நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, மார்ச் 12, 2016

வானம்பாடி

அந்த ஆண்டு 1967..

கோடை காலம்..
தேர்வுகள் எல்லாம் எழுதியாகி விட்டது..

கோடை விடுமுறையில் தஞ்சையில் சித்தப்பா வீட்டுக்குச் சென்று சில நாட்கள் தங்கி விட்டு - இல்லம் திரும்பிய போது -

புதிதாக விருந்தாளி..

ஆச்சர்யமும் ஆனந்தமும் தாங்க முடியவில்லை..அதுவரைக்கும் -  கல்கி அல்லது குமுதம் வார இதழ்களின் விளம்பரங்களில் மட்டுமே கண்டிருந்த ஒன்று!..

அப்போதிருந்து கனவுத் தோழன் - அந்த விருந்தாளி..

அந்தத் தோழன் - இதோ.. இதோ.. நம் வீட்டில்!..

வானொலிப் பெட்டி!..

மக்களுக்கு - அதன் மீது தான் எத்தனை வாஞ்சை..

அதன் வழியாகத் தான் - இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் - தமிழ் நெஞ்சங்களில் சிம்மாசனம் இட்டு அமர்ந்திருந்தது..

ராஜேஸ்வரி ஷண்முகம், V. H. அப்துல் ஹமீத், K.S. ராஜா, மயில்வாகனன் சர்வானந்தா - என, முகமறியாத் தோழமைகள்..

காலை ஆறு மணி முதல் மாலை ஆறு மணி வரை -
தித்திக்கும் திரையிசைப் பாடல்கள் நூற்றுக்கணக்கில்
எவ்விதத் தடங்கலும் இன்றி - திசையெங்கும் தவழ்ந்து கொண்டிருக்கும்..

அந்த நாட்கள் எல்லாம் - காதுகளில் தேனூறிய நாட்கள்..

மர்பி டிரான்சிஸ்டர்..

என் தந்தையின் செல்லம் அது..

வடக்கிலிருந்து ஒலிபரப்பாகும் ஆகாசவாணியின் செய்தி அறிக்கையை
கேட்காவிட்டால் அவருக்குத் தூக்கம் வராது..

ஆல் இண்டியா ரேடியோ சென்னை வானொலி நிலையம் என்ற அறிவிப்புடன் தொடரும் செய்தி அறிக்கையும் அவருடைய விருப்பத்துக்குரியதே..

பின்பு திருச்சி வானொலி நிலையத்திலிருந்தும் செய்திகள் வாசிக்கப்பட்டன..

ஊர் அடங்கிய பின்னும் -
இரவு பத்து மணிக்கு மேல் ஒலிபரப்பாகும் சங்கீத சம்மேளனங்கள்
எங்கள் வீட்டில் ஒலித்துக் கொண்டிருக்கத் தவறுவதேயில்லை..

அகில இந்திய கலை விழாக்கள் என நிகழும் சிறப்பு நாடகங்கள் இசை நிகழ்ச்சிகள் - இவற்றைக் கேட்க ஒரு கூட்டம் இருக்கும் வாசலில்!..

முதன்முதலாக வானொலி வழியாகத்தான் -  
அருள்மொழி அரசு வாரியார் ஸ்வாமிகள் அவர்களை அறிந்து கொண்டேன்..

கம்பராமாயணம், மகாபாரதம், பெரிய புராணம் - என, 
ஸ்வாமிகள் வழங்கிய இலக்கியப் பேருரைகளில் லயித்துக் கிடந்தது மனம்..

இன்றும் ஓய்வான நேரங்களில் வாரியார் ஸ்வாமிகளின் உரைகளை மனம் நாடுகின்றதென்றால் -

அதற்குக் காரணம் - தமிழ் வானொலி தான்!..

அசோக சக்ரவர்த்தியையும் சத்ரபதி சிவாஜியையும்
வீரபாண்டிய கட்டமொம்மனையும் கப்பலோட்டிய தமிழனையும்
மகாகவி பாரதியையும் - திரையில் காண்பதற்கு முன்னர்
வானொலியின் வாயிலாகத் தான் அறிந்தோம்..

ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நேரத்தில் ஒலிச்சித்திரம்!..

குண்டூசி விழுந்தால் சத்தம் கேட்கும்..


பள்ளிகளிலும் வானொலி வழியாக வகுப்புகள் நடக்கும்..

