நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, மே 19, 2013

மானம்பாடி

பழைமையான திருக்கோயில் பாதுகாக்கப்படவேண்டும்!...

கங்கை முதல் கடாரம் வரை படை நடத்திச் சென்று - வென்று தமிழர்களின் புகழை உலகினுக்கு எடுத்துக்காட்டியவன், மாமன்னன் ராஜராஜ சோழனின் அருந்தவப்புதல்வன் ராஜேந்திர சோழன். 

தந்தை ராஜராஜ சோழன் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் போது - ராஜேந்திர சோழன் (1014ஆம் ஆண்டில்) இளவரசர் பட்டம் ஏற்றார். அந்த அளவில் அடுத்த ஆண்டுடன் ஆயிரம் ஆண்டுகள் நிறைவடைகின்றன. அதற்காக ராஜேந்திர சோழனுக்கு நாம் அளிக்கும் பரிசு - அவர் எழுப்பிய ஒரு கோயிலை இடிப்பது!..

விவரம்  அறிய மேற்கொண்டு வாசியுங்கள்!...

மன்னன் ராஜேந்திர சோழன் உருவாக்கிய கோயில் கும்பகோணத்தில் இருந்து சென்னை செல்லும் நெடுஞ்சாலையில் திருப்பனந்தாளுக்கு அருகில் மானம்பாடி எனும் ஊரில் நெடுஞ்சாலையின் ஓரமாக உள்ளது. அதுதான் இபோது அந்தக் கோயிலுக்கு ஆபத்தாகி விட்டது.  

தேசிய நெடுஞ்சாலையின் விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக  (சென்னை) விக்ரவாண்டி - தஞ்சை சாலையினை அகலப்படுத்தும் பணியில் இந்தக் கோயிலின் பெரும் பகுதியினை தகர்த்து தரை மட்டமாக்கி விட்டு,  அதன் ஊடாக நெடுஞ்சாலையின் விரிவாக்கத்தினை வடிவமைத்துள்ளனர். விஷயம் அறிந்த சமூக ஆர்வலர்களும் வரலாற்று ஆய்வாளர்களும் இறையன்பர்களும் இதனைத் தடுத்து நிறுத்த முயற்சிக்கின்றனர்.


இந்தக் கோயிலில் பத்துக்கும் மேலான கல்வெட்டுகள் உள்ளன. ராஜராஜ சோழனும் அவர் தம் மனைவியரும், ராஜேந்திர சோழனும் அவர் தம் மனைவியரும் நடராஜப் பெருமானை வணங்குவது போன்ற அற்புதமான கலைப்படைப்பு இங்குள்ளது பெருமைக்குரிய செய்தியாகும்.

ராஜேந்திர சோழன் தந்தையைப் போலவே மிகப் பெரிய ஆலயத்தை எழுப்பியவன்.  கங்கை வரை படை நடத்திச்சென்று கங்கை நீரைக் கொண்டு வந்து ஏரியில் நிரப்பியவன். தமிழக மன்னர்களில் வீரம் மிகுந்தவன். தமிழர் தம் நலனே தனது உயிர் மூச்சு எனக் கொண்டு வாழ்ந்தவன். 

மாமன்னன் ராஜராஜசோழன் தன் மனைவியருடனும் குடும்பத்தினருடனும் பெருமானை வணங்கும் சித்திரம் ஒன்று தஞ்சைப்பெருங்கோயிலினுள் தீட்டப்பட்டுள்ளது. அந்தச் சித்திரம் இந்தக்கோயிலில் சிற்பமாக உள்ள அற்புதத்தினை அன்புக்குரிய எழுத்தாளர் திரு.பாலகுமாரன் அவர்கள் சக்தி விகடன் - ஆலயம் தேடுவோம் பகுதியில்  விரிவாக எழுதியுள்ளார். அத்துடன் அந்தக் கோயிலின் அனைத்து விவரங்களையும் நம் கண் முன்னே நிறுத்தியுள்ளார். 


இந்தக் கோயிலில் உள்ள ராஜேந்திர சோழனின் மெய்க்கீர்த்தியுடன் தொடங்கும் ஐந்தாம் ஆண்டுக் கல்வெட்டு - இந்தத் திருக்கோயில்  கயிலாச நாதர் கோயில் என்றும் ஊரின்  பெயர் இலச்சிக்குடி எனும் வீரநாராயணபுரம் என்றும் தெரிவிப்பதாகவும் திரு.பாலகுமாரன் கூறுகின்றார். 


கோயில் இன்றைக்கு மிகவும் சிதிலமாகி இருப்பினும் காப்பாற்றப்பட வேண்டிய கலைப்பொக்கிஷம் என்பதில் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. ஸ்ரீராஜராஜ சோழனையும் ஸ்ரீராஜேந்திர சோழனையும் ஒருங்கே காணும் பாக்கியத்தினை நமது சந்ததியினரும் பெற வேண்டும். 

