நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், மார்ச் 26, 2014

தல விருட்சங்கள் - 2

தல விருட்சங்களின் பெருமைகள் தொடர்கின்றன!..

சனகர், சனந்தனர், சனாதனர், சனத் குமாரர் எனும் நால்வருக்கும் சிவபெருமான் யோக நிலையில் குருமூர்த்தியாக வீற்றிருந்து ஞானோபதேசம் செய்வித்தது ஆலமர நிழலில் !..


எம்பெருமான் அளந்த ஒரு நாழி நெல்லினைக் கொண்டு முப்பத்திரண்டு அறங்களையும் வழுவாது  இயற்றியவளாய் அம்பிகை தவமிருந்தது -  மாமர நிழலில்!..  திருத்தலம் - மாங்காடு!.

அம்பிகை கம்பை ஆற்றின் கரையில் மாமர நிழலில் -  மணலில் சிவலிங்க ஸ்தாபனம் செய்து வழிபட்ட திருத்தலம்  - காஞ்சி!.

அம்பிகை மயில் வடிவாக எம்பெருமானைப் பூஜித்தது புன்னை வனத்தில்!.. அந்த புன்னை வனமே திருமயிலை!..

அம்பிகை - ஐயனை வழிபட்ட தலங்களுள் சிறப்பானது திருஆனைக்கா..  இங்கே - தல விருட்சம் - நாவல்!..

விக்னங்களைத் தீர்த்தருளும் விநாயகப்பெருமானுக்கு உகந்தவை அருகம் புல்லும் எருக்கம்பூவும்!..

ஞான சம்பந்தர் - திருமயிலையில் பூம்பாவையை எழுப்பும்போது பாடியருளிய திருப்பதிகத்தின் முதல் வரியே,

மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலை!.. - என்பது தான்.

அடியவர் பொருட்டு ஞானசம்பந்தப் பெருமான்  திருப்பதிகம் பாடியருள, ஆண் பனைகள், பெண் பனைகளாகி குலை ஈன்று, தல விருட்சமாகி நின்றதுவும் திருஓத்தூர் எனும் திருத்தலத்தில்.

ஆழிமிசைக் கல் மிதப்பில் அணைந்த பிரானாகிய திருநாவுக்கரசர் - கடலில் இருந்து கரையேறியதும் முதலில் தரிசித்த தலம் திருப்பாதிரிப்புலியூர். அங்கே  - தலவிருட்சம் - பாதிரி!..  திருஆரூரிலும் தலவிருட்சம் - பாதிரி!..

ஆன்மீக தாகத்தில் தவித்துக் கொண்டிருந்த திருவாதவூரருக்காக - இறைவன் குரு வடிவாகக் காத்திருந்தது குருந்த மரத்தின் நிழலில்!.. மாணிக்கவாசகர் எழுப்பிய ஆவுடையார் கோயில் எனும் திருப்பெருந்துறையின் தலவிருட்சம் - குருந்த மரம்!.

சுந்தரர் - சங்கிலியாரை திருமணம் செய்து கொண்டு, நான் உன்னைப் பிரியேன் என்று சங்கிலியாரிடம் வாக்களித்தது  - திருவொற்றியூர் மகிழ மரத்தின் கீழ்!..
 
சீர்காழியில் - பாரிஜாதம்.  திருநெல்வேலியில் - மூங்கில்.

பஞ்ச பாண்டவர்கள் -  தமது அஞ்ஞாத வாசத்தின் போது -  ஆயுதங்களையும் மந்த்ராஸ்திரங்களையும் பொதிந்து வைத்த மரம் - வன்னி!..

யமதர்மன் பணி செய்து வணங்கும் திருப்பைஞ்ஞீலியில் தலமரம் - வாழை!.

சனைச்சரன் தொழுதுநிற்கும் திருத்தலமாகிய திருநள்ளாறு - தர்ப்பைவனம்!.. 

பிரம்மாண்டமான சிவலிங்கத் திருமேனியைத் தன்னகத்தே கொண்டதும் பலநூறு ஆண்டுகளைக் கண்டதுமான - 

ஸ்ரீராஜராஜேஸ்வரம் விளங்கும்  தஞ்சை மாவட்டத்தில் - சிவலிங்க ஸ்தாபனமே இல்லாமல் ஒரு திருக்கோயில் புகழ் பெற்று விளங்குகின்றது. 

