நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், ஆகஸ்ட் 31, 2023

சுந்தரத் தமிழ் 1


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி 14 
வியாழக்கிழமை


தேவாரத் திருப் பதிகங்களுக்குள் காட்டப்பட்டிருக்கும் 
இயற்கைக் காட்சிகள்  நம்மை மயக்குவன.. 

இப்படியெல்லாம் இந்த ஊர்கள் இருந்திருக்கின்றன  ஒரு காலத்தில்!.. - என்ற ஆதங்கமும் மனதில் எழுவதைத் தவிர்க்க முடியாது..

அவ்வப்போது
அவற்றைக் கண்டு தளத்தில் தருவதற்கு முயற்சிக்கின்றேன்..

தொகுப்பிற்குத் துணை :- 
பன்னிரு திருமுறை, தருமபுர ஆதீனம்..

இன்றைய பதிவில் சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் நமக்குக் காட்டுகின்ற இயற்கைக் காட்சி..


அங்குமிங்குமாக அலை பாய்ந்து கொண்டு வந்த - குரங்குக் கூட்டம் அந்தத் தோட்டத்தைக் கண்டது..  

அது வாழைத் தோட்டம்.. 

பசி மிகுத்திருந்த  வேளையில் 
வாழைத் தோட்டம் அமிர்தக் கடல் போலக் காட்சியளித்தது.. 

குரங்குகளின் அதிரஷ்டம்  அருகிருந்த  பலாத் தோப்பில் இருந்து கனிந்த பழங்களின் வாசம்..


வாழைத் தார்களையும் , பலாப் பழங்களையும் கண்ட குரங்குகளுக்கு அதற்கு மேல் அடக்க ஒடுக்கமாய் இருக்க முடியவில்லை.. ஒருசேரப் பாய்ந்தன - உண்டு களிப்பதற்கு..

தலைமைப் பொறுப்பில் இருந்த குரங்கு சொன்னது - " இப்படியான முயற்சி சரியல்ல நண்பர்களே.. ஒரு சிலர் சென்று கனிந்த பலாப் பழத்தை அங்கிருந்து கொண்டு வாருங்கள்.. இங்கே வாழைக் கனிகளைப் பறித்துக் கொள்ளலாம். காவல் இல்லை  என்றாலும் தோட்டங்களுக்கு சேதம் விளைத்தல் சரியில்லை!.. " -

' பசிக்கிற நேரத்தில இவன் வேற தொந்தரவு செஞ்சுக்கிட்டு.. ' - என்று உள்ளுக்குள் நினைத்துக் கொண்டாலும் இளம் பெண் குரங்குகளை நோட்டமிட்டபடி   - பலாப்பழம் பறிப்பதற்குக் குதித்தோடின வாலிபக் குரங்குகள்..

அடுத்த சில நொடிகளில் கூட்டத்துக்குத் தேவையானதை விடவும் அதிகமான பழங்கள் சேர்க்கப்பட்டு விட்டன.. 

கொண்டு வரப்பட்ட பலாப் பழங்களை
சாமார்த்தியக் குரங்குகள் ஒன்று சேர்ந்து பிய்த்தன.. உள்ளிருக்கும் சுளைகளைப் பிடுங்கி எடுத்து வெளியே பரப்பி வைத்தன.. 

ஆயிற்று.. இனி பங்கீடு தான்.. 

கிழடான இரு குரங்குகள் பலாச் சுளைகளையும் வாழைப் பழங்களையும் தக்க முறையில் பங்கிட்டு முன் வைத்தன.. 

ஆரம்பமாயிற்று பிரச்னை..

" எனக்கு வைத்த பங்கு  கொஞ்சமாக இருக்கின்றதே!.. " என்றது - வானரம் ஒன்று..

" எனக்கான பங்குதான் கொஞ்சம்.. " - என்றது மற்றொன்று.. 

" நீ பார்த்த வேலைக்கு இதுவே அதிகம்!.. கொடுத்ததைப்  பேசாமல் எடுத்துக் கொண்டு போ!.. " - என்றது வேறொன்று.. 

" அதை நீ சொல்லக்கூடாது!.. " -  மூலையில் இருந்த வானரம் கூச்சலிட்டது..

" இனி பொறுப்பதற்கு ஒன்றும் இல்லை.. எரிதழல் கொண்டு வாடா த்ம்பி!... " - என்று குதித்தது பிறிதொன்று..

அவ்வளவு தான் அங்கே மூண்டது கலவரம்.. கூச்சலும் குழப்பமும் எழுந்தன.. 

ஒரு வானரம் ஓடிப் போய் தாழை மடல்களைப் பிய்த்துக் கொண்டு வந்தது.. வாழை மட்டைகளுடன் ஓடி வந்தது வேறொன்று.. இன்னொன்று ஓடிப்போய் பலா மரத்தில் இருந்து குச்சிகளை ஒடித்துக் கொண்டு வந்தது..

அறிவு நிறைந்ததாய் தம்மை நினைத்துத் தருக்கிக் கொண்ட குரங்குகள் - தாழை மடல்களாலும் வாழை மட்டைகளாலும் பலாக் குச்சிகளாலும் தமக்குள் அடித்துக் கொண்டன.. 

அவ்விடத்தில்
கூச்சலும் குழப்பமும் மேலோங்கியிருந்தது

சச்சரவின் முடிவு என்ன என்பது தெரிய வில்லை.

இப்படியான கூத்து நிகழ்ந்த இடம் திருவாஞ்சியம்..

