நாடும் வீடும்
நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆடி
கிழமை
இந்தச் சிறுகதை முன்பே எங்கள் தளத்தில் வெளியாகியிருக்கின்றது..
" காபி "
" காபி.. "
செய்தித்தாளில் இருந்து முகம் திருப்பிய சுந்தரத்தின் கண்களில் இளந்தேவதை தெரிந்தாள்...
அந்தத் தேவதையின் பெயர் காமாட்சி..
வெள்ளித்தட்டு.. அதில் ஒரு வெள்ளிக்குவளை.. அதில் நுரையும் மணமுமாக இருந்தது டிகிரி காஃபி..
காஃபிக்குள் காஃபி என்றால்
தஞ்சாவூர் டிகிரி காஃபி தான்..
.
காமாட்சியின் கைகளில் இருந்து காஃபியை வாங்காமல் கண்களால் அளவெடுத்தான் சுந்தரம்...
நேற்று விடியற்காலை சுபமுகூர்த்தத்தில் மாங்கல்யதாரணம்...
அனைத்தும் சுபமங்கலமாக நிகழ்ந்து மதியத்திற்கு மேல் முதல் அழைப்பு முடிந்து இங்கே மணமகள் இல்லத்தில் திருப்பள்ளி..
அங்கிருந்து பெரிய அக்காவும் வேறு சில உறவினரும் பேச்சுத் துணைக்கு வந்திருக்கின்றனர்..
யார் பேச்சுக்கு யார் துணை!..
விடியும் முன் தலை குளித்தது.. உலரட்டும் என்று தளர்வாகப் பின்னப்பட்ட கூந்தலில் கமகம என்று மல்லிகைச் சரங்கள்.. எல்லாம் பெரிய அக்காவின் வேலையாகத் தான் இருக்கும்..
நேற்று இரவு அணிந்திருந்ததை விட நகைகள் அதிகம்..
நெற்றிக்கு மேல் இருபுறமும் சூரிய சந்திர வில்லைகள்.. வகிட்டில் நெற்றிச்சுட்டி..
காதுகளில் வேறு விதமான தொங்கல்கள்.. கழுத்தில் சிவப்புக் கல் அட்டிகையும் வேறு சில சங்கிலிகளும்..
ராத்திரி சத்தமில்லாது இருந்த கொலுசுகள் இப்போது சலசலக்கின்றன..
எல்லாவற்றுக்கும் மேலாக மஞ்சள் இழையில் திருமாங்கல்யம் மின்னிக் கொண்டிருந்தது..
கவனமாக காமாட்சியின் முன் கையைப் பற்றினான் சுந்தரம்...
காபித் தம்ளர் இருந்த வெள்ளித் தட்டு நடுங்கியது.. கையில் கூடுதலாக இருந்த வளையல்களும் சிலுசிலுத்தன..
இதென்னடா வம்பாப் போச்சு.. என்று நினைத்துக் கொண்ட சுந்தரம் - காமாட்சியின் கைகளில் இருந்த தட்டை வாங்கி அருகிருந்த சிறு பலகையில் வைத்து விட்டு காமாட்சியை பக்கத்தில் நெருக்கமாக அமர்த்திக் கொண்டான்..
கைகளில் தங்க வளையல்களுடன் கண்ணாடி வளையல்களும் இருந்தன..
பகல் பொழுது கலகலத்துக் கொண்டிருக்கட்டுமே - என்ற நல்ல எண்ணமாக இருக்கலாம்!..
விரல்களில் மருதாணிச் சிவப்பு.. இடது சுட்டு விரல் பெரு விரல்களைத் தவிர்த்து மற்ற விரல்களில் மோதிரங்கள்..
சிவந்திருக்கும் விரல்களைப் பற்றியபடியே காமாட்சியின் முகத்தை நோக்கினான் சுந்தரம்..
அந்தக் காலைப் பொழுதிலும்
முகத்தில் மேலுதட்டில் சற்றே வியர்த்திருந்தது.. தனது கைப்பிடிக்குள் இருந்த அவளது கை விரல்களைக் காட்டி கண்களால் கேட்டான்..
" எட்டு மோதிரம் போட்டுக்கக் கூடாதாம்.. நீங்க காபி குடிங்க.. "
" நீ குடிச்சியா?.. "
காமாட்சியின் முகத்தில் வெட்கம்..
வெள்ளித் தம்ளரை எடுத்து காபியை அருந்தியதும் சுந்தரத்தின் முகம் மாறியது..
" காஃபி நல்லா இருக்கு... அருமை அருமை!.. "
காமாட்சியின் முகத் தாமரை மலர்ந்தது.. இதற்கு மேல் வேறென்ன வேண்டும்!..
மேல் விழிகளால் காமாட்சியின் வேல் விழிகளை விழுங்கிக் கொண்டே சுந்தரம் காஃபியை அருந்த - மெல்லிய புன்னகை காமாட்சியிடம்..
இதற்குள் -
கூடத்தில் பேச்சு சத்தம்..
" வாங்க.. வாங்க.. நமஸ்காரம்.. "
" நேத்து தான் மாயவரத்து ல மச்சினர் மகனுக்கும் முகூர்த்தம்... "
" அதான் ரெண்டு நாளைக்கு முன்னால வந்து விஷயம் சொன்னீங்களே!.. "
" வீட்ல யும் புள்ளைங்களும் மாயவரத்து ல தான் இருக்காங்க.. நான் போட் மெயிலப் புடிச்சி விடியக்
காலயில வந்தேன்.. மளியக் கடை மாடு கன்னு ன்னு இருக்கு.. நாமளும் உஷாரா இருக்க வேண்டியதா இருக்கே.. "
கீழத் தெரு மளிகைக் கடைக்காரர் கல்யாணம் விசாரிப்பதற்காக வந்திருக்கின்றார்..
" ஆமா.. ஆமா.. இங்கேயும் அப்படித்தான்.. எல்லாம் நேத்து சாயங்காலமே கிளம்பிட்டாங்க.. நேத்து அழைப்புக்கு வந்த சொந்தங்க மட்டுந்தான் இப்போ வீட்ல.. நம்ம காலம் மாதிரி ஒரு வாரத்து கலியாணம் எல்லாம் இப்போ ஏது?.. " - ஆமோதித்தவர் உள் நோக்கிக் குரல் கொடுத்தார்..
" யார் வந்திருக்காங்க பாருங்க.. சந்தனம் எடுத்து வாங்க.. பட்சணமும் தாம்பூலமும் கொண்டு வாங்க.. "
சுந்தரமும் காமாட்சியும் உள் அறையில் இருந்து கூடத்துக்கு வந்தபோது - சமையல் கூடத்தில் இருந்து
காமாட்சியின் அம்மாவும் பெரிய அக்காவும் வெள்ளித் தட்டுகளுடன் வெளிப்பட்டனர்..
ஒன்றில் ஜிலேபி, பால்கோவா, முறுக்கு, சோமாசா என பட்சணங்கள்.. மற்றொன்றில் சந்தனமும் விபூதி மடலுடன் குங்குமமும் இருந்தன..
புதுமணத் தம்பதியினர்
இருவரும் வந்திருந்த பெரியவரை கை கூப்பி வணங்கியபடி தண்டனிட்டு எழுந்தனர்..
" பெத்தவங்க பெரியவங்க மனச குளுர வைக்கணும்.. ஒருத்தருக்கு ஒருத்தர் கண்ணா இருக்கணும்.. மகமாயி என்னிக்கும் துணை இருப்பா!.. " - என்றபடி மடலில் இருந்து விபூதி குங்குமம் எடுத்து மணமக்களுக்குப் பூசி வாழ்த்தினார்..
இடுப்புப் பட்டையில் இருந்து மோதிரம் ஒன்றை எடுத்து சுந்தரத்தின் விரலில் அணிவித்து விட்டு மீண்டும் ஒன்றை எடுத்து சுந்தரத்தின் கையில் கொடுத்து காமாட்சிக்கு அணிவிக்கச் சொன்னார்..
" பத்து மணியப் போல சம்பந்தி புரம் ரெண்டாம் அழைப்புக்கு வர்றாங்க.. மத்தியானம் எல்லாருக்கும் விருந்து.. அவசியம் வந்து கௌரவிக்க வேணும்.. " காமாட்சியின் அப்பா விண்ணப்பித்துக் கொண்டார்..
" அதுக்கென்ன வந்துடுவோம்.. ஆனா ரெண்டு மணியாகுமே.. "
தட்டில் இருந்து ஜிலேபி ஒன்றைக் கிள்ளி வாயில் போட்டுக் கொண்டார்..
" அதனால என்ன.. நாங்க எல்லாம் காத்திருக்கோம்.. "
பெரிய அக்கா உள்ளே சென்று காஃபியும் தாம்பூலமும் எடுத்து வந்தாள்..
" சிவ சிவா.. அப்படியெல்லாம் இருக்க வேணாம்.. சின்னஞ்சிறுசுங்க.. அதுங்கள முதல் ல சாப்பிட வெச்சுடுங்க.. நீங்களும் காலத்துல சாப்பிட்டுடுங்க.. எங்கூட இருந்து சாப்பிட ஒருத்தர் போதும்.. ரெண்டு மணிக்கெல்லாம் வந்துடறேன்.. அப்போ நா புறப்படுறேன்.. நாலு நாள் ஆச்சு கடை திறந்து.. "
- என்றபடி காஃபியை அருந்தியவர் தாம்பூலம் எடுத்துக் கொண்டு புறப்பட்டார்..
அவர் சென்றதும் - " பெரியவங்க பெரியவங்க தான்.. " என்ற பெரிய அக்கா தொடர்ந்தாள்..
" மாமாவுக்கு காபி?.. "
காமாட்சியின் அப்பா பெரிய அக்காவுக்கு மாமா முறை தானே..