தேசிய தினங்களுக்கு முன்னதாக - தேசிய கீதத்தினைப் பிழையின்றிப் பாடுதற்காக வழங்கப்பட்ட பயிற்சிகள் மறக்க இயலாதவை..

இத்தனைக்கும் வானொலியின் பேட்டரி அவ்வப்போது தீர்ந்து போகும்..

சமயங்களில் தந்தை கடிந்து கொண்டாலும் -
உடனடியாகக் காசு கிடைக்கும் - புதிய பேட்டரிகள் வாங்குவதற்கு!..

அப்போதெல்லாம் பூனைக் கட்டை எனப்படும் எவரெடி பேட்டரிகள் அழுத்தமான தாளில் சுற்றப்பட்டவையாயிருக்கும்..

உலோகத் தகடு உறையுடன் வந்ததெல்லாம் - பிற்பாடுதான்!..

அப்படியே பள்ளி நாட்கள் - கல்லூரி நாட்களாகின..

வானொலிப் பெட்டியைப் பற்றி இன்னும் சொல்லலாம்..

ஆனாலும் -

காலச்சக்கரம் வேகமாகச் சுழன்றது..

நாட்களும் வெகு வேகமாக ஓடியதில் -
நிகழ்ந்த மாற்றங்களைக் கண் கொண்டு நோக்கியபோது -

வீட்டில் மேஜையின் மீதிருந்த கனமான தொலைபேசி உருமாறியிருந்தது..

அதற்குள் -

கடிகாரம், நாட்காட்டி, நாட்குறிப்பு, வானொலி, ஒலிப்பேழை, ஒளித்திரை, புகைப்படம் -

இன்னும் என்னென்னவோ புற்றீசலாக அடங்கியிருக்கின்றன..

ஆனால் -கைக்கு அடக்கமாக ஆகியிருந்த அதைக் கைக் கொண்ட மனிதன் மட்டும் அடங்காமல் போனான்..

ஆமாம்.. இந்தக் கதையெல்லாம் எதற்கு?..

இன்றைய பதிவின் நாயகனே - 

அந்த காலத்தின் வானொலிப் பெட்டி தான்!..

இந்த வானொலிப் பெட்டியைக் கதாநாயகனாகக் கொண்டு 

நேசம் சுமந்த வானம்பாடி!..

- என, ஒரு சிறுகதையினை,


அன்புக்குரிய பரிவை. சே. குமார் அவர்கள் வடித்திருக்கின்றார்..

அந்தக் கதை - பிரதிலிபி எனும் தளத்தில் வெளியாகி உள்ளது..


மிக அருமையாக, வானொலிப் பெட்டி புழக்கத்தில் இருந்த
அந்த காலகட்டத்துக்குள் நம்மை அழைத்துச் செல்கின்றார்..

கதா நாயகன் இருந்தாலும்
இந்த வானொலிப்பெட்டியே கதையின் நாயகன்!..

காலங்கள் கடந்த நிலையில் -

பழைய சாமான் என்ற முத்திரை குத்தப்பட்டு
நம் கண்முன்னே -
கதையின் நாயகன் எங்கோ பயணிக்கும் போது
இதயம் கனக்கின்றது..

அந்தக் கதையின் மகத்தான வெற்றி -
கடைசி வரிகளில் மிளிர்கின்றது..

அந்தக் கதைக்கு மதிப்பிட்டு -
கதையின் போக்கிற்கு இணங்க விமரிசனம் வரைந்து விட்டு வந்தேன்..

அந்த விமரிசனம் இதோ தங்களுக்காக!..

நேசம் சுமந்த வானம்பாடி..
பாசம் சுமந்த வானம்பாடி..
நினைவைச் சுமந்த வானம்பாடி..
நெஞ்சம் சுமந்த வானம்பாடி..

ஒலியைச் சுமந்த வானம்பாடி..
தனிமொழியைச் சுமந்த வானம்பாடி..
பரிவைச் சுமந்த வானம்பாடி..
தன்பிரிவைச் சுமந்த வானம்பாடி..

வீட்டில் மொழிந்த வானம்பாடி..
உயிர்க் கூட்டில் நிறைந்த வானம்பாடி..
காற்றில் கலந்த வானம்பாடி..
உயிர் மூச்சில் கரைந்த வானம்பாடி..

நமது நண்பர்கள் அந்தத் தளத்திற்குச் சென்று
சே. குமார் அவர்களின் சிறுகதையினை வாசித்து
மதிப்பீடு வழங்கி வருமாறு கேட்டுக் கொள்கின்றேன்..

