நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, அக்டோபர் 29, 2016

நன்மை எங்கும் சூழ்க..

அன்பின் இனிய 
தீபாவளி நல்வாழ்த்துகள்!..
*** 


மகிழ்ச்சி.. மட்டற்ற மகிழ்ச்சி..

அந்த ஒன்றினை நாடியே அனைவரது பயணமும்..

பண்டிகை நாட்களில் - இருப்போரும் இல்லாதோரும்
எய்த நினைப்பது மகிழ்ச்சி ஒன்றினையே...

அப்போதெல்லாம் ஐப்பசி கார்த்திகை என்றாலே அடைமழைக் காலம் தான்!..

நாள் கணக்கில் சற்றும் இடைவிடாது மழை பெய்து கொண்டிருக்கும்...

இப்போது போல உடனடி தயாரிப்புகள் ஏதும் கிடையாது என்பதால் தீபாவளிக்கு பதினைந்து நாட்களுக்கு முன்னாலேயே பலகாரங்கள் செய்யத் தொடங்கி விடுவர்..

அக்கம்பக்கத்தில் ஒருவருக்கொருவர் ஒத்தாசை செய்வதும் உண்டு...

இருப்பினும் - அந்த நாட்களை இப்போது நினைக்கையில் மலைப்பாக இருக்கின்றது...

எத்தனை சிரமங்களுக்கிடையில் எங்களை - எங்கள் பெற்றோர்கள் மகிழ்வித்திருக்கின்றனர் - என்பதை நினைக்கும்போது -

நெஞ்சம் துடிக்கின்றது -
அவர்தமக்கு என்ன கைமாறு செய்யப்போகின்றோம்?.. என்று..

இந்த நாட்களில் - அந்த நாட்களைப் போலக் கூடியிருக்க முடியவில்லையே!.. - என்று எண்ணும்போது மனது தவிக்கின்றது..

எங்கள் பெற்றோர் - எங்களுக்கு எந்த குறையும் வைத்ததில்லை..

அவ்வண்ணமே - இந்த அளவில்,
நாங்களும் எங்கள் பிள்ளைகளுக்கு குறை ஏதும் வைக்கவில்லை..

அதுதான் மகிழ்ச்சி.. நிம்மதி!..

அந்த மகிழ்ச்சியும் நிம்மதியும் அனைவருக்கும் ஆகட்டும் என்று
நல்லநாள் தனில் வேண்டிக் கொள்கின்றேன்..


வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள் 
நோக்குண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு 
துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு!..
-: ஔவையார் :-


அங்கணன் கயிலை காக்கும் அகம்படித் தொழின்மை பூண்டு
நங்குரு மரபிற் கெல்லாம் முதற்குரு நாதன் ஆகி
பங்கயந் துளவம் நாறும் வேத்திரப் படை பொறுத்த
செங்கை எம்பெருமான் நந்தி சீரடிக் கமலம் போற்றி!..
-: காஞ்சி புராணம் :-


அங்கையுள் அனலும் வைத்தார் அறுவகைச் சமயம் வைத்தார்
தங்கையில் வீணை வைத்தார் தம்மடி பரவ வைத்தார்
திங்களைக் கங்கையோடு திகழ்தரு சடையுள் வைத்தார்
மங்கையைப் பாகம் வைத்தார் மாமறைக் காடனாரே!..(4/33)  
-: அப்பர் பெருமான் :-


தனம் தரும் கல்வி தரும் ஒருநாளும் தளர்வறியா
மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சமில்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக் கண்களே!..  
-: அபிராமி பட்டர் :-


விழிக்குத் துணை திருமென்மலர்ப் பாதங்கள் மெய்மை குன்றா
மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள் முன்பு செய்த
பழிக்குத் துணை அவன் பன்னிரு தோளும் பயந்ததனி
வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே!.. 
-: அருணகிரியார் :-மாரில் திருவன் வலனேந்து சக்கரத்தன்
பாரைப் பிளந்த பரமன் பரஞ்சோதி
காரில் திகழ்காயா வண்ணன் கதிர்முடிமேல்
தாரில் நறுந்துழாய் தாழ்ந்தூதாய் கோத்தும்பீ!.. (1683)
-: திருமங்கையாழ்வார் :- 


வேதமுதல்வன் விளங்கு புரிநூலன்
பாதம் பரவிப் பலரும் பணிந்தேத்தி
காதன்மை செய்யும் கண்ணபுரத்து எம்பெருமான்
தாது நறுந்துழாய் தாழ்ந்தூதாய் கோத்தும்பீ!.. (1680)
-: திருமங்கையாழ்வார் :- 


நீரார்க் கடலும் நிலனும் முழுதுண்டு
ஏராலம் இளந்தளிர் மீதுதுயில் எழுந்தாய்
சீரார் திருவேங்கட மாமலை மேய
ஆரா அமுதே அடியேற்கு அருளாயே!.. (1040)
-: திருமங்கையாழ்வார் :- 
***

தென்மேற்குப் பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை 
என்று கூறும் வானிலை ஆய்வு மையத்தினர் - அடுத்த சில நாட்களுக்குள் வடகிழக்குப் பருவ மழை பெய்யக் கூடும் என்று அறிவித்துள்ளனர்..

மழை முகம் நோக்கிக் கிடக்கின்றாள் மண்மகள்..
மழையில்லையேல் வளமில்லை 
என்பது ஆன்றோர் வாக்கு..

வருகின்ற வடகிழக்குப் பருவ மழையினால் 
வளங்கள் நிறையட்டும்..


ஏர் பிடிக்கின்ற உழவர் முதற்கொண்டு
எல்லை காக்கின்ற வீரர் வரைக்கும்
எல்லாரும் எல்லா நலன்களையும்
பெற்று வாழ்ந்திட வாழ்த்துவோம்!.. 

நாடு வாழ வேண்டும்.. நன்மை எல்லாம் சூழ வேண்டும்..
தேசம் திகழ வேண்டும்.. தீமையெல்லாம் அகல வேண்டும்..


மங்கலகரமான இவ்வேளையில்
உடல் நலக்குறைவுற்றிருக்கும்
தமிழக முதல்வர் அவர்களும்முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும்
பூரண நலம் பெற்று பல்லாண்டு பல்லாண்டு
வாழ்ந்திட இறையருள் வேண்டுவோம்....
***

மத்தாப்புகளும் வெடிகளும் தீபாவளியின் ஒரு அங்கமாகி விட்டன..

ஊடகங்களில் பலரும் பலவிதமாக கருத்துகளை உபதேசம் செய்து கொண்டிருக்கின்றனர்...

ஜல்லிக் கட்டுக்குத் தடை வாங்கியதைப் போல
தீபாவளி வெடிகளுக்கும் ஒட்டு மொத்தமாக தடை விதிக்க வேண்டும் என்றெல்லாம் எழுதிக் கொண்டிருக்கின்றனர்..

இயன்றவரைக்கும் நாமும் பாதுகாப்புடன் 
சுற்றுச்சூழலைக் காத்து - 
தீபாவளித் திருநாளைக் கொண்டாடுவோம்.. 

