நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், மார்ச் 26, 2024

கமலாட்சி


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி 13
செவ்வாய்க்கிழமை

ஸ்ரீ சியாமளா தேவி எனப்படும் செங்கமலாட்சி அம்மன் வழிபாடு இம்மாதத்தில் சிறப்புற தஞ்சையின் பல பகுதிகளிலும் நடைபெறுகின்றது.. 


பொன்னியின் செல்வன் கதையில் உயிர்த்தியாகம் செய்கின்ற -
சிங்கள நாச்சியார் தான் செங்கலாச்சி - செங்கமலாட்சி அம்மன் என்று சொல்பவர்களும் இருக்கின்றனர்.. எப்படியோ இருக்கட்டும்..

தை மாதத்தில் - கொத்தமல்லி என, நான் எழுதியதைத் தொடர்ந்து இந்தக் கதையும் இதனோடு ஒரு பாட்டும் இவற்றோடு இயைந்ததாக (பதிவு வெளியாகின்ற சமயத்தில்) தஞ்சை செங்கமலாட்சி சியாமளாதேவியின் பாற்குட வைபவம்.. மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கின்றது..

அனைத்தும் அவள் விருப்பம்..

முன்கதை சில வரிகளில்..

சுந்தரம் - காமாட்சியம்மாள் தம்பதியினரின் அன்பு மருமகள் வித்யா.. 

தனது மாமனார் கதை கவிதை எழுதும் திறம் படைத்தவர் என்றறிந்து மகிழ்ச்சி.. 

ஆனால்  அவற்றில் பலவும் அவரது நண்பர் விட்டல் வசம் என்று தெரிய வந்ததும் சோர்வு.. 

விட்டல் எடுத்துச் சென்ற கவிதைகளில் செங்கமலாட்சி அம்மன் பேரில் சுந்தரம் எழுதிய பாட்டு நமது கையில் கிடைத்தது..

" சரி.. சுந்தரம் ங்கறதும் விட்டல் ங்கறதும் யாரு?.. "

" அவங்க ரெண்டு பேரும் நண்பர்கள்.. "

" அது கதையில..  நிஜத்துல யாரு?.. "

" வேற யாரு!. நிஜத்துல நாந்தான்... சுந்தரம் ங்கறதும் விட்டல் ங்கறதும் நான் தான்..  நானே தான்!.. 

வேற பொழப்பு ஒன்னும் இல்லாததால இப்படியெல்லாம் வேசம் கட்டி ஆடிக்கொண்டு உங்களோடு நான்!.."

சுந்தரமாகிய நான் எழுதிய தேவி கமலாட்சி பாட்டு இதோ!..
 

முடியாட்சி என்றிங்கு
தனியாட்சி கொண்டவள்
தனியாட்சி கொண்டாலும்
சிவனாட்சி செய்பவள்..

புனலாட்சி செய்கின்ற
பூம்பொழில் நாட்டினில்
அருளாட்சி செய்திட
அழகென்று வந்தவள்..

தேனாட்சி ஈதென்று
தானாட்சி கொண்டவள்
மானாட்சி விழியாலே
கோனாட்சி தந்தவள்..

காமாட்சி யுடன் இங்கு
கமலாட்சி யானவள்
கமலாட்சி யானாலும்
கனலாட்சி செய்பவள்..


இருளாட்சி தீர்ந்திட
ஒளியாட்சி தருபவள்
மருளாட்சி நீங்கிட
அருளாட்சி கொள்பவள்..


பொருளாட்சி நீக்கியே
புகழாட்சி அருள்கவே..
மனைமாட்சி ஓங்கவே
நிறையாட்சி தருகவே..

பொருளாட்சி தன்னோடு
இருளாட்சி போக்குவாய்
மருளாட்சி தனை நீக்கி
அருளாட்சி காட்டுவாய்..

காமாட்சி கமலாட்சி
கருணையே காட்டுவாய்..
கமலாட்சி என நின்று
நலமாட்சி நாட்டுவாய்..

நிலவாட்சி செய்கின்ற
நீள்விழி இரண்டிலும்
நீலாய தாட்சி என
நீயாட்சி  புரிகவே..

சாலாட்சி என்று வரும்
சத்தியம் வாழ்கவே
காமாட்சி என்று வரும்
நித்தியம் வாழ்கவே..

சியாமளை என்று வரும்
ஸ்ரீகிருஷ்ணன் தங்கையே
கோமளை என்றெங்கள்
குலங்காக்கும் நங்கையே

சீரான வாழ்வுக்கு சீர் 
தந்து உதவுவாயே
நேரான வாழ்விலே நிம்மதி
அருளுவாயே..


மீனாட்சி என்று வரும்
மேன்மைகள்   போற்றியே
கமலாட்சி நின் திருப்
பதம் போற்றி போற்றியே..