இந்த நிகழ்வினைக் கண்ணுற்ற சுந்தர மூர்த்தி ஸ்வாமிகள் -

வாழைப் பழங்களுக்காக (அற்ப விஷயங்களுக்காக)  குரங்குகள் அடித்துக் கொள்ளும் வளம் மிக்க திருவாஞ்சியத்தில்  மாதொருபாகன் எழுந்தருளியிருக்கின்றான்.. அவனை அல்லாது வேறொரு கதி உண்டோ.. வேறொருவரை, இறைவன - என, யாம் நினைக்கக் கடவோமோ!.. 

-  என்று, மேலான பரம் பொருளைப் போற்றித் திருப்பதிகத்தினுள் பாடியருள்கின்றார்..

இன்றைய மக்களும் இப்படித்தான் இருக்கின்றார்கள் - என்பது அடிக்குறிப்பு..


வாழையின் கனி தானும்
மது விம்மு வருக்கையின் சுளையும்
கூழை வானரம் தம்மிற்
கூறிது சிறிதெனக் குழறித்
தாழை வாழையந் தண்டாற்
செருச்செய்து தருக்கு வாஞ் சியத்துள்
ஏழை பாகனை அல்லால்
இறையெனக் கருதுதல் இலமே.. 7/76/9.
***

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

புதன், ஆகஸ்ட் 30, 2023

ஸ்ரீ காசி

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி 13
புதன் கிழமை


 
உத்தரகாண்ட் மாநிலத்தின் கங்கோத்ரியின் கோமுகியில் பிறக்கின்ற பாகீரதி நதியானது, தேவப்பிரயாகை எனுமிடத்தில் அலக்நந்தா நதியுடன் கலந்து கங்கை ஆகின்றது..

கங்கை நதியின் கரையில் தான் புனித காசி நகர் அமைந்துள்ளது..

நன்றி: விக்கி (விக்கியில் இருந்து பெறப்பட்ட செய்திகளின் தொகுப்பு..)

மேற்கில்  இருந்து பலமுறை  படையெடுத்து வந்த முரடர்கள் 1025 ல் சோமநாதபுரத்தை முற்றாக அழித்தனர்.. 

அந்த மூர்க்கர்களை - எதிர்த்து சண்டையிட்ட  மன்னர்கள் வெகு சிலரே.. 

காலத்தின் கொடுமையால்
செல்வ வளம் மிகுத்திருந்த காசி நகரும்
வீழ்த்தப்பட்டது.. 

ஆதி விஸ்வேஸ்வரர் மந்திர் எனப்பட்ட  விஸ்வநாதர் கோயிலை அந்நியர்கள் கொள்ளையடித்துத் தகர்த்தனர்..
.இக்கொடுமை நிகழ்த்தப்பட்ட ஆண்டு 1194..

1230 களில் மீண்டும்
கட்டப்பட்ட விஸ்வநாதர் கோயில் 1500 களில் மீண்டும் தகர்க்கப்பட்டது..

மீண்டும் 1585 ல் - 
விஸ்வநாதர் கோயிலை  ராஜா மான் சிங் கட்டினார்..

1669 ல், முகலாய அரசன் ஔரங்கசீப்பு - விஸ்வநாதர் கோயிலை இடித்து விட்டு இடிக்கப்பட்ட   கோயிலின் 
சிருங்கார் கௌரி மண்டபத்தின் கிழக்குப் பக்கத்து சுவரை ஆதாரமாகக் கொண்டு மேற்குப் பக்கத்தில் அவனது கொள்கைக்கு ஏற்றதாக ஒன்று கட்டப்பட்டது.. அதற்கு க்யான்வாபி எனப் பெயரும் வைக்கப்பட்டது.. 
(இந்தப் பெயரை அவன் வைத்தானோ அவனுக்குப் பின்னால் வந்த வேறு எவனும் வைத்தானோ..)


காசி விஸ்வநாதர் கோயிலை 
மீண்டும் கட்டி எழுப்பி நமக்களித்தவர்  - மராட்டியப் பேரரசின் இந்தூர் ராணி 
மாதரசி ஸ்ரீமதி அகல்யா பாய் ஹோல்கர்.. 

ஸ்ரீமதி அகல்யா பாய்  அவர்களால் காசி க்ஷேத்திரம் மீண்டும் புனரமைக்கப்பட்ட ஆண்டு 1780..

சீக்கியப் பேரரசின் மன்னர் ரஞ்சித் சிங்.. அவரது பட்டத்தரசி ஸ்ரீமதி தாதர் கௌர் - கோயிலின் விமானத்தை அலங்கரிப்பதற்காக  பெருமளவில் தங்கத்தை நன்கொடையாக வழங்கிய ஆண்டு 1835..


தமிழகத்தின் நாட்டுக்கோட்டை நகரத்தார் -
விஸ்வநாதர் கோயிலின் அருகே புதிய இடம் வாங்கி 
விசாலாட்சியம்மன் கோயிலை எழுப்பி  (1893) கும்பாபிஷேகம் செய்வித்த ஆண்டு 1908 (பிலவ தை 25)..

காசியில் கங்கை நதியின் 
தசாஸ்வமேத படித்துறையில் இருந்து  விஸ்வநாதர் கோயிலுக்கு செல்வதற்கான வழி மிகவும் குறுகியது..  அந்நிய படையெடுப்பாளர்களால் வசப்படுத்தப்பட்டு குறுக்கப்பட்டிருந்த இந்த வழி - நாடு சுதந்திரம் அடைந்த பிறகும் சீரமைக்கப்படவே இல்லை.. 

நீண்ட நெடுங்காலத்துக்குப் பிறகு பற்பல இன்னல், எதிர்ப்புகளைக் கடந்து மேற்கொள்ளப்பட்ட (2019) புனர்மைப்பின் போது - 

ஸ்ரீ கங்கேஷ்வர் மகாதேவ் கோயில், ஸ்ரீ மனோகரேஸ்வர் மகாதேவ் கோயில், ஸ்ரீ விநாயகர் கோயில், மற்றும் ஸ்ரீ கும்ப மகாதேவ் கோயில் உட்பட நாற்பதுக்கும் மேற்பட்ட  பழைமையான கோயில்கள் 
பல நூற்றாண்டு கால ஆக்ரமிப்பிலிருந்து  - இடிந்த நிலையில் மீட்கப்பட்டன.. 

