நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

மானம்பாடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மானம்பாடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, ஆகஸ்ட் 18, 2017

இற்றைத் திங்கள்

மானம்பாடி ஸ்ரீ நாகநாதர் திருக்கோயிலின் இன்றைய நிலை:-
தொடர்புடைய பதிவுகள் -

அற்றைத் திங்கள் 1

அற்றைத் திங்கள் 2

***

நான் பயணித்த பேருந்து மானம்பாடியில் நின்றது..

இங்கே இறங்கிக் கேளுங்கள்.. சொல்லுவார்கள்.. பக்கம் தான்!..

விவரம் கூறிய நடத்துனர் இறக்கி விட்டார்.. பேருந்து புறப்பட்டுச் சென்றது..

இன்றைய மானம்பாடியில் -
ராஜேந்திர சோழன் எழுப்பிய கோயிலுக்கு
அருகிலுள்ள பேருந்து நிறுத்தத்தின் பெயர்

மாதா கோயில்!..

இப்படிப் பெயர் ஏற்படக் காரணம் -
நாகநாதர் ஆலயத்திற்கு வடபுறமாக நூறடி தொலைவில்
மிகச் சமீப காலத்தில் கட்டப்பட்டிருக்கும் கிறிஸ்தவ வழிபாட்டுத் தலம்...

பேர்கொண்ட மன்னனால் கட்டப்பட்டு
ஆயிரம் வருடங்களாக அங்கிருக்கும்
சிவன் கோயிலுக்கான பேருந்து நிறுத்துமிடம் -

சோழனின் பெயரால் இல்லை!..
அவன் எழுப்பிய கோயிலின் பெயரால் இல்லை!..

இதுவே மிகப்பெரிய சாட்டையடி..

கிறிஸ்தவ வழிபாட்டுத்தலம் கட்டப்படுவதற்கு முன்பாக
சிவாலயத்துக்கு அருகில் இருக்கின்ற பேருந்து நிறுத்தத்திற்கு என்ன பெயர்?..

அதை எல்லாம் விசாரிக்கும் மனநிலை எனக்கு இல்லை..

எதிரில் வந்த இளைஞரிடம் விசாரித்தேன்..

நாகநாதர் கோயிலுக்கு எப்படிச் செல்வது?..

சாலையின் தென்புறம் தெரிந்த மதிற்சுவரைச் சுட்டிக் காட்டினார்..

அதுதான் கோயில்.. - என்றார்..

அம்பாள் சந்நிதி
கோயில் கோபுரம் எதையும் காணவில்லையே!.. - எனக் கேட்டேன்..

அவர் சொன்னார் - அதைத்தான் இடித்துத் தரை மட்டமாக்கி விட்டார்களே!..

அதைக் கேட்டதும் மனம் திடுக்கிட்டது.. கண்களில் நீர் திரையிட்டது..

காலமகள் காப்பாற்றித் தந்த கலைச் செல்வங்களைக்
கை நழுவ விட்டோமே.. கை கழுவி விட்டோமே!..

நாம் மன்னிப்புக்கு உரியவர்கள் தானா?..

மனம் பேதலித்தது..

அந்த இடத்திலிருந்து கோயிலை நோக்கி என்னால் நடக்க முடியவில்லை..

கால்கள் தளர்ந்தன..
கால்கள் வலிக்கவில்லை ஆயினும் மனம் வலித்தது..
பரபரப்பான சாலையைக் கவனமாக கடந்தேன்..



இன்றைய நாளில் -
ஸ்ரீ நாகநாதர் கோயில் எனப்படும் ஸ்ரீ கயிலாய நாதர் திருக்கோயிலை நெருங்குவதற்குள் தொண்டையை அடைத்துக் கொண்டது துக்கம்..

மாமன்னன் ராஜேந்திர சோழன் இந்த சிவாலயத்தை எழுப்பும் போது
எப்படியிருந்ததோ இதன் தோற்றம்.. நாம் அறியோம்..

ஆனால், இன்றைக்கு?..

செங்கல் கொண்டு பிற்காலத்தில் கட்டப்பட்ட நுழைவாயில்..
அதுவும் பாளம் பாளமாக வெடித்திருந்தது..

சாதாரணமான மூங்கில் தட்டிகள் தான் கதவுகளாக இருக்கின்றன..
அவற்றில் பச்சை நிறத்தில் வலை ஒன்று பார்வை மறைப்பாக கட்டப்பட்டிருக்கின்றது..

நான் அங்கே சென்ற நேரத்தில் கோயிலின் முன்பாக சிலர் நின்றிருந்தனர்..

அவர்களுக்குள் வாக்கு வாதம்..

கோயிலுக்கு உள்ளே போகணும்!..

அதெல்லாம் முடியாதுங்க.. எங்களுக்கு வந்த உத்தரவு தான்..

அப்படி..ன்னா அதை காட்டுங்க!..

அதையெல்லாம் உங்க கிட்ட காட்டணும்..ன்னு அவசியமில்லை..
நாங்க இன்னது செய்யணும்..ன்னு சொல்றதுக்கு நீங்க யாரு?..

நான் சாமி கும்பிடப் போறேன்!...

கோயில் வேலை ஆகிக்கிட்டு இருக்கு..  இப்ப யாரையும் உள்ளே விட முடியாது.. இங்கேயே நின்னு கும்பிட்டுப் போங்க!..

நடப்பவற்றைக் கவனித்துக் கொண்டிருந்த
எனக்குள் கலக்கம்..

இவ்வளவு தூரம் வந்ததற்குப் பயனில்லையோ!.. மனம் பதறியது..

ராஜேந்திர சோழன் எழுப்பிய திருக்கோயில் தரை மட்டமாகக் கிடப்பது
கோயிலின் மதில் ஓரமாக - நின்ற இடத்திலிருந்தே நன்றாகத் தெரிந்தது..

தனியார் தொலைக்காட்சியிலிருந்து வந்திருந்தவர்கள் சற்றே அலுப்புடன் நின்றிருந்தார்கள்..

அவ்வழியாக வந்தவரிடம் மைக்கினை நீட்டினார் ஒருவர்..

அவர் பேசுவதற்குத் தடுமாறினார்..

இன்னொருவர் வெளியில் இருந்தபடியே இடிந்து கிடந்த மதிலின் வழியாக கோயிலின் சிதைவுகளை வீடியோ படமாக்கிக் கொண்டிருந்தார்..

அதற்குள் அங்கிருந்த மற்றொருவர் - என்னைப் பார்த்து,

நீங்க யாருங்க?.. - என்றார்...

நான் கோயிலுக்கு சாமி கும்பிட வந்திருக்கிறேன்!..

