நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், மே 29, 2013

தஞ்சை 23 கருட சேவை


தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான திருக்கோயில்களுள் தஞ்சை மாமணிக் கோவில்கள் மிகச் சிறப்பு வாய்ந்தவை. ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட, 108 திவ்ய தேசங்களுள் மூன்றாவதாக விளங்குபவை.  

தஞ்சை யாளி - வீரநரசிங்கப் பெருமாள், நீலமேகப் பெருமாள், மணிகுன்றப் பெருமாள் எனும் திருப்பெயர்களில் எம்பெருமான் குடிகொண்டிருக்கும் இத்திருக்கோயில்களில் வைகாசி திருவோண கருடசேவைப் பெருவிழா நாளை  (30/5) முதல் நடைபெற உள்ளது.
ஸ்ரீ வீரநரசிங்கப்பெருமாள், தஞ்சை

எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம்
எனக்கு அரசு என்னுடை வாழ்நாள்
அம்பினால் அரக்கர் வெருக்கொள
நெருக்கி அவருயிர் செகுத்த எம்அண்ணல்,
வம்புலாம் சோலை மாமதிள் 
தஞ்சை மாமணிக் கோயிலே வணங்கி,
நம்பிகாள்! உய்ய நான் கண்டு கொண்டேன்
நாராயணா என்னும் நாமம். 953.
                                              -   திருமங்கை ஆழ்வார் - திருப்பாசுரம்.


என்செய்கேன் அடியேனுரையீர் இதற்கென்று 
மென்மனத்தேயிருக்கும் புகழ்,
தஞ்சை யாளியைப் பொன்பெயரோன்றன் 
நெஞ்சமன்றிடந்தவனைத் தழலேபுரை
மிஞ்செய் வாளரக்கன் நகர் பாழ்படச் சூழ்
க டல்சிறை வைத்து இமை யோர்தொழும்,
பொன்செய் மால்வரையை மணிக்குன்றினை 
அன்றியென்மனம் போற்றி என்னாதே. 1576
                                    -   திருமங்கை ஆழ்வார் - திருப்பாசுரம்.

தமருள்ளம் தஞ்சை தலையரங்கம் தண்கால்,
தமருள்ளும் தண்பொருப்பு வேலை, - தமருள்ளும்
மாமல்லை கோவல் மதிட்குடந்தை யென்பரே,
ஏவல்ல எந்தைக்கு இடம்.2251
                                           - பூதத்தாழ்வார் - திருப்பாசுரம்.

பாரம்பர்யமாக நடைபெற்று கொண்டிருந்த கருட சேவைப் பெருவிழா ஓயாத சண்டை சச்சரவு, அரசியல் குழப்பங்கள், அந்நியர் படையெடுப்பு போன்ற பல காரணங்களினால் தடைப்பட்டிருந்தது. பலகாலம் கழித்து தஞ்சை பள்ளியக்ரஹாரத்தில் வாழ்ந்த கருடாழ்வார் தாசர் என்னும் மகானால் மீண்டும் பன்னிரு கருட வாகனத்துடன் கோலாகலமாகத் தொடங்கப்பட்டது. எனவே இவர் துவாதாச கருடாழ்வார் தாசர் என அன்புடன் அழைக்கப்பட்டார். அந்த விழாவே தற்போது 23 கருட சேவையாக சிறப்புடன் நிகழ்வுறுகின்றது.

ஸ்ரீ மணிக்குன்றப்பெருமாள் திருக்கோயில், தஞ்சை.
இதன்படி தஞ்சையில், எழுபத்தொன்பதாவது வருடமாக - கருடசேவைப் பெருவிழா இம்மாதம் வைகாசி திருவோணத்தை அனுசரித்து 30ம் தேதி முதல் அடுத்த மாதம் 2ம் தேதி வரை வெகுவிமரிசையாக நடக்கிறது. விழா துவக்க நாளான 30ம் தேதி, காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேலசிங்க பெருமாள் கோவிலில் ஆழ்வார் மங்களாசாஸனம். தொடர்ந்து, ஆழ்வாருக்கு கருடசேவை 31ம் தேதியும், நவநீத சேவை மறுநாள் (ஜூன் மாதம்) ஒன்றாம் தேதியும், விடையாற்றி விழா 2ம் தேதியும் என, நான்கு நாள் திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீ நீலமேகப் பெருமாள் திருக்கோயில், தஞ்சை
வரும் 31ம் தேதியன்று, தஞ்சையில் உள்ள 23 திருக்கோயிலின் பெருமாள்களும் கருட வாகனத்தில் எழுந்தருளி, அவரவர் கோவில்களில் இருந்து காலை ஆறு மணியளவில் புறப்பட்டு -  எட்டு மணியளவில் தஞ்சை நகரில் கொடிமரத்து மூலையை வந்தடைவர். பின்னர்

திருமங்கைஆழ்வார் அன்னவாகனத்தில் எம்பெருமானைத் தொழுத வண்ணம் முதலில் வர - பின் தொடர்வோர்...


1)ஸ்ரீநீலமேக பெருமாள் - ஆண்டாளுடன் 
2)ஸ்ரீவீரநரசிம்ம பெருமாள்,
3)ஸ்ரீமணிகுன்றப்பெருமாள்,
4)ஸ்ரீவரதராஜ பெருமாள்,வேளூர்
5)ஸ்ரீகல்யாண வெங்கடேச பெருமாள்,வெண்ணாற்றாங்கரை

6)ஸ்ரீகோதண்டராமர், பள்ளிஅக்ரஹாரம்
7)ஸ்ரீலட்சுமிநாராயணன் பெருமாள், சுங்காந்திடல்
8)ஸ்ரீயாதவ கண்ணன், கரந்தை
9)ஸ்ரீவெங்கடேச பெருமாள் ,கரந்தை
10)ஸ்ரீயோகநரசிம்ம பெருமாள், கொண்டிராஜபாளையம்

