நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், நவம்பர் 23, 2015

ஸ்ரீகோவிந்த தரிசனம்

தமிழகத்தின் வட மாவட்டங்களில்,
தன் - கைவரிசையைக் காட்டிக் கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தின் கார்மேகக் கூட்டங்கள் -

தென் மாவட்டங்களை நோக்கி நகர்ந்த வேளையில் -

வட வேங்கடத்தை நோக்கி இருந்தது - எங்கள் சிந்தை..


கடந்த வியாழன்று - தஞ்சை சந்திப்பிலிருந்து, இராமேஸ்வரம் - திருப்பதி விரைவு வண்டியில் திருமலையை நோக்கிப் புறப்பட்டபோது இரவு மணி 11.15..

சற்று நேரத்தில் இருக்கை படுக்கையானது..

பெருமாளே!.. - என்று, கண் அயர்ந்த சிறு பொழுதுக்கெல்லாம் - மேல் முழுதும் ஈரம்..

திடுக்கிட்டு விழித்தால் - சிதம்பரம் ரயில் நிலையம் - மழைச்சாரலுடன்!..

அதன் பிறகு தூக்கம் வரவில்லை..

கடலூர், விழுப்புரம் - என, வழி நெடுக மழை..

எதையெல்லாமோ நினைத்துக் கொண்டிருந்த மனம் எப்போது உறங்கியதோ தெரியவில்லை..

விழித்துக் கொண்டபோது - போளூர் கடந்து சென்றது..

அடுத்து காட்பாடி.. அங்கெல்லாம் அச்சமயத்தில் மழையில்லை..

ஆனால், சூல் கொண்டிருந்த மேகங்கள் - வானில் சுற்றித் திரிந்து கொண்டிருந்தன..

வெள்ளிக்கிழமை முற்பகல் 10.20 மணியளவில் - திருப்பதி சென்றடைந்தோம்..


முன்னதாக பதிவு செய்திருந்ததன்படி, அருகிலேயே - நல்லதொரு விடுதி..

குளித்து விட்டு பகல் உணவு..

மாலையில் திருச்சானூர் தரிசனம்..



உற்சவ மண்டபத்தில் ஸ்ரீ பத்மாவதித் தாயார் - ஊஞ்சலில் திருக்கோலம் கொண்டிருந்தாள்..

நெரிசல் ஏதும் இல்லாமல் தரிசனம் செய்ததில் மிகவும் ஆனந்தமானது மனம்..

ஸ்ரீ மஹாலக்ஷ்மியை வலம் செய்து வணங்கிய வேளையில் - திருச்சுற்றில் பிரசாதம் வழங்கிக் கொண்டிருந்தார்கள்..

குங்குமம் மலர்கள் -  அத்துடன், நெய் மணக்கும் சர்க்கரைப் பொங்கல்..

சற்றைக்கெல்லாம், ஊஞ்சலில் திருக்கோலம் கொண்டிருந்த ஸ்ரீபத்மாவதி - யானை முன் செல்ல, ஆடல் பாடல்களுடன் - திருவீதி எழுந்து திருக்காட்சி அருளினாள்..


மறுநாள் சனிக்கிழமை..
காலையிலேயே, தயாராகி - திருமலையை நோக்கி - காரில் புறப்பட்டோம்..

திருப்பதி நகரின் சாலைகள் மழையினால் குண்டும் குழியுமாக இருந்தன..
ஆங்காங்கே தண்ணீர் தேங்கிக் கிடந்தது..

மலை நகரமாகிய திருப்பதியும் தண்ணீர் தேங்கிக் கிடக்கும்படியாக ஆகியிருந்தது..

இதோ - அடிப்படி என்னும் அலிபிரி..
இதுதான் திருமலையின் அடிவாரம்..
இங்கிருந்தே மலைப்பாதை தொடங்குகின்றது..




அலிபிரி ஸ்ரீலக்ஷ்மி நாராயணர் திருக்கோயிலில் தரிசனம் செய்து விட்டு
அடிவாரத்தின் திருப்படிகளைத் தொட்டு கண்களில் ஒற்றிக் கொண்டோம்..

போக்குவரத்து பிரச்னையால் - அலிபிரியில் இருக்கும் கம்பீரமான கருடனைப் படம் பிடிக்க இயலவில்லை..



பாதுகாப்புச் சோதனைகளுக்குப் பின் எங்களது பயணம் தொடர்ந்தது..

சீரான மலைப்பாதை.. எங்கெங்கும் சுத்தமாக இருந்தது.. வழி நெடுக - உதிர்ந்து விழும் சருகுகளைக் கூட துப்புரவு செய்து கொண்டேயிருந்தனர்..

முதல் நாள் மழையின் தாக்கம் தெரிந்தது.. விழுந்திருந்த மரங்களும் சரிந்திருந்த பாறைகளும் அப்புறப்படுத்தப்பட்டிருந்தன..

சிலுசிலு என சாரல் வீசிக் கொண்டிருக்க -
மேலெழுந்த விழிகளில் கம்பீரமான திருமலை..

திருமலையின் சிகரங்களுடன் - நீர்கொண்ட மேகங்கள் - ஊடாடிக் கொண்டிருந்தன..


சீராகத் தொடர்ந்த பயணம் - திருமலைக்கு ஐந்து கி.மீ., முன்னதாக சற்றே தடைப்பட்டது..

அடிப்படியிலிருந்து 9. 30 அளவில் புறப்பட்ட நாங்கள் - 10.15 மணியளவில் திருமலையை அடைந்து விட்டோம்..

மகனுக்கு முடியிறக்கி நேர்த்திக் கடன் செலுத்தப்பட்டது..

எங்களுக்குக் குறிக்கப்பட்டிருந்த நேரம் - மாலை மூன்று மணி..

கட்டணமில்லாப் பேருந்து
ஆனாலும் - பக்தர் கூட்டம் அதிக அளவில் இல்லாததால் முன்னதாகவே அனுமதிக்கப்பட்டோம்..

ஆங்காங்கே தொடரும் பாதுகாப்பு சோதனைகள்..

கூண்டுகளுக்குள் வழி நடை - ஒன்றரை மணி நேரம் தான்..

வரிசையில் நடந்து கொண்டேயிருக்க -

அதோ - திருக்கோயில்!..

அதுவரையில் சொல்லக் கேட்டிருந்த ஸ்ரீ விமானம்.. ஆனந்த நிலையம்!..

ஆம்.. இப்போதுதான் முதன்முறையாக திரும்லையில் தரிசனம் செய்கின்றேன்..

நெஞ்சம் நெகிழ்ந்துருகியது..

மாடவீதியைக் கடக்கும் வேளையில் சற்று மழை..

தொடர்ந்து நடந்து - ராஜகோபுரத் திருவாசலில் காலடி வைத்தபோது -
அதுவரை இல்லாதபடிக்கு ஆனந்த அதிர்வு!..

திருமுற்றம்.. தங்கக் கொடிமரம்..

கண்கள் கலங்கின.. மெய்மறந்தது..
பயின்றிருந்த திருப்பாசுரங்கள் நாவில் எழவில்லை.. ஆனாலும்,

பெருமாளே.. பெருமாளே!.. - என்று மனம் அரற்றிக் கொண்டிருந்தது..

தென்புறமாக நடந்து - பங்காரு வாகிலி எனும் தங்க வாசலைக் கடந்து - பெருமானின் திருமண்டபத்திற்குள் நுழைந்து, கிழக்காக நடக்க - பெரிய திருவடி - ஸ்ரீ கருட தரிசனம்..

சட்டென வடக்காகத் திரும்பியபோது -

இதோ!.. நானிருக்கின்றேன்!..

- என்று, ஆயிரங்கோடி சூரியப் பிரகாசமாக - ஸ்ரீ வேங்கடேச மூர்த்தி..

அடியார்களோடு எளியேனும் -

பகவானே.. பெருமாளே.. கோவிந்தா.. கோவிந்தா!..

- என, கூவிக் குதுகலித்து வணங்கினேன்..

எம்பிரான் அழகினை - விழிகளால் பருகிய வண்ணம் கூப்பிய கரங்களுடன் நடந்து வெளியே வந்தபோது - மேக மூட்டமின்றி வானம்..

மனமும் அப்படியே இருந்தது..

திருச்சுற்றில் - சடாரி.. தீர்த்தம் வழங்கப்பெற்றது..

