண்டுமோ!..


ஐயாறா.. ஐயாறா!..

- என அடியார்கள் பணிந்தேத்தும் செம்பொற்ஜோதியான ஈசன் - அறம் வளர்த்த அம்பிகையுடன் அருளாட்சி செய்யும் திருத்தலம் - திருஐயாறு!..

இத்திருத்தலத்தை அடுத்துள்ள அந்தணக்குறிச்சியில் -
நந்தியம்பெருமான் ஜனனம் நிகழ்கின்றது. 

சிவாச்சாரியார்கள் வெள்ளி கலப்பையால் பூமியில் உழுவர். 
அங்கே சிலாத முனிவருக்கு திருமகனாக நந்தீசன் தோன்றுவார்.

வெள்ளிப் பேழையின் உள்ளிருந்து கிடைக்கப் பெற்ற நந்தியம்பெருமானுக்கு அங்கேயே மங்கல நீராட்டு நிகழ்த்துவர்.

அதன் பின்னர் மேள தாளங்களுடன் மங்கள வாத்தியங்கள் ஒலிக்க, வேத மந்திர - தேவார இன்னிசை முழங்க -

திருஐயாறு ஐயாறப்பர் திருக்கோயிலுக்கு நந்தீசன் அழைத்து வரப்படுவார்.

அன்று மாலை நந்தியம்பெருமானுக்கு பட்டாபிஷேகம் நடத்தப்படுகின்றது.

அருள்நிறை ஐயாறப்பர் - அறம் வளர்த்தநாயகி
பின்னர் திருவையாறில் இருந்து அருள்நிறை அறம் வளர்த்த நாயகியும் உடனுறை ஐயாறப்பரும் நந்தியம்பெருமானுடன் புறப்படுவர்.
அம்மையும் அப்பனும் அலங்காரப் பல்லக்கில் ஆரோகணித்து வர -

மாப்பிள்ளையாகிய திருநிறைச்செல்வன்- நந்தீசன், வெள்ளி தலைப்பாகை தரித்து குதிரை வாகனத்தில் அமர்ந்து வருவார்.

திருஐயாற்றிலிருந்து - திருநெய்த்தானம், கடுவெளி, வைத்யநாதன்பேட்டை - என தென்கரை வழியாக கொள்ளிடத்தைக் கடக்கின்றனர்.


திருமழபாடி திருக்கோயில்
கொள்ளிடத்தைக் கடந்து வருபவர்களை - கொள்ளிடத்தின் வடகரையில் -
திருமழபாடி அருள்திகழ் சுந்தராம்பிகையும் உடனமர் வைத்யநாதஸ்வாமியும்,  -  கண்ணாடி பல்லக்கில் சென்று ஊர்வாழ் மக்களுடன் - எதிர்கொண்டு அழைக்கின்றனர்.

மங்கல வாத்தியங்கள் முழங்க - சிறப்பாக வரவேற்கின்றனர்.

திருஐயாற்றிலிருந்து மணம் பேசி முடிக்க வருகை தரும் சம்பந்திகளையும், மணமகனையும் வரவேற்று உபசரிக்கின்றனர்.
பிறகு திருமழபாடியின் நான்கு திருவீதிகளிலும் சிறப்பாக அழைத்து வரப்பெற்று கௌரவிக்கப்படுகின்றனர்.

ஊர்வலம் வந்த பிறகு, திருக்கோயில் முன் அமைக்கப்பட்டுள்ள திருமண அரங்கத்தில் அம்மையப்பனும் நந்தீசனும் தங்க வைக்கப்படுகின்றனர்.

சனிக்கிழமையன்று முன்னிரவு ஏழு மணியளவில் சர்வ மங்கலங்களுடன் -

வியாக்ரபாதரின் அன்பு மகளான 
திருநிறைச்செல்வி சுயம்பிரகாஷிணி தேவியுடன் 
மாங்கல்ய தாரணம் நிகழ்கின்றது.

நந்தீசனும் சுயம்பிரகாஷிணி தேவியும்
கண் கொள்ளாக் காட்சியினை - 
கண் கொண்ட பயனாகக் கண்டு களிக்க வேண்டும்.

தேவாரத் திருப்பதிகம் பெற்ற திருத்தலம் - திருமழபாடி.

அப்பரும் திருஞானசம்பந்தரும் சுந்தரரும் பாடிப் பரவிய திருத்தலம்.

திருக்கோயிலின் எதிரில் கொள்ளிடம்
கொள்ளிடத்தின் வடகரையில் - திருமானூருக்கு மேற்கே அமைந்துள்ளது.

தஞ்சை மாநகரின் பழைய பேருந்து நிலையத்திலிருந்தும் அரியலூரில் இருந்தும் திருச்சி சத்திரம் பேருந்து நிலைத்திலிருந்தும் பேருந்துகள் இயங்குகின்றன.

திருக்கல்யாணத்தன்று விடிய விடிய பேருந்துகள் இயக்கப்படுகின்றன.


நந்திக் கல்யாணம் பார்த்தால் முந்திக் கல்யாணம் என்பது சிறப்புரை!..

கல்யாணக் கனவு மட்டுமே நிறைவேறும் என்பதில்லை..

நியாயமான விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் தருணம் அது!..

பதினாறு பேறுகளையும் வேண்டிப் பெற்றுக் கொள்ளலாம்..


அழைப்பும் காணொளியும் வழங்கியோர் - திருஐயாறு சிவசேவா சங்கம்..
அன்னவர்க்கு மனமார்ந்த நன்றியும் வணக்கமும்!..

மங்கல நிகழ்வுகளைக் காண்பதற்கு அனைவரையும் வருக வருக!..
- என மகிழ்வுடன் வரவேற்பதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன்!.. 
அனைவரும் ஸ்ரீ நந்திகேஸ்வரர் திருஅவதார விழாவிலும் திருக்கல்யாண வைபவத்திலும் கலந்துகொண்டு நல்லருளைப் பெற்றுய்யுமாறு அன்புடன் வேண்டுகின்றேன்.

சீரார் திருஐயாறா போற்றி!..

நெற்றிமேல் நிமிர்கண்ணும் நிலாஒளிர்
பொற்றடம் புய நான்கும் பொருந்துறப் பெற்று 
எம்மான் அருளால் பிரம்பு கைப்பற்றும் 
நந்தி பரிவொடு காப்பது..  

சிவாய திருச்சிற்றம்பலம்..
* * * 

14 கருத்துகள்:

 1. சிறப்பான நிகழ்வுகளை அறிந்தேன் ஐயா... நன்றி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் தனபாலன்..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 2. திருமழபாடி சென்றுள்ளேன். நந்திக்கல்யாணம் பார்த்ததில்லை. அழைப்பித்தமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 3. நந்திக்கல்யாணம் பார்த்தால் முந்திக் கல்யாணம் என்பது பழமொழியா? அருமையான பதிவு. வாழ்த்துக்கள். அழகிய புகைப்படங்கள். கொண்டு செல்லும் விதம் அருமை. நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக.. வருக...
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 4. அருமையான பதிவு நண்பரே... காணொளி கண்டு தரிசித்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 5. நந்தீசன் திருமணத்தைக் காண வர இயலாது/ இங்கிருந்தே வாழ்த்துகிறேன். வாழ்த்துக்கள் உங்களுக்கு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஐயா..
   தங்கள் வாழ்த்துரைக்கு மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 6. திருமழபாடி சென்றதில்லை
  அவசியம் செல்ல முயற்சிக்கின்றேன் ஐயா
  நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி. நன்றி..

   நீக்கு
 7. அருமையான பதிவு, காணொளி மிக அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு