நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

அன்னபூரணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அன்னபூரணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், ஆகஸ்ட் 29, 2023

அன்னபூரணி 2


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி 12
செவ்வாய்க்கிழமை


சிவ மரபில் காசியும்  கங்கையும் கயிலாயமும் ஈசனின் திருவிழிகளுக்கு ஒப்பானவை.

காசியின் தரிசனத்தால் தான் - தமிழகத்தில் 
சிவகாசி, தென்காசி சிவகங்கை
என்றெல்லாம் ஊர்கள் அமைந்தன..

தஞ்சை மேல ராஜ வீதியில் காசி விஸ்வநாதர் - என இரண்டு கோயில்களும், கயிலாய நாதர் கோயில் என ஒன்றும் மணிகர்ணிகேஸ்வரர் கோயில் - என,  ஒன்றும்  அமைந்துள்ளன..

பூக்காரத்தெரு ஸ்ரீ சுப்ரமண்யர் கோயிலில் உப சந்நிதிகளாக ஸ்ரீ காசி விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன் சந்நிதிகள் அமைக்கப்பட்டுள்ளன..

அடுத்துள்ள, 
கரந்தையில் காசி விஸ்வநாதர் பெயரிலும் 
புன்னை நல்லூரில் கயிலாய நாதர் பெயரிலும் 
அன்னப்பன் பேட்டையில் - ஸ்ரீ அன்னபூரணி உடனுறை கயிலாய நாதர் பெயரிலும் கோயில்கள் உள்ளன..


தஞ்சையில் மிகப் பழைமையான கொங்கணேஸ்வரர் கோயிலில் ஸ்ரீ அன்ன பூரணிக்கு தனி சந்நிதி உண்டு..

மேலும், 
தஞ்சை தெற்கு ராஜ வீதியிலும் கணபதி நகரிலும் ஸ்ரீ அன்னபூரணி அம்மனுக்கு கோயில்கள் உள்ளன..

பிரஹதீஸ்வரர் கோயில் தீர்த்தத் குளத்தின் பெயர் சிவகங்கை..

திரு ஐயாறு ஸ்ரீ பஞ்ச நதீஸ்வரர் கோயில் உள் திருச்சுற்றில் ஸ்ரீ காசி விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன் சந்நிதிகள் அமைந்துள்ளன..

காசி என்றாலும் கயிலாயம் என்றாலும்
கங்கை என்றாலும்
அன்னபூரணி என்றாலும்
புண்ணியம் என்றாகின்றது..

அவ்வண்ணமே எங்கும்
நிறையட்டும்.
*


இன்று
திரு ஓணத் திருநாள்

அனைவருக்கும்
அன்பின் நல்வாழ்த்துகள்
 
ஓம் ஹரி ஓம்
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

வியாழன், ஆகஸ்ட் 24, 2023

அன்னபூரணி 1


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி 7 
 வியாழக்கிழமை


காசித் திருநகரில் புனித  கங்கை ஆற்றின் கரையில் 
ஸ்ரீ விஸ்வநாத ஸ்வாமியுடன் அருளாட்சி செய்து கொண்டிருப்பவள் ஸ்ரீ விசாலாட்சி..

ஸ்ரீ விசாலாட்சி அம்மன் நான்கு திருக்கரங்களுடன் பொலிபவள்..
வலப்புற கீழ்கரத்தில் ருத்ராட்ச மாலையும் இடப்புற கீழ்கரத்தில் கங்கா தீர்த்தம் நிரம்பிய கமண்டலமும் திகழும்.. வலப்புற மேல்கரத்தில் தாமரையில் சிவலிங்கமும் இடப்புற மேல்கரத்தில் தாமரையில் கணபதியும் விளங்க நின்ற திருக்கோலத்தினள்..

இங்கே ஆன்மாக்கள் அனைத்தையும் தன் மடியில் கிடத்தி - வையத்தில் வாழ்ந்த களைப்பின் வாட்டம் தீரும்படிக்கு தனது முந்தானை கொண்டு ஸ்ரீ விசாலாட்சி விசிறி விடுகின்றாள் என்பது ஆன்றோர் வாக்கு..

சக்தி பீடங்கள் ஐம்பத்தொன்றில் இத்தலமும் ஒன்று..

தாட்சாயணியின்
கண்களும், காது வளையங்களும் இவ்விடத்தில்
விழுந்ததாக ஐதீகம்..


தேவியின் மூலத் திருமேனிக்கு என்ன நேர்ந்ததோ தெரியாது..