நெடிதுயர்ந்த - தக்ஷிணமேரு எனும் மூலஸ்தான ஸ்ரீவிமானத்துடன் விளங்குவது தஞ்சை அருள்மிகு பெருஉடையார் திருக்கோயில்.

தஞ்சை பெரிய கோயில் - கோபுரம் கொடிமரம் என்ற எல்லா அங்கங்களும்  கொண்டு விளங்குவது.

ஆனால், இவை எதுவும் இல்லாமல் - திருக்கோயிலாகத் திகழ்வது  - விரிந்து படர்ந்து நிழல் கொண்டு விளங்கும் - ஆல மரம்!.. 

பரக்கலக்கோட்டை அருள்மிகு பொதுஆவுடையார் திருக்கோயில்.

பொதுஆவுடையார் சந்நிதி
சந்நிதிக்கு எதிரே - நந்தி மட்டுமே!.. 

அம்பாள் சந்நிதி, முருகன் சந்நிதி, சண்டிகேசர் சந்நிதி - என்று எதுவுமே இங்கு கிடையாது. 

வீரஹத்தி விநாயகர் சந்நிதி மட்டும் - அதுவும் கோயிலுக்கு வெளியே!..

ஆலமரத்திற்கு ஏதும் கேடு நேராதபடி சுற்றுச் சுவர் மட்டுமே உண்டு!..

ஸ்வாமி ஏகாந்த மூர்த்தி. வன்மீகம் எனப்படும் புற்று வடிவமா?. இல்லை!. சிலாரூபமா?. இல்லை!. பஞ்சலோகத் திருமேனியா?. இல்லை!.  பின்னே!?.


ஸ்வாமி - சுயம்பு திருமேனி!.. ஒரு உயிர்த் திரளின் உள்ளிருந்து முளைத்தவர். 

விரிந்து படர்ந்து விளங்கும் ஆல மரத்தின் கிழக்கு பாகத்தில் ஒன்றரை அடி உயரத்திற்கு   முளைத்தெழுந்து  விளங்குகின்றது -  அடிவேர்!.. 

அதுவே சிவலிங்கம்!.. - இயற்கையாக மூண்டெழுந்ததால் ஆவுடை எல்லாம் கிடையாது. ஆனாலும் திருப்பெயர்  - பொது ஆவுடையார்!.. 

இந்தத் திருமேனிக்கு திருவாசி சாத்தி திருநீற்றுப் பட்டம் சூட்டி,

வாரம் ஒருமுறை - ஒரே முறை -  திங்கட்கிழமை மட்டும் இரவு பதினோரு மணிக்கு மேல், வழிபாடுகள் செய்யப்படும். அதுவும்,

தில்லைச் சிற்றம்பலத்தில் அர்த்தஜாம பூஜை முடிந்து நடைஅடைத்த பிறகே!.

ஏனெனில், சிதம்பரத்தில் நடை அடைத்த பிறகு  - அங்கிருந்து புறப்பட்டு, இங்கே எழுந்தருளி - முனிவர் இருவருக்கிடையே இருந்த பிரச்னையை தீர்த்து மத்யஸ்தம் செய்து வைத்ததாக ஐதீகம். 

அதனால், மத்தியஸ்தபுரீஸ்வரர் எனவும் திருப்பெயர்.

இந்த பொதுஆவுடையார் திருக்கோயில் விளங்குவது - பட்டுக்கோட்டையில் இருந்து கிழக்கே முத்துப்பேட்டை சாலையில் தாமரங்கோட்டை கிராமத்திற்கு அடுத்ததாக இருக்கும் பரக்கலக்கோட்டை கிராமத்தில்!..

இந்த தாமரங்கோட்டை கிராமத்தில் சுமார் இருநூறு வருடங்களுக்கு முன் - தன் கணவனின் சிதையோடு ஒன்றி உடனாகி தீக்குள் தீயாகி நின்ற திருவிளக்கு - நல்லம்மாள் எனும் மாதரசி!.. 

அந்த அம்மையார் தீக்குள் புகுந்த இடத்தில் முளைத்தெழுந்தது - ஒரு மாங்கன்று. சிலவருடங்களில் அதை அரவணைத்து  ஆல் ஒன்றும் முளைத்தது. மாங்கன்று ஆலமரத்தினுள் ஐக்கியமாகி விட - இப்போது அங்கே விளங்குவது பிரம்மாண்டமான ஆலமரம் மட்டுமே. 