கங்கைக் கரையில் இருந்து ஸ்ரீ விஸ்வநாதர் கோயில் வரைக்கும் சந்நிதி வழிநடை சீரமைக்கப்பட்ட ஆண்டு 2021..

இதனால நாட்டுக்கு என்ன பயன்?.. -  என்று பிறவிக் குணம் மாறாமல் பற்பல ஜந்துக்களும் ஊளையிட்டு கொண்டு திரிகின்றன.. 

அந்த ஜந்துகளுக்கும்  படியளந்து கொண்டிருப்பவர்கள் - காசி விஸ்வநாதரும் - அன்னபூரணியும் தான்!.. - என்பது குறிப்பிடத்தக்கது..
**
காணொளி வடிவமைப்பு தஞ்சையம்பதி


ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

செவ்வாய், ஆகஸ்ட் 29, 2023

அன்னபூரணி 2


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி 12
செவ்வாய்க்கிழமை


சிவ மரபில் காசியும்  கங்கையும் கயிலாயமும் ஈசனின் திருவிழிகளுக்கு ஒப்பானவை.

காசியின் தரிசனத்தால் தான் - தமிழகத்தில் 
சிவகாசி, தென்காசி சிவகங்கை
என்றெல்லாம் ஊர்கள் அமைந்தன..

தஞ்சை மேல ராஜ வீதியில் காசி விஸ்வநாதர் - என இரண்டு கோயில்களும், கயிலாய நாதர் கோயில் என ஒன்றும் மணிகர்ணிகேஸ்வரர் கோயில் - என,  ஒன்றும்  அமைந்துள்ளன..

பூக்காரத்தெரு ஸ்ரீ சுப்ரமண்யர் கோயிலில் உப சந்நிதிகளாக ஸ்ரீ காசி விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன் சந்நிதிகள் அமைக்கப்பட்டுள்ளன..

அடுத்துள்ள, 
கரந்தையில் காசி விஸ்வநாதர் பெயரிலும் 
புன்னை நல்லூரில் கயிலாய நாதர் பெயரிலும் 
அன்னப்பன் பேட்டையில் - ஸ்ரீ அன்னபூரணி உடனுறை கயிலாய நாதர் பெயரிலும் கோயில்கள் உள்ளன..


தஞ்சையில் மிகப் பழைமையான கொங்கணேஸ்வரர் கோயிலில் ஸ்ரீ அன்ன பூரணிக்கு தனி சந்நிதி உண்டு..

மேலும், 
தஞ்சை தெற்கு ராஜ வீதியிலும் கணபதி நகரிலும் ஸ்ரீ அன்னபூரணி அம்மனுக்கு கோயில்கள் உள்ளன..

பிரஹதீஸ்வரர் கோயில் தீர்த்தத் குளத்தின் பெயர் சிவகங்கை..

திரு ஐயாறு ஸ்ரீ பஞ்ச நதீஸ்வரர் கோயில் உள் திருச்சுற்றில் ஸ்ரீ காசி விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன் சந்நிதிகள் அமைந்துள்ளன..

காசி என்றாலும் கயிலாயம் என்றாலும்
கங்கை என்றாலும்
அன்னபூரணி என்றாலும்
புண்ணியம் என்றாகின்றது..

அவ்வண்ணமே எங்கும்
நிறையட்டும்.
*


இன்று
திரு ஓணத் திருநாள்

அனைவருக்கும்
அன்பின் நல்வாழ்த்துகள்
 
ஓம் ஹரி ஓம்
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

திங்கள், ஆகஸ்ட் 28, 2023

அறுசுவை


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி 11
திங்கட்கிழமை


உணவு என்றால் - சுவை. 

அந்தச் சுவையையும் 
ஆறு வகையாக வகுத்தது நமது கலாச்சாரம்.. 

ஆறு சுவைகளுடன் கூடிய உணவே - உணவு. அதுவே மருந்து - என்றும் வகுத்துள்ளனர் நம் முன்னோர்கள்..


பாயாசம் பந்திக்கு வரவே இல்லயே!..

இனிப்பு முதலில்.. அடுத்ததாக உப்பு, புளிப்பு, காரம், கசப்பு  இறுதியாகத் துவர்ப்பு..

கரும்பில் இனிப்பும்
கீரைகளில் உப்பும்
எலுமிச்சையில் புளிப்பும் மிளகில் காரமும் பாகற்காயில் கசப்பும் வாழைக் காயில் துவர்ப்பும் - விளங்குகின்றன..

விருந்துகள் இனிப்புடன் தொடங்கி துவர்ப்பான தாம்பூலத்துடன் நிறைவடையும் பாரம்பர்யம் நம்முடைய து.. 

இருப்பினும், விருந்துகளில் கசப்பு சேர்க்கப்படுவது இல்லை..

இவ்வாறு அறுசுவை கூடிய உணவை  உண்டு உறங்கி விட்டால் போதாது. உணவை அதற்கு உரிய காலத்தில்  உண்ண வேண்டும்..

நமது உடல் 
ஏழு தாதுக்களால் ஆனது என்கின்றது ஆயுர்வேதம்.. அவை - 

ரஸ தாது : நிணநீர்
ரக்த தாது : இரத்தம்
மாம்ச தாது : தசைகள்
மேதா தாது : கொழுப்பு
அஸ்தி தாது : எலும்பு 
மஜ்ஜ தாது :  மூளை 
(நரம்பு மண்டலம்)
சுக்ர தாது : ஜனனேந்திரியம் 
(விந்து, அண்டம்)
-: நன்றி: விக்கி :-

இந்த ஏழு தாதுக்களையும் வளர்ப்பவை ஆறு சுவைகளாகும்..

