நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், மே 29, 2017

ஆரூரின் ஆழித்தேர்

ஆரூர்...

திருஆரூர்..

கோயில் ஐவேலி.. குளம் ஐவேலி - என்பது சிறப்பு..


பூங்கோயில் எனப்படும் திருக்கோயிலும்
கமலாலயம் எனப்படும் திருக்குளமும்
ஐவேலி எனும் பரப்பளவை உடையவை என்பது சிறப்பு..

ஒரு வேலி என்பது சுமார் ஆறரை ஏக்கர் பரப்பளவு..

ஐவகை பூதங்களில் மண்ணின் பகுப்பாகத் திகழ்வது ஆரூர்...

ஈசன் எம்பெருமான் புற்றின் வடிவமாகத் திகழ்கின்றனன்..

வன்மீக நாதன் - புற்றிடங்கொண்டார் என்பன திருப்பெயர்கள்..

விடங்கத் திருத்தலங்கள் ஏழினுள் முதலாவதானது திருஆரூர்..


சோழர்களின் ஆதியான தலைநகர்...

சோழ மன்னர்கள் முடி சூட்டிக் கொள்ளும்
திருவூர்கள் ஐந்தனுள் திரு ஆரூரும் ஒன்று..

ஏனையவை - தில்லை, உறையூர், காவிரிப்பூம்பட்டினம், திருச்சேய்ஞலூர்..

மாமன்னர்களாகிய முசுகுந்த சக்ரவர்த்தியும் சிபி சக்ரவர்த்தியும்
ஆட்சி செய்ததாக ஐதீகம்..

மனுநீதிச் சோழன் - தன் மகனைத் தேர்க்காலில் இட்டு
பசுவிற்கு நீதி வழங்கிய திருத்தலம்...


அப்பர் பெருமானின் நெஞ்சை விட்டு நீங்காதத் திருத்தலம் - திரு ஆரூர்..

ஆழித்தேர் வித்தகரும் தாமே போலும்
அடைந்தவர்கட்கு அன்பராய் நின்றார் போலும்..

- என்று, ஆரூர் ஆழித்தேரினையும் ஐயன் எம்பெருமானையும் போற்றுகின்றார் - திருநாவுக்கரசர்..

வீதிகள்தோறும் வெண்கொடியோடு விதானங்கள்
சோதிகள்விட்டுச் சுடர்மாமணிகள் ஒளிதோன்றச்
சாதிகளாய பவளமும் முத்துத் தாமங்கள்
ஆதியாரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்.. (4/21)

- என, அப்பர் பெருமான் திருஆரூரில் நிகழ்ந்த திருஆதிரைத் திருநாளை வர்ணிக்கும் போது திருஆரூரின் அனைத்துத் திருவிழாக்களும் கண் முன் தோன்றுகின்றன..


ஆதிரைத் திருநாள் மட்டுமல்லாமல் திருஆரூரில் நிகழும் அனைத்து திருவிழாக்களிலும் இந்திரன் முதலான வானவரும் சித்தர்களும்
மக்களுடன் மக்களாகக் கலந்து கொள்கின்றார்கள் என்பது ஐதீகம்...

அது மட்டுமல்லாமல் - ஒவ்வொரு நாளும் மாலையில் ஸ்ரீ தியாக ராஜரின் சந்நிதியில் நிகழும் அந்தி வழிபாட்டின் போது இந்திரன் முதலான வானவரும் சித்தர்களும் கலந்து கொண்டு தரிசிக்கின்றனர்..

அவர்களை ஒழுங்கு செய்யும் வண்ணமாகவே -
சந்நிதியில் நந்தியம்பெருமான் நின்ற கோலத்தில் சேவை சாதிக்கின்றார்..



மிக உயரமான திருத்தேர் என்ற பெருமைக்குரியது மட்டுமல்ல..
தேர் அழகுக்கு எடுத்துக் காட்டாக விளங்குவதும் இதுவே!..