மாதரசி நல்லம்மாள் இன்னும் இந்த ஆலமரத்தில் உயிர்ப்புடன் உறைகின்றாள். அதனாலே - தீப்பாய்ந்த அம்மன் என்றும் தீப்பாய்ந்த நாச்சியார் என்றும் சித்திரை முதல் நாளில் பெரியதொரு விழா  எடுத்து கொண்டாடி மகிழ்கின்றார்கள். 

அவருக்கு பிள்ளைகள் இல்லை எனினும்  - ஊர் முழுதும் உள்ள அவரது உற்றார் உறவு முறையானவர்கள் வழிவழியாக - இந்த ஆலமரத்தைப் பாதுகாத்து, நாச்சியாருக்கு பஞ்சலோக திருமேனி எடுப்பித்து வழிபாடுகளை நடத்தி வருகின்றார்கள். 

இந்த ஆலமரக்கோயில், பட்டுக்கோட்டை - முத்துப்பேட்டை சாலையில் - சாலையின் ஓரத்திலேயே விளங்குகின்றது. 

தாமரங்கோட்டையிலிருந்து வடக்கே - இரண்டு கி.மீ. தொலைவில் உள்ள கிராமம் அத்திவெட்டி பிச்சினிக்காடு.


இந்த கிராமத்தில் தான்,  இயற்கை .. இயற்கை!..  - என வாழ்நாள் முழுதும் மண்னும் மக்களும் பயனுற வேண்டி - அலைந்து திரிந்த, பசுமைப் போராளி நம்மாழ்வார் அவர்களின் இறுதி மூச்சு இயற்கையுடன் கலந்தது.

இங்கே - ஆவாரங்காட்டுக்குள் ஒற்றைப் பனை - விளங்குகின்றது. அதன் எதிரே - எந்த காலமும் சிலு சிலு என குளிர்ந்து விளங்கும் அழகான தடாகம். பனையின் கீழ் சிறு கொட்டகை மட்டுமே.. மற்றபடி மாலை சந்தனம் குங்குமம் எல்லாம் -  ஒற்றைப் பனைக்கே!..

இந்த ஒற்றைப் பனையில் - சத்தியத்தின் வடிவாக - குடிகொண்டு அருள்பவர் - ஸ்ரீவைரவர்.

நம் பக்கம் நியாயம் இருந்து, வைரவா!.. நீ கேள்!.. என்று முறையிட்டால் போதும்!.. அந்தக் கணத்திலேயே  - எதிரிக்கு பளார் என்று அறை விழுகின்றது.

நம் பக்கம் நியாயம் இருக்கிறது. ஆனாலும் எதிரி வஞ்சனை வழக்கிட்டு வம்புக்கு இழுக்கின்றான். எதிரியை நம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லை எனில்  - இருக்கவே இருக்கின்றார் - ஸ்ரீவைரவர்!..

ஆனால், நாம் எதிரியைக் குறித்து ஒருவார்த்தை கூட துஷ்பிரயோகம் செய்யக்கூடாது. கொதித்துக் குமுறிய உள்ளம் குளிரும்படிக்கு - குளத்தில் குளித்து விட்டு  - வைரவா சாட்சி!.. என்று விழுந்து வணங்கினால் - அதற்கு மேல் நடக்க வேண்டியவைகளை ஸ்ரீவைரவர் பார்த்துக் கொள்கின்றார். 

அதனால் அன்றோ - சுற்றுப்புற கிராமங்களில் வைரவசுந்தரம், வைரவமூர்த்தி, வைரவ சுந்தரி - என்றெல்லாம் நூற்றுக்கணக்கில் பிள்ளைகளுக்குப் பெயர் விளங்குவது.

மதுக்கூரில் புகழ் பெற்ற பெரமையா சுவாமி கொலு இருப்பது மரக் கூட்டங்களில்  தான்!. அருகில் உள்ள ஒரு கிராமத்தில் ஸ்ரீ காளி குடி கொண்டிருப்பது - உடை மரம் எனும் ஒருவகை அபூர்வ மரத்தில்!..