பெரிய அக்கா இப்படி உரிமையுடன் கேட்டதும் அவளது அன்பினையும் பண்பினையும் கண்டு அங்கிருந்த அனைவருக்கும் மகிழ்ச்சி..
" இப்பதானே இட்லி சாப்பிட்டாங்க.. உங்க மாமா!.. " - காமாட்சியின் அம்மா பதில் கூறவும் -
" அப்பா.. " - காமாட்சி மற்றொரு காஃபியுடன் வந்தாள்..
" மாப்பிள்ளைக்குக் காபி கொடுத்தீங்களா!?.. "
அவருக்கு வீட்டுக்குள் நடக்கின்ற எல்லாம் தெரியும்.. இருந்தாலும் அன்பின் விசாரிப்பு..
" ம்ம்.." புன்னகை ததும்ப காமாட்சி உள் அறைக்குள் சென்றாள்... பின்னாலேயே சுந்தரமும் சென்றான்.. அறைக்குள் சென்ற காமாட்சி அந்த வெள்ளித் தம்ளரை நோக்கினாள்..
சுந்தரம் அருந்தியது போக மீதம் அரை தம்ளர் காஃபி இருந்தது.. சற்றும் யோசிக்காத காமாட்சி அதை எடுத்து மெல்ல அருந்தினாள்..
பின்னால் வந்த சுந்தரம் அப்படியே காமாட்சியை
சிறைப்படுத்திக் கொண்டு காது மடலின் அருகாக சுவாசித்தான்.. கவிதை வாசித்தான்..
" காமாட்சி.. ரெண்டு பேரும் சாப்பிட வாங்க.. "
வெளியில் இருந்து பெரிய அக்காவின் குரல்..
" நல்லவேளை நான் தப்பிச்சேன்.. " காமாட்சியின் முகத்தில் புன்னகை..
சுந்தரத்திற்கோ ஏமாற்ற்ம்..
இர்ண்டாம் மூன்றாம் அழைப்புகளுக்குப் பின் சுந்தரம் காமாட்சி தம்பதியர்க்கிடையே தொடர்ந்த கோலாகலத்தில் ஆர்த்தியும் அருணும்..
ஆர்த்தி பெங்களூரில் குடியேறி விட அருண் - கைக்கு அருகில்..
பெரிய அக்காவும் சின்ன அக்காவும் பூர்வீக சொத்து வேண்டாம் என்று சொல்லி விட தங்கை மட்டும்..
அடுத்த சில மாதங்களில் அவளும் நல்ல விதமாக கரையேறி விட அடுத்த ஓராண்டில் சுந்தரத்திற்கு வங்கியில் வேலையும் கிடைத்து விட்டது..
காமாட்சி வீட்டுக்கு வந்த யோகம் தான் எல்லாம் -
என்று பேசிக் கொண்டனர்..
பூர்வீக சொத்தும் வங்கி வேலையும் சுந்தர - காமாட்சி குடும்பத்தின் மகிழ்ச்சிக்கு அடித்தளம் ஆகின..
சில மாதங்களுக்கு முன் அருணுக்கும் நித்யா வந்து சேர்ந்திட சுந்தர - காமாட்சி தம்பதியருக்கு நிம்மதிக்கு மேல் நிம்மதி..
இப்போது அறுபதைக் கடந்து விட்டார் சுந்தரம்.. காதுகளின் பக்கமாக நரை..
" காபி.. இந்தாங்க.. "
ஊஞ்சலில் அமர்ந்திருந்த சுந்தரம் வாங்கிக் கொள்ள - காமாட்சியம்மாள் அவருக்குப் பக்கத்திலேயே அமர்ந்து கொண்டார்..
" காஃபி நல்லா இருக்கு... அருமை.. அருமை!.. "
காமாட்சியம்மாளின் முகத்தாமரை மலர வேறென்ன வேண்டும்!..
" அன்னைக்கு காதுக்குள்ள
கவிதை ஒன்னு சொன்னீங்களே.. "
" என்னைக்கு?.."
" அதான் அன்னைக்கு!.. "
மஞ்சள் முகத்துத்
தாமரையே
மங்கலம் ஆகிய
பூ மழையே
சுந்தரன் நெஞ்சினில் காமாட்சியே
சூழ்ந்திடும் நலங்கள் தேனாட்சியே!..
சுந்தரன் தோளில் இளங்கிளியே
புதுமலர் பூத்திடும் பூங்கொடியே
வசந்த மலர் என
வரும் நிலவே
வரம் எனக் கிடைத்த வடிவழகே!..
காஃபியும் அன்றைக்கு மாதிரியே இருக்க கவிதையும் அன்றைக்கு மாதிரியே இருந்தது..
கணவரின் தோளில் புன்னகையுடன் சாய்ந்து கொண்டார் காமாட்சியம்மாள்...
***
ஓம் சிவாய நம ஓம்
**
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..