அந்தி சந்தி எனும் உதயாதி வேளைகளில் எந்த உணவையும் உண்ணக் கூடாது. 

கோபம் துக்கம் கவலைகளில்  உண்பதைத் தவிர்த்திட வேண்டும்.

வறட் .. வறட் .. - என்று அள்ளிப் போட்டுக் கொள்ளக் கூடாது.. உணவை அப்படியே  விழுங்கக் கூடாது..

நின்று கொண்டு உண்ணக் கூடாது. கையை ஊன்றிக் கொண்டும் சாப்பிடக் கூடாது..

எவ்வகை உணவாயினும் அதை வாழை இலையில் உண்பது சாலச் சிறந்தது..

நோயுற்றவர்களைத் தவிர மற்றவர்கள் படுக்கையில் அமர்ந்து கொண்டு உணவு உட்கொள்வது கூடாது என்பது பொதுவான விதி.. 

உண்ணும் போது, கிழக்கு நோக்கி அமர்ந்து உண்பதனால் ஆயுள் வளரும். தெற்கு நோக்கி உண்டால்  புகழ் வளரும். மேற்கு நோக்கி  உணவு உட்கொண்டால்  செல்வம் மேலோங்கும்.
வடக்கு நோக்கி உணவு உட்கொள்ளவே கூடாது என்று பெரியோர்கள் வகுத்து வைத்திருக்கின்றனர்.. 

வேறொரு முக்கியமான விஷயம் - காலணிகளோடு சாப்பிடக் கூடாது... இதை விடவும் முக்கியமானது உணவை வீணடிக்கக் கூடாது..

இதையெல்லாம் நவ நாகரீக நடைமுறையில் கடைபிடிப்பது மிகவும் சிரமம்..

உணவு உட்கொண்ட பின் நூறு அடி தூரமாவது நடக்க வேண்டும் என்பது சிலருடைய கருத்து.. 

உணவும் சுவையும் பிரபஞ்ச ஆற்றலுடன் தொடர்பு உடையவை..

இதை அறிந்து கொண்டால்,  நோய்களைத் தீர்ப்பதோடு நோய்கள் வராமலும் தடுக்கலாம்..

எப்போது  வேண்டுமானாலும் சாப்பிடலாம்.. 
எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம்.. 
எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம்.. 
எப்படி வேண்டுமானாலும் சாப்பிடலாம்..  
- என்றிருந்தால்  சொல்வதற்கு ஒன்றும் இல்லை..

நோய் நொடி இன்றி - நமது உடல் நலமாக இருந்து விட்டால் வாழ்க்கை இனிமை தான்..
 
ஒழுங்கு முறை தவறாமல் ஆறு சுவைகளுடன் உணவு உட்கொண்டு வந்தால், வாழ்வில் இனிமை என்றென்றும் நிலைத்திருக்கும்..

நம்முடைய நலம்
நம்முடைய கையில்!..
"*"
திருக்குற்றாலம் 
ஸ்ரீ குற்றாலநாதர் திருக்கோயில் 
தெற்குப் பிரகாரத்தில்
தற்காலிக கடைகள்
 அமைக்கப்பட்டிருந்தன   
அவற்றுள் ஒன்றில் எரிவாயு உருளை வெடித்து
 ஆக.,25 பிற்பகல் 2:30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது..

தீப்பிழம்புகளும் புகை 
மண்டலமுமாக காணொளியும் 
வந்துள்ளது.. எனினும், 
பதிவில் வைப்பதற்கு 
மனமில்லை..


இறைவா..
எம்பெருமானே..
***


ஞாயிறு, ஆகஸ்ட் 27, 2023

ஆயி மகமாயி


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி 10 
 ஞாயிற்றுக்கிழமை


ஆதி பராசக்தி திரைப் படத்திற்காக
பாரம்பர்ய மாரியம்மன் தாலாட்டினை ஒட்டி
கவியரசர் இயற்றிய பாடல்

பாடியவர் சுசீலா
இசை 
திரை இசைத் திலகம்
இயக்கம்
இயக்குனர் திலகம்


ஆயி மகமாயி ஆயிரம்
கண்ணுடையாள் 
நீலி திரிசூலி நீங்காத
பொட்டுடையாள்

சமயபுரத்தாளே 
சாம்பிராணி வாசகியே 
சமயபுரத்தை விட்டு 
சடுதியிலே வாருமம்மா..

மாயி மகமாயி
மணி மந்திர சேகரியே
எங்க ஆயி உமையானவளே
ஆஸ்தான மாரிமுத்தே..

சிலம்பு பிறந்ததம்மா
சிவலிங்கப் பாறையிலே 
பிரம்பு பிறந்ததம்மா 
பிச்சாண்டி சந்நிதியில்

உடுக்கை பிறந்ததம்மா
உருத்திராட்ச பூமியிலே 
பம்பை பிறந்ததம்மா  
பளிங்கு மா மண்டபத்தில்

மாயி மகமாயி
மணி மந்திர சேகரியே
எங்க ஆயி உமையானவளே
ஆஸ்தான மாரிமுத்தே..

பரிகாசம் செய்தவரை 
பதைபதைக்க வெட்டிடுவே
பரிகாரம் கேட்டு விட்டா
பக்கத்துணை நீ இருப்பே..
மேல்நாட்டுப் பிள்ளையிடம் 
நீ போட்ட முத்திரையை 
நீ பார்த்து ஆத்தி வச்சா 
நாள் பார்த்து பூஜை செய்வான்..

