நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், ஆகஸ்ட் 03, 2021

ஆடிப் பெருக்குநாடும் வீடும் நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று ஆடிப் பெருக்கு..
ஆடி மாதத்தின் 
பதினெட்டாம் நாள்..

ஸ்ரீ காவிரி அன்னை - ஸ்ரீரங்கம்..

நீரளந்த மேகத்துக்கும் வாழ்த்துச் சொல்லடியோ - தங்கம்
சீரளந்த காவிரிக்கும் வாழ்த்துச் சொல்லடியோ!..

ஏரளந்த மயிலைக்குந் தான்
வாழ்த்துச் சொல்லடியோ - வரப்பில்
சேறளந்த உழவனுக்கும் வாழ்த்துச் சொல்லடியோ!..

நாற்றளந்த காற்றுக்குந்தான்
வாழ்த்துச் சொல்லடியோ -தென்னங்  
காற்றளந்த கழனிக்குந் தான் வாழ்த்துச் சொல்லடியோ!..  

நாற்றுநட்ட நங்கைக்கெல்லாம்
வாழ்த்துச் சொல்லடியோ - வயலில்
களையெடுத்த கன்னிக்கெல்லாம்
வாழ்த்துச் சொல்லடியோ!.. 


கதிர் பார்த்த கருப்பனுக்கும்
வாழ்த்துச் சொல்லடியோ - களத்தில் 
கரை சேர்த்த செவப்பனுக்கும்
வாழ்த்துச் சொல்லடியோ!..  

கதிரடிச்ச தம்பிக்கெல்லாம்
வாழ்த்துச் சொல்லடியோ - பதரை
தூத்தி விட்ட பாசத்துக்கும்
வாழ்த்துச் சொல்லடியோ!..

நெல்லளந்த கருணைக்குந் தான் வாழ்த்துச் சொல்லடியோ - களத்தில்
பொன்னளந்த சாமிக்குந் தான் வாழ்த்துச் சொல்லடியோ!..

நிறை பார வண்டிக்குந்தான்
வாழ்த்துச் சொல்லடியோ - நிமிர்ந்து நடைபோடும் காளைக்குந்தான் வாழ்த்துச் சொல்லடியோ!..

சீரளந்த ஊருக்குந் தான்
வாழ்த்துச் சொல்லடியோ - வீட்டில்
சோறளந்த தெய்வத்துக்கும்
வாழ்த்துச் சொல்லடியோ!..

கல்லணையில் காவிரி

" அடாடா... அருமை.. அருமை!.. அசத்திட்டீங்க.. அக்கா!.. " 

" வாம்மா.. தாமரை!.. முன்னமே வந்துட்டியா?.. " 

" நீங்க..  வயக் காட்டுக்கு வாழ்த்து சொல்லிக்கிட்டு இருந்தப்பவே வந்துட்டேன்.. இடையில தொந்தரவு செய்ய வேணாம்.. ன்னு தான் ஓரமா நின்னுக்கிட்டு இருந்தேன்.. அக்கா... எவ்வளவு அருமையா பாடுறீங்க... பொறாமையா இருக்கு அக்கா!.. "

" அதெல்லாம் ஒன்னுமில்லை.. தாமரை.. நான் பாட்டுக்கு ஏதோ... தெரிஞ்சதை பாடினேன்... இதில ஆச்சர்யம்  என்ன இருக்கு?... "

" உங்களுக்குத் தெரியாது அக்கா.. சந்தம் எல்லாம் அருமையா இருக்கு.. வயற் காட்டில நாத்து நடுற பொண்ணுங்க பாடுற மாதிரியே இருக்கு... "

" தாமரை... நான் ஹைஸ்கூல்  படிக்கிறப்போ.. மூனு வருஷம் வயக்காட்டு ஒத்தையடிப் பாதையிலதான் பள்ளிக் கூடம் போனேன்.. அது தான் வாழ்க்கையில மறக்க முடியாத விஷயம்.. நாங்க பத்து பொண்ணுங்க... வழி நெடுக பாடிக்கிட்டும் ஆடிக்கிட்டும் நடப்போம்.. அந்த நாளெல்லாம் இனிமேல் யாருக்கும் கிடைக்காதும்மா!.. "

" நிஜந்தான் அக்கா!.. வயற்காட்டையெல்லாம் அழிச்சிட்டு தான் வீட்டு மனையா ஆக்கிட்டாங்களே... இனிமேல் வரப்பாவது.. களத்து மேடாவது.. எல்லாம் கனவு மாதிரி போச்சு... "