நாமும் மகிழ்வோம்..
பிறரையும் மகிழ்விப்போம்!..
***

கீழே உள்ள காணொளி
வெளிநாட்டில் நிகழ்ந்த வாணவேடிக்கை 


இனிய பாடலுடன்
தீபாவளிக் கொண்டாட்டம்..

திரைப்படம் -  மூன்று தெய்வங்கள்
பாடல் - கவியரசர்
இசை - மெல்லிசை மன்னர் 


தாயென்னும் செல்வங்கள் தாலாட்டும் தீபம்
வைரங்கள் போலே ஒளி விடட்டும்
சந்தோஷம் கொண்டாடும் உள்ளங்களில்
பொன்னான எண்ணங்கள் உருவாகட்டும்..
எல்லோரும் வாழும் நிலை வரட்டும்!..
-: கவியரசர் கண்ணதாசன் :-


அனைவருக்கும் 
அன்பின் இனிய 
தீபாவளி நல்வாழ்த்துகள்!..

வாழ்க நலம்..  
* * *  

செவ்வாய், அக்டோபர் 25, 2016

ஊர் விழிக்கும் நேரம் 2

யார் இந்த நரன்!...

என்ற வியப்பினைக் கேட்டுக் கொண்டே கண் மயங்கிச் சரிந்த நான் -
மெல்ல உணர்வு பெற்று விழித்த போது,

தென்றலின் குளுமை அங்கே தவழ்ந்து கொண்டிருந்தது..

அரைத்தெடுத்த புது மஞ்சளின் வாசமும் கமழ்ந்தது...
அத்துடன் - அப்போது அலர்ந்த பூக்களின் மெல்லிய நறுமணம்..

கண்முன்னே - காணற்கரிய காட்சி!..

ஒளிக் கோலங்களாக தேவியர் இருவரும் - புன்னகையுடன்!..

காவிரி அன்னை
கங்கா தேவியே சரணம்!..
காவிரித் தாயே சரணம்!..

மெல்ல எழுந்தேன்..

கரங்கூப்பியவாறு வலம் வந்து -
தேவியர் இருவரின் திருப்பாதக் கமலங்களில் வீழ்ந்து வணங்கினேன்..

புத்தம்புது தாமரைப் பூக்களின் வாசம் வீசிற்று - திருவடிகளில்..

தேவியரின் திருவடிக் கொலுசுகளில் முன் நெற்றி பதிந்து கிடந்தது..

தலையை உயர்த்தி எழுந்திருக்கத் தோன்றவேயில்லை...

எழுந்திரு மகனே!..

சொல் கேட்டு எழுந்து கைகட்டி நின்றேன்..
கண்களில் நீர் வழிந்து கொண்டிருந்தது..

அக்கா!.. நான் சொன்னேனில்லையா!..

ம்.. ஆனாலும், எனக்குத் தேவி என்ற தெய்வ நிலை..
உனக்குத் தாயென்ற உறவு நிலை!..

குமிழ் சிரிப்புடன் காவிரி என்னை நோக்கினாள்..

கங்கா தேவி
தாங்களும் எங்களுக்குத் தாய் தான்!..
ஆனாலும்,
இந்தக் காவிரி ஒரு பொழுதில் தாயாக..
ஒவ்வொரு சமயம் சகோதரியாக..
ஒரு சில சமயங்களில் தெய்வமாக..

ஆனால்!..

ஆனால்!.. - கங்கையின் கண்களில் வியப்பும் கேள்வியும்..

எல்லா நேரங்களிலும் எங்கள் மகள்...
எங்கள் மகளாகத் தான் எங்களுடன் விளையாடுகின்றாள்!..

செந்தமிழர் தம் வழக்கில் ஒரு சொற்றொடர் உண்டு!..

என்ன அது?..

மகன் வயிற்றில் தாய் வந்து மகள் எனப் பிறப்பாள்!.. - என்று..
மகளைத் தாயாகப் பாவிக்கும் வழக்கம் எங்களுடைது..

ஓ!..

அதனால் தான்,

அவள் எனக்கா மகளானாள்..
நான் அவளுக்கு மகனானேன்!..

- என்று, எங்கள் கவியரசர் உள்ளம் உருகினார்..

எங்களின் உரிமைத் தாய் இவள்..
இவளன்றி வேறொருவர் இல்லை!.. இல்லவே இல்லை!..

தாயென்றும் மகளென்றும் சொல்லுகின்றாய்!..
அப்படியான பெருமையைப் பெற்றவளின் இன்றைய நிலை என்ன !?..

தாயே.. அது காலத்தின் கொடுமையாகி விட்டது.. அற வழியிலிருந்து மக்கள் பிறழ்ந்தனர்.. அதனால் நேரிட்ட பிழையினால் விளைந்தது.. நல்லோர் எவரும் இப்படியான பெருந்தவறுகளைச் செய்ததில்லை...

..... ..... ..... ..... .....

அரசியலில் வந்து புகுந்த குணக்கேடுகளால் விளைந்த விபரீதங்கள் இவை.. அடி வேரை அசைத்துப் பார்த்ததனால் - திசை எங்கும் விரிந்து நின்ற விருட்சம் வெலவெலத்து நிற்கின்றது...

..... ..... ..... ..... .....

நடு தவறாத நல்லோர்கள் ஒன்று கூடி உழைக்கின்றார்கள்.. வேரோடி நிற்கும் பெருமரம் பெயர்ந்து விடாதபடிக்குத் தாங்கிப் பிடிக்கின்றனர்...

..... ..... ..... ..... .....

நிகழ்ந்தது பெரும் பிழைதான்.. வேறொன்றும் கூறுதற்கில்லை.. எங்கள் பிழை தனை உணர்ந்தோம்.. ஆற்றையும் குளத்தையும் ஆக்ரமித்து அழித்து ஒழித்த மாபாதகம் இங்கு தான் நடந்தது.. நீரோடிய நெடுவழிகளை அடைத்த கொடுமையும் எங்களுக்குள் தான் நடந்தது...

.... ..... ..... ..... .....

அன்றைக்கு ஆன்றோர்கள் சொல்லிச் சென்ற எல்லாவற்றையும் உய்த்து உணராமல் போலியான சடங்குகளாக ஆக்கித் தொலைத்தோம்.. இன்றைக்குப் போக்கிடம் இல்லாமல் போய்விடுமோ என்று திகைக்கின்றோம்!..

.... ..... ..... ..... .....

தான் மட்டும் என்று வாழும் மனிதர்களால் பற்பல பறவை இனங்களையும் பல்லாயிரக் கணக்கான மரக்கூட்டங்களையும் இழந்தோம்.. இந்த பாவத்தை எங்கே கொண்டு தொலைப்பது என்று தவிக்கின்றோம்!..

பாவத்தை எங்கே கொண்டு தொலைப்பதா?...

வெள்ளி மணி குலுங்கினாற்போல் நகைத்தாள் - கங்கையாள்..

ஏனம்மா?.. சொன்னது பிழையெனில் பொறுத்தருள்க!..

