நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், மார்ச் 31, 2016

பாடும் வானம்பாடி

அக்கா.. அக்கா..வ்!..

வாம்மா.. தாமரை!.. வா.. வா!..

என்னக்கா.. எப்படியிருக்கீங்க?.. பார்த்துப் பல நாளாச்சே!..

என்னம்மா.. மறந்துட்டியா?.. மகளிர் தினத்தன்னைக்கு பார்த்தோம்.. அதுக்கு அப்புறம் ஒருநாள் வடபத்ர காளி கோயில்ல பார்த்தோம்!.. பார்த்துப் பல நாளாச்சு..ங்கிறியே!..

ஆமாங்க்கா!.. இருந்தாலும் பல நாள் ஆன மாதிரி மனசு பரிதவிக்குதுக்கா!..

அடடே!.. மனசு... ன்னதும் நினைவுக்கு வருது!..

என்னக்கா?..

நேசம் சுமந்த வானம்பாடி!..

இவங்க தான் - தாமரை
நேசம் சுமந்த வானம்பாடியா.. ஏதோ கவிதை மாதிரி...ல்ல இருக்கு!..

கவிதை தான்.. ஆனா, கதை!..

என்னக்கா.. சொல்றீங்க!..

ஒரு கதைய கவிதை மாதிரி... இல்லை.. இல்லை.. கலைச்சித்திரம் மாதிரி தீட்டியிருக்கார் ஒருத்தர்!..

எந்த இதழ்..ல வந்திருக்கு அக்கா!..

இது எந்த இதழ்..லயும் வரலை.. அதுக்கெல்லாம் அப்பாற்பட்டது இது.. தன்னோட படைப்பு...ன்னு இணைய தள கதைப் போட்டிக்கு அனுப்பி இருக்கார்.. 

யார்!?..

அதை அப்புறமா சொல்றேன்.. அங்கே - வாசகர்கள் அளிக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில முதலிடத்துக்கு தேர்வாகும் ..அப்படின்னு விதிமுறை.. அந்த தளத்தில இந்த கதைக்கு போதுமான மதிப்பெண்கள் கிடைக்கலே..

அடடா!..

போட்டி முடிவு எல்லாம் வெளியானதும் தன்னோட கதையை தன்னோட தளத்தில வெளியிட்டு இருக்காரு!..

வலைத் தளத்தில வந்த கதையாமா?..

ஆமா!.. நானும் கேக்கணும்..னு நெனைச்சேன்.. நீ இப்பெல்லாம் வலைப்பூ பக்கம் போறதில்லையா?..

அதையேங்கேக்கிறீங்க அக்கா!.. மறுபடியும் வைரஸ் வந்து அடிச்சிடுச்சி... இழு..இழு..ன்னு இழுத்துக்கிட்டு இருந்த இணைப்பும் காசு சரியாப் போச்சு.... ன்னு கமுக்கமா ஆயிடிச்சு.. இனிமே.. டார்லிங் பணம் அனுப்புனதும் தான் எல்லாத்தையும் சரி பார்க்கணும்!..

அதுதானா விஷயம்!..  சரி.. இந்தக் கதையை யாரு எழுதுனதுன்னு தெரியுமா?..

தெரியலையே!..

அதான்.. நம்ம.. மனசு!..

அட.. மனசு..ன்னா குமார் அண்ணா!.. அவரோட கதைக்கா பரிசு கிடைக்கலே!.. என்னக்கா.. இது.. மனசு உருகுற மாதிரி எழுதுவாரே!.. அப்பா.. அப்பத்தா.. மாமா.. மாப்பிள்ளை..ன்னு உறவையெல்லாம் ஒண்ணா வெச்சி வீட்டுக்குள்ள களை கட்டுவாரே!.. அவரு கதை..ன்னா எனக்கு ரொம்பவும் இஷ்டம்..க்கா!...

அதே மாதிரி தான்.. இந்தக் கதையும் .. வா.. அவரோட வலைத்தளத்துல அந்தக் கதைய படிப்போம்!..

இல்லே.. வேணாங்க்கா.. நீங்களே.. அதை கதையாச் சொல்லுங்க.. அப்பத்தான் ரசனை!..

சரிதான்.. இந்தக் கதையெல்லாம் மனசும் மனசும் வெச்ச மாதிரி படிக்கணும்..  படிச்சு படிச்சு ரசிக்கணும்.. இருந்தாலும் சொல்றேன்..


“என்னங்க!.. உங்கப்பாக்கிட்ட  இது வேணுமான்னு கேளுங்க.. சும்மா பரண்ல தூக்கிப் போட்டு வச்சி என்னத்துக்கு இடத்தை அடச்சிக்கிட்டு கிடக்குது...” 

சுந்தரியோட கேள்விதான் கதைக்கு ஆரம்பம்.. 

“..என்னது?... ரேடியோதானே... அவரு ஆசையா வச்சிருக்காரு... 

கிடந்துட்டுப் போகுது போ!...” 

அலுப்பாகச் சொல்பவன் சுதாகர்..

அது ஒரு இனிய குடும்பம்.. பெரியவர் ராகவன்.. அவரோட மகன் சுதாகர். மருமகள் சுந்தரி.. அன்புக்கு அடையாளமாக பேரன்..

மாமனார் பழசு பட்டையெல்லாம் சேத்து வெச்சிருக்கிறார் - ன்னு, 
மருமகளுக்குக் குறை.. ஆனாலும் தங்கமான மருமகள் சுந்தரி..

இத்தனைக்கும் பழைய பேப்பரையெல்லாம் சேர்த்து வைக்கிறவன் - சுதாகர்..

ஆனா, அவங்களுக்குத் தெரியாது மாமனாரோட ரேடியோவுக்குள்ள ஒரு கதை இருக்கிறது!..

ஓஹோ!..