எம்பெருமான் ஸ்ரீகாளியுடன் நடனம் ஆடி - ஊர்த்துவ திருக்கோலத்தில் நின்றது  ஆலங்காட்டில்!. இதுவே - பஞ்ச சபைகளுள் ஆதியான - ரத்ன சபை!.  திருஆலங்காட்டில் தான், பங்குனி - சுவாதி அன்று காரைக்கால் அம்மையார் முக்தி அடைந்தார்!.


தாடகை எனும் இளம்பெண் சிவபூஜையின் போது புஷ்பாஞ்சலி செய்து பூமாலை சூட்டிய வேளையில் அவளது மேலாடை நழுவிற்று. நிலைகுலைந்த அவளது இன்னலைக் கண்டு - எம்பெருமான் தலைகுனிந்து பூமாலையை ஏற்றுக் கொண்டார். 

அவளது மேலாடையும் நழுவாது தோளிலே நின்றது. ஆனால் சிவலிங்கத் திருமேனி ஒரு புறமாக சாய்ந்து விட்டது. தகவல் அறிந்து திரண்டு வந்த எவராலும் சிவலிங்கத் திருமேனியை நிமிர்த்த முடியாமற் போனது. 

இதனை அறிந்து அடியார் ஒருவர் வந்தார். கயிற்றில் சுருக்கிட்டு ஒரு முனையைத் தன் கழுத்தில் மாட்டிக் கொண்டார். மறு முனையை சிவலிங்கத் திருமேனியுடன் பிணைத்தார். 

''..பெருமானே!.. நீ ஒளி பெற்று எழ வேண்டும். இல்லையேல் உயிரற்று நான் விழ வேண்டும்!..'' - அடியவர் இதற்கு மேல் வேறு ஒன்றும் பேசவில்லை. 

கழுத்தில் சுருக்கிட்ட கயிற்றுடன் - இழுத்தார். அன்பினுக்கு ஆட்பட்டு சாய்ந்த சிவம்  - அதே அன்புக்குக் கட்டுப்பட்டு நிமிர்ந்தது. இந்த அருஞ்செயல் நிகழ்ந்த திருத்தலம் - அருணஜடேஸ்வரர் என, ஐயன் உறையும் திருப்பனந்தாள்.  இங்கே  தலவிருட்சம் - பனை!..

திருமழபாடியில் - பனை!.. திருஐயாற்றுக்கு அடுத்துள்ள ஆடுதுறையில் - தென்னை!.. 

கழுத்தில் சுருக்கிட்டு  இழுத்தவர் - குங்கிலியக் கலய நாயனார்.  அபிராம வல்லியும் அமிர்தகடேஸ்வரரும் உறையும் திருக்கடவூரைச் சேர்ந்தவர். திருக்கடவூரில் தலவிருட்சம் - முல்லைக் கொடி. 

திருவிடைக்கழி - குமரன்
திருமுருகன் திருப்பாதங்கள் பதிய நடந்தருளிய திருத்தலம் திருவிடைக் கழி. இங்கே,  தல விருட்சம் - குரா மரம்.

பஞ்ச வன க்ஷேத்ரங்கள் எனத் திகழ்வன:-

திருக்கருகாவூர் - முல்லை வனம்
திருஅவளிவ நல்லூர் - பாதிரி வனம்
திருஅரதைப் பெரும்பாழி  (ஹரித்வார மங்கலம்) - வன்னி வனம்
திருஇரும்பூளை (ஆலங்குடி) - பூளை வனம்
திருக்கொள்ளம்பூதூர் - வில்வ வனம்

மகமாயி புற்றுருவாக எழுந்த புன்னை வனம் தான் - தஞ்சை புன்னை நல்லூர்!.. 

தல விருட்சங்களின் பெருமைகள் நம்மைத் தொடர்கின்றன - என்றாலும், நாம் தல விருட்சங்களைத் தொடர வேண்டும்!.. அதுவே நமக்குப் பெருமை!.. 

மரங்களில் தெய்வங்கள் நிலை பெற்றிருப்பது - மண்ணும் மக்களும் பயனுறவே!..

மரங்கள் - இறைவன் அளித்த வரங்கள்.

இதில் பொதிந்து கிடப்பது - 
இயற்கையே இறைவன்!.. - இறைவனே இயற்கை!..
எனும் உண்மை.