ஆயிரம் வருடப் பழைமையான கலைப்படைப்பினை இதுவரை பாதுகாக்கத்தான் இல்லை!... நெடுஞ்சாலை வசதிக்காக அதனை இடித்துத் தரை மட்டம் ஆக்க வேண்டுமா?.. அதுவா நமது நன்றிக் கடன்?.... 

''...ஒட்டு மொத்த தமிழகத்தின் கவனத்தையும் தன்பக்கம் ஈர்த்துள்ளார் மானம்பாடி ஸ்ரீநாகநாதஸ்வாமி. சிவனடியார்களும் இறையன்பர்களும் ஒருங்கிணைந்து திருக்கோயில் பாதுகாக்கப்படுவதற்காக தொடர் கூட்டுப் பிரார்த்தனை செய்ய முன்வரவேண்டும். எது எதற்கோ ஒன்று கூடும் மக்கள் இதற்கு ஒன்றுபட மாட்டார்களா?.... ''

மேற்குறித்த கருத்தினை நாளிதழ் ஒன்றில் பதிவிட்டேன். ஆனால் அது மக்களின் பார்வைக்கு வெளியிடப்படவில்லை. அதனால் என்ன!... 

நாம் ஒவ்வொருவரும் உளமார, 

''..பழைமையான கோயிலைப் பாதுகாத்து அருளவேண்டும்!..'' -

என அந்தப் பரமனிடமே வேண்டிக்கொள்வோம்!.. 

நம் வேண்டுகோளினை இறைவன் நிச்சயம் நிறைவேற்றி அருள்வார்!... 

Facebook -லும் கருத்தினைப் பதிவிட்டு பகிர்ந்துள்ளேன். 


கோயில் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியத்தினை  நமது வலைத்தள அன்பர்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். 

அத்துடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள ''Stop Demolishing 1000 Years Temple'' எனும் இணைப்பில் மானம்பாடி திருக்கோயில் பாதுகாக்கப்படுவதற்காக -

உங்களது மேலான ஆதரவினைப் பதிவு செய்யுமாறும் அனைவரையும் தாழ்ந்து பணிந்து வேண்டிக் கொள்வதுடன், 

இதில் பங்கு பெறும் அனைவருக்கும் மனப்பூர்வமான நன்றியினையும் வணக்கத்தினையும் தெரிவித்துக் கொள்கின்றேன்!...


மானம்பாடி ஸ்ரீநாகநாதர் கோயிலைப் பற்றி சக்தி விகடனில் வெளியான  திரு.பாலகுமாரன் அவர்களின் ஆக்கம்.


தொல்லியல் சிறப்பு வாய்ந்த மானம்பாடி நாகநாத சுவாமி கோவில் என்ற தலைப்பில்  தினமலர் நாளிதழில் வெளியான சிறப்புக் கட்டுரை..


பரத கண்டத்தின் பாதியை மட்டுமல்லாமல் கடல் கடந்தும் பல இடங்களைத் தன் வாளின் வலிமையால் வெற்றி கொண்ட ராஜேந்திர சோழனின் பெருமையை  -

நாம் கொண்டாட மறந்தோமானால் மறுத்தோமானால், நாம் தமிழையும் தமிழ் மன்னனையும் தமிழ் மண்ணின் வரலாற்றை புறக்கணித்து நின்றோம் என்கிற அவலம் மட்டுமே மிஞ்சும்!...

5 கருத்துகள்:

 1. நண்பர்களிடமும் பகிர்கிறேன்... நன்றி ஐயா...

  பதிலளிநீக்கு
 2. ஒரு சிவாலயம் காக்கப்பட்டால் நம் சந்ததி காக்கப்படும்.அத்துடன் தமிழனின் பழைமையும் போற்றப்பட வேண்டும். அந்த வகையில் தோள் கொடுக்கும் அனைவரையும் தாள் பணிவோம்!...

  பதிலளிநீக்கு
 3. எங்கள் அன்பு நண்பர் திரு. ஜெயகுமார் அவர்களை வருக.. வருக..என வரவேற்பதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன்!..

  பதிலளிநீக்கு
 4. மானம்பாடி கோயில் பாதுகாக்கப் பட்டே ஆக வேண்டும் அய்யா. முக நூலில் பகிர்கின்றேன் அய்யா. நன்றி

  பதிலளிநீக்கு
 5. தங்களின் மேலான ஆதரவுக்கு நன்றி ஐயா!...மானம்பாடி நம் மரபின் அடையாளச் சின்னம்.. காலக் கோளாறுகளினால் இதைப் போன்ற பெருமை வாய்ந்த பல கோயில்களை மறந்தோம்!... இத்தகைய கலைப் பெட்டகங்களை - இனியும் தவற விட்டு விட்டால் - தமிழன் என்று தலை நிமிர்வதற்கு ஒன்றும் இருக்காது..

  பதிலளிநீக்கு