நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், நவம்பர் 03, 2015

அன்பின் விடை


வழக்கம் போலவே சற்று தாமதம்..

ஆனால்,

அமீரகத்தின் தலைநகராகிய அபுதாபி விமான நிலையத்தில் -
சொல்லிய வண்ணம் அன்பின் கில்லர் ஜி அவர்கள் காத்திருந்தார்..


அவருடன் - அவரது அன்பு மகன் -
திரு. தமிழ்வாணன் அவர்களும் மனசு - திரு. குமார் அவர்களும்..

அவர்களுடன் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தேன்..

மனம் இல்லை.. ஆயினும்,

Chick In - செல்வதற்கான நேரம் அது..

எனது மருமகன், மகள், பேத்தியிடமும்

திரு. கில்லர் ஜி அவர்களிடமும் அவரது மகனிடமும் திரு. குமார் அவர்களிடமும் விடை பெற்றுக் கொண்டேன்..

கையில் இருந்த பெட்டியை விட மனம் கனத்தது..

முகப்பிலேயே - நம் நாட்டின் பயணிகளுக்காக மூன்று மொழிகளில் அறிவிப்பு இருந்தது..


அந்த மொழிகளுள் ஒன்றாகத் தமிழ் இலங்கியது..

அதைக் கண்டு மகிழ்ந்தாலும் - தமிழ் முதலிடத்தில் குறிக்கப்படாதது கண்டு சற்றே வருந்தியது - மனம்..


முதற்கட்டமாக - பாதுகாப்பு சோதனைகள் முடிந்த பின், பெட்டிகள் எடையிடப்பட்டு - உள்ளே நகர்ந்தன..

வழக்கம் போலவே - வெளியே கண்டு மகிழும் வண்ணம் ஜன்னல் ஒரத்தில் இருக்கை கிடைத்தது..

அடுத்ததாகக் குடியேற்றம் கண்காணிக்கப்பட்டது..
சில விநாடிகளில், புன்னகையுடன் சென்று வருக!.. - என்றது அமீரகம்..

விசாலமான விமான நிலையம்..

மிகவும் சுத்தமாக விளங்கியதுடன் -  மெல்லிய நறுமணம் எங்கும் கமந்து கொண்டிருந்தது..

சீருடைப் பணியாளர்கள் - சிரித்த முகத்துடன் வழி காட்டுகின்றனர்..

செல்லும் வழி அறிந்திருந்தாலும் - அங்குமிங்குமாக சுற்றித் திரிந்தேன்..



சிறுபொழுதில் - சென்னை செல்லும் பயணிகள் அழைக்கப்பட்டனர்..

மீண்டும் ஒரு பாதுகாப்பு சோதனை..

கீழ்தளத்தில் நின்றிருந்த பேருந்து பயணிகளை ஏற்றிச் சென்று விமானத்தின் அருகில் நிறுத்தியது..




இருக்கை கண்டு அமர்ந்தாயிற்று.. ஜன்னல் வழி நோக்கிக் கொண்டிருந்தேன்..

ஓடுதளத்தில் விரைந்தோடிப் புறப்படுவதும் இறங்குவதுமாக - விமானங்கள்..

விமானத்தினுள் - அரபு மற்றும் ஆங்கிலத்தில் அறிவிப்புகள்..

சற்றைக்கெல்லாம் - மெல்ல நகர்த்தப்பட்ட விமானம்,
ஓடுதளத்தில் இயங்கி, இரைச்சலுடன் விரைந்தோடி - மேலெழும்பியது..

அப்போது நேரம் - 2.20.. மதியப் பொழுது..

சற்று நேரத்தில் - உணவு வழங்கப்பட்டது..

நான் சைவ உணவை எடுத்துக் கொண்டேன்..

ஓமன் நாட்டின் பாலை நில - மணல் மலைககள்
பாரசீக வளைகுடா
மாலை மயங்கிய வேளை
மதியம் மயங்கி மாலையாகிய வேளையில் வானில் நிகழ்ந்த வர்ணக் கோலங்களை விவரிக்க வார்த்தைகள் இல்லை..

முன்னிரவுப் பொழுதில் -
அரபிக் கடலைக் கடந்த விமானம் - தென் கிழக்காக பாரதத்தின் மீது பறந்தது..

சென்னையை நெருங்கும் முன்பாக மெல்லிய மழைத் தூறல்..

மீண்டும் - அறிவிப்பு..

சடசட - என விமானம் கீழிறங்கியது..

அதுவரையிலும் ஒளிப் புள்ளிகளாக மின்னிய தெருக்கள் - தெளிவாகின..

இதோ.. இதோ..


தாழ்வாகப் பறந்த விமானம், சென்னை விமான நிலையத்தின் தென்புறமாக - இறங்கியது..

அந்த அலுமினியப் பறவை -
தாயகத்தின் தரையைத் தொட்டு ஓடிய போது - மனம் சிலிர்த்தது..


அப்போது, நேரம் இரவு  - 7.20..

சற்றைக்கெல்லாம் - வருகைப் பதிவு முடிந்தது..

சுங்கச் சோதனை ஏதும் இல்லை..

வெளியில் வந்தபோது -
அதோ.. மனைவி மற்றும் மகனின் அன்பு முகங்கள்..

இரவு உணவை முடித்த பின் -
உழவன் விரைவு ரயிலில் - முன்னதாகவே பதிவு செய்த இருக்கைகளில் -
தஞ்சை நோக்கிப் பயணித்தது - மனம்..



அன்பின் உறவுகளையும் நட்புகளையும் நாம் தொடர,

அவ்வண்ணமே -

அன்பின் உறவுகளும் நட்புகளும் நம்மைத் தொடர -

அதற்குமேல் - வேறென்ன வேண்டும்!..

வாழ்க நலம்!..
* * * 

27 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. அன்புடையீர்..

      வெகுநாட்களுக்குப் பிறகு தங்களுடைய வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. தாய் திருநாட்டிற்கு வருக!
    ஒரு சில வாரங்களுக்கு முன்பாக நானும் இந்தியா திரும்பும் போது அபுதாபி விமான நிலையத்தில் பெங்களூர் விமானத்திற்காகக் காத்திருந்தேன். ஒவ்வொரு முறையும் அபுதாபி விமான நிலையம் என்னை மலைக்க வைக்கிறது. நானும் என்னவரும், விமான நிலையத்தைப் பிரமிப்புடன் சுற்றி வந்தோம். ஆனால் அதற்குப் பெயர் அமீரகம் என்று இப்பொழுது தான் அறிந்து கொண்டேன். விமானப் பணிப்பெண் கண்டிப்பாக விமானம் தரையிறங்கும் போது அமீரகம் என்று சொல்லியிருப்பார் என்று நினைக்கிறேன். ஆனாலும் நான் கேட்கத் தவறியிருக்கிறேன். அறிய வைத்தமைக்கு நன்றி.
    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      ஐக்கிய அரபு அமீரகம் என்பது UAE என்பதற்கு தமிழ் வடிவம்..
      அபுதாபி விமான நிலையத்தின் அழகும் சுத்தமும் பிரமிக்க வைப்பது உண்மை..

      வெகுநாட்களுக்குப் பிறகு தங்களுடைய வருகையும் விரிவான கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. உங்களைப் பார்க்கும்முன் உங்களது பதிவினைக் கண்டதில் மகிழ்ச்சி. விமானத்தில் ஏறியது முதல் இறங்கியதுவரை நாங்களும் உங்களுக்கு அடுத்த இருக்கையில் இருந்ததுபோல மன உணர்வு. வாருங்கள், தஞ்சையில் சந்திப்போம். காத்திருக்கிறேன். நேற்று (2.11.2015) சோமேஸ்வரர் கோயில் குடமுழுக்கு காண சென்றபோது உங்களை நினைத்துக்கொண்டிருந்தேன். தஞ்சையம்பதி இந்நேரம் இக்கோயிலைப் பற்றிப் பதிவிட்டிருப்பாரே என்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      கும்பகோணத்திலுள்ள திருக்கோயில்களை இனிமேல் தான் தரிசிக்க வேண்டும்..
      என்னையும் தாங்கள் நினைவில் கொண்டதற்கு மகிழ்ச்சி..
      தங்களுடைய வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  4. வணக்கம்
    ஐயா
    தாயகம் வருவது ஒரு மகிழ்ச்சிதான்... பிரியாத நெஞ்சங்கனை பிரிவது மனவேதனைதான்...
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ரூபன்..

      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. பதிவைப் படித்ததும் மிக்க மகிழ்ச்சி. இனி கோயில்களை உங்கள் வலைத்தளம் மூலம் நாங்கள் வலம் வரலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் அண்ணா..

      தாங்கள் கொண்டுள்ள நம்பிக்கை கண்டு மகிழ்ச்சி..
      அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி..

      நீக்கு
  6. எத்தனை நாட்கள் இங்கிருப்பீர்கள்.? பெங்களூர் வரும் வாய்ப்பு இருக்கிறதா. உங்களை சந்திக்க முடிந்தால் மகிழ்வேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..