மாயி மகமாயி
மணி மந்திர சேகரியே
எங்க ஆயி உமையானவளே
ஆஸ்தான மாரிமுத்தே..

குழந்தை வருந்துவது 
கோயிலுக்குக் கேட்கலையோ 
மைந்தன் வருந்துவது 
மாளிகைக்கு கேட்கலையோ..

ஏழைக் குழந்தையம்மா
எடுப்போர்க்கு பாலனம்மா 
உன் தாளில் பணிந்து விட்டான்
தயவுடனே பாருமம்மா..

கத்தி போல் வேப்பிலையாம்
காளியம்மன் மருத்துவமாம்
ஈட்டி போல் வேப்பிலையாம்
ஈஸ்வரியின் அருமருந்தாம்
வேப்பிலையில் உள்ளிருக்கும்
வித்தை தனை யார் அறிவார்..


ஆயா மனமிரங்கு
என் ஆத்தா மனம் இரங்கு
அம்மையே நீ இரங்கு என்
அன்னையே நீ இரங்கு..
 

குழந்தை வருந்துவது 
கோயிலுக்குக் கேட்கலையோ 
மைந்தன் வருந்துவது 
மாளிகைக்கு கேட்கலையோ..
***
 
ஓம் சக்தி ஓம்

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

சனி, ஆகஸ்ட் 26, 2023

கழல் போற்றி

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி 9
சனிக்கிழமை

 
ஒரு நாள், கிருஷ்ணனும் பலராமனும் 
நண்பர்களுடன் யமுனை நதிக் கரையில் விளையாடிக் கொண்டு இருந்த போது,  

அரக்கன் ஒருவன் கன்று என வடிவம்  கொண்டு  கிருஷ்ணனைக் கொல்லும் நோக்கத்துடன் அங்கு வந்தான். கன்றின் வடிவுடன் வந்திருந்ததால் எளிதாக மந்தையுடன் சேர்ந்து கொண்டான்.. 

இதைக் கவனித்த கிருஷ்ணன்  ஓசைப்படாமல் கன்றாக வந்திருக்கும் அரக்கனை அணுகி -  மின்னலெனக் கன்றின் பின்னங்கால்கள் இரண்டையும் பிடித்து, சுழற்றி அடித்து, அருகிருந்த மரத்தின் மீது வீசி எறிந்தான்.   மரத்தின் மீது மோதி உயிரிழந்த அரக்கன் மேலிருந்து கீழே தரையில் விழுந்து மடிந்தான்..


அரக்கன் தரையில் விழுந்து இறந்ததைக் கண்ட  - மற்ற சிறார்கள் கோகுலத்திற்கு ஓடிச் சென்று நடந்ததைக் கூறினர்..

அதைக் கேட்ட நந்தகோபனும் யசோதாவும் பதற்றத்துடன் ஓடி வந்து கிருஷ்ணனையும் பலராமனையும் ஆரத்தழுவிக் கொண்டனர்..

கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி!.. 


மற்றொரு சமயம் கண்ணன் நண்பர்களுடன் சேர்ந்து யமுனை நதியில் தண்ணீர் அருந்திய போது  கரையோரமாக நின்றிருந்த கொக்கு ஒன்று திடீர் என உருவத்தில் பெரியதாகியது..

அத்துடன்  கிருஷ்ணனைக் குறி வைத்து கூரிய அலகுகினால் தாக்கி,  விழுங்கியது.. 

கிருஷ்ணனை மாயக் கொக்கு விழுங்குவதைக் கண்ட அனைவரும்  பயந்து நிற்க - அதிர்ஷ்டவசமாக கிருஷ்ணன்  கொக்கின் தொண்டைக்குள் இருந்து வெளியில் வந்தான்.. 

மாய கொக்கு தனது கூரிய அலகினால் 
மீண்டும் கிருஷ்ணனைக் குத்திக் கொல்ல முயன்றது.. 


அப்போது கிருஷ்ணன் சற்றும் பதற்றமில்லாமல்   அந்தக் கொக்கின் அலகினைப் பிளந்து அழித்தான்.. 

கம்சனால் ஏவப்பட்டு
கொக்கு வடிவமாக வந்த அரக்கனும் அழிந்து போனான்..

விவரம் அறிந்து ஓடிவந்த நந்தகோபனும் யசோதாவும் குழந்தைக்கு இன்னும் என்னென்ன துன்பங்கள் நேருமோ!.. - என்று வருந்திய போது, 

அரக்கன் அழிந்ததை எண்ணி தேவர்கள்
மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்தனர்..

புள்ளின்வாய்  கீண்டானைப்  
பொல்லா  அரக்கனை கிள்ளிக்  
களைந்தானை போற்றி போற்றி!..
**
 
ஓம் ஹரி ஓம்
***

வெள்ளி, ஆகஸ்ட் 25, 2023

திரு ஏரகம்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி 8
வெள்ளிக்கிழமை


இன்றைய
திருப்புகழ்
திரு ஏரகம்


தனதான தத்த தனதான தத்த
தனதான தத்த ... தனதான
 
செகமாயை யுற்றெ னகவாழ்வில் வைத்த
திருமாது கர்ப்ப ... முடலூறித்

தசமாத முற்றி வடிவாய்நி லத்தில்
திரமாய ளித்த ... பொருளாகி

மகவாவி னுச்சி விழியாந நத்தில்
மலைநேர்பு யத்தி ... லுறவாடி

மடிமீத டுத்து விளையாடி நித்த
மணிவாயின் முத்தி ... தரவேணும்..