கையில் இருந்த பூச்சரத்தினைக் காட்டினேன்..

அதெல்லாம் பூசை முடிஞ்சி போச்சு.. ஐயரு பூட்டிட்டு போய்ட்டார்!..

கோயிலின் வடக்கு பக்கமாக இருந்த குடிசையைக் கைகாட்டினார்..

அவர் சுட்டிக் காட்டிய குடிசைக்கு தகரம் வேயப்பட்டிருந்தது..
சாதாரண மரச் சட்டங்களால் ஆன கதவு..

அருகில் ஒரு கொட்டகை.. அதுவும் தகரங்களால் அமைக்கப்பட்டிருந்தது..
அதன் மூன்று பக்கமும் அடைப்புகள் இல்லாமல் திறந்து கிடந்தது..

மறுபடி எப்போது வருவார்?..

எப்போ வருவார்,,ன்னு தெரியாதுங்க.. வந்தா தான் உண்டு.. பெரிய ஆபீசர் எல்லாம் வர்றாங்க.. பிரச்னையா இருக்கு..போங்க.. போங்க!...

இதற்கிடையே சாலை ஓரமாக நின்று கொண்டிருந்த ஒருவர் -

யோவ்.. நீ யாரு?.. வர்றவங்கள வரக்கூடாதுன்னு சொல்றதுக்கு.. கோயிலு..ன்னா நாலு ஜனம் வரத் தான் செய்வாங்க.. நீ என்ன விரட்டுறது?..

உடனே இவருக்கும் அவருக்கும் வாக்குவாதம் மூண்டது.. ஒரே கூச்சல்..

அந்தவேளையில் -

அதோ வர்றாருங்க வாட்ச்மேன்.. அவரைக் கேளுங்க நீங்க!.. - என்றார் ஒருவர்..

அவரிடம் சென்று விவரம் சொல்லிக் கேட்டேன்...

அருகிருந்த பெண்மணியிடம் விக்ரகங்கள் வைக்கப்பட்டிருந்த குடிசையைத் திறந்து விடச் சொன்னார்...

அவருக்கு நன்றி கூறிய நான் -
இங்கே புகைப்படங்கள் எடுத்துக் கொள்ளலாமா?.. - எனக் கேட்டேன்...

அதற்கெல்லாம் இப்போ அனுமதி இல்லைங்க.. பிரச்னை ஆகி விட்டது!.. - என்றார்..

இதற்கு மேல் கேட்பதற்கு  ஏதும் இல்லை..

கோயில் பழுது பட்டிருந்தாலும் கம்பீரமாக நின்று கொண்டிருந்தபோது
வந்து தரிசிக்கும் வாய்ப்பை நழுவ விட்ட மடமையை எண்ணி வருந்தினேன்..

துக்கம் தொண்டையை அடைத்தது..

அதற்குள் - கோயிலாக இருந்த குடிசை திறக்கப்பட்டது..

பழுதுபட்டிருந்த தலைவாயிலின் -
மூங்கில் கதவுகளைக் கடந்து  கோயிலுக்குள் நடந்தேன்..

ராஜேந்திர சோழன் ஆட்சிக் காலத்திலும்
அதற்குப் பின் பல நூறு வருடங்கள் வரையிலும் -
இத்திருக்கோயிலில் என்னவெல்லாம் நடந்திருக்கும்!..

எத்தனை எத்தனை பேரிகைகள்
எத்தனை எத்தனை துந்துபிகள்
எத்தனை எத்தனை முழவுகள்
எத்தனை எத்தனை சங்குகள்..

அவையெல்லாம் எழுப்பிய பேரொலி என் காதுகளில் கேட்டது..

தீபங்கள் ஏற்றியவர் எத்தனை பேர்?..
தேவாரம் இசைத்தவர் எத்தனை பேர்?..
பல்லாண்டு பாடியவர் எத்தனை பேர்?..
பதம் காட்டி ஆடியவர் எத்தனை பேர்?..

செவிகளுக்கு அருகாக ஜதிஸ்வரங்களுடன் திருமுறை இன்னிசை கேட்டது..

திறக்கப்பட்ட தகரக் குடிசையின் உள்ளே -

வெண்கொற்றக் குடையினோடு சூரிய சந்திர பட்டங்களுடன்
ரிஷப வாகனத்தில் தேவியுடன் வலம் எழுந்தருளிய ஸ்ரீ கயிலாய நாதர்
இன்றைக்கு ஏழையினும் ஏழையாய் வீற்றிருந்தார்!..

ஆண்டுகள் ஆயிரம் ஆனாலும் மாறாத பேரெழிலுடன்!...

அப்படியே மனம் மடங்கியது.. குரல் வற்றியது.. ஜீவன் ஒடுங்கியது..

ஓலைக்குடிசையின் படல்களைத் திறந்து விட்ட அம்மையாரிடம் பூச்சரங்களை  கற்பூரக் கட்டிகளை ஒப்படைத்தேன்..

பூச்சரத்தினை அம்மையப்பனுக்கு சாத்தி கற்பூர ஆராதனை செய்தார்..

ஏதேதோ நினைவுகள் அலையலையாய் நெஞ்சிற்குள் மூண்டெழுந்தது..
கண்களில் நீர் வழிந்தது.. ஏதோ பிதற்றினேன்..

அந்த அம்மையார் ஆற்றுப்படுத்தினார்...

திருநீற்றினைப் பெற்றுக்கொண்டு வெளியே வந்தேன்..

சோழன் எழுப்பிய ஆலயம் பிரிக்கப்பட்டுக் கிடந்தது..

பிரித்துக் கிடக்கின்ற கற்களை நான் புகைப்படங்கள் எடுத்து விடாதபடிக்கு - என்னைக் கண்காணித்துக் கொண்டே  ஒருவர் தொடர்ந்து வந்தார்..

சிவாலயம் பிரிக்கப்பட்டு இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாகின்றது..
அஸ்திவாரத்திலிருந்து சில அடி உயரத்திற்கு கற்களை அடுக்கி ஏதோ ஒருவகை சிமெண்ட்டினால் பூசி வைத்திருக்கின்றார்கள்..

பிரகாரம் முழுதும் பிரிக்கப்பட்ட கருங்கல் பாளங்கள்..

தெற்கு மேற்கு வடக்கு - என, மூன்று கோட்டங்களிலும் இருந்த
நடராஜர், கணபதி, கங்காதரர், அர்த்தநாரீஸ்வரர், தக்ஷிணாமூர்த்தி, துர்க்கை முதலான திருமேனிகள் -

மூல மூர்த்தி இருக்கும் தகரக் குடிலின் அருகில் -
தகரக் கொட்டகையின் நிழலில் கிடத்தப்பட்டிருக்கின்றன..


