நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, மார்ச் 30, 2014

தல விருட்சங்கள் - 3

தல விருட்சங்கள் தொடர்கின்றன!..

முன்பெல்லாம் கிராமம் என்றால் - பொதுவான ஒரு குளக்கரை. அதனைச் சுற்றிலும் பலவிதமான மரங்கள். தெளிந்த நீரில் தாமரை, அல்லி, ஆம்பல், ஆரை - என பலவிதமான நீர்த் தாவரங்கள்.

கரையோரத்தில்- அருகு, கரிசலாங்கண்ணி, பொன்னாங்கண்ணி, கீழாநெல்லி, தர்ப்பை - என பலவிதமான மூலிகைகள்.

குளிர்ந்த நீரில் தெள்ளுப்பூச்சி முதல் தவளைகள், நீர்ப் பாம்புகள், மீன்கள் மற்றும் ஆமைகள் - என அனைத்தும் அடைக்கலமாகியிருக்கும்.


அந்தக் குளத்தங்கரை -  நிச்சயம் அரசு, வேம்பு , புங்க மரங்களை உடையதாக இருக்கும். அரச மரத்தினடியில்  பிள்ளையார் - நாக விக்ரகங்கள் சூழ்ந்திருக்க வீற்றிருப்பார்.

குளத்தை சுற்றி - ஆங்காங்கே படித்துறைகள்.. இருப்பினும்,

மூலைக்கு மூலை அந்தக் குளத்தின் நீரை மக்கள் பலவிதமாக பயன்படுத்திக் கொண்டிருப்பர். இவற்றை எல்லாம் மீறி இயற்கையாக - அந்தத் தண்ணீரைப் பயன்படுத்தும் மக்களுக்கு - அந்த நீரால் வியாதிகள் ஏதும் ஏற்பட்டதில்லை.

மண்ணும் நீரும் மாசு படுத்தப்பட்ட பின்னரே -  நீரிலிருந்து மக்களுக்கு வியாதிகள் ஏற்பட்டன.

இப்படிப்பட்ட குளக்கரைகளிலும் ஆற்றங்கரைகளிலும் குளிப்பதையே பெரும் பாக்கியமாகக் கருதினர் அந்தக் காலத்தில்!..  - ஏன்!?..

சூரியன் உதிக்காத, பனி விலகாத இளங்காலைப் பொழுது - ப்ரஹ்ம முகூர்த்தம் எனப்படும். இந்த நேரத்தில் - நீர் நிலைகளின் மேற்பரப்பிலும்  பசுமையான மரங்கள் நிறைந்த சோலைகளிலும் ஓசோன் படலம் பரவி இருக்கும்.


அதனால் தான் - ப்ரஹ்ம முகூர்த்த வேலையில் குளிக்க வேண்டும் என்கின்றனர் பெரியோர்.. அப்போது நம்முள் கலக்கும்  ஓசோன்,  உடலுக்கும் உள்ளத்துக்கும் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். 

அந்த கிராமத்தில் வேறு பெரிய கோயில்கள் இருந்தாலும், இந்த அரச மரத்தடியே பிரதான வழிபடும் இடமாகவும் பொது இடமாகவும் திகழும்.

நெடிதுயர்ந்ததாகவும் விரிந்து பரந்த கிளைகளை உடையதாகவும், விளங்கும் அரச மரத்தின் இலைகள் இதய வடிவம் உடையவை 

அரச மரத்தின் உலர்ந்த சுள்ளிகள் மட்டுமே எல்லாவித ஹோமங்களுக்கும் உகந்தவை.

பசுமையான இலைகளால் நிறைந்து - அதிக அளவு பிராண வாயுவை வெளியேற்றும் மரங்களுள் அரசும் ஒன்று. இந்த நிர்மலமான ஆக்ஸிஜன் - நம் மூளையும், பிற உறுப்புகளும் அதிக ஆற்றல்  பெற உதவுகின்றது.  

அடர்ந்த இலைகள் கொண்டு கிளைத்து வளரும் தன்மையுடைய அரசமரம் நீண்ட ஆயுள் கொண்டது.  இதய வடிவத்தில் இருக்கும் இலைகளும் பழங்கள், மரப்பட்டைகள் எனப் பல மருத்துவக் குணம் உடைய இம்மரம் ஒரு மருத்துவ அற்புதம்.
 