சின்ன வயசில அவங்க அப்பா வாங்கிக் கொடுத்த நேஷனல் ரேடியோ அது!.. அவருக்கு அதை தலைமாட்டுல வெச்சிக்கிட்டு ஒரு படப்பாட்டு.. விவித பாரதியின் வர்த்தக சேவை ..ன்னு பாடல்கள் கேட்பதில் பிரியம்.. அவங்க அப்பாவுக்கோ நாட்டு நடப்பும் வயலும் வாழ்வும் கேட்பதில் இஷ்டம்.. இதையெல்லாம் விட..


இதையெல்லாம் விட!?..

அதில ஒலிச்சித்திரம் கேட்க வரும் அத்தை மக.. கமலம்.. தான் ராகவனுக்கு இஷ்டம்...

ஐ!.. இப்பதான் கதை சூடு பிடிக்குது!..ரேடியோ.. அதுக்கு அடுத்தபடியா கமலம் தான் ராகவனுக்கு உயிர்... கமலம் கருப்பா இருந்தாலும் ராகவனுக்கு விருப்பா இருந்தா.. ராகவனும் கமலமும் ஒற்றைத் தலகாணியில் அங்கிட்டும் இங்கிட்டுமாக படுத்துக் கிடந்தாலும் நடுவில பாடிக்கிட்டு இருக்குமாம் ரேடியோ.. அத்தனை நாகரிகமான நளினமான பிரியமாம் அவங்களோடது..

ம்ம்!..

ஆனா.. அந்த அன்பை வெளியே சொல்லாமலே கமலம் சுந்தரத்தை கட்டிக்கிது.. பிரிவைத் தாங்க முடியாம தாங்கிக்கிறார் ராகவன்.. அப்பாவுக்காக 
வசந்தாவை கை பிடிக்கிறார்...

என்னக்கா.. இப்படியாயிடிச்சு!..  இந்தப் பொண்ணுங்களே இப்படித்தான்.. எதையும் காலத்தில சொல்றதேயில்லை!..


இவங்க தான் அக்கா - தமிழ்ச்செல்வி
அப்படியில்ல.. தாமரை!.. அந்த காலகட்டத்தில இந்த அளவுக்கு சுதந்திரம் இருந்ததே மிகப் பெரிய விஷயம்.. அதுவும் அத்தை பெண்ணுங்கறதால!...

உங்க அத்தான்.. என்னை சுத்தி சுத்தி வந்தாலும் - நான் அவர்கிட்ட மனந்திறந்து பேசினதே இல்லை!.. அங்கிட்டு இங்கிட்டு தோட்டத்தில தோப்புல உங்க அத்தானைப் பார்த்துட்டா.. ஒரு பயம்.. பதற்றம்... கை காலெல்லாம் உதற ஆரம்பிச்சுடும்... பேச்சே வராது!... வெறுங்காத்து மட்டுந்தான்!.. கல்யாணம் ஆகி பத்து நாளாகியும் அவரு முகத்தைப் பார்க்க தைரியம் வரலை..

ஹா..ஹா..ஹா!..

நீ என்னம்மா.. இன்னைக்கு சிரிக்கிறே!.. அன்பு.. பிரியம்.. பாசம்.. நேசம்.. இதெல்லாம் புன்னகையா பூத்து கண்ணுக்குள்ள பொங்கி வர்றப்ப - உலகம் அறியாத பொண்ணு அதை நேருக்கு நேரா பாக்குறது எத்தனை பெரிய கஷ்டம் தெரியுமா?.. இந்தக் காலத்துல ஆணுக்கும் பொண்ணுக்கும் எல்லாமே சர்வ சாதாரணமா போச்சு!..

உண்மைதா..ங்க்கா!.. இந்தக் காலத்து ஆணுக்கும் பொண்ணுக்கும் எல்லாமே சர்வ சாதாரணமா போச்சு!.. அதனால எவ்வளவு பிரச்னைங்க!..

பிரியத்தைச் சொல்லாமலே.. இளஞ்ஜோடி ரெண்டும் பிரிந்து போயிடறாங்க.. அப்பா காலமானதுக்குப் பிறகு ராகவன் அந்த ரேடியோவை பொக்கிஷமா வெச்சிருக்கிறார்.. அந்த ரேடியோவைப் பார்க்கிறப்ப எல்லாம் அப்பாவோட முகம்.. கமலாவோட முகம்!.. எதையும் மறக்க விடாம காலம் அவரை வாட்டி  எடுக்குது...

பாவம்..க்கா!.. வயசான காலத்தில இப்படி வேதனையும் கூடவரும்.. இல்லே!..

ஆனா.. ராகவனும் ஒரு தப்பு பண்ணிடறார்..

என்னது?..

சுதாகர்..கிட்ட இல்லாட்டியும், மருமக.. கிட்டயாவது சொல்லி இருக்கலாம்.. அம்மா... இந்த ரேடியோ பெட்டிக்குள்ள இப்படி ஒரு கதை இருக்கு... நீ உன் மனசுக்குள்ள வெச்சிக்கோ.. யார்கிட்டயும் சொல்லிடாதே!.. அப்படியின்னு.. 

அதுக்கப்புறம் அந்த சேதி பக்குவமா மகனுக்குப் போய்ச் சேர்ந்திருக்கும்... ரேடியோ பெட்டிக்கும் ஒரு மரியாதை கிடைத்திருக்கும்!..

அதானே!.. ஆனா - பெரியவர் மனசுக்குள்ளே அதைச் சொல்லியிருந்தா தன்னை எப்படி நினைப்பாங்களோ.. ன்னு ஒரு கலவரமும் இருந்திருக்கலாம்.. அல்லவா?..

இருந்திருக்கலாம்.. ஆனா, அங்கே தானே கதாசிரியரின் கற்பனை கொடிகட்டிப் பறக்குது!... அதைச் சொல்லாம மறைக்கிறதால தானே கதை முடியிறப்போ   
கண்ணு கலங்குது!...

சொல்லுங்க..க்கா!.. சொல்லுங்க!..

கால ஓட்டத்தில் வீட்டுக்குள் இருந்த -

கறுப்பு வெள்ளை டீவி போனது.. கலர் டீவி வந்தது.. ஆனா, புதுசாக ரேடியோ பெட்டி எதுவும் வரவில்லை..