கையில் வெண்ணைய் இருக்க நெய்க்கு அலைகின்றீர்களே.. என்றுதான்!...

.... ..... ..... ..... .....!?..


காவிரி!.. இவளல்லவா சகல உயிர்களின் பாவத்தையும் தீர்த்து அருள்பவள்.. அதனால்தானே இந்த ஐப்பசி மாதம் முழுதும் காவிரியுடன் இருந்து எனது பாவங்களைப் போக்கிக் கொள்கின்றேன்!..

... ..... ..... ..... .....!?..

நீங்கள் சரணடைவதற்கு காவிரியை அன்றி வேறொருவரும் உளரோ?..
உங்களுக்கு உதவுவதற்குக் காத்திருப்பவள் இவள் ஒருத்தி தானே!..

உள்ளது.. உள்ளது!.. ஆயினும் எங்களுக்கு வெட்கமாக இருக்கின்றது!..

ஏன்?.. - கங்கைக்கு மிகுந்த வியப்பு..

ஒருவனின் கன்னத்தில் அறைந்து விட்டு அவனையே வழித்துணையாக அழைத்தால் கோபம் கொண்டு திருப்பி அடிக்க மாட்டானா?..

அது மண்ணில் சாதாரண மானுடராகப் பிறந்து உழல்பவர் தமக்குரிய குணம்... காவிரி தேவ கன்னியருள் ஒருத்தி..

மண் செழிப்புறுதற்காக மக்கள் சிறப்புறுதற்காக வந்தவள்... அவள் உங்களிடம் கோபம் கொள்ளமாட்டாள்... என்ன காவிரி.. அப்படித்தானே!...

அக்கா.. நான் என்ன சொல்லப் போகின்றேன்.. நல்லவர்கள் அறிவார்கள் என்னைப் பற்றி!..

காவிரியை தாயென்றும் மகளென்றும் போற்றுகின்றீர்கள் அல்லவா!..

ஆம் தாயே!..

அவள் தாயென வந்தால் -
உங்களை உச்சி முகந்து ஊட்டி வளர்க்க மாட்டாளா?..
அவள் மகளென வந்தால் -
அவளை வாரியணைத்து மடியிருத்தி மகிழ்வெய்த மாட்டீர்களா!..
அன்புச் சகோதரி என வந்தால் -
சீவி முடித்து சிங்காரித்து சீர் சிறப்பு செய்விக்க மாட்டீர்களா!..

இதைக் கேட்டதும் என் நெஞ்சம் நெகிழ்ந்தது.. விம்மல் வெளிப்பட்டது..
கண்களில் நீர் திரண்டு கன்னங்களில் வழிந்தது..

இப்படித்தானே இத்தனை நாளும் உறவாடிக் கிடக்கின்றோம்!..

காவிரி உங்கள் பிழைகளை எல்லாம் என்றைக்கோ மறந்து விட்டாள்... காவிரியைக் காப்பாற்றுங்கள்.. காவிரி உங்களைக் கரை சேர்ப்பாள்!..


நம்குலப்பெண் அரைத்த மஞ்சளில் குளித்தவள்..
திரும்பிய திசை எங்கும் பொன்மணி குவித்தவள்!..
நடையினில் பரதக் கலையினை வளர்த்தவள்..
நறுமலர் உடையால் மேனியை மறைத்தவள்!..

ஆகா.. அற்புதம்!.. - கங்கா தேவியைக் கை கூப்பி வணங்கினேன்..

இப்படிப் புகழ்ந்தவர் உங்கள் ஊர்க்கவிஞர் மாயவநாதன்!..
அப்படியே அவள் மீண்டும் பொலிவு பெறவேண்டும்...

கரையேறி மீன் விளையாடும் காவிரி நாடு!..
- என்று போற்றினார் கண்ணதாசன்...

நீர் வளமும் நிலவளமும் மீண்டும் பெருக வேண்டும்... ஆறும் கரையும் காக்கப்படவேண்டும்.. ஆற்றங்கரை நாகரிகம் நம்முடையது.. மரங்களைக் காப்பீராக.. அவை தருமே நீரும் சோறும் உமக்கு!..

அறிந்தேன்.. அறிந்தேன்.. அருந்தேன் - என அனைத்தும் உணர்ந்தேன்!..

காவிரியின் கரத்தைப் பற்றிக் கொள்ளுங்கள்.. அவள் காலமெல்லாம் காத்து நிற்பாள் உங்களை!..

ஆகட்டும் தாயே!..

அவளன்றி வேறுகதியில்லை என்பதையும் நினைவில் கொள்வீராக...


தமிழக எல்லையில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகள்
ஆகட்டும் தாயே!.. எல்லை தாண்டி வந்து எங்கள் மண்ணுக்குள் மருத்துவக் கழிவுகளைக் கொட்டிச் செல்கின்றார்கள்... அந்தக் கொடுமைக்கு இங்குள்ள ஈனர்கள் சிலரும் கையூட்டு பெற்றுக் கொண்டு துணை போகின்றனர்...மண் பயனுற வேண்டும்.. என்றார் மகாகவி.. ஆனால், மணலால் கோடி என பயனுற்றார் பலர்.. மக்கள் நலனுக்குக் கேடு விளைக்கின்றார்.. 

இது இப்படி எனில், ஆற்றில் நச்சுக் கழிவுகளைத் திறந்து விட்டு அனைத்தையும் பாழாக்குகின்றது ஒரு கூட்டம்..


பொன்விளைந்த பூமியில் மண்ணைக் கொட்டி மலடாக்கி அதனை மனைப் பிரிவுகளாக்கி மடி நிறைத்துக் கொள்கின்றது மற்றொரு கூட்டம்..

கண்ணை இமை காப்பது போல காவிரியைக் காப்பதற்குக் கைகளைச்
சேர்த்திருக்கின்றார்.. நூறு ஆயிரமாய்!..

அவர் தமக்குத் துணையாய் நின்று அருளவேண்டும்!..

திடமுற்றோர் தேர் வடத்தைப் பற்றி இழுக்கும்போது கூடி நின்று 
உந்து கவி இசைத்து உற்சாகம் ஊட்டுவோரைப் போலத் தான் நானும்!..

என் நாவிலும் தோளிலும் நின்று நலம் அருளவேண்டும்!..

அப்படியே ஆகட்டும்.. நல்வாழ்த்துகள்!..

கங்கையும் காவிரியும் புன்னகையுடன் வாழ்த்துரை நல்கினர்..

அக்கா.. விடியும் நேரம் நெருங்கி விட்டது!..

நான் தங்களை மீண்டும் சந்திக்கும் நல்வாய்ப்பினை நல்குதல் வேண்டும்!..

ஆகட்டும்.. சந்திக்கலாம்.. நாங்கள் இன்னும் பல தலங்களுக்கும் செல்ல வேண்டும்!.. ஊர் விழிக்கும் நேரம் வந்து விட்டது.. நாங்கள் புறப்படுகின்றோம்!..