முகமாய மிட்ட குறமாதி னுக்கு
முலைமேல ணைக்க ... வருநீதா

முதுமாம றைக்கு ளொருமாபொ ருட்குள்
மொழியேயு ரைத்த ... குருநாதா

தகையாதெ னக்கு னடிகாண வைத்த
தனியேர கத்தின் ... முருகோனே

தருகாவி ரிக்கு வடபாரி சத்தில்
சமர்வேலெ டுத்த ... பெருமாளே...
-: அருணகிரிநாதர் :-


உலக மாயையின் வசமாகிய
இல்லற வாழ்வில் எனக்குக் கிட்டிய
மனையாளின் கருவில் உருவாகி 
அவளது கர்ப்பத்தில் ஊறி
பத்து மாதம் வளர்ந்து

நல்ல வடிவுடன் இப்புவியில்
 குழந்தைச் செல்வமாக 
நீ எங்களுக்குப் பிறந்து,

குழந்தைப் பாசத்தினால் நான் உன்னை
உச்சி முகர்ந்து, விழியோடு விழி பார்த்து
முகத்தோடு முகம் சேர்த்துக் 
கொஞ்சுகின்ற வேளையில்

திரண்ட எனது 
தோள்களில் நீ உறவாடி, 
மடித்தலத்தில் அமர்ந்து
குழந்தையாக விளையாடி,

நாள்தோறும் உனது மணி வாயினால் 
முத்தம் தந்தருள வேண்டும்..


முக அழகு மிக்க 
வள்ளிக் குறமகளின்  
 மார்பினில் அணைவதற்கு
நீதியுடன் வந்த நின்மலனே..

 பழைமையான வேதத்தினுள் 
ஒப்பற்றதாக விளங்கும்
பிரணவத்தின் பொருளை 
சிவபெருமானுக்கு
உபதேசித்த குகனே குருநாதனே..

எவ்விதத் தடையும் இல்லாது எனக்கு
உனது திருவடிகளைத் தரிசனம் செய்வித்த
திருவேரகத்தின் முருகப் பெருமானே..

இருபுறமும் மரங்கள்
நிறைந்து விளங்கும்
காவிரியாற்றின் வட திசையில் 
மாயையாகிய அரக்கருடன் போரிடுவதற்கு 
ஞானமெனும் வேலெடுத்த பெருமாளே...
**
 
முருகா முருகா
முருகா முருகா!..
***

வியாழன், ஆகஸ்ட் 24, 2023

அன்னபூரணி 1


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி 7 
 வியாழக்கிழமை


காசித் திருநகரில் புனித  கங்கை ஆற்றின் கரையில் 
ஸ்ரீ விஸ்வநாத ஸ்வாமியுடன் அருளாட்சி செய்து கொண்டிருப்பவள் ஸ்ரீ விசாலாட்சி..

ஸ்ரீ விசாலாட்சி அம்மன் நான்கு திருக்கரங்களுடன் பொலிபவள்..
வலப்புற கீழ்கரத்தில் ருத்ராட்ச மாலையும் இடப்புற கீழ்கரத்தில் கங்கா தீர்த்தம் நிரம்பிய கமண்டலமும் திகழும்.. வலப்புற மேல்கரத்தில் தாமரையில் சிவலிங்கமும் இடப்புற மேல்கரத்தில் தாமரையில் கணபதியும் விளங்க நின்ற திருக்கோலத்தினள்..

இங்கே ஆன்மாக்கள் அனைத்தையும் தன் மடியில் கிடத்தி - வையத்தில் வாழ்ந்த களைப்பின் வாட்டம் தீரும்படிக்கு தனது முந்தானை கொண்டு ஸ்ரீ விசாலாட்சி விசிறி விடுகின்றாள் என்பது ஆன்றோர் வாக்கு..

சக்தி பீடங்கள் ஐம்பத்தொன்றில் இத்தலமும் ஒன்று..

தாட்சாயணியின்
கண்களும், காது வளையங்களும் இவ்விடத்தில்
விழுந்ததாக ஐதீகம்..


தேவியின் மூலத் திருமேனிக்கு என்ன நேர்ந்ததோ தெரியாது..

பற்பல இன்னல்களுக்குப் பிறகு - காசியில் விஸ்வநாதர் கோயிலுக்கு அருகே நாட்டுக்கோட்டை நகரத்தார் விலை கொடுத்து வாங்கிய இடத்தில் விசாலாட்சி அம்மனுக்குப் புதிதாக கோயில் எழுப்பிய ஆண்டு 1893.. 

விஜயதசமி அன்று அம்பிகை வேலேந்திய வண்ணம் குதிரை வாகனத்தில் எழுந்தருளி அம்பு போடும் நிகழ்ச்சி மிகவும் சிறப்பானது..

இன்றளவும் இக்கோயில் நாட்டுக்கோட்டை நகரத்தார் நிர்வாகத்தில் உள்ளது..


காசியின் இன்னொரு சிறப்பு  ஸ்ரீ அன்னபூரணி..

காசியில் கடும் பஞ்சம் நிலவிய ஏதோ ஒரு காலத்தில் ஆருயிர்களின் பசிப்பிணி தீர்ப்பதற்கு என்று எழுந்தருளியவள் அன்னபூரணி என்பது பொதுவான நம்பிக்கை..

திருக்கரத்தில் தங்கக் 
கிண்ணத்தைத்  தாங்கி இருக்கும் அன்னை கிண்ணத்திலுள்ள
பால் சோற்றை தங்கக் கரண்டியால்  எடுத்து அனைவருக்கும் அளிப்பதாக ஐதீகம்.. 

தங்கக் குடையின் கீழ் அறம் எனும் செங்கோல் செலுத்தும் அன்னை வலக் கரத்தில் தங்க அகப்பையும் இடக் கரத்தில் தங்கக் கிண்ணமும் கொண்டிருக்கின்றாள்..
நவரத்ன கிரீடம் இலங்க மார்பிலும் கழுத்திலும் நவரத்ன ஆபரணங்கள் ஒளி வீச - ஸ்வர்ண மயமான 
வஸ்திரத்துடன் பத்மாசனத்தில் அமர்ந்த திருக்கோலம்..