சைவ வைணவ சமயங்களும்,  புத்த சமயமும் அரச மரத்தைப் புனிதமாகக் கருதுகின்றன. இது பிப்பலாச விருட்சம், அரணி, அஷ்வதா - என்று பலவாறு அழைக்கப்படுகின்றது. இது ஆலமரம், அத்திமரம் போன்று புனிதத் தன்மை கொண்டது.

சரஸ்வதி நதியானது நான்முகனின் கமண்டலத்திலிருந்து தோன்றி பலாசம் எனும் அரச மரத்தினுள் ஊடுருவி வெளிப்பட்டு  ஹிமாசல மலையில் வழிந்து ஓடிவருகின்றது - என ஸ்கந்த புராணம் குறிப்பதாக சான்றோர்கள் கூறுகின்றனர்.


வாழ்வின் அர்த்தம் தேடி - அரண்மனையின் சுக போகங்களைத் துறந்து ஞானம் தேடிப் புறப்பட்ட சித்தார்த்தர் - ஒருநிலையில் ஞானம் எய்தி,  கௌதம புத்தர் ஆனார் என்பது வரலாறு.

சித்தார்த்தர் அமர்ந்து தியானம் செய்தது - அரச மரத்தின் நிழலில்!..  

சைவத்தில் - அரச மரம்,  ஞான விருட்சம் எனக் குறிக்கப்படுகின்றது.

நாயன்மார்களுள் ஒருவராகத் திகழும் திருமூலர்- மூலன் எனும் இடையனின் உடம்பிற் புகுந்த சிவயோகியார். இவர் திருக்கயிலை மாமலையில் இருந்து தமிழகத்திற்கு வந்தவர். இவரே மகத்தான திருமந்திரம் அருளியவர்.

திருவாவடுதுறைத் திருக்கோயிலை வழிபட்டு அங்குள்ள அரசமரத்தின் நீழலில்  பல்லாண்டுகள் சிவயோகத்தில் அமர்ந்திருந்தவர்.  அவரே - இதனைத் நமக்குத் தெரிவிக்கின்றார்.

சேர்ந்திருந் தேன்சிவ மங்கைதன் பங்கனைச்
சேர்ந்திருந் தேன்சிவன் ஆவடு தண்டுறை
சேர்ந்திருந் தேன்சிவ போதியின் நீழலில்
சேர்ந்திருந் தேன்சிவன் நாமங்கள் ஓதியே
. (
பாயிரம்.திருப்பாடல் - 18)

அரச மரத்தை சிவபோதி என திருமூலர் குறிக்கின்றார். போதம்  எனில் - ஞானம். சிவ ஞானத்தைத் தருவது சிவபோதி - என்பது திருக்குறிப்பு.

திருமந்திரம் பன்னிரு திருமுறைகளுள் பத்தாம் இடத்தில் வைத்துப் போற்றப் படுகின்றது.

புண்ணியம் செய்திருந்தால் மட்டுமே இந்த அரசின் அடியில் அமர்ந்து தியானம் செய்ய முடியும் என்பர். தியானம் செய்யும் போது மனம் தெளிவடைந்து ஒரு நிலைப்படும். நல்ல சிந்தனை மனத்தினுள் தோன்றும்.  நல்ல சிந்தனையால் நம்மைச் சுற்றிலும் நேர்மறை ஆற்றல் விளங்கும்.

அரச மரத்தின் அடியில் அமர்ந்து தியானம் செய்தால் மனம்  தெய்வ சிந்தனை ஊற்றெடுக்கும். ஞானம் கிட்டும்.

ஆக - ஆரோக்கியமான வாழ்வுக்கு அரச மரம் உறுதுணை என்பது தெளிவு!..

ஆழ்வார் திருநகரி எனப்படும் திருக்குருகூரில்  அவதரித்து - பதினாறு ஆண்டு காலம் - சடகோபன் எனத் தவமிருந்து - நம்மாழ்வார் என ஞானப்பேரொளியாக வெளிப்பட்டது புளியமரத்தின் அடியில் இருந்து!..


அம்பிகையின் திருக்கரத்தினில் திகழ்வது கரும்பு!.. கரும்பு மங்கலப் பொருட்களுள் ஒன்று.

கருப்பஞ்சாற்றிலிருந்து பெறப்படும் சர்க்கரை - வெல்லம் இல்லாமல் நம்மிடையே எந்த மங்கலச் சடங்குகளும் இல்லை. 