11)ஸ்ரீகோதண்டராமர், கொண்டிராஜபாளையம்
12)ஸ்ரீவரதராஜ பெருமாள், கீழராஜவீதி
13)ஸ்ரீகலியுக வேங்கடேச பெருமாள், தெற்குராஜவீதி
14)ஸ்ரீராமஸ்வாமி, அய்யங்கடைத்தெரு (பஜார்)
15)ஸ்ரீஜனார்த்தன பெருமாள், எல்லையம்மன் கோவில் தெரு

16)ஸ்ரீபிரசன்ன வேங்கடேச பெருமாள்,கோட்டை
17)ஸ்ரீகோவிந்தராஜ பெருமாள், கோட்டை
18)ஸ்ரீரங்கநாத பெருமாள், மேல அலங்கம்
19)ஸ்ரீவிஜயராமஸ்வாமி, மேலராஜவீதி
20)ஸ்ரீநவநீத கிருஷ்ணஸ்வாமி,மேலராஜவீதி
 
21)ஸ்ரீபூலோககிருஷ்ணன், சகாநாயக்கன்தெரு
22)ஸ்ரீநவநீதகிருஷ்ணன், மானம்புச்சாவடி
23)ஸ்ரீபிரசன்ன வேங்கடேச பெருமாள்,மானம்புச்சாவடி

கருட சேவை 2012
23 திருக்கோயில்களின் ஸ்வாமிகள் சர்வ அலங்காரமாக கருட வாகனத்தில் எழுந்தருளி - கீழ ராஜவீதி, தெற்கு ராஜவீதி, மேல ராஜவீதி, வடக்கு ராஜவீதி வழியாக பக்தர்களுக்கு காட்சியளித்து மீண்டும் கொடிமரத்து மூலையை வந்தடைவர். பின் மகாதீப ஆராதனைக்குப் பின் அங்கிருந்து தமது கோவில்களுக்கு சென்றடைவர். இதேபோல ஜுன் முதல் தேதி , நவநீதசேவை தரிசனம் நிகழ்வுறும். முன்போலவே கொடிமரத்து மூலையில் ஒன்றாகக் கூடி பக்தர்கள் தரிசனம் செய்ய ராஜவீதிகளில் திருஉலா நடைபெறும்

கருட சேவை 2012
ஜுன் இரண்டாம் தேதியன்று விடையாற்றி விழா. பிரம்மோற்ஸவம் முடிந்தபின், தேவர்களை அவரவர் இருப்பிடம் அனுப்பி வைக்கும் வைபவமாக,  காலை 10 மணிக்கு வெண்ணாற்றங்கரையில் நீராட்டு விழா. மதியம் 12 மணிக்கு  வீரநரசிங்கர் கோவிலில் திருமஞ்சனம், தீபாராதனை நடைபெறும்.

விழா ஏற்பாட்டை அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் திரு.பாபாஜி ராஜாபான்ஸ்லே அவர்கள் தலைமையில் திவ்யதேச பொது மக்கள், ஸ்ரீ ராமானுஜ தர்சன சபையினர் மற்றும் ஹிந்து அறநிலையத் துறையினர் செய்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு நிகழ்ந்த வைபவ படங்களை இணைப்பில் கண்டு மகிழுங்கள்.

http://anudinam.org/2012/06/15/23-temple-garuda-sevai-in-thanjavur/

தமிழகத்தில் - குடந்தை(12) திருநாங்கூர் (11), காஞ்சி , ஆழ்வார் திருநகரி இன்னும் பல தலங்களிலும் மற்றும் திருப்பதியிலும் கருடசேவை நடந்து வருகின்றது. எனினும்  -

வெகு சிறப்புடன் 23 கருடசேவை வைபவம் நிகழ்வது தஞ்சையம்பதியில் மட்டுமே.

கருடசேவையைத் தரிசித்தால் நான்கு அஸ்வமேத யாகங்களைத் தரிசித்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

நாமும் தரிசிப்போம்!... நலம் பெறுவோம்!...

நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்
நாராயணா எனும் நாமம்!...

திங்கள், மே 27, 2013

திருஞானசம்பந்தர்


சிவபாத இருதயருக்கும் பகவதி அம்மையாருக்கும் - ஆளுடைய பிள்ளையாக -  தன் மூன்றாம் வயதில் - 

தோணிபுரம் எனும் சீர்காழியில் திருக்குளக் கரையினில் நீராடுதற்கு என தண்ணீரில் மூழ்கிய தந்தையைக் காணாது மனம் தவித்து அம்மே...அப்பா!.. என அரற்ற, 

அது பொறுக்க மாட்டாது எந்தை ஈசனுடன் விடை வாகனத்தில் தோன்றிய அம்பிகை, அளப்பரிய கருணை உணர்வினால் உந்தப்பட்டவளாய் பெருகி வழிந்த திருமுலைப்பாலினை பொற்கிண்ணத்தில் ஊட்ட - 

அந்த ஞானப்பாலினை அருந்தியதால் - சிவஞானம் நிரம்பப் பெற்றவர் திருஞான சம்பந்தப்பெருமான்.. 

ஞானசம்பந்தப் பெருமான் செல்லும் வழியெங்கும் அற்புதத்திற்கு மேல் அற்புதங்கள் நிகழ்ந்தன..


திருத்தலங்கள் தோறும் ஞானசம்பந்தப் பெருமான் அம்மையப்பன் மேல் அன்பெனும் வெள்ளம் கரை புரள  - திருப்பதிகம் பாடி மகிழ்ந்து - வணங்கி இன்புற்றனர்.

ஞானசம்பந்தப் பெருமான் தோணி புரத்து அம்மையப்பனின் புத்திரராக விளங்கி நாடெங்கும் சிவதரிசனம் செய்து திருக்கடைக்காப்பு எனும் தமிழ் அமுதினைப் பொழிந்தார்..