Facebook இணைப்பின் வழியாக மதிப்பீடும் விமர்சனமும் வழங்கலாம்..

அதற்கான இணைப்பு இதோ!.. நேசம் சுமந்த வானம்பாடி

இன்னும் பற்பல கதைகளை அவர் வடிப்பதற்கு
மனமார்ந்த வாழ்த்துகள்!..

வாழ்க நலம்!.. 
*** 

24 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. அன்பின் ஜி வான்-ஒலி பெட்டியைக்குறித்த நல்ல நினைவலைகள் அருமை நண்பரின் நேசம் சுமந்த வானம்பாடி ஏற்கனவே படித்தேன் தகவலுக்கு நன்றி

   நீக்கு
  2. அன்பின் ஜி..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. இனிய கருத்துரைக்கு நன்றி..

   நீக்கு
 2. அது ஒரு ‘டிரான்சிஸ்டர் காலம்”. எங்கள் வீட்டில் அப்பா வாங்கியது ‘BUSH’ டிரான்சிஸ்டர். உங்கள் இளமைக்கால வானொலி அனுபவப் பதிவு, எனக்கும் அந்த மலரும் நினைவுகளை, மறக்கமுடியாத அந்த இலங்கை வானொலி அறிவிப்புகளையும், பொங்கும் பூம்புனல் போன்ற நிகழ்ச்சி நிரல்களையும் நினைவு படுத்தி விட்டன. நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் அண்ணா..

   இலங்கை வானொலி மட்டும் இல்லாதிருந்தால் எண்ணற்ற தமிழ்ப் பாடல்கள நாம் இழந்திருப்போம்..

   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

   நீக்கு
 3. முன்னரே படித்துவிட்டேன். பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 4. வானொலி பற்றிய உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்தது நன்றாக இருந்தது. பரிவை சே. குமார் அவர்களுக்கு வாழ்த்துகள்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வெங்கட்..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

   நீக்கு
 5. முதன் முதலில் வாங்கிய வானொலிப்பெட்டி MURPHY RADIO என் நினைவு சரியானால் என் மூத்தமகனின் பிறந்த நாளுக்காக குழந்தைபட விளம்பரம் தாங்கிய பெட்டி வாங்கியது அதை வெகு நாட்கள் வரை வைத்திருந்தேன் சில ஸ்பேர் பார்ட்ஸ் கிடைக்காத காரணத்தால் அந்தப் பெட்டியை மட்டும் CABINET வைத்திருந்தேன் பழையன கழிதலும் புதியன புகுதலும் நினைவுக்கு வருகிறது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஐயா..
   தங்கள் வருகைக்கும் மேலதிக செய்திகளுக்கும் மகிழ்ச்சி..
   இனிய கருத்துரைக்கு நன்றி..

   நீக்கு
 6. வானொலிப் பெட்டியில் பாட்டுக்கேட்டு மகிழ்ந்த
  பழைய நினைவுகள் நெஞ்சில் தோன்றுகின்றன ஐயா
  நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

   நீக்கு
 7. ஐயா...
  தங்கள் அன்பில் நெகிழ்ந்தேன்...

  காலையில் வானம்பாடிக்கு தங்கள் கருத்தைக் கண்டு மகிழ்ந்தேன்...
  சீதோஷ்ண நிலை மாற்றம்... ஜலதோஷம்... அதான்... வலையில் வலம் வரவில்லை...

  தங்களை வானம்பாடி கவர்ந்ததில் சந்தோஷம் அய்யா...

  அதற்காக தங்கள் நினைவலைகளுடன் தனிப்பதிவு இட்டமைக்கு மிக்க நன்றி அய்யா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் குமார்..

   வானொலி பற்றிய தங்களுடைய பதிவு அருமை..
   தங்களுடைய சிறப்பான பதிவினை நமது தளத்தில் பகிர்ந்தது மகிழ்ச்சி..