பார்கொண்ட நாயகி 
பரிவுடன் நோக்குவாயே
ஊர் கொண்ட நாயகி 
உயிர் காத்து அருளுவாயே..

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
**


நன்றி தினமலர்

ஓம் 
சக்தி ஓம் சக்தி
***

17 கருத்துகள்:

 1. துதிப்பாடல் அருமை. கதையின் பொருத்தம் வியப்பு. அன்னை அனைவரையும் காக்கட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்னை அனைவரையும் காத்தருளட்டும்...

   அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

   நீக்கு
 2. என்னுடன் செங்கமல நாச்சியார் என்று ஒரு பெண் படித்தாள். படிக்கும் காலத்திலேயே காதலில் விழுந்தாள். இப்போது எங்கிருக்கிறாளோ, அன்னையின் அருளில் நலமாக இருப்பாள் என்று நம்புகிறேன். செங்கமல நாச்சியாருக்கு ஒரு அக்கா இருந்தாள். அவளும் எங்களுடன் அதே வகுப்பில்தான் படித்தார். அவள் பெயர் ஜான்சி ராணி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அகிலனின் பாவை விளக்கு வாசித்தவர்களுக்கு செங்கமலம் என்பது பரிச்சயப்பட்ட பெயர்.

   நீக்கு
  2. அன்னையின் அருளால் அந்தப் பெண் நலமாக இருப்பாள்..

   தங்களது அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

   நீக்கு
  3. அகிலனின் பாவை விளக்கு படித்திருக்கின்றேன்... ஆனால் நினைவில் இல்லை..

   தங்களது அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

   நன்றி அண்ணா..

   நீக்கு
 3. வணக்கம் சகோதரரே

  பதிவு அருமை. செவ்வாய் கதையோடு இயைந்த அம்மன் பாடலை இங்கு கண்டு பாடி மகிழ்ந்தேன். படங்கள் அனைத்தும் அழகு.

  அருமையான வடிவமோடு அமையுமாறு, அன்னைக்குகந்த பாமாலையை, அன்னைக்கு வெகு பொருத்தமாக இங்கு தொடுத்து சூட்டியுள்ளீர்கள். பாராட்டுக்கள் .

  காமாட்சி, மீனாட்சி, விசாலாட்சி, கமலாட்சி, நீலாட்சி இப்படி எத்தனை பெயர்கள் அன்னைக்கு. அன்னையை இவ்வாறு எப்படி துதி செய்து அழைத்தாலும், நமக்காக சட்டென வந்து விடுவாள். அதுதான் அவளது தாய்ப்பாசம்.

  "நானாட்சி செய்து வரும் நான்மாட கூடலிலே" என்ற பாடல் நினைவுக்கு வந்தது.
  அன்னைக்கு பால் குடம் எடுத்து வரும் காணொளி கண்டேன். அன்னை அனைவருக்கும் துணையாக இருக்க பிரார்த்தித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. /// அன்னைக்கு பால் குடம் எடுத்து வரும் காணொளி கண்டேன். அன்னை அனைவருக்கும் துணையாக இருக்க பிரார்த்தித்துக் கொள்கிறேன்.. ///

   நானும் அவ்விதமே வேண்டிக் கொள்கின்றேன்..

   தங்களது அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 4. வடமொழி எழுத்து என்று ஒதுக்கி 'ஷ்' எழுத்துக்கு 'ட்' போடுவதைத் தவிர்க்கலாம். தெய்வத்தின் நாமங்களை அவற்றிற்கான உச்சரிப்பு நேர்த்தியுடன் உச்சரிப்பதே அழகு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களுக்கு நல்வரவு..

   ஆட்சி எனும் சொல் நயத்திற்காகத் தான் இப்படி..

   மற்றபடி வேறெந்த காரணமும் இல்லை..

   அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
   நன்றி அண்ணா..

   நீக்கு
 5. செங்கமலம் - நல்ல பெயர். எனக்குத் தெரிந்தவர்கள் பட்டியலிலும் இப்படி பெயர் கொண்டவர்கள் உண்டு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
   நன்றி வெங்கட்...

   நீக்கு
 6. சிறப்பான பாடல் வரிகள் ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
   நன்றி ஜி..

   நீக்கு
 7. . செங்கமல அன்னைக்குமிக அருமையான பாமாலை, நன்றாக இருக்கிறது.
  உங்கள் பாடலை கேட்டவுடன் ஆதிபராசக்தி பாடல் நினைவுக்கு வந்தது.
  காணொளி அருமை.


  பதிலளிநீக்கு
 8. துதிப்பாடல் நன்றாக இருந்தது. பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 9. செங்கமலாட்சி துதிப்பாடல் அருமை. பாடி வணங்கிக்கொண்டோம்
  அவளருள் உங்களைக் காக்கட்டும்.
  சிறுவயது எனது நண்பியின் பெயர் செங்கமலம் அப்பா பெயர் சந்தணராசா .

  ஓம் சக்தி ஓம்.

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..