திருக்கோலக்காவினில் பொற்றாளமும்
பட்டீச்சுரத்தில் முத்துப்பந்தரும் வழங்கப் பெற்றன..

இவர் பொருட்டு வளம் குன்றிப் பாலையாயிருந்த நனிபள்ளி,  நெய்தலாகி -  பின் மருதமாயிற்று.  திருப்பாச்சிலாச்சிராமத்தில் முயலகம் எனும் நோயால்  - நெடுநாளாக உணர்வற்றுக் கிடந்த மழவனின் மகள் நோய் நீங்கப் பெற்றாள்.

திருச்செங்கோட்டுக்கு வருகை புரிந்தபோது கொங்கு நாடெங்கிலும் பரவிக் கிடந்த குளிர் காய்ச்சல் - இவர் தம் திருப்பதிகத்தால் நீங்கி ஒழிந்தது.

திருமருகலில் வணிகர் குலமகளின் காதல் மணாளன் நாகந்தீண்டி இறக்க, கதறி அழுத அவளின் கண்ணீர் ஓயும் வண்ணம் மணாளனை உயிர்ப்பித்து மணம் முடித்து அருளினார்.  

திருநாவுக்கரசருடன் இணைந்து தலயாத்திரை செய்யுங்கால் -
திருவீழிமிழலையில் ஏற்பட்ட பஞ்சம் நீங்க இறைவனிடம் படிக்காசு பெற்று மக்களின் துயர் தீர்த்ததுடன்,  


திருமறைக்காட்டில் வேதங்களால் அடைத்துத் தாழிடப்பட்ட திருக்கோயிலின் கதவுகளைத் திறந்தும் அடைத்தும் மக்களுக்கு உதவினார். 

மதுரையில் சமணத்தை வென்று சைவம் நிலை நாட்டினார். அத்துடன் பாண்டியனின் கூன் நிமிரப் பெற்றது. மன்னனும்  நின்றசீர் நெடுமாறன் ஆகினான். 

திருக்கொள்ளம்பூதூரில் முள்ளியாற்றில் வெள்ளப்பெருக்கின் போது ஆளில்லா ஓடத்தை அதுவாகவே செல்லும்படிக்கு  இயக்கி - அக்கரைக்கு அன்பர்களை அக்கறையுடன் சேர்த்தருளினார்.

தொண்டை நாட்டில் திருஓத்தூர் எனும் தலத்தில் இறைபணிக்காக வளர்க்கப் பட்ட பனைகள், ஆண்பனைகள் ஆகிவிட, அவற்றை அன்பர்களின் பொருட்டு பெண்பனைகளாக்கி அருளினார்.  

திருமயிலையில் பெருவணிகரான சிவநேசஞ் செட்டியார் என்பவர் தம் மகள் பூம்பாவையை ஞானசம்பந்தப் பெருமானுக்குக் கன்னிகா தானம் செய்து கொடுப்பதாக அறிவித்து வளர்த்து வரும் போது ஒருநாள் பூவனத்தில் நாகந்தீண்டி இறந்து விடுகின்றாள் அந்தக் கன்னி. 

மனம் வருந்திய செட்டியார் தன் அன்பு மகள் பூம்பாவையின் அஸ்தியை ஒரு  கலசத்திலிட்டு கன்னி மாடம் அமைத்து அங்கே பாதுகாத்து வைத்தார் - ''என்றேனும் பெருமான் வருகை தரும் போது அவரிடம் சாம்பலையாவது ஒப்படைப்போமே'' - என்று!..   

திருமயிலைக்கு எழுந்தருளிய வேளையில் இந்தச் செய்தியறிந்த ஞான சம்பந்தர் திருப்பதிகம் பாடியருள  -  அஸ்திக் கலசத்திலிருந்து அன்றலர்ந்த தாமரையாக மீண்டும் உயிர் பெற்றெழுந்தாள் பூம்பாவை.  

அன்பு மீதூறிய - சிவநேசஞ் செட்டியார்,  பூம்பாவையை மனையாளாக ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டபோது ''பூம்பாவை என்மகள்'' என்று கூறி ஆசி வழங்கி அருளினார் ஞானசம்பந்தப் பெருமான்.

இப்படியெல்லாம் தமிழுடன் தண்கருணையையும் சுரந்த திருஞானசம்பந்த மூர்த்தி - நம் பொருட்டு அருளிய திருப்பதிகங்கள் - நாளும் பாராயணம் செய்வோர்க்கு எல்லா நலன்களையும் வழங்கவல்லவை. 

ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன்வியாழன்
வெள்ளி சனி பாம்பிரண்டும் உடனே
ஆசறு நல்லநல்ல அவை நல்ல நல்ல 
அடியார் அவர்க்கு மிகவே.. 

- பில்லி, சூனியம், மாந்திரீகம், பரிகாரம், அது, இது - என நாம் - நம் மதி மயங்கி, அங்குமிங்கும் அலைந்து திரிந்து அல்லல் அடையாதபடிக்கு - ஞானகுருவாக நல்லவழி காட்டியருளியவர்.

திருஞானசம்பந்தப் பெருமான் - திருநல்லூர்ப் பெருமணத்தில் நம்பாண்டார் நம்பிகள் என்பாருடைய திருமகளை திருமணம் புரியுங்கால்- திருநீலநக்க நாயனார் திருமண மங்கலங்களை இயற்றினார்.  மற்றும் முருக நாயனார், சிவபாத இருதயர், நம்பாண்டார் நம்பி திருநீலகண்ட யாழ்ப்பாணர் முதலானோரும் பெருந்திரளான மக்களும்  கூடியிருந்தனர். அப்போது -


ஞானசம்பந்தர் - ''..காதல்மனையாளொடு சிவனடி சேர்வன்!..'' என்று திருஉளங் கொண்டார். இறைவனை நோக்கித் திருப்பதிகம் பாடியருளினார். 

அவ்வண்ணம் -  ஆங்கு அருட்ஜோதி மூண்டெழுந்தது.  