மகர தோரணம் முதலான சிற்ப வேலைப்பாடுகளுடைய தூண்களும் கற்களும் கோயில் பரப்பில் ஆங்காங்கே கிடந்தன..

இவற்றுக்கிடையே நான் காண வந்த திரவியம் எங்கே கிடக்கின்றது?..

எதைத் தேடி வந்தேன்!?..

கலைப் பெட்டகம் ஒன்றினைத் தேடி வந்தேன்!..
அதனை விழிகளால் தேடினேன்!.. எங்கே.. எங்கே?..

அதோ.. அதோ.. அந்த இடுக்குக்குள்!..

ராஜேந்திர சோழனுடன் அவனுடைய தேவியர் திகழும் கருங்கற்படைப்பு
கவனிப்பாரற்றுக் கிடக்கின்றது...

நன்றி - திரு குடவாயில் பாலசுப்ரமணியன்
ராஜேந்திர சோழனுடன் அவனுடைய தேவியர் மற்றும் அரசு அலுவலர்கள்..

இப்படித்தான் திருமிகு குடவாயில் பாலசுப்ரமணியன் கூறுகின்றார்..

ஆனால்,
அந்தக் கலைப்படைப்பில் விளங்குபவர்கள் -

நன்றி - திரு பாலகுமாரன்
ராஜராஜசோழனுடன் அவனுடைய தேவியர் மற்றும் இளவரசன் ராஜேந்திரன்!..

- என்று திருமிகு பாலகுமாரன் கூறுகின்றார்..

எதுவாயினும் காண்பவர்க்குக் கலைவிருந்து..

சரிந்து கிடக்கும் கலைச் செல்வங்களுக்கு இடையே -
அந்தக் கலைச் சிற்பத்தைச் சுட்டிக் காட்டி -
இதை மட்டும் படம் எடுத்துக் கொள்கின்றேன்!.. - என்று மன்றாடினேன்..

ஈவு இரக்கம் காட்டப்படவில்லை...

ஆனால் - கோயில் வளாகத்தின் வெளியே நின்று படங்கள் எடுத்துக் கொள்வதற்கு எந்தத் தடையும் சொல்லவில்லை...

அந்த அளவில் கோயிலுக்கு வெளியே நின்று
மதிற்சுவரின் வழியாக எடுக்கப்பட்ட படங்களைத் தான்
இன்றைய பதிவில் வழங்கியுள்ளேன்!..



கோயில் இப்போது பிரித்துப் போடப்பட்டிருந்தாலும் -

தொடர்ந்து வேலை நடக்கும்.. அடுத்த சில ஆண்டுகளில் சிறப்புடன் விளங்கும்.. - என்று சொல்லப்படுகின்றது...

எந்த அளவுக்கு சிறப்பு என்பது தான் கேள்வி!..

தகரக்குடிசைக்குள் -
ஸ்ரீ நாகநாத ஸ்வாமி, சௌந்தர்ய நாயகி அம்பாள் - திருமேனிகளுடன்

விநாயகர், வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியர், சண்டீசர், சூரியன் - ஆகிய திருவுருவங்கள் வைக்கப்பட்டிள்ளன..

குடிசைக்கு வெளியே நடராஜர், தக்ஷிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், துர்கை - முதலான திருவுருவங்கள் கிடத்தப்பட்டுள்ளன..

ராஜேந்திரன் எழுப்பிய தொன்மையான கருங்கல் கட்டுமானத்தின் ,ஏலாக எழுப்பட்ட செங்கல் விமானம் காலப் போக்கில் பழுதுற்றது,,

அங்கே முளைத்த செடி கொடிகளால் விமானம் பிளவு பட்டது..

அம்பாள் கோயிலும் இப்படியே ஆகியிருக்கின்றது..

ஏனைய சந்நிதிகளான விநாயகர், முருகன், சண்டீசர் - ஆகிய சந்நிதிகள் பல வருடங்களுக்கு முன்பே சிதிலமடைந்து விட்டன..


வருமானம் இல்லாத கோயில் என்று அறநிலையத்துறையும் கண்டு கொள்ளவில்லை..

பழுதான கோயில் என்று மக்களும் கண்டு கொள்ளவில்லை..

அம்பாள் சந்நிதி சிதிலமடைந்திருந்தாலும்
இடிக்கப்படவோ பிரிக்கப்படவோ இல்லை..

விநாயகர், முருகன், சண்டீசர் - சந்நிதிகள் முற்றிலும் சிதிலமாகி உருக்குலைந்த நிலையில் அப்படியே நிற்கின்றன..

ராஜேந்திர சோழன் எழுப்பிய கற்றளி மட்டுமே முற்றாகப் பிரித்துப் போடப்பட்டிருக்கின்றது...

சில ஆண்டுகளுக்கு முன்பு
இந்தக் கோயிலைப் பற்றி அறிந்த பின்
வந்து தரிசிக்காமல் காலம் கடத்தி விட்டதற்கு மிகவும் வருந்தினேன்...

கடல் கடந்த நாட்டில் வேலை செய்யும் எனக்கு
ஆண்டுக்கு ஒரு முறை விடுப்பு..

அங்கிருந்து தாய்நாட்டிற்கு வரும்போது
நெஞ்சில் நிறைந்திருக்கும் எண்ணங்களையெல்லாம் -
இங்கே குறுகிய நாட்களுக்குள் நடத்தி விடுவதற்கு முடியவில்லை...

என்ன செய்வது!..
எனக்கென்று கேட்கவும் காணவும் எவையெல்லாம் விதிக்கப்பட்டிருக்கின்றனவோ - அவை மட்டுமே!..


கும்பகோணத்திலிருந்து  அணைக்கரை செல்லும் செல்லும் சாலையில் ( இது தான் சென்னை நெடுஞ்சாலை) சோழபுரத்தை அடுத்து உள்ளது மானம்பாடி..

வட மாவட்டங்களின் நகரங்களுக்குச் செல்கின்ற
அரசுப் பேருந்துகள் உள்பட  எவையும் இவ்வூரில் நிற்பதில்லை..

குடந்தையிலிருந்து அணைக்கரை - திருப்பனந்தாள் முதலான சிற்றூர்களுக்கு இயக்கப்படும் நகரப் பேருந்துகள் மட்டுமே மானம்பாடி கோயிலின் அருகே நின்று செல்கின்றன..


மானம்பாடி திருக்கோயிலின் இன்றைய நிலை மிகவும் சோகம்..
மிகுந்த வருத்தமாக இருக்கின்றது...