மடைப்பள்ளியில் வகுளாதேவி தரிசனம்.. மேலும் விஷ்வக்சேனர் மற்றும் யோக நரசிம்மர் சந்நிதிகள்...

வணங்கி வலம் வருகையில் - லட்டு பிரசாதம் வழங்கப்பெற்றது..

திருக்கோயில் ஊழியர்களும் தன்னார்வத் தொண்டர்களும் மக்கள் பணியில்!..

மனம் நிறைவாக இருந்தது..

திருக்கோயிலுக்கு வெளியே அன்னப் பிரசாத மண்டபத்தில் சுவையான உணவு.. வயிறும் நிறைவாக ஆனது..

சூரிய புஷ்கரணியை வலமாக வந்தோம்..

அதுவரைக்கும் பாதுகாப்பு அறையில் இருந்த - கேலக்ஸியை திரும்பப் பெற்றுக் கொண்டு திருக்கோயிலின் வாசலில் சில படங்களை எடுத்தேன்..





மேலே - ஸ்ரீ வாரி பாத தரிசனம்  செய்ய வேண்டும்.. வானமும் இருட்டிக் கொண்டிருந்தது.. கடுமையான குளிர் காற்றும் வீசியது..

வேறொரு ஜீப்பினில் - திருமலையின் மேலே சென்றோம்..

மலை முழுதும் மேக மூட்டம்..


ஸ்ரீபாத தரிசனம்
சிலா தோரணம்
சிற்றருவி
அருவிக்கரையில் சிவ சந்நிதி
ஸ்ரீ சுதர்சனர்
ஸ்ரீ பாத தரிசனம் செய்தபின் - சிலா தோரணம் - கல் பூங்கா,
அங்கேயிருக்கும் சிற்றருவி அதன் கரையிலுள்ள சிவ சந்நிதி..

நிறைவாக தரிசனம் செய்தபின் மனம் ஏங்கியது..

மறுமுறை எப்போது?.. - என்று..

அனைவ்ருக்காகவும் ஸ்ரீ பிரசாதம்
திருமலையின் அருமை பெருமைகளை உணர்ந்து கொள்ள ஒருநாள் போதாது!..

அதனால் தான், குலசேகர ஆழ்வார் -

குருகாக, மீனாக, செண்பகமாக, காட்டாறாகப் பிறக்க வேண்டும் என்றார்..

அப்படியில்லை என்றாலும்,

கோவிந்தனின் திருக்கோயில் வாசலில் கற்படியாகிக் கிடக்கவேண்டும் என்றார்..

செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே 
நெடியானே வேங்கடவ நின்கோயிலின் வாசலில்
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்துஉன் பவளவாய் காண்பேனே!.. (685)

கோவிந்த.. கோவிந்த!..
ஓம் ஹரி ஓம்
* * *

20 கருத்துகள்:

  1. அன்பின் ஜி வணக்கம்
    திருப்பதி தேவஸ்தானத்தை 32 ஆண்டுகளுக்குப் பிறகு தங்களால் இன்று மீண்டும் கண்டேன் வீட்டிலிருந்து மலைக்கு அழைத்துச் சென்று மீண்டும் வீட்டில் கொண்டு வந்து விட்டீர்கள் வாழ்க நலம்
    எல்லாம் சரி ஆனால் லட்டு பார்க்க மட்டுமே முடிந்தது பகிர்வுக்கு நன்றி ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக.. வருக..

      இங்கே - இணையம் மிகவும் மோசமாக இயங்குகின்றது..
      மறுபடியும் தளத்திற்கு வந்து பாருங்கள்..

      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. வணக்கம் அருளாளர் அய்யா!
    ஆனந்தம் மனதில் ஆறாய் பெருக்கெடுத்து
    மகிழ்வை மட்டுமே பருக பருக அள்ளித் தந்தத்தைப் போன்ற
    ஒரு உணர்வு! தங்களது தங்க கோபுரத்து ஏழுமலைவாசன் திருக்கோயில் கொண்டிருக்கும் திருமலை /திருப்பதி வலைப் பதிவு.
    இலவச தரிசனமாய் இன்புறும் வகையில் தந்த தங்களது பகவான் கைங்கர்யத்துக்கு அடியேனின்
    அன்பு நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் யாதவன் நம்பி..