அதனுள் சிவத்தினைக் காட்டிய ஞானசம்பந்தர், திருமணம் காணவந்தார் எல்லாருக்கும் பஞ்சாட்சர மந்திரத்தினை ஓதுவித்தார். 

தம் மனையாளின் திருக்கரம் பற்றியபடி - ஜோதியினுள் பிரவேசிக்க -  அனைவரும் சிவஜோதியுள் கலந்து  சிவசாயுஜ்யம் அடைந்தனர். 

இன்று  - வைகாசி மூலம். திருஞானசம்பந்தப் பெருமான் சிவசாயுஜ்யம் பெற்ற நாள். சிவாலயங்களில் இறையன்பர்கள்  குருபூஜை அனுசரித்து சிவதரிசனம் செய்வர். 

நாமும் திருஞானசம்பந்தப் பெருமானை வணங்கி இறையருள் பெறுவோம்.

திருஞானசம்பந்தப் பெருமானின் திருவடிகளைத் 
தலைமேற் கொள்வோம்!..

குரு பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி, ராகுகேதுபெயர்ச்சி - 
என்று மனம் தடுமாறாமல் 
திருஞான சம்பந்தப்பெருமான் - தம் தமிழ் கொண்டு, 
நமக்குக் காட்டி அருளிய தடத்தினைப் பற்றிக் கொண்டு 
பிறவி எனும் பெருங்காட்டினைக் கடப்போம்!..

காதலாகிக் கசிந்து கண் ணீர் மல்கி
ஓதுவார் தமை நன்னெறிக் குய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொரு ளாவது
நாதன் நாமம் நமசிவாயவே. (3/49/1)  

திருச்சிற்றம்பலம்!...

ஞாயிறு, மே 26, 2013

உள்ளம் உருகுதையா!...

"அழகென்ற சொல்லுக்கு முருகா!..." 

அதிகாலை வேளையில் கணீர் என்று  ஒலிக்கும் ஈடு இணை இல்லாத பாடல். கேட்கும் போதே பக்தி வெள்ளத்தில் நம்மை ஆழ்த்தும் குரல்.


அந்தக் குரலுக்கு சொந்தக்காரர் -   - இன்று நம்மிடையே இல்லை.

மண்னுலக மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்ற திரு.T.M.சௌந்தரராஜன் அவர்கள்  - விண்ணுலக வாழ்வினை எய்தி விட்டார்.

"முத்தைத்தரு பத்தித் திருநகை.." என முதல் அடி எடுத்த அருணகிரி நாதரின் திருப்புகழ் - அதற்கு முன் சாதாரண மக்களில் எத்தனை பேருக்குத் தெரியும்!... 

"உள்ளம் உருகுதையா.." என முருகன் மேல் பக்தி கொள்ள வைத்ததே இவருடைய குரல் தான் என்றால் அது மிகை ஆகாது. 

அது மட்டுமா!... அன்பும் பாசமும் தேசபக்தியும்  கூட - இவருடைய குரலின் வழியே அறியப்பட்டன.

இவரே சிவாஜிகணேசன்... இவரே எம்.ஜி.ஆர்....  யார் பாடுகிறார்கள்.. யார் நடிக்கிறார்கள்... என்று பிரித்தறிய முடியாத குரல் வளம். 

நடிகர்களின் குரலாகவே மாறிவிடும் தனித்தன்மை வாய்ந்தது இவருடைய வெங்கலக்குரல். ஒவ்வொரு பாடல்களும் முத்துக்கள்.  


தமிழை உச்சரித்துப் பாடுவதில்  இவருக்கு இணை இவர்தான். ஆண்மையான குரல் வளம்!.. இவருடைய குரல் வளத்திற்கும் இவர் இசை உலகில் செய்த சாதனைக்கும் - கிடைத்த அங்கீகாரம் போதுமான அளவு இல்லை என்றே கூற வேண்டும். தமிழ் திரை உலகு  தன்னை சரியாகப் போற்றவில்லை என்கிற வருத்தம் கூட மனதில் இருந்ததுண்டு. 

பெருந்திறமையாளர்கள் இருக்கும் போது அவர்தம் அருமை யார்க்கும்  புரிவதில்லை. இதற்கு இவர் மட்டும் விதிவிலக்கா?.. இனி இவர் போல யார் என்று ஊர் சொல்லும்!..

ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை - என நாம் ஆறுதல் அடைவோம்!..

பூத உடல் மறையலாம். அவருடைய புகழ் என்றென்றும் மறையாது.  

தென் பொதிகைத் தென்றலாய் என்றென்றும் இவர் பாடிய பாடல்கள் நம் இதயங்களை வருடிக் கொண்டே இருக்கும். இவரும் எந்நாளும் நம்முடன் வாழ்ந்து கொண்டே இருப்பார். 

இன்னொருவர்  இவரைப் போல  இனி பிறக்கப் போவதில்லை. அவரது கணீரென்ற குரல் நம் மனங்களிலிருந்து என்றுமே விலகாது.... 


கவியரசர் கண்ணதாசன் இயற்றிய கிருஷ்ண கானத்தில் "புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே.." என்று இவரது குரல் வழிப்பிறந்த  பாடல் மாணிக்கப் பதக்கம் போன்றது!.

 "நான் நிரந்தரமானவன் அழிவதில்லை!...
எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை" 

- என்ற கவியரசர் கண்ணதாசனின் வரிகள் T.M.சௌந்தரராஜன் அவர்களுக்கும் பொருந்தும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

தொண்ணூறு வயதினைக் கடந்து  பெருவாழ்வு வாழ்ந்தவர். 

முருகன் திருக்கோயில்களில் வைகாசிப் பெருவிழா வைபவங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் - 

முருக பக்தர்கள் தம் மனங்கள் அதிரக் கூடாது என்று விசாகம் நிறைந்த மறுதினம் - 

"எனக்கும் இடம் உண்டு.. 
அருள் மணக்கும் முருகன் 
மலரடி நிழலில் 
எனக்கும் இடம் உண்டு.. "

- என்று முருகன் திருவடி நிழலில் பேரமைதி கொள்ளச் சென்று விட்டார். 