ஆழித் தேர் நான்கு நிலைகளையும், பூதப்பார் முதற்கொண்டு சிறுஉறுதலம், பெரியஉறுதலம், நடகாசனம், விமாசனம், தேவாசனம், சிம்மாசனம் பீடம் என ஏழு அடுக்குகளையும் கொண்டது..

திருத்தேரின் நான்காவது நிலையில் - சிம்மாசனத்தில்
ஸ்ரீ தியாகராஜ சுவாமி அல்லியங்கோதையுடன் வீற்றிருப்பார்..

தேர் பீடம் 31 அடி உயரமும் 31 அடி அகலமும் கொண்டது.
மூங்கில்களைக் கொண்டு முழுமையாக அலங்கரிக்கப்படும்போது,
தேரின் உயரம் 96 அடியாக இருக்கும்.



தேரை அலங்கரிக்க அதிக அளவில் மூங்கில் கம்பங்களும்,
மூவாயிரம் மீட்டர் அளவுக்கு தேர் அலங்காரச் சீலைகளும் பயன்படுத்தப்படுகின்றன.

ஆழித்தேர் நானூறுக்கும் மேற்பட்ட சிற்பங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது..

தேரின் உச்சியில் ஒரு மீட்டர் உயரத்திலான கலசம் பொருத்தப்பட்டிருக்கும்.


தேரின் முன்புறத்தில் - பிரம்மன் சாரதியாக வீற்றிருக்க
நான்கு வேதங்களை முன்னிறுத்தும் குதிரை பொம்மைகள்..

தவிரவும் வண்ணமயமான பொம்மைகள் பலவும் தேரில் அணிசெய்கின்றன...

தேரின் கட்டுமானத்திற்கு 500 கிலோ எடையுடைய சீலைகள்
பல நூறு கிலோ எடையுடைய கயிறுகள், 5 டன் எடையுடைய மூங்கில் கழிகள் மற்றும் பனை மரத்தின் சப்பைகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

ஆழித் தேரில் 425 அடி நீளமுடைய இரட்டை வடகயிறுகள் பொருத்தப்பட்டுள்ளன...

ஆழித் தேரின் ஒவ்வொரு சக்கரமும் 2.59 மீட்டர் விட்டம் கொண்டது..



அந்தக் காலத்தில் யானைகளை வைத்து முட்டித் தள்ளி ஆழித்தேரை நகர்த்தியுள்ளனர்.

தற்போது மக்கள் வடம் பிடித்து இழுப்பதுடன், பின்புறத்தில் இரண்டு புல்டோசர் எந்திரங்கள் மூலமாக சக்கரங்கள் உந்தித் தள்ளப்படுகிறது.

முன்பெல்லாம் ஏராளமான முட்டுக் கட்டைகளை கொண்டு வந்து,
தேர் சக்கரங்களில் போட்டு தேரை நிறுத்துவர்.

தற்போது திருச்சி பாரத மிகு மின் நிறுவனம் தயாரித்தளித்த
ஹைட்ராலிக் பிரேக் சிஸ்டம் கொண்டு தேர் இயக்கப்படுகின்றது...

1988 ம் ஆண்டு இந்த தேரின் சக்கரங்களுக்கு இரும்பு தகடுகள் பொருத்தப்பட்டதால், எளிதாக இழுக்க முடிகின்றது...

பெருஞ்சிறப்புகள் பலவற்றையும் தன்னகத்தே கொண்டு திகழும்
திருஆரூரில் இன்று காலை ஆழித்தேரோட்டம் நிகழ்கின்றது...


பல்லாயிரக் கணக்கில் அடியார்கள் குழுமியிருக்கின்றனர்..

ஆழித்தேர் கட்டுமானப் பணிகளின் படங்களை வழங்கியோர்
சிவனடியான் உழவாரத் திருப்பணிக்குழுவினர்..
அவர்தமக்கு நெஞ்சார்ந்த நன்றி..

இன்னும் சிறுபொழுதில்,
ஆரூரா.. தியாகேசா!.. - எனும் பெருமுழக்கத்தால் விண்ணதிர இருக்கின்றது..