வெல்லத்தையே பிள்ளையாராகக் கொண்டு செய்யப்படும் வெல்லப் பிள்ளையார் வழிபாடு பிரசித்தமானது. 

தஞ்சையிலிருந்து நீடாமங்கலம் செல்லும் வழியில் உள்ளது கோயில் வெண்ணி.

இதன் புராதனப் பெயர் திருவெண்ணியூர்.  எம்பெருமான் - ஸ்ரீ கரும்பேஸ்வரர். அம்பிகை - சௌந்தரநாயகி.

இறைவனின் சிவலிங்கத் திருமேனி -  கட்டுகளாக கட்டப்பட்ட கரும்பு போல விளங்குவதே விசேஷம். இதனால் - இறைவனுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்து, சர்க்கரை தானம் வழங்கினால் - இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படுகின்றது என்பது அபூர்வ செய்தி.


இத்திருக்கோயிலில் பங்குனி 2,3,4 ஆகிய தேதிகளில் சிவலிங்கத் திருமேனி மீது சூரிய ஒளி படர்ந்து சூரிய பூஜை நடக்கிறது.
 
ஞான சம்பந்தரும் நாவுக்கரசரும் பாடிப் பரவிய திருத்தலம்.

கரும்பேஸ்வரர் கோயில் தீர்த்தங்கள் - சூர்ய சந்திர தீர்த்தங்கள். தலவிருட்சம் வெண்ணி எனும் பூச்செடி. இதன் மறு பெயர் நந்தியாவட்டை.

கோயில்வெண்ணியில்   அமைந்த  போர்க்களமே வெண்ணிப் பறந்தலை. இங்குதான் சோழ மாமன்னன் கரிகாற்பெருவளத்தான்  - சேர மன்னன் பெருஞ் சேரலாதனை வென்றான். சங்க காலப் புலவரான வெண்ணிக் குயத்தியார் இவ்வூரினர்.

பாரதத்தில் 2500 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களின் பயன்பாட்டில் உள்ளது கரும்பு.  சர்க்கரையும் வெல்லமும் ஆயுர்வேதத்தில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளவை.


முன்பெல்லாம்  - வீடுகளில் வெகுவாகப் புழங்கிய வெல்லத்தை, நாகரிகம் மேலுற்றதால் -  மக்கள் வெறுத்து ஒதுக்கினர்.

சர்க்கரை மற்றும் வெல்லம்  - இவற்றைப் பற்றி ஆய்வாளர்கள் கூறுவதைப் படிப்பதற்கான இணைப்பு  - Sweet Health - There was no guilt while eating jaggery


சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை (White Sugar) அதிகமாகப் பயன்படுத்தி மகிழ்ச்சியில் திளைத்து விட்டு - இப்போது மருத்துவமனைகளைத் தேடி ஓடி வரிசையில் காத்துக் கிடக்கின்றனர்.

தொண்டையிலும் நுரையீரலிலும்  புழுதியினாலும் தொடர்ந்த புகையிலைப் பழக்கத்தினாலும் ஏற்படும் சிதைவுகளை வெல்லத்தின் மூலக்கூறுகள் சரி செய்கின்றது .

சூழ்நிலையின் காரணமாக ஏற்படும் செரிமான கோளாறுகளைக் குணப் படுத்தும் தன்மையுடைய வெல்லம் -  இரும்புச் சத்து, மக்னீஷியம், பொட்டாசியம், பாஸ்பரஸ் வைட்டமின் B1, B2, வைட்டமின் C - முதலானவை நிறைந்தது.

- என்றெல்லாம்  ஆய்வாளர்கள்  கண்டறிந்து கூறியதும், மறுபடியும் வெல்ல வேட்டை ஆரம்பமாகியுள்ளது.


அசோக வனத்தில்  -  ஐயனின் தூதுவனாக வந்து ஆறுதல் மொழி கூறிய ஆஞ்சநேயனை - அன்னை ஜானகி வாழ்த்தினாள்.

நீ சிரஞ்சீவியாக இருப்பாயாக!..

அப்படி வாழ்த்திய போது - அன்னை ஜானகி, ஆஞ்சநேயனின் சிரசில் வைத்தது - வெற்றிலையை!..


தாம்பூலம் என்பது - வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு மட்டும்  அல்ல!.. தரமான மருந்தும் கூட!..