ஊர் விழிக்கும் நேரம் வந்து விட்டது.. 
ஆனாலும், ஊர் விழிக்க வேண்டுமே!..

கலகல.. என சிரித்தபடி - நீருடன் நீராய்க் கலந்தனர் கங்கையும் காவிரியும்!..
* * *


கங்கே ச யமுனே சைவ கோதாவரீ 
ஸரஸ்வதி நர்மதே சிந்து காவேரீ 
ஜலேஸ்மின் ஸந்நிதிம் குரு..

என்குலப்பெண் அரைத்த மஞ்சளில் குளித்தாய்..
திரும்பிய திசை எல்லாம் பொன்மணி குவித்தாய்!..
நடையினில் பரதக் கலையினை வடித்தாய்..
நறுமலர் உடையால் மேனியை மறைத்தாய்!..

காவிரிப் பெண்ணே வாழ்க!..
நீ வாழ்க!...
* * *

சனி, அக்டோபர் 22, 2016

ஊர் விழிக்கும் நேரம் 1

விழிக்கும் நேரம் நெருங்கி விட்டது..

ஆனாலும் -

ஊர் இன்னும் உறங்கிக் கிடக்கின்றது...

வயல் வரப்பு.. தோட்டம் துரவு என்றிருந்தால் - 
இந்நேரத்திற்குத் தூக்கம் தானாகத் தொலைந்திருக்கும்..

அதெல்லாவற்றையும் தான் விற்றுப் போட்டு பணத்தை எண்ணியாயிற்றே!..

கறவை மாடுகள் வாசலில் கட்டிக் கிடந்தால் - 
கன்றுகள் கட்டுத் தறியில் முறுக்கிக் கொண்டு முனகும் சத்தத்தில் - 
அவற்றை அவிழ்த்து விட்டு பால் கறப்பதற்கு எழுந்தே ஆக வேண்டும்...

அது எதற்கு இடைஞ்சல் என்று
மாடுகளையும் கன்றுகளையும் கொலைக் களத்திற்கு அனுப்பியாகி விட்டது

நாலைந்து கோழிகள் இருந்தாலாவது - 
தலைமைப் பண்பில் பொழுது தவறாமல் - கொக்கரக்கோ!.. 
- என்று சேவல் கூவித் தூக்கத்திலிருந்து எழுப்பியிருக்கும்...

இதென்ன வீணான குடைச்சல்!.. - என்று கோழிக்கூட்டையும் ஒழித்தாகி விட்டது..

ஊர்க்காடு எங்கும் மரம் மட்டைகள் இருந்தாலாவது - அவற்றில் கூடு கட்டி வாழ்ந்திருக்கும் நாலாவிதப் பறவைகளும் இனிமையுடன் கூச்சலிட
இளங்காலைப் பொழுதில் தூக்கம் கலைந்து போயிருக்கும்...

இது எதற்கு இரைச்சல்!.. - என்று மரங்களையும் வெட்டிச் சாய்த்தாயிற்று..

இப்படி இவையெல்லாம் இல்லாமல் போனதால்
விடியற்காலையில் எழுந்திருக்கும் பழக்கமும் அற்றுப் போனது..

மக்களின் உடம்பு வியாதிகளின் கூடாரம் என்றானது தான் மிச்சம்...

இந்நிலையில் - தூக்கம் கலையாத தெருவின் ஊடாக
ஊர்காக்கும் நாய்களும் - உறக்கத்தின் பிடியில்!..


கிழக்கு இன்னும் முழுதாக வெளுக்கவில்லை..

பிரம்ம முகூர்த்தத்திற்கு முந்தைய பொழுது..

அப்படியெனில் நாலரை மணிக்கும் முன்பாக!..

தேய்பிறையின் ஐந்தாம் நாள்..

மஞ்சள் நிலவின் மங்கலான ஒளியில்
நீண்ட நெடுங்கரை முழுதும் அமைதி தவழ்ந்திருக்க
ஆற்று நீர் மட்டும் சலசலத்துக் கொண்டிருந்தது...

இன்னும் சற்று தூரம் தான்..
சுருக்காக நாலடி எடுத்து வைத்தால் - படித்துறை..

படித்துறையும் படித்துறைப் பிள்ளையாரும் -
பிள்ளையாருக்கு விரித்த பெருங்குடையாய் அரசும் அதன் கீழ் வேம்பும்..


 ம்.. எத்தனை எத்தனை வருடப் பழக்கம் இவற்றோடு!..

முப்பத்தைந்து வருஷங்களுக்கு முன்னால் - வெள்ளம் வந்ததே..
இந்தப் படித்துறையை அடியோடு புரட்டிக் கொண்டு போகிற மாதிரி..

அதுதான் கண் கண்ட கடைசி வெள்ளப்பெருக்கு!..

அதற்குப் பிறகு, சென்ற வருடம் - சென்னையில் கனமழை..

நீரோடும் வழிகளை அடைத்து விட்டவர்கள் எல்லாம் -
கழிவு நீரில் சிக்கிக் கண்ணீர் வடித்தனர்.. கதறித் துடித்தனர்..

அப்படி ஒரு மோசமான சூழ்நிலை ஆயிற்று..

அப்போது கூட இங்கு பெரும் பிரச்னை இல்லை...

ஆற்றில் முழங்காலுக்கு மேலாகத் தண்ணீர் ஓடவில்லை..

ஆனால் - இந்த வருடம் புரட்டாசி முடிந்து ஐப்பசியும் பிறந்து விட்டது..
ஆற்றின் நாலாம் படி கூட இன்னும் நனையவில்லை..
வளை நண்டு மாதிரி ஆகிப் போனது வாழ்க்கை..

யாரது பேசிக்கிட்டுப் போறது?..

கையில் லாந்தர் விளக்குடன் எதிரில் வந்தார் அந்தப் பெரியவர்..

நாந்தானுங்க!..

சரி..சரி.. தனியாப் பேசிக்கிட்டுப் போறியே..ன்னு கேட்டேன்!..

கரக்..கரக்.. என்று சிரித்தபடி - பெரியவரும்
அவருடன் அந்த விளக்கொளியும் கனத்த இருளுக்குள் கரைந்து போயினர்...

தனியா பேசிக்கிட்டுப் போறேனா!?.. இது வேறு சங்கடமா?..
அந்த நிலைக்கா ஆளாகி விட்டேன் நான்?..

என்னையே நான் கேட்டுக் கொண்டேன்..
மறுபடியும் தன்னந்தனியாக!..

அப்படி என்ன அவசரம் உனக்கு?..

நல்ல சமயத்தில் மனசாட்சி தான் துணைக்கு வந்தது..

இனிமேல் தனியாக பேசிக்கொண்டு போகின்றேன் என்று யாரும் சொல்ல முடியாது!..

ஐப்பசி பிறந்து ஆறு நாளாகியும் அதைப் பற்றிப் பேசவேயில்லை!...

எதைப் பற்றி?..

நீ கொஞ்சம் தொந்தரவு செய்யாமல் இருக்கின்றாயா!.. இதோ படித்துறையை நெருங்கியாயிற்று.. ஆள் அரவமற்று இருந்தால் தான் நல்லது!..