பெரியவரோட ரேடியோவும் அதோட மூச்சை நிறுத்திக் கொண்டது.

அதுக்கப்புறம் அதோட இருப்பிடம் சாக்கு மூட்டைக்குள் என்றானது...

காதோட கேட்ட பாட்டெல்லாம் கண்ணுக்கு முன்னால வந்ததும் 
மத்த ஜனங்களைப் போல அவங்களும் ரேடியோவை மறந்தே போனாங்க...

ஆனா, பெரியவர் மட்டும் ரேடியோ பெட்டியவே நினைப்பில் வெச்சிருந்தார்.. நேரங்கிடைக்கிறப்ப சாக்கு மூட்டையில இருக்கிறதை ஆசை தீர பார்த்துக் கொள்வார்.. ஆனாலும் ஆசை தீர்ந்து போற விஷயமா!.. 

சோகமும் ஒரு சுகம்..ன்னு - தனக்குள்ளேயே எல்லாத்தையும் தாங்கிக்கிட்ட பெரியவர் - போதுமடா.. சாமீ..போதும்... ன்னு ஒருநாள் போய்ச் சேர்ந்துடறார்..

.......... .......... .......... !?..

அடுத்தடுத்து எல்லாம் நடந்து முடிஞ்சுடுது...

வீடு வெறிச்.. ந்னு ஆகிப் போச்சு...

ஆனாலும் - காலம் தான் ஓடிக்கிட்டு இருக்கே...

மறுபடி ஒருநாள் .. பரணியை சுத்தம் பண்ணிய வேளையில் - 


எதுக்கு மாமா... அந்த ஓட்டை ரேடியோ.. பழைய சாமான்காரனுக்கிட்ட தூக்கிக் கொடுக்கலாம்ல்ல?... 

சாதாரணமாக - தான் கேட்டது சுந்தரியின் நினைவுக்கு வந்தது.. 

அது என்ன பண்ணுது... அது பாட்டுக்கு இருக்கட்டும்... என்னோட உசுரு அது.. 

அதெல்லாம் உங்களுக்குப் புரியாது.. அதுக்குள்ள நான் வாழ நினைச்ச வாழ்க்கை இருக்கும்மா.. அது பாட்டுக்கு இருந்துட்டுப் போகட்டும்!.. 

பெரியவர் - அன்று சொன்ன வார்த்தைகள் 
காதுகள்ல இருந்தாலும் கவனத்துல இல்லாததால - 

சொல்லப்படாத நேசம் சுமந்த ரேடியோ பெட்டி பரணியில இருந்து இறங்குது..

அடுத்த கொஞ்ச நேரத்துக்கெல்லாம் - 
விதியின் வலிமையால் வீதியில் பழைய சாமான்காரனின் குரல்..

அவனுடைய சைக்கிளின் பின்னால் இரும்புப் பெட்டிக்குள் வைக்கப்பட்டது.. அதற்கு வேறெதும் நேர்ந்து விடாதபடிக்கு - ஒரு பக்கமாக கட்டப்பட்டது..

அடுத்த சில விநாடிகளில் -  

நினைவுகளைச் சுமந்தபடி - நேசம் சுமந்த வானம்பாடியாக
எங்கோ சென்று கொண்டிருந்தது - ரேடியோ...

.......... .......... .......... !..

எப்படி..ம்மா இருக்கு?..

மனசெல்லாம் பாரமா இருக்கு அக்கா!.. 

சரி.. விடு.. கற்பனைக் கதை தானே!.

இல்லை.. இது வெறும் கற்பனை மாதிரி இல்லை!.. குமார் அண்ணாவுக்கு மனமார்ந்த பாராட்டுக்களை சொல்லணும்!..

நம்ம ஒவ்வொருத்தர் மனசிலயும் ஒளிஞ்சுக்கிட்டு இருக்கிற உண்மை!.. உண்மை ஒருநாளும் உறங்காது.. ஒருத்தரையும் உறங்கவும் விடாது!...

ஆமாம்.. தாமரை!.. நேத்து இந்தக் கதையை உங்க அத்தானுக்கு வாசித்து காட்டினேன்... உடனே என்ன செஞ்சார் தெரியுமா!..

என்னக்கா செய்தார்.. அத்தான்?..

அவங்க தம்பி வீட்டுக்குப் போயி - அங்கேயிருந்த அலாரம் கடிகாரத்தை தூக்கிக்கிட்டு வந்துட்டார்!..ஏன்!?..

அது எங்க மாமனார் வெச்சிருந்ததாம்.. அதுக்குள்ள ஏதாவது கதை இருக்கும் .. இனிமே இது இங்கேயே அப்பா நினைவா இருக்கட்டும்..ன்னு சொல்லிட்டார்...

நிஜந்தான் அக்கா!.. அந்த ரேடியோவுக்குள்ளயும் கடிகாரத்துக்குள்ளயும் கதை இருக்கோ இல்லையோ..

இனிமே நம்ம பிள்ளைங்க பார்க்கப்போறது இல்லை.. அதுக்காகவாவது அதை எல்லாம் முடிஞ்ச வரைக்கும் பாதுகாத்து வைப்போமே!.. அக்கா நான் ஒரு முடிவுக்கு வந்துட்டேன்!..

என்னது?..

எங்க அம்மா எனக்கு ஒரு அம்மி கொடுத்தாங்க.. அது எங்க ஆச்சி அரைச்ச அம்மியாம்.. நான் அதை அப்படியே போட்டு வெச்சிருக்கேன்.. இனிமே அதை பத்திரமா பார்த்துக்கப் போறேன்!..

அதை அப்படியே பார்த்துகிறதை விட, தினசரி சட்னி மசாலா..ன்னு அரைச்சு பழகு.. அது தான் நல்லது..

எப்படி?..

அம்மியில குழவி பிடிச்சி அரைக்கிறதனாலே தோள்பட்டை, மார்பு, இடுப்பு இங்கெல்லாம் தேவையில்லாத கொழுப்பு எல்லாம் கரைஞ்சி...

கொழுப்பு எல்லாம் கரைஞ்சி?..