தேவலோகத்தில் இருந்து பாரிஜாத மலர் கொணர்வதற்காக கிளியாக வடிவெடுத்த அருணகிரி நாதர் இறுதியில் கிளி வடிவத்துடனே முருகனிடம் அடைக்கலம் ஆவதாக - இவர் நடித்த "அருணகிரிநாதர்" திரைப்படம் நிறைவடையும். 

நம்மில் பலரை முருக பக்தர்களாக்கிய இவரும் அவ்வண்ணமே நிலை பெற எல்லாம் வல்ல முருகப்பெருமான் திருவருள் புரிவாராக!

இனி - திருச்செந்தூரின் காற்றோடும் கடல் அலைகளோடும் கலந்திருப்பார்.

காலத்தை வென்ற திரை இசைப்பாடல்களின் மூலம் திரு.T.M.சௌந்தரராஜன் அவர்கள்  புகழுடம்பாக நம்மிடையே - வாழ்ந்து கொண்டே இருப்பார்.

ஐயா! உங்கள் குரல் வழியே -

''அழகென்ற சொல்லுக்கு முருகா!..'' என பக்தி பிறந்தது.
''மலர்களைப்போல தங்கை உறங்குகின்றாள்!..''  என பாசம் பிறந்தது. 
''நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே!..'' என அன்பு பிறந்தது. ''சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா!..'' என அறிவு பிறந்தது 
''அச்சம் என்பது மடமையடா!..'' என வீரம் பிறந்தது.
''நான் பிறந்த நாட்டுக்கு எந்த நாடு பெரியது!..'' என தேசபக்தியும் பிறந்தது.

இன்று தாங்கள் எம்முடன் இல்லை.. விழிகளில் கண்ணீர் நிறைந்தது.

தங்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறேன். 

இறை உள்ளளவும் இசை உள்ளளவும் 
தமிழ் உள்ளளவும் தமிழர் உள்ளளவும் 
உங்கள் திருப்பெயர் நிலைத்து இருக்கும்!...

வெள்ளி, மே 24, 2013

கந்தன் பிறந்தான்

வைகாசி விசாகம்அருவமும் உருவமும் ஆகி அநாதியாய் பலவாய் ஒன்றாய்
பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனியாகி
கருணைகூர் முகங்கள் ஆறும்கரங்கள் பன்னிரண்டுங் கொண்டு
ஒருதிருமுருகன் வந்தாங்கு உதித்தனன் உலகம் உய்ய!....
                                                                                                               - கந்தபுராணம்.

உலகம் உய்வடையும் பொருட்டு திருமுருகன் உதித்த நாள் இன்று.  


சேல்பட்டழிந்தது செந்தூர் வயற்பொழில் தேங்கடம்பின்
மால்பட்டழிந்தது பூங்கொடியார் மனம் - மாமயிலோன்
வேல்பட்டழிந்தது சூரனும் வேலையும் வெற்பும் அவன்
கால்பட்டழிந்தது இங்கு என்தலைமேல் அயன் கையெழுத்தே!...
                                                                                                             - கந்தர் அலங்காரம்.

சேல் பட்டு அழிந்த வயற்பொழில் திருச்செந்தூர் வேலனின் கால் நம் தலை மேல் பட்டால் -  

நம் தலைமேல் நான்முகன் இட்ட கையெழுத்து அழிந்து போகும் என்று நமக்கு நல்லவழி காட்டுகின்றார் அருணகிரிநாதர்.

விழிக்குத் துணை திருமென்மலர் பாதங்கள் மெய்ம்மை குன்றா
மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள் முன்பு செய்த
பழிக்குத் துணை அவன் பன்னிரு தோளும் பயந்த தனி 
வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே!...
                                                                                                       - கந்தர் அலங்காரம்.

விழிக்குத் துணையாகும்  திருமென்மலர்ப் பாதங்கள் நாம் செல்லும் வழிக்கும் துணையாகும்!... 

முருகனின் திருப்பாதங்கள் - நம்முடன் வழித்துணையாக வருவதால் - நாம் நல்ல வழியினில் ''தான்'' செல்லமுடியும்!...

எனவே -

நம்முள் - நன்மைகள் பெருகவும், தீமைகள் விலகவும் திருமுருகனின் திருவடிகளில் தலை வைத்து வணங்குவோம்!...

வேதனை எல்லாம் தூளாகும்!...
வேலும் மயிலும் துணையாகும்!...

வியாழன், மே 23, 2013

ஸ்ரீ வீரமாகாளி

அன்னை ஆதிபராசக்தி - சகல லோகங்களையும் பெற்றெடுத்த தாய்.

ஆனாலும் அவள் நித்ய கன்னி. இப்படித்தான் சாத்திரங்கள் சொல்லுகின்றன.


பூரணி புராதனி சுமங்கலை சுதந்தரி
புராந்தகி த்ரயம்பகி எழில்
புங்கவி விளங்குசிவ சங்கரி சகஸ்ர தள
புஷ்பமிசை வீற்றிருக்கும்
நாரணி மனாதீத நாயகி குணாதீத
நாதாந்த சத்தி என்று உன்
நாமமே உச்சரித்திடும் அடியார் நாமமே
நான் உச்சரிக்க வசமோ
ஆரணி சடைக்கடவுள் ஆரணி எனப்புகழ
அகிலாண்ட கோடி ஈன்ற அன்னையே 
பின்னையுங் கன்னிஎன மறைபேசும்
ஆனந்தரூபமயிலே
வாரணியும் இரு கொங்கை மாதர்மகிழ் கங்கைபுகழ்
வளமருவு தேவை அரசே
வரைராசனுக்கிரு கண்மணியாய் உதித்த மலை
வளர்காதலிப்பெண் உமையே!...