உனக்குப் பைத்தியம் பிடித்து விடக்கூடாதே.. என்றுதான் நானும் துணைக்கு வந்தேன்.. இனி உன்பாடு.. அவர்கள் பாடு!.. நான் வருகின்றேன்!..

ஏய்.. ஏய்.. மனசாட்சி!..

ஆளைக் காணோம்.. போய் விட்டான்... போகட்டும்..


இவர்தான் படித்துறைப் பிள்ளையார்!...

என்ன பேரு அவருக்கு!?..

படித்துறைப் பிள்ளையார்..

அதுசரி.. பிள்ளையாருக்கு..ன்னு பேர் ஒன்னும் இல்லையா!..

அதான் படித்துறைப் பிள்ளையார்..ன்னு வெச்சிருக்கே.. அதுக்கு மேல என்ன?..

மின்மினிப் பூச்சி போல மினுக்கிக் கொண்டிருந்த விளக்கொளியில் பிள்ளையாரின் முகம் தெளிவாகத் தெரிந்தது..

அதிலும், அந்த நெற்றிப் பட்டை பளிச்சென்று மின்னியது..

இருக்காதா.. பின்னே!.. போன மாதம் தானே புதிதாக செய்து வைத்தது..

அப்படியானால் - அந்தப் பழைய நெற்றிப் பட்டை..

அதை யாரோ கிளப்பிக் கொண்டு போய் விட்டான்..
அதனால் தான் இப்போ புதியது!..

அடக் கஷ்ட காலமே.. பிள்ளையாருக்கே பெருஞ்சோதனையா!..

என்ன செய்றது?.. தெய்வம் மனுசன் கூட வாழ வந்தால் இதுக்கெல்லாம் ஆளாகித் தான் தீரணுமாம்!..

ஆகா.. தத்துவம்!..

யாரென்று திரும்பிப் பார்த்தால் - மறுபடியும் மனசாட்சி!..

பிள்ளையார் கோயிலைச் சுற்றி வரலாம் என்றால் அதற்கு இயலாதபடிக்கு குப்பைகளைக் குவித்து வைத்திருந்தனர் தெருவாசிகள்..

சட்டி பானை ஓடுகள்.. கண்ணாடி பாட்டில்கள்.. பிளாஸ்டிக் கழிவுகள்.. பிய்ந்து போன செருப்புகள்..  கிழிந்து போன ஆடைகள்.. கந்தலான பழந்துணிகள்..

இதெல்லாம் போதாதென்று பிள்ளையாருக்கு போட்டுக் கழற்றிய மாலைகள் பூச்சரங்கள்.. தொன்னைகள்.. சருகுகள்.. வாழையிலைகள்.. தேங்காய் மட்டைகள்..

ஒரு லாரிக்கு இருக்கும்.. வந்து அள்ளிக்கிட்டுப் போங்க!.. - ன்னு கரடியாக் கத்தினாலும் முனிசிபாலிட்டியில இருந்து ஒரு குஞ்சு குளுவான் எட்டிப் பார்க்கிறதில்லை..

சரி.. நாமளாக அள்ளிப் போடுவோம்.. ந்னு ரெண்டு பசங்களைப் பிடித்து ஆளுக்கு நூறு ரூபாய் கொடுத்து -

அள்ளிப் போடுங்கடா!.. ந்னு சொன்னால் -

அவனுங்க அந்தக் குப்பையெல்லாம் உருட்டித் திரட்டி அள்ளி -
அப்படியே ஆத்துக்குள்ள கொட்டிட்டானுங்க!..

அடேய்!.. என்னடா இந்த மாதிரி செஞ்சிட்டீங்க?..

குப்பையெல்லாம் ஆத்துக்குள்ளே போடாம வேறெங்க போடறது?..

- அப்படி..ன்னு எதிர்க் கேள்வி கேட்கிறானுங்க!...

டேய்.. நீங்க அள்ளிப் போட்டீங்களே.. குப்பை.. அதில கண்ணாடித் துண்டு தேங்காய் ஓடு எல்லாம் கிடந்ததே... யாரு கால்..லயும் குத்தி புண்ணாகி விடாதா?.. அந்தப் பாவம் நமக்கு வேணுமா?..


அதெல்லாம் பார்த்தால் முடியாது வாத்தியாரே!.. வடவாண்ட கரையில தான் அத்தனை பேரும் அசிங்கம் பண்ணி வெக்கிறான்.. தென்னாண்ட கரையில தான் கறிக்கடைக் கழிவை கொட்டி வெக்கிறான்.. ஓட்டைப் பாலத்துக்குக் கீழே  என்னைக்காவது பார்த்திருக்கீங்களா.. ஒரு நாய்ப் பண்ணையே இருக்கு..

அதுக்காக நாமளும் அந்த மாதிரி செய்யணுமா?.. தண்ணீர் தாய்க்கு சமம் இல்லையா?.. இதுக்குத் தான் நாலெழுத்து படிக்கணும்..ங்கிறது!..


நாலெழுத்து படிச்சிட்டா... வெளங்கிடுமா?.. படிச்சதுக்கு அப்புறம் முட்டாளா ஆகிறதுக்கு இப்படியே இருந்திடலாம் வாத்தியாரே!... அன்னைக்கு நீங்க தானே புலம்பிக்கிட்டு இருந்தீங்க.. ரசாயனக் கழிவை எல்லாம் ஆத்துக்குள்ள தொறந்து விடுறானுங்கன்னு!.. அவனுங்க எல்லாம் யாரு..ன்னு நெனவுக்கு வருதா?.. படிச்சவனுங்க தானே!..

அதெல்லாம் இருக்கட்டும்.. என்னை ஏண்டா.. வாத்தியார்.. வாத்தியார்..ன்னு சொல்றீங்க?.. நான் என்ன வாத்தியார் வேலையா பார்க்கிறேன்!?..

கேக்கிறதுக்கு நல்லதா நாலு நல்ல வார்த்தை சொல்றீங்கள்..ல!.. அப்ப நீங்க வாத்தியார் தான்!..இதுக்கெல்லாம் ஒன்னும் குறைச்சலில்லை.. மறுபடியும் அந்தக் கண்ணாடியை எல்லாம் பொறுக்கி மேலே போடுங்கடா.. டேய்!...

அது செய்யணும்..ன்னா மேல கொஞ்சம் போட்டுக் கொடுங்க... வாத்தியாரே!..

சரிடா.. தர்றேன்.. சொன்னதை உருப்படியா செய்யுங்க!..

அவ்வளவு தான்.. மீண்டும் சட்டை பானை ஓடுகள்.. கண்ணாடிச் சில்லுகள் எல்லாவற்றையும் பொறுக்கி மறுபடியும் பிள்ளையாருக்குப் பக்கத்திலேயே போட்டு விட்டுப் போய்விட்டார்கள்...

பிள்ளையாரும் மௌனமாகச் சிரித்துக் கொண்டார்...

அன்றைக்கு நடந்ததை எல்லாம் மீண்டும்
நினைத்துப் பார்த்ததில் எனக்கும் சிரிப்பு வந்து விட்டது..