குண்டாட்டம் உடம்பு எல்லாம் செண்டாட்டம் ஆகிடும்!..
மார்பகப் புற்று நோயெல்லாம் ஊரை விட்டே ஓடிப் போய்டும்!..

அக்கா..ன்னா அக்கா தான்!.. சரி.. நான் கிளம்புகிறேன்!..

இரும்மா.. வரகரிசி கஞ்சி ஒருவாய் குடித்துப் பார்!..

வரகரிசி கஞ்சியா?..

ஆமாம்.. வரகரிசி கஞ்சி தான்!.. பட்டுக்கோட்டை நாடியம்பாள் பங்குனியில் வரகரிசி மாலை போட்டுக்கிறாள் என்றால் சும்மாவா!..

அப்படியா?.. எனக்குத் தெரியாதே!..

தாமரை.. பட்டுக்கோட்டையில் வரகரிசி திருவிழா நடக்கிறது.. போகலாமா!...

போகலாமே!... அப்போ.. அடுத்த சந்திப்பு பட்டுக்கோட்டையிலா!..

ஆமாம்.. பட்டுக்கோட்டை வரகரிசி திருவிழாவில் சந்திப்போம்!..

வாழ்க நலம்!.. 
* * *

ஞாயிறு, மார்ச் 27, 2016

வெற்றி நமதே..

கடந்த சில நாட்களாக அதிகப்படியான நேரத்திற்கு வேலை..

அதையெல்லாம் மனம் விரும்புவதேயில்லை..
எனினும் - செய்தாக வேண்டிய சூழ்நிலை..

உலகெங்கும் வேலை நேரம் எட்டு மணி என்றாலும் -
இந்தப் பாலை வெளியில் பத்து மணி நேரம் என்பது குறிப்பிடத்தக்கது..

வேலை!.. விரும்பி ஏற்றுக் கொண்ட ஒன்று!..

அவ்வப்போது முன்னுக்குப் பின் முரணாகவே இருக்கும்..

வேலைத் தளத்தின் நிகழ்வுகள்!?..

அவைதான் மனதில் ரணங்களை ஏற்படுத்துபவை..


அன்பின் திரு கில்லர்ஜி அவர்கள் -
இங்குள்ள வேலைச் சூழலைப் பற்றி சொல்லியிருந்த வார்த்தைகள் இதோ!...

முட்டாளாக இருப்பதை விட
முட்டாளாக நடிப்பது கொடுமை!..

வளைகுடா நாட்டில் -
பரந்து விரிந்து கிடக்கும் வறண்ட பாலை நிலத்தை விடவும்
மூடர்களால் நிறைந்த வேலைத்தளம் தான் கொடுமையான விஷயம்!..

சரி.. அதைப்பற்றி வேறொரு நாளைக்கு
வாய்ப்பு கிடைக்கும் போது பேசுவோம்!..

இன்று விடியற்காலையில் - வேலைத்தளத்திலிருந்து திரும்பியதும்
அன்பின் திரு. சே. குமார் அவர்களின் தளத்தினைக் கண்டேன்..

பிரதிலிபி எனும் வலைத்தளம் நிகழ்த்திய சிறுகதைப் போட்டியில்
வெற்றி வாய்ப்பு நழுவியதைப் பற்றி அந்தப் பதிவில் குறிப்பிட்டிருந்தார்..

அதிலிருந்து ஒரு பகுதி இதோ!..

வெற்றி நமதில்லை

பிரதிலிபி - கொண்டாடப்படாத காதல்கள் போட்டிக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டு விட்டன.. 

வெற்றி பெற்ற எழுத்தாளர்களுக்கு வாழ்த்துக்கள். 

இந்த முறையிலான தேர்வு சரியாக வருமா என்று தெரியவில்லை. கொடுக்கப்படும் மதிப்பெண்களை வைத்தும் வாசித்தவர்களை வைத்தும் தேர்ந்தெடுக்கும் முறை சரிதானா தெரியவில்லை. 

நானெல்லாம் யாருக்குமே ஓட்டுப் போட முடியவில்லை... 

அவர்களிடம் தனிப்பட்ட முறையில் மின்னஞ்சல் பண்ணிக் கேட்டபோது உங்களுக்கு நீங்களே வாக்களிக்க முடியாது. மற்றவர்களுக்கு அளிப்பதில் பிரச்சினை இல்லை என்றார்கள்... 

ஆனாலும் முடியவில்லை.. 

அப்படித்தான் என் நண்பர்கள் சிலரும் எனக்கு வாக்களிக்க முடியவில்லை என்றார்கள். 

20 மதிப்பெண்கள் வாங்கிய இந்து என்பவர் முதல் பரிசை தட்டிச் சென்றிருக்கிறார். 

எனக்கு கிடைத்தது 13 மதிப்பெண்கள்.. எனது கதை அதிக மதிப்பெண்கள் வரிசையில் நாலாவது இடம் என்று நினைக்கிறேன். 

நிறைய நல்ல எழுத்தாளர்களின் எழுத்துக்களுக்கு ஒரு மதிப்பெண் கூட கிடைக்கவில்லை என்பதும் சிலருடைய எழுத்து வாசிக்கப்படவே இல்லை என்பது மிகப்பெரிய வேதனை... 

இப்படிப்பட்ட முறையிலான போட்டித் தேர்வுகளில் நல்ல எழுத்துக்கு அங்கீகாரம் கிடைப்பதில்லை.. 

அதற்கு மாறாக அதிக நண்பர்களை முகநூலில் வைத்திருப்பவர்களே வெல்ல முடியும்... 

பிரதிலிபி - இனி வரும் போட்டிகளில் இந்த முறையிலான தேர்வை மாற்றி அமைத்தால் நல்லது. 

ஒரு மதிப்பெண் கூட கிடைக்காத நல்ல எழுத்துக்காரர்கள் போட்டிகளை தவிர்க்க ஆரம்பித்து விடுவார்கள். 