ஊடக வெளியில் - எதையெல்லாமோ சொல்கின்றார்கள்..
யார் யாரோ - பொங்கியெழுகின்றார்கள்.. ஆர்ப்பரிக்கின்றார்கள்...

எது எப்படியிருந்தாலும் -
கோயிலின் திருப்பணி வேலைகள் தொடர்ந்து நடக்க வேண்டும்..

அதுவும் கவனமாக நடக்க வேண்டும்..

நம் முன்னோர்களின் சிறப்புகளை எல்லாம் சிந்தாமல் சிதறாமல்
அடுத்த தலைமுறையிடம் சேர்க்கவேண்டும்..

அது தான் நல்லோர்களின் நாட்டமாக இருக்கின்றது..

அவ்வண்ணமே நாமும் விரும்புவோம்..
நல்லதே நடக்கட்டும்!..
*** 

புதன், ஆகஸ்ட் 16, 2017

அற்றைத் திங்கள் 2

தொடர்புடைய முதல் பதிவிற்கான இணைப்பு -

அற்றைத் திங்கள் 1

ஸ்ரீராஜேந்திர சோழ மாமன்னன் எழுப்பிய
ஸ்ரீகயிலாசமுடையார் திருக்கோயிலைத் தரிசிப்பதற்காக
கடந்த  புதன் கிழமை  (09/ ஆகஸ்ட்) மானம்பாடிக்குச் சென்றிருந்தேன்..

விடியற்காலையில் தஞ்சையிலிருந்து புறப்பட்ட நான்
ஏழரை மணியளவில் மானம்பாடி கோயிலில் இருந்தேன்...

அங்கே நடந்தவைகளும் நான் கண்ட காட்சிகளும் அடுத்த பதிவில்..

அதற்கு முன்பாக -
மானம்பாடி சிவாலயத்தின் இன்றைய நிலையைக் காணும் முன்பாக -
இன்றைய பதிவிலுள்ள படங்களைக் கண்ணாரக் கண்டு கொள்ளுங்கள்..

இனி ஒருக்காலும் இத்தகைய அழகு கிடைக்காது என்றே தோன்றுகின்றது..


இந்தப் பதிவிலுள்ள படங்கள் அனைத்தும்
தலைசிறந்த வரலாற்று ஆய்வாளர்களுள் ஒருவரான
முனைவர் திருமிகு குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களுடைய
தளத்திலிருந்து பெறப்பட்டவை..



திருமிகு குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களுக்கு
நெஞ்சார்ந்த நன்றியும் வணக்கமும்!..

பிக்ஷாடனர்
லிங்கோத்பவர்
பராந்தக சோழர் (907 - 950) இவர் தான் ராஜராஜ சோழனின் தாத்தாவாகிய அரிஞ்சய சோழரின் தந்தை.. 

இவர்தான் தில்லையம்பலத்திற்குப் பொன் தகடு வேய்ந்தார்..

இவர் தான் -
வீரநாராயணபுர ஏரி - என, பெரிய ஏரியை வெட்டுவித்தார்.. 
அந்த ஏரிக்குச் செல்லும் பெருஞ்சாலையையும் அமைத்தார்..

அந்த வீரநாராயணபுர ஏரிதான் இன்றைக்கு வீராணம் ஏரி..

பராந்தக சோழர்  அமைத்த பெருஞ்சாலைதான் - 
மானம்பாடி நாகநாதர் கோயிலின் வடபுறமாக கோயிலை ஒட்டிவாறு செல்லும் சென்னை நெடுஞ்சாலை!..

பராந்தக சோழரின் காலத்திலேயே இவ்வூர் பெருஞ்சிறப்புற்று விளங்கிற்று..

இன்றைய மானம்பாடியின் ஐயனார் கோயில் வளாகத்தில் பெரிய அளவில் புத்தர் சிலையை அமைத்திருக்கின்றார்கள் - சோழர்கள்..

கிழக்காசிய பௌத்தர்கள் வருகை தந்த ஊர்களுள் இன்றைய மானம்பாடியும் ஒன்று..



மாமன்னன் ராஜேந்திர சோழனையும் அவனது தேவியரையும்
ஆடவல்லானாகிய நடராஜ மூர்த்திக்கு வலப்புறமும்

மன்னனது ராஜகுருவையும் அரசு அலுவலர்களையும் நடராஜ மூர்த்திக்கு இடப்புறமும் காணலாம்..

இந்த சிற்பங்கள் வேறெங்கும் காணக்கிடைக்காதவை..


கோயிலின் அஸ்திவாரத்திலிருந்து மேல்தளம் வரை கருங்கல் கட்டுமானம்..

அதற்கு மேலுள்ள விமானம் செங்கற்கட்டுமானம்..

கோயிலின் தென்புற கோட்டத்தில் பிக்ஷாடனர், நடராஜர், விநாயகர், தக்ஷிணாமூர்த்தி - திருமேனிகள்..

மேல்புற கோட்டத்தில் அண்ணாமலையாராகிய லிங்கோத்பவர்..

வடபுறத்தில் பிரமன், துர்கை, உமாதேவியுடன் கங்காதரர்..

மகர தோரணங்களில் கண்ணப்ப நாயனார் மற்றும் சிவலிங்கத்திற்கு பூஜை செய்யும் யானை.. அதனருகே கவரியுடன் சாமரம் வீசும் கன்னி..

இந்த சிற்ப அமைவு காவிரியாள் என்று குறிக்கப்படுகின்றது..

கோயிலின் சுற்றுச் சுவர்கள் முழுதும் கல்வெட்டுகள்..

அவற்றுள் -

வீரநாராயணபுர இலச்சிக்குடி எனப்பட்ட மானம்பாடியின் வணிகர்கள் தங்களது மன்னனாகிய ராஜேந்திரன் பெயரில் திருக்கோயில் நந்தவனம் அமைத்த செய்தி..

சோழனின் அரண்மனைக் கோயிலில் தேவாரம் பாடிய நாயகன் மறைக்காடன் பதஞ்சலி பிடாரன் - மூன்று நந்தாவிளக்குகளுக்காக அளித்த கொடை..

குலோத்துங்க சோழன் (1088) காலத்தில் கோயிலில் தமிழ்க்கூத்து நிகழ்த்துவதற்காக திருமுதுகுன்றன் என்பவன் நிவந்தம் அளித்த குறிப்பு..

- ஆகியன முக்கியமானவையாகக் கொள்ளப்படுகின்றது..

மேலும் பல கல்வெட்டுகள்கோயிலின் நிர்வாகம் மற்றும்
வழிபாட்டு முறைகளைத் தெரிவிக்கின்றன..