என்று தாயுமான சுவாமிகள் விவரிக்கும் - அம்பிகையைத்தான்

பொறி அரவு தாங்கிவரு புவனம் ஈரேழையும்
புத்தேளிர் கூட்டத்தையும், பூமகளையும்
திகிரி மாயவனையும் அரையில்
புலியாடை உடையானையும்
முறை முறைகளாய் ஈன்ற முதியவளாய்ப்
பழைமை முறைமை தெரியாத நின்னை-
மூவுலகில் உள்ளவர்கள் வாலை என்று அறியாமல்
மொழிகின்றது ஏது சொல்வாய்?

என்றும்,

நீடாழி உலகங்கள் யாவையும் நேயமாய் நின்
உதர பந்தி பூக்கும் நின்மலீ அகிலங்களுக்கு அன்னை என்று ஓதும்

என்றும் - அபிராபிபட்டர்  பக்திப் பரவசமாய் பாடி -  உருகுகின்றார். 

இப்படி அன்னையாய் பின்னையும் கன்னியாய் விளங்கும் பராசக்தி - சின்னஞ்சிறு பெண்ணாக வந்து எதிர் நின்றால் - எப்படியிருக்கும்!...

வாருங்கள் செல்வோம் - அப்படி சின்னஞ்சிறு பெண்ணாக வந்து ஆட்கொண்ட அன்னையின் ஆலயம் அமைந்துள்ள நாககுடி கிராமத்திற்கு.. 

நாககுடி -  தஞ்சை மாவட்டத்தில் - ஸ்ரீ சுவாமிநாதப்பெருமான் திருக்கோயில் கொண்டுள்ள சுவாமிமலைக்கு வடக்கே 2 கி.மீ. தொலைவில் திருவைகாவூர் செல்லும் வழியில் உள்ளது. ஊரினுள் நுழையுமுன்பாகவே அன்னையின் திருக்கோயில்.


காலகாலமாக  வீற்றிருந்த தலமாக, அன்னை வடதிசை நோக்கியவளாக கொலு வீற்றிருக்கின்றாள்.. 

அன்னையின் வலப்புறம் வலம்புரி விநாயகர் சந்நிதியும் வேம்பும் நாகம் குடியிருக்கும் புற்றும் நாகர் திருமேனி பிரதிஷ்டைகளும் அமைந்துள்ளன. கோயிலின் தென்புறம்  பழவாறு எனும் நீரோடை. 

திருக்கோயிலினுள் அன்னையின் இருபுறமும் ஸ்ரீ மதுரை வீரனும், ஸ்ரீ கருப்ப ஸ்வாமியும் விளங்குகின்றனர். அன்னையின் எதிரில் சிம்ம வாகனமும் பலிபீடமும் திரிசூலமும் இலங்குகின்றன.

சந்நிதியினுள் ''..யான் இருக்க உனக்கு என்ன குறை!..'' எனும் அருட் பார்வையினளாக அன்பரின் குறைகளை எல்லாம் தவிடு பொடியாக்கித் தகர்க்கும் தயாபரியாக வீற்றிருக்கின்றாள் அன்னை. 

அவளைக் கண்ட மாத்திரத்தில் நம் அல்லல் எல்லாம் அனல் பட்ட மெழுகாக உருகி ஓடுகின்றன. 

என்ன சொல்வது!... எப்படிச் சொல்வது!... என் சிந்தை எல்லாம் அவளேயாக ஆகி நிற்கும் அற்புதத்தினை விவரிக்க ஒரு வார்த்தையும் கிடையாது!... எனக்கு இன்னொரு தாயாகி நிற்பவள். எனக்கு மட்டுமல்ல... 

இவளைத் தரிசிக்கும் எல்லாருக்கும் அப்படியே!... இவளுடைய சந்நிதியில் சஞ்சலங்களுக்கும் சலனங்களுக்கும் வேலையே இல்லை. குறை என்று சொல்லி ஒருவர் வாசற்படியேறி விட்டாலே போதும்!.. வசந்தம் தான் அவர்தம் வாழ்வில்... கண்கூடாகக் காணும் உண்மை இது!..


இங்கே அவள் திருப்பெயர் - ஸ்ரீ வீரமாகாளியம்மன். 

அன்னைக்கு வருடந்தோறும் பற்பல விசேஷங்கள். மாதந்தோறும் அமாவாசை மற்றும் பெளர்ணமி பூஜைகள். ஆடிப்பூரம் மற்றும் நவராத்திரி சிறப்பு வழிபாடுகள். தைமாதம் திருவாதிரையில் காவிரியில் நீரெடுத்து வந்து கலசபூஜையும் சம்வஸ்த்ராபிஷேகமும் வெகு சிறப்பாக நிகழ்வுறும். 

சித்திரையில் அக்னி நட்சத்திர காலம் நிறைவுறும் வேளையில் - அடுத்து வரும் வெள்ளிக்கிழமையன்று காப்பு கட்டி, அன்றிரவு புஷ்ப ரதத்தில் திருவீதியுலா நடைபெறும். சனிக்கிழமையன்று சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை வைபவம் நமது உபயமாக நடைபெறும். 

மூன்றாம் நாளாகிய ஞாயிறன்று காலையில், காவிரியில் தீர்த்தம் எடுத்து வந்து ''சக்தி கரகம்'' ஸ்தாபனம் செய்து அதில் அம்பாள் ஆவாஹனத்துடன்  பிரம்பு ஏந்தியபடி பிரதானமாக முன்வர - அக்கினி கொப்பரையும், சக்தி சூலமும் கருப்பசாமி வேலும் ஆரவாரித்து உடன் வருவர். 