நாமும் அவ்வண்ணமாக சிந்தித்திருப்போம்!..

வளைக்கை மங்கைநல் லாளையோர் பாகமாத்
துளைக்கை யானை துயர்படப் போர்த்தவன்
திளைக்குந் தண்புனல் சூழ்திரு ஆரூரான்
இளைக்கும் போதெனை ஏன்றுகொளுங் கொலோ..(3/45) 
-: திருஞானசம்பந்தர் :-

கரையுங் கடலும் மலையும் 
காலையும் மாலையும் எல்லாம்
உட்ரையில் விரவி வருவான்
ஒருவன் உருத்திர லோகன்
வரையின் மடமகள் கேள்வன்
வானவர் தானவர்க் கெல்லாம்
அரையன் இருப்பதும் ஆரூரவர்
எம்மையும் ஆள்வரோ கேளீர்..(7/73) 
-: சுந்தரர் :-

ஓங்கி உயர்ந்தெழுந்து நின்ற நாளோ
ஓருகம்போல் ஏழுகமாய் நின்ற நாளோ
தாங்கியசீர்த் தலையான வானோர் செய்த
தக்கன்தன் பெருவேள்வி தகர்த்த நாளோ
நீங்கியநீர்த் தாமரையான் நெடுமா லோடு
நில்லாயெம் பெருமானே என்றங்கேத்தி
வாங்கிமதி வைப்பதற்கு முன்னோ பின்னோ
வளர்ஆரூர் கோயிலாக் கொண்ட நாளே.. (6/34) 
-: திருநாவுக்கரசர் :-

ஆரூர் அமர்ந்த அரசே போற்றி..

ஆரூரா.. தியாகேசா..
தியாகேசா.. ஆரூரா..

ஓம் நம சிவாய.. சிவாய நம ஓம்.. 
***

7 கருத்துகள்:

  1. பிரமிக்க வைக்கிறது தகவல்கள்...

    பதிலளிநீக்கு
  2. அன்பின் ஜி எவ்வளவு விடயங்கள் தொடரட்டும் தங்களின் புனிதத்தொண்டு.

    பதிலளிநீக்கு
  3. 1974 ல் பார்த்தது ஆழித்தேர் . பார்த்து வியந்து இருக்கிறேன்.
    தேர்ப் ப்ற்றிய விவரங்கள் அருமை.
    தேவாரபாடல் பகிர்வுக்கு நன்றி.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. பிரம்மாண்ட தேர். அழகிய படங்களுடன் எவ்வளவு விவரங்கள்! ரசித்தேன் ஜி.

    பதிலளிநீக்கு
  5. பல முறை பார்த்துள்ளேன். எனக்கென்னவோ தஞ்சாவூர் மாவட்டத்தில் குறிப்பாக கும்பகோணம் பகுதியில் உள்ள தேர்களைப் போல இத்தேர் இருப்பதாகத் தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
  6. ஆரூர் தேர் பெரிய தேர் என்றும் கேள்விப்பட்டிருக்கிறோம் ஆனால் பார்த்ததில்லை. பிற தேர்களைப் போல் இல்லை போலத் தெரிகிறது! மிக மிக அழகான அலங்காரம். மூங்கில் கொண்டு கட்டியிருக்கும் அந்த வேலைப்பாடு மிக் மிக அழகாக இருக்கிறது...தகவல்கள் பிரமிக்க வைக்கிறது. பகிர்விற்கு மிக்க நன்றி...

    துளசி, கீதா

    பதிலளிநீக்கு
  7. திருவாரூர் - நான் செல்ல நினைத்திருக்கும் பல இடங்களில் இவ்வூரும் ஒன்று. ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு காரணத்தினால் தமிழகம் வரும்போது எங்கேயும் செல்ல முடிவதில்லை!

    தேரின் சிறப்பினை அழகாய்ச் சொல்லி இருக்கிறீர்கள்.... தேரோட்டம் பற்றிய படங்கள் பதிவாக வரும் என எதிர்பார்க்கிறேன்!

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..