தலைமைத்துவம்  பெரும்புகழ் -  இவற்றுக்கு அகந்தையுடன் ஆசைப்பட்ட பிரம்மனது தலையைக் கொய்தார் ஈசன்.. 

பிரம்ம கபாலம் அவரது உள்ளங்கையில் ஒட்டிக் கொண்டதாக நாடகம்..


இதனாலேயே  மனிதர்களிடத்தில் அகந்தை அகம்பாவத்தை யாசகமாகப் பெறும் பொருட்டு பிட்க்ஷாடனராக கோலம் கொண்டார் எம்பெருமான்..

எவர் இட்ட பிச்சையாலும் பிரம்ம கபாலம் நிறையவே இல்லை..

ஆசை அடங்காததால் நிறையாதிருந்த  பிரம்ம கபாலம்  அன்னபூரணி இட்ட பிச்சையினால் நிறைந்து கங்கை நதிக்குள் கழன்று விழுந்தது என்பது புராணம்..

ஸ்ரீ அன்னபூரணி இட்ட உணவினால் பிரம்ம கபாலத்தின் - ஆசை ஆணவம் அனைத்தும் அழிந்து போயின என்பதே நீதி..

ஈசனுக்கு மட்டுமின்றி சகல ஜீவன்களுக்கும் படியளக்கின்றாள் தேவி..

காசியில் தங்க அன்ன பூரணியின் தரிசனம், தீபாவளியை ஒட்டிய மூன்று நாட்கள் மட்டுமே கிட்டும்..

அன்னபூரணியைக் குறித்து ஏராளமான சம்பவங்கள் சொல்லப்படுகின்றன..

உலகின் அனைத்து
 உயிர்களுக்கும் பொதுவானது பசிப்பிணி..

அதனைத் தீர்த்து வைப்பவள் ஸ்ரீ அன்னபூரணி..
நம் இல்லத்தில் பூஜை மாடத்தில் விளக்கேற்றி வைப்பது போல சமையற்கட்டிலும் கிழக்கு முகமாக விளக்கேற்றி வைப்பது நல்லது.. 

அரிசி இருக்கும் பாத்திரத்தில் அரிசியுடன் மஞ்சள் கிழங்கையும் வெள்ளி  நாணயம் ஒன்றையும் சேர்த்து வைப்பது சாலச் சிறந்தது..

அன்னபூர்ணே ஸதா பூர்ணே ஸங்கர ப்ராணவல்லபே ஞான வைராக்ய ஸித்தி யர்த்தம் 
பிக்ஷாம் தேஹி ச பார்வதீ
***
 
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

புதன், ஆகஸ்ட் 23, 2023

வாஞ்சியம்

      

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி 6
புதன்கிழமை

காசியம்பதிக்கு சமமானதாகச் 
சொல்லப்படும் ஆறு தலங்களுள் 
ஆறாவது திருத்தலம்..

விண்கொண்ட வெண்காடும் ஐயாறும் இரு
கண்கொண்ட மயிலாடு துறையோடு இடைமருது
மண்கொண்ட சாய்க்காடும் வாஞ்சியமும் தமிழ்ப்
பண்கொண்ட காசிக்கு இணையென்றே பாடு..

திருவாஞ்சியம்


இறைவன்
ஸ்ரீ வாஞ்சிநாதர்


அம்பிகை
ஸ்ரீ மங்களாம்பிகை


தீர்த்தம்  குப்த கங்கை
தல விருட்சம் சந்தன மரம்.


மரண பயத்தை - யம பயத்தை  போக்குகின்ற தலம் திருவாஞ்சியம் எனப்படும் ஸ்ரீவாஞ்சியம்..


சிவபெருமானை மதிக்காமல்
தட்சனின் நடத்திய யாகத்திற்குச் சென்ற சூரியன் வீரபத்திரரால் தண்டிக்கப்பட்டு  தனது ஒளியை இழந்தான்..

இறைவன் ஏற்படுத்திக் கொடுத்த குப்த கங்கையில் நீராடி சூரியன் மீண்டும் ஒளி பெற்றதால் தலபுராணம்..

திருமகளைப் பிரிந்த மஹாவிஷ்ணு இங்கே  வழிபட்டு மீண்டும் திருமகளை அடைந்தார்..

யமதர்மன் தான் உலக உயிர்களைக் கவர்ந்து எடுப்பதால் ஏற்பட்ட மன உளைச்சலில் வருத்தமுற்று ஈசனை நோக்கித் தவம் இயற்றினார்.. 

ஈசன் காட்சி தந்து யமதர்மனின் மன உளைச்சலைத் தீர்த்தருளினார்.. இதனால் மகிழ்ந்த யமதர்மன் சிவசக்தியாகிய அம்மையப்பனை தோளில் தாங்கி வலம் வந்தார்.. 


இக்கோயிலில் யம தர்ம வாகனத்தில் எம்பெருமான் எழுந்தருள்கின்றார்..


கோயிலில் யமதர்மன் சித்ர குப்தன் இருவரும் தனி சந்நிதியில் எழுந்தருளியுள்ளனர்.. 

இத்தலத்தில் ஓர் இரவு தங்கி இருந்தால் போதும்.. கயிலாயத்தில் சிவ கணமாக விளங்கும் புண்ணியம் கிடைக்கும் என்பது தல வரலாறு..

இத்தலத்திற்கு ஞானசம்பந்தர் திருப்பதிகம் ஒன்றும்
நாவுக்கரசர் திருப்பதிகம் ஒன்றும்  சுந்தரர் திருப்பதிகம் ஒன்றும்  கிடைத்துள்ளன..