      டிசம்பர் முதல் வாரம் வரை இங்கிருப்பேன்..
      தங்களைச் சந்திக்க நானும் ஆவலாக இருக்கின்றேன்..
      விரைவில் தொடர்பு கொள்கின்றேன்..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. அன்பின் ஜி அதிகாலையிலேயே செல்லில் படித்து விட்டேன் நல்ல தொகுப்பு.
    நலமுடன் இல்லம் அடைந்தமை கண்டு மனம் மகிழ்ச்சி

    விமான நிலையத்தில் தற்போது தமிழ் மொழியும் இணைத்திருப்பது கண்டு நான் பலமுறை வியந்து பெருமைப்பட்டு இருக்கின்றேன் இதில் தங்களைப்போல முதலில் வரவில்லை என்று நான் நினைக்கவில்லை காரணம் இந்தியா என்றால் முதலில் இந்தி பிறகே மற்ற மொழிகள் காரணம் அதுதானே ஆட்சிமொழி ஆனால் நம் இனிய தமிழ் பழமையான ஆறு மொழிகளுள் ஒன்று என்பது உலகறிந்த விடயமே... ஆனால் தங்கமான தமிழை கீழே எழுதி விட்டானே என்ற ஆதங்கம் எனக்கும் உண்டு.

    இதற்கெல்லாம் காரணம் தாங்கள் சொல்லும் இந்தியாவில் மட்டுமல்ல, சென்னையில் மட்டுமல்ல, அரபு நாடுகளிலும்கூட சிறிய அளவிலான அந்த தென்னந்தோப்புக்காரன்தான் இது எனக்கும், தங்களுக்கும், நண்பர் சே. குமார் அவர்களுக்கும், நம்மைப் போன்று அரபு நாட்டில் வாழும் தமிழை நேசிக்கும் தமிழர்களுக்கு தெரியும் ஆனால் இந்தியாவில் பலருக்கும் தெரியாது அதனால்தானே திரைப்படத்துறையில் கோடிக்கணக்கில் தமிழர்களிடம் சம்பாரிக்கின்றார்கள் தென்னந்தோப்புக்காரர்கள்....

    ஹூம்...... வேண்டாம் ஜி எழுத நினைத்தால் பதிவாகி விடும் வேண்டாம் விடுமுறையை குடும்பத்துடன் சந்தோஷமாக கழிக்க எமது வாழ்த்துகள்.
    குடும்பத்தினரை நான் நலம் கேட்டதாக செல்லவும் நலமே விளைவு.
    கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..

      தாங்கள் கூறியுள்ள கருத்தைப் பதிவிடத் தான் எண்ணினேன்.. நல்ல நேரத்தில் கசப்பு எதற்கு என்று விட்டுவிட்டேன்..

      மேலும் - ஓமன் ஏர்வேஸ்ஸில் - விமானத்தின் உள்ளேயே தகவல்களை தமிழில் சொல்கின்றார்கள்.. சென்ற முறை காதாரக் கேட்டேன்..

      தங்கள் வருகையும் விரிவான கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்க வாழ்த்துக்கள் சார்.

    பதிலளிநீக்கு
  9. அருமையான தொகுப்பு. படங்கள் மிக மிக அருமை அதுவும் விமாத்திலிருந்து எடுத்த படங்கள் அழகு...

    குடும்பத்துடன் மகிழ்வுடன் தங்கள் விடுமுறையைக் கொண்டாடுங்கள் ஐயா. வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  10. எங்கே உங்களைக் காணவில்லையே என்று வருத்தமுற்றிருந்தேன் ஐயா!
    நீங்கள் அமீரகத்திலிருந்து தஞ்சை போய்விட்டீர்களா?..
    மகிழ்ச்சி ஐயா!
    குடும்பத்தினருடன் மகிழ்வாக உங்கள் நாட்கள் நகரட்டும்!
    வாழ்த்துக்கள் ஐயா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      நலமுடன் தஞ்சை வந்து சேர்ந்தேன்..
      தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  11. தஞ்சை மண்ணில் தாங்கள்
    வருக வருக என வரவேற்கிறேன் ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வரவேற்பு கண்டு மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  12. ஆஹா அப்படியா, தங்களைச் சந்திக்கும் அந்நாளுக்காய்,,,,,,
    மகிழ்ச்சி, மிக்க மகிழ்ச்சி,,,,
    அன்புடன் வரவேற்கிறோம்,,,
    தஞ்சையின் மைந்தரை வருக வருகவே,,,,,,,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களன்பு வரவேற்பு கண்டு மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  13. விடுமுறையை சந்தோஷமாக களியுங்கள் ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்..
      தங்கள் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  14. விடுமுறையை உற்சாகமாக கொண்டாடுங்கள். பயணம் பற்றி சொல்லியது சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..