மானம்பாடி கோயிலைப் பற்றிய
மேற்கண்ட சிறுகுறிப்புகள்
திருமிகு குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களது
கட்டுரையில் இருந்து பெறப்பட்டவை...


திருமிகு குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களுக்கு
நெஞ்சார்ந்த நன்றியும் வணக்கமும்!..
***

கூர்வாள் கொண்டு கொடும் பகை முடித்த
கொற்றவை
பல்வேறு சிறப்புகளுடன் விளங்கிய கோயில் நாளடைவில் பழுதுற்றது...

இந்தக் கோயிலின் பெருஞ்செல்வங்கள் எங்கே போயினவோ?..

தெரியவில்லை..

நந்தாவிளக்குகள் சுடர் விட்டுப் பிரகாசித்ததெல்லாம் பழங்கதையானது..

கயிலாயமுடையார் திருக்கோயிலில் நித்ய வழிபாட்டு முறைகளும் சிரமத்துக்குள்ளாயின..

சில ஆண்டுகளுக்கு முன்பாக நெடுஞ்சாலைப்  பணிகளுக்காக கோயிலை அகற்ற முற்பட்டபோது தான் இந்தக் கோயில் வெளியுலகிற்கு அறிமுகமானது...

பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்ததைக் கண்ட
தேசிய நெடுஞ்சாலைத்துறை தனது முடிவினைக் கைவிட்டது..

அத்தோடு இந்தக் கோயிலைப் பற்றி அனைவரும் மறந்து விட்டனர்..

அதற்கடுத்து -
இக்கோயிலைப் புதுப்பிப்பதாக எழுந்தது தமிழக அரசின் அறநிலையத்துறை...

பாலாலயம் செய்து விட்டு கோயிலைப் பிரித்தனர்..

அதையடுத்து சில பிரச்னைகள்..

வழக்கம் போல அவைகளும் காற்றில் கரைந்து போயின..

அதற்குப் பின் -
சென்ற வாரத்தில் யுனஸ்கோவின் அறிக்கையால்
மீண்டும் மானம்பாடி கோயில்  பேசப்படும் பொருளாகி இருக்கின்றது..

ஆறாத மனதுடன் நாகநாதர் கோயிலைத்  தரிசிப்பதற்கென்றே தஞ்சையிலிருந்து மானம்பாடிக்குச் சென்றேன்..

அங்கே நடந்தவைகளும் 
நான் கண்ட காட்சிகளும் அடுத்த பதிவில்...

காலமகள் காப்பாற்றிக் கொடுத்த
கலைச் செல்வங்களை
இப்படியும் காண நேர்ந்ததே!..
மனம் பதறித் துடித்தது..
* * *

ஞாயிறு, ஆகஸ்ட் 13, 2017

அற்றைத் திங்கள் 1

முந்நீர்ப் பழந்தீவுகள் பன்னீராயிரம்..
மாபெரும் தேசத்தின் தென் மேற்கே விளங்குவது..

அதுவும் தனது தந்தை தன்னுடைய தோள்வலியால் கொண்டது..

மாறவேண்டும்.. எல்லைகள் மாற வேண்டும்!.. என - இவன் முனைந்தான்..

நிசும்பசூதனியின் திருக்கரத்தால் -
தனது பெரும் பாட்டன் விஜயாலயன் பெற்ற வீரவாளினை ஏந்தினான்..

கங்கை கொண்டான் ....

இது போதாதென்று -
கடாரம் சென்றான்.. வென்றான்..

இதுவும் போதாதென்று - பெருங்கடலில் நடுவே கலம் செலுத்தி -
ஸ்ரீ விஜயம் சென்றான்.. அதையும் வென்றான்..

இவனே வீரத்திருமகன்!.. - என்று,

முப்போதும் அவனைத் தொடர்ந்திருந்த
பெரும்புகழ் எனும் பொற்பாவை ஆரத்தழுவி ஆனந்தம் கொண்டாள்..

அத்தகைய வீரத்திருமகனின் திருப்பெயரைக் கேட்டதுமே -
அங்குமிங்கும் சிதறிக் கிடந்த புறநாட்டு மன்னர் கூட்டம்
அடங்கி ஒடுங்கி குழிக்குள் புகுந்த நரிக்கூட்டம் ஆகியது...

வேற்று நாட்டவரும் கேட்ட மாத்திரத்தில்
வியர்த்து நடுங்கி விழி கலங்கி நின்ற திருப்பெயர் -

ஸ்ரீராஜேந்திர சோழன்!..

வீரமும் விவேகமும் பண்பும் பக்தியும் கொண்டு இலங்கிய
மன்னனைக் கண்டு மாநிலம் பெருமை கொண்டது...

ராஜேந்திர சோழனைப் பெற்றெடுத்த ராஜராஜ சோழனின் திருப்பெயரைத்
தம் பிள்ளைகளுக்குச் சூட்டிக் கொண்டாடியதை விடவும் அதிகமாக

ராஜேந்திர சோழனின் திருப்பெயரைத் தம் பிள்ளைகளுக்குச் சூட்டி
மகிழ்ந்தது - தமிழ்க் குலம்!..

அதற்குக் காரணம் - அவனும் தந்தையைப் போலவே மக்களோடு மக்களாக பழகிக் கிடந்தான்..

ராஜேந்திரனது திருப்பாதங்கள் பதியாத ஊர்களே கிடையாது - இந்த மாநிலத்தில்!..

வயலைக் கொடுத்தான்.. வரப்பைக் கொடுத்தான்..
வள நாட்டினை வகுத்து வாய்க்காலைக் கொடுத்தான்..

அது வளங்குன்றாதிருக்க நலந்தரும் நீரைக் கொடுத்தான்...

நெடு.. நெடு.. - என, நீரோடி நிலஞ்செழிக்க -
காவிரியின் கடைமடையும் தழைத்திருக்கும் நல்லாட்சியைக் கொடுத்தான்..

குளத்தைக் கொடுத்தான்..
குடிமக்கள் மனங்குளிரட்டும் என -
குளத்தின் கரையில் தளிர் சோலையைக் கொடுத்தான்..

குளிர்ந்த மனங்கள் கும்பிட்டு நிற்கக் கோயிலைச் சமைத்தான்...

அவன் வடித்துக் கொடுத்த கோயில்களுள் ஒன்று தான் -
ஸ்ரீ கயிலாசமுடையார் திருக்கோயில்..

இத்திருக்கோயில் அமைந்திருக்கும் ஊரின் முழுப்பெயர்

வடகரை இராஜேந்திர சிம்ம வளநாட்டு
மிழலை நாட்டு வீரநாராயணபுர இலச்சிக்குடி ..