" தாமரை.. இன்னைக்கு ஆடிப் பதினெட்டு.. ஞாபகம் இருக்கா!.. "

" என்னக்கா.. இந்த மாதிரி கேட்டுட்டீங்க... மறக்க முடியுமா!... நேத்து சாயங்காலமே பெரிய மார்க்கெட்டுக்குப் போய் - காதோலை.. கருகமணி.. மஞ்சள் சரடு, விளாம்பழம், பேரிக்காய், கொய்யாப்பழம், மாம்பழம், நாவப் பழம், தாம்பூலம் எல்லாம் வாங்கிட்டோம்.. காலையில காப்பரிசி செஞ்சதும் பூச்சந்தைக்குப் போய் பூ வாங்கிக் கிட்டு வந்து காலைலேயே கலசம் வைச்சி சாமி கும்பிட்டுட்டு பிரசாதம் எல்லாம் உங்களுக்குக் கொண்டு வந்திருக்கேன்... "

என்றபடி கையிலிருந்த தூக்கு வாளியைத் தமிழ்ச்செல்வியிடம் கொடுத்தாள் தாமரைச் செல்வி..

அப்போது தான் தாமரையின் கையில் இருந்த வாளியைக் கண்டாள் தமிழ்ச்செல்வி..

" எந் தங்கம்!." 

- என்றபடி தாமரையின் கன்னத்தைத் தொட்டு முத்தமிட்டாள்...

" என்னவோ பாட்டு பாடினேனே தவிர மனசெல்லாம் ஒரே உளைச்சல்!.. "

" ஏங்க்கா!.. " 

- தாமரைக்கு வியப்பு.. அக்கா இப்படிச் சொல்லிக் கேட்டதே இல்லை என்று...

" எல்லாம் இந்த கொரானா கிருமியால.. கோயில் குளம்.. ன்னு போக முடியலை.. ஆடி அமாவாசைக்குக் கூட திருவையாத்துக்குப் போய்  காவேரியில குளிக்க முடியாது.. திதி கொடுக்க முடியாது!.. "

" எல்லாம் மக்களோட நல்லதுக்குத் தானே அக்கா!.. "

" அது சரிதான்..  இருந்தாலும், விசேசம் பண்டிகை எல்லாம் ஒரு வருசமும் தடங்கலாகக் கூடாது... ன்னு சொல்லுவாங்க!.. "

" அதெல்லாம் பாருங்க.. அடுத்த வருசம் எல்லாம் சரியாயிடும்!.. "

" சரியானா சரி.. அதுக்கு இடையில ஆடிப் பதினெட்டு பண்டிகையால ஆறு குளம் எல்லாம் அழுக்காப் போவுது..ன்னு யாரும் தடை வாங்காம இருக்கணும்!.. "

" அதை எல்லாம் நெனச்சு கவலப் படாதீங்க அக்கா!.. "

 ஆறுதலாகப் பேசிய தாமரை தொடர்ந்து கேட்டாள்..

" நீங்க எப்போ சாமி கும்பிடுவீங்க அக்கா?... ஆத்துக்குப் போகப் போறீங்களா?.. "

" சாயங்காலமா பசங்களோட ஆற்றுக்குப் போகலாம்..ன்னு இருந்தேன்.. அத்தான் சொன்னாங்க - அங்கே யாராவது இருந்து விரட்டி விட்டால் அபசகுனமாப் போயிடுமே.. ன்னு..
அதுவும் சரி தான்.. னு மனசுக்குப் பட்டது.. அதனால சாயங்காலமா செம்புல தண்ணீர் எடுத்து மாவிலை தேங்காய்  பூரணம் வச்சி காவிரியக் கும்பிட்டுட்டு அப்புறமா ஒரு நாளைக்கு போய் - காதோலை கருகமணி சீர் எல்லாம் ஆத்துல விடலாம்ன்னு இருக்கேன்!.. "

" நல்லது தான் அக்கா... நமக்குத் தான் தூண்.. லயும் இருக்கு.. துரும்பு..லயும் இருக்கே தெய்வம்!.."

தாமரை மெல்லச் சிரித்தாள்.. 

அவளுடன் சேர்ந்து சிரித்த தமிழ்ச் செல்வி வாளியைத் திறந்து அதிலிருந்த மஞ்சள் குங்குமத்தை நெற்றியில் இட்டுக் கொண்டாள்.. 