   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

   நீக்கு
 8. நேசம் சுமந்த வானம்பாடி..
  பாசம் சுமந்த வானம்பாடி..நினைவைச் சுமந்த வானம்பாடி..நெஞ்சம் சுமந்த வானம்பாடி..
  ஒலியைச் சுமந்த வானம்பாடி..தனிமொழியைச் சுமந்த வானம்பாடி..பரிவைச் சுமந்த வானம்பாடி..தன்பிரிவைச் சுமந்த வானம்பாடி..
  வீட்டில் மொழிந்த வானம்பாடி..உயிர்க் கூட்டில் நிறைந்த வானம்பாடி..காற்றில் கலந்த வானம்பாடி..உயிர் மூச்சில் கரைந்த வானம்பாடி..  நண்பரே இந்த வரிகள் அருமையோ அருமை
  வானொலி நினைவிகளை நெஞ்சில் அள்ளி
  வைத்தீர் நண்பரே.....
  காணொளி வந்ததே வானொலி மறைந்ததே....
  மின்சாரம் இல்லாத நாட்களில்
  பேட்டரி யினால் வானொலி கேட்ட நினைவுகள்
  அது கனாக்காலம் போல் கலைந்தே போனது...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..

   >>> காணொளி வந்ததே.. வானொலி மறைந்ததே..<<<

   தங்கள் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 9. ஒலி அலைகளையும்
  சரோஜ் நாராயணசுவாமிகளையும் சுமந்த பதிவு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..

   தங்களுக்கு அன்பின் நல்வரவு..
   தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

   நீக்கு
 10. அருமையான பதிவு ஐயா.இந்த வானொலிப் பெட்டிதான் அன்று உயிர் மூச்சாக இருந்தது குறிப்பாக இலங்கை வானொலி...அதில் அந்த நிகழ்ச்சிகள் எத்தனை அருமையானவை. இன்று அது போன்ற நிகழ்ச்சிகள் எந்த ஒலி ஊடகத்திலும் இல்லை எனலாம்...அருமையான பகிர்வு

  கீதா: ஐயா இந்தப் பதிவு எனது பழைய நினைவுகளை மீட்டிவிட்டது. இலங்கையில் வளர்ந்த போது மறைந்த திருமதி ராஜேஸ்வரி சண்முகம் அவர்கள் எங்கள் வீட்டின் எதிரில்தான் இருந்தார். அவர் மடியில் அமர்ந்து விளையாடியதுண்டு. அவர் என்னை வானொலி நிலையத்திற்கு அழைத்துச் சென்று பாட்டு, கதை என்று வழங்க வைத்தவர். அப்போது திரு மயில்வாகனன் அவர்களையும் சந்தித்திருக்கிறேன். அப்துல் ஹமீது அவர்களையும். இந்தியா வந்த பிறகும் இராஜேஸ்வரி அவர்களுடன் தொடர்பு இருந்தது. நாங்கள் அங்குள்ள பிரச்சனையால் இங்கு வந்த பிறகும் தந்தை மட்டும் அங்கிருந்தார். பின்னர் அவரும் இங்கு வந்துவிட்டார். அதன் பின் இங்கிருந்த வீட்டுச் சூழலால் தொடர்பு விட்டுப் போனது.

  இலங்கை வானொலி மூலம் அவரது குரலைக் கேட்டுக் கொண்டிருந்தோம். பின்னர் அதுவும் நின்று போனதே. அருமையான பதிவு ஐயா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..

   இனியும் அந்த மாதிரியான வசந்தம் மீண்டு வருமோ?..

   கொடுத்து வைத்தவர் தாங்கள்..
   எமது அன்புக்குரிய அறிவிப்பாளர்களின் அன்பினில் திளைத்ததற்கு..

   தங்கள் வருகைக்கும் மேலதிக தகவல்களுக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 11. குமார் அவர்களின் கதையைப் படித்து கருத்திட்டோம் பிரதிலிபியில். அருமையான கதை. குமாருக்கு வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்களது மீள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 12. அன்பின் தனபாலன்..
  தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி நன்றி..

  பதிலளிநீக்கு
 13. வானொலிப்பெட்டியைப் பற்றிய பதிவு பழைய நினைவலைகளை மீட்க உதவியது. நம் பொழுதுபோக்கே வானொலி தானே? இரவு நேரங்களில் நெஞ்சில் நிறைந்தவை என்ற தலைப்பில் ஒலிபரப்பிய பாடல்களைக் கேட்டுத் தூங்கிய நாட்கள் நினைவுக்கு வருகின்றன. பரிவை குமார் எழுதிய கதை பற்றி இன்று தான் அறிந்தேன். அங்கும் சென்று வாசிக்கின்றேன். அக்கதைக்கு நீங்கள் எழுதியுள்ள விமரசனமும் அருமை. பதிவுக்குப் பாராட்டுக்கள் துரை சார்!

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..