நான் இங்கு சொல்ல விரும்புவது -

எனக்கு அங்கு கருத்திட்ட - மதிப்பெண்கள் அளித்த அனைத்து உறவுகளுக்கும்

மேலும், கதை ரொம்பப் பிடித்துப் போய் அதற்கென தனிப்பதிவு இட்ட அன்பின் ஐயா. துரை. செல்வராஜூ அவர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. 

அந்தக் கதையை விரைவில் இங்கு பகிர்கிறேன்.

* * *

அவருடைய வார்த்தைகளைக் கண்டு மிகவும் வருத்தமடைந்தேன்..

மதிப்பெண்கள் என்பது ஒரு புறம் இருக்கட்டும்...

எழுத்துக்கள் வாசிக்கப்படவில்லை எனும் போது -

நல்ல எழுத்துக்காரர்கள் போட்டிகளை தவிர்க்க ஆரம்பித்து விடுவார்கள்.

ஒரு சமயத்தில் எழுதுவதையும் தவிர்த்து விடுவார்கள்..

நாற்பது ஆண்டுகளுக்குப் பின் ஒரு நிதர்சனத்தினைக் கண்டு வியந்து நிற்கின்றேன்..


கதைகளும் கவிதைகளும் என்னுள் அரும்பியபோது - எனக்கு வயது பதினேழு..

எழுதிக் கொடுத்த திருமண வாழ்த்து மடல்கள் - எத்தனை எத்தனையோ!..

எனது ஆக்கங்களை அன்றிருந்த வாரஇதழ்களுக்கு அனுப்பி வைப்பதே பொழுது போக்கு!..

முழு நாளும் நூலகத்தினுள் தான் கழிந்தது..

எனது கதைகளும் கவிதைகளும் - வழக்கம் போலவே,
என் தந்தையின் காதுகளுக்குச் சென்றன..

உருப்படுற வேலையைப் பாருப்பா!..

என்றார் - நிதானமாக.. வேறொன்றும் சொல்லவில்லை..

ஆனால், எனது கதைகளும் கவிதைகளும் அவருடைய நெஞ்சினுள் மகிழ்ச்சியை விதைத்திருந்ததை அப்புறம் தான் தெரிந்து கொண்டேன்..

1950 களில் தஞ்சையில் நாடகக் குழு ஒன்றினை நடத்தியவர் - என் தந்தை..

அந்த காலகட்டத்தில் திரு M.R. ராதா, கலைஞர் கருணாநிதி, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஆகியோருடன் நட்புறவில் இருந்தவர்..

தஞ்சை ராமநாதன் செட்டியார் ஹாலில் பல நாடகங்களை நடத்தியவர்..

சரி.. விஷயத்திற்கு வருவோம்!..

நிறைய நல்ல எழுத்தாளர்களின் எழுத்துக்களுக்கு ஒரு மதிப்பெண் கூட கிடைக்கவில்லை என்பதும் சிலருடைய எழுத்து வாசிக்கப்படவே இல்லை என்பது மிகப்பெரிய வேதனை... 

- என்பதான கருத்து வருத்தத்திற்குரியது..

அவரவருக்கும் அவர்களின் படைப்பின் மீது நம்பிக்கை இருக்கும்..

அதனைத் தகர்த்துக் கொண்டு வேறொன்று மேலேறிப் பயணிப்பதைத் தாங்கிக் கொள்வதென்பது இயல்பான விஷயமில்லை...

தமது எழுத்துக்கள் கவனிக்கப்படவே இல்லை எனும் போது ஏற்படும் வலி!..

அதைத்தான் திரு. குமார் அவர்கள் கூறுகின்றார்..

அதனை நிஜமாகவே உணர்ந்திருக்கின்றேன்..

ஆனந்த விகடனுக்கு - தஞ்சையைப் பற்றிய தகவல் தொகுப்பு ஒன்று கலையகம் எனும் பெயரில் அனுப்பி வைத்தேன்..

அதனை ஏற்றுக் கொண்டு வெளியிட்டதுடன்- அந்த வாரத்தின் இதழும் ரூ.30/- பரிசுத் தொகையும் வழங்கி மகிழ்வித்தனர்..

அதன்பின் - எனது படைப்புகளில் ஒன்று
வேறொரு இதழில் வேறொரு பெயரில் வெளியானது..

அதிர்ச்சி.. ஆச்சர்யம்..

அப்போது - 35 ஆண்டுகளுக்கு முன் - பேனாவினை மூடி வைத்தேன்..

கதை, கவிதை - அனைத்தையும் புறக்கணித்தேன்..

ஆனாலும், கற்பனையின் ஊற்றுக் கண்களைத் திறந்தே வைத்ததேன்!...

நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும் சில கவிதைகள்..

எனது கற்பனைக் காட்டுக்குள் நானே வனவாசம் செய்தேன்..

காலங்கள் - காட்டுக் குதிரைகளாக ஓடிப் போயின..


2012 நவம்பர் மாதம் தஞ்சையம்பதி மலர்ந்தது..

எனக்கென தளத்தினை வடிவமைத்ததும் தான் சுதந்திரக் காற்று சுற்றிச் சூழ்ந்தது..

எனது தமிழ்.. எனது தளம்..
எனது எண்ணம்.. எனது எழுத்து!..

இவற்றின் மீது மேலாண்மை செய்திட இனி எவரும் இல்லை!..
என்ற எண்ணமே - இனித்திருந்தது நெஞ்சினில்!..

கவிதைகளுக்காகவும் கதைகளுக்காகவும் தான்
இந்தத் தளத்தினைத் தொடங்கினேன்...

நினைத்தது ஒன்று.. ஆனால் நடந்தது வேறொன்று!..

அவ்வப்போது - இயற்கை நலன்களைப் பற்றிய பதிவுகள் - என்றாலும்..
தேவாரம், திருத்தலம், திருக்கோயில் செய்திகளே பதிவுகளாகின்றன!..

வலைச்சரத்தில் முதன்முதலில் அம்பாளடியாள் அவர்கள் அறிமுகம் செய்தார்..

அதன்பின் - பலமுறை தஞ்சையம்பதி வலைச்சரத்தில் சிறப்பிக்கப்பெற்றது..