தொடர்ந்து நூற்றுக்கணக்காக பெண்களும் ஆண்களும் குழந்தைகளுமாக பால்குடம் ஏந்தி ஊர்வலமாக வந்து மதியம் பெரிய அளவில் அபிஷேகம் செய்து மகிழ்கின்றனர்.  அச்சமயம் அன்னதானமும் கஞ்சி வார்த்தலும் வெகு சிறப்பாக நடைபெறும். 

நிறைவாக,  மாலையில்  - அன்னைக்கு சந்தனக்காப்பு அலங்காரமும்  மகாதீப ஆராதனையும் நிகழ்வுறும். 

ஐந்தாம் நாள் செவ்வாய் அன்று மஞ்சள் நீராட்டு. காப்பு அவிழ்த்து கரக விசர்ஜனம் - என விடையாற்றியுடன் வருடாந்திரத் திருவிழா நிறைவுறும். 

அன்னையின் சந்நிதியில் எப்போதெல்லாம் - 

கலச பூஜையுடன் மகா அபிஷேகம் நடைபெறுகின்றதோ - அப்போதெல்லாம் காவிரியில் இருந்து தீர்த்தம் எடுத்து வரும் கைங்கர்யம் அடியேனுடையது.  சென்னியில் சேவடி வைத்து  என்னையும் ஒருவன் ஆக்கிய - அன்னை - தீர்த்த கைங்கர்யத்தினை தலைமுறைக்குமாகப் பிரசாதித்தது அருளினள். 

தற்சமயம் கடல் கடந்து இருப்பதால் -  என் மகன், சிவஸ்ரீகாந்த் - காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தம் எடுத்து வரும் கைங்கர்யத்தினை உவப்புடன் நிறைவேற்றுகின்றான். 

அன்னை வீரமாகாளியின் அருள் - பெருமை அளவிடற்கரியது. பெரிதாகத் தவம் ஏதும் செய்ததில்லை. ஆயினும் நானும் ஒரு பிள்ளையாய் அவள் சந்நிதியினுள்  நின்று - அவள் எனக்கு இட்ட கட்டளையாய், அவளுக்கு செய்யும் அபிஷேக அலங்கார ஆராதனைகளை அன்புடன் ஏற்றுக்கொண்டு அருள் புரிந்தவள்...


அபிஷேகநேரத்தில் நிதர்சனமாக ''வாலை'' என,  சின்னஞ்சிறு பெண்ணாகவே அவள் தோன்றுவாள்!..

அவளுக்கு நானும் ஒரு பிள்ளை. எங்கள் குடும்பத்தில் அவளும் ஒரு பிள்ளை.

திருக்கோயில்,  சீரிய முறையில்  திரு.வெ.பன்னீர்செல்வம் அவர்களாலும் ஆலய நிர்வாகக் குழுவினராலும் நிர்வகிக்கப்படுகின்றது.

திரு. பன்னீர்செல்வம் - என் மனைவியின் அக்காள் கணவர். இவரே விரதம் இருந்து சக்தி கரகம் ஏந்தி வருவார்.

அன்னை ஸ்ரீ வீரமாகாளியின் சித்திரைப் பெருவிழா நாளை வெள்ளிக்கிழமை (24-5) தொடங்குகின்றது. அன்று இரவு புஷ்ப ரதம். ஞாயிறு அன்று காலை சக்தி கரகத்துடன் பால்குட வீதியுலாவும், மாலையில் சந்தனக்காப்பும் நடைபெறும்.

ஸ்ரீ வீரமாகாளியம்மன் எல்லாருக்கும் துணையிருப்பாள். வேண்டியனவற்றை நிறைவேற்றித் தருவாள்..

அம்பிகையைச் சரணடைந்தால் அதிக வரம் பெறலாம்!...

ஞாயிறு, மே 19, 2013

மானம்பாடி

பழைமையான திருக்கோயில் பாதுகாக்கப்படவேண்டும்!...

கங்கை முதல் கடாரம் வரை படை நடத்திச் சென்று - வென்று தமிழர்களின் புகழை உலகினுக்கு எடுத்துக்காட்டியவன், மாமன்னன் ராஜராஜ சோழனின் அருந்தவப்புதல்வன் ராஜேந்திர சோழன். 

தந்தை ராஜராஜ சோழன் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் போது - ராஜேந்திர சோழன் (1014ஆம் ஆண்டில்) இளவரசர் பட்டம் ஏற்றார். அந்த அளவில் அடுத்த ஆண்டுடன் ஆயிரம் ஆண்டுகள் நிறைவடைகின்றன. அதற்காக ராஜேந்திர சோழனுக்கு நாம் அளிக்கும் பரிசு - அவர் எழுப்பிய ஒரு கோயிலை இடிப்பது!..

விவரம்  அறிய மேற்கொண்டு வாசியுங்கள்!...

மன்னன் ராஜேந்திர சோழன் உருவாக்கிய கோயில் கும்பகோணத்தில் இருந்து சென்னை செல்லும் நெடுஞ்சாலையில் திருப்பனந்தாளுக்கு அருகில் மானம்பாடி எனும் ஊரில் நெடுஞ்சாலையின் ஓரமாக உள்ளது. அதுதான் இபோது அந்தக் கோயிலுக்கு ஆபத்தாகி விட்டது.  

தேசிய நெடுஞ்சாலையின் விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக  (சென்னை) விக்ரவாண்டி - தஞ்சை சாலையினை அகலப்படுத்தும் பணியில் இந்தக் கோயிலின் பெரும் பகுதியினை தகர்த்து தரை மட்டமாக்கி விட்டு,  அதன் ஊடாக நெடுஞ்சாலையின் விரிவாக்கத்தினை வடிவமைத்துள்ளனர். விஷயம் அறிந்த சமூக ஆர்வலர்களும் வரலாற்று ஆய்வாளர்களும் இறையன்பர்களும் இதனைத் தடுத்து நிறுத்த முயற்சிக்கின்றனர்.