தற்போதைய ஆராய்ச்சியில், 

நமது உடலில் சுரக்கும் 24 விதமான அமினோ அமிலங்கள் வெற்றிலையில் உள்ளன. இந்த அமினோ அமிலங்களை வெற்றிலை மூலம் நாம் அடையும் போது  ஜீரணம் எளிதாகின்றது  - என்றும்,

வெற்றிலையில் வீரியமிக்க நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட சவிக்கால் (Chavicol) என்னும் பொருள் இருக்கின்றது - என்றும்,

வெற்றிலையில் 84.4% நீர்ச்சத்தும், 3.1% புரதச் சத்தும், 0.8% கொழுப்புச் சத்தும் இரும்புச்சத்து, கால்சியம், கரோட்டின், தயமின், ரிபோபிளேவின் மற்றும் வைட்டமின் C  - ஆகியனவும் உள்ளன - என்றும்,  கண்டறிந்துள்ளனர்.

அதனால் தானே - நம் முன்னோர்கள் உணவுக்குப் பின் தாம்பூலம் தரித்தனர்.

தமிழகத்தில் தாம்பூலம் தந்து உபசரிப்பது மிக உயர்ந்த மரியாதையாகும்.

பொதுவாக காவிரிப் படுகையின் வெற்றிலை சற்று காரம். ஆனாலும் திருவையாறு  சோழவந்தான் வெற்றிலைகள் - இளந்தளிராகவே மிளிர்பவை.


தஞ்சை மாவட்டத்தில் - திருவையாறு, சுவாமிமலை, ராஜகிரி - பகுதிகளில் இருந்த வளமான வெற்றிலைக் கொடிக்கால்கள் எல்லாம்  -  வறண்ட மனைப் பிரிவுகளாகிப் போயின.

வெற்றிலையின் சிறப்பினால் திருவாரூருக்கு அருகில் கொடிக்கால் பாளையம் என்றே ஒரு ஊர் உள்ளது.

வெற்றிலை மகத்தான மருத்துவ குணங்களை உடையது.

தஞ்சை கீழவாசல் பகுதியில் மட்டும் நூற்றுக்கணக்கான கடைகளில் - வாராது வந்த வரங்கள் என, தனியானதொரு நறுமணத்துடன் - கமழ்ந்து கொண்டிருந்தன வெற்றிலைக் கவுளிகள்!..

இன்று அவையெல்லாம் காணாமல் போய் - விஷத் தன்மையுடன் கூடிய பான் பராக் மற்றும் கலப்பட வாசனை பாக்குத் தூள் சரங்கள் தொங்குகின்றன.

ஆனால்,  யாருக்கு வேண்டும் - பாரம்பர்யமும் எளிய மருத்துவமும்!?..

தெய்வாம்சம் உடைய அரச மரம் - வணங்கி வலம் வருவதற்குச் சிறந்த மரம்!..

எப்படி!?..

மகாபாரதம். குருக்ஷேத்ரத்தின் யுத்த களம்.

அர்ச்சுனனுக்குத் தேரோட்டியாக   -  முன் நிற்பவன்  ஸ்ரீ பரந்தாமன்.

ஆயினும்,  உற்றாரையும் மற்றோரையும் மாய்த்து ஒரு வெற்றி தேவையா?... என மனங்கலங்கி சோர்வுற்று, காண்டீபத்தினை நழுவ விட்டவனாக தேர்த்தட்டில்  சரிகின்றான் - விஜயன்.


அந்த வேளையில், அர்ச்சுனனின் மனம் தெளிவடைவதற்கு -  இதோபதேசம் என கீதோபதேசம் செய்தருளினான் - ஸ்ரீபார்த்தசாரதி!..

ஸ்ரீகீதையின் பத்தாவது அத்யாயம் எனும் விபூதி யோகத்தில் -  மரங்களுள், அச்வத்த - அரச மரமாகத்  தான் திகழ்வதை எடுத்துக் கூறுகின்றான்.

தானே அரச மரம்!.. -  என விளங்குவதாகத் தெய்வம் கூறுகின்றது.

ஆழ்ந்து செல்லும் வேர்ப் பகுதியில் நான்முகனும், 
நீண்டு வளரும்  நடுப்பகுதியில் மஹாவிஷ்ணுவும், 
விரிந்து விளங்கும் மேற்பகுதியில் பரமேஸ்வரனும், 

- என மும்மூர்த்திகளுடன், விருட்சங்களுக்கு அரசன் என விளங்கும் அரச மரத்தை வணங்குகின்றேன்.