ஆயினும் வருவோரும் கருத்துரைப்போரும் குறைவு..

எனது தமிழும் எனது தளமும் 
இறையியலைக் கொண்டிலங்குவதால் 
குறையுடையதாகிப் போனதுவோ!..

அது நிறையே அன்றி - குறையானதும் அல்ல.. குறைவானதும் அல்ல!.

எனினும்,

மிகுந்த வருகையாளர்களைக் கொண்டிருக்குமேயானால் -
குமார் அவர்களுடைய சிறுகதையினை பிரதிலிபியில் வாசித்ததும்,
அதில் மனம் லயித்து அதற்காகவே ஒரு பதிவினை வழங்கி
நண்பர்கள் மத்தியில் அறிமுகம் செய்து - வாக்களிக்குமாறு
கேட்டுக் கொண்டது நிறைவேறியிருக்கும்..

பெரும்பான்மையான வாக்குகள் அந்தச் சிறுகதைக்குக் கிடைத்திருக்கும்..
நண்பர் குமார் அவர்களும் வெற்றிக் கனியை எட்டியிருப்பார்...

நூலிழை இடைவெளியில் தான் வெற்றி விலகிப் போயிருக்கின்றது..

இழப்பு - வெற்றிக்கேயன்றி - நமக்கு அல்ல!..

மகாகவி காளிதாஸ் எனும் திரைப்படத்தில் - கவியரசர் கண்ணதாசன்,

ஊருக்குக் கதை சொல்வோர்
உள்ளத்தை வதை செய்தால்
சீர் பெறும் கவி வாழுமா?..

- என்று கேட்டிருப்பார்...

தஞ்சையம்பதியின் பதிவு ஒன்றினைத்
தனது பெயரில் ஒருவர் வெளியிட்டிருந்தார் - சில வருடங்களுக்கு முன்!..

பதிவின் முத்திரைச் செய்திகள் - அங்குமிங்கும் சுற்றிக் கொண்டு
Facebook - வழியாக எனக்கே வருகின்றன..

அதைக் கண்டு வரும் சீற்றம் - ஒரு நிமிடம் தான்.. அதன்பின்,

காய்த்த மரம் தானே கல்லடி படும்!.. என, மனம் அமைதியாகி விடும்..


அவ்வாறு செய்தவர்கள் தான் ஒருசிலர் தான்.. எனினும்,
அதுவே என் எழுத்துக்களுக்கான வெற்றி எனக் கருதுகின்றேன்...

அன்பிற்குரிய நண்பர்கள் வற்புறுத்தியதால்தான் -
கடந்த வருடம் நடந்த சந்திப்பு விழாக் குழுவினர் நடத்திய போட்டியில் -
பொருள் பொதிந்த பதிவுகளுடன் கலந்து கொண்டேன்...

எழுத்துக்கள் - எண்ணங்கள் என்ற ஆவல் மட்டுமே மீதூறியிருந்தது...

அந்த வேளையில் கூட,
வெகுவான பார்வையாளர்கள் தளத்திற்கு வந்து கருத்துரைத்ததில்லை..

மிக சிரமமான சூழ்நிலை அப்போது..

தங்கியிருந்த அறையை முற்றாக ஒழித்துக் கொடுக்க வேண்டும்..
அந்த வாரத்தில் திட்டமிட்டபடி ஊருக்கும் பயணப்பட வேண்டும்..

நம்புவது கடினம்!..

தங்கியிருந்த அறையை விட்டு கிளம்புவதற்கு
முதல் நாள் வரை விழாவினைக் குறித்த பதிவுகள் தான்!..

இதெல்லாம் வெளியில் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை!..

இந்த சமயத்திலாவது இவர்களெல்லாம் எனது தளத்திற்கு வரவேண்டும்!..
- என விரும்பினேன்..

அந்த ஆவல்.. அது தான் நிறைவேறவில்லை!..

அதற்குக் காரணம் -

இதயப் பெருவெளியில் இணையாத காரணமாக இருக்கலாம்..

ஆனால் - இதற்கெல்லாம் கவலை கொள்ள நேரமில்லை..


இன்னொரு எழுத்தினை விளைவிக்கும் எழுத்தே - எழுத்து!..

இப்படி யாரும் சொல்லியிருக்கின்றார்களா?.. எனக்குத் தெரியாது..

ஆனாலும் - என் நெஞ்சகத்தினுள் சிம்மாசனம் இட்டு அமர்ந்திருப்பது..

அன்பின் குமார்!..

தங்கள் எழுத்து என்னுள் ஒன்றினைத் தோற்றுவித்தது..

அந்த வகையில் வெற்றி உங்களுடையதே!..

அதை விடுத்த எதிர்மறை எண்ணங்களைத் தவிர்க்கவும்..

கவிச் செருக்கு!.. என்று இன்னொன்று உள்ளது..

நாமே வெல்வோம்!. - என்பது அது..

ஆனாலும், பிறர் கொண்ட நேற்றைய வெற்றிகள் எல்லாம் என்ன ஆயின?..

எவருக்கும் தெரியாது!..

ஒரு மதிப்பெண் கூட கிடைக்காத நல்ல எழுத்துக்காரர்கள் போட்டிகளை தவிர்க்க ஆரம்பித்து விடுவார்கள். 

- எனும் தங்களுடைய வரிகளுக்காகவே இந்தப் பதிவு!..

புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை..
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை!..

- என்று வரைந்த கவியரசர்,

குழந்தையின் கோடுகள் ஓவியமா - இந்தக்
குருடன் வரைவது ஒரு காவியமா!..

- என அவையடக்கமும் கூறுவார்..

குழந்தையின் கை தீட்டிய கோடுகள் 
ஓவியம் ஆவதும் காவியம் ஆவதும்
யாருடைய கையில்!.. 

வாழ்க நலம் 
***

செவ்வாய், மார்ச் 22, 2016

நீர் வாழ்க..

நீரின்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வானின்று அமையாது ஒழுக்கு. (0020)

பஞ்ச பூதங்களின் வரிசையில்
இரண்டாவதாகக் குறிக்கப்படுவது - நீர்..