பற்பல இன்னல்களுக்குப் பிறகு - காசியில் விஸ்வநாதர் கோயிலுக்கு அருகே நாட்டுக்கோட்டை நகரத்தார் விலை கொடுத்து வாங்கிய இடத்தில் விசாலாட்சி அம்மனுக்குப் புதிதாக கோயில் எழுப்பிய ஆண்டு 1893.. 

விஜயதசமி அன்று அம்பிகை வேலேந்திய வண்ணம் குதிரை வாகனத்தில் எழுந்தருளி அம்பு போடும் நிகழ்ச்சி மிகவும் சிறப்பானது..

இன்றளவும் இக்கோயில் நாட்டுக்கோட்டை நகரத்தார் நிர்வாகத்தில் உள்ளது..


காசியின் இன்னொரு சிறப்பு  ஸ்ரீ அன்னபூரணி..

காசியில் கடும் பஞ்சம் நிலவிய ஏதோ ஒரு காலத்தில் ஆருயிர்களின் பசிப்பிணி தீர்ப்பதற்கு என்று எழுந்தருளியவள் அன்னபூரணி என்பது பொதுவான நம்பிக்கை..

திருக்கரத்தில் தங்கக் 
கிண்ணத்தைத்  தாங்கி இருக்கும் அன்னை கிண்ணத்திலுள்ள
பால் சோற்றை தங்கக் கரண்டியால்  எடுத்து அனைவருக்கும் அளிப்பதாக ஐதீகம்.. 

தங்கக் குடையின் கீழ் அறம் எனும் செங்கோல் செலுத்தும் அன்னை வலக் கரத்தில் தங்க அகப்பையும் இடக் கரத்தில் தங்கக் கிண்ணமும் கொண்டிருக்கின்றாள்..
நவரத்ன கிரீடம் இலங்க மார்பிலும் கழுத்திலும் நவரத்ன ஆபரணங்கள் ஒளி வீச - ஸ்வர்ண மயமான 
வஸ்திரத்துடன் பத்மாசனத்தில் அமர்ந்த திருக்கோலம்..

தலைமைத்துவம்  பெரும்புகழ் -  இவற்றுக்கு அகந்தையுடன் ஆசைப்பட்ட பிரம்மனது தலையைக் கொய்தார் ஈசன்.. 

பிரம்ம கபாலம் அவரது உள்ளங்கையில் ஒட்டிக் கொண்டதாக நாடகம்..


இதனாலேயே  மனிதர்களிடத்தில் அகந்தை அகம்பாவத்தை யாசகமாகப் பெறும் பொருட்டு பிட்க்ஷாடனராக கோலம் கொண்டார் எம்பெருமான்..

எவர் இட்ட பிச்சையாலும் பிரம்ம கபாலம் நிறையவே இல்லை..

ஆசை அடங்காததால் நிறையாதிருந்த  பிரம்ம கபாலம்  அன்னபூரணி இட்ட பிச்சையினால் நிறைந்து கங்கை நதிக்குள் கழன்று விழுந்தது என்பது புராணம்..

ஸ்ரீ அன்னபூரணி இட்ட உணவினால் பிரம்ம கபாலத்தின் - ஆசை ஆணவம் அனைத்தும் அழிந்து போயின என்பதே நீதி..

ஈசனுக்கு மட்டுமின்றி சகல ஜீவன்களுக்கும் படியளக்கின்றாள் தேவி..

காசியில் தங்க அன்ன பூரணியின் தரிசனம், தீபாவளியை ஒட்டிய மூன்று நாட்கள் மட்டுமே கிட்டும்..

அன்னபூரணியைக் குறித்து ஏராளமான சம்பவங்கள் சொல்லப்படுகின்றன..

உலகின் அனைத்து
 உயிர்களுக்கும் பொதுவானது பசிப்பிணி..

அதனைத் தீர்த்து வைப்பவள் ஸ்ரீ அன்னபூரணி..
நம் இல்லத்தில் பூஜை மாடத்தில் விளக்கேற்றி வைப்பது போல சமையற்கட்டிலும் கிழக்கு முகமாக விளக்கேற்றி வைப்பது நல்லது.. 

அரிசி இருக்கும் பாத்திரத்தில் அரிசியுடன் மஞ்சள் கிழங்கையும் வெள்ளி  நாணயம் ஒன்றையும் சேர்த்து வைப்பது சாலச் சிறந்தது..

அன்னபூர்ணே ஸதா பூர்ணே ஸங்கர ப்ராணவல்லபே ஞான வைராக்ய ஸித்தி யர்த்தம் 
பிக்ஷாம் தேஹி ச பார்வதீ
***
 
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***