நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், ஆகஸ்ட் 30, 2021

காற்றினிலே ..

நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..

பகையும் பிணியும் 
தொலைந்திட வேண்டும்..
***

இன்றைக்கென்று எவரையும் காணோமே!.. பொழுது வேறு இறங்கிக் கொண்டிருக்கிறது.. இருளாகிப் போனால் யார் உதவிக்கு வருவார்கள்!..

பரிதவிப்புடன் அந்தச் சாலையின் இப்புறமும் அப்புறமும் நோக்கிக் கொண்டிருந்தாள் - கோபிகா...

நீண்டு நெளிந்திருந்த சாலையில் எவரையுமே காணவில்லை..

விழிகளை உயர்த்தி வானத்தைப் பார்த்தாள்...

கூடுகளை நோக்கிப் பறந்து கொண்டிருந்தன பறவைகளெல்லாம்!..

மேல் வானம் மெல்ல மெல்ல செந்நிறமாகிக் கொண்டிருந்தது...

இன்னும் ஒரு பொழுதுக்குள் இருள் வந்து கவிந்து விடும்..

என்ன செய்வது?..

கண்களில் நீர் ததும்பியது - தனிமையை நினைத்து..

யமுனைக் கரையில் ஸ்ரீ கோகுலத்தில் தான் அவளுடைய வீடு...

நந்தகோபனின் மாளிகையிலிருந்து மூன்றாவது இல்லம் தான் அவளுடையது..

எங்கும் நிறை பரப்பிரம்மம் அம்மா!.. - என்றழைக்கும் யசோதா தேவிக்கு ஒரு வகையில் மருமகள் முறை...

அதெல்லாம் இப்போது கதைக்கு ஆகுமா?..

மரத்தடியில் இருந்து ஊர்க் கதைகளைப் பேசிக் கொண்டிருக்கும்  தந்தைக்காவது என் நினைவு வந்திருக்க வேண்டாமா?..

எங்கே மகளைக் காணோம்?.. - என்று..

நம்பிக்கை.. எல்லாம் நம்பிக்கை..

அத்தனையும் அந்த மாயக் கண்ணன் கொடுத்த நம்பிக்கை...

கண்ணன் இருக்கும் ஊரில் கன்னியரைப் பற்றி எதற்குக் கவலை?.. அவன் பார்த்துக் கொள்ள மாட்டானா!..

- என்ற தைரியம்.. நெஞ்சழுத்தம்!...

ஆனால், இன்றைக்கென்று கண்ணன் எங்கே போய் ஒளிந்து கொண்டானோ.. தெரியவில்லை...

நெஞ்சுக்குழிக்குள் படக்.. படக்.. - என்று சத்தம் வேறு கேட்க ஆரம்பித்தது..

சரி.. கோபிகைக்கு என்னதான் பிரச்னை?..

கோபிகாவின் அருகில் பாருங்கள்...

ஒரு கூடை இருக்கின்றதல்லவா!..
அது நிறைய மாம்பழங்கள் இருக்கின்றனவா!.. அவைதான் பிரச்னை!..

கோபிகா - தங்களுடைய மாந்தோப்பை சுற்றிப் பார்ப்பதற்காக
சற்று நேரத்திற்கு முன்பாக வந்தாள்...

அணில்களும் கிளிகளும் மைனாக்களும் மற்ற பறவையினங்களும் தின்று தீர்த்தது போக, ஏராளமான பழங்கள் தோப்புக்குள் உதிர்ந்து கிடந்தன..

அவற்றை அப்படியே விட்டுச் செல்ல அவளுக்கு மனம் இல்லை..

எல்லாவற்றையும் சேகரித்து எடுத்துச் சென்றால் - இல்லாதவர் எவருக்கும் உண்ணக் கொடுக்கலாமே!.. - என்ற தயாள எண்ணம் அவளுள் எழுந்தது...

அப்படியே முடிந்த வரைக்கும் கூடையில் சேகரித்தாள்..

ஆயிற்று.. கூடையும் நிறைந்து விட்டது.. பெருஞ்சுமையாகவும் ஆகிவிட்டது..

இப்போது - தலைச் சுமையாகத் தூக்கி வைத்துக் கொண்டு நடக்க வேண்டியது தான்..

ஆனால் - முடியவில்லை...

கீழே குனிந்து கூடையைத் தூக்கும் போது -
கூடை சரிந்து மேலே உள்ள பழங்கள் கீழே சிதறுகின்றன...

மீண்டும் அவற்றைப் பொறுக்கிக் கூடையில் வைத்து - கூடையைத் தூக்கினால் - மீண்டும் பழைய கதை தான்.. பழங்கள் சரிகின்றன...

இடுப்பில் தூக்கிக் கூடையை வைத்துக் கொண்டு நடக்கலாம் என்றால்,
பாலும் நெய்யுமாக உண்டு வளர்ந்த உடம்பு .. ஒத்துழைக்கவில்லை..

வெண்ணெயுடன் சர்க்கரையைச் சேர்த்த நிறத்தில் சற்றே கனத்த சரீரம்..

அவள் அழுது விடக்கூடாதே!.. என்பதற்காக, அவளைப் பூங்கொடி என்பார்கள்..

அதனால், அவளும் நம்பிக் கொண்டிருந்தாள் - தான் பூங்கொடி தான் என்று!..

இங்கே ஒரு வேடிக்கை!.. என்ன அது?..

சில பழங்களை எடுத்துக் கீழே போட்டுவிட்டால் -
கூடையை எளிதாகத் தூக்கிக் கொள்ளலாம்..

ஆனால் - அவ்வாறு செய்வதற்கு கோபிகைக்கு விருப்பமில்லை....

இதுக்குத் தான் கஷ்டப்பட்டு பொறுக்கினேனா?..