காப்பரிசியை கை நிறைய அள்ளி வாயில் போட்டுக் கொண்டாள்.

" கையைக் காட்டுங்க அக்கா !.. " 
என்றபடி மஞ்சள் சரடைக் கட்டி விட்டாள்..

" சரி.. அக்கா.. நேரம் ஆச்சு.. மாமா அத்தை தனியா இருக்காங்க!.. நான் புறப்படுகின்றேன்.. "

" இரும்மா!.. " - என்றபடி பூஜை அறையினுள் சென்ற தமிழ்ச் செல்வி தாழம்பூ குங்குமத்தை எடுத்து வந்து தாமரைக்குச் சூட்டினாள்..


திருவையாற்றில் காவிரி


அருள்மிகு அறம் வளர்த்த நாயகி.. திருஐயாறு..

" ஸ்ரீரங்கம் காவேரிக் கரையில எவ்வளவோ விசேசம்.. இன்னும் நாலு நாளைல ஆடி அமாவாசை.. திருவையாத்துல அப்பர் ஸ்வாமி கயிலாய தரிசனம்..

கூட்டம் கூடக் கூடாது.. ன்னு பக்தர்களுக்கு தடை.. அரசாங்க உத்தரவு.. எல்லாம் அந்த அம்பாளுக்கே வெளிச்சம்!... "

தமிழ்ச்செல்வி மனம் வருந்தினாள்..


" சரி.. அக்கா.. நான் நாளைக்கு சாயங்காலம் வருகின்றேன்!.. *

" சரி தாமரை..  அடிக்கடி வாம்மா.. கீதா மாமி, கோமதியம்மா, கமலாம்மா எல்லாரும் உன்னைப் பார்க்கணும். ன்னு சொன்னாங்க!. "

ஆடியிலே பெருக்கெடுத்து ஆடி வரும் காவேரி..
வாடியம்மா எங்களுக்கு வழித் துணையாக
எம்மை வாழவைக்க வேண்டுமம்மா சுமங்கலியாக!..
***

அக்கா தமிழ்ச்செல்வியும்
தங்கை தாமரைச்செல்வியும்
இரண்டாண்டுகளுக்குப் பிறகு
இப்போது தான்
சந்தித்துக் கொள்கின்றனர்..

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு
எழுதப்பட்ட பதிவு இது..

சூழ்நிலைக்கு ஏற்ப
சற்றே மாறுதல்களுடன்
தங்களுக்காக!..
***

அனைவருக்கும்
ஆடிப்பெருக்கு நல்வாழ்த்துகள்..

அனைத்து அறங்களும்
பொன்னியின் பூம்புனலாகப்
பொங்கிப் பெருகட்டும்!..

வாழ்க வையகம்..
வாழ்க வளமுடன்!.. 

காவிரி நின் திருவடிகள் போற்றி
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி
ஓம்
***

21 கருத்துகள்:

 1. ஆடி பதினெட்டு வாழ்த்துகள்.  எவ்வளவு கோலாகலமாக இருக்கும் இந்நாள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஸ்ரீராம்..

   வாழ்த்துரைக்கு மகிழ்ச்சி...
   கோலாகலமாக இருக்க வேண்டிய நாட்கள் - அவ்வாறு இருக்கக் கூடாது என்பது யாருடைய விருப்பம்?..

   தங்களது அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 2. உங்கள் கவிதைகளைத் தொகுத்து ஒரு அமேசானில் ஒரு புத்தகமாகப் போடுங்கள் துரை செல்வராஜூ ஸார்...   இன்றைய பாடலும் அற்புதமாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஸ்ரீராம்..
   தங்களது வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 3. கோலாகலமாக இருக்கும். வழியெல்லாம் கடைகள்! பெருமாள் மண்டகப்படி வருவார். காவிரிக்குச் சீர் தருவார். இப்போ இரண்டு வருஷங்களாக எல்லாம் போச்சு! நீங்க சொல்றாப்போல் ஆற்றில் அழுக்காகிடும் சொல்லி அங்கே செல்வதையும் தடை செய்வாங்களோனு தோன்றுகிறது. கோயிலெல்லாம் பக்தர்களுக்கு மூடியாச்சு! அமாவாசை கழிந்து தான் திறப்பாங்களாம். :(

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நகர்ப்புறங்களை விட கிராமங்களில் அதிக சிறப்பாக கொண்டாடப்படுவது ஆடிப் பெருக்கு.. இந்த கொரானாவால் எல்லா சந்தோஷங்களில் இருந்தும் வெகுவாக விலகியாயிற்று..