சிவாய திருச்சிற்றம்பலம்!..

16 கருத்துகள்:

 1. பொக்கிசமாகப் பாதுகாத்து வைதுக்கொள்ளகூடிய சிறப்பான
  பகிர்வுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் ஐயா .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்களுடைய பாராட்டுகளும் வாழ்த்துகளும் என்னை இன்னும் நேரிய வழியில் செலுத்துகின்றன..
   தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி..

   நீக்கு
 2. தாவரங்களின் பயனை அறிந்து அன்றே போற்றிவர்கள் அல்லவா தமிழர்கள். போற்றிக் காக்க வேண்டிய பதிவு ஐயா இது
  நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தாங்கள் வருகை தந்து வழங்கிய இனிய கருத்துரை என்னை இன்னும் நேரிய வழியில் செலுத்துகின்றது.. மிக்க மகிழ்ச்சி..

   நீக்கு
 3. அற்புதமான தகவல்கள்...

  உங்கள் பதிவுகளைப் பிரித்து, பல மின் நூலாக வெளியிட வேண்டும் என்று விரும்புகிறேன்...

  dindiguldhanabalan@yahoo.com

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் தனபாலன்..
   தங்களுடைய அன்பான விருப்பத்தினுக்கு மிக்க நன்றி..
   தங்களுடைய இனிய கருத்துரை - என்னை இன்னும் நேரிய வழியில் செலுத்துகின்றது..
   தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க மகிழ்ச்சி..

   நீக்கு
 4. ஆவுடையார் கோவில் பற்றிய விளக்கம் மிக அருமை. கோவிலை தரிசிக்க ஆவல் வெகு காலமாய் .
  அழகான பதிவு, அருமையான பதிவு.
  வாழ்த்துக்கள்.
  இயற்கையே இறைவன், இறைவனே இயற்கை !
  உண்மை. அதை புரிந்து நடந்து கொண்டால் இயற்கையை பாழ் செய்ய மனம் வராது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   இயற்கையைப் புரிந்து நடந்து கொண்டாலே
   இன்னல்கள் ஏதும் இல்லை.
   தாங்கள் வருகை தந்து கருத்துரைத்து
   வாழ்த்தியமைக்கு மிக நன்றி!..

   நீக்கு
 5. சிறப்பான விவரங்கள்.......

  எத்தனை எத்தனை தகவல்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வெங்கட்..
   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

   நீக்கு
 6. நம் முன்னோர்கள் மறந்கலித் தெய்வங்களாக்கி வைத்ததே இயற்கையை நாம் பெண் வேண்டும் என்கிற நோக்குடன் தான். நாம் தன அதைக் காலப் போக்கில் மறந்து , மழை வலம் குறைந்து , விவசாயம் நலிந்து , தவிக்கின்றோம். அருமை! அருமை! பதிவை மிகவும் ரசித்தேன்., நன்றி பகிர்விற்கு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தாங்கள் சொல்வது உண்மையே..
   நாம் காலப் போக்கில் மரங்களை மறந்து போனதால் அவைகளின் மகத்துவம் தெரியவில்லை..
   தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி..

   நீக்கு
 7. இயற்கையோடு எந்த அளவு தொடர்புபடுத்தப்பட்டு கோயில்களின் பல கூறுகள் அமைந்துள்ளன என்பதைத் தங்களின் பதிவு உணர்த்துகிறது. இவ்வாறான நிலையிலும் நாம் பலவற்றை இழந்துகொண்டிருக்கிறோம், அல்லது அருமைபெருமைகளைப் போற்றத் தவறிவிடுகிறோம் என்பது வேதனைக்குரியதாகும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   வீட்டுக்கு வீடு மரங்களைப் போற்றி வாழ்ந்த சமுதாயம் தானே நம்முடையது. நாமும் எப்படி மரங்களின் அழிவுக்குத் துணை போனோம்?..
   தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி...

   நீக்கு
 8. இயற்கையை கட்டிக் காக்க வேண்டியது எவ்வளவு அவசியம் என்பதை உணர்த்திடும் வகையில் இறைவனையும் இயற்கையையும் சேர்ந்த தொடர்புகளையும் எடுத்துக்கட்டும் நல்ல பதிவு நன்றி வாழ்த்துக்கள் ...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் சகோதரி..
   தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி!..

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..