      யாவருக்குமாகட்டும் - இனிய தரிசனம்..
      தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி.. இனிய கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  3. தாயகம் திரும்பிய பிறகு தங்களின் ஆன்மீகப் பயணம்
    முழுவீச்சில் தொடர்ந்து கொண்டிருக்கிறது
    மகிழ்ச்சி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்
      தங்கள் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. திருமலை திருப்பதி சென்றதோடு எங்களையும் அழைத்துச் சென்றமைக்கு நன்றி. உங்களது பதிவுகள் எங்களை நிகழ்விடத்திற்கே அழைத்துச் சென்றன. ஓர் ஆழ்வார் திருமலையில் ஒரு மலையாக, மேகமாக இருக்க விழைவதாகக் கூட நான் படித்ததாக நினைவு. திருமண்ணுடன் உங்களைக் கண்டதும் மிகவும் மகிழ்ச்சி. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      ஆழ்வார் பாடல்களின் பொருளை - அங்கேதான் உணர்ந்தேன்
      தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி.. இனிய கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  5. உங்களுடன் பயணித்த உணர்வு ஐயா.... நன்றி....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்
      தங்கள் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. வணக்கம்,
    ஒரே பயணமாக இருக்கிறீர்கள் போலும்,
    நல்லா தரிசணம் ஆயிற்றா? நானும் ஒரு முறைச் சென்றுள்ளேன். தங்கள் எடுத்துள்ள புகைப்படங்கள் அனைத்தும் அழகு, அருமை வாழ்த்துக்கள்.
    தாங்கள் ஏங்க வேண்டாம் மீண்டும் தாங்கள் அனேக முறை அங்கு செல்வீர்கள்.

    குலசேகராழ்வர் பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்,,,,,, பக்தியா என்றெல்லாம் சொல்ல தெரியல,
    ஆனால் நாம் விரும்புவ்ர்களுடன் இருக்க பக்கத்தில் என்றுதான் இல்லை, இருக்கும் இடத்தின் ஒரு பொருளாய்,,,,
    அவர் என்னமாய் எழுதியிருப்பார் ,,,,,,,,, பாடல் வரிகள் நினைவூட்டியமைக்கு நன்றி,
    தங்கள் நடை அருமை,,,,,,
    தொடருங்கள் நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      திருமலையில் இனிய தரிசனம்.. அனைவருக்குமாக வேண்டிக் கொண்டேன்..
      தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி.. இனிய கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  7. திருப்தியான திருப்பதி தரிசனம்..நன்றிகள்..பகிர்வுக்கு..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      அந்த நேரத்தில் மனம் மகிழ்ச்சியுற்றாலும் - மீண்டும் தரிசனம் செய்ய ஏங்குகின்றது..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. இனிய கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  8. குலசேகராழ்வாரின் பாடல்கள் படித்துப் புரிந்து கொள்ள எளிது. அடங்கியுள்ள தத்துவமோ மிகப் பெரிது. மீனாய், வண்டாய், கல்லாய், படியாய் என்று எழுதியிருப்பதைப் படிக்கும் போதே உணர்ச்சி வயப்படுவோம்.
    திருப்பதி சென்று வந்த உணர்ச்சி ஏற்பட்டது உங்கள் பதிவைப் படிக்கும் போது.
    நன்றி பகிர்விற்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தாங்கள் கூறுவது முற்றிலும் உண்மை..
      ஆழ்வாரின் பக்திப் பெருக்கு யாருக்குக் கூடிவரும்!..
      திருமலையில் நிற்கும்போதுதான் - இங்கே கருங்கல்லாகக் கிடக்க மாட்டோமா என்று மனம் ஏங்குகின்றது..
      யாவருக்குமாகட்டும் - வேங்கடேசனின் திருவருள்....
      தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி.. இனிய கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  9. அருமையான விவரணம் ஐயா! மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  10. அருமையான தரிசனம், லட்டு பிரசாதம் . நன்றி.
    மேலே போனது இல்லை, தொலைக்காட்சியில் சிலாதோரணம் பார்த்து இருக்கிறேன்.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      திருமலை தரிசனம் மிகவும் மகிழ்ச்சிக்குரியதாக இருந்தது..
      மறுமுறை திருமலைக்குச் செல்லும்போது - மலையின் மேல் சென்று வாருங்கள்..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..