தனக்குத் தானே சுமையைச் சேர்த்துக் கொண்டவள் -
தன்னைத் தானே கேள்வி கேட்டுக் கொண்டாள்...

இவளைப் போலத்தானே நாமும் இருக்கின்றோம்...

ஆசை என்பது பழம் என்றால் - பழங்கள் இருக்கும் கூடையே பிரச்னை..

சில விஷயங்களைக் கைவிட்டால் பிரச்னை தீர்ந்து விடும்!..
ஆனால் - நாம் தான் விடுவதில்லையே!..

சரி.. சம்பவ இடத்திற்கு வருவோம்..

இன்னும் கொஞ்சம் நம்பிக்கை இருந்தது - கோபிகாவின் நெஞ்சில்!..

அழைப்பவர் குரலுக்கு வருவேன்!.. - என்றானே, அந்தக் கள்வன்!..

அழைத்துத் தான் பார்ப்போமே!.. 
அன்றைக்குக் குன்றினை ஏந்திக் கோகுலத்தைக் காத்தவன் - 
இன்றைக்குக் கோதையின் குரல் கேட்டு வாராமல் போய் விடுவானோ!..


கிருஷ்ணா!... கிருஷ்ணா!..

ம்ஹூம்.. மாஞ்சோலையின் இலைகள் தான் அசைந்து கொண்டிருந்தனவே தவிர வேறொரு சலனமுமில்லை...

காலையில் உன் குரல் கேட்டேனே - என்
கண்ணனின் திருமுகம் பார்த்தேனே!..
சாலையில் உன் துணை வரவில்லையே - என்
சங்கடம் தீர்ந்திட வழியில்லையே!..

கோபிகாவின் கன்னங்களில் வழிந்திடக் காத்திருந்தன - கண்ணீர்த் துளிகள்..

அதோ.. கன்றுகளின் கழுத்து மணிகளின் சப்தம்..

உற்றுக் கேட்டாள் - கோபிகா..

ஆகா.. கூடவே குழலிசையும் கேட்கின்றது..


கண்ணன் வந்தான்.. அங்கே கண்ணன் வந்தான் - ஏழைக்
கண்ணீரைக் கண்டதும்
கண்ணன் வந்தான்!..

பரவசமானாள் - கோபிகா!..

இதோ, கமலையும் செவலையுமாக - வீட்டுக்குச் செல்லும் ஆவலில் தாய்ப் பசுக்களை முந்திக் கொண்டு ஓடுகின்றன கன்றுகள்..

கண.. கண.. - என்ற மணி முழக்கத்துடன் தாய்ப் பசுக்களும் மற்ற இளங் கிடேறிகளும் அவற்றைத் தொடர்ந்திடும் வாட்டசாட்டமான காளைகளும்...

ஆநிரைகளின் ஓட்டத்தால் எழுந்த புழுதியின் ஊடாக, அதோ - புண்ணியன்..

வருகின்றான் ஸ்ரீ கிருஷ்ணன்!..

வாட்டம் போக்க வருகின்றான் - ஸ்ரீ ஹரிகிருஷ்ணன்...

அவன் வாயிதழ்களில் பொருந்தியதாய் - வேய்ங்குழல்!..

அதிலிருந்து பொங்கி வழியும் அமுதமாய் - வேணுகானம்

இதோ.. இதோ... அருகில் வந்து விட்டான்..

கோபிகை முகம் மலர்ந்தாள்..

கண்ணா.. இதோ இந்தச் சுமையை என் தலையில் ஏற்றி விடேன்!..

வேத வேதாந்தங்களும் காண்பதற்குக் காத்துக் கிடக்கும்
கடைவிழியால் நோக்கினான் - கண்ணன்...

அவ்வளவு தான்..
அவன் நிற்கவும் இல்லை.. நின்று, ஒரு மொழி சொல்லவும் இல்லை..

ஆநிரைகளைத் தொடர்ந்து சென்றே விட்டான்...

கிருஷ்ணா!... கிருஷ்ணா!.. - மீண்டும் கூவினாள்...

ஏதும் பயனில்லை..

கேளாச் செவியனோ.. நீ!..

கோபிகாவின் மனம் பதறியது.. துடித்தது.. துவண்டது..


அன்று நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்..
மாம்பழம் வேண்டுமென்று நீ கேட்டாய்..
நான் கொடுத்தேன்.. ஆனாலும் அதை நீ வாங்கிக் கொள்ளாமல்
என் கன்னம் வேண்டும் என்று கேட்டனையே!..

பின்னும் ஒருநாள் - தூசு விழுந்து விட்டதா?..
என்று நீயாக கற்பனை செய்து கொண்டு
என் முகம் பற்றி விழிகளுக்குள் உற்று நோக்கி
உன் முகம் கண்டு களித்தனையே!..

அந்த பொழுதெல்லாம் மறந்து விட்டதா?.. 
ஏ.. கள்வனே!.. இது நியாயமா?..

கங்கையின் வெள்ளம் கண்ணீரோ - இல்லை
கன்னியர்கள் சிந்தும் கண்ணீரோ..
கண்ணனின் மனமும் கல்மனமோ.. - எந்தன்
மன்னனுக்கு இதுவும் சம்மதமோ?..

பாராமுகமாய்ச் சென்றனையே.. 
பாவை எனைப் பாவி எனக் கருதினையோ?..

ஆற்றாமையினால் கோபிகாவின் இதழ்கள் துடித்தன...

சட்டென மனம் இறுகிற்று.. ஒரு முடிவுக்கு வந்தாள்...
முயற்சி திருவினையாக்கும்!.. - என்று முனைந்தாள்...

தாவணியின் தலைப்பினை சுருளாகச் சுற்றித் தலையில் வைத்துக் கொண்டாள்..

ஒரு விநாடி மூச்சை நிறுத்தி - இரு கைகளாலும் மாம்பழக்கூடையைத் தூக்கி
சட்டெனத் தலையில் தாங்கிக் கொண்டாள்..