சோழ தேசத்தின் பெரிய ஏரியாகிய வீரநாராயணபுர ஏரிக்குச் செல்லும் பெருஞ்சாலையில் தான் இவ்வூர்..

இவ்வூரில் சிவாலயம் அமைந்தபோது சிற்பிகள் வேண்டி விரும்பிக் கேட்டுக் கொண்டனர்..

மாமன்னன் ராஜேந்திரனும் குறுஞ்சிரிப்புடன் இசைவு தந்தான்..

அதனால் தான் வேறெங்கும் காணக் கிடைக்காத அரிய கலைச் செல்வம் கிடைத்தது..

ராஜேந்திர சோழனும் அவனது தேவியரும் கருங்கல்லினில் வெளிப்பட்டனர்..

மன்னனைக் காண இயலாத வேளைகளில்
மக்கள் அந்த கலைச்செல்வத்தினைக் கண்டு உவகை கொண்டார்கள்..

கொண்ட புகழுடன் திருக்கொடி மேகந்தொட்டுப் பறந்திருக்க
மாமன்னனின் திருப்பெயர் மக்களின் மனங்களில் உறைந்திருந்தது..

ஸ்ரீ நாகநாதர் திருக்கோயில் - மானம்பாடி

ஸ்ரீ சௌந்தர்யநாயகி அம்பாள் சந்நிதி - மானம்பாடி
கால ஓட்டத்தில் தலைமுறைகள் மாறின..
கலைச் செல்வங்களின் தலையெழுத்தும் மாறியது..

வீரநாராயணபுர இலச்சிக்குடி என்ற பெயர்
வீரநாராயணபுரமான மாறம்பாடி - என்றாயிற்று..

மாறம்பாடியும்
மானம்பாடி என்றானது..

ஸ்ரீகைலாசமுடையார் - ஸ்ரீநாகநாதர் என்றானார்..

வீரநாராயணபுர பெரிய ஏரி - வீராணம் ஏரி என்றானது..

சோழதேசத்தின் பெருநகராகிய தஞ்சையிலிருந்து
வீரநாராயணபுர பெரிய ஏரிக்குச் சென்ற பெருவழி -
சென்னை நெடுஞ்சாலை என்றானது..

தஞ்சை - சென்னை நெடுஞ்சாலையில் கும்பகோணத்தை அடுத்து
ஒன்பது கி.மீ., தொலைவில் உள்ளது  -  மானம்பாடி...

இதுதான் அன்றைய - வீரநாராயணபுரமான மாறம்பாடி..

எல்லாவற்றையும் விடப் பெரிய கொடுமை -
மக்களுடன் மக்களாகத் திகழ்ந்த மாமன்னனின் பெருமைதனை
மக்கள் மறந்து போனது...

ஆனால்,
நீரும் சோறும் உள்ளவரை - ராஜேந்திர சோழனின் திருப்பெயர்
நல்லோர் தம் மனதிலிருந்து நீங்காதென்பது சத்தியம்..

நன்றி - திரு. குடவாயில் பாலசுப்ரமணியன்
நன்றி - திரு. குடவாயில் பாலசுப்ரமணியன்
நன்றி - திரு. குடவாயில் பாலசுப்ரமணியன்
குடந்தையிலிருந்து மானம்பாடிக்குச் செல்லும் நகரப் பேருந்தில் ஏறி அமர்ந்ததும் நடத்துனரிடம் கேட்டேன்..

மானம்பாடியில் ராஜேந்திர சோழன் கட்டிய சிவாலயத்துக்குப் போக வேண்டும்..

சற்று யோசித்தார் நடத்துனர்..

நான் நினைத்துக் கொண்டேன்..

சிவன் கோயில் பெயரைச் சொல்லுவார் - என்று..

ஆனால், நடத்துனர் சொன்னதோ வேறொரு பெயரை...

நன்றி - திரு குடவாயில் பாலசுப்ரமணியன்
மாபெருஞ்சோழனின் விருப்பத்துக்குரிய மாறம்பாடியாகிய மானம்பாடியில்
சோழனுடைய பெயரில் பேருந்து நிறுத்தம் வேண்டாம் தான்!..

ஆனால்,
சோழன் எழுப்பிய கையிலாசமுடையார் எனும் நாகநாதர் திருக்கோயிலின் பெயரில் கூடவா பேருந்து நிறுத்தம் கிடையாது?...

ஆமாம்.. கிடையாது!..

இன்றைய மானம்பாடியில்
ராஜேந்திர சோழன் எழுப்பிய கோயிலுக்கு அருகிலுள்ள
பேருந்து நிறுத்தத்தின் பெயர்

மாதா கோயில்!..

இப்படிப் பெயர் ஏற்படக் காரணம் -
நாகநாதர் ஆலயத்திற்கு வடபுறமாக நூறடி தொலைவில் மிகச் சமீப காலத்தில் கட்டப்பட்டிருக்கும் கிறிஸ்தவ வழிபாட்டுத் தலம்..

நான் பயணித்த பேருந்து மானம்பாடியில் நின்றது..

இங்கே இறங்கிக் கேளுங்கள் சொல்லுவார்கள்.. பக்கம் தான்!..

நடத்துனர் இறக்கி விட்டார்.. பேருந்து புறப்பட்டுச் சென்றது..

எதிரில் வந்த இளைஞரிடம் விசாரித்தேன்..

சாலையின் தென்புறம் தெரிந்த மதிற்சுவரைச் சுட்டிக் காட்டினார்..

அதுதான் கோயில்.. - என்றார்..

கோயில் கோபுரம் எதையும் காணவில்லையே!.. - எனக் கேட்டேன்..

அவர் சொன்னார் - அதைத்தான் இடித்துத் தரை மட்டமாக்கி விட்டார்களே!..

அப்போதே மனம் திடுக்கிட்டது..
கண்ணில் நீர் திரையிட்டது..

காலமகள் காப்பாற்றித் தந்த 
கலைச் செல்வங்களைக் 
கை நழுவ விட்டோம்..
கை கழுவி விட்டோம்..
***

வியாழன், ஜூன் 20, 2013

நெஞ்சார்ந்த நன்றி

கடல் கடந்தும் தமது புலிக் கொடியினை நாட்டிய -  மாபெரும் வெற்றி வீரன்,

ராஜராஜ சோழ மாமன்னனின் மகன் ராஜேந்திர சோழனால், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்டது - மானம்பாடி ஸ்ரீநாகநாதர் திருக்கோயில்.


தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்தின் அடிப்படையில், இந்தத் திருக் கோயிலுக்கு  -  நேர இருந்த ஆபத்து விலகியுள்ளது. 

நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்காக - 

தஞ்சாவூர் - விக்ரவாண்டிக்கு இடையில் - கும்பகோணத்திற்கு அருகில் மானம்பாடி கிராமத்தில், சாலை ஓரமாக அமைந்துள்ள ஸ்ரீநாகநாதர் திருக்கோயில் 20 அடி அளவுக்கு இடிபடப்போகின்றது என்ற தகவல் அறிந்து அதிர்ச்சி அடையாத உள்ளங்களே இல்லை எனலாம். 

இந்தக் கோயிலின் அருமை பெருமைகளை அனைவரும் எடுத்துப் பேசினர்.

நமது வலைப்பூவில் 19.05.2013 அன்று முதல்  - நகரும் செய்திக் குறிப்புடன்,


என்ற தகவல் குறிப்பும் -  

இறைபணியில் அணு அளவாகக் கருதி வெளியிடப்பட்டது. இந்நிலையில்,

தற்போது - திருக்கோயிலை இடித்துச் சேதப்படுத்தாமல் நெடுஞ்சாலை விரிவாக்கத்தினை மேற்கொள்ள முடிவெடுத்துள்ளனர்.

வேறு மூன்று வழிகளில் சாலை விரிவாக்கத்தினை மேற்கொள்ள உத்தேசித்திருப்பதாக - நெடுஞ்சாலைத் துறையினர்  அறிவித்துள்ளனர்.


வரலாற்றின் ஈடு இணையற்ற அடையாளங்களில் ஈடுபாடு கொண்டுள்ள கலையன்பர்களும்  இறையன்பர்களும் ஆர்வலர்களும் மிக்க மகிழ்ச்சியுடன் அரசுக்கும் தேசிய நெடுஞ்சாலைத் துறையின் அதிகாரிகளுக்கும்  இதயம் நிறைந்த நன்றி தெரிவிக்கின்றனர்.

இதில் பெரும் பங்காற்றிய குடந்தை ஜோதிமலை இறைபணி திருக் கூட்டத்தினர் வெளியிட்டுள்ள செய்தியை,

http://www.facebook.com/Uzhavaram - வாயிலாக அறிந்து அதனை உங்களுடன்,  நமது வலைத்தளத்தில் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன்.




ஸ்ரீ நாகநாதஸ்வாமியின் திருக்கோயிலைப் பாதுகாத்திட ஆவன செய்த - 

தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றி!...

சென்ற வருடம் இந்தத் திருக்கோயிலைப் பற்றி   விரிவாக கட்டுரை எழுதிய  திரு. பாலகுமாரன் அவர்களுக்கும்


அதனை வெளியிட்ட சக்தி விகடனுக்கும் மனமார்ந்த நன்றிகள்!..

திருக்கோயிலைப் பாதுகாத்திட பெரும் பணியாற்றிய 'குடந்தை ஜோதிமலை இறைபணி திருக்கூட்டத்தினர்' தமக்கும் ,

http://www.facebook.com/Uzhavaram அவர்களுக்கும்,

இணையதளம் மூலமாக ஆதரவு திரட்டிய www.change.org அவர்களுக்கும், 


மேலும் - 

தமிழக வருவாய்த்துறை, இந்து சமய அறநிலையத் துறையினருக்கும் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் தேசிய நெடுஞ்சாலைத் துறையினருக்கும்,

நமது வலைத்தளத்தின் தகவலை - பரிவுடன் பகிர்ந்து கொண்டு ஆதரவளித்த அன்பு உள்ளங்களுக்கும், இறையன்பர்களுக்கும்

மற்றும் மக்கள் எண்ணத்தினைப் பிரதிபலித்த தினத்தந்தி, தினமலர், தினமணி, தினகரன் முதலான நாளிதழ்களுக்கும், அரசியல் பிரமுகர்களுக்கும், கலை ஆர்வலர்களுக்கும், சகல சமூக அமைப்பினருக்கும்

நெஞ்சார்ந்த நன்றிகளை 
தலை வணங்கி -  தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன்.

பழைமையான திருக்கோயிலைப் பாதுகாத்து அருளவேண்டும் - என,
பரம்பொருளிடம் வேண்டுகோள் வைத்தோம்.

அது இன்று நிறைவேறியுள்ளது. ஒருமித்த மனத்தினராக அன்பர்கள் இயற்றும் பிரார்த்தனை நிச்சயம் நிறைவேறும் என்பது மீண்டும் உறுதியாகியுள்ளது.

வீரப்பெருந்தகை மாமன்னன் - ராஜேந்திர சோழனின் திருப்பணியாகிய, இந்தத் திருக்கோயில் காக்கப்பட்ட வகையில் - தமிழ் நெஞ்சங்கள் மகிழ்ச்சி அடைகின்றன!.. அந்த வகைக்கு - பாடுபட்ட அனைவரும்,

ஸ்ரீ செளந்தரநாயகி அம்பிகை உடனாகிய ஸ்ரீநாகநாதப் பெருமானின் 
திருவருள் துணையுடன்

எல்லா நலமும் பெற்று வளமுடன் வாழ்வார்களாக!..

சிவாய திருச்சிற்றம்பலம்!...

ஞாயிறு, மே 19, 2013

மானம்பாடி

பழைமையான திருக்கோயில் பாதுகாக்கப்படவேண்டும்!...

கங்கை முதல் கடாரம் வரை படை நடத்திச் சென்று - வென்று தமிழர்களின் புகழை உலகினுக்கு எடுத்துக்காட்டியவன், மாமன்னன் ராஜராஜ சோழனின் அருந்தவப்புதல்வன் ராஜேந்திர சோழன். 

தந்தை ராஜராஜ சோழன் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் போது - ராஜேந்திர சோழன் (1014ஆம் ஆண்டில்) இளவரசர் பட்டம் ஏற்றார். அந்த அளவில் அடுத்த ஆண்டுடன் ஆயிரம் ஆண்டுகள் நிறைவடைகின்றன. அதற்காக ராஜேந்திர சோழனுக்கு நாம் அளிக்கும் பரிசு - அவர் எழுப்பிய ஒரு கோயிலை இடிப்பது!..

விவரம்  அறிய மேற்கொண்டு வாசியுங்கள்!...

மன்னன் ராஜேந்திர சோழன் உருவாக்கிய கோயில் கும்பகோணத்தில் இருந்து சென்னை செல்லும் நெடுஞ்சாலையில் திருப்பனந்தாளுக்கு அருகில் மானம்பாடி எனும் ஊரில் நெடுஞ்சாலையின் ஓரமாக உள்ளது. அதுதான் இபோது அந்தக் கோயிலுக்கு ஆபத்தாகி விட்டது.  

