நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, மார்ச் 31, 2024

கரந்தை 1

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி 18
ஞாயிற்றுக்கிழமை


வருடந்தோறும் பங்குனி மாதம் 3,4,5 நாட்களில் தஞ்சை 
கரந்தட்டாங்குடி எனப்படும் கரந்தை ஸ்ரீ பிரஹந்நாயகி சமேத ஸ்ரீ வசிஷ்டேஸ்வரர் கோயிலில்  உதயத்தின் போது சூர்ய ஒளி சிவ சந்நிதியில் படர்கின்றது..  

வெகு காலத்துக்குப் பிறகு பங்குனி 5 - மூன்றாம் நாள் (18/3) தரிசனம் செய்தேன்..

இத்தலத்தில் ஈசனை
வசிஷ்ட மகரிஷி தனது பசுவாகிய நந்தினியுடன்  வழிபட்டதாக ஐதீகம்.. வசிஷ்டர் அருந்ததி திருமேனிகள் தெற்குக் கோஷ்டத்தில் இடம் பெற்றுள்ளன..

இத்தலத்தின் தொன்மையான பெயர் கருந்திட்டைக்குடி.. 

அப்பர் பெருமான் க்ஷேத்திரக் கோவையில் (6/71/3) இத்தலத்தினை வைத்துப் பாடியுள்ளார்.. வேறு  திருப்பதிகம் எதுவும் கிடைக்கப் பெறவில்லை..

தஞ்சை ஸ்ரீ ராஜராஜேஸ்வரத்திற்கு முற்பட்டது இக்கோயில்..

கரிகால் சோழன் காலத்துக் கோயிலை -
 பராந்தக சோழர் செம்பியன் மாதேவியார் கற்றளியாக்கியதாக வரலாறு..

மூலவர் கருவறை கோஷ்டத்தில் ஞானசம்பந்தர், நடராஜர், அப்பர், கங்காளர், , விநாயகர், தக்ஷிணாமூர்த்தி,  வசிஷ்டர், அருந்ததி, அர்த்தநாரீஸ்வரர், லிங்கோத்பவர், கங்காதரர், பிரம்மா, வீணாதரர், காலசம்ஹார மூர்த்தி, பிட்சாடனர், துர்கை என், அழகு மிகும் திருமேனிகள்.. கோட்டத்துச் சிற்பங்களால் சிறப்புடைய கோயில்..

முன் மண்டபத்தில் ஸ்ரீ வைரவருக்கு நேர் எதிராக நவக்கிரக நாயகர்கள்.. 

கிழக்கு தெற்கு மேற்கு என மூன்று பக்கமும் வாசல்கள்.. கிழக்கே திருக்குளம் என்பதால் நுழைய இயலாது..

நந்தி மண்டபம்


இறைவன் 
ஸ்ரீ வசிஷ்டேஸ்வரர்
அம்பிகை 
பிரஹந்நாயகி
தீர்த்தம் 
வசிஷ்ட தீர்த்தம்
தலவிருட்சம் வன்னி

மாமனனர் கரிகால் சோழர் இங்கு வழிபட்டு தோலில் ஏற்பட்ட தேமல் நோய் நீங்கப் பெற்றதாக ஐதீகம்..

அந்த விவரங்கள் நாளைய பதிவில்!..

கோயிலில் நான் எடுத்த படங்களில் ஒரு சில  இன்றைய பதிவில்.. 

நாளையும் பதிவு தொடரும்..

நாயினும் கடைப்பட்டேனை நன்னெறி காட்டி ஆண்டாய்
ஆயிரம் அரவம் ஆர்த்த அமுதனே அமுதம் ஒத்து
நீயும் என்னெஞ்சுள்ளே நிலாவினாய் நிலாவி நிற்க
நோயவை சாரும் ஆகில் நோக்கி நீ அருள் செய்வாயே!.. 4/76/6
-: திருநாவுக்கரசர் :-
**

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

சனி, மார்ச் 30, 2024

திருமலை தரிசனம் 2

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி 17
சனிக்கிழமை
திருமலை ஏற்றத்தின் போது எடுக்கப்பட்ட காட்சிகள் இன்றும் தொடர்கின்றன.. 

முழங்கால் பிரச்னையுடன்  எப்படி நான் மலையறினேன் என்பதில் வியப்பு.. 

பெருமாளின் கருணையன்றி வேறு எதுவாக இருக்க முடியும்!..

வழிநடையில் சில காட்சிகள் - இன்றைய பதிவில்..


நடைவழிக்கு இருபுறமும் உள்ள வனப்பகுதி
காலி கோபுரம்


சிற்றுண்டிகளுக்கான கடைகள்.. 
மக்களின் ஆதரவில் விற்பனை அமோகம்..


திருமலை புனிதத் தலம்.. சம்பிரதாய முறைப்படி உடையணிந்து திருக்கோயிலுக்கு வாருங்கள்.. முதியோர்க்கு மதிப்பளியுங்கள்.. ஸ்வாமி தரிசனத்துக்கு வெளி ஆட்களை நாடாதீர்கள்.. மாமிச உணவு, புகை, மது இவற்றை தவிர்த்து விடுங்கள் - 
என்றெல்லாம் அறிவுரை எழுதி வைத்துள்ளனர்.. 

தமிழகத்தின் கோயில்களிலும் 
இம்மாதிரி அறிவிப்பு செய்யலாம்..

அனைவரும் இதைப் பின்பற்றி நடைமுறை  
வாழ்வில் மேற்கொண்டால் மிகவும் நல்லது..


செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
நெடியானே வேங்கடவா நின் கோயிலின் வாசல்
அடியாரும் வானவரும்  அரம்பையரும் கிடந்தி யங்கும்
படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே.. 685
-: குலசேகரஆழ்வார் :-

ஓம் ஹரி ஓம்
நமோ வேங்கடேசாய
***

வெள்ளி, மார்ச் 29, 2024

திருப்புகழ்

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி 16
வெள்ளிக்கிழமை

திருப்புகழ்
குன்றக்குடி


தனன தந்த தந்த தனன தந்த தந்த 
தனன தந்த தந்த ... தனதான


அழகெ றிந்த சந்த்ர முக டங்க லந்த
அமுத புஞ்ச இன்சொல் ... மொழியாலே

அடிது வண்ட தண்டை கலிலெ நுஞ்சி லம்பொ
டணிச தங்கை கொஞ்சு ... நடையாலே

சுழியே றிந்து நெஞ்சு சுழல நஞ்ச ணைந்து
தொடுமி ரண்டு கண்க ... ளதனாலே

துணைநெ ருங்கு கொங்கை மருவு கின்ற 
பெண்கள் துயரை யென்றொ ழிந்து ... விடுவேனோ

எழுது கும்ப கன்பி நிளைய தம்பி நம்பி
யெதிர டைந்தி றைஞ்சல் ... புரிபோதே

இதம கிழ்ந்தி லங்கை யசுர ரந்த ரங்க
மொழிய வென்ற கொண்டல் ... மருகோனே

மழுவு கந்த செங்கை அரனு கந்தி றைஞ்ச
ல்மநுவி யம்பி நின்ற ... குருநாதா

வளமி குந்த குன்ற நகர்பு ரந்து துங்க 
மலைவி ளங்க வந்த ... பெருமாளே..
-: அருணகிரிநாதர் :-


அழகிய நிலவைப் போன்ற முகத்தினாலும் திரண்டு
வருகின்ற அமுதம் போன்ற  இனிய பேச்சினாலும்

பாதங்களில்  கிடக்கின்ற தண்டைகளும் 
சிலம்புகளும் அணி சதங்கைகளும்
கொஞ்சி ஒலிக்கின்ற நடையினாலும்

மனதை நீர்ச்சுழி எனச் சுழலச் செய்கின்ற  
விஷம் நிறைந்த கண்களாலும் 
 
நெருங்கிய தனங்களாலும் 
மனதை மயக்கும் பெண்கள் தருகின்ற  
துயரில்  ஒழிந்து விடுவேனோ?..

கும்பகர்ணனின் இளையவனாகிய 
விபீஷணன் எதிரில் வந்து சரணம் என்று  
வணங்கி நிற்க மனம் மகிழ்ந்து,

இலங்கை அசுரனை  வெற்றி கொண்ட மேக நிறத்து கோதண்ட ராமனின் மருமகனே..

 செங்கரத்தில் மழுவினை உடையவராகிய  
சிவபெருமான் விரும்பிக் கேட்டபோது பிரணவத்தை 
உபதேசித்த குருநாதனே..

வளம் மிக்க குன்றக்குடியைக் காத்து, தூய்மையான மலையின் மீது வீற்றிருக்கும் பெருமாளே..
**
முருகா முருகா
முருகா முருகா

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

வியாழன், மார்ச் 28, 2024

பட்டாபிஷேகம்

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி 15
வியாழக்கிழமை


கடந்த திங்களன்று (18/9) காலையில் திரு ஐயாறு - அந்தணக் குறிச்சியில் நந்தியம்பெருமான் ஜனன வைபவத்தைத் தொடர்ந்து -

திரு ஐயாறு கோயிலில் முன்னிரவுப் பொழுதில் நந்தியம்பெருமானுக்கு மகா அபிஷேகம் தீப ஆராதனையுடன் பட்டாபிஷேக விழா நடைபெற்றது..

நந்தியம்பெருமானை கணங்களுக்கெல்லாம் தலைவன் என்றும் கயிலாய மாமலையின் அதிகார ருத்ர நந்தி என்றும் சிவபெருமான்  அடையாளம் காட்டி பட்டமளிப்பதாக ஐதீகம்..

திருக்கோயிலின் முன் மண்டபத்தில் மூலஸ்தானத்திற்கு நேராக வைத்து அபிஷேகம் நடத்தப் பெற்றது.. 

இத்தனை வருடங்களில் இந்த ஆண்டு தான் தரிசிக்கின்ற பாக்கியம் கிடைத்தது.. 

அந்த வைபவத்தின் படங்கள் இன்றைய பதிவில்..

படங்கள் : தஞ்சையம்பதி

மகா தீப ஆராதனைக்குப் பின்
அம்பாளும் ஸ்வாமியும் நந்தீசனுடன் திரு வீதி 
உலா எழுந்தருளினர்..

செங்கோல் - பட்டம்
நன்றி காவிரிக்கோட்டம்

அங்கணன் கயிலை காக்கும் அகம்படித் தொழிண்மை பூண்டு
நங்குரு மரபிற் கெல்லாம் முதற்குரு நாதன் ஆகி
பங்கயந் துளவ நாறும் வேத்திரப் படை பொறுத்த
செங்கை எம்பெருமான் நந்தி சீரடிக் கமலம் போற்றி...
-: காஞ்சிப்புராணம் :-


நந்தீசர் திருத்தாள் போற்றி..
ஐயாறப்பர் 
அறம் வளர்த்த நாயகி திருவடிகள் போற்றி போற்றி..

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***