கன கச்சிதமாக உச்சந்தலையில் அமர்ந்தது - மாம்பழக் கூடை..

அப்படியும் இப்படியும் பார்த்தாள் - பழங்கள் ஏதும் விழுந்து விட்டனவா?.. என்று...

யாதொன்றும் விழவில்லை!..

கர்வமாக இருந்தது.. தனது சுமையைத் தானே தூக்கி விட்டோம்!.. - என்று...

சற்று முன் நடந்தவை எதுவும் - இப்போது நெஞ்சினில் இல்லை..

வீட்டை நோக்கி நடந்தாள்..

இன்னும் சற்று தூரம் தான்.. வீட்டுக்குச் சென்று விடலாம்...

கோபிகாவின் மனம் துள்ளியது.. துள்ளிக்குதித்த மனம் அடங்குவதற்குள் -

தன் வீட்டு வாசலில் யார்?.. கண்ணனா!..
அவன் தான்!.. அவன் எதற்கு வந்தான்?..

பாராமுகமாகப் பசுவின்பின் சென்றவன்
பாவை என் முகத்தைப் பார்த்திடவும் வந்தானோ?..

மனமே.. சொன்னால் கேள்.. மாயக்காரன் அவன்!..
அவன் விரிக்கும் வலைக்குள் விழுந்து விடாதே!..

ஏதொன்றும் பேசக்கூடாது... ஏன் பேச வேண்டும்?..
என்னைக் கண்டும் காணாதது போல் சென்றானே!..

என் பிரிவால் அவன் ஏங்கித் தவிக்க வேண்டும்!...
நீயின்றி நானில்லை - என்று துடிக்க வேண்டும்!..

பற்களைக் கடித்துக் கொண்டாள்.. பூவிதழ்களை இறுக மூடிக் கொண்டாள்..

தன்னைத் தானே கட்டுப்படுத்திக் கொள்கின்றாளாம் - அவள்!...

ஆனால், மனமோ சிறகடித்துப் பறந்தது - கண்ணனைக் கண்டதும்!..


கண்ணன் முகத்தோற்றம் கண்டேன்..
கண்டவுடன் மாற்றம் கொண்டேன்..
கண் மயங்கி ஏங்கி நின்றேன்..
கன்னி சிலையாகி நின்றேன்!..

மனக்குயில் குக்கூ!.. என்று கூவிற்று..
அதன்பின் எல்லாம் நாடகம் போல எல்லாம் நடந்தன..

வீட்டு வாசலில் - தன் எதிரில் வந்து நின்ற கோபிகையின் -
தலையிலிருந்த கூடையை, அவனாகவே இறக்கி வைத்தான் - கண்ணன்..

கண்ணன் என்னைக் கண்டு கொண்டான்..
கையிரண்டில் அள்ளிக் கொண்டான்..
பொன்னழகு மேனி என்றான்..
பூச்சரங்கள் சூடித் தந்தான்!...

கோபிகாவின் மனம் மருகிற்று.. உருகிற்று..

நாடி வரும் கண்ணன் கோலமணி மார்பில்
நானே தவழ்ந்திருப்பேன்!..

பூட்டிக்கிடந்த பூவிதழ்கள் திறந்து கொண்டன..

கண்ணனின் கோலமணி மார்பில் சாய்ந்திருந்தபடிக்கு - 
தலையை மட்டும் உயர்த்தி, அவனது முகம் நோக்கிக் கேட்டாள் கோபிகா!..


பழக்கூடையை தலையில் ஏற்றி விடும்படி சொன்னேன்.. 
அதைக் காது கொடுத்துக் கேட்கவில்லை - நீ!..

இப்போது நான் கேளாமலேயே வந்து - 
என் தலைச்சுமையை இறக்கி வைக்கின்றாயே?..
ஏனடா.. கண்ணா!.. இந்தப் பொல்லாத் தனம்?..

அதைச் செவியுற்ற
உள்ளங்கவர் கள்வனின் உதடுகளில் 
மந்தகாசப் புன்னகை மலர்ந்தது..

மெல்லிய குரலில் சொன்னான்..

நான் சுமைகளை இறக்கி வைப்பவன்!..


கோபிகையின் உள்ளமும் உணர்வுகளும்
பூக்களாகச் சரிந்தன
புண்ணியனின் திருவடிகளில்...
***
இன்று ஸ்ரீ கிருஷ்ண ஜயந்தி..

அவனன்றி ஆவது ஒன்றும் இல்லை..
ஆதியும் அவனே.. அந்தமும் அவனே!..

சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்
***  

ஞாயிறு, ஆகஸ்ட் 29, 2021

திகழொளி ஞாயிறு - 2

 நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..

பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..


சென்ற ஞாயிறன்று
வெளியாகிய பதிவிற்கான
கருத்துரையில் -
சமயபுர மாரியம்மன்
தஞ்சாவூர் மாரியம்மன்
நார்த்தாமலை மாரியம்மன்
அன்பில் மாரியம்மன்
ஆகிய தெய்வ அம்சங்களை
சகோதரி எனக் கருதும் பாவனையைப் பற்றி
எழுதுங்கள - என்று
மதிப்புக்குரிய
பானுமதி வெங்கடேஸ்வரன்
அவர்கள் கேட்டிருந்தார்கள்..

அது பற்றி எந்தவொரு
தெளிவான கருத்தையும்
என்னால் எய்த முடியவில்லை.

பராசக்தியாகிய அம்பிகையின்
திருத் தோற்றங்களில்
ஸ்ரீ மாரியம்மனின் திருக்கோலம்
ஏழை எளிய மக்களுக்கானது..

கூப்பிட்ட குரலுக்கு ஓடிவந்து
குறை தீர்த்து நிற்பவள்
மகமாயி..