மூலதோ ப்ருஹ்ம ரூபாய 
மத்யதோ விஷ்ணு ரூபிணே அக்ரத: 
சிவ ரூபாய வ்ருக்ஷ ராஜாயதே நம: 

ஓம் நம சிவாய சிவாய நம் ஓம்

14 கருத்துகள்:

 1. உங்களின் ஒவ்வொரு தொகுப்பும், விளக்கங்களும் வியக்க வைக்கிறது ஐயா... அனைத்தையும் சிறப்பாக தொகுத்து பகிர்ந்துள்ளீர்கள்... நன்றி... வாழ்த்துக்கள் பல...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் தனபாலன்..
   தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி!..

   நீக்கு
 2. வணக்கம் ஐயா
  நம் முன்னோர்கள் மேற்கொள்ளும் சடங்குகளில் ஒரு ஆழ்ந்த மருத்துவ இருக்கும் உண்மையை உங்கள் பதிவு வெளிப்படுத்தியுள்ளது. அனைவருக்கும் புரியும் வண்ணம் அழகான எளிமையான எழுத்து நடை. பல விடயங்களைத் தொகுத்து வழங்கிய பாங்கு மிகவும் பாராட்டுதலுக்குரியது. தொடருங்கள். பகிர்வுக்கு நன்றீங்க ஐயா..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் பாண்டியன்...
   இயற்கை நமக்களித்த பொக்கிஷங்கள் - மருத்துவ குணமுடைய மரங்களும் மூலிகைகளும் . அனுபவத்தின் அதனைக் கண்டுணர்ந்து நம் முன்னோர்கள் நமக்கு வழங்கினர். அவற்றைப் பாதுகாப்பது நம் கடமையல்லவா!..
   தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி..

   நீக்கு
 3. பக்திமணம் கமழும் ஆக்கத்தை அள்ளித் தரும் தங்களின்
  பொன்னான மனம் உவந்து எனக்கொரு வாழ்த்துச் சொல்லவும்
  அழைக்கின்றேன் ஐயா ! அருமையான பகிர்வுக்கு மிக்க நன்றி .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் சகோதரி..
   தாங்கள் விரும்பிய வண்ணம் அன்பின் நல்வாழ்த்துக்களுடன்!.. தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி..

   நீக்கு
 4. தல விருட்சங்கள் வியக்க வைக்கின்றன ஐயா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி!..

   நீக்கு
 5. காரணகாரியங்களுடன் முன்னோர் வகுத்து தந்த வழிபாடுகள் எத்தனை பெறுமை வாய்ந்தது!

  விளக்கங்களும், படங்களும் மிக அருமை.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   காரண காரியங்களுடன் வகுத்து வைத்திருந்த விஷயங்கள் - இடைப்பட்டதொரு காலத்தில் எழுந்த புழுதி மூட்டத்தால் -
   புரியாமல் போனது. அவை மீண்டும் துலங்கி வருவது காலத்தின் கட்டாயம்..
   தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.

   நீக்கு
 6. கும்பகோணம் நாகேஸ்வரர் கோயிலிலும் சிவலிங்கத் திருமேனி மீது சூரிய ஒளி படர்ந்து குறிப்பிட்ட நாள்களில் விழுவதைக் காணமுடியும். அதனை சிறப்பாக இப்பகுதியில் கருதுகின்றனர்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   நாகேஸ்வர ஸ்வாமியின் திருமேனியில் - சித்திரை மாதம் 11, 12, 13, தேதிகளில் காலையில் சூரியனின் ஒளிபடுகின்றது.
   தங்களின் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி..

   நீக்கு
 7. வணக்கம் சகோ !
  வியக்க வைக்கும் விடயங்கள் அனைத்தும் விபரமாக விதைத்தீர்கள். மருத்துவக் குணங்களும் மகிமைகளும் நிறைந்த மூலிகைகள், மரங்கள் என்று அசத்திவிட்டீர்கள் நன்றி ! வாழ்த்துக்கள் ...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் சகோதரி..
   வருகை தந்து இனிய கருத்துரைத்து
   அன்பின் நல்வாழ்த்துக்களை வழங்கிய தங்களுக்கு நன்றி..

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..