   தங்களது அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றியக்கா..

   நீக்கு
 4. நானும் செம்பில் தான் காவிரி நீரைக் குழாயில் இருந்து பிடித்து ஸ்வாமி முன் வைத்து நிவேதனங்கள் செய்கிறேன். காவிரிக்கரைக்குப் போக முடியாமல் கூட்டம் நெரியும். இப்போக் கூட்டமே இல்லை. காவிரியைப் பார்க்கக்கூட முடியலை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பருவத்தில் மழை பெய்யாத சமயங்களில் இப்படித்தான் வீட்டுக்குள் காவிரியைக் கும்பிட்டுக் கொண்டோம்... அரசியல் காரணமாக காவிரி தடைபட்ட போதும் இப்படித் தான்..

   இப்போது காவிரியில் தண்ணீர் ததும்பும் போதும் காவிரிக் கரைக்குப் போக முடியவில்லை என்றால் விதி வலியது..

   தங்களது அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றிய்க்கா..

   நீக்கு
 5. கவிதை அருமை.


  தமிழ் செல்வி ,தாமரையை பார்த்து விட்டேன். நலமாக இருப்பது அறிந்து மகிழ்ச்சி. ஆடியிலே பெருக்கடுத்து ஓடி வரும் காவேரி பாடல் கேட்டு வெகு கால ஆனது போல் இருக்கிறது.
  படங்கள் எல்லாம் மிக அருமை. காவிரியைப்பார்த்து, அம்மனை தரிசனம் செய்து கொண்டேன்.
  அனைவருக்கும் ஆடிப்பெருக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது அன்பின் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி..நன்றி..நன்றி..

   நீக்கு
 6. பதில்கள்
  1. அன்பின் தனபாலன்..
   தங்களன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 7. அருமையான உரையாடல்
  ஆடிப்பெருக்கு வாழ்த்துகள் ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி

   தங்களது அன்பின் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 8. கவிதை பற்றிக் காலம்பர சொல்லுவதற்குள்ளாக வேறே வேலை வந்ததால் போயிட்டேன். கொத்தமங்கலம் சுப்புவை நினைவூட்டும் கவிதை என்பதோடு தமிழ்ச் செல்வியும், தாமரையும் எங்களையும் நினைவு கூர்ந்ததுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கொத்தமங்கலம் சுப்பு அவர்களது அளவுக்கெல்லாம் நானில்லை..

   தங்களது அன்பின் மீள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றியக்கா..

   நீக்கு
 9. வணக்கம் சகோதரரே

  இன்றைய சிறப்பு பதிவு அருமை. கவிதை மிகவும் அழகாக ரசனை மிகுந்ததாக உள்ளது. காவிரியின் வெள்ளம் போல் தடதடவென தங்கள் சிந்தனையில் வார்த்தைகள் உதயமாகி, ஒரு அழகான கவிதையை சிறப்பாக்கி தந்திருக்கிறது. உங்கள் தமிழறிவுக்கு வியப்புடன் கூடிய என் பணிவான வந்தனங்கள்.

  காவிரி தாய் படங்களும், அன்னை உமா மகேஸ்வரி படங்களும் நன்றாக இருந்தன. பக்தியுடன் தரிசித்துக் கொண்டேன்.

  சகோதரிகளின் ஆடிப் பெருக்கின் விழாப் பற்றிய பேச்சுக்களும் அமிர்தமாக சுவைத்தன.நீண்ட நாள் கழித்து அவர்களை சந்தித்தது எங்களுக்கும் மிகவும் சந்தோஷம். அவர்களும் எங்களை உடன் பிறப்பாக எண்ணி நினைவில் வைத்திருப்பதற்கு எங்கள் மனம் நிறைந்த நன்றிகள். உங்கள் அன்பான பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது அன்பின் வருகையும் இனிய கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி.. நன்றி..

   நீக்கு
 10. உரையாடல் ஒரு அன்னியோன்னியத்தைத் தந்தது. சிறப்பு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஐயா..
   தங்களது அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 11. ஆடிப் பதினெட்டுக்கான பதிவு வெகு சிறப்பு. மீள் பதிவாக இருந்தாலும், மாற்றங்களுடன் பதிவினை ரசிக்க முடிந்தது.

  பதிலளிநீக்கு