இன்று
நமது வலைதள உறவுகள்
அனைவருக்குமாக
குறையிரந்து  இக்கவி மாலையை
அவளது திருவடிகளில் அன்புடன்
சமர்ப்பிக்கின்றேன்..


நாவணி தமிழால் வரம் பெற வந்தேன்
பாவணி தன்னைப் பணிவுடன் தந்தேன்
பூவணிப் பொன்மகள் புன்னகை கொள்வாய்
ஆவணி உடையாய் அருள்நலம் தருவாய்..

ஆயிரம் கண்கள் உடையவளே பெற்ற
தாயெனப் பிரியம் பொழிபவளே
நோயெனக் குறையென அணுகாமல்
மாயவன் சோதரி எமைத் தேற்று..

அன்புடை நல்லோர் நலமுடன் வாழ
அம்பிகை உன்னிடம் வரங் கேட்டேன்..
பண்புடை உலகைப் பாலிக்கும் தேவி
நம்பிக்கை விளக்கில்  முகங் காட்டு..


வாழிய வல்லி அம்மையின் நலமே
வாழிய சோதரி கீதையின் நலமே
வாழிய கோமதி அம்மையின் நலமே
வாழிய கமலை பானுவின் நலமே..

சோதனை வேதனை எளியவர்க் கென்றால்
எவ்விடம் சென்று அதைத் தீர்க்க?
ஆதரவளித்து ஆறுதல் தன்னை
அவ்விடம் மாற்றிய அம்பிகை காக்க!..

மனையுடன் மக்களும் சூழ்ந்திடும் சுற்றமும்
நன்றாய் வாழ வழி கொடுத்தாய்..
வினையுடன் வேதனை சூழ்ந்திட்ட போதில்
என் தாய் எந்தன் உயிர் காத்தாய்...

நட்பினில் நல்லோர் நலமுடன் வாழ
கருணையின் கொடையாய் வரங் கேட்டேன்
வாழும் வகையினில் வளம் கொண்டு
தமிழே உன்னிடம் நலம் கேட்டேன்..

அற்புதங் காட்டும் ஆனந்த வல்லி
பொற்பதம் போற்றித் தமிழ் தொடுத்தேன்..
கற்பகக் களிறினைப் பெற்றவள் உந்தன்
நற்பதம் நாடி நான் பிடித்தேன்...


நீயே வழியென நீயே கதியென
நித்தமும் போற்றும் குரல் கேட்பாய்..
நினதருள் வேண்டி ஏந்திடும் கைகளில்
நின்னருள் அமுதை நீ சேர்ப்பாய்..

தளிரெனத் தழைத்துப் பயிரென செழித்த
பண்புடை நெஞ்சங்கள் நலமுடன் வாழ்க
மலரென முகிழ்த்து மகிழ்வினில் திளைத்த
மாண்புடை மனங்கள் வளமுடன் வாழ்க..

உலைக்களம் என்னும் உலகியல் வாழ்வில்
வலைத்தளம் தன்னில் வளர்தமிழ் வரைந்து
கலைக்களம்  காட்டும் ஸ்ரீராம் வாழ்க
நிலைக்கள அன்பில் அனைவரும் வாழ்க..

மூத்தவர் ஐயா மனம் தொட்டு
தென்னவன் தேவ கோட்டையும் வாழ்க
சேர்த்திடும் அன்பில் சிறந்தவர்
நல்லோர்
கன்னல் தமிழுடன் கவினுற வாழ்க..

அன்பினில் மலரும் அரும்புகள் அன்ன
அன்பர்கள் அனைத்து வளமுடன் வாழ்க..
அணிகொள் தமிழாய் அன்பின் அமுதாய்
மணிகொள் ஒளியாய் மாண்புடன்  வாழ்க..


அவ்வினை இவ்வினை எவ்வினை ஆயினும்
நல்வினை அருளும் நாயகி வாழ்க..
செவ்விய மலரடி தலையினிற் கொள்ள
புல்வினை அகன்று புண்ணியம் சூழ்க..

தளர்வுறும் பொழுதில் தளிர்க்கரம் காக்க
அயர்வுறும் போதில் அருள்விழி காக்க
வலிதரு வேதனை வாராமல் காக்க
நலிவுறு சோதனை சேராமல் காக்க..

கற்பக வல்லி கனிவுடன் காக்க
மரகத வல்லி மகிழ்வுடன் காக்க
சிற்சபை திகழும் சிவையே காக்க
பரனிடை பொலியும் பரையே காக்க..

தடங்கண் உடையாள் தயவுடன் காக்க
கயற்கண் உடையாள் கனிவுடன் காக்க
நெடுங்கண் உடையாள் நிதமும் காக்க
கருங்கண் உடையாள் கணமும் காக்க..


பாராமுகத்தாள் எனும் பழி எங்கும்
வாராதிருக்க வரம்  தனை அருள்வாய்
ஆராவமுதாய் வாராஹி வருவாய்
தீராநலமாய் தினம் தினம் தருவாய்...

நோய்நொடி குறைகள் சேரா வண்ணம்
நீலாம்பிகை நின் மலரடி சரணம்..
வேய்ங்குழல் கோவிந்த சோதரி போற்றி
சூழ்வினை தீர்த்திடும் திருவடி போற்றி!..

ஓம் சக்தி ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம்..
ஃஃஃ

ஞாயிறு, ஆகஸ்ட் 22, 2021

திகழொளி ஞாயிறு - 1

நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..

பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..

***

அன்னை புற்றுருவாக புன்னை வனத்தினுள் எழுந்த திருத்தலம்.

வேண்டி நின்ற மன்னனுக்காக  - தான் இருக்கும் இடத்தைத் தானே - ஒரு சிறுமியின் வடிவாக வந்து காட்டியருளிய திருத்தலம்.