உஷ்!.. - சிரிக்கக் கூடாது.. தவிர எந்த சத்தமும் கேட்கக்கூடாது..

எதை நாடி வந்தோமோ - அது நிகழ இருக்கும் நேரம்..

பிள்ளையாரப்பா!.. கருணை காட்டணும்.. நல்லபடியா காட்சி கிடைக்கணும்!..

மனதார வேண்டிக் கொண்டு - படித்துறையில் ஒரு ஓரமாக அமர்ந்தாயிற்று..

நொடிகள் நிமிடங்களாகிக் கொண்டிருக்க - ஆற்று நீருக்குள்..

அதோ.. ஒளிப்புள்ளி..  அதோ.. அதோ.. இன்னும் ஒன்று!..

இப்படியும் அப்படியுமாக ஓடிக் கொண்டிருந்தன..

ஒன்றையொன்று துரத்தி விளையாடுவது போல!..


சலசல.. என ஓடிக் கொண்டிருந்த ஆற்று நீர்ப் பரப்பு எங்கெங்கும் ஒளிக்கோலங்கள்..

மனம் பரவசமானது!.. கண்களில் ஆனந்தம் எட்டிப் பார்த்தது!..

சடார்.. - என, ஒளிப்புள்ளிகள் இரண்டும் நீருக்குள்ளிருந்து வெளிப்பட்டன..

அவ்வளவுதான்!..

யார் இந்த நரன்!.. 

- என்ற வார்த்தைகள் ஒலிக்கக் கேட்டேன்..

வியப்பும் பதற்றமும் மேலிட மயங்கி விழுந்தேன்..

மனசாட்சி: 
இன்னும் எவ்வளவோ இருக்கு.. 
அதுக்குள்ள மயங்கி விழுந்திட்டீங்களா.. வாத்தியாரே!..

அட.. மனசாட்சி.. 
உனக்கும் நான் வாத்தியார் தானா!?.. 
* * *

செவ்வாய், அக்டோபர் 18, 2016

கவியரசர்

அக்கா.. அக்காவ்!..

வாம்மா.. தாமரை!.. வா.. வா!..

என்னக்கா.. நேத்து வீட்டில இல்லையே!.. எங்கே போயிருந்தீங்க?..

ஆமம்மா!.. நேத்து நானும் அத்தானும் இலக்கிய பேரவை நிகழ்ச்சிக்குப் போயிருந்தோம்!..  கவியரசர் நினைவு நாளில்லையா!..

ஓ!...விழாவுக்கு நிறைய பேர்.. அதுவும் சின்ன வயசுப் பையன்களும் பொண்ணுங்களும் .. எல்லாம் கவியரசரோட ரசிகர்களாம்!.. ஆச்சர்யமா இருக்கு!..

ஏங்..க்கா?..

நாற்பது வருஷத்துக்கு முன்னால வந்த சினிமா பாட்டுகளை ரசித்து அதோட அழகுல ஆழ்ந்து அதப் பத்திப் பேசறது.. பாடுறதுன்னா சின்ன விஷயமா?...

ம்!..

அந்தப் பாட்டை அக்கு வேற ஆணி வேறயா பிரித்து அர்த்தம் சொல்றது.. ன்னா.. அந்தப் பாடலோட வெற்றி தானே!.. அதை எழுதுன கவியரசரோட வெற்றி தானே!..

நீங்க சொல்றது சரிதா...ங்கா!..

நேத்து விழாவில பேசுனது எத்தனை எத்தனை பாட்டு.. தெரியுமா!..

அதெல்லாம் இருக்கட்டும்.. நீங்க சொல்லுங்களேன்.. கவியரசர் பாட்டுகளைப் பற்றி!..

ஒன்னா... ரெண்டா?.. எந்தப் பாட்டைப் பற்றிச் சொல்றது!..

ஏதாவது!.. ஏன்.. நீங்களும் அத்தானும் அந்தக் காலத்தில ரசித்திருப்பீர்கள் தானே!.. அந்தப் பாடல்கள்..ல ஏதாவது!..

ஆகா.. கடைசி..ல நம்ம கதைக்கே வந்து விட்டாயா?...

அக்கா.. அக்கா.. சொல்லுங்க.. அக்கா!.. அத்தான் உங்களையே சுத்திச் சுத்தி வந்திருக்கார்!.. உங்களுக்கு குஞ்சம் எல்லாம் வாங்கிக் கொடுத்திருக்கார்!..

அதை ஏம்மா கேட்கிறாய்!?..

சொல்லுங்க..க்கா!..ஹைஸ்கூல்..ல படிச்சுக்கிட்டு இருந்தப்போ.. ஒரு தடவை.. ஒரே ஒரு தடவை.. கூப்பிட்டு அனுப்பினார்..ன்னு நம்ம வீட்டு வாண்டுகளை அழைச்சிக்கிட்டு கிளித் தோப்புக்கு போனேன்... வாண்டுங்க கேட்டதுக்கு கிளிப்பிள்ளை பிடிக்கிறதுக்கு..ன்னு சொல்லிட்டேன்.. அங்கே போனா...

ம்!..

அவர் கையில ஒரு புத்தகம்... நீ கேட்டியே அந்தப் புத்தகம்..ங்கிறார்.. நான் எப்போ புத்தகம் கேட்டேன்.. ந்னு எனக்கே சந்தேகம்.. எனக்கு உடம்பு வெலவெலத்துப் போச்சு. பக்கத்துல இருந்த வாண்டுங்க எல்லாம் கிளிக் கூட்டைப் பார்க்கிறோம்..ன்னு ஓடிப் போச்சுங்க!..

என்னக்கா.. நீங்க பயங்கர திகில் படம் மாதிரி.. சொல்றீங்க!..

அப்போ.. உங்க அத்தான் என்ன பாட்டு பாடுனார் தெரியுமா?..

.....!?

நான் மலரோடு தனியாக ஏனிங்கு நின்றேன்..
என் மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்!.. - அப்படின்னு!..

உடனே நீங்க - 
நீயில்லாமல் யாரோடு உறவாட வந்தேன்..
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்!.. ன்னு பாடலையா!..

நீ வேற!.. பயத்துல முகமெல்லாம் வேர்த்துப் போச்சு!.. என்ன சொல்றதுன்னே.. தெரியலை...

சரிதான்!..

இவரு.. அந்த நேரம் பார்த்து காது ஜிமிக்கியை சுண்டி விட்டார்.. பாரு.. அவ்வளவு தான் அவர் கையில இருந்த புத்தகத்தைப் பிடுங்கிக்கிட்டு.. ஒரே ஓட்டம்.. வீட்டுக்குள்ள வந்து தான் நின்னேன்..

என்னக்கா.. நீங்க.. அத்தானை ஏமாத்தீட்டீங்களே!..

வேர்க்க விறுவிறுக்க புத்தகத்தைத் திறந்து என்னான்னு பார்த்தால் - அந்தப் பாட்டை அப்படியே எழுதி வெச்சிருக்கார்!..