தேசிய நெடுஞ்சாலையின் விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக  (சென்னை) விக்ரவாண்டி - தஞ்சை சாலையினை அகலப்படுத்தும் பணியில் இந்தக் கோயிலின் பெரும் பகுதியினை தகர்த்து தரை மட்டமாக்கி விட்டு,  அதன் ஊடாக நெடுஞ்சாலையின் விரிவாக்கத்தினை வடிவமைத்துள்ளனர். விஷயம் அறிந்த சமூக ஆர்வலர்களும் வரலாற்று ஆய்வாளர்களும் இறையன்பர்களும் இதனைத் தடுத்து நிறுத்த முயற்சிக்கின்றனர்.


இந்தக் கோயிலில் பத்துக்கும் மேலான கல்வெட்டுகள் உள்ளன. ராஜராஜ சோழனும் அவர் தம் மனைவியரும், ராஜேந்திர சோழனும் அவர் தம் மனைவியரும் நடராஜப் பெருமானை வணங்குவது போன்ற அற்புதமான கலைப்படைப்பு இங்குள்ளது பெருமைக்குரிய செய்தியாகும்.

ராஜேந்திர சோழன் தந்தையைப் போலவே மிகப் பெரிய ஆலயத்தை எழுப்பியவன்.  கங்கை வரை படை நடத்திச்சென்று கங்கை நீரைக் கொண்டு வந்து ஏரியில் நிரப்பியவன். தமிழக மன்னர்களில் வீரம் மிகுந்தவன். தமிழர் தம் நலனே தனது உயிர் மூச்சு எனக் கொண்டு வாழ்ந்தவன். 

மாமன்னன் ராஜராஜசோழன் தன் மனைவியருடனும் குடும்பத்தினருடனும் பெருமானை வணங்கும் சித்திரம் ஒன்று தஞ்சைப்பெருங்கோயிலினுள் தீட்டப்பட்டுள்ளது. அந்தச் சித்திரம் இந்தக்கோயிலில் சிற்பமாக உள்ள அற்புதத்தினை அன்புக்குரிய எழுத்தாளர் திரு.பாலகுமாரன் அவர்கள் சக்தி விகடன் - ஆலயம் தேடுவோம் பகுதியில்  விரிவாக எழுதியுள்ளார். அத்துடன் அந்தக் கோயிலின் அனைத்து விவரங்களையும் நம் கண் முன்னே நிறுத்தியுள்ளார். 


இந்தக் கோயிலில் உள்ள ராஜேந்திர சோழனின் மெய்க்கீர்த்தியுடன் தொடங்கும் ஐந்தாம் ஆண்டுக் கல்வெட்டு - இந்தத் திருக்கோயில்  கயிலாச நாதர் கோயில் என்றும் ஊரின்  பெயர் இலச்சிக்குடி எனும் வீரநாராயணபுரம் என்றும் தெரிவிப்பதாகவும் திரு.பாலகுமாரன் கூறுகின்றார். 


கோயில் இன்றைக்கு மிகவும் சிதிலமாகி இருப்பினும் காப்பாற்றப்பட வேண்டிய கலைப்பொக்கிஷம் என்பதில் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. ஸ்ரீராஜராஜ சோழனையும் ஸ்ரீராஜேந்திர சோழனையும் ஒருங்கே காணும் பாக்கியத்தினை நமது சந்ததியினரும் பெற வேண்டும். 

ஆயிரம் வருடப் பழைமையான கலைப்படைப்பினை இதுவரை பாதுகாக்கத்தான் இல்லை!... நெடுஞ்சாலை வசதிக்காக அதனை இடித்துத் தரை மட்டம் ஆக்க வேண்டுமா?.. அதுவா நமது நன்றிக் கடன்?.... 

''...ஒட்டு மொத்த தமிழகத்தின் கவனத்தையும் தன்பக்கம் ஈர்த்துள்ளார் மானம்பாடி ஸ்ரீநாகநாதஸ்வாமி. சிவனடியார்களும் இறையன்பர்களும் ஒருங்கிணைந்து திருக்கோயில் பாதுகாக்கப்படுவதற்காக தொடர் கூட்டுப் பிரார்த்தனை செய்ய முன்வரவேண்டும். எது எதற்கோ ஒன்று கூடும் மக்கள் இதற்கு ஒன்றுபட மாட்டார்களா?.... ''

மேற்குறித்த கருத்தினை நாளிதழ் ஒன்றில் பதிவிட்டேன். ஆனால் அது மக்களின் பார்வைக்கு வெளியிடப்படவில்லை. அதனால் என்ன!... 

நாம் ஒவ்வொருவரும் உளமார, 

''..பழைமையான கோயிலைப் பாதுகாத்து அருளவேண்டும்!..'' -

என அந்தப் பரமனிடமே வேண்டிக்கொள்வோம்!.. 

நம் வேண்டுகோளினை இறைவன் நிச்சயம் நிறைவேற்றி அருள்வார்!... 

Facebook -லும் கருத்தினைப் பதிவிட்டு பகிர்ந்துள்ளேன். 


கோயில் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியத்தினை  நமது வலைத்தள அன்பர்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். 

அத்துடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள ''Stop Demolishing 1000 Years Temple'' எனும் இணைப்பில் மானம்பாடி திருக்கோயில் பாதுகாக்கப்படுவதற்காக -

உங்களது மேலான ஆதரவினைப் பதிவு செய்யுமாறும் அனைவரையும் தாழ்ந்து பணிந்து வேண்டிக் கொள்வதுடன், 

இதில் பங்கு பெறும் அனைவருக்கும் மனப்பூர்வமான நன்றியினையும் வணக்கத்தினையும் தெரிவித்துக் கொள்கின்றேன்!...


மானம்பாடி ஸ்ரீநாகநாதர் கோயிலைப் பற்றி சக்தி விகடனில் வெளியான  திரு.பாலகுமாரன் அவர்களின் ஆக்கம்.


தொல்லியல் சிறப்பு வாய்ந்த மானம்பாடி நாகநாத சுவாமி கோவில் என்ற தலைப்பில்  தினமலர் நாளிதழில் வெளியான சிறப்புக் கட்டுரை..


பரத கண்டத்தின் பாதியை மட்டுமல்லாமல் கடல் கடந்தும் பல இடங்களைத் தன் வாளின் வலிமையால் வெற்றி கொண்ட ராஜேந்திர சோழனின் பெருமையை  -

நாம் கொண்டாட மறந்தோமானால் மறுத்தோமானால், நாம் தமிழையும் தமிழ் மன்னனையும் தமிழ் மண்ணின் வரலாற்றை புறக்கணித்து நின்றோம் என்கிற அவலம் மட்டுமே மிஞ்சும்!...