அம்மை நோயினால் பாதிக்கப்பட்டு பார்வையிழந்த இளவரசிக்கு மீண்டும் - விழிகள் கிடைக்கப் பெற்ற திருத்தலம்.

ஸ்ரீ சதாசிவ ப்ரம்மேந்திரரின் திருக்கரங்களால் - ஸ்ரீசக்ர பிரதிஷ்டை செய்யப் பெற்ற திருத்தலம்.

ஸ்ரீ பைரவ உபாசகரான மகான் பாடகச்சேரி சுவாமிகள் பலகாலம் தங்கி இருந்த திருத்தலம். 

அவர் திருக்கரங்களால்  நிறைவான அன்ன தானங்கள் வழங்கப்பட்ட திருத்தலம். நோயுற்ற மக்களுக்கு- ஸ்ரீபாடகச்சேரி மகான் செய்த நன்மைகளை நினைவு கூரும் வகையில் அவர் தம்  திருவடிவம் விளங்கும் திருத்தலம். 

ஸ்ரீ முத்துமாரியம்மனுடன் -
ஸ்ரீ விஷ்ணுதுர்கையும்
ஸ்ரீ காளியம்மனும் சந்நிதி கொண்டு விளங்கும் தலம்.


மூர்த்தி தலம் தீர்த்தம் - எனும் மூன்றினாலும் சிறப்புற்று விளங்கும் திருத்தலம்.

அம்மை நோய் கண்டவர்கள்  பெருமளவில் வந்து தங்கி பிரார்த்தனை செய்து குணமடையப் பெறும் திருத்தலம்.

ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை, 48 நாட்கள் - செய்யப்படும் தைலக்காப்பின் போது உக்ர ஸ்வரூபிணியாக விளங்கி  - அம்பாள் -  தன்னைத் தானே வெளிப்படுத்திக் கொள்ளும் திருத்தலம்.

கோடையில்- அம்பாளுக்கு முகத்திலும், சிரசிலும் முத்து முத்தாக  வியர்வைத் துளிகள் பூக்கும் திருத்தலம்.

ஆறடி உயரத்தில் எழில் தவழும் திருமுகத்துடன் - அம்பாள் அருள் பொழியும் திருத்தலம்.


சோழ வளநாட்டின் திருத்தலங்களுள் சிறப்பிடம் பெற்று விளங்கும் திருத்தலம். 

நாமெல்லாரும் அறிந்திருக்கும்
அந்தத் தலம் தான் - தஞ்சை புன்னை நல்லூர் திருத்தலம்.

அங்கே - குடிகொண்டு விளங்குபவள்,

மகமாயி என்று மக்களால்
கொண்டாடப்படும் 
ஸ்ரீ முத்து மாரியம்மன்!..

அம்மன் புற்றுருவினள்..
அதனால் நித்ய அபிஷேகங்கள் அனைத்தும் - சந்நிதிக்கு அருகில்
வடக்கு நோக்கி விளங்கும்
ஸ்ரீ விஷ்ணு துர்க்கைக்கே நிகழ்த்தப்படுகின்றன..

இரண்டாம் ராஜ கோபுரத்தின் கீழ் - ஸ்ரீ பூர்ணகலா புஷ்கலா சமேத
ஸ்ரீ ஹரிஹர புத்திர ஸ்வாமியுடன் 
ஸ்ரீ காளியும் வீற்றிருக்கின்றாள்..

கொடிமரத்தின் தென்புறம் மேற்கு முகமாக ஸ்ரீ பேச்சியம்மன் மற்றும் ஸ்ரீ லாட சன்னாசி, ஸ்ரீ வீரன் - என பரிவார மூர்த்திகள்..

மூன்றாம் திருச்சுற்றில்
ஸ்ரீ விளக்கு நாச்சியார் - மாவிளக்கு
மேடை.. வேம்பு மற்றும் புன்னை 
மரங்களுடன் பழமையான புற்று..

வருடத்தின் ஞாயிற்றுக் கிழமைகள் அனைத்தும் விசேஷங்கள் என்றாலும்
பெருந்திருவிழா நடைபெறும்.. 

பெருந்தொற்றின் பிடியிலான
இக்கால கட்டத்தில் திருவிழா சூழ்நிலைகள் எப்படியோ!?..

இன்று கூட ஏழாண்டுகளுக்கு
முந்தைய பதிவு.. சற்றே மாற்றங்களுடன்..


வல்வினையின் வலைப்பட்டு  - வாடி வந்தோர்க்கும்
தொல்பிழையால்  அலைபட்டுத் - தேடி வந்தோர்க்கும் 
அல்லலுற்று அவதியுற்று  - நாடி வந்தோர்க்கும்
உற்ற துணை ஏதுமின்றி  - ஓடி வந்தோர்க்கும் 

வற்றாது தான்சுரக்கும்
தண்கருணைப் புதுஊற்று!..
வழியென்று தான் காட்டும்
வளர் நிலவின் ஒளிக்கீற்று!..


அவள் -

குடி கெடுக்கும் பகை கெடுத்தாள் 
கூட வரும் பழி கெடுத்தாள்
வினை கெடுத்தாள் நோய் கெடுத்தாள் 
வழி மறிக்கும் தடை கெடுத்தாள்!..

கரு கொடுத்தாள்  உரு கொடுத்தாள்  
ஒலி கொடுத்தாள்  மொழி கொடுத்தாள் 
மனங்கொடுத்தாள் குணம் கொடுத்தாள் 
தனங்கொடுத்தாள் தவம் கொடுத்தாள்

கோடி கோடி நலம் கொடுத்தாள் 
குன்றாத வளங் கொடுத்தாள்
சொல் கொடுத்தாள் பொருள் கொடுத்தாள்  
பொன்றாத புகழ் கொடுத்தாள்

அருள் கொடுத்தாள்  பொருள் கொடுத்தாள்  
ஆயுளையும் தான் கொடுத்தாள்
நெல் கொடுத்தாள்  நீர் கொடுத்தாள்  
நிலையான பெயர் கொடுத்தாள்!..