இங்கே மரணத்தீட்டு எனில் கோயில் அடைக்கும் வழக்கம் இல்லை..

திரு ஆரூரை அடுத்துள்ள
நன்னிலத்தில் இருந்து  9 கிமீ., தூரத்தில் ஸ்ரீவாஞ்சியம்..

ஆறு ஆண்டுகளுக்கு முன் இத்தலத்தை  தரிசித்திருக்கின்றேன்..


கையி லங்குமறி ஏந்துவர் காந்தளம் மெல்விரல்
தையல் பாகமுடை யார் அடை யார்புரஞ் செற்றவர்
செய்ய மேனிக்கரி யமிடற் றார்திரு வாஞ்சியத்து
ஐயர் பாதமடை வார்க்கடையா அரு நோய்களே.. 2/7/5
-: திருஞானசம்பந்தர் :-

அங்கம் ஆறும் அருமறை நான்குடன்
தங்கு வேள்வியர் தாம்பயி லுந்நகர்
செங்கண் மால்இட மார்திரு வாஞ்சியம்
தங்கு வார்நம் அமரர்க்கு அமரரே.. 5/67/4
-: திருநாவுக்கரசர் :-

வாழை யின்கனி தானும்
மதுவிம்மு வருக்கையின் சுளையும்
கூழை வானரந் தம்மிற்
கூறிது சிறிதெனக் குழறித்
தாழை வாழையந் தண்டாற்
செருச்செய்து தருக்குவாஞ் சியத்துள்
ஏழை பாகனை அல்லால்
இறையெனக் கருதுதல் இலமே.. 7/76/9
-: சுந்தரர் :-

திருவாஞ்சியத்தில்
சீர்பெற இருந்து
மருவார் குழலியொடு 
மகிழ்ந்த வண்ணமும் 
-: மாணிக்கவாசகர் :-
**

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

செவ்வாய், ஆகஸ்ட் 22, 2023

சாய்க்காடு

      

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி 5
செவ்வாய்க்கிழமை

காசியம்பதிக்கு சமமானதாகச் 
சொல்லப்படும் ஆறு தலங்களுள் 
ஐந்தாவது திருத்தலம்..

விண்கொண்ட வெண்காடும் ஐயாறும் இரு
கண்கொண்ட மயிலாடு துறையோடு இடைமருது
மண்கொண்ட சாய்க்காடும் வாஞ்சியமும் தமிழ்ப்
பண்கொண்ட காசிக்கு இணையென்றே பாடு..

திரு சாய்க்காடு


இறைவன்
ஸ்ரீ சாயாவனேஸ்வரர்


அம்பிகை
ஸ்ரீ குழலினும் இன்மொழியம்மை

தீர்த்தம்
ஐராவத தீர்த்தம் காவிரி
தல விருட்சம்
கோரைப்புல்


காஷ்யப முனிவரின் மனைவி அதிதி வழிபட்ட தலம்.. 

தனது தாய் அதிதிக்காக இத்தலத்தை பெயர்த்து தேவலோகத்திற்கு எடுத்துச் செல்ல முற்பட்டு தோல்வி அடைந்த இந்திரன் தன் பிழையுணர்ந்து மீண்டும் வழிபட்டு நலம் பெற்றான்..

துர்வாச முனிவரின் சாபம் பெற்ற ஐராவதமும் வழிபட்ட தலம்..

முற்பிறவியில் சிலந்தி ஒன்று  சிவ வழிபாடு செய்து திரு ஆனைக்காவில் தனக்கு எதிராய் இருந்த யானையைக் கொன்றது..

அதுவே மீண்டும் அரச குடும்பத்தில் கோச் செங்கட் சோழராகப் பிறந்தது.. கோச் செங்கட் சோழரால் 
யானை ஏற முடியாதபடி எழுப்பப் பெற்ற மாடக் கோயில் இது..


இங்கு கடலில் கிடைத்த பஞ்சலோகத் திருமேனி - வில்லேந்திய 
வேலவர்  சிறப்பு.. 

இயற்பகை நாயனாரும் அவரது மனைவியும்
இயற்பகை நாயனாரின் அவதாரத் தலம் இது..

இத்தலத்திற்கு ஞானசம்பந்தர் திருப்பதிகங்கள் இரண்டும்
நாவுக்கரசர் திருப்பதிகங்கள் இரண்டும் கிடைத்துள்ளன..

சீர்காழியில் இருந்து 12 கிமீ., தொலைவில் உள்ளது. சீர்காழி மயிலாடுதுறையில் இருந்து பேருந்து வசதி உள்ளது.. 

சாய்க்காட்டில் இருந்து இரண்டு கிமீ தொலைவில் தான் பூம்புகார்..

இத்தலத்தைத் தரிசிக்கின்ற வாய்ப்பு இன்னும் கிடைக்கவில்லை..


நீநாளு நன்னெஞ்சே நினைகண்டாய் யாரறிவார்
சாநாளும் வாழ்நாளுஞ் சாய்க்காட்டெம் பெருமாற்கே
பூநாளுந் தலைசுமப்பப் புகழ்நாமஞ் செவி கேட்ப
நாநாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே.. 2/41/3
-: திருஞானசம்பந்தர் :-

இந்திரன் பிரமன் அங்கி எண்வகை வசுக்க ளோடு
மந்திர மறைய தோதி வானவர் வணங்கி வாழ்த்தத்
தந்திரம்  அறியாத் தக்கன் வேள்வியைத் தகர்த்த ஞான்று
சந்திரற் கருள்செய் தாருஞ் சாய்க்காடு மேவினாரே..
4/65/5
-: திருநாவுக்கரசர் :-
**

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***