அட!.. கிளி விடு தூது, குயில் விடு தூது மாதிரி உங்களுக்கு பாட்டு ஒரு தூது ஆயிடிச்சா?..

அப்புறம் இந்தப் பாட்டு இலங்கை வானொலியால மனப்பாடம் ஆச்சு!..

ஆமாமா!.. இதெல்லாம் சீக்கிரமே மனப்பாடம் ஆயிடும்!..அதுக்கப்புறம் - வேண்டாத தெய்வம் இல்லை!..
பொன் வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட
என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற!.. 
- ங்கிற வரிகளை கோடு போட்டு புத்தகத்தைக் கொடுத்து விட்டேன்!..

ஓஹோ!.. அதுக்கப்புறம்!?..

அதுக்கப்புறம் என்ன!.. குஞ்சம் கொடுத்தவனே குங்குமம் கொடுப்பான்..ன்னு சாமி வந்து சொன்னதா!.. அத்தோட வீட்டுக்கு உண்மை எல்லாம் தெரிஞ்சு பந்தக்கால் நட்டுட்டாங்க!.. அக்காளுக்கும் அத்தானுக்கும் கல்யாணம் நடந்துடுச்சு!...

கொடுத்து வெச்சவங்க.. நீங்க!.. அதுசரி.. கல்யாணத்துக்கு அப்புறம் என்ன பாட்டு பாடினீங்க!..

இது வேறயா!..

சொல்லுங்க..க்கா!..

கல்யாணத்துக்கு அப்புறம் எத்தனையோ பாட்டு பாடியிருந்தாலும் அந்தப் பாட்டு மட்டும் இன்னும் கூடவே வருது!..

எந்தப் பாட்டு அக்கா?..

நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்..
நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும்!..

ஆகா!.. அக்கா..ன்னா அக்கா தான்!.. எனக்கும் இந்தப் பாட்டு தான் ரொம்ப ரொம்பப் பிடிக்கும்!..

அதுல பாரு.. தாமரை!..
நான் காணும் உலகங்கள் நீ காண வேண்டும்..
நீ காணும் பொருள் யாவும் நானாக வேண்டும்!.. 
- அப்படி..ன்னு பாடுறப்போ - நான் பாதி.. நீ பாதி..ன்னு கூட இல்லை.. நான் வேறு இல்லை.. நீ வேறு இல்லை..ன்னுதான் அர்த்தமாகுது!..

ஆமாங்..க்கா!.. 
பாலோடு பழம் யாவும் உனக்காக வேண்டும்.. உனக்காக வேண்டும்..
பாவை உன் முகம் பார்த்து பசியாற வேண்டும்.. பசியாற வேண்டும்!..
மனதாலும் நினைவாலும் தாயாக வேண்டும்.. நானாக வேண்டும்..
மடிமீது விளையாடும் சேயாக வேண்டும்.. நீயாக வேண்டும்!..

நீ கூட அருமையா பாடுறியே!..

போங்க..க்கா... உங்களை விடவா!..

சரி.. மீதியையும் நீயே பாடு.. கேட்போம்!.. 


சொல்லென்றும் மொழியென்றும் பொருளென்றும் இல்லை.. பொருளென்றும் இல்லை..
சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை.. 
விலையேதும் இல்லை!..
ஒன்றோடு ஒன்றாக உயிர் சேர்ந்த பின்னே உயிர் சேர்ந்த பின்னே..
உலகங்கள் நமையன்றி வேறேதும் இல்லை.. வேறேதும் இல்லை!..

அடடே!.. என்னம்மா... தாமரை.. கண்ணு கலங்குது?..

ஒன்னுமில்லே..க்கா!..

அதான்!.. டார்லிங் நினைப்பு வந்துடுச்சு!..

....அவங்களுக்கும் இந்தப் பாட்டு ரொம்பவும் பிடிக்கும்!..

யாருக்குத் தான் இந்தப் பாட்டைப் பிடிக்காது?.. கண்ணைத் துடைச்சிக்கோ.. என்ன இது சின்ன புள்ளையாட்டம்!..

அவர் பாட்டுக்கு எல்லாத்துக்கும் பாட்டு எழுதி வெச்சுட்டுப் போய்ட்டார்.. இருக்கிறவங்க மனசு தான் கிடந்து அடிச்சுக்குது!.. 

அதெல்லாம் அவருக்குக் கிடைச்ச வரம்.. அவரு எங்கே போய்ட்டாரு.. ன்னு நினைக்கிறே!.. எங்கேயும் போகலை.. நம்ம கூடவே இருக்கிறார்.. அதான் அவரே சொல்லிட்டாரே!.. எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை!.. - அப்படின்னு!..

உண்மைதான்.. அக்கா!.. கவியரசருக்கு மரணமே இல்லை!..
அந்த வேளையில் ஈசான்ய மூலையில் திடு..திடு.. என்று இடி முழக்கம்..
மழை வருவதற்கு அறிகுறியாய் சில்லென்று காற்றும் வீசியது..

சரிக்கா.. நான் கிளம்புகின்றேன்.. மழை வரும் போல இருக்கு!..

கொஞ்சம் இரு.. தாமரை.. துளசி கஷாயம் தர்றேன்.. மழைக் காலத்துக்கு நல்லது.. சளி ஜூரம் கிட்டே வராது!..

* * * நான் நிரந்தரமானவன் அழிவதில்லை..
எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை!..
* * *

ஞாயிறு, அக்டோபர் 16, 2016

புரட்டாசி தரிசனம் 5

ஏழுமலைகள்..

சேஷாத்ரி, நீலாத்ரி, கருடாத்ரி, அஞ்சனாத்ரி, வ்ருஷபாத்ரி, நாராயணாத்ரி, வேங்கடாத்ரி - என்பன அவை..

இவற்றுள், அஞ்சனாத்ரி எனும் திருமலையில் தான் -
ஸ்ரீ ஆஞ்சநேயப் பெருமானின் திரு அவதாரம் நிகழ்ந்தது...


ஸ்ரீ ஆஞ்சநேயரின் திருப்பெயர்களுள் சிறப்பானது -
அஞ்சனையின் நேயன் எனும் பொருள்படும் ஆஞ்சநேயன் என்பது தான்..

ஏனெனில், ஆஞ்சநேயரின் தாய் - அஞ்சனை..

அன்னை அஞ்சனையின் அன்பினில் கட்டுண்டவர் - ஸ்ரீ ஆஞ்சநேயர்..

வைணவத்தில் மிகவும் சிறப்பிக்கப்படுபவர்களுள் - இருவர்..

அவர்கள் -

பெரிய திருவடி - ஸ்ரீ கருடன்..
சிறிய திருவடி - ஸ்ரீ ஆஞ்சநேயர்..

திவ்ய தேசங்களின் சிறப்பான வைபவங்கள்
ஆஞ்சநேய உற்சவத்துடன் நிறைவு பெறும்...

அதிலும் ஸ்ரீராமாயணப் பிரவசனம் நிகழும் இடங்களில்
ஸ்ரீ ஆஞ்சநேயர் ப்ரசன்னமாகி இருப்பார் என்பது ஐதீகம்...