அதனால் தான் -

நீரின் சிறப்பை வான் சிறப்பு - என, இரண்டாவதாக வைத்து
வள்ளுவப் பெருந்தகையும் நமக்கு அறிவுறுத்துகின்றார்..

ஆனால், நாம் தான் கேட்கவில்லை..

கேட்டிருந்தால் - 

கடந்த வருடக் கடைசியில் பெய்த மழையினால் -
ஏரி குளங்கள் நிறைந்து சென்னை மாநகர் செம்மையுற்றிருக்கும்..

சில பகுதிகள் சீரழிவுகளில் இருந்து தப்பித்திருக்கும்..

நீர் மேலாண்மை!..

மிகச் சிறப்பான சொல்லாட்சி..

அதனை வெறும் சொல்லாகக் கொள்ளாமல்
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே - 
செயலாற்றிக் காட்டியவர்கள் நம் முன்னோர்கள்..

ஏனடா.. இந்தப் பழம்பெருமை!.. - என்று ,
தருக்கிக் கொண்டவர்களால் தான்
நிலமும் நிலத்தடி நீரும் மாசடைந்தன...


காவிரி தென்பெண்ணை பாலாறு - தமிழ் 
கண்டதோர் வைகை பொருணை நதி - என 
மேவிய ஆறுகள் பலஓட திருமேனி
செழித்த தமிழ்நாடு!..

என்று இறும்பூதெய்துகின்றார் மகாகவி..

ஆனால் - இன்றைய நிலை?..

செம்மையாகப் பராமரிக்கப்படாத வடிகால்கள் கண்காட்சியாகின்றன!..

நீர் நிறைந்த ஆறுகளால் செம்மையுற்றிருந்த
தமிழகத்தைப் பாழாக்கியது - நாம் தானே!..

குளங்களும் ஏரிகளும் கண்மாய்களும் அழித்து ஒழித்த அவலத்தை 
நம் முன்னோர்கள் கண்டிருப்பார்களேயானால்
இதற்காகவா - இப்பாடு பட்டோம்!.. - என,
நாக்கைப் பிடுங்கிக் கொண்டு மாண்டிருப்பார்கள்...

கண்மாய்களின் நகர் எனப் புகழுடையது -  மாமதுரை..

எல்லாம் நிர்மூலமாகிப் போயின..

மிச்சம் மீதியுள்ள கண்மாய்களும் -
சீமைக் கருவேலமரங்களால் செம்மை இழந்தன..

நாம் என்னதான் செய்ய உத்தேசித்துள்ளோம்?..

நாற்பது எனும் நெடிய ஆண்டுகளைக் கடந்த நிலையில்
புதிது புதிதாகப் பலரும் கோடானுகோடிகளில் புரண்டு
புன்னகையும் பொன்னகையுமாய் குதுகலிக்கக் காணும்

இதே தமிழகத்தில் -

நீரோடித் திளைத்த ஆறுகளும் இல்லை..
நீராடிக் களித்த குளங்களும் இல்லை...

ஆளோடித்தாள் விளைத்த நிலங்களும் இல்லை..
ஆனைகட்டிப் போரடித்த களங்களும் இல்லை..

ஊர்க்காட்டுக் குளம் - குருவிக்குக் கூட
நீரின்றி வறண்டு கிடக்கும் அவலம்..

ஆனாலும் அதைப் பார்த்துக் கொண்டே
அடுத்த தேர்தலைப் பற்றிய பேச்சுகளில்
ஆவலாகிக் கிடக்கின்றோம்!..


அந்த நாட்டில் தண்ணீர் இல்லை..
இந்த நாட்டில் மழை இல்லை..

அதெல்லாம் விட்டுத் தள்ளுங்கள்!..

நம் நாடு ஏன் இப்படி நாசமாகப் போனது?..

சிந்தித்ததுண்டா?..

நாம் ஏன் இதனை இதுவரையிலும் கேட்கவில்லை!..

சிந்தித்ததுண்டா?..

இல்லை.. இல்லை.. ஒரு நாளும் இல்லை!..

இறைவன் இருக்கின்றானா?.. இல்லையா?..

அறிந்து கொள்ள ஆவலாக இருக்கின்றது - மனம்..

அந்த வேளையில் - 


இறைவனாவது ஏது?.. இயற்கை தான்!..
- என்று நிலைநாட்டும்போது மகிழ்ச்சியாகவும் இருக்கின்றது..

அப்படி -

இயற்கைதான்!.. - என்று முன்னெடுத்துச் சொல்லும்போது,

அந்த இயற்கையைக் காத்து - பின் அடுத்த சந்ததிக்குக் கொடுக்க மட்டும்
ஏன் இந்தச் சமுதாயம் தடுமாறுகின்றது?..

கடவுளைக் கண்டதில்லை!..  

சரி...  ஆனால், இயற்கையைக் காண்கின்றோமே!..

கடவுளுக்கு யாதொன்றும் செய்ய வேண்டாம்..

ஏனெனில் - வேண்டுதல் வேண்டாமை அற்றவன் அவன்!..

ஆனால் இயற்கைக்குச் செய்யவேண்டுமே!.. 

நாம் இயற்கைக் காத்தால் தானே - இயற்கை நம்மைக் காக்கும்!..

அதனால் தான், நம்முன்னோர்கள் -
நல்லனவற்றைச் சொன்னார்கள்.. செய்தார்கள்..

காவினை இட்டும் குளம் பல தொட்டும் கனிமனத்தால்!..

- என்பது ஞானசம்பந்தப்பெருமானின் திருவாக்கு..

நல்ல மனம் கொண்டு, கா - எனப்படும்
பூந்தோட்டங்களையும் மரக்கூட்டங்களையும் பேணிக்காத்து
குளம் முதலான நீர் நிலைகளை விளங்கச் செய்பவர் தம்மை -
எவ்விதத் தீவினைகளும் வந்து தீண்டாது..
இது திருநீலகண்டத்தின் மீது ஆணை!..

- என்று அறுதியிட்டுக் கூறியருள்கின்றார்..