மீண்டும் நான் பிறப்பெடுத்தால்
மகிழ்ந்தெனக்கு மடி கொடுப்பாள்
மார்மீது சேர்த்தெடுப்பாள்!..
தலை கோதி தமிழ் கொடுப்பாள்!..

''மகனே நீ வாழ்க!..'' என
வாஞ்சையுடன் வார்த்தெடுப்பாள்!.

ஓம் சக்தி ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம்..
ஃஃஃ

சனி, ஆகஸ்ட் 21, 2021

மூன்றடி மண்

நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..

பகையும் பிணியும் 
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
திரு ஓணம்
***
யாகசாலையின்
குண்டத்தில் அக்னி கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கின்றது..

அதை விடவும் அதிகமாக
யாகத்தை முன்னின்று நிகழ்த்தும்
சுக்ராச்சார்யார் நெஞ்சகத்தில்..

எப்படியாவது தடுத்தே தீர வேண்டும்!..

ஆனால், மாவலிக்கு எவ்விதக் கேடும் நேர்ந்து விடக்கூடாது!..

தனது எண்ணத்தில் முனைப்பாக இருந்த சுக்ராச்சார்யார் -
தன்னுடைய தகுதிக்கு மீறிய செயலைச் செய்திடத் தலைப்பட்டார்...

வந்திருப்பவன் இறைவன்!.. - என்று அறிந்த பின்னரும் - அவரது மனம் நல்ல வழியில் செல்ல மறுத்தது..

அதன் விளைவு தான் இந்தப் போராட்டம்..

என்ன போராட்டம் அது?..

நீரை அடைக்க வேண்டும்.. தண்ணீரைத் தடுக்க வேண்டும்!..

எதற்காகத் தண்ணீரைத் தடுக்க வேண்டும்?.. தண்ணீர் பொதுவல்லவா!..

அதெல்லாம் இல்லை...
இப்போது பொற்கிண்டியிலிருக்கும் தண்ணீர்
அசுர வேந்தனாகிய மாவலி சக்ரவர்த்திக்குச் சொந்தமானது..


இதோ விநாடிக்குள் அந்தத் தண்ணீரைக் கொண்டு தாரை வார்த்துக் கொடுக்கப் போகின்றான்...

கிண்டியின் நீரை வார்த்து மூன்றடி மண்ணைத் தானமாகக் கொடுத்து விட்டால் - அசுர வேந்தன் அழிந்து விடுவான்..

எனவே, கிண்டியின் தாரையை அடைக்க வேண்டும்..  
ஒரு துளி நீர் கூட வெளியேறாமல் தடுக்க வேண்டும்!..

வந்திருப்பவன் இறைவன்!.. - என்று உணர்ந்து கொள்ளும் அளவுக்கு
வல்லமை கொண்ட சுக்ராச்சார்யார் - அடுத்து நிகழ இருப்பதை அறிந்து கொள்ளும் தன்மையை இழந்தார்..

இதோ மின்னல் வேகத்தில் கருவண்டாக உருமாறி கமண்டலத்தினுள் விழுந்தார்

அதன் நீர்த் தாரையை அடைத்துக் கொண்டார்..

கிண்டியிலிருந்து நீர் வெளியேறாமல் தடைப்பட்டது..

தாரை வார்க்கும் அசுர வேந்தனின் கரம் மேலிருக்க - தானத்தைப்
பெற்றுக் கொள்ளும் பாலகனின் கை கீழிருந்தது..

வேத மந்திரங்கள் முழங்கின..

ஆனால், கிண்டியிலிருந்து நீர் வழிந்தோடவில்லை..

அதுசரி.. எதற்குத் தாரை வார்ப்பது?.. எதைத் தானம் கொடுப்பது?..


அந்த யாகசாலையில் எவ்விதக் குறைவுமின்றி நடந்து கொண்டிருந்தது நூறாவது யாகம்.. அதுவும் அஸ்வமேத யாகம்!..

இன்னும் சிறு பொழுதில், வேள்வித் தீயில் - 
பூர்ணாஹூதி சமர்ப்பிக்கப்பட்டு விட்டால் -
யாகத்தின் புண்ய பலனைப் பெற்றவனை எவரும் வெல்ல முடியாது..

யாகத்தை முன்னின்று நடத்திக் கொண்டிருப்பவர் - அசுர குரு சுக்ராச்சார்யார்..

யாருக்காக நடத்திக் கொண்டிருக்கின்றார்?..

தன் அன்புக்குரிய மாவலிச் சக்ரவர்த்திக்காக!..

அவன் ஈரேழு புவனங்களையும் ஏக சிம்மாசனத்தில் அமர்ந்து ஆட்சி செய்வதைக் கண் குளிரக் காண வேண்டும்.. 

அது ஒன்றே - சுக்ராச்சார்யாருடைய நீண்ட நாள் கனவு.. 

அப்படியானால் தேவேந்திரன்?..

அவனை தேவ சிம்மாசனத்திலிருந்து இறக்க வேண்டும்!.. 

அசுர குலத்தை இத்தனை நாள் படாதபாடு படுத்திய
அவனுடைய இடுப்பெலும்பை நொறுக்க வேண்டும்!..

குருவின் மன நிலையை அறிந்தவனாக வெற்றிக் களிப்பில்
தன் மனைவியுடன் அமர்ந்திருந்தான் - மாவலி சக்ரவர்த்தி..

வெற்றி பெறப்போகும் களிப்பில் - மாவலியின் கண்கள் மின்னின..

சக்ரவர்த்தியாகிய மாவலி - ஸ்ரீ பக்த பிரகலாதனின் பேரன்..