இந்தக் கோயிலில் பத்துக்கும் மேலான கல்வெட்டுகள் உள்ளன. ராஜராஜ சோழனும் அவர் தம் மனைவியரும், ராஜேந்திர சோழனும் அவர் தம் மனைவியரும் நடராஜப் பெருமானை வணங்குவது போன்ற அற்புதமான கலைப்படைப்பு இங்குள்ளது பெருமைக்குரிய செய்தியாகும்.

ராஜேந்திர சோழன் தந்தையைப் போலவே மிகப் பெரிய ஆலயத்தை எழுப்பியவன்.  கங்கை வரை படை நடத்திச்சென்று கங்கை நீரைக் கொண்டு வந்து ஏரியில் நிரப்பியவன். தமிழக மன்னர்களில் வீரம் மிகுந்தவன். தமிழர் தம் நலனே தனது உயிர் மூச்சு எனக் கொண்டு வாழ்ந்தவன். 

மாமன்னன் ராஜராஜசோழன் தன் மனைவியருடனும் குடும்பத்தினருடனும் பெருமானை வணங்கும் சித்திரம் ஒன்று தஞ்சைப்பெருங்கோயிலினுள் தீட்டப்பட்டுள்ளது. அந்தச் சித்திரம் இந்தக்கோயிலில் சிற்பமாக உள்ள அற்புதத்தினை அன்புக்குரிய எழுத்தாளர் திரு.பாலகுமாரன் அவர்கள் சக்தி விகடன் - ஆலயம் தேடுவோம் பகுதியில்  விரிவாக எழுதியுள்ளார். அத்துடன் அந்தக் கோயிலின் அனைத்து விவரங்களையும் நம் கண் முன்னே நிறுத்தியுள்ளார். 


இந்தக் கோயிலில் உள்ள ராஜேந்திர சோழனின் மெய்க்கீர்த்தியுடன் தொடங்கும் ஐந்தாம் ஆண்டுக் கல்வெட்டு - இந்தத் திருக்கோயில்  கயிலாச நாதர் கோயில் என்றும் ஊரின்  பெயர் இலச்சிக்குடி எனும் வீரநாராயணபுரம் என்றும் தெரிவிப்பதாகவும் திரு.பாலகுமாரன் கூறுகின்றார். 


கோயில் இன்றைக்கு மிகவும் சிதிலமாகி இருப்பினும் காப்பாற்றப்பட வேண்டிய கலைப்பொக்கிஷம் என்பதில் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. ஸ்ரீராஜராஜ சோழனையும் ஸ்ரீராஜேந்திர சோழனையும் ஒருங்கே காணும் பாக்கியத்தினை நமது சந்ததியினரும் பெற வேண்டும். 

ஆயிரம் வருடப் பழைமையான கலைப்படைப்பினை இதுவரை பாதுகாக்கத்தான் இல்லை!... நெடுஞ்சாலை வசதிக்காக அதனை இடித்துத் தரை மட்டம் ஆக்க வேண்டுமா?.. அதுவா நமது நன்றிக் கடன்?.... 

''...ஒட்டு மொத்த தமிழகத்தின் கவனத்தையும் தன்பக்கம் ஈர்த்துள்ளார் மானம்பாடி ஸ்ரீநாகநாதஸ்வாமி. சிவனடியார்களும் இறையன்பர்களும் ஒருங்கிணைந்து திருக்கோயில் பாதுகாக்கப்படுவதற்காக தொடர் கூட்டுப் பிரார்த்தனை செய்ய முன்வரவேண்டும். எது எதற்கோ ஒன்று கூடும் மக்கள் இதற்கு ஒன்றுபட மாட்டார்களா?.... ''

மேற்குறித்த கருத்தினை நாளிதழ் ஒன்றில் பதிவிட்டேன். ஆனால் அது மக்களின் பார்வைக்கு வெளியிடப்படவில்லை. அதனால் என்ன!... 

நாம் ஒவ்வொருவரும் உளமார, 

''..பழைமையான கோயிலைப் பாதுகாத்து அருளவேண்டும்!..'' -

என அந்தப் பரமனிடமே வேண்டிக்கொள்வோம்!.. 

நம் வேண்டுகோளினை இறைவன் நிச்சயம் நிறைவேற்றி அருள்வார்!... 

Facebook -லும் கருத்தினைப் பதிவிட்டு பகிர்ந்துள்ளேன். 


கோயில் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியத்தினை  நமது வலைத்தள அன்பர்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். 

அத்துடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள ''Stop Demolishing 1000 Years Temple'' எனும் இணைப்பில் மானம்பாடி திருக்கோயில் பாதுகாக்கப்படுவதற்காக -

உங்களது மேலான ஆதரவினைப் பதிவு செய்யுமாறும் அனைவரையும் தாழ்ந்து பணிந்து வேண்டிக் கொள்வதுடன், 

இதில் பங்கு பெறும் அனைவருக்கும் மனப்பூர்வமான நன்றியினையும் வணக்கத்தினையும் தெரிவித்துக் கொள்கின்றேன்!...


மானம்பாடி ஸ்ரீநாகநாதர் கோயிலைப் பற்றி சக்தி விகடனில் வெளியான  திரு.பாலகுமாரன் அவர்களின் ஆக்கம்.


தொல்லியல் சிறப்பு வாய்ந்த மானம்பாடி நாகநாத சுவாமி கோவில் என்ற தலைப்பில்  தினமலர் நாளிதழில் வெளியான சிறப்புக் கட்டுரை..


பரத கண்டத்தின் பாதியை மட்டுமல்லாமல் கடல் கடந்தும் பல இடங்களைத் தன் வாளின் வலிமையால் வெற்றி கொண்ட ராஜேந்திர சோழனின் பெருமையை  -

நாம் கொண்டாட மறந்தோமானால் மறுத்தோமானால், நாம் தமிழையும் தமிழ் மன்னனையும் தமிழ் மண்ணின் வரலாற்றை புறக்கணித்து நின்றோம் என்கிற அவலம் மட்டுமே மிஞ்சும்!...