ஸ்ரீ ராம - எனும் மந்திர உபாசனை -
ஆஞ்சநேயரை மகிழ்விக்கும் என்பர் ஆன்றோர்..

ஸ்ரீராமகாதையில் சொல்லின் செல்வர் எனப் புகழப்படுபவர் ஸ்ரீ ஆஞ்சநேயர்...

மகாபாரதத்திலும் பேசப்படுபவர் - ஸ்ரீ ஆஞ்சநேயர்..

திரௌபதி விரும்பிக் கேட்ட சௌகந்தி மலரை இமயமலைச் சாரலில் இருந்து பறித்து வருவதற்காக பீமன் பயணிக்கும் போது

அவனுடன் தர்க்கம் செய்து அவன் பலத்தை அவனுக்கு உணர்த்தியதுடன் -
தன்னையும் காட்டுவித்து தடுத்தாட்கொண்டவர் - ஸ்ரீ ஆஞ்சநேயர்..

அருச்சுனனின் தேர்க்கொடியில் திகழ்ந்தவர் - ஸ்ரீ ஆஞ்சநேயர்..

குருஷேத்திரத்தின் போர் முகத்தில் உற்றார் உறவினைக் கண்டு தளர்வுற்று மயங்கிச் சாய்ந்த அருச்சுனனுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் -

ஸ்ரீ ஹரிபரந்தாமன் கீதோபதேசம் செய்தபோது -
அதனை உடனிருந்து கேட்ட பெருமைக்குரியவர் - ஸ்ரீ ஆஞ்சநேயர்..

பாரதம் எங்கும் ஆஞ்சநேயருக்கு ஆயிரக்கணக்கான கோயில்கள்...

அதிலும் குறிப்பாக - சிவாலயங்களில் விளங்கும் ஆஞ்சநேயர் சந்நிதிகள் நூற்றுக் கணக்கில்..

ஸ்ரீ ஆஞ்சநேயர் சிவபெருமானை வழிபட்ட திருத்தலங்களும் பற்பல..

குறிப்பாக -  

தஞ்சை மாவட்டத்தில் முத்துப்பேட்டைக்கு அருகில் கோயிலூர் எனப்படும் திரு உசாத்தானம்..

நீரிடைத் துயின்றவன் தம்பிநீள் சாம்புவன்
பேருடைச் சுக்ரீவன் அனுமன் தொழக்
காருடை நஞ்சுண்டு காத்தருள் செய்தஎம்
சீருடைச் சேடர்வாழ் திருவுசாத்தானமே.. (3/33)

- என்பது திருஞானசம்பந்தர் திருவாக்கு..

தவிரவும், மயிலாடுதுறைக்கு அருகில் திருக்குரக்குக்கா (திருக்குரக்காவல்) மற்றும் வைத்தீஸ்வரன்கோயில்..

கும்பகோணத்திற்கு அருகில் தென்குரங்காடுதுறை (ஆடுதுறை)..

சென்னையில் திருவலிதாயம் (பாடி) மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய திருத்தலங்கள் குறிப்பிடத்தக்கவை..

ஸ்ரீ ராமேஸ்வரம்
தஞ்சை பாபநாசத்திலுள்ள நூற்றெட்டு சிவாலயத்தில்
மூலஸ்தானத்தின் தென்புறமாக நூற்றெட்டு லிங்கங்களுள் ஒன்றான
ஸ்ரீ அனும லிங்கம் தனிக்கோயிலில் திகழ்கின்றது..

தஞ்சை நகருக்குள் மட்டும் பன்னிரண்டுக்கும் மேற்பட்ட ஆஞ்சநேயர் கோயில்கள் உள்ளன..

ஸ்ரீ மூலை ஹனுமான் - தஞ்சை
அவற்றுள் தலையாயது - தனிக்கோயிலாக கொடிமரத்துடன் விளங்கும் மூலை அனுமார் திருக்கோயில்..

சுசீந்திரம் ஸ்ரீ தாணுமாலய ஸ்வாமி திருக்கோயிலில் பேருருவாக விளங்கும்
ஸ்ரீ ஆஞ்சநேயர் பிரசித்தி பெற்றவர்..

அவ்வாறே - நாமக்கல் மலையில் சிறப்புடன் திகழ்கின்றார்...

ஸ்ரீ அனுமன் - நாமக்கல்
திருமலை
ஸ்ரீரங்கம்
ஸ்ரீ ஆராவமுதன் - குடந்தை
ஸ்ரீராஜகோபாலன் - மன்னார்குடி
ஸ்ரீராமன் - வடுவூர்
ஆஞ்சநேயரின் பெருமையை முழுதுமாகச் சொல்வது என்பது எளிதல்ல...

புரட்டாசி மாதத்தில் -

திருவேங்கடம், கள்ளழகர் கோயில், ஒப்பிலியப்பன் கோயில், திருஅரங்கம் -
என, தரிசனம்..

புரட்டாசியின் நிறைவு நாளாகிய இன்று
சிறிய திருவடியாகிய ஸ்ரீ ஆஞ்சநேயப் பெருமானின் தரிசனம்..

கஞ்சனூர்.

இறைவன் - ஸ்ரீ அக்னீஸ்வர ஸ்வாமி 
அம்பிகை - ஸ்ரீ கற்பகாம்பிகை
தல விருட்சம் - பலாச மரம் (புரசு)
தீர்த்தம் - அக்னி தீர்த்தம்

அக்னி வழிபட்டு உய்வடைந்த திருத்தலம்..
.
அப்பர் பெருமான் தரிசித்து இன்புற்ற திருத்தலம்..

குடந்தையிலிருந்து 18 கி.மீ தொலைவு..
சூரியனார் கோயிலிலிருந்து 3 கி.மீ.. தொலைவு..

இன்றைய பதிவில் -

கஞ்சனூர் சிவாலயத்தில் குடிகொண்டுள்ள
ஸ்ரீ ஆஞ்சநேய மூர்த்திக்குபுரட்டாசி கடைசி சனிக்கிழமையை
முன்னிட்டு யாகசாலை வேள்வியுடன் நிகழ்ந்த அபிஷேக தரிசனம்..

சந்தனக்காப்பு அலங்காரமும் ஊஞ்சல் உற்சவமும் சிறப்பாக நடந்துள்ளன..

நிகழ்வின் படங்களை வழங்கியவர் திரு கணேசன் குருக்கள்..
அவர் தமக்கு மனமார்ந்த நன்றி...

ஊஞ்சல் வைபவம்
அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்று ஆறாக ஆருயிர் காக்க ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கணடு அயலாரூரில்
அஞ்சிலே ஒன்று வைத்தான் அவன் எம்மை அளித்துக் காப்பான்..

புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம் அரோகதா
அஜாட்யம் வாக்படுத்வம் ச ஹனுமத் ஸ்மரணாத் பவேத்


ஸ்ரீ ஆஞ்சநேயர் திருவடிகள் போற்றி...  
* * *