மனித நேயம்
இன்னும் ஒருபடி மேலாக,

பரவப்படுவான் பரமனை ஏத்தீர்
இரவலர்க்கு ஈதலை யாயினும் ஈயீர்
கரகத்தால் நீரட்டிக் காவினை வளர்க்கீர்
நரகத்தில் நிற்றீரோ நாள் எஞ்சினீரே!..

- என்று கடிந்து கொள்பவர் திருமூலர்..

மக்களே..
நீங்கள் பரமனைப் போற்றி வணங்கினீரில்லை.. போகட்டும்..
யாதொரு தான தர்மங்களையும் செய்தீர்களில்லை.. அதுவும் போகட்டும்..

ஆனால், குடங்களில் நீர் எடுத்து ஊற்றி,
மரக்கூட்டங்களை வளர்க்காமல் போனீரே!..

நரகம் என்று தனியாக ஒன்று இல்லாவிடினும்
நீவிர் வாழும் எஞ்சிய நாட்களில்
நீவிர் வாழும் இடமே நரகமாகிப் போகுமே!..
என்ன செய்யப் போகின்றீர்கள்?..

- என்று கேட்கின்றார் திருமூலர்..

எப்பேர்ப்பட்ட விஷயம்!..

ஆற்றங்கரை மரம் எனில், அதுவாக -
மண்ணிலிருந்து நீரை உறிஞ்சிக் கொள்ளும்..

ஆனால் -

முகவை போன்றதொரு வறண்ட நிலத்தில்
வாழ முயற்சிக்கும் மரம் எனில்
நீருக்குப் பரிதவிக்குமே!..

அதற்கு நாம் தானே -
குடத்தில் நீரெடுத்துத் தோளில் சுமந்து
வேரில் ஊற்றி வளர்த்தெடுக்க வேண்டும்!..

அப்போதுதானே - அந்த மரம்
இலைகளும் கிளைகளுமாக
தழைத்துப் படர்ந்து கருமுகிலைப்
பிடித்து இழுத்து வரும்!..

தான் வளர்ந்த மண்ணை வளமாக
ஆக்கி அழகு பார்த்திருக்கும்!..

மரங்கள் நன்றியுடையவை..

தாளுண்ட நீரைத் தலையாலே தருதலால்!..
- என்று ஔவையார் புகழ்ந்துரைப்பார்..

அதுவன்றி -

வந்ததடா யோகம்!.. என்று  
வறண்ட நிலத்தில் 
வாழத் துடிக்கும் 
மரத்தை வன்கோடரி 
கொண்டு வெட்டிப் பிளந்து 
விறகாக்கி அடுப்பேற்றி
தணல் மூட்டிப் புகையாக்கினால்
நம் வாழ்வும் அதுபோலத்தானே ஆகும்!..

அதுமாதிரி ஆகக்கூடாது எனில் -
திருமூலர் அருளும் திருப்பாடலின் உட்பொருள்தான் என்ன?..

சலசல.. என்றோடும் ஆறொன்று அருகில் இல்லாவிடினும்
குடத்தில் முகந்து எடுக்கின்ற அளவுக்கு ஒரு குளத்தையாவது 
ஒரு ஊற்றையாவது பராமரிக்க வேண்டும் என்பதே!..

பெரியோர் வாய்ச்சொல் அமிர்தம் - என்றொரு சொல்வழக்கு உண்டு..

அதனை நன்றாக உணர்ந்திருந்ததால் தான்
அன்றைய நாட்களில் மன்னரும் மற்றோரும்
நீர் நிலைகளைப் பராமரித்து நீர் மேலாண்மை செய்தார்கள்...மாமன்னன் கரிகாற் பெருவளத்தானின் 
அரண்மனைகள் இன்றில்லை..

ஆனால் - 
கரிகாற்சோழன் உருவாக்கிய 
கல்லணை காலங்களைக் கடந்து நிற்கின்றது..

மாமன்னன் ராஜராஜனின் 
மாடமாளிகைகள் காணக் கிடைக்கவில்லை..

ஆனால் - 
ராஜராஜசோழன் உருவாக்கிய 
நீர் சுழற்சி முறை பெருமையைப் புகழ்கின்றது..

மாமன்னன் ராஜேந்திரனின் 
கோட்டை கொத்தளங்கள் தூர்ந்து போயின..

ஆனால் - 
ராஜேந்திரன் உருவாக்கிய 
சோழகங்கம் நீரலைகளுடன் திகழ்கின்றது..

அந்த மன்னர்கள் அனைவரும் தமக்கென வாழாது 
தமிழ் மண்ணிற்கென வாழ்ந்த தகைமையாளர்கள்..

அத்தகைய மன்னர்களோடு 
மக்களும் செய்த அறப்பணிகள் பல நூறு!..இன்று நாம் உண்பதும் உடுப்பதும் உறங்கிக் களிப்பதும்
அவர்கள் செய்த புண்ணியமே!..

அவர்களை நாம் நினைவு கூர்வது போல
நம்மை அடுத்து வரும் சந்ததி நினைவு கூர்தல் வேண்டும்!..

அதற்கானவற்றை நாம் செய்யவேண்டியது
அவசியம்.. அவசியம்!..


இன்று 
சர்வதேச தண்ணீர் தினம்!..

நீர் ஆதாரங்கள் எப்படியெல்லாம் நம்மால் சிதைவுற்றன -
என்ற விவரங்கள் கண் முன்னே கொட்டிக் கிடக்கின்றன..


எதிர்வரும் ஆண்டுகளில் -
நீருக்காக போராட வேண்டியிருக்கும் என்கின்றனர் - அறிவியலார்.

இன்றைய நவீன அறிவியலால்
நீரும் நிலமும் பாழானதென்பது உண்மை..

ஆனாலும்,
நீர் நிலைகளைக் காப்பாற்றி -
இயற்கையைப் பேணுதலே அறிவுடைமை.


நீர் காப்போம்!.. 
நிலம் காப்போம்!..

நீர் வாழ்க.. 
நீருடன் கூடி நிலமும் வாழ்க!.. 
***