இப்படி நூறாவது யாகத்தை நடத்துதற்கும்
ப்ரகலாதனின் வம்சத்தில் பிறப்பதற்குமான காரணம் எது?..

திருமறைக்காடு எனும் திருத்தலத்தின் சிவ சந்நிதியில் 
கனன்று கொண்டிருந்த தீபச்சுடர் தனைத் தூண்டி விட்ட புண்ணியம் அது...

இதெல்லாம் நடந்தது ஆதியில்!.. 

தற்போது மாவலியிடம் அசுர குணமே மேலோங்கி நிற்கின்றது..

அதனாலேயே அஸ்வமேத யாகம்!..

ஆயிற்று இன்னும் சில நொடிகள் தான்!..

அந்த வேளையில் -


தேஜோ மயமான சின்னஞ்சிறு பாலகன் யாக சாலைக்குள் நுழைந்தான்..

அவனைக் கண்டு பிரமித்து மயங்கினர் அனைவரும். 

அமர்ந்திருந்த ஆசனப் பலகையிலிருந்து எழுந்து
வாமன மூர்த்தியை வரவேற்று மரியாதை செய்த மாவலி, 

ஐயனே!.. தாங்கள் வேண்டுவது யாது!.. - எனக் கேட்டான்..

நான் உன்னிடம் விரும்புவதெல்லாம் எனது காலடியினால் மூன்றடி நிலமே!.

அதற்கு மேல்?..

அதற்கு மேல் எதுவும் எனக்குத் தேவையில்லை!..

- என்று திருவாய் மலர்ந்தான் வாமனன்.

மாவலி - மகிழ்ந்தாலும் சற்றே வருந்தினான்..

ஸ்வாமி!.. பச்சிளம் பாலகனாகிய தங்களின் பிஞ்சுக் காலடியால் மூன்றடியா!.. அதிலே தங்களுக்கு என்ன கிடைத்து விடும்?.. வேறு பல செல்வங்களைக் கேட்டுப் பெறலாமே!.. விரும்பியதைத் தருவதற்கு சித்தமாக உள்ளேன்!..''

எனக்கு அதெல்லாம் வேண்டாம்.. தான் அளக்கும் மூன்றடி நிலமே போதும்!..

அதன்படி - பாலகன் கேட்டதைத் தானம் தருவதற்கு ஆயத்தமானான் - மாவலி.

மூன்றடி மட்டும் போதும் - என வந்திருப்பவன் யார்?..

- என, சுக்ராச்சார்யார் - தனது மூளையைக் குடைந்ததில் - தானம் கேட்டு வந்திருப்பவனின் சுயரூபம் அகக்கண்ணில் வெளிப்பட்டு நின்றது..


திடுக்கிட்ட சுக்ராச்சார்யார் - தானம் வழங்கப்படும் வேளையில்,

வந்திருப்பவன் மாயவன்!.. அவன் கேட்டபடி வழங்காதே!.. - என்றார்.

அசுர வேந்தன் மாவலியோ - பண்பின் சிகரமாக,

எடுத்து ஒருவருக்கு ஒருவர் ஈவதனின் முன்னம்
தடுப்பது நினக்கு அழகிதோ - தகவு இல் வெள்ளி!..
கொடுப்பது விலக்கு கொடியோய்!.. உனது சுற்றம் 
உடுப்பதுவும் உண்பதுவும் இன்றி விடுகின்றாய்!..
(கம்பராமாயணம்)

- என்று மறுமொழி கூறி நின்றான்.

அப்போது நடந்தவை தான் முன் சொன்னதெல்லாம்!..

தன் பேச்சைக் கேட்காமல் - கிண்டியிலிருந்து நீரை வார்த்து - தானம் செய்கையில் மனம் பொறாத சுக்ராச்சார்யார் - வண்டாக மாறி,
கிண்டியின் நீர் வழியை அடைத்துக் கொள்ள -

கிண்டியிலிருந்து நீர் வழிய வில்லையே.. ஏன்?.. - மாவலிக்கு வியப்பு..

வாமனனாக வந்த பாலகன் தலை நிமிர்ந்து நோக்கினான்..

நீர்த் தாரைக்குள் அசுரகுரு அடைத்துக் கொண்டிருப்பதை உணர்ந்தான்

அந்த அளவில் பெருமான் கிண்டியின் தாரையில் தர்ப்பையினால் குத்திக் கிளற, நீர் வழியை அடைத்துக் கொண்டிருந்த சுக்ராச்சார்யார் ஒரு விழியை இழந்தார். 

அந்த மட்டில் அங்கிருந்து சுக்ராச்சார்யார் விலகி நீங்கினார்..

ஆக, நீர் வழியினை அடைப்பவர்களுக்கு என்ன நேரும் என்று 
அன்றே சொல்லப்பட்டிருக்கின்றது!..

தடை நீக்கப்பட்டதும், பெருகி வழிந்த நீரை வார்த்து -  அசுரவேந்தன் தானம் கொடுத்தான்..

அந்த அளவில், வாமனன் - த்ரிவிக்ரமனான வளர்ந்து
ஓரடியால் மண்ணையும்  மறு அடியால் விண்ணையும் அளந்தார்.


மூன்றாவது அடிக்கு இடம் இல்லை!.. 

மாவலி!.. மூன்றாவது அடியை எங்கே வைப்பது?..

பெருமானே!.. இதோ.. என்தலையின் மேல் திருவடியை வைத்து மூன்றாவது அடியை அளந்து கொள்ளுங்கள்!.. 

ஸ்ரீ ஹரிபரந்தாமன் புன்னகையுடன் நின்றான்..

தனது  தானத்தால் - எல்லாமே பறிபோகும் என அறிந்தும் , குரு சுக்ராச்சார்யார் தடுத்தும் கூட, வாக்கு தவறாமல் தானத்தை வழங்கினை!..

யாராலும் கடக்க முடியாத மாயையைக் கடந்த நீயே - அடுத்த மன்வந்த்ரத்தின் தேவேந்திரன்!..

- என, வாழ்த்தி யாகத்தினைத் தொடர்ந்து நிறைவேற்றும்படி அருளினான். 

இப்படி நிகழ்ந்த வாமன அவதாரத்தினை,

மூவடி கேட்டு அன்று மூதண்ட கூட முகடு முட்டச் 
சேவடி நீட்டும் பெருமான் மருகன் தன் சிற்றடியே!.. 
(கந்தர் அலங்காரம்) 

- என்று, வர்ணிக்கின்றார் - அருணகிரி நாதர்...


ஈகையின் பொருள் விளங்கும்படித் திகழும் வாமன அவதாரத்தினை,

மூவுலகும் ஈரடியான் முறைநிரம்பா வகை 
முடியத் தாவிய சேவடி..

- என இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் (ஆய்ச்சியர் குரவை) புகழ்கின்றார்.

மடியிலா மன்னவன் எய்தும் அடி அளந்தான்
தாஅயதெல்லாம் ஒருங்கு. 

என்பது - திருவள்ளுவரின் திருவாக்கு.

நான்முகன் முதலா வானவர் தொழுது எழ
ஈரடியாலே மூவுலகு அளந்து
நாற்றிசை முனிவரும் ஐம்புலன் மலர
போற்றிசெய் கதிர்முடித் திருநெடுமால் -

- என, போற்றித் திருஅகவலில் மாணிக்கவாசகர் புகழ்ந்துரைக்கின்றார்..

திருமயிலையில் பூம்பாவையை எழுப்பும் போது -

கைப்பயந்த நீற்றான் கபாலீச்சரம் அமர்ந்தான்
ஐப்பசி ஓணவிழாவும் அருந்தவர்கள்
துய்ப்பனவுங் காண..

என்று - ஓணத் திருநாள் காண வருமாறு அழைக்கின்றார் - ஞானசம்பந்தர்..


ஆழ்வார்கள் அருளிய திவ்ய பிரபந்தத்தின் திருப்பாசுரங்கள் பலவற்றிலும் வாமன அவதாரம் பேசப்படுகின்றது..

பெரியாழ்வார் - நம்பெருமாளுக்குத் திருப்பல்லாண்டு பாடும்போது -

எந்தை தந்தை தந்தைதம் மூத்தப்பன் ஏழ்படிகால் தொடங்கி
வந்து வழிவழி ஆட்செய்கின்றோம் திருவோணத் திருவிழவில்..

- என்று, தாம் ஆட்பட்ட விதத்தைக் கூறுகின்றார்..

கண்ணன் பிறந்தான்!.. - எனக்கொண்டு - மங்கையரை அழைக்கும்போது,

மத்தக் களிற்று வசுதேவர் தம்முடை
சித்தம் பிரியாத தேவகிதன் வயிற்றில்
அத்தத்தின் பத்தா நாள் தோன்றிய அச்சுதன்
முத்தம் இருந்தவா காணீரே முகிழ்நகையீர்! வந்து காணீரே!..

(அத்தத்தின் பத்தாம் நாள் - திருவோணம்)

- என்று சிறப்பிக்கின்றார்..

பழங்காலத்தில் தமிழகம் எங்கும் கொண்டாடப் பெற்ற ஓணத் திருநாள்
இன்று கேரளத்தில் மட்டுமே திருநாளாகத் திகழ்கின்றது..

கேரளம் முழுதும் திருக்கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நிகழ்கின்றன..

ஊர்கள் தோறும் இல்லங்கள் தோறும் பத்து நாள் விழாவாக வெகு சிறப்புடன் ஓணம் கொண்டாடப்படுகின்றது..


எல்லாம் சரிதான்!.. 
மாவலியிடம் தானம் பெற்றதை - பெருமாள் என்ன செய்தார்!..

தானம் பெற்றதை இந்திரனுக்கே அளித்து விட்டு -
திருமகள் பாதசேவை செய்ய -
மீண்டும் பாற்கடலில் பள்ளி கொண்டாராம் நம்பெருமாள்!..


உரியது இந்திரர்க்கு இதென்று உலகம் ஈந்து போய்
விரி திரைப் பாற்கடல் பள்ளி மேவினான் -
கரியவன் இலகு எலாம் கடந்த தாளிணை 
திருமகள் கரம் தொடச் சிவந்து காட்டிற்றே!..
-: கம்பர் :-

தொழுநீர் வடிவில் குறளுருவாய் வந்துதோன்றி மாவலிபால்
முழுநீர் வையம் முன்கொண்ட மூவாவுருவினன் அம்மானை
உழுநீர் வயலுள் பொன்கிளைப்ப ஒருபால் முல்லை முகையோடும்
கழுநீர் மலரும் கண்ணபுரத்து அடியேன் கண்டு கொண்டேனே..(1722)
-: திருமங்கையாழ்வார் :-

அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகளந்த உம்பர் கோமானே!..
அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி!.. 
-: கோதை நாச்சியார் :-
* * *
கிருஷ்ணராஜ சாகர்

நீரைத் தடுக்காமலும் கெடுக்காமலும்
நீர்வழியை அடைக்காமலும் உடைக்காமலும்
எல்லார்க்கும் ஆகட்டும் என்று
இன்முகம் கொள்ளட்டும் நின்று!..
*** 

சில ஆண்டுகளுக்கு முன்பு 
வெளியிடப்பட்ட பதிவு இது..
சூழ்நிலை கருதி
மீண்டும் தங்களுக்காக..

அனைவருக்கும் 
ஓணத் திருநாள் 
நல்வாழ்த்துகள்!..

ஓம் ஹரி